புதுடெல்லி: இந்தியாவில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களில் ஆறில் ஒருவர் தொழில்முறை பயிற்சி பெறாதவராக உள்ளார் - ஆசிரியர் பயிற்சிக்கு செலவிடும் தொகையை இந்தியா மேம்படுத்த வேண்டும். 2018-19 பட்ஜெட்டில் சமக்ரா சிக்‌ஷா அப்யான் (முழுமையான கல்வித்திட்டம்) திட்டத்தின் கீழ் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளுக்கு வெறும் 2% மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டது.

இத்திட்டத்தில் 2019-20 பட்ஜெட்டில் ரூ.34,489 கோடி ஒதுக்க திட்டம் இடப்பட்டுள்ளது; இது 2018-19 பட்ஜெட் மதிப்பீட்டைவிட 10.5% அதிகம் என 2018 ஆகஸ்டில் நாடாளுமன்றத்தில் தாக்கலான இடைக்கால செலவு அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

சர்வ சிக்‌ஷா அபியான் ('அனைவருக்கும் கல்வி'), ராஷ்ட்ரீய மத்யமிக் சிக்‌ஷா அப்யான் ('தேசிய நடுநிலைக்கல்வி திட்டம்') மற்றும் ஆசிரியர் கல்வித் திட்டங்களை ஒருங்கிணைத்து, 2018ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சமக்ரா சிக்‌ஷா அப்யான், முன்சேவை மற்றும் சேவை ஆசிரியர்கள் பயிற்சி ஆகியவற்றை நோக்கமாக கொண்டிருந்தது.

இந்திய வகுப்பறைகளில் கற்றலின் விளைவுகளை முன்னேற்ற ஆசிரியர் பயிற்சி அவசியமானது. இதற்காக அரசின் நிதி ஆயோக் அமைப்பு, மூன்று ஆண்டு செயல்திட்டத்தை ஒப்புக் கொண்டது. அதேபோல் 2018 பட்ஜெட் உரையில் பள்ளி கல்வி சீர்திருத்தத்திற்கு தொழில்ரீதியாக தகுதிவாய்ந்த ஆசிரியர்களின் தேவை பற்றி வலியுறுத்தப்பட்டது.

இந்தியாவில் 10 முதல் 11 வயதுக்குட்ட குழந்தைகளில் பாதி பேருக்கு மட்டுமே இரண்டாம் வகுப்பு பாட புத்தகத்தை (ஏழு முதல் எட்டு வயதுக்குள்) படிக்க முடிகிறது என, 2019 ஜனவரி 25 இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை குறிப்பிட்டிருந்தது. கிராமப்புறங்களில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு 2ஆம் வகுப்பு பாடத்தை படிக்க இயலவில்லை; 70% பேரால் வகுத்தல் கணக்கு கூட போட இயலவில்லை.

தொழில்ரீதியாக தகுதி பெற்ற ஆசிரியர்களின் பற்றாக்குறை

இந்திய கல்வி முறை முழுவதும் ஒரு பொதுவான அம்சம் தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. 2009 ஆம் ஆண்டு கல்வி உரிமை சட்டத்தின் பிரிவு 23 (RTE Act), அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களும், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் வரையறுத்துள்ள குறைந்தபட்ச தகுதிகளை கொண்டிருக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கியது.

கடந்த 2010 நவம்பரில் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களில், இத்தகுதியை பெறாதவர்கள், 2015 மார்ச் 31ஆம் தேதிக்குள் பயிற்சி பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், 2015-16 ஆம் ஆண்டின்படி, ஆரம்ப பள்ளி அளவில் உள்ள 66 லட்சம் ஆசிரியர்களில் 11 லட்சம் பேர் பயிற்சி பெறாதவர்கள். இவர்களில் 512,000 பேர் அரசு மற்றும் உதவிப் பள்ளிகள்; 598,000 பேர் தனியார் பள்ளிகளை சேர்ந்தவர்கள்.

மேல்நிலை பள்ளிகள் அளவில் உள்ள 20 லட்சம் ஆசிரியர்களில், ஏறத்தாழ 14% பேர் தொழில்முறை தகுதியை பெறவில்லை என்று கல்வி அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

போதிய பயிற்சி இல்லாத ஆசிரியர்கள் என்று பார்த்தால்- அதாவது ஆரம்ப மற்றும் மேல்நிலை கல்வி அளவில் - மேற்கு வங்கம் (40.8%), பீகார் (36.6%),ஜார்கண்ட் (16.5%), உத்தரப்பிரதேசம் (13.2%) மற்றும் சத்தீஸ்கர் (10.5%) ஆகியன உள்ளன.

முன்சேவை ஆசிரியர் பயிற்சி - ஒரு புறக்கணிக்கப்பட்ட கூறு

ஆசிரியர் பயிற்சி என்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும், முன் சேவை மற்றும் சேவையிலான பயிற்சி என்பது அதன் பிரிக்க முடியாத கூறுகள். 2017 மார்ச்சில் கல்வி உரிமை சட்டத்தில் அரசு திருத்தம் செய்தது. அதன்படி, ஆசிரியர்கள் பயிற்சியை பெறுவதற்கான கால அவகாசம் 2015 என்பது, 2019 ஆக நீட்டிக்கப்பட்டது.

கடந்த 10 ஆண்டுகளில் ஆசிரியர்கள் பயிற்சி நிறுவனங்களை பலப்படுத்துவதற்கான செலவினம், ரூ. 326 கோடியில் இருந்து ரூ. 550 கோடியாக அதிகரித்துள்ளது. 2016-17ஆம் ஆண்டில், தேசிய கல்வி இயக்கத்தின் (NEM) கீழ் ஆசிரிய பயிற்சி திட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்தது.

இருப்பினும், பள்ளி கல்விக்கான பட்ஜெட்டில் ஆசிரியர் கல்விக்கான ஒதுக்கீடு என்பது, 2009-10 ஆம் ஆண்டில் 1.3% என்பது, 2018-19இல் 1.1% என (பட்ஜெட் திட்ட மதிப்பீடுகள்) சீராக சரிந்திருப்பது, ஆசிரியர்களின் பயிற்சிக்கு குறைந்த முன்னுரிமை வழங்கப்பட்டிருப்பதையே காட்டுகிறது.

Source: Union Budget; *Revised estimate, **Budget estimate

மாநிலங்களிலும் இதே நிலையே காணப்படுகிறது. தொழில் ரீதியான பயிற்சி பெறாத ஆசிரியர்கள் அதிகமுள்ள உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர், பீகார் மற்றும் மேற்கு வங்காளம் போன்றவை, தங்களது மாநில பட்ஜெட்டில் பள்ளி கல்விக்காக ஆசிரியர் பயிற்சிக்கு 1% நிதியைக்கூட ஒதுக்குவதில்லை என்று, பட்ஜெட் மற்றும் நிர்வாக பொறுப்புக்கான மையத்தின் 2018 ஆய்வு தெரிவிக்கிறது.

எனினும், 14வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளுக்கு பிறகு, பீகார் மற்றும் சத்தீஸ்கர் போன்ற சில மாநிலங்கள், ஆசிரியர்களின் பயிற்சிக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்தன; ஆனால், உத்தரப்பிரதேசத்தில் 0.001%, பீகாரில் 1.3% என்று அதேநிலை தொடர்ந்தது.

மத்திய மற்றும் மாநில அரசுகள் ஆசிரியப் பயிற்சிக்கான நிறுவனப் பணிகளை உருவாக்க போதுமான அளவு செலவழிக்க தவறிவிட்டன - இது வளங்களின் தேவையை தீவிரப்படுத்தியது. அதன் விளைவாக, ஆசிரியர் பயிற்சி மற்றும் பாட திட்டங்களுக்கான முதன்மை அமைப்பான மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்- டி.ஐ.இ.டி. (DIET), தனது பங்களிப்பை சரிவர செய்யத் தவறியது - டி.ஐ.இ.டி.யில் 35% கல்வியியல் பணியிடங்கள் காலியாக இருப்பதாக, 2018 அரசு தரவுகள் கூறுகின்றன.

இதனால், டி.ஐ.இ.டி.யின் செயல்பாடு, ஆர்.டி.இ. சட்டத்தின் கீழ் 2011ல் நடந்த ஆசிரியர் பணி சேர்ப்புக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) முடிவுகளில் பிரதிபலித்தது. 2018 ஆம் ஆண்டிற்கான மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் (சி.டி.இ.டி.) 17 லட்சம் பேர் பங்கேற்றனர். இதில் ஆரம்பக்கல்வி ஆசிரியர்கள் 17%; நடுநிலைக்கல்வி ஆசிரியர்கள் 15% என்றளவிலேயே தகுதி பெற்றனர்.

தொடக்கக்கல்வியில் டிப்ளமோ மற்றும் இளங்கலை பட்டதாரிகளின் தேவையை அதிகரிக்கும் வகையில் தனியார் துறை களமிறங்கியது. நாட்டில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 90% தனியார் துறையில் உள்ளது.

பயிற்சி மீதான கவனம் உள்ளது

காலப்போக்கில், எஸ்.எஸ்.ஏ. மற்றும் ஆர்.எம்.எஸ்.ஏ. ஆகியவற்றின் கீழ் பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்கள் பிரச்சினைகள் பற்றி அரசு அறிந்து கொண்டது. இத்தகைய மத்திய நிதியுதவித் திட்டங்கள், புதுப்பிக்கப்பட்ட படிப்புகளுக்கான செலவை மட்டுமே வழங்குகின்றன. இது எஸ்.எஸ்.ஏ.இன் கீழ் நாளொன்றுக்கு ஒரு ஆசிரியருக்கு ரூ. 100; ஆர்.எம்.எஸ்.ஏ. கீழ் ரூ. 300 ஆகும்.

கல்வி அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அதன் உறுதியான நிதி ஒதுக்கீட்டில் ஒரு சிறிய விகிதத்தை ஒதுக்கிய நிலையில், எஸ்.எஸ்.ஏ. திட்டம் தன்னை கடும் நிதிக்கு உட்படுத்தியுள்ளது. உதாரணமாக, 2016-17 ஆம் ஆண்டில், ரூ. 46,702 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது; ஆனால், எஸ்.எஸ்.ஏ.க்கு மத்திய அரசின் பங்காக உண்மையில் ரூ. 22,500 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. இது, ஒதுக்கப்பட்ட தொகையில் பாதிக்கும் குறைவாகும். இந்த திட்டத்திற்கான மத்திய அரசின் ஒதுக்கீடானது, கல்வி அளவீடுகள், அதன் மீதான கல்வி வரி வசூலை சார்ந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் எஸ்.எஸ்.ஏ.க்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் 60%க்கும் மேலானது, இந்த கல்வி வரி மூலம் பெறப்பட்டதாகும்.

கல்வி வரி மூலம் தொடக்க கல்வி நிதியளித்தல் 2014-15 முதல் 2018-19 வரை

Source: Of Hits and Misses, an analysis of Union budget 2018-19, CBGA

கல்வி செலவினம் ஒவ்வொரு ஆண்டும் மாறுபடுகிற கல்வி வரி வசூலை சார்ந்திருப்பதும் அதன் அடிப்படையில் எஸ்.எஸ்.ஏ.க்கு ஒதுக்கீடு செய்வதும் ஆசிரியர்களுக்கான பயிற்சியை நிச்சயமற்றதாக்குகிறது.

(புரோவிதா குந்து, பட்ஜெட் மற்றும் நிர்வாக பொறுப்புக்கான மையத்தில் பணியாற்றுகிறார். அவரை Protiva@cbgaindia.org என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.