மும்பை: பள்ளிக் கல்விக்கு செலவிடும் தொகையை 2014-15 (ரூ.45,722.41 கோடி) ஆண்டுடன் ஒப்பிடும் போது 2018-19ல் (ரூ.50,000 கோடி) இந்தியா, 9.35% உயர்த்தி உள்ளது. ஆனால் மொத்த பட்ஜெட்டில் கல்விக்காக செலவிடும் தொகை 2.55%ல் இருந்து 2.05% ஆக சரிந்துள்ளது, பட்ஜெட் தரவுகளை இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வு செய்ததில் தெரிய வருகிறது.

வரும் 2019, பிப்ரவரி 1ல் ஆளும் பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.) அரசு, பொதுத்தேர்தலுக்கு முந்தைய தனது கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. இதில், இந்திய பள்ளிக்கல்வி சந்திக்கும் பிரச்சனைகளுக்கு கவனம் செலுத்தப்பட வேண்டும்: இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) கல்விக்காக அதிக சதவீத தொகையை செலவழித்தாலும், அதன் கல்வித்தரம் பல தெற்காசிய நாடுகள் மற்றும் பிரிக்ஸ் (BRICS) நாடுகளைவிட மோசமாகவே உள்ளது.

கிராமப்புற இந்தியாவில், ஐந்தாம் வகுப்பு மாணவர்களில் பாதிப்பேருக்கு இரண்டாம் வகுப்பு பாட புத்தகங்களை கூட படிக்க தெரிவதில்லை; 70%க்கும் மேற்பட்டவர்களுக்கு வகுத்தல் கணக்கு கூட தெரிவதில்லை என்று, 2018 கல்வி ஆண்டின் வருடாந்திர நிலை அறிக்கை (ASER) கூறுகிறது. இந்த எண்ணிக்கையானது கடந்த 10 ஆண்டுகளில் கல்வியின் தரம் வீழ்ச்சியைக் குறிக்கின்றன.

பள்ளிகளுக்கு ஏன் இந்த பட்ஜெட்டில் சிறப்பு கவனம் தேவை?

இந்தியாவில் பள்ளி கல்வி முறையானது, பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பற்றாக்குறை மற்றும் முறையான உள்கட்டமைப்பு இல்லாத பிரச்சனையை எதிர்கொள்கிறது. இந்த பட்ஜெட்டில் தீர்வு காணப்பட வேண்டிய சில பிரச்சனைகள் பின்வருமாறு:

  • தொடக்க மற்றும் மேல்நிலை என 92,275 அரசுப் பள்ளிகளில் அனைத்து பாடங்களையும் கற்பிக்க, ஒரேயொரு ஆசிரியர் மட்டுமே இருக்கிறார் என, மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் சத்யபால் சிங், 2019 ஜன.7-ல் மக்களவையில் தெரிவித்தார்.
  • கிராமப்புற இந்தியாவில் உள்ள ஒவ்வொரு 4 பள்ளிகளில் ஒன்றில் மின்சாரம் இல்லை; ஏறத்தாள அதே எண்ணிக்கையிலான பள்ளிகளில் நூலகம்ம் இல்லை என்கிறது வருடாந்திர நிலை அறிக்கை. கிராமப்புற பள்ளிகளில் 21.3% மட்டுமே கம்ப்யூட்டர் வசதி உள்ளது.
  • இந்தியாவில், 25.053 கோடி குழந்தைகள் 6 - 15 வயதுக்கு உட்பட்டவர்கள் என 2017 அரசு புள்ளி விவரங்கள் கூற்றின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது; அவர்களுக்கு சிறந்த கல்வி தேவைப்படுகிறது.

இந்தியாவின் பின்தங்கிய மாவட்டங்களில் உள்ள குழந்தைகள் பள்ளிகளில் குறைவாகவே கற்கிறார்கள் என, வருடாந்திர நிலை அறிக்கை விவரங்களை பகுப்பாய்வு செய்து, மிண்ட்- எச்.டி. 2019 ஜனவரியில் செய்தி வெளியிட்டது. இந்த புள்ளி விவரங்கள் தேசிய சாதனை கணக்கெடுப்பில் வெளியிடப்பட்டுள்ளது. "உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசத்தின் பெரிய பகுதிகள் நாட்டில் மிக மோசமான கற்றlai கொண்டுள்ளன," என்று அறிக்கை கூறுகிறது.

வீட்டு சூழ்நிலைகளும் மாணவர்களின் கற்றல் திறனை பாதிப்பதாக, வருடாந்திர நிலை அறிக்கை மீதான மிண்ட்- எச்.டி. 2019 ஜனவரி ஆய்வு தெரிவிக்கிறது. ஏழை குடும்பம் அல்லது குறைவாக படித்த பெற்றோருக்கு பிறந்த குழந்தைகள், பிறரை விட குறைவாகவே கற்கும் வாய்ப்புள்ளதாக அது மேலும் கூறுகிறது.

இந்தியாவின் வளர்ச்சிக்கு குழந்தைகளுக்கு தரமான கல்வி அளிப்பது அவசியான ஒன்று. இந்தியாவை போன்ற குறைந்த, நடுத்தர வருவாய் உள்ளவர்கள் வசிக்கும் நாட்டில், ஒவ்வொரு 15 வயது கொண்டவரும் அடிப்படை வாசிப்பு திறன்களை, கணித திறன்களை கொண்டிருந்தால், மொத்த உள்நாட்டு உற்பத்தியை சராசரி 80 ஆண்டுகளில் 28% அதிகரிக்க முடியும் என, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் 2015 அறிக்கை தெரிவிக்கிறது.

பள்ளி நிதியில் இரட்டை பிரச்சனை: குறைந்த ஒதுக்கீடு மற்றும் முழுமையாக பயன்படுத்தாமை

ஏப்ரல் 2018 வரை, இந்தியாவில் உள்ள பள்ளி கல்வியானது பெரும்பாலும் மூன்று மத்திய நிதியுதவி திட்டங்களின் கீழ் வருவதாகவே உள்ளது:

  • சர்வ சிக்‌ஷா அப்யான் (எஸ்.எஸ்.ஏ. அல்லது அனைவருக்கும் கல்வி) இதன் குறிக்கோள் 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு உலகளாவிய கல்வியை வழங்குவது.
  • ராஷ்ட்ரீய மத்யமிக் சிக்‌ஷா அப்யான் (RMSA அல்லது தேசிய நடுநிலை கல்வி இயக்கம்) எனப்படும் இது இரண்டாம் நிலைக்கல்விக்கு உதவுகிறது.
  • அடுத்து ஆசிரியர் கல்வி; ஆரம்ப மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான முன்-சேவை மற்றும் சேவைத் திட்டங்களுக்கு அமைப்பு ரீதியான உள்கட்டமைப்புகளை உருவாக்குவதே இதன் இலக்கு.

அரசு, 2018 ஏப்ரலில், இம்மூன்று திட்டங்களை உள்ளடக்கி அரசு சமக்ர சிக்‌ஷா (Samagra Shiksha- முழுமையான கல்வி) என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது.

எஸ்.எஸ்.ஏ. திட்டத்தில் 2017-18 மற்றும் 2018-19க்கு இடையே கல்விக்கான நிதி ஒதுக்கீடு ரூ.23,500 கோடி என்பது ரூ.26,128.81 கோடியாக, 11.18% அதிகரித்தது. அதேபோல் ஆர்.எம்.எஸ்.ஏ. கீழ் ஒதுக்கீடு ரூ.3914.90 கோடியில் இருந்து ரூ. 4213.00 கோடியாக 7.6% அதிகரித்துள்ளது.

இருப்பினும், எஸ்.எஸ்.ஏ. இன் கீழ் ஒதுக்கீடானது, மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் (MHRD) மேற்கொள்ளப்பட்ட ஆதார மதிப்பீட்டை விட மிகவும் குறைவு என்று பொறுப்புணர்வு திட்டம் (AI) வெளியிட்ட 2018 பிப்ரவரி பகுப்பாய்வு கூறுகிறது.

தொடர்ந்து இரு ஆண்டுகளாக, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கேட்டதை விட பாதிக்கும் குறைவான நிதியே எஸ்.எஸ்.ஏ.வுக்கு ஒதுக்கப்பட்டது. 2016-17 ஆம் ஆண்டில், எஸ்.எஸ்.ஏ.வுக்கு 55,000 கோடி ரூபாய் தேவையென அமைச்சகம் கோரியது; ஆனால், 22,500 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது. அதேபோல், 2017-18ல் அமைச்சகத்தால் 55,000 கோடி ரூபாய் கேட்கப்பட்ட நிலையில் எஸ்.எஸ்.ஏ.வுக்கு 23,500 கோடி ரூபாய் தான் ஒதுக்கப்பட்டது.

மேலும், எஸ்.எஸ்.ஏ.க்கான நிதியானது தொடர்ந்து முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என்று, தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் (சி.ஏ.ஜி.) 2017 அறிக்கை தெரிவிக்கிறது. “செலவிடப்படாத நிதியானது 2010-11ஆம் ஆண்டில் ரூ.10,680 கோடியாக இருந்தது, 24% உயர்ந்து, 2015-16ஆம் ஆண்டில் ரூ.14,112 கோடியாக இருந்தது. அதிகபட்சமாக 2014-15ஆம் ஆண்டில் ரூ.17,281 கோடி நிதி பயன்படுத்தப்படாமல் இருந்தது” என, 2018 நவம்பரில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது.

நடப்பு 2018-19 நிதியாண்டில் 2018 டிசம்பர் வரை எஸ்.எஸ்.ஏ.க்கு ஒதுக்கப்பட்ட (ரூ.19,668.26 கோடி) தொகையில் 74.27% நிதியைமத்திய அரசு விடுவித்துள்ளது என, அமைச்சர் சத்யபால் சிங், 2019 ஜனவரி 7ல் மக்களவையில் தெரிவித்தார். விடுவிக்கப்பட்ட தொகையில் 31.76% (ரூ. 6246.97 கோடி) இன்னமும் பயன்படுத்தாமல் உள்ளது.

"ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும் மாநில அரசுகள் இவ்வாறு மிகப்பெரிய தொகையை செலவிடாமல் நிலுவையாக வைத்திருப்பது அதன் மோசமான செயல்பாடுகளை குறிக்கிறது” என்று சி.ஏ.ஜி. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியா எவ்வாறு உலகத்தோடு ஒப்பிடப்படுகிறது?

நாம் முன்பே கூறியது போல், இந்தியாவின் கல்விச் செலவினம் தெற்காசிய மற்றும் பிரிக்ஸ் நாடுகளுடன் ஒப்பிடும் போது, அதிகமாகும். இந்தியா, 2016ம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.38% கல்விக்கு செலவிட்டது. இது, சீனா (4.22%), ரஷ்யா (3.82%), ஆப்கானிஸ்தான் (4.21%), இலங்கை (3.48%), வங்கதேசம் (1.54%) மற்றும் பாகிஸ்தான் (2.49%) ஆகியவற்றைவிட அதிக தொகையாகும்.

ஆனால், கல்வியின் தரத்தை ஒப்பிடும் போது இந்தியா மிகவும் மோசமாக உள்ளது. தெற்காசிய அளவில் 2016ஆம் ஆண்டின்படி கல்வித்தரத்தில் இந்தியா இரண்டாவது மிகக்குறைந்த மதிப்பெண்ணை பெற்றுள்ளது. அதாவது (100க்கு 66 என), 64 மதிப்பெண் பெற்ற ஆப்கானிஸ்தானுக்கு முன்பாக; மற்றும் இலங்கைக்கு (75) அடுத்ததாக உள்ளது என்பதை, 2018 செப்டம்பர் 25ல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை குறிப்பிட்டிருந்தது.

பிரிக்ஸ் நாடுகளிடையே ஒப்பிட்டாலும் கூட, இந்தியா இரண்டாவது குறைந்த புள்ளிகள் - அதாவது 8 மதிப்பெண்கள் கூடுதலாக பெற்று தென் ஆப்ரிக்காவுக்கு (58) முன்பாக உள்ளது. பிரிக்ஸ் நாடுகளில் கல்வித்தரத்தில் சிறந்த மதிப்பீட்டை ரஷ்யா கொண்டுள்ளது. சீனாவில் மாணவர்கள் 13 ஆண்டுகள் பள்ளியிலேயே ல் மிக நீண்ட நேரம் செலவிடுகின்றனர்; உயர்தர கல்வித்தரத்தை பெறுகின்றனர். அதன் புள்ளி 100க்கு 89 ஆக உள்ளது.

பள்ளி கல்விக்கு நிதி: ஐ.மு.கூ. Vs தே.ஜ.கூ.

பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி- தே.ஜ.கூ. (NDA) அரசின் கீழ் பள்ளி கல்வித்துறைக்கான நிதியுதவி நிலையான எழுச்சியை கண்டிருக்கிறது; ஏற்கனவே கூறியபடி, ஆனால், பட்ஜெட்டில் கல்விக்கான ஒதுக்கீடு விகிதம் இறங்குமுகத்தில் உள்ளது.

கடந்த 2006-07 வரை, ஆரம்பக்கல்வி, உயர்நிலை கல்வி, மேல்நிலைக்கல்விக்கு தனித்தனியே நிதி ஒதுக்கப்பட்டு வந்தது. அதன் பின் ஆரம்ப மற்றும் உயர்நிலைக் கல்வி இரண்டும் ஒன்றாக்கப்பட்டன. இந்த மாற்றங்களுக்கு பின் கிடைத்த புள்ளி விவரங்களை கருத்தில் கொண்டால், மன்மோகன் சிங் தலைமையில் இரண்டாம் முறை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி - ஐ.மு.கூ. அரசு 2010-11 பட்ஜெட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கல்விக்கான ஒதுக்கீடு அதிகபட்ச தொகை - 3.29% ஆக உயர்ந்தது.

கடந்த 2009-10 முதல் 2012-13 வரையிலான காலத்தில் ஐ.மு.கூ. அரசால் கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதி விகிதம் 2.40%ல் இருந்து 3.24% ஆக அதிகரித்தது. 2013-14ல் இது 0.43 சதவீத புள்ளிகள் 2.81 சதவீதமாக சரிந்தது.

Source: Union Budget
Note: Figures for 2009-10 to 2016-17 are actuals, figures for 2007-08, 2008-09 & 2017-18 are revised estimates and figures for 2018-19 are budget estimates.

பள்ளி கல்விக்கான முன்னுரிமைகள் என்னவாக இருக்க வேண்டும்?

உலகத்தரத்திற்கு இந்திய பள்ளிக்கல்வியை உயர்த்த, இதில் முதலீடு செய்வதை அரசு அதிகரிக்க வேண்டும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.

"ஆசிரியர்கள் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற அடிப்படை வளங்களில் நிலவும் பற்றாக்குறையை போக்க, மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒன்றிணைந்து, பள்ளி கல்வி நிதியை கணிசமாக அதிகரித்து, முறையாக பராமரிக்கவும்" என, சைல்ட் ரைட் யு - க்ரை (CRY) என்ற அரசுசாராத கொள்கை ஆராய்ச்சி ஆலோசனை அமைப்பின் இயக்குனர் பிரீத்தி மஹாரா தெரிவித்தார்.

ஆசிரியர்கள் மற்றும் உள்கட்டமைப்புக்கான ஒதுக்கீடு அதிகரிக்க வேண்டும் என, க்ரை மற்றும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றிற்காக செயல்படும் லாபநோக்கற்ற அமைப்பான பட்ஜெட் மற்றும் நிர்வகித்தல் பொறுப்பு மையம் (CBGA) வெளியிட்ட டிசம்பர் 2018 அறிக்கை கூறுகிறது. உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்கம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய ஆறு மாநிலங்களின் கல்வி வரவு-செலவு திட்டங்களை இந்த அறிக்கை ஆய்வு செய்தது.

மார்ச் 2017 வரை, அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களில் தொடக்கப் பள்ளிகளில் 17.64% (900,316 / 5,103,539) மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 15.7% (107,689 / 685,895) காலியாகவே உள்ளன. தகுதிவாய்ந்த ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை இருப்பதால், பல மாநிலங்களில் தகுதி குறைந்தவர்கள் ஒப்பந்த ஆசிரியர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். இத்தகைய பயிற்சியில்லாத ஆசிரியர்கள் ஆரம்ப மற்றும் உயர்நிலை பள்ளிகளில் நியமிக்கப்பட்டிருப்பதில் பீகார் முதலிடம், மேற்கு வங்கம் அடுத்த இடத்தில் உள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தியாவில் உள்ள அரசு பள்ளிகள் போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. வருடாந்திர நிலை அறிக்கை ஆய்வின்படி, 58% பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் தங்களது வகுப்பறையை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வகுப்பினரோடு பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது. 25% பள்ளிகளில் மின்சார வசதி இல்லை.

பள்ளி கல்வியில் முன்னுரிமைகள் என்னவாக இருக்க வேண்டும்?

வரும் 2019-20 பட்ஜெட்டானது புதிய திட்டமான சமங்க்ரா சிக்‌ஷாவுக்கு முதல் நிதி ஒதுக்கீட்டை பார்க்கும். இத்திட்டத்தில், தர மேம்பாட்டுக்கான கற்றல் விளைவுகள், நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டு நிதி வழங்கப்படும். ஆசிரியர்கள் மற்றும் டிஜிட்டல் கல்வியின் திறனை வளர்ப்பதில் கவனம் செலுத்தப்படும்; உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான முயற்சி மேற்கொள்ளப்படும் என , இத்திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் கூறுகிறது.

ஏப்ரல் 1, 2018 முதல் மார்ச் 31, 2020 வரையிலான ஒதுக்கீடு ரூ.75,000 கோடி என்பது தற்போதுள்ளதைவிட 20% அதிகமாகும். 2018-19ம் நிதியாண்டில் ஏற்கனவே ரூ. 33,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. “ஒப்புதல்களை கொண்டு ஒதுக்கீடு 41,000 கோடியாக அதிகரிக்கக்கூடும்" என்று, ஏ.ஐ. இயக்குனரும், சி.பி.ஆர்.இல் ஒருவருமான அவானி கபூர் தெரிவித்தார்.

"திட்டத்தின் மீதான ஆர்வம் என்னவென்றால், அதன் தேவைகளை அடிப்படையாகக் கொண்ட முன்னுரிமைகளை எடுப்பதற்கு மாநிலங்களுக்கு நெகிழ்வுத் தன்மை கொடுக்க வேண்டும் என்பதுதான்" என்றார் கபூர். "ஆரம்ப, உயர்நிலை மற்றும் ஆசிரியர் கல்விக்கு மாநிலங்கள் முன்னுரிமை தருவதில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளை நாம் காண்கிறோம். எனவே, நமது சமீபத்திய பகுப்பாய்வில் தெரிய வருவது, உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், பீகார் மற்றும் ஒடிசா மாநிலங்களில் பெரும்பாலான பட்ஜெட், சமக்ரா சிக்‌ஷா திட்டத்தில் ஆரம்ப கல்விக்கும்; ஹரியானா, இமாச்சலப்பிரதேசம் போன்றவற்றில் மேல்நிலை கல்விக்கும் செல்கின்றன என்பதாகும்”.

( ஸ்ரேயா ராமன் , இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர்)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.