மும்பை: சேவ் லைஃப் அறக்கட்டளை நடத்திய கணக்கெடுப்பின்படி, இந்திய லாரி ஓட்டுனர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், தங்களது பணியின் போது லஞ்சம் கொடுப்பதாக கூறியுள்ளனர். லாரிகள் இயக்கத்திற்காக ஆண்டுக்கு தரப்படும் லஞ்சத்தொகை சுமார் 47,852.28 கோடி ரூபாய் (6.7 பில்லியன் டாலர்) ஆகும். இது, அருணாச்சல பிரதேசத்தில் உள்கட்டமைப்புகளை அமைப்பதற்கு ஐந்தாண்டுகளில் அரசு செலவிட்ட தொகை ஆகும் என்று ஆய்வு கூறுகிறது.

லாரி ஓட்டுனர்களின் வாழ்க்கை மிகவும் மன அழுத்தம் கொண்டது; விரும்பம் இல்லாத ஒன்றாக உள்ளது; கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 84% லாரி ஓட்டுனர்கள், இந்த வேலைக்கு தங்கள் குடும்பத்தில் யாரையும் இனி பரிந்துரைக்க மாட்டோம் என்று கூறியதாக, ‘இந்தியாவில் லாரி ஓட்டுனர்களின் நிலை’ என்ற தலைப்பில் லாரி ஓட்டுனர்கள் குறித்த ஆய்வு தெரிவிக்கிறது. டெல்லியை சேர்ந்த ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான மஹிந்திரா நிறுவனத்தின் நிதி பங்களிப்புடன் சேவ் லைஃப் அறக்கட்டளை, 2018ம் ஆண்டு, நாட்டின் 10 நகரங்களில் 1,217 லாரி ஓட்டுநர்களில் மற்றும் 1010 லாரி உரிமையாளர்களிடம் (மொத்தத்தில் 1,318) ஆய்வு ஒன்றை நடத்தியது.

இந்த ஆய்வின் வேறு சில முக்கிய கண்டுபிடிப்புகள் இங்கே:

இந்தியாவில் நாடு தழுவிய சரக்கு போக்குவரத்தில் 69% லாரிகள் தான் ஈடுபடுவதாக, பொருளாதார கணக்கெடுப்பு 2018-19 தெரிவிக்கிறது. இது, மொத்த மதிப்பு கூட்டலுக்கு சுமார் 3.06% பங்களிப்பு செய்கிறது. இன்னும் பல லாரி ஓட்டுநர்கள், அதிக நேரம் வேலை செய்கிறார்கள். 2018 ஆய்வில் இடம்பெற்ற லாரி ஓட்டுநர்களில் கால் பகுதியினர் தூக்கமின்மை குறித்து கவலை தெரிவித்திருந்தனர்.

சோர்வு, தூக்கமின்மை, உடல் பருமன், முதுகுவலி, மூட்டு மற்றும் கழுத்து வலி, மோசமான பார்வை குறைபாடு, மூச்சுத் திணறல், மன அழுத்தம் மற்றும் தனிமை போன்ற உடல் மற்றும் உளவியல் சிக்கல்களை 53% வரை லாரிகள் எதிர்கொள்கின்றனர் என்று 2020 பிப்ரவரி கட்டுரையில் நாங்கள் தெரிவித்திருந்தோம்.

துன்புறுத்தல் அச்சம், நீண்ட தாமதம்

ஏறக்குறைய 40% லாரி ஓட்டுநர்கள் போலீசார் / சாலை போக்குவரத்து அதிகாரிகளால் துன்புறுத்தப்படுவதாக தெரிவித்தனர். இத்தகைய கெடுபிடி, இந்த வேலை மீதான அதிருப்திக்கு இரண்டாவது மிகப்பெரிய காரணம் என்று கணக்கெடுப்பு சுட்டிக்காட்டியது. அவர்களின் மிகப்பெரிய பிரச்சினை, குறைந்த மற்றும் ஒழுங்கற்ற வருமானம் தான்.

"முதலாவதாக, அவர்கள் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பெரும் அளவிலான துன்புறுத்தல்களுக்கு லாரி ஓட்டுனர்கள் ஆளாகின்றனர்; இது எல்லா நேரத்திலும் நடக்கும் ஒரு நிலையான உண்மை" என்று Truck De India: A Hitchhiker’s Guide to Hindustan என்ற லாரி ஓட்டுனர்களின் பயணங்கள் குறித்து நூலின் ஆசிரியரான ரஜத் உபய்கர் கூறினார். துன்புறுத்தலின் அளவு பயங்கரமானது; ஏனென்றால் நெடுஞ்சாலை போலீசார் தொடங்கி, வட்டார போக்குவரத்து அலுவலகர் (ஆர்டிஓ) வரை பெரும்பாலானவர்கள், லாரி ஓட்டுனர்களை “மிரட்டி பணம் பறிப்பதை நியாயமான ஒன்றாக” பார்க்கிறார்கள் என்று அவர் கூறினார்.

தம்மை பாதித்த இரண்டாவது விஷயமாக உபய்கர் கூறுகையில், "அவர்கள் தொடர்ந்து தூக்கமின்மை மற்றும் சோர்வு ஆகியன மிகப்பெரிய அளவில் விபத்துகளுக்கு முக்கிய காரணம் என்பதை நான் உணர்கிறேன்" என்றார்.

வாகனத்தின் பதிவு, அனுமதி மற்றும் உடல் தகுதிச் சான்றிதழ்களை புதுப்பித்தல் மற்றும் போக்குவரத்து அல்லது நெடுஞ்சாலை போலீசாரை தினமும் எதிர்கொள்வது போன்ற பல காரணங்களுக்காக லாரி உரிமையாளர்கள், பல்வேறு துறை அதிகாரிகளை அடிக்கடி சந்திக்க வேண்டியுள்ளது.

இது, பல்வேறு காரணங்களுக்காக அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதில் போய் முடிகிறது - சில நேரம், துன்புறுத்தல் அல்லது வியாபார இழப்பது குறித்த கவலை மற்றும் பிற நேரங்களில் அனுமதி கிடைப்பது மற்றும் உரிமங்களுக்கான ஆவணங்களை விரைவாக நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்வதற்காக இவ்வாறு தர வேண்டியிருப்பதை, சேவ் லைஃப் அறக்கட்டளையின் ஆய்வு கண்டறிந்துள்ளது. லாரி உரிமையாளர்கள் வாகனங்கள் பதிவு, அனுமதி, உடற்தகுதிச் சான்றிதழ் மற்றும் வரி தொடர்பான சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். அதிகாரிகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ லஞ்சம் கேட்கிறார்கள் என்று, கிட்டத்தட்ட 45% லாரி உரிமையாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஏறக்குறைய 23% பேர், ஆவணங்களை சரிபார்த்து முடிக்க நீண்ட நேரம் செலவிட வேண்டும் என்றனர். சிலர், அரசு அலுவலகங்களில் தங்கள் வேலையைச் செய்ய "வேலைக்கு சிலரை அமர்த்தி இருக்கிறர்கள்" என்பதும் தெரிய வருகிறது.

சேவ் லைஃப் மதிப்பிட்ட லஞ்சம், ரூ. 47,852.28 கோடி; 2006-07 ஆம் ஆண்டில் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஆய்வால் கணக்கிடப்பட்ட தொகையை விட, இது இரு மடங்கு (ரூ. 22,048.20 கோடி) ஆகும்.

லாரி ஓட்டுநர்களிடம் தங்கள் கடைசியாக சவாரிக்கு சென்ற போது, எவ்வளவு தொகை லஞ்சமாக கொடுக்கப்பட்டது என்று கேட்கப்பட்டது. சராசரியாக, லாரி ஓட்டுநர்கள் பல்வேறு அதிகாரிகளுக்கு 1,257 ரூபாய் லஞ்சம் கொடுத்ததாகக் கூறினர். லஞ்சம் கொடுப்பதில் ரூ.2,360, கவுஹாத்தி முதலிடத்திலும், ஜெய்ப்பூர் ரூ.1,803 ஆகவும் உள்ளன. லஞ்சத்தொகை தெற்கு பகுதி நகரங்கள் மற்றும் டெல்லியில் சற்று குறைவாக இருந்தது.

யாருக்கு லஞ்சம், எவ்வளவு

நெடுஞ்சாலை காவல்துறையினருக்கு (67%), ஆர்டிஓ அதிகாரிகள் (44%) மற்றும் உள்ளூர் ஆட்களுக்கு (26%) லஞ்சம் கொடுத்ததாக அதிக அளவில் லாரிகள் தெரிவித்தனர். பெரும்பாலான லஞ்சம் (41%) ‘எந்த காரணமும் இல்லாமல்’ செலுத்தப்பட்டது (அதாவது பதிலளித்தவர்கள் ஒரு காரணத்தை மேற்கோள் காட்டவில்லை). சீட் பெல்ட்களை அணியாததற்காக (13%), மற்றும் ‘மாதா கா ஜாக்ரான்’ (33.8%).

"இது ஓட்டுநர்களின் ஒரு அன்றாட செயலாகிவிட்டது. அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்வதை விட ரூ.100 - 200 லஞ்சம் கொடுப்பது நல்லது என நினைக்கின்றனர்" என்று உபய்கர் கூறினார். "ஆனால் புத்திசாலித்தனமாக, ரூ. 200 என்பதை காவல்துறை பின்னர் ரூ.500 உயர்த்திவிடுகின்றனர். இது ஒரு வகையான அதிகார ஏற்றத்தாழ்வுதான், இதனால் லாரி ஓட்டுநர்கள், எந்த வாதமும் செய்வதில்லை” என்றார்.

நேர்காணல் செய்யப்பட்ட ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு லாரி ஓட்டுனர்கள், போக்குவரத்து அல்லது நெடுஞ்சாலை போலீசாருக்கு லஞ்சம் கொடுத்ததாகக் கூறினர். குவஹாத்தியில், நேர்காணல் செய்யப்பட்ட லாரி ஓட்டுனர்களில் 97% பேர், ஏதேனும் ஒரு கட்டத்தில் லஞ்சம் கொடுத்ததாகக் கூறினர்; இது சென்னையில் 89%, டெல்லி-என்.சி.ஆர் 84% என்றிருந்தது. குறைந்த எண்ணிக்கையாக 17% விஜயவாடாவில் பதிவாகி இருந்தது.

ஏறக்குறைய 44% லாரி ஓட்டுநர்கள், ஆர்டிஓ- வுக்கு லஞ்சம் கொடுத்ததை உறுதிப்படுத்தினர். ஆனால் பெங்களூரு மற்றும் கவுஹாத்தியில் இந்த சதவீதம் 90% க்கும் அதிகமாக இருந்தது. ஆர்டிஓ-வுக்கு வழங்கப்பட்ட சராசரி லஞ்சம் ரூ.1,172; இது, நகரங்களில் ரூ. 571 என்று தொடங்கி ரூ.2,386 என்று வேறுபடுகிறது.

கிட்டத்தட்ட 28% லாரி ஓட்டுநர்கள் லஞ்சம் கொடுப்பதற்கான காரணத்தை குறிப்பிடவில்லை. சொல்லப்பட்ட காரணங்களில், அதிகசுமை (17.3%) ஒரு முக்கிய அம்சம். அதை தொடர்ந்து மாநில எல்லையைத் தாண்டுதல் (10.6%) மற்றும் அலட்சியமாக வாகனம் ஓட்டுதல் (9.3%) உள்ளன.

அத்துடன், லாரி ஓட்டுனர்களில் 2% பேர் வரித்துறையினர் அல்லது பறக்கும் படை குழுக்களுக்கு லஞ்சம் கொடுத்ததாகக் கூறினர் - சராசரியாக ரூ.850. இதில் கவுஹாத்தி அதிகபட்சமாக, கிட்டத்தட்ட 19%, அடுத்து பெங்களூரு (2%) உள்ளது.

லாரி ஓட்டுநர்களில் மூன்றில் ஒரு பகுதியினர், தங்களிடம் லஞ்சம் பெற எந்த காரணமும் தெரிவிக்கப்படவில்லை என்றும், 14% ஓட்டுனர்கள் பொருட்களைச் சரிபார்க்கும் போது அல்லது அதிவேகமாக சென்ற போது லஞ்சம் கேட்டதாக கூறினர்.

கணக்கெடுக்கப்பட்ட லாரி ஓட்டுநர்களில் நான்கில் ஒரு பகுதியினர், உள்ளூர் கும்பல்கள் மிரட்டி பணம் பறித்ததாகக் கூறினர். இந்த பட்டியலில் கவுஹாத்தி 90% உடன் முதலிடத்தில் உள்ளது; அடுத்து, கொல்கத்தா 45%, விஜயவாடா 39% ஆக உள்ளது. சராசரி மிரட்டி பணம் பறித்தல் தொகை ரூ.608. ஜெய்ப்பூரில் (ரூ. 1,000), கவுஹாத்தி (ரூ. 985) ஓட்டுநர்களால் அதிகத்தொகையாக செலுத்தப்பட்டு உள்ளது. ஏறக்குறைய 46% பேர், எந்த காரணத்தையும் கூறவில்லை என்றனர்; 34% பேர் ‘மாதா கா ஜாக்ரான்’ என்ற பெயரில் மிரட்டி பணம் பறித்ததாகக் கூறினர், 13% பணம் செலுத்துவமாறு மிரட்டப்பட்டனர்.

உழைப்பாளிக்கு மரியாதை இல்லை

லாரி ஓட்டுநர் பணியில் மதிப்போ கண்ணியமோ இல்லை என்று சேவ் லைஃப் அறக்கட்டளை நிறுவனர் பியூஷ் திவாரி தெரிவித்தார். “ஒரு போலீஸ்காரர் ஒரு சராசரி குடிமகனை நிறுத்தினால், லாரி ஓட்டுனரைவிட மரியாதையாக அவரை நடத்துகிறார். ஆனால், லாரி ஓட்டுநர்களிடம் முற்றிலும் ஒருமையில் அவமதிப்பு செய்து, கடுப்புடன் பேசுகிறார்கள். பரிந்துரைத்த நிறுவனத்தின் சீருடைகளை அணியாததால், ஓட்டுனர்கள் பெரும்பாலான நேரங்களில் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள்,” என்ற அவர், "லாரி ஓட்டுனர்கள் கொதிக்கும் சூடுள்ள கேபினில் இருந்தவாறு, 12 மணி நேரத்திற்கும் மேலாக வாகனம் ஓட்டுகிறார்கள்; இது அவர்களை மேலாடையின்று ஓட்டும்படி கட்டாயப்படுத்துகிறது. சோர்வு, மோசமான பணிச்சூழல், கவுரவம், மன அழுத்தமின்மை போன்றவற்றை எதிர்கொள்வதால, ஓட்டுனர்களில் பலர் போதைப்பொருள் வஸ்துக்கு அடிமையாகின்றனர். இது, பிற வாகன ஓட்டிகளுக்கு பெரும் ஆபத்தாகும்” என்றார்.

மோசமான சூழ்நிலையில் நீண்ட நேரம் பணியாற்றி வந்தாலும் லாரி ஓட்டுநர்கள் வீட்டிற்கு மிகக் குறைந்த வருவாயை எடுத்துச் செல்கின்றனர். கணக்கெடுக்கப்பட்டவர்களில் 65% பேர், தங்கள் சம்பளம் 10,000 - 20,000 ரூபாய்க்குள் இருப்பதாகக் கூறினர். 10 பேரில் ஏழு பேர் (70.4%) மாதாந்திர அடிப்படையில் சம்பளம் பெற்றதாகக் கூறினர்; மீதமுள்ளவர்கள் பயண தூரம் அல்லது ஒரு கிமீ அடிப்படையில் ஊதியம் பெற்றதாக கூறினர்.

கணக்கெடுக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 50% பேர் தங்கள் வருவாய் - சம்பளம், ஊதியங்கள் மற்றும் சலுகைகள் - “கவரக்கூடியது அல்ல” என்றனர்; மற்றும் 60% லாரி ஓட்டும் தொழில் பண ஊதியத்திற்கு "பொருத்தமற்றது" என்றனர்.

எனினும், ஓட்டுனர் தொழிலில் திருப்தி அடைவதாகக்கூறிய லாரி ஓட்டுநர்கள் தெரிவித்த முதல் மூன்று காரணங்கள் இவை: எளிதான பணம் ஈட்டுதல் (56%), குறைந்த கல்வித் தகுதி அல்லது தொழில்நுட்ப அறிவு போதும் என்ற நிலை (48%) மற்றும் பணிச்சுதந்திரம் (44%) என்பதாகும்.

குறைந்த கல்வித்தகுதி மற்றும் குறைந்த திறமை என்ற சூழலில் மாற்று வேலைவாய்ப்பு வாய்ப்புகளை கண்டறிவது கடினம் என்று ஓட்டுனர்கள் கூறினர். எனவே, லாரி ஓட்டுவது தான் அவர்களின் வெளிப்படையான தேர்வாகிறது.

லாரி ஓட்டுநர்களில் கிட்டத்தட்ட 22% பேர் போதைப்பொருளை பயன்படுத்துகிறார்கள் என்று சேவ் லைஃப் அறக்கட்டளை மதிப்பிட்டுள்ளது. "இது லாரிகள் மற்றும் பிற பெரிய வாகனங்கள் சாலை விபத்துக்களில் பெரிய எண்ணிக்கையிலான இறப்புகள் மற்றும் விபத்துக்களுக்கு காரணமாகிறது" என்று திவாரி கூறினார். சாலை விபத்துக்கள் (12.3%) மற்றும் சாலை இறப்புகள் (15.8%) ஆகியவற்றிற்கு காரணமான மூன்றாவது பெரிய வாகனங்களாக லாரிகள் உருவாக்குகின்றன என்று பிப்ரவரி 2020 இல் எங்கள் கட்டுரை தெரிவித்தது.

ஒட்டுமொத்தமாக கணக்கெடுக்கப்பட்ட லாரி ஓட்டுநர்களில் 48% பேர் தங்கள் பணி நிலைமைகளை 'மோசமானவை 'என்று மதிப்பிட்டனர்; 15% மட்டுமே தங்கள் பணி நிலைமைகள் ‘நல்லது’ என்று கூறினர்.

லாரி ஓட்டுனர்களின் அதிருப்திக்கான முதல் ஐந்து காரணங்கள்: நீண்ட பணி நேரம் (51.4%), நிலையான சம்பளம் அல்லது ஊதியங்களின் தரப்படுவதில்லை (38.3%), அதிகாரிகளால் சுரண்டப்படுவது மற்றும் லஞ்சம் (37.1%), சாலை உள்கட்டமைப்பின் மோசமான நிலை (27.5%), மற்றும் காவல்துறையின் மோசமான நடத்தை (27.4%) என்பதாகும்.

கணக்கெடுக்கப்பட்ட லாரி ஓட்டுநர்களில் கிட்டத்தட்ட 84% பேர், ஒருபோதும் வாகனம் ஓட்டுவதையோ அல்லது லாரி ஓட்டுவதையோ இனி ஒரு தொழிலாக யாருக்கும் பரிந்துரைக்க மாட்டோம் என்று கூறியுள்ளனர்; சாலையில் பாதுகாப்பு மற்றும் பணிப் பாதுகாப்பு அடிப்படையில் (66.7%) லாரி ஓட்டுநர் தொழில், எல்லா வகையிலும் மோசமானது என்று ஏறத்தாழ பாதி பேர் கூறினர்; ஒரு தொழில் வாய்ப்பாக (61.5%), மற்றும் குடும்ப வாழ்க்கைக்கு நிபந்தனையற்றதாக இருப்பது (56.3%) என்றனர்.

"ஒரு துப்புரவுத்தொழிலாளிக்கு அடுத்தது, தங்கள் குழந்தைகளை துப்புரவுத் தொழிலாளர்களாக ஆக்க விரும்புவதில்லை என்பது தான் இன்றைய வாழ்க்கை முறை” என்று திவாரி கூறினார்.

பொருளாதாரத்தில் பாதிப்பு

செப்டம்பர் 2019 இல் சாலை போக்குவரத்து அமைச்சர் மேற்கோள் காட்டிய புள்ளி விவரங்களின்படி, இந்தியாவின் போக்குவரத்து மற்றும் தளவாடத் துறையில் 25 லட்சம் ஓட்டுநர்கள் பற்றாக்குறை உள்ளது.

"ஓட்டுனர்கள் இல்லாமல் ஏராளமான லாரிகள் நிற்கின்றன; தற்போதைய ஓட்டுநர்கள் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த எவரும் லாரி ஓட்டும் தொழிலுக்கு வருவதை விரும்பவில்லை" என்று திவாரி கூறினார். "அடுத்த சில ஆண்டுகளில், இந்தியா மேலும் பெரிய அளவில் ஓட்டுனர்களின் பற்றாக்குறையை எதிர்கொள்ளும். ஏனெனில் அவர்களை யாரும் கவனித்துக் கொள்வதில்லை. ஏராளமான லாரி ஓட்டுநர்கள் இல்லாததால் ஏராளமான தானியங்கள் மற்றும் காய்கறிகள் நாசமடைகின்றன” என்றார்.

தீர்வுகள்

சில வல்லுநர்கள் சட்டம் சிக்கலானது என்று கூறுகிறார்கள். "அத்தியாவசிய சீர்திருத்தங்கள், சட்டத்திலேயே மேற்கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, மோட்டார் வாகனச்சட்டம் பல தெளிவற்ற பிரிவுகளைக் கொண்டுள்ளது. இது பல்வேறு சாக்குப்போக்குகளில் ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்க ஆர்டிஓ அதிகாரிகளை அனுமதிக்கிறது. எடுத்துக்காட்டாக, ஒலி மாசுபாட்டை உருவாக்கியதற்காக லாரி ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம்” என்று உபய்கர் கூறினார்.

சேவ் லைஃப் அறக்கட்டளையின் ஆய்வு, மூன்று தீர்வுகளை பரிந்துரைக்கிறது: சமூக பாதுகாப்பில் முன்னேற்றம், உள்கட்டமைப்பு வடிவமைப்பை மறுபரிசீலனை செய்தல் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்தல் என்பதாகும்.

“சமூகப்பாதுகாப்பில், அனைத்து லாரி ஓட்டுநர்களும் சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இருக்க வேண்டும்; விபத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இருக்க வேண்டும் என்றும் நாங்கள் பரிந்துரைத்துள்ளோம். விபத்தால் உயிர் இழப்பு ஏற்பட்டால் அவர்களது குடும்பங்களை உள்ளடக்கும் ஒருவை திட்டம் இருக்க வேண்டும், ”என்று திவாரி கூறினார்.

உள்கட்டமைப்பை பொறுத்தவரை, ஒவ்வொரு 100 கி.மீ.க்கும் சரியான ஓய்வறை கூடங்கள் இருக்க வேண்டும். "நாங்கள் சரியான பார்க்கிங் வசதி, பாதுகாப்பு, சரியான சீர்ப்படுத்தல் மற்றும் ஓய்வு இடங்கள், சுத்தமான உணவு, தண்ணீரை பற்றி பேசுகிறோம்," என்று திவாரி கூறினார். இந்த மாற்றங்கள் நெடுஞ்சாலை டெண்டர்கள் மற்றும் ஒப்பந்தங்களில் இணைக்கப்பட வேண்டும்; இதன் மூலம் அவை நெடுஞ்சாலை வடிவமைப்பு மற்றும் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறும்.

உதாரணமாக, கண்காணிப்பு கேமரா கொண்டு வெளிப்படைத்தன்மையை அறிமுகம் செய்வதால் ஊழலைக் கட்டுப்படுத்த தொழில்நுட்பம் உதவும். சோர்வு ஏற்பட்டால் ஓட்டுநர் மற்றும் லாரி உரிமையாளரை எச்சரிக்கக்கூடிய அமைப்பு இருப்பது, மேலும் விபத்துக்களைத் தவிர்க்க உதவும். "இந்த அமைப்புகள் இப்போது இந்தியாவில் பரிசோதிக்கப்பட்டு வருகிறது," என்று திவாரி கூறினார்.

(சால்வி, இந்தியா ஸ்பெண்ட் பங்களிப்பாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.