மும்பை: இந்தியா, 10வது உலக கொடை குறியீட்டின்படி (WGI), கடந்த 10 ஆண்டுகளில் தயாள மனப்பான்மை பட்டியலில் 128 நாடுகளில் 82வது இடத்தில் உள்ளது.

இந்தியர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ஒரு அந்நியருக்கு உதவினர்; நான்கில் ஒருவர் நன்கொடை அளித்துள்ளார். ஐந்தில் ஒருவர் தன்னார்வப்பணிக்கு செலவிட்டதாக, அந்த அறிக்கை கூறுகிறது. குடும்பம், சமூகம் மற்றும் மதம் என அதன் வலுவான கலாச்சாரத்தில் கொடுத்து மகிழ்வது என்பது ஒழுங்கற்ற மற்றும் முறைசாராமல் இருப்பதே, இந்தியாவின் குறைந்த தரவரிசை காரணம் என்று அறிக்கை கூறுகிறது. தொண்டு அமைப்புகளுக்கு நன்கொடை வழங்க, முறையான வழிமுறைகளை இது பரிந்துரைத்துள்ளது.

அக்டோபர் 2019 இல், ஆன்லைனில் வெளியான இந்த அறிக்கை, கடந்த 9 ஆண்டுகளில் (2009-2018) 128 நாடுகளில் 13 லட்சம் மக்களிடம் நடத்திய கணக்கெடுப்புகளின் அடிப்படையில் அமைந்தது. கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களிடம் அந்நியருக்கு உதவினார்களா, தொண்டிற்கு நிதி நன்கொடை தந்தார்களா அல்லது தங்களது நேரத்தை தொண்டு சேவை, தன்னார்வலர் பணிக்கு செலவிட்டார்களா என்று கேட்கப்பட்டது. கேலப் வேர்ல்ட் வாக்கெடுப்புத் தரவை பயன்படுத்தி, கணக்கெடுப்பு நடந்தது. இது, சர்வதேச தொண்டு நிறுவனங்கள் மற்றும் அதன் நன்கொடையாளர்களுக்கு சேவைகள், உதவிகளை வழங்கும் இங்கிலாந்து தொண்டு நிறுவனமான சாரிட்டீஸ் எய்ட் பவுண்டேஷனால் (CAF) ஏற்படுத்தப்பட்டது.

இந்த குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை மிக கீழ்மட்டத்தில் உள்ளது. இது 2010இல் 134வது இடத்தையும், கடந்தாண்டு 81வது இடத்தையும் கொண்டிருந்தது. இந்த ஆண்டின் அறிக்கை, கடந்த 10 ஆண்டுகளாக ஒவ்வொரு நாட்டிற்கும் ஒருங்கிணைந்த தரவாகும். இந்தாண்டு இந்தியாவின் ஒட்டுமொத்த உலக கொடை குறியீடு (டபிள்யு.ஜி.ஐ.) மதிப்பெண் 26% ஆகும்.

Source: World Giving Index 2019 report

இந்தியாவும் உலகமும்

இப்பட்டியலில் முதல் 10 நாடுகளில் ஏழு, உலகின் பணக்கார நாடுகளாகும். இருப்பினும், உலகளாவிய தயாள மனப்போக்கு வீழ்ச்சியடைந்து வருவதாக அறிக்கை கூறியது. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற நீண்டகால மனிதநேய வரலாற்றைக் கொண்ட நாடுகளில் கூட, தனிநபர் கொடை இப்போது குறைவாக உள்ளது.

"பட்டியலில் முதல் வரிசை நாடுகளில் பொதுவாக கொடைக்கான ஒரு வலுவான கலாச்சாரம் இருக்கும் அல்லது மிகவும் வளர்ச்சியடையும்" என்று சாரிட்டீஸ் எய்ட் பவுண்டேஷனை (CAF) இந்தியாவில் வழிநடத்தும் மீனாட்சி பத்ரா கூறினார்; இது, இலாப நோக்கற்ற அமைப்பாகும். "தனிநபர்கள் கொடைக்கு அதிக வளங்கள் உள்ளன; அவை முறையான அமைப்புகளுக்கு வழங்குவதற்கு உள்கட்டமைப்பு உள்ளது" என்றார் அவர்.

Source: World Giving Index 2019 report

இந்தியாவின் 26% என்ற மதிப்பெண், முதலிடத்தில் உள்ள அமெரிக்கா பெற்ற 58% இல் பாதிக்கும் குறைவானது.16% மதிப்பெண்ணுடன் சீனா, இக்குறியீட்டின் மந்தமாக இருந்தது. ஆசியாவில் வலுவான சீனா, அந்நியருக்கு உதவுதல், நிதி நன்கொடை மற்றும் தன்னார்வத் தொண்டு ஆகிய மூன்றில் குறைந்த மதிப்பெண்ணைக் கொண்டிருந்தது.

மறுபுறத்தில், இந்த மூன்று எண்ணிக்கையிலும் முதல் 10 இடங்களில் உள்ள ஒரே நாடு, நியூசிலாந்து.

ஆசியாவின் வேகத்துடன் பொருந்த தவறிய இந்தியா

தரவரிசைகளை மேம்பட்ட 10 நாடுகளில் ஐந்து, அதிக கொடை குறியீட்டை கொண்ட ஆசிய நாடுகள். இந்தோனேசியா, அதன் தரவரிசையில் வேகமாக மேம்படுத்திய நாடு. இது, நிதி நன்கொடை, தன்னார்வத்தொண்டு ஆகியவற்றில் முதல் 10 இடங்களுக்கு முன்னேறியது. அதிக தன்னார்வத் தொண்டிற்காக, இலங்கை 46% என்ற அதிக மதிப்பெண் பெற்றது; இது, இந்தியாவின் 19% என்பதை விட இரு மடங்கு அதிகம்.

தரவரிசையில் இலங்கையின் உயர்வு அதன் கலாச்சாரம் காரணமாகும் என்று அறிக்கை கூறுகிறது. உதாரணமாக, மியான்மரில் பெரும்பான்மையான மக்கள் புத்த மதத்தை சார்ந்தவர்கள்; அவர்களில் 99% பேர், கொடையை கட்டாயமாக்கும் தேராவாடா பிரிவை பின்பற்றுபவர்கள். இலங்கையிலும் தேராவாடா பிரிவை பின்பற்றுவோர் அதிகம்.

இதேபோல், உலகின் மிகப்பெரிய முஸ்லீம் நாடான இந்தோனேசியாவில், கொடை என்பது, மதக்கடமையான ஜகாத்துடன் நெருக்கமாக பிணைக்கப்பட்டு உள்ளது.

தரவரிசையில் நாடுகளின் முன்னேற்றத்திற்கு அவற்றின் பொருளாதார முன்னேற்றமும் காரணமாகிறது.

"இந்த ஆசிய நாடுகளில் அதிகரித்து வரும் பொருளாதார செழிப்பால், கொடை [தரவரிசை] அதிகரித்து வருவதில் ஆச்சரியமில்லை" என்று ஹரியானாவின் சோனிபட்டில் உள்ள அசோகா பல்கலைக்கழகத்தின் சமூக தாக்கம் மற்றும் அறப்பணி மையத்தின் இங்க்ரிட் ஸ்ரீநாத் கூறினார்.

உலக கொடை குறியீட்டில், ஏழு தெற்காசிய நாடுகளில் பாகிஸ்தான், நேபாளம் மற்றும் இலங்கைக்கு கீழ், இந்தியா மிகக் குறைவான இடத்தை பெற்றிருந்தது. சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது, குறைந்த மற்றும் மிககுறைவான மக்களால் தான் உணரப்பட்டுள்ளது. ஆசிய நாடுகளை போலவே அதன் அறப்பணி ஏன் அதிகரிக்கவில்லை என்பதை இது விளக்கக்கூடும் என்று இங்க்ரிட் ஸ்ரீநாத் கூறினார்.

குறைந்த வருவாய் கொண்ட குடும்பங்கள், கடந்த 12 மாதங்களில் நன்கொடை (69%) அல்லது நிதியுதவி அளிப்பது , மாதம் ரூ.1.7 லட்சம் (2,400 டாலர்) வீட்டு வருவாய் (82%) உள்ளவர்களை விட குறைவாக உள்ளது என்று அறிக்கை கூறுகிறது. சி.ஏ.எப் இந்தியாவின் பத்ரா கூறுகையில், "ஒரு தனிநபரின் கொடை அளவை இந்த ஆய்வு கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை" என்றார்.

"மதம், இனம் மற்றும் சாதி அடிப்படையில் சுற்றியுள்ள மற்ற நாடுகளை விட இந்தியா பிளவுபட்டுள்ளது" என்ற ஸ்ரீநாத், "இது, மக்களை தேசிய அளவிலான அறப்பணி முயற்சிகளில் ஈடுபடுவதில் குறைவான விருப்பத்தை உண்டாக்குகிறது" என்றார்.

கொடை அறிக்கை

"இந்தியாவில், ஒருவருக்கொருவர் கொடுத்து மகிழ்ந்து உதவுதல் என்ற தயாள குணம் நமது வலுவான கலாச்சாரத்தில் உள்ளது" என்று பத்ரா கூறினார். அதிகமான இந்தியர்கள் (64%) தாங்கள், தொண்டு நிறுவனங்களுக்கு கொடை தருவதை விட (58%), தேவைப்படும் நபர், குடும்பங்களுக்கு நேரடியாக அல்லது ஆலயம் அல்லது மத அமைப்புகள் வழியே (64%) கொடை தருவதாகக் கூறியதாக, இந்தியா கிவிங் ரிப்போர்ட் கூறியது. இது, சி.ஏ.எப். குளோபல் அலையன்ஸ் என்ற ஒருநாடு சார்ந்த அறிக்கை; இது மனிதநேயம் மற்றும் சிவில் சமூகத்தில் பணிபுரியும் அமைப்புகளின் வலைப்பின்னலாகும்.

தவிர, இந்து மதத்தில் தானம் மற்றும் உட்சர்க், இஸ்லாமியர்களின் ஜகாத், கம்ஸ் மற்றும் சதாக்கா போன்ற, இந்தியாவில் 500க்கும் மேற்பட்ட பாரம்பரிய மதரீதியான கொடைகள், வழக்கில் உள்ளன. "இவை, கொடை குறியீட்டில் காட்டப்படாமல் போகலாம். ஏனெனில் இந்தியர்கள் இதை ஒரு குடும்ப அல்லது மதத்தின் கடமையாகவே கருதுகின்றனர்" என்று பத்ரா கூறினார். “உதாரணமாக, இந்தியர்கள் வழிபாட்டுத் தலங்களுக்கு வெளியே ஏழைகளுக்கு உணவளிப்பது, அல்லது பக்திமான்கள் மற்றும் துறவிகளுக்கு உணவு பரிமாறுகின்றனர். கணக்கெடுப்பில் பங்கேற்பவர்கள், இதை சொல்ல மாட்டார்கள்; அதை அவர்கள் தங்களின் கடமையென்றே கருதுகின்றனர்” என்றார்.

மேலும், 38% வரை இந்தியர்கள் தங்கள் பணம் எவ்வாறு செலவிடப்படும் என்று தெரிந்தால் மேலும் நன்கொடை தர விரும்புவதாகவும், வெளிப்படைத்தன்மை இருந்தால் அதிக நன்கொடை தருவதாக 32% பேரும் கூறினர். "ஒழுங்கமைக்கப்பட்ட இலாப நோக்கற்ற நிறுவனங்கள், முறையான விருப்பங்களை வழங்கும் சாத்தியங்கள் உள்ளன," என்று சி.ஏ.எப்.-இன் பென் ரஸ்ஸல் கூறினார்.

குறைவாகவே கொடை தரும் கோடீஸ்வரர்கள்

கடந்த 2017இல், இந்திய செல்வந்தர்கள் சொத்து, 1% அதிகரித்து ரூ.20,913 கோடி (303 பில்லியன் டாலர்) அதிகரித்துள்ளது. ஆக்ஸ்பாம் இந்தியா அறிக்கைப்படி, இது, மத்திய அரசின் மொத்த பட்ஜெட் திட்டத்திற்கு சமமாகும்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை கூறியபடி, அறப்பணி நடவடிக்கைகளுக்கு இந்திய செல்வந்தர்களின் பங்களிப்பு அவர்களின் சொத்து அதிகரிப்பைவிட மெதுவாகவே வளர்ந்துள்ளது. அதிஉயர் நிகர மதிப்புள்ள தனிநபர்களின் (ரூ. 25 கோடிக்கு மேல் நிகரமதிப்பு கொண்டவர்கள்) பெரிய பங்களிப்புகள் (ரூ.10 கோடிக்கு மேல்) 2014 ஆண்டில் இருந்து 4% குறைந்துள்ளது.

கடந்த ஆறு ஆண்டுகளில் மிகக்குறைந்த உலகக்கொடை குறியீடு மதிப்பெண் (2018 இல் 22%) இந்தியா கொண்டுள்ள நிலையில், அதன் கோடீஸ்வர்களின் எண்ணிக்கை 121 என்ற சாதனை எண்ணிக்கையை தொட்டது. சீனா மற்றும் அமெரிக்காவுக்கு அடுத்து, அதிக கோடீஸ்வரர்கள் எண்ணிக்கையை இந்தியா கொண்டுள்ளது.

(ஹேபர்ஷோன், மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்; இந்தியா ஸ்பெண்ட் பயிற்சியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.