இந்தியா 10 லட்சம் கோவிட் -19 வழக்குகளை எட்டியதை விளக்கும் 6 வரைபடங்கள்

டெல்லி மற்றும் மும்பை: 2020 ஜூலை 17 அன்று 10 லட்சம் கோவிட் -19 வழக்குகள் என்ற எண்ணிக்கையை கடந்து, உலகின் மூன்றாவது நாடாக இந்தியா மாறியுள்ளது. நாட்டில் தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வரும் நிலையில், தினமும் அறிவிக்கப்படும் புதிய கோவிட் வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது; கோவிட் வரைபடத்தில் ஏறுமுகத்தை சமப்படுத்தும் அதன் முயற்சி வெற்றி பெறவில்லை. நாட்டில் ஒரேநாளில் அதிகபட்சமாக 34,956 வழக்குகள் பதிவாகி, மொத்தம் 1,003,832 உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளாக அதிகரித்துள்ளது.
தற்போதைய 21 நாட்களில் இரட்டிப்பு என்ற வேகம் நீடித்தால், ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இந்த எண்ணிக்கை 20 லட்சமாக உயரக்கூடும். மிக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் டெல்லியில் மட்டுமே வழக்குகளின் வளர்ச்சி குறைந்துள்ளது. கொரோனா வைரசால் இதுவரை நாடு முழுவதும் 25,602 பேர் இறந்துள்ளனர்.
கோவிட்-19 பரவல், அதை தொடர்ந்து ஊரடங்கு அமலானது பின்னர் தளர்வு நடவடிக்கை ஆகியன, நாடு முழுவதும் இயல்பு வாழ்க்கையை பெரிதும் சீர்குலைத்துள்ளன. கடந்த ஐந்து மாதங்களில் சுகாதார அமைப்புகள், புலம்பெயர்ந்தோர், சுகாதாரப் பணியாளர்கள், குழந்தைகள், சுற்றுச்சூழல் மற்றும் பலவற்றில் தொற்றுநோய்களின் தாக்கம் குறித்து, இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டு வந்துள்ளது.
கோவிட்-19 க்கு எதிரான இந்தியாவின் போராட்டம், ஆறு வரைபடங்களின் வாயிலாக இங்கே விவரிக்கப்படுகிறது.
கோவிட்19 எண்ணிக்கை குறையவில்லை
உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையில் அதிகபட்சம் மற்றும் ஒரேநாளில் அதிக எண்ணிக்கை என்ற அதிகரிப்பை இந்தியா ஏறத்தாழ தினமும் தெரிவித்து வருகிறது. ஜூலை 16 அன்று, நாட்டின் மொத்த வழக்குகள் 34,956 அதிகரித்தது. மார்ச் 25 ம் தேதி அரசு தேசிய அளவிலான ஊரடங்கை அமல்படுத்தியது. வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ஜூன் 1ம் தேதி முதல், பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளது.
நோய் வழக்கு வளர்ச்சிக்கு ஏற்ப தினமும் பதிவாகும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது - ஜூலை 17ம் தேதி வரை 25,602 கோவிட்-19 இறப்புகள் பதிவாகி உள்ளன; இது அறியப்பட்ட விளைவுகளின் இறப்பு விகிதத்தை 3.9% ஆகக் கொண்டுள்ளது. இருப்பினும், வரையறைகளில் உள்ள வேறுபாடுகள் மற்றும் அடிப்படை இறப்பு தரவுகளின் குறைந்த தரம் ஆகியவற்றால், இந்தியாவின் உண்மையான கோவிட்-19 இறப்பு விகிதத்தை கணக்கிடுவது கடினமாகவே உள்ளது.
8 மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்களில் மட்டுமே தினசரி வழக்கு வளர்ச்சியில் சரிவு
இரண்டு வாரங்களுக்கு முன்பு பதிவான ஏழு நாள் சராசரியுடன் ஒப்பிடும்போது, 25 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் தினமும் பதிவாகும் கோவிட்-19 வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலங்களில், டெல்லி மட்டுமே அதன் வழக்கு வளர்ச்சியைக் குறைத்துள்ளது; அங்கு ஜூன் 23 அன்று 3,947 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன. ஜூலை மாதத்தில், டெல்லி ஒருநாளைக்கு சராசரியாக 1,975 புதிய வழக்குகளை பதிவு செய்துள்ளது.
இதுவரை எந்த கோவிட் -19 வழக்குகளும் பதிவாகாத நாட்டின் ஒரே பகுதியாக லட்சத்தீவு உள்ளது. கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய இரு மாநிலங்களும், ஏப்ரல் 20ஆம் தேதி “கோவிட் இல்லாதவை” என்று அறிவிக்கப்பட்டன; ஆனால் அங்கு , வழக்குகளில் மீண்டும் எழுச்சி காணப்படுகிறது. ஜூலை 17 நிலவரப்படி கோவாவில் 1,272; மணிப்பூரில் 635 வழக்குகள் இருந்தன. சிக்கிம், நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம், மற்றும் திரிபுரா ஆகியன ஏப்ரல் 28 அன்று கோவிட் இல்லாததாக அறிவிக்கப்பட்டன; ஆனால் அந்த நான்கு மாநிலங்களிலும் இப்போது தினசரி வழக்கு எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.
கோவிட்-19 பரவத் தொடங்கியதில் இருந்து இந்தியாவின் சோதனைத்திறன் வேகமாக அதிகரித்துள்ளது. தற்போது ஒவ்வொரு நாளும் 3,00,000 மாதிரிகள் பரிசோதிக்கப்படுகிறது. இருப்பினும், பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளில் நேர்மறை வீதமும் அதிகரித்துள்ளது; ஜூலை மாதத்தில் 10.2% மாதிரிகள் நேர்மறை, இது மே மாதத்தில் 5% ஆக இருந்தது.
ஒட்டுமொத்தமாக, இந்தியா 1,000 பேருக்கு 8.99 மாதிரிகளை பரிசோதித்துள்ளது. இது ரஷ்யாவில் 1,000 க்கு 164.8, தென்னாப்பிரிக்காவில் 1,000-க்கு 38.4 சோதனைகளை விட குறைவு; மற்றும் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானின் பரிசோதனை விகிதத்துடமும் ஒப்பிடத்தக்கது. பெரும்பாலான மாநிலங்களில் தொடர்புள்ளவரை கண்டறிவது போதுமானதாக இல்லை; உறுதிப்படுத்தப்பட்ட கோவிட்-19 வழக்குகளில் 70%-க்கும் அதிகமான வெளிப்பாடு குறித்த தரவுகளை காணவில்லை என்று, ஜூன் 2 இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது. சுகாதாரப் பணியாளர்களும் பரவலாக சோதிக்கப்படுவதில்லை. இந்தியா தனது பரிசோதனை உத்திகளை ஆறாவது முறையாக ஜூன் 25 அன்று திருத்தி அமைத்தது; ஊனிரியல் (செரோலாஜிகல்) ஆய்வுகள் மூலம் சோதனைக்குழுக்களுக்கான கூடுதல் வழிகாட்டுதல்களை அது சேர்த்தது. இத்தகைய சோதனையின் அளவு மாறுபாடு தரவுகளின் நம்பகத்தன்மையையும், நோய் பரவுதல் மற்றும் வளர்ச்சி நடவடிக்கைகளையும் பாதிக்கிறது.
இந்தியா தனது 100வது வழக்கில் இருந்து 10 லட்சம் என்பதை கடக்க 126 நாட்கள் ஆனதுகடந்த ஜூலை 16ம் தேதி 34,956 புதிய வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், 100வது கோவிட் வழக்கு உறுதியான 126 நாட்கள் கழித்து, 10 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகளை பதிவு செய்த உலகின் மூன்றாவது நாடாக இந்தியா மாறியுள்ளது. இது அமெரிக்காவோடு இணைகிறது, அங்கு 100வது உறுதிப்படுத்தப்பட்ட வழக்கில் இருந்து 57 நாட்களில் 10 லட்சம் என்ற எண்ணிக்கை எட்டப்பட்டது; பிரேசிலில் இதற்கு 97 நாட்கள் ஆனது.
இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் பிரிட்டன் போன்ற ஐரோப்பிய நாடுகள் உலகளாவிய தொற்றுநோயின் ஆரம்ப மையங்களாக இருந்தபோதும், இந்த நாடுகளில் வழக்கு வளர்ச்சி பெரும்பாலும் தட்டையாகவே உள்ளது, அதே நேரம் இந்தியா, பிரேசில் மற்றும் அமெரிக்காவில் வழக்குகள் அதிவேகமாக அதிகரித்து வருகின்றன.
Source: Johns Hopkins Coronavirus Resource Center
21 நாள் இரட்டிப்பு காலத்துடன், ஆகஸ்ட் தொடக்கத்தில் இந்தியா 20 லட்சம் வழக்குகளை எட்டக்கூடும்
தற்போதைய ஜூலை மாதத்தின் வளர்ச்சி விகிதத்தை பார்க்கும் போது இந்தியாவில் மொத்த கோவிட்19 வழக்குகள் ஒவ்வொரு 21 நாட்களுக்கும் இரட்டிப்பாகின்றன. இந்த விகிதத்தில், ஆகஸ்ட் தொடக்கத்தில் நாடு 20 லட்சம், ஆகஸ்ட் இறுதிக்குள் 40 லட்சம் வழக்குகளையும் பதிவு செய்யக்கூடும். மார்ச் 25 அன்று ஊரங்கின் தொடக்கத்தில் 4.3 நாட்களாக இருந்த வழக்குகளின் இரட்டிப்பு காலம், தொடர்ந்து அதிகரித்துள்ளது. இருப்பினும், மே 1 அன்று இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை கூறியபடி, குறைந்த பரிசோதனை மற்றும் உள்ளூர் அளவில் குறிப்பிடத்தக்க மாறுபாடுகளால் பரவல் அளவை இரட்டிப்பாக கணக்கிடுவது தவறான மெட்ரிக் அளவீடாகும்.
ஊரடங்கின் போது தேசியளவில் நடமாட்டம் குறைந்தது; தற்போது மீண்டும் அதிகரிப்பு
ஊரடங்கின்போது குடியிருப்பு அல்லாத பகுதிகளில் அடிப்படை அளவுகளில் நடமாட்டம் 50% க்கும் அதிகமாக சரிந்தது; இது ஊரடங்கு நடவடிக்கைகளின் தீவிரத்தன்மைக்கு ஒரு சான்று. ஜூன் 1ம் தேதி முதல் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, மளிகை மற்றும் மருந்தகப்பகுதிகளுக்கான இயக்கம், தொற்றுநோய்க்கு முந்தைய அடிப்படை சூழலுக்கு திரும்பியுள்ளது; பணியிடங்கள் மற்றும் போக்குவரத்து பகுதி போன்ற பிறவகை இயக்கங்களும் மெதுவாக அதிகரித்து வருகின்றன. அதேநேரம் உள்ளூர் பகுதிகளில் கோவிட் வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், சென்னை, பெங்களூரு போன்ற சில நகரங்கள் உள்ளூர் அளவில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தின.
(சுர்பி பரத்வாஜ், இந்தியா ஸ்பெண்ட் பயிற்சியாளர்; ஜமீலா அகமது ஒரு பங்களிப்பாளர்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளைrespond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கண நடை கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.