மும்பை: பாராளுமன்றத்தின் ஐந்து உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்) 1000% பணக்காரர்களாக வளர்ந்தனர் - அவர்களில் காங்கிரஸின் ஜோதிராதித்யா சிந்தியா - மற்றும் 95 பேர், 2014 முதல் 2019 வரை மக்களவைத் தேர்தல்களுக்கு இடையே 100% பணக்காரர்களாக வளர்ந்தனர். தெலுங்கானாவை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் கோண்டா விஸ்வேஸ்வர் ரெட்டியின் சொத்துக்கள், ஐந்தாண்டுகளில் ரூ. 336 கோடி அதிகரித்துள்ளது. இது அவரது சக மக்களவை உறுப்பினர்களைவிட அதிகம்.

புதிய பகுப்பாய்வில் வெளிவந்த விவரங்களில் இது அடங்கும்; 2019இல் மீண்டும் போட்டியிடும் 335 எம்.பி.க்களின் சராசரி சொத்துக்கள் 2014இல் இருந்ததை விட ரூ. 6.9 கோடி, அதாவது 41% அதிகரித்துள்ளது.இந்த காலகட்டத்தில் பங்கு முதலீடுகள் மூலம் கிடைத்த நல்ல வருவாயே, 16% என்று நிதித்துறை நிபுணர், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

இதில், 5 எம்.பி.க்கள் சொத்து, 10 மடங்குக்கு மேல் உயர்ந்தது. அவர்கள், சுமேதானந்த் சரஸ்வதி (பாரதிய ஜனதா கட்சி, 80 முறை), அபு ஹசிம் கான் சவுத்ரி (இந்திய தேசிய காங்கிரஸ், 22 முறை), சங்கர் பிரசாத் தத்தா (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி-மார்க்சிஸ்ட், 20 முறை), ஸ்ரீகாந்த் ஷிண்டே (சிவசேனா, 18 முறை) மற்றும் ஜோதிராதித்யா சிந்தியா (இந்திய தேசிய காங்கிரஸ், 10 முறை) என்று, ஆலோசனை அமைப்புகளான ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் -ஏடிஆர் (ADR) மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு (National Election Watch) ஆகியவற்றின் தரவுகள் தெரிவிக்கின்றன.

Source: Association for Democratic Reforms

அதிக சொத்துக்கள் கொண்ட முதல் 10 எம்.பி.க்களில் நான்கு பேர் காங்கிரஸை சேர்ந்தவர்கள் (அவர்களில் மூன்று பேர் பட்டியலில் முதலிடம்); ஆளும் பாஜகவை சேர்ந்த மூன்று பேர் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி, ஷிரோமணி அகாலிதளம் (எஸ்.ஏ.டி.) மற்றும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்.) கட்சிகளில் இருந்து தலா ஒருவர்.

பாஜக எம்.பி.க்களில்- 2019 இல் மீண்டும் போட்டியிட்ட 335 எம்.பி.க்களில் 170 பேரின் - சராசரி சொத்து ஐந்தாண்டுகளில் 31% அதிகரித்து, 2014இல் ரூ. 13 கோடியில் இருந்து 2019இல் ரூ. 17 கோடியாக இருந்தது. ஷிரோன்மணி அகாலிதளம் கட்சியின் 2 எம்பிக்களின் சொத்து, சராசரிரூ. 115 கோடியுடனும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நான்கு எம்.பி.க்கள் சராசரியாக ரூ.102 கோடியுடன் பணக்காரர்களாக வளர்ந்தனர்.

338 எம்.பி.க்களில் 335 பேரின் பிரமாண வாக்குமூலங்களை ஏ.டி.ஆர். பகுப்பாய்வு செய்தது; மூன்று பேரின் “2014 முதல் தெளிவற்ற /முழுமையற்ற பிரமாண வாக்குமூலங்கள் காரணமாக” பகுப்பாய்வு செய்யப்படவில்லை. இந்த 335 பேரின் சொத்துக்கள் 2014இல் ரூ.16.8 கோடியாக இருந்தது, 2019இல் ரூ.39.9 கோடியாக இருந்தது.

இந்த தரவுகளின் உட்பொருள், பணம் அல்லது ஊழல்; ஆனால், சொத்து ஆலோசகரும் ஆனந்த் ரதி சொத்து மேலாண்மை நிறுவன இயக்குனர் சுபேந்து ஹரிச்சந்தன், “எல்லாவற்றையும் ஒரே தூரிகை மூலம் வரைதல்” என்று எச்சரிக்கிறார்.

"வருவாய் முறையானதாகவோ அல்லது அவ்வாறு இல்லாமலும் இருக்கலாம்" என்று ஹரிச்சந்தன் கூறினார். "முறையான வழிமுறைகளின் மூலம் அல்லது வணிகத்தில் இருந்து கிடைக்கபது தான் வருமான தொகையாகும். அவர்களின் (எம்.பி.க்கள்) சொத்து வளர்ச்சியை புரிந்து கொள்ள ஒருவரின் தனிப்பட்ட இருப்புநிலைகளை பகுப்பாய்வு செய்ய வேண்டும்” என்றார் அவர்.

இந்த நிதி விவரங்கள் வெளிவந்தன; ஏனெனில் பிப்ரவரி 26, 2019 அன்று தேர்தல் ஆணையம் (EC) - அந்த மாதத்தின் உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒன்றுக்கு பிறகு - மக்களவை வேட்பாளர்கள் முந்தைய ஐந்து ஆண்டுகளின் வருமான வரி தாக்கல், வெளிநாட்டு மற்றும் சுய சொத்துக்கள் மற்றும் மனைவி மற்றும் இந்து பிரிக்கப்படாத குடும்பம் (HUF) சார்புடையவர்கள் மற்றும் வருமானவரி நிரந்தர கணக்கு எண் (பான்) விவரங்களை தாக்கல் செய்வது கட்டாயம் ஆக்கப்பட்டது.

இந்து பிரிக்கப்படாத குடும்பம் சட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஒரு தனிநபராக கருதப்பட்டது மற்றும் ஒரு தனிநபரின் அதே விகிதத்தில் வரி விதிக்கப்படுகிறது. இந்த விதி பொதுவாக வணிக குடும்பங்கள் மற்றும் மூதாதையர் பண்பு கொண்ட குடும்பங்களால் பயன்படுத்தப்படுகிறது. இந்த சட்டத்தின் கீழ் சமண மற்றும் சீக்கிய குடும்பங்களும் நிர்வகிக்கப்படுகின்றன.

அதிகாரப்பூர்வமற்ற மதிப்பீடுகளின்படி, மக்களவைத் தேர்தலில் போட்டியிடரூ. 10 கோடி முதல் ரூ. 30 கோடி வரை செலவாகும் என்று, கொள்கை ஆராய்ச்சி மையத்தின் ராகுல் வர்மா கூறினார்.

"இந்தியாவில் ஒரு அரசியல்வாதி சராசரி மனிதனை விட பணக்காரர்" என்று வர்மா கூறினார். அரசியல் கட்சிகள் "வாரிசுகள் அல்லது கடந்தகால குற்றவாளிகள்" கொண்ட வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்தி வெற்றி பெறுவார்கள் என்று நம்புகிறார்கள்; அந்த நம்பிக்கை எளிதில் வெளிப்படுத்தப்படுகிறது.

"இந்தியாவில் பெரும்பாலான கட்சிகள் மையப்படுத்தப்பட்டு (ஒரு குடும்பங்கள் அல்லது ஒற்றை தலைவர்களை சார்ந்து) உள்ளன. இதனால் கட்சிக்குள் ஜனநாயகம் இருப்பதில்லை" என்று வர்மா கூறினார்.

ரூ.366 கோடி பணக்காரராக வளர்ந்த எம்.பி.

இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸை சேர்ந்த கோண்டா விஸ்வேஸ்வர் ரெட்டி, தெலுங்கானாவின் செவெல்லாவை சேர்ந்தவர்; 2014 பொதுத்தேர்தலுக்கு பின்னர் ரூ.366 கோடியுடன் பணக்காரராக உருவெடுத்தார். இது, 2019இல் மீண்டும் தேர்தலில் போட்டியிட்ட 335 எம்.பி.க்களில் மிக உயர்ந்த அளவு.

ரெட்டியின் சொத்துக்கள் ஐந்தாண்டுகளில் 69% அதிகரித்து, 2014 ல் 528 கோடி ரூபாயிலிருந்து 2019 ல் ரூ .895 கோடியாக அதிகரித்துள்ளது. 2014 ஆம் ஆண்டில் அவரது சொத்துக்களில் அவரது மனைவி மற்றும் மூன்று மகன்கள் (அனிந்தித், விஸ்வாஜித் மற்றும் விராஜ்) ஆகியோர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தனர்; அதே நேரத்தில் 2019ஆம் ஆண்டில் அவரது மனைவி மற்றும் அவரது இளைய மகன் விராஜ் மாதவ் ரெட்டி ஆகியோர் அடங்குவர்.

கடந்த 2014இல் - அவர் டிஆர்எஸ் கட்சியில் இருந்தவர், 2018 நவம்பரில் காங்கிரசுக்கு மாறிய - ரெட்டி ரூ. 482 கோடி மதிப்புள்ள வைப்பு, பத்திரங்கள் மற்றும் நகைகள் போன்ற அசையும் சொத்துக்கள் 78% உயர்ந்து 2019 ல் ரூ.858 கோடி ஆகா அதிகரித்துள்ளார்.

ரெட்டியின் பெரும்பாலான சொத்துக்கள் (2019 இல் 95% அல்லது ரூ. 820 கோடி) பத்திரங்கள், கடன் பத்திரங்கள் மற்றும் நிறுவனங்களின் பங்குகளில் இருந்து வந்தவை. ரெட்டி, அவரது மனைவி மற்றும் மகன் அப்பல்லோ மருத்துவமனைகளின் பங்குகளை வைத்திருக்கிறார்கள்; இது ரூ. 466 கோடி மதிப்புடையது, பத்திரங்கள், கடன் பத்திரங்கள் மற்றும் பங்குகள் ஆகியன, அவர் வருமானத்தில் 57% பங்கைக் கொண்டுள்ளது. ரெட்டியின் மனைவி சங்கிதா ரெட்டி, அப்பல்லோ மருத்துவமனைகளின் இணை நிர்வாக இயக்குநராக உள்ளார்.

ரெட்டியின் அசையா சொத்துக்கள்- விவசாயம் / விவசாயம் சாராத நிலம், வணிக / குடியிருப்பு கட்டிடங்கள் - ஐந்து ஆண்டுகளில் 18% குறைந்து, அதாவது 2014இல் ரூ .49 கோடி என்றிருந்தது, 2019இல் ரூ. 40 கோடியாக குறைந்தது.

கோண்டா விஸ்வேஸ்வர் ரெட்டிக்கு 2014இல் ரூ. 7 கோடியாக இருந்த கடன்கள் - அவரது மனைவியுடையது உட்பட - 2019ல் ரூ. 35 கோடியாக இருந்தது.

"பெரும்பாலான வேட்பாளர்கள் பணக்கார பின்னணியில் இருந்து வந்தவர்கள், எனவே அவர்கள் வாடகை தேடும் நடவடிக்கைகளில் முதலீடுகளைக் கொண்டுள்ளனர்" என்று வர்மா கூறினார். "பலருக்கு தொழில்கள், தொழிற்சாலைகள் மற்றும் பெட்ரோல் பம்புகள் போன்ற சொத்துக்கள் உள்ளன. பொருளாதார வளங்கள் இல்லாமல் நீங்கள் அரசியல் செய்ய முடியாது” என்றார் அவர். அரசியலில் இருப்பது, கீழேயுள்ள அட்டவணை குறிப்பிடுவது போல, அந்த சொத்துக்களின் மதிப்பை அதிகரிக்கும்.

Source: Association for Democratic Reforms

ரெட்டிக்கு பிறகு, அடுத்த இரண்டு எம்.பி.க்கள், காங்கிரஸை சேர்ந்த ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் டி.கே.சுரேஷ் ஆகியோர்.

மத்தியப் பிரதேச மாநிலம் குணா தொகுதியில் இருந்து சிந்தியா போட்டியிட்டார்; அவரது சொத்துக்கள் ஐந்தாண்டுகளில் 1032% வளர்ச்சியடைந்து, அதாவது 2014இல் ரூ. 33 கோடியில் இருந்து 2019இல் ரூ. 374 கோடியாக உயர்ந்தது. 2014இல் சிந்தியாவின் சொத்துகளில் அவரது மனைவி மற்றும் சார்ந்துள்ள இருவரதும் அடங்கும். அதே நேரம் 2019 இல் அவரது மனைவி, சார்ந்துள்ள இருவருடன் எச்.யு.எப்.வும் அடங்கும்.

சிந்தியா, மத்திய பிரதேசத்தின் முன்னாள் அரச குடும்பத்தின் வம்சாவளி ஆவார். குவாலியரின் கடைசி மகாராஜா (மன்னர்) மறைந்த ஜீவாஜிராவ் சிந்தியாவின் பேரன் மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த மாதவ்ராவ் சிந்தியாவின் மகன் ஆவார்.

2014 ஆம் ஆண்டில் சிந்தியாவிற்கு ரூ. 2 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துக்கள் இருந்தது; இது 2150% அதிகரித்து 2019 இல் ரூ. 45 கோடியானது. அவரது அசையா சொத்துக்கள் 933% உயர்ந்து, 2014 இல் ரூ. 30 கோடியில் இருந்து, 2019இல் ரூ. 328 கோடியாக அதிகரித்துள்ளது.

அசையாச் சொத்துக்கள் 2019 ஆம் ஆண்டில், சிந்தியாவின் சொத்துக்களில் 88% (ரூ. 328 கோடியில் இருந்து ரூ. 374 கோடி). எச்.யு.எப். இன் கீழ் விவசாய நிலங்கள் அவரது அசையாச் சொத்துகளில் 55% பங்கைக் கொண்டிருந்தன; அதை தொடர்ந்து அவருக்கு சொந்தமானது மற்றும் எச்.யு.எப். உட்பட குடியிருப்பு கட்டிடங்கள் (45%) ஆகும்.

2019 ஆம் ஆண்டில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள கடன் பொறுப்புகள் - அவரது மனைவி உட்பட - இருந்தது; இது, 2014இல் ரூ. 14 லட்சம் (அவரது மட்டும்) இருந்ததாக அறிவிக்கப்பட்டது.

பணக்கார ஷிரோன்மணி அகாலிதள எம்.பி.க்கள்

பாஜகவின் தோழமை கட்சியான ஷிரோன்மணி அகாலிதளம் கட்சி , 2019 ஆம் ஆண்டில் பாராளுமன்ற உறுப்பினர்களில் மிக உயர்ந்த சராசரி சொத்து (ரூ. 115 கோடி) கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து என்.சி.பி (ரூ.102 கோடி), ஜன்னாயக் ஜனதா கட்சி (ரூ. 76 கோடி), காங்கிரஸ் (ரூ. 61 கோடி மற்றும் பிஜேடி (ரூ. 55 கோடி).

கடந்த 2014 ஆம் ஆண்டில், முதல் 10 பணக்காரக் கட்சிகளில் ஷிரோன்மணி அகாலிதளம் - எஸ்.ஏ.டி. இல்லை என்பதால், நிதி குறித்த புகார் அளிப்பதற்கான தேர்தல் ஆணையத்தின் தாக்கமும் இங்கே தெளிவாகத் தெரிகிறது.

Source: Association for Democratic Reforms

மீண்டும் 2019 இல் எஸ்ஏடி சார்பில் இருவர் போட்டியிட்டனர். ரூ. 217 கோடி மதிப்புள்ள சொத்துக்களுடன் ஹர்சிம்ரத் கவுர் பாதல், மற்றும் ரூ.12 கோடி மதிப்பு சொத்துக்களுடன் பிரேம் சிங் தான் அந்த இருவர்.

பாதல், 2014இல் பஞ்சாப் மாநிலம் பதிந்தா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்; தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் உணவு பதப்படுத்தும் தொழில்களுக்கான மத்திய அமைச்சராக இருந்தவர். அவர் பஞ்சாபின் முன்னாள் துணை முதல்வரும், எஸ்ஏடியின் தலைவருமான சுக்பீர் சிங் பாதலின் மனைவி.

2019 ஆம் ஆண்டில் பாதலின் அறிவிக்கப்பட்ட சொத்துக்கள் அவருடையது, அவரது கணவர் மற்றும் எச்.யு.எப். சார்ந்தவை. 2014 ஆம் ஆண்டில், அவரது சொத்துக்கள் அவரதும், அவரது கணவருடையது மட்டுமே.

2019 ஆம் ஆண்டில் பாதலின் கணக்கிடப்பட்ட சொத்துகளில், அசையாத சொத்துக்கள் 54% (ரூ. 117 கோடி) ஆகும். விவசாய நிலங்கள் 42% (ரூ. 49 கோடி) அசையா சொத்துக்களைக் கொண்டிருந்தன, அவற்றில் ரூ .45 கோடி எச்.யு.எப். இன் கீழ் அறிவிக்கப்பட்டது. பாதல் ரூ. 100 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துக்களை அறிவித்தார்; அதில் பத்திரங்கள், கடன் பத்திரங்கள் மற்றும் நிறுவனங்களின் பங்குகள் ரூ. 60 கோடி.

ஐந்து ஆண்டுகளில் சொத்துக்களின் சதவீதம் அதிகரிப்பு அடிப்படையில், நாங்கள் முன்பு குறிப்பிட்டது போல், ராஜஸ்தான் மாநிலம் சிகாரை சேர்ந்த பாஜகவை சேர்ந்த சுமேதானந்த் சரஸ்வதி, மிக உயர்ந்த சொத்து வளர்ச்சியை (8141%), அதாவது 2014ல் ரூ. 34,311 இல் இருந்து 2019ல் 28.27 லட்சமாக அதிகரித்திருந்தார்.

சரஸ்வதியின் 2019 பிரமாண பத்திரத்தில், ரூ.16 லட்சம் மதிப்பு மோட்டார் வாகனம் சேர்க்கப்பட்டிருந்தது. அவரது சொத்து வளர்ச்சி அதிகரிப்புக்கு இது முக்கிய காரணமாகும்.2019 ஆம் ஆண்டில் ரூ.27 லட்சம் மதிப்புள்ள கடன்கள் - வங்கிகள் / நிதி நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்டவை- உள்ள நிலையில், 2014 இல் எந்தவிதமான கடனும் இல்லை என்று அவர் அறிக்கையில் தெரிவித்தார்.

சரஸ்வதியை தொடர்ந்து காங்கிரசின் அபு ஹசீம் கான் சவுத்ரி (2244%), இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) சங்கர் பிரசாத் தத்தா (2016%), சிவசேனாவின் ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே (1866%) மற்றும் நாங்கள் சொன்னது போல ஜோதிராதித்யா சிந்தியா (1032%) உள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம் மால்டா தட்சின் தொகுதியை சேர்ந்த எம்.பி. சவுத்ரியின் சொத்துக்கள் 2014 ல் ரூ.1 கோடியிலிருந்து 2019 ல் ரூ. 27 கோடியாக உயர்ந்தன. இந்த அதிகரிப்பு முக்கியமாக அவரது மனைவியின் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில், அசையும் சொத்துகளாக ரூ. 10 கோடியில் ரூ. 9 கோடியில் அசையும் சொத்துகளாக அறிவிக்கப்பட்டதே காரணம் ஆகும். 2019 தேர்தல் பிரமாண வாக்குறுதியில் சுவிட்சர்லாந்தில் - மனைவியின் பெயரில் ரூ. 15 கோடி மதிப்புள்ள (குடியிருப்பு கட்டிடங்கள்) அசையாச் சொத்துக்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரு தகவல்களும், 2014 பிரமாண வாக்குறுதியில் இல்லை.

சவுத்ரிக்கு, 2014இல் ரூ. 6 லட்சம் கடன் என்பதுடன் ஒப்பிடும்போது, 2019ஆம் ஆண்டில் ரூ. 7 லட்சம் மதிப்புள்ள கடன் இருப்பதாக தெரிவித்தார். ஷிண்டேவுக்கு, 2019 ஆம் ஆண்டில் ரூ. 12 லட்சம் மதிப்புள்ள கடன்கள் இருப்பதாக அறிக்கை செய்யப்பட்டது. அதே நேரம், தத்தாவுக்கு எவ்வித கடனும் இல்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், இந்த அறிவிப்புகளில் காணப்படும் வளர்ச்சி பற்றி பகுப்பாய்வு செய்வதில் எச்சரிக்கைகளும் உள்ளன.

சொத்து வளர்ச்சி ஏன் பகுப்பாய்வு செய்வது கடினம்

ஐந்து ஆண்டுகளில் பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்து வளர்ச்சியைப் பற்றிய எந்தவொரு பகுப்பாய்வும் இரண்டு வகையான வருமானங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று ஆனந்த் ரதி சொத்து மேலாண்மையின் ஹரிச்சந்தன் கூறினார்: வீட்டுச் சொத்து (வாடகை வருமானம்), சம்பளம், லாபம் அல்லது வணிகம் அல்லது தொழிலில் இருந்து கிடைக்கும் லாபங்கள், மூலதன ஆதாயங்கள் மற்றும் பிற மூலங்களிலிருந்து கிடைக்கும் வருமானம் (வட்டி வருமானம், ஈவுத்தொகை மற்றும் லாட்டரிகள் போன்றவை); மற்றும் "சொத்து வகுப்புகளின் சந்தை தாக்கம்" மற்றும் எம்.பி.க்கள் அவற்றை வைத்திருக்கும் ஆண்டுகள்.

"வரவுகளை" கணிப்பது கடினம் என்றாலும், கடந்த ஐந்து ஆண்டுகளில், பங்குகள், மாதந்தோறும் முதலீடு செய்யப்பட்டு, சிறந்த வருவாயை வழங்கியுள்ளன - இந்த காலகட்டத்தில் மாதத்திற்கு முதலீடு செய்யப்பட்ட ரூ .50,000 க்கு சுமார் 16% வருமானம் என்று ஹரிச்சந்தன் தெரிவித்தார். இதன் பொருள், எடுத்துக்காட்டாக, ரூ. 30 லட்சம் முதலீடு ரூ. 46 லட்சமாக மாறும்.

ரியல் எஸ்டேட் வருமானம் சொத்து வகை மற்றும் விற்கப்படுவதற்கு முன்பு எத்தனை ஆண்டுகள் நடைபெற்றது என்பதைப் பொறுத்தது என்று, “பெருக்க விளைவுகள்” பற்றி பேசிய ஹரிச்சந்தன், 15 முதல் 20 ஆண்டுகளுக்கு முன்பு நிலம் வாங்கப்பட்டிருந்தால். 18-19% க்கு மேல் இல்லை என்றார்.

2019 முதல் ஐந்து ஆண்டுகளில் குடியிருப்பு சொத்துக்களின் வருமானம் 4-5% முதல் 13-14% வரையிலும், வணிகச் சொத்து 7-8% முதல் 15-16% வரையிலும் உள்ளது என்று ஹரிச்சந்த் கூறினார்; இது, பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் புழக்கத்தில் இருந்த பணத்தில் 86%ஐ மதிப்பிழக்க செய்த 2016 நடவடிக்கைக்கு பிறகு, மிகவும் மந்தகதியில் இருந்தது.

ஒளிபுகா பிரச்சாரம்-நிதி சட்டங்கள் சொத்து தகவல்களை உகந்த முறையில் பயன்படுத்துவதைத் தடுக்கின்றன.

"தேர்தல் பிரச்சார நிதி எவ்வாறு பெறப்படுகிறது, அது எவ்வாறு செலவிடப்படுகிறது என்பது எங்களுக்குத் தெரியாது," என்று சி.பி.ஆர். அமைப்பின் வர்மா கூறினார்; தேர்தல் ஆணையம் சொத்து தகவல்களை வெளிப்படுத்துமாறு வேட்பாளர்களைக் கேட்கும்போது, இது பகுப்பாய்வு செய்யப்பட்டதா என்பது தெரியவில்லை.

"பொது விழிப்புணர்வை உருவாக்குவது பிரச்சினையை தீர்க்கும் என்று நான் நினைக்கவில்லை," என்று வர்மா கூறினார்.

(மல்லபூர், ஒரு மூத்த பகுப்பாய்வாளர்; சால்வி , இந்தியா ஸ்பெண்ட் திட்ட மேலாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.