பெங்களூரு, பண்டா மற்றும் பன்னா: பிரேம் லால், 39, கடந்த 2020 இல் தேசிய ஊரடங்கிற்கு பிறகு, ஒரு மோசமான காலகட்டத்தை அனுபவித்தார். மார்ச் மாதத்தில் அறிவிப்பு வெளியான உடனேயே, சிக்கித் தவித்த பல புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் போலவே, அவரும் கடினமான பயணமாக நடந்து வீடு திரும்பினார். அவர் புனேவில் ஓவியராக வேலை செய்தார், அங்கிருந்து கிட்டத்தட்ட 1,200 கிமீ நடந்து சென்று உத்தரபிரதேசத்தின் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பண்டேல்கந்த் பிராந்தியத்தின் பண்டா மாவட்டத்தில் உள்ள கிராமத்திற்கு போய்ச்சேர்ந்தார். அப்போது முதல், அவர் தேசிய ஊரக வேலைத் திட்டமான, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGS -எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ்) கீழ் சில, வார ஊதிய வேலைவாய்ப்பைக் கண்டறிந்தார்.

"எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ் போன்ற திட்டங்களின் கீழ் ஆண்டின் பெரும்பகுதிக்கு வேலை கிடைத்தால், நான் மற்ற நகரங்களுக்கு செல்ல மாட்டேன்" என்று லால் கூறினார். அவரைப் போலவே, பாபா தீன், 45, மத்தியப் பிரதேசத்தின் பண்டேல்கந்த் பகுதியில் உள்ள பன்னாவின் அருகில் உள்ள மாவட்டத்தில், எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ்- திட்டத்தின் கீழ் வேலை செய்கிறார். மார்ச் மாதத்தில் ஊரடங்கிற்கு பிறகு மக்கள் வீடு திரும்பியபோது வேலைக்கான தேவை "பெரிதும்" அதிகரித்தது "ஆனால் அவர்கள் அனைவருக்கும் வேலை கிடைக்கவில்லை" என்று அவர் கூறினார்.

கடந்த 2006 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டம் (MGNREGA - எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ்) கிராமப்புற குடும்பத்தில் உள்ள வயது வந்த உறுப்பினர்களுக்கு, குறைந்தபட்சம் ஆண்டுக்கு 100 நாட்கள் திறன் அல்லாத ஊதியத்துடனான வேலைவாய்ப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, மேலும் இது கிராமப்புற ஏழைகளுக்கு -கிட்டத்தட்ட 147 மில்லியன் தொழிலாளர்கள் - பொருளாதார நெருக்கடி மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் உயிர் நாடியாக திகழ்கிறது.

கடந்த 2020-21 இல், அதிகபட்சமாக வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை 133 மில்லியனாக அதிகரித்தாலும், அரசாங்கம் 2021-22 இல், இத்திட்டத்திற்காக 35% குறைவான நிதியை ஒதுக்கியது மற்றும் 100 நாட்களுக்கு மேல் வேலை வழங்கத் தயாராகவும் அது இல்லை. இருப்பினும், கூலி வழங்கலில் உள்ள தாமதம் மற்றும் போதிய வேலை கிடைக்காதது போன்ற பிரச்சினைகளை, தாங்கள் தொடர்ந்து எதிர்கொண்டதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

இந்த கட்டுரையில் இந்தியா ஸ்பெண்ட், கபர் லஹாரியா, பாண்டா மற்றும் பன்னா மாவட்டங்களில் இருந்து, எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ் தொழிலாளர்கள் ஊரடங்கு மற்றும் வேலை நெருக்கடியின் பாதகமான பொருளாதார விளைவுகளை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வதோடு, கிராமப்புற வேலை திட்டத்தின் கீழ் தீவிரமாக வேலை தேடும் 95.9 மில்லியன் குடும்பங்களை ஆதரிக்க அரசாங்கம் ஏன் அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்பதை விளக்குகிறது.

வேலைக்கான தேவை அதிகரிப்பு, போதிய நிதி இல்லை

ராஜா (அவர், ஒரு பெயரைப் பயன்படுத்துகிறார்), பண்டாவில் எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ் திட்டத் தொழிலாளி, அவரது குடும்பம் ஊரடங்கின் போது ரொட்டி மற்றும் உப்பு கொண்டு உயிர் பிழைத்தது, பெரும்பாலும் வேலை இல்லாமல் இருந்தார். 2020 ல் தேசிய ஊரடங்கிற்கு முன்பு நிலைமை சிறப்பாக இருந்தது என்றார். இந்த ஆண்டு ஜூலை மாதம் "எட்டு முதல் 10 நாட்கள் வேலை" கிடைத்ததாக கூறும் ராஜா, "கொரோனா வைரஸ் பற்றி எனக்கு கவலை இல்லை, இந்த ஆண்டு எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ் கீழ் வேலை செய்ய விரும்புகிறேன்" என்றார்.

முதல் ஊரடங்கிற்கு முன்பே வேலையின்மை ஒரு பிரச்சனையாக இருந்தது. டிசம்பர் 2019 இல், இந்தியாவின் 48% தொழிலாளர்கள் சுயதொழில் செய்து ஆகஸ்ட் 2020 க்குள், இந்த எண்ணிக்கை 64%ஆக உயர்ந்தது, இது வேலை வாய்ப்புகள் குறைந்து வருவதைக் குறிக்கிறது என்று, ஜனவரி 2021 இல் இந்தியாஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.

ஜூலை 2021 இல், பதினாறு மில்லியன் வேலைகள் சேர்க்கப்பட்டன, ஆனால் அனைத்து கூடுதல் வேலைகளும் "மோசமான தரம்"என்று, இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின், ஆகஸ்ட் 5ல் வெளியான அறிக்கை குறிப்பிட்டது. மழைக்கால விதைப்பு பருவத்தின் காரணமாக கிட்டத்தட்ட 70% வேலைகள், விவசாயத் துறையில் இருந்தன.

கடந்த 2020-21 ஆம் ஆண்டில், எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ் தொழிலாளர்களின் வேலைக்கான தேவை 2019-20 உடன் ஒப்பிடும்போது 43% அதிகரித்து 133 மில்லியன் மக்கள் என்றளவில் இருந்தது, இதில் 84% சில வேலைகள் வழங்கப்பட்டன. அரசு தரவுகளின்படி, 2018-19 இல் முந்தைய 2.7 பில்லியன் நபர்களுடன் ஒப்பிடுகையில், வழங்கப்பட்ட வேலை நாட்களின் எண்ணிக்கை 1.5 மடங்கு அதிகரித்து 3.9 பில்லியனாக உள்ளது. இருப்பினும், வாக்குறுதியளிக்கப்பட்ட 100 நாட்களுக்கு மாறாக, சராசரியாக, அனைத்து வீடுகளுக்கும் 52 நாட்களே வேலை கிடைத்தன.

ஏப்ரல் மற்றும் ஜூலை 2020 க்கு இடையில் (1.7 பில்லியன் நபர் நாட்கள்) உருவாக்கப்பட்ட சுமார் 84% தனிப்பட்ட நாட்கள், 2021 ஆம் ஆண்டின் அதே காலகட்டத்தில் உருவாக்கப்பட்டதாக, ஆகஸ்ட் 10, 2021 அன்று பாராளுமன்றத்தில் அரசு தெரிவித்தது, வேலைக்கான தொடர்ச்சியான தேவையைக் குறிக்கிறது.

உத்தரபிரதேசத்தில், எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ் வேலைக்கான தேவை, 2020-2021 இல் இரட்டிப்பாகி, 2019-20 உடன் ஒப்பிடும்போது, 15.7 மில்லியன் நபர்களாக இருந்தது; தரவுகளின்படி, உத்தரப்பிரதேசம், கோவா மற்றும் ஜார்க்கண்ட் தவிர, 100% அதிகரிப்பு அல்லது அதற்கும் மேல் உள்ளது.

நாகாலாந்து மற்றும் லட்சத்தீவைத் தவிர, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தேவை அதிகரிப்பைக் காட்டின, இதில் ஒன்பது, தேசிய சராசரி 43%ஐ விட அதிகரித்துள்ளது. மத்தியப் பிரதேசம் ஒட்டுமொத்தமாக 74%அதிகரித்துள்ளது.

பண்டாவில், 2019-20 உடன் ஒப்பிடும்போது 2020-21 இல் வேலைக்கான தேவை கிட்டத்தட்ட இரட்டிப்பாகும் (95%), பன்னாவில் இது 54%அதிகரித்துள்ளது.


கடந்த 2020-21 ஆம் ஆண்டில், இந்த திட்டத்திற்காக மத்திய அரசு ரூ. 61,500 கோடியை (8.3 பில்லியன் டாலர்) ஒதுக்கியது, தேசிய ஊரடங்கு அறிவிப்பதற்கு முன்பு, கிராமப்புற இந்தியாவில் உள்ள நகரங்களில் இருந்து தொழிலாளர்கள் பெருமளவில் வெளியேறுவதைக் கண்டது. இது 2020-21 ஆம் ஆண்டில் ஒதுக்கீட்டை 81% அதிகரித்து ரூ.111,500 கோடியாக ($ 15 பில்லியன்) அதிகரித்தது, பின்னர் அது 2021-22 இல் 34% குறைத்து ரூ. 73,000 கோடியாக குறைத்தது.

தேவை அதிகரிப்பை ஆதரிக்க, இந்த ஒதுக்கீடு போதுமானதாக இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள், மேலும் அனைத்து வேலை அட்டைதாரர்களுக்கும் 100 வேலை நாட்களை கூட வழங்கவில்லை என்றனர். "அனைத்து வேலை அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கும் 100 நாட்கள் வேலை வழங்க, எங்களுக்கு 3 லட்சம் கோடி [$ 40 பில்லியன்] தேவைப்படும்," என்று, டெல்லியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் பொருளாதார நிபுணரும் இணைப் பேராசிரியருமான ரீதிகா கெரா கூறினார். "எம்ஜிஎன்ஆர்இஜிஏ நிறைவேற்றப்பட்டதில் இருந்து எந்த அரசும் போதுமான பணம் ஒதுக்கவில்லை" என்றார்.

"ஊரடங்கின் போது, ​​ஏப்ரல் 2020 இல், ஒரு மாதத்திற்கு எம்ஜிஎன்ஆர்இஜிஏ வேலை இல்லை, அரசாங்கங்கள் எதுவும் செய்யவில்லை" என்று, சமூக ஆர்வலரும் மஸ்தூர் கிசான் சக்தி சங்கதன் அமைப்பின் நிறுவனர் உறுப்பினரும், மக்கள் தகவல் உரிமைக்கான தேசிய பிரச்சாரருமான நிகில் டே தெரிவித்தார். "ஆனால் மே மற்றும் ஜூன் மாதங்களில் அரசு பொருளாதாரத் தொகுப்பின் மூலம் பணம் கிடைக்கச் செய்தது" என்றார். இது இருந்தபோதிலும், 2020 ஆம் ஆண்டின் இறுதியில் செலுத்தப்படாத இருப்பு தொகை இருந்ததாக, அவர் மேலும் கூறினார்.

2020-21 ஆம் ஆண்டிற்கான மொத்த எம்ஜிஎன்ஆர்இஜிஏ திட்டத்திற்கான (திருத்தப்பட்ட) பட்ஜெட்டில் கிட்டத்தட்ட பாதி, நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் ஏற்கனவே செலவிடப்பட்டது என, இந்தியாஸ்பெண்ட் 2020 செப்டம்பர் கட்டுரை தெரிவித்தது. எஞ்சிய பாதியே வருடம் பிற்பகுதி முழுமைக்கும் செலவிடப்பட்டது.

தொற்றுநோய் காலத்தில் பொதுமக்களுக்கு, எம்ஜிஎன்ஆர்இஜிஏ பயனுள்ள பாதுகாப்பு வலையாக இருந்தது என்று, சர்வதேச பொருளாதார உறவுகள் குறித்த இந்திய கவுன்சிலின் (ICRIER) பொருளாதார நிபுணர் ராதிகா கபூர் கூறினார்; எனினும், நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை என்றார். "ஏப்ரல் 2020 இல் அதிகரித்த ஒதுக்கீட்டிற்குப் பிறகும், எம்ஜிஎன்ஆர்இஜிஏ செலவு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.47% ஆகும்" என்றார். இந்த திட்டத்தின் உகந்த செயல்பாட்டிற்காக உலக வங்கி பொருளாதார வல்லுனர்களால் பரிந்துரைக்கப்பட்ட 1.7% ஐ விட இது மிகவும் குறைவு என்று அவர் மேலும் கூறினார்.

போதிய வேலை கிடைக்கவில்லை

2020 ஆம் ஆண்டில் சராசரியாக, வீடுகளுக்கு 52 நாட்கள் வேலை கிடைத்தது, இது, இத்திட்டத்தின் 100 நாள் வேலை என்ற உத்தரவாதத்தில் பாதி தான்.

தொற்றுநோயால் ஏற்பட்ட வேலை இழப்புகள் மற்றும் வருமானம் குறைவதால், வறுமை அதிகரித்துள்ளது. பண்டாவில் உள்ள லால், எம்ஜிஎன்ஆர்இஜிஏ திட்டத்தின் கீழ், 2020 இல் 15 நாட்கள் வேலை செய்ததாகவும் ஆனால் பணம் கொடுக்கப்படவில்லை என்றும் கூறினார். "புனேயில் [ஒரு ஓவியராக], சில மாதங்களில் என்னால் 20,000 ரூபாய் வரை சம்பாதிக்க முடிந்தது. நான் வீடு திரும்பியதால், நான் எதையும் சம்பாதிக்கவில்லை, மாதாந்திர செலவுகள் ரூ .8,000 வரை உயரும், "என்று அவர் கூறினார்.

பன்னாவில் உள்ள பாபா டீன், 2021 இல் எம்ஜிஎன்ஆர்இஜிஏ திட்டத்தின் கீழ் 23 நாட்கள் வேலை செய்தார். வழக்கமான வருமானம் இல்லாததால், தொழிலாளர்கள் தொடர்ந்து கடனில் தத்தளிக்கின்றனர். கிராமத்தில் உள்ள ஒவ்வொரு தொழிலாளியும் ரூ .10,000 முதல் ரூ. 20,000 வரை கடன் வாங்கியுள்ளனர், சில நேரங்களில் அவர் 10 முதல் 15 நாட்கள் வழக்கமான வேலைக்காக, நகரத்திற்கு வெளியே செல்வதாகவும் கூறினார்.

எம்ஜிஎன்ஆர்இஜிஏ திட்டமானது, வறட்சி மற்றும் இயற்கை பேரிடர்களின் போது கூடுதலாக 50 நாட்கள் ஊதிய வேலைவாய்ப்புக்கான ஒரு ஏற்பாட்டைக் கொண்டுள்ளது. வேலையின்மை அளவை கருத்தில் கொண்டு, எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ் ஆர்வலர்கள், வேலைக்கான அதிகரித்த தேவையை ஆதரிக்க, கூடுதல் நாட்கள் வேலை மற்றும் நிதி வழங்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.

அதிகரித்து வரும் வேலை தேவைகளை திறம்பட பூர்த்தி செய்ய, அரசு "வருடத்திற்கு குறைந்தது 200 நாட்களாக" திட்டத்தின் பணி நாட்களை அதிகரிக்க வேண்டும் என்று, தொழிலாளர் தொடர்பான மக்களவை நிலைக்குழுவின், ஆகஸ்ட் 2021 அறிக்கை பரிந்துரைத்தது. பட்ஜெட் ஒதுக்கீட்டின் அதிகரிப்பு, செய்யப்பட்ட வேலைக்கான உடனடி பணம் மற்றும் அனைத்து, எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ் தொழிலாளர்களுக்கும் சுகாதார காப்பீட்டை கட்டாயமாக்குவது குறித்து "சிந்திக்க" வேண்டும்.

ஆனால், கூலி வேலைவாய்ப்பு நாட்களை அதிகரிக்க மத்திய அரசு தயக்கம் காட்டி வருகிறது. ஜூலை 2021 இல், அது பாராளுமன்றத்தில் "அரசு தனது சொந்த வளங்களில் இருந்து 100 நாட்களுக்கு மேல் கூடுதல் மனித வேலை நாட்களை வழங்க முடியும்" என்று கூறியது. விவசாய மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில், அறிவிக்கப்பட்ட வறட்சி பாதித்த பகுதிகளில் அல்லது இயற்கை பேரிடர் பகுதிகளில் கூடுதலாக 50 நாட்கள் ஊதிய வேலை வழங்கப்படுகிறது. எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ் திட்டத்தின் கீழ் "வேலை நாட்களை அதிகரிக்கும் திட்டம் இல்லை" என்று கூறினார்.

"துயர காலங்களில் குடும்பங்கள் 100 நாள் வேலைகளை விரைவில் முடிக்க வாய்ப்புள்ளது. குறைந்தபட்சம் கோவிட் -19 இன் விளைவுகள் முடிவடையும் வரை, இந்த உரிமையை அதிகரிக்க வேண்டும்,"என்று ஐசிஆர்ஐஇஆரின் கபூர் கூறினார்.

அரசு தரவுகளின்படி, 2021 ஆகஸ்ட் 20 வரை, சுமார் 700,000 குடும்பங்கள் நிதியாண்டில் ஐந்து மாதங்களுக்குள் 100 நாட்கள் வேலை முடித்துவிட்டன. "பெரும்பாலான தொழிலாளர்களுக்கு 100 நாட்கள் வேலை கிடைக்கவில்லை, தொற்றுநோய்க்கு முன்பே இதுதான்" என்று ராஜா கூறினார்.

போதிய நிதி ஒதுக்கீட்டில் கூடுதல் வேலை நாட்களின் அதிகரிப்பு என்பது ஆதரிக்கப்பட வேண்டும், மேலும் 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளை அரசு பேரிடராக கருத வேண்டும்; அத்துடன், வேலை நாட்களின் எண்ணிக்கையை நீட்டிக்க வேண்டும் என்று டே கூறினார். "நீங்கள் கூலி வழங்குவதை நிறுத்தியவுடன், தொழிலாளர்கள் வேலைக்கு வருவதை நிறுத்துகிறார்கள். சரியான நேரத்தில் பணம் செலுத்தினால் மட்டுமே, திட்டத்தின் கோரிக்கையை செயல்படுத்த முடியும்" என்றார்.

'கோரும்போது வேலை வழங்கப்பட்டது': உள்ளூர் செயல்பாட்டாளர்கள்

பண்டா அருகே மோதிஹரியில் உள்ள கிராம ரோஸ்கர் சஹாயக் அல்லது வேலைவாய்ப்பு உத்தரவாத உதவியாளர் மேவாலால் வர்மா கூறுகையில், கிராமத்தின் நிரந்தர குடியிருப்பாளர்கள் கேட்கும் போது எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ் வேலையை உடனடியாக வழங்க பஞ்சாயத்து நிர்வாகம் தன்னால் இயன்றதைச் செய்கிறது என்றார். ஆனால், அவர் கூறினார், "ஊரடங்கின்போது போது வீடு திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் இருந்து குறைந்தபட்சம் எங்கள் கிராம பஞ்சாயத்தில் எம்ஜிஎன்ஆர்இஜிஏ வேலைக்கான கோரிக்கை இல்லை". அவரது கூறுவது: "கடந்த ஆண்டு [2020] வரை, தினசரி சராசரி ஊதிய விகிதம் ரூ. 201 மற்றும் அவர்கள் நகரங்கள் மற்றும் பிற மாநிலங்களை விட அதிகமாக சம்பாதிக்கிறார்கள், எனவே ஒரு தொழிலாளி ஏன் கிராமத்தில் இருநூறு ரூபாய்க்கு இருக்க விரும்புகிறார்?"

திரும்பி வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் இருந்து வேலைக்கான தேவை இல்லை என்று மோதிஹாரி பஞ்சாயத்து கூறினாலும், பன்னாவில், வேலைக்கான தேவையில் சிறிது அதிகரிப்பு இருந்தது, ஆனால் "அதிகம் இல்லை", என்று பஹதூர்கஞ்ச் கிராமத்தின் பஞ்சாயத்து செயலாளர் சாந்த்ராம் யாதவ் கூறினார். "நாங்கள் நாடு திரும்பியவர்களுக்கு வேலை அட்டைகளை கொடுத்து, அவர்களுக்கு வேலை வழங்கினோம்," என்று அவர் கூறினார்.

ஊதிய தாமதம் மற்றும் அதிகரிப்பு

லாலுக்கு 1.5 லட்சம் கடன் உள்ளது; அவர் தனது மனைவியின் சிகிச்சைக்காக மாதம் ரூ. 4,500 செலுத்த வேண்டும். "எங்கள் கிராமத்தில் இந்த ஆண்டு எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ் திட்டத்தில் பணி புரிய மக்கள் சற்று பயப்படுகிறார்கள், ஏனென்றால் கடந்த ஆண்டு செய்த வேலைக்கான முழுக் கூலியும் எங்களுக்கு வழங்கப்படவில்லை," என்று அவர் கூறினார்.

போதிய ஊதிய அதிகரிப்பு இல்லாதது, ஊதியம் வழங்குதலில் தாமதங்கள் தொழிலாளர்களை இந்த வேலையை செய்ய தயங்க வைத்தது. ஊதியங்களை அணுகுவதற்கு, தொழிலாளர்கள் பல தாமதங்கள் மற்றும் தடைகளை எதிர்கொள்கின்றனர் என்பதை, நாங்கள் மூன்று மாநில கணக்கெடுப்பின் அடிப்படையில் டிசம்பர் 2020 இல் கட்டுரை வெளியிட்டோம்.

"நாங்கள் பணம் செலுத்துவதில் உள்ள சிக்கல் பற்றி ஊராட்சியில் கேட்டால், அது வரும்போது ங்களுக்குத் தெரிவிக்கப்படும் என்று கூறி, அத்துடன் விஷயத்தை மூடிவிடுவார்கள்," என்றார் ராஜா, தொற்றுநோய் பரவலுக்கு முன்புகூட, கூலி தாமதம் என்பது நீண்ட காலமாக எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ் திட்டத்தில் யதார்த்த நிலையாக இருந்தது.

21 மாநிலங்களில் குறைந்தபட்சம் 17 மாநிலங்களின் எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ் திட்டத்தில் ஊதியம் விவசாயத்திற்கான மாநில குறைந்தபட்ச ஊதியத்தை விட குறைவாக உள்ளது, மற்றும் பற்றாக்குறை 2-33%வரம்பில் உள்ளது என்று, அக்டோபர் 2020 இல் ஆய்வாளர்கள் அங்கிதா அகர்வால் மற்றும் விபுல் குமார் பைக்ரா ஆகியோரின் பகுப்பாய்வு தெரிவித்தது.

தற்போதைய பொருளாதார மந்த நிலையில், எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ் ஊதியங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் மற்றும் குறைந்தபட்சம் மாநிலங்களின் விவசாயத்திற்கான குறைந்தபட்ச ஊதியமாக உயர்த்தப்பட வேண்டும், இதனால் ஏழை குடும்பங்கள் செலவினங்களை ஊக்குவிக்க வேண்டும், கபூர் கூறினார்.

கடந்த 2020-21ல் 11% உயர்வுடன் ஒப்பிடும்போது 2021-22 இல் சராசரி ஊதிய உயர்வு 4% ஆக இருந்தது, மார்ச் 2021 இல் FactChecker கட்டுரை தெரிவித்தது. ஒப்பிட்டு பார்த்தால், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி, பணவீக்கத்தை ஈடுசெய்யும் வகையில், ஜூலை 2021 இல் 11% அதிகரிக்கப்பட்டது.

நிதிப் பற்றாக்குறை மற்றும் அரசின் கோவிட்-19 உத்தி, வேலைத் திட்டத்தை பாதிக்கும் இரண்டு காரணிகள் என்று டே கூறினார். "தொழிலாளர்களுக்கு முதல் மாதத்தில் வேலை கிடைக்கவில்லை என்றால் 25% எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ் திட்ட ஊதிய விகிதத்தில் வீட்டிலேயே வேலையிமைக்கு பணம் தர வேண்டும், பின்னர் 50%, 100 நாட்கள் வேலை உத்தரவாதம் பாதுகாக்கப்படும்" என்றார்.

தொற்றுநோய் கட்டுப்பாடுகளுக்கு இடமளிக்கும் வகையில் எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ் -ல் மேற்கொள்ளப்படக்கூடிய அனுமதிக்கப்பட்ட வேலைகளின் கட்டுப்பாட்டை அரசாங்கம் மாற்ற வேண்டும் என்று, டே மேலும் பரிந்துரைத்தார். இது தொழிலாளர்கள் வீட்டிலோ அல்லது அருகிலோ வேலை செய்ய மற்றும் தொற்றுநோயின் சிக்கல்களைத் தணிக்க அனுமதிக்கும் என்று, அவர் மேலும் கூறினார்.

மில்லியன் கணக்கான தொழிலாளர்களைப் போலவே, ராஜாவும் எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ் திட்டத்தின் கீழ் போதுமான நேரங்கள் மற்றும் சரியான நேரத்தில் பணம் கேட்கிறார். "நான் வேலைக்காக வேறு மாநிலத்திற்கு குடிபெயரும் நிலையில் இல்லை, நான் இங்கே என் குடும்பத்தை வளர்க்க வேண்டும்," என்று அவர் கூறினார்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.