புதுடெல்லி / பெங்களூரு: 60 வயதான அசோக் சவுகான் டெல்லியின் லஜ்பத் நகரில் ஒரு நகைக்கடை நடத்தி வருகிறார்; டெல்லியில் பிறந்து அங்கேயே வாழ்ந்து வரும் அவர், வாழ்நாள் முழுவதும் அங்கு வசித்து வரும் மக்களின் நிலையை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். டெல்லியின் நச்சுக்காற்று அவரது இரண்டு வயது பேத்தி மற்றும் 80 வயதான பெற்றோருக்கு 2019 நவம்பரில் சுவாசிக்க தூய்மைக்கருவிகளை நம்பியிருக்க செய்த போதிலும், இவர்களின் வாக்கு காற்று மாசுபாட்டை தீர்மானிக்கப்போவதில்லை. பிப்ரவரி 8, 2020 அன்று, யூனியன் பிரதேசமும் இந்தியாவின் தலைநகருமான டெல்லி தேர்தலை சந்தித்த நிலையில், டெல்லியின் ஆபத்தான காற்று அவரது வாக்குகளை முடிவு செய்யும் முதல் மூன்று பிரச்சனைகளில் கூட இடம்பெறவில்லை.

டெல்லி மாநகராட்சியின் ஊழல், நகரின் சில பகுதிகளில் சீரற்ற வளர்ச்சி, பொருளாதாரம் மற்றும் சட்டம் ஒழுங்கு நிலைமை ஆகியவைதான் சவுகானுக்கு மிக முக்கியமான பிரச்சினைகள்.

டெல்லி - குளிர்காலத்தில், குறிப்பாக 2019 நவம்பர் முதல் பாதியில், காற்று மாசுபாட்டின் நச்சு அளவை எதிர்கொண்டது - அந்த மாதத்தில் உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. சவுகானின் பேத்தி மற்றும் பெற்றோர் சுவாசிக்க சிரமப்பட்டனர்; நாங்கள் சொன்னது போல, தூய்மைக்கருவிகளை கொண்டு சுவாசித்தனர். ஆயிரக்கணக்கானோர் வெளி நோயாளிகள் பிரிவில் (இங்கே மற்றும் இங்கே தெரிவிக்கப்பட்டுள்ளபடி) நகரம் முழுவதும் ஏராளமான சுவாச பிரச்சினைகளுக்காக அனுமதிக்கப்பட்டனர்.

ஆயினும்கூட, இந்தியா ஸ்பெண்டிடம் பேசிய டெல்லிவாசிகள் பத்துக்கும் மேற்பட்டோர், காற்று மாசுபாடு பிரச்சினையை கருத்தில் கொண்டு வாக்களிப்பது என்பது குறைவு என்றனர். தண்ணீர், மின்சாரம், சாலைகள், சுகாதாரம் மற்றும் வீடுகள் ஆகியன முக்கிய பிரச்சினைகளாக வாக்காளர்கள் தெரிவித்தனர்.

உலக சுகாதார அமைப்பின் பாதுகாப்பான காற்றுத்தர அளவீட்டை விட 24 மடங்கு மோசமான தரம் வாய்ந்த டெல்லியின் காற்றால், 2019 நவம்பரில் டெல்லி நகரம் மூச்சுத்திணறியதற்கு இது முரணாக உள்ளது. டெல்லி வாக்காளர்களிடம் கணக்கெடுத்ததில் 2,298 டெல்லி வாக்காளர்களின் மனதில் காற்று மாசுபாடு முதன்மையாக இருந்தது. ஸ்டடீஸ் ஆப் டெவலப்பிங் சொசைட்டீஸ் (சி.எஸ்.டி.எஸ்) ஆய்வு மையத்தின் லோக்நிதி திட்டத்தின் மூலம் தலைநகரில் 115 இடங்களில் கருத்து கேட்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 88% பேர் காற்று மாசுபாட்டை “மிகவும் தீவிரமான” பிரச்சினை என்று கூறியதாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியிடப்பட்ட முடிவு தெரிவிக்கிறது.

அந்த ஆய்வில், 45% வாக்காளர்கள் காற்று மாசுபாடு பிரச்சினை அடிப்படையில் வாக்களிப்பதாகக் கூறியதாக கண்டறியப்பட்டது. வேலையின்மை (12%), தண்ணீர் பிரச்சினைகள் (7%) மற்றும் மோசமான சுகாதாரம் (5%) ஆகியவை வாக்காளர்களின் மனதில் இருந்தன. ஆனால் இது பின்னர் மாறிவிட்டதாகத் தெரிகிறது.

தூய்மையான காற்றுக்கான கோரிக்கையானது, அதை நிவர்த்தி செய்வதில் அரசை செயல்பட ஒரு வலுவான அரசியல் இயக்கமாக மாற வேண்டும்; நாம் மேலும் விளக்குவது போல, இதற்கு உலகெங்கிலும் எடுத்துக்காட்டுகள் உள்ளன.

நாட்டின் காற்று மாசுபாட்டை சரி செய்வது, பொது சுகாதாரத்தை மேம்படுத்தும்; சுத்தமான காற்று டெல்லி வாழ் மக்களின் சராசரி ஆயுட்காலத்தை ஆறு முதல் 10 ஆண்டுகள் வரை அதிகரிக்கும். இந்தியா ஸ்பெண்ட் ஜனவரி 27, 2019 கட்டுரை தெரிவித்தபடி, நடைபெற்று வரும் ஆராய்ச்சிகளின் முடிவானது, காற்று மாசுபாட்டை கருவுறாமை, பிரசவ சிக்கல்கள் மற்றும் பிரசவங்களுடன் தொடர்புபடுத்துகிறது.

"பெரும்பாலான அரசியல் கட்சிகள் காற்று மாசுபாடு குறித்து விவாதிக்கும்போது, சிலர் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான வழிகளில் உறுதியான திட்டங்களைக் கொண்டு வந்துள்ளனர்," என்று, சுற்றுச்சூழல், நிலைத்தன்மை மற்றும் தொழில்நுட்பத்திற்கான சர்வதேச மன்றத்தின் (iFOREST) தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சந்திர பூஷண் கூறினார்.

எனினும், குடிமக்களின் குழுக்கள் தங்களது கோரிக்கைகளை தெளிவுபடுத்தியுள்ளன.

குடிமக்கள் குழுவிற்கு காற்று மாசுபாடு முக்கிய பிரச்சினை

டெல்லி தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என்ற சூழல் வந்ததும், டெல்லியின் குடியிருப்பு நலச் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (யுஆர்ஜேஏ) தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஒரு பசுமை அறிக்கையை தயாரித்தது.

அதன்படி, வரும் 2025ஆம் ஆண்டுக்கு முன்பு, காற்று மாசுபாட்டை 65% குறைப்பது மற்றும் குறைந்தது 80% மக்களின் பயன்பாட்டுக்கு உகந்தவகையில் ஒரு பொது போக்குவரத்து அமைப்பை ஏற்படுத்துவது ஆகியன பசுமை அறிக்கையில் இடம் பெற்றிருந்த முக்கிய கோரிக்கைகளாக இருந்தன.

கடந்த 2019 ஜனவரியில் தொடங்கப்பட்ட தேசிய தூய்மை காற்றுத் திட்டம் (என்சிஏபி) டெல்லி உட்பட இந்தியாவின் 102 மாசுபட்ட நகரங்களில், 2024 ஆம் ஆண்டிற்குள் 20-30% காற்று மாசுபாட்டைக் குறைப்பது என்ற இலக்கு வைத்துள்ளது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) மற்றும் காலநிலை மற்றும் எரிசக்தி செய்தி திரட்டும் தளமான கார்பன் காப்பி (Carbon Copy) தாக்கல் செய்த தகவல் அறியும் விண்ணப்பங்களின் தரவுகளின்படி, 28 நகரங்களுக்கு சுமார் 280 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் டெல்லி இதுவரை இடம் பெறவில்லை.

தற்போது, டெல்லி மக்கள்தொகையில் பாதி பேர் பொது போக்குவரத்தை நம்பியுள்ளனர் மற்றும் கட்டணங்கள் அதிகரிப்பதால் அதன் பங்களிப்பு குறைந்து வருகிறது. டெல்லி அரசு மாநிலத்தில் மெட்ரோ மற்றும் அரசு நடத்தும் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்ற சலுகை தரப்படுகிறது. இருப்பினும், டெல்லியில் அரசு நடத்தும் பேருந்து சேவைகளைப் பயன்படுத்தும் 4.4 மில்லியன் மக்களில் 34% பெண்கள். இது சிறந்த பொது போக்குவரத்திற்கான அவர்களின் கோரிக்கையை மிகவும் பொருத்தமானதாக ஆக்குகிறது. காற்று மாசுபாட்டிற்கு எதிராக டெல்லிவாசிகளை அணி திரட்டுவதற்கான முயற்சிகள்

யு.ஆர்.ஜே.ஏ அடிமட்டத்தில் மக்களை அணிதிரட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. "ஒரு மேல்-கீழ் அணுகுமுறைக்கு பதிலாக, நாங்கள் [குடிமக்களின் குழுக்கள்] ஒரு கீழ்நிலை அணுகுமுறைக்கு அழுத்தம் கொடுக்கிறோம், அங்கு வார்டு மட்டங்களிலிருந்து பரிந்துரைகள் வரும், ஏனெனில் அனைத்து அண்டை வீட்டாரும் ஒரே கூரையின் கீழ் செயல்பட முன்வரமாட்டார்கள் என்று யுஆர்ஜாவின் தலைவர் அதுல் கோயல் கூறினார்.

டெல்லியின் வெவ்வேறு வார்டுகளில் காற்று மாசுபாட்டு வளங்கள் வேறுபட்டவை என்று கோயல் கூறினார். வார்டு மட்டத்தில் இருந்து பரிந்துரைகளை சேகரிக்க யு.ஆர்.ஜே.ஏ நம்புகிறது; எனவே தணிப்பு பரவலாக்கப்படலாம். பிரச்சாரத்தின் மூலம், பசுமை அறிக்கைக்கு ஆதரவாக நகரம் முழுவதும் இருந்து 10,000 க்கும் மேற்பட்ட கையெழுத்துக்களை யு.ஆர்.ஜே.ஏ. சேகரித்துள்ளது. "அனைத்து கட்சிகளும் எங்கள் அறிக்கையை பாராட்டின. அவர்களின் தேர்தல் அறிக்கைகளை காண நாங்கள் காத்திருக்கிறோம், ”என்று கோயல் மேலும் கூறினார்; டெல்லியின் 2020 தேர்தலில் மாசுபாடு என்பது சிறந்த நிகழ்ச்சி நிரல் என்பதை மறைக்க முடியாது.

ஆம் ஆத்மி தேர்தல் அறிக்கையில் காற்று மாசுபாடு விவகாரம்

டெல்லியின் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி கட்சி (ஏ.ஏ.பி.) ஏற்கனவே காற்று மாசுபாட்டை ‘உத்தரவாத அட்டையின்’ ஒரு பகுதியாக ஆக்கியுள்ளது, தற்போதைய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி வாக்காளர்களுக்கு இதை வாக்குறுதி அளித்துள்ளார்.

கெஜ்ரிவாலின் ‘உத்தரவாத அட்டையில்’ உள்ள 10 வாக்குறுதிகள் காற்று மாசுபாட்டைக் குறைத்தல் மற்றும் 20 மில்லியன் மரக்கன்றுகளை நடுதல் மூலம் சுத்தமான காற்றை அடைதல், சுத்தமான தண்ணீர் வழங்குதல், திடக்கழிவு மேலாண்மை மற்றும் நகரத்தில் பொது போக்குவரத்தை அதிகரித்தல் உள்ளிட்டவை அடங்கும்.

கடந்த 2019 டிசம்பரில், கெஜ்ரிவாலின் அரசு தேசிய தலைநகரான டெல்லியில் மின்சார வாகனங்களை (ஈ.வி) அதிகரிக்கும் திட்டத்தை உருவாக்கியது; அதன்படி, நகரத்தின் 25% வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்றுவதன் மூலம், அதன் நச்சு காற்று மாசுபாட்டைக் குறைக்கலாம்.

"பல மாநிலங்கள் மின்சார வாகனங்களை தங்களது ஐந்தாண்டு திட்டங்களின் ஒரு பகுதியாக, வாகன மாசுபாட்டைக் குறைப்பதற்கான ஒரு சிறந்த வழியாக மாற்றக்கூடும்; கெஜ்ரிவாலின் கொள்கை சிறந்த முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் நகர்வு” என்று, எரிசக்தி பொருளாதாரம் மற்றும் நிதி பகுப்பாய்வு நிறுவனத்தின் (IEEFA) ஆற்றல் துறை பொருளாதார நிபுணர் விபூதி கார்க் கூறினார்.

பன்முக அணுகுமுறைக்கான தேவை உள்ளது. இது காற்று மாசுபாட்டை எதிர்ப்பது தொடர்புடைய அனைத்து முக்கிய துறைகளையும் நிவர்த்தி செய்யும், மேலும் இது தேசிய, மாநில மற்றும் உள்ளூர் அளவில் நடவடிக்கைக்கு வழிவகுக்கும் என்று அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள ஹெல்த் எபக்ட்ஸ் இன்ஸ்டிடியூட் (HEI) பணியாளரான விஞ்ஞானி பல்லவி பாண்ட் கூறினார். "எந்தவொரு கொள்கைக்கும் (அல்லது கொள்கைகளின் தொகுப்பு), செயல்படுத்துவதற்கு போதுமான நேரமும் வளங்களும் (தொழில்நுட்ப வசதிகள், மனிதவளத்தை அமர்த்துவதற்கான நிதி ஆதரவு போன்றவை) ஒதுக்கப்படுகின்றன என்பதும் (எ.கா. உள்ளூர் நகராட்சி துறைகள் அல்லது மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களை மேம்படுத்துதல்) மிக முக்கியமானதாகும்" என்றார் அவர்.

மேலும், பிற முக்கிய கொள்கை விவாதங்களுக்குள் காற்று மாசுபாட்டை ஒரு கவலையாக கருதுவது முக்கியம்; காற்று மாசுபாடு குறித்த பிரச்சினையை நாம் தனிமைப்படுத்தி, அதுபற்றி விவாதிக்கவில்லை.

மாசுபட்ட டெல்லி என்றால் என்ன? இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்

இதுவரை, டெல்லியில் காற்று மாசுபாடு என்பது தேசிய அளவிலான காற்றின் தரத்தை விட மூன்று மடங்கு அதிகமாக இருக்கிறது; மாசுபாட்டின் அளவு ஆண்டு முழுவதும் உள்ள பிரச்சினை என்று நிறுபிக்கப்பட்டுள்ளது. டெல்லி அதன் காற்று மாசுபாட்டைக் குறைக்க, நகரத்தின் வருடாந்திர செறிவைக் கணிசமாகக் குறைத்து, நகர மாசுபாட்டைக் கவனிக்க வேண்டும் என, இந்தியா ஸ்பெண்ட் 2019 நவம்பர் 10 கட்டுரை தெரிவித்தது.

டெல்லியில் காற்று மாசுபாட்டு ஆதாரங்களை அடையாளம் காண பல மதிப்பீடுகள் உள்ளன; டெல்லியை சேர்ந்த எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சில் - சி.இ.இ.டபிள்யு. (CEEW) ஏப்ரல் 2019 பகுப்பாய்வு, இந்த மதிப்பீடுகளை ஒருங்கிணைக்கிறது.

சி.இ.இ.டபிள்யு. பகுப்பாய்வின்படி, போக்குவரத்து நெரிசல் அல்லது வாகன போக்குவரத்து டெல்லியில் காற்று மாசுபாட்டின் மிகப்பெரியதாக உள்ளது; இது நகரத்தின் மாசுபாட்டிற்கு 18-39% பங்களிப்பு செய்கிறது. டெல்லியில் காற்று மாசுபாட்டின் இரண்டாவது பெரிய பங்களிப்பு செய்வது, சாலை தூசி (18-38%); அதைத் தொடர்ந்து தொழிற்சாலைகள் (2-29%) உள்ளன. மின் நிலையங்கள் (இவை டிசம்பர் 2019 இல் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான இரண்டாவது நீட்டிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் நிறைவேற்றத் தவறவிட்டன; முதல் முறையாக டிசம்பர் 2017 இல் இதே தவற்றை செய்தன) டெல்லியின் மாசுபாட்டின் 3-11% பங்களிப்பு செய்கின்றன. ஐந்தாவது பெரியதாக மாசு ஏற்படுத்துவது கட்டுமானத் தொழில் (8%).

டெல்லியின் காற்று மாசுபாட்டிற்கு என்ன காரணம்?

Source: Analysis by the Council on Energy, Environment and Water

டெல்லி நகரானது காற்று மாசு கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையாக நீண்டகால விரிவான செயல் திட்டம் (சிஏபி) மற்றும் அவசரகால பதில் நடவடிக்கை திட்டம், தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டம் (ஜிஆர்ஏபி) என இரண்டும் செயல்பாட்டில் உள்ள இந்தியாவின் ஒரே நகரமாகும்.

போக்குவரத்து மேலாண்மை, தூய்மையான எரிபொருட்களின் பயன்பாடு மற்றும் வாகனங்களின் மின்மயமாக்கல் உள்ளிட்ட காற்று மாசுபாட்டைக் குறைக்க, சிஏபி நீண்டகால நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. மறுபுறம், ஜிஆர்ஏபி நகரத்தில் மாசு அபாயகரமான அளவைக் கடக்கும்போது, மாசுபாட்டைக் குறைப்பதற்கான அவசர நடவடிக்கைகளை - குப்பை எரிக்க தடை மற்றும் நகரத்திற்குள் லாரிகள் நுழைவது மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள், செங்கல் சூளைகள் மற்றும் கல் நொறுக்குகளை மூடுவது- மேற்கொள்கிறது.

எனவே, இதுவரை, சிஏபி மற்றும் ஜிஆர்ஏபி இரண்டும் தேசிய தலைநகரில் காற்று மாசுபாடு அச்சுறுத்தலை எதிர்கொள்ளத் தவறிவிட்டன என்று இங்கே, இங்கே மற்றும் இங்கே தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி அரசு ஒற்றை-இரட்டை இலக்க வாகன திட்டம் ஒன்றை (அதாவது ஒற்றைப்படை இரட்டை படை இலக்க எண்கள் கொண்ட தனியார் வாகனங்கள் வெவ்வேறு நாட்களில் இயக்க அனுமதிக்கப்படுதல்) இது மாசு அளவு அதிகரிக்கும் போது நகரத்தில் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த திட்டம் வெற்றிகரமாக இல்லை என்று ஆய்வுகள் தெரிவித்ததை இந்தியா ஸ்பெண்ட் இங்கே மற்றும் இங்கே தெரிவித்துள்ளது.

இப்போது, டெல்லி காற்று மாசுபாட்டைக் குறைக்க, வல்லுநர்கள் தெரித்தபடி புகை கோபுரங்கள் (ஸ்மோக் டவர்) அரசு பரிசோதித்து வருகிறது.

புகை கோபுரங்களுடனான டெல்லியின் சோதனை

புத்தாண்டு தொடங்கியதும், 20 அடி உயரமும், வெளியேற்றும் விசிறிகளால் பொருத்தப்பட்டதுமான டெல்லியின் முதல் புகை கோபுரம், லஜ்பத் நகர் பகுதியில் மாசுபட்ட காற்றை உறிஞ்சத் தொடங்கியது. இந்த கோபுரம் பி.எம். 2.5 மற்றும் பி.எம். 10 மாசுபடுத்திகளை காற்றில் இருந்து அகற்றும் என்று கூறப்படுகிறது.

பி.எம் 10 மற்றும் 2.5 ஆகியவை ஒரு மனித தலைமுடியை விட முறையே ஆறு மடங்கு மற்றும் 30 மடங்கு லேசான துகள்களாகும். இந்த துகள்கள் நுரையீரலில் ஆழமாக உள்ளிழுக்கப்படலாம்; இதனால் மாரடைப்பு, பக்கவாதம், நுரையீரல் புற்றுநோய் மற்றும் சுவாச நோய்கள் ஏற்படுகின்றன. மேலும் அவை மனித ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்துவதாக தோன்றுகின்றன.

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள அதிகாரிகள் மூடுபனி கோபுரங்களை - 20 மீட்டர் முதல் 100 மீட்டர் உயரம் வரை முயற்சித்து வருகின்றனர் மற்றும் சில வெற்றிகரமானது “உலகின் மிகப்பெரியது” என்று விளம்பரப்படுத்தப்பட்டது. இருப்பினும், வல்லுநர்கள் அவற்றின் செயல்திறனை சந்தேகிக்கிறார்கள் (இங்கே, இங்கே மற்றும் இங்கே படியுங்கள்).

அவர்களின் கூற்றுப்படி, லஜ்பத் நகரில் உள்ள புகை கோபுரம் 750 மீட்டர் சுற்றளவில், சுமார் 1.7 சதுர கி.மீ பரப்பளவில் (டெல்லியின் லோதி தோட்டத்தின் நான்கு மடங்கு அளவுக்கு சமம்) காற்றை சுத்தம் செய்ய முடியும், ஆனால் செயல்திறனை சரிபார்க்க, அதற்கான தரவு எதுவும் கிடைக்கவில்லை. வல்லுநர்கள் இந்த தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பவில்லை.

மாசுபாட்டின் மூலங்களில் உமிழ்வைக் குறைப்பதற்கான மாற்று எதுவும் இல்லை. புகை கோபுரங்கள் மற்றும் வடிகட்டுதலின் மூலம் வெளிப்புற காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கான இதுபோன்ற பிற முயற்சிகள் ஏர்ஷெட்டின் அளவைப் பொறுத்தவரை காற்றின் தரத்தில் மிகக் குறைவான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று, டெல்லியைச் சேர்ந்த கொள்கை ஆராய்ச்சி மையத்தின் (சிபிஆர்) சந்தோஷ் ஹரிஷ் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

"இந்த [புகை கோபுர முயற்சி] அரசின் கவனத்தையும் வளங்களையும் தேவையான முறையான தணிப்பு நடவடிக்கைகளில் இருந்து திசை திருப்புவதன் மூலம் நல்லதை விட தீமையே விளைவிக்கும்" என்று ஹரிஷ் கூறினார். பணத்தை வீணடிப்பது என்பது, இப்பிரச்சினையின் ஒரு பகுதி மட்டுமே என்பதையும், அரசு எவ்வாறு தீர்வுகளை உருவாக்குகிறது என்பதை பொருத்து அமையும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

உலகின் மற்ற நகரங்கள் இதை எவ்வாறு கையாள்கின்றன

காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த உலகெங்கிலும் உள்ள நகரங்களில் இருந்து பெறப்பட்ட தெளிவான எடுத்துக்காட்டு என்னவென்றால், இப்பிரச்சனைக்கு குடிமக்கள் உண்மையான விவாதங்களை, இயக்கங்களை தொடங்கும் போது, உண்மையான மாற்றம் ஏற்பட அரசு செயல்பட வேண்டும் என்பதுதான். பிரான்சின் தலைநகரான பாரிசில், வார இறுதி நாட்களில் பல வரலாற்று சுற்றுப்புற பகுதிகளில் கார்களை இயக்க தடை செய்ததன் மூலம் காற்று மாசுபாட்டிற்கு பதிலளித்துள்ளது. பின்லாந்தின் தலைநகர் ஹெல்சின்கியில், காரை சொந்தமாக்க வேண்டிய அவசியத்தை போல்க்க, பொது போக்குவரத்து முறையை அரசு திறம்பட மேம்படுத்துகிறது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில், பழைய மற்றும் அதிக மாசுபடுத்தும் வாகனங்களை இயக்கினால் ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கிறது.

நார்வே தலைநகர் ஒஸ்லோ மின்சார வாகனங்களை நோக்கி மக்களை மாற்றுவதன் மூலமும், பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களைப் பயன்படுத்துவதை செலவினமுள்ளதாக மாற்றி, சைக்கிள் பாதைகள், பேருந்துகள் மற்றும் சுரங்கப்பாதை அமைப்பை மேம்படுத்துவதன் மூலமாகவும் அதன் காற்று மாசுபாட்டைக் குறைத்தது

பெய்ஜிங் அதிக மின்சார வாகனங்களை நிலைநிறுத்துவதன் மூலமும், மாசுபடுத்தும் தொழில்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களை நகரங்களுக்கு வெளியே அமைப்பதன் வாயிலாகவும் கடுமையான உமிழ்வு தரக்கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதன் மூலமும் காற்று மாசுபாட்டைக் குறைத்திருக்கிறது. எரிப்பதர்கு நிலக்கரிக்கு பதில், வீடுகளுக்கு இயற்கை எரிவாயு அல்லது மின்சாரத்துடன் இணைப்புகள் வழங்கப்பட்டன.

டெல்லியின் ஜி.ஆர்.ஏ.பி. திட்டத்திற்கு உடனடியாக பலன் தரக்கூடிய ஒரு எடுத்துக்காட்டு பெய்ஜிங் ஆகும்; அது, இதேபோன்ற அவசரகால பதில் செயல் திட்டத்தையே நம்பியுள்ளது. ஆனால் பெய்ஜிங்கின் செயல் திட்டம் டெல்லியுடன் ஒப்பிடும்போது தடுக்கக்கூடியது; பிற்போக்குத்தனமானது. இதன் பொருள் பெய்ஜிங் தூசி கட்டுப்பாட்டுக்கு நடவடிக்கை எடுக்கிறது, வெளிப்புற நடவடிக்கைகளுக்கு எதிராக அறிவுறுத்துகிறது மற்றும் காற்று மாசுபாட்டின் உச்சநிலையின் கணிப்புகளின் அடிப்படையில் போக்குவரத்து சேவைகளை கட்டுப்படுத்துகிறது. மறுபுறம், டெல்லியோ தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு காற்று மாசுபாடு உச்சம் அடைந்த பிறகே, ஜி.ஆர்.ஏ.பி.யின் கீழ் நடவடிக்கை எடுக்கிறது.

ஆயினும்கூட, இந்த எல்லா எடுத்துக்காட்டுகளிலும், அனைத்து நகரங்களையும் நாடுகளையும் காற்று மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தூண்டுவதில் பொதுவான ஒரு விஷயம் என்னவென்றால், தூய்மையான காற்றுக்கான மக்களின் கோரிக்கை ஆகும்.

டெல்லி வாக்காளர்கள் காற்று மாசுபாடு பற்றி என்ன நினைக்கிறார்கள்

"புகை கோபுரங்களால் சத்தம் உண்டாகிறது," என்று அசோக் சவுகான் கூறினார், அவரது நகைக்கடை, லஜ்பத் நகரின் மத்திய சந்தை பகுதியில் உள்ள புகை கோபுரத்தின் முன் அமைந்துள்ளது. “எல்லா திசைகளில் இருந்தும் மாசு வரும்போது இந்த ஒற்றை கோபுரம் என்ன செய்ய முடியும்? நகரம் முழுவதும் மோசமான காற்றை எதிர்கொள்கிறது" என்றார் அவர்.

நாங்கள் பேசிய குடியிருப்பாளர்களுக்கு, காற்று மாசுபாடு என்பது ஒரு குறுகிய கால அசவுகர்யம், குளிர்கால மாதங்களில் மட்டுமே தொந்தரவாக இருக்கிறது என்றனர். இந்த கருத்து தவறானது: நாம் முன்னர் குறிப்பிட்டது போல, டெல்லியில் காற்று மாசுபாடு ஆண்டு முழுவதும் காற்றுத்தர அளவீட்டை விட அதிகமாக உள்ளது.

"அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஹரியானா மற்றும் பஞ்சாபில் எரிக்கப்படும் கழிவுகளால் ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில் டெல்லியில் காற்று மிகவும் நச்சுத்தன்மையை ஏற்படுத்துகிறது," என்று அரசு ஊழியரும், தெற்கு டெல்லியில் உள்ள கிருஷ்ணா நகரில் வசிப்பவருமான சுப்பா ராவ் (58) தெரிவித்தார். இந்தியா ஸ்பெண்ட்டிடம் பேசிய பெரும்பாலான குடியிருப்பாளர்களும் இதே கருத்தை சுட்டிக்காட்டினர்.

முதலமைச்சர் கெஜ்ரிவால் கூட அருகிலுள்ள ஹரியானா மற்றும் பஞ்சாபில் ன் நடக்கும் எரிப்புகளே மாசு அதிகரித்ததாக குற்றம் சாட்டியிருந்தார். வயல்களில் விவசாயக் கழிவு எரிப்பு என்பது வருடாந்திர நடைமுறையாகும், அங்கு நூற்றுக்கணக்கான விவசாயிகள் நெல் அறுவடைக்குப் பிறகு பயிர் கழிவுகளை எரிக்கிறார்கள், குளிர்கால விதைப்புக்கு தங்கள் நிலங்களை விரைவாக தயார்ப்படுத்துகிறார்கள்.

இருப்பினும், டெல்லியின் காற்று மாசுபாட்டிற்கு வயல்களில் கழிவு எரிப்பின் பங்களிப்பு என்பது, இம்முறை 2019 நவம்பர் 5 வரை, 50% க்கும் அதிகமாகக்கூட இல்லை. அக்டோபர் 31, 2019 அன்று, அதிகபட்ச பங்களிப்பாக விவசாயக்கழிவு பதிவின் பாதிப்பு 44% ஆகத்தான் இருந்தது. டெல்லியின் காற்று மாசுபாடு அதன் சொந்த ஆதார வளங்களிலிருந்து தான் வருகிறது என்று இந்தியா ஸ்பெண்ட் நவம்பர் 10, 2019 கட்டுரை தெரிவித்துள்ளது.

"குளிர்காலத்தில் புகைமூட்டம் காரணமாக காற்று மாசுபாடு தெரியும், எனவே டெல்லியில் மக்கள் இதைப் பற்றி பேசுகிறார்கள், ஊடகங்கள் அதைப் பற்றி பேசுகின்றன, ஆனால் காற்று தெளிவடையும் கவலைகள் விரைவில் மறைந்துவிடும், ”என்று ராவ் கூறினார். "இதனால்தான் காற்று மாசுபாடு தேர்தல்களுக்கு மிகவும் பொருந்தாது," என்று அவர் கூறினார்.

“காற்றில் மாசுபாடு மிக அதிகமாக இல்லாவிட்டால் நாம் அதைப் பார்க்க வேண்டியதில்லை. இது அவ்வளவு புலப்படாது, அது நிச்சயமாக பிரச்சினையின் ஒரு பகுதியாகும் ”என்று ஹெல்த் எபக்ட்ஸ் இன்ஸ்டிடியூட் (HEI) சேர்ந்த பல்லவி பான்ட் கூறினார்.

மூன்று வருட காலப்பகுதியில் செய்திகள் மற்றும் சமூக ஊடக பதிவுகளின் பகுப்பாய்வு அடிப்படையில், உலகளாவிய சுகாதார ஆலோசகரான விட்டல் ஸ்ட்ராடஜீஸ் எழுதிய ஹேஸி பெர்செப்சன்ஸ் என்ற மார்ச் 2019 ஆய்வில் காற்று மாசுபாட்டிற்கான முக்கிய காரணங்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து பொதுமக்கள் புரிந்துந்து கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்று மாசுபாடு குறித்த பொதுமக்களின் புரிதலை அறிய இந்தியா உட்பட தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலிருந்து 11 நாடுகளில் 2018 முதல் மூன்று ஆண்டுகளில் 500,000 செய்தி மற்றும் சமூக ஊடக பதிவுகளை ஆய்வு செய்தது. செய்தி மற்றும் சமூக ஊடக பதிவுகள் பெரும்பாலும் இருமல் அல்லது அரிப்பு கண்கள் போன்ற குறுகிய கால சுகாதார பாதிப்புகளைக் குறிப்பிடுகின்றன, புற்றுநோய் போன்ற நாள்பட்ட வெளிப்பாட்டினால் ஏற்படும் சுகாதார அச்சுறுத்தல்களை விட இது மிகவும் அதிகம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தீர்வுகள் பற்றிய பொது விவாதங்கள் முகமூடி அணிவது போன்ற குறுகிய கால தீர்வுகளில் தான் கவனம் செலுத்துகின்றன. விவாதங்கள் காற்றின் தரத்தில் பருவகால மாறுபாடுகளால் இயக்கப்படுகிறது.

"நம்மை போன்ற மக்களுக்கு தண்ணீர், வீடு மற்றும் தினக்கூலி போன்ற பிரச்சனைகள் உள்ளன; அவற்றின் மீது தான் நாம் உண்மையிலேயே அக்கறை எடுத்துக் கொள்கிறோம்" என்று டெல்லி நேரு நகரைச் சேர்ந்த பழ வியாபாரி ராஜு குமார் (38) கூறினார். குமார், வேலை தேடி 17 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லிக்கு குடிபெயர்ந்தார்; அப்போதிருந்து தலைநகரில் வசித்து வருகிறார்.

அவரைப் பொறுத்தவரை, காற்று மாசுபாடு அவரது அன்றாட வாழ்க்கையில் ஒரு விவாதப்பொருள் கூட அல்ல; இருப்பினும், நகரத்தில் காற்று மாசுபாடு அதிகரிக்கும் போது, ​​அவரது கண்கள் எரிகிறது; மூக்கு அரிக்கிறது. "நான் தும்மும்போதெல்லாம், என் மூக்கிலிருந்து தூசி வெளியே வருவதைப் போல உணர்கிறேன்," என்று அவர் கூறினார். காற்று மாசுபாட்டை குறித்த விவாதங்கள் இன்னும் சமூகத்தின் நடுத்தர மற்றும் உயர் வகுப்பினர் இடையே என்ற அவளவில் மட்டுப்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். "காற்று மாசுபாட்டை சுற்றியுள்ள பெரும்பாலான கட்டுரைகள் ஆங்கில ஊடகங்களில் எழுதப்படுகின்றன. அதனால்தான் குளிர்கால மாதங்களுக்குப் பிறகு தொழிலாள வர்க்கம் இந்தப் பிரச்சினையைப் பற்றி பேசுவதை நீங்கள் பார்க்க முடிவதில்லை" என்று பூஷன் (iFOREST) கூறினார்; இது ஏன் தேர்தல் பிரச்சினை அல்ல என்பதை இது விளக்குகிறது. இந்தியாவில் தற்போதைய நிலைமை கொள்கை வகுப்பாளர்களுக்கு கிடைத்த வெற்றியாகும். அவர்கள் காற்று மாசுபாட்டை தடுக்க செயல்பட தொடங்கினால் அது கார்பன் உமிழ்வைக் குறைக்கும்; அது, காலநிலை மாற்றத்தைக் குறைக்க உதவும். "இது கொள்கை வகுப்பாளர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்க வேண்டும்" என்றார் அவர்.

இதற்கிடையில், குடியிருப்பாளர்களின் குழுக்கள் அரசிற்கு நெருக்கடி தருவது போல் தெரிகிறது. "அவர்கள் ஆட்சியில் இருந்தாலும் அல்லது எதிர்க்கட்சியாக இருந்தாலும், அனைத்து அரசியல் தலைவர்களும் இந்த பிரச்சினையில் [காற்று மாசுபாடு] ஒரு பக்கத்தில் இருக்க வேண்டும்" என்று யுஆர்ஜாவின் கோயல் கூறினார். "அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எந்தவொரு அரசியல் கட்சியும் தேசிய தலைநகரில் ஆட்சிக்கு வருவதற்கு, அவர்கள் இந்த திட்டங்களை நிறைவேற்ற வாக்குறுது தருவதில் உறுதியுடன் இருக்க வேண்டும். குடிமக்கள் இனியும் வெற்று வாக்குறுதிகளை எதிர்பார்க்கவில்லை” என்றார்.

(திரிபாதி, இந்தியா ஸ்பெண்ட் முதன்மை செய்தியாளர் ; ஷெட்டி, இந்தியா ஸ்பெண்ட் செய்திப்பணியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.