புதுடெல்லி: தீபாவளிக்கு அடுத்த நாளான நவம்பர் 8ஆம் தேதி, பெரும்பாலும் வடக்கு மற்றும் மத்திய இந்தியாவை சேர்ந்த 41 இந்திய நகரங்கள், “மோசமான” மற்றும் ”கடுமையான காற்று மாசுபாட்டை சந்தித்ததாக, அரசு புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன.

நொய்டா, பரிதாபாத், பாட்னா, லக்னோ உள்ளிட்ட ஏழு நகரங்கள், டெல்லியை விட மோசமான காற்று மாசுபாட்டை எதிர்கொண்டது, காற்று தரக் குறியீட்டு (AQI) அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. காற்று மாசுபாட்டை ஒவ்வொரு நாளும் மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் (CPCB) காற்று தரக்குறியீட்டை கணக்கிட்டு, மாலை 4 மணிக்கு வெளியிட்டு வருகிறது. காற்று மாசுபாடு குறித்து மக்களுக்கு தெரிவிக்க காற்று தரக்குறியீட்டை அரசு பயன்படுத்துகிறது. காற்று தரக் குறியீடு அளவு 100 என்பது, இந்தியாவில் உடல் நலத்திற்கு உகந்ததாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு பிறகு காற்று மாசுபாடு அதிகரித்தது மதம் சார்ந்த விமர்சனத்திற்கு வித்திட்டது. ஒருசிலர், இந்து பண்டியான தீபாவளியால் தான் காற்று மாசுபாடு ஏற்படுவதாக கூறுவது நியாயமற்றது; டெல்லியில் காற்று மாசுபாட்டுக்கு அதுதான் காரணம் என்று கூற முடியாது; தீபாவளியால் வெளிப்பட்ட புகை, உடலின் நாள்பட்ட நோய்க்கு காரணம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பது அவர்களின் வாதமாகும்.

ஆனால், புதுடெல்லி சர் கங்காராம் மருத்துவமனையில் நெஞ்சக அறுவை சிகிச்சை மைய தலைவரான டாக்டர் அரவிந்த் குமார் “இந்த கூற்று முட்டாள்த்தனமானது; உண்மையில் இருந்து விலகியிருக்கிறது” என்று இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். ”காற்றில் உள்ள சுவாசிக்கக்கூடிய நுண் துகள்களின் அளவு (பி.எம்.) 2.5 தொடும் போது, சுவாசக்கோளாறு, இருதய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பதற்கு போதிய ஆவணங்கள், புள்ளி விவரச் சான்றுகள் உள்ளன” என்று அவர் கூறுகிறார்.

”டெல்லியில் நிலவும் காற்று, மனிதர்கள் வாழத்தகுதியற்றது” என்று கூறும் டாக்டர் குமார், “சுவாசக்கோளாறு, தொண்டை எரிச்சல் பிரச்சனைக்காக வருவோரால், மருத்துவனையின் வெளிநோயாளிகள் பிரிவு (OPD) நிரம்பி வழிகிறது. இதய செயலிழப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மாசடைந்த காற்று மூலம் பாதிக்கப்படுவது நுரையீரல் மட்டுமல்ல; இதயமும் தான். இதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் உள்ளன; அவற்றையும் மீறி அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால், அவர்கள் வணிக, அரசியல், மதநலன் சார்ந்து உந்தப்பட்டிருப்பார்கள்; அந்த நலன்களே, அவர்களை குருடாக்கிவிட்டது” என்று அவர் மேலும் கூறினார்.

உண்மையில், சிறு மெல்லிய மாசுபாடு காற்றில் வெளிப்படுவது கூட இறப்புக்களை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

காற்று மாசுபாடு குறைவாக இருப்பது கூட வயதானவர்கள் முன்கூட்டியே இறப்பதற்கு காரணமாகிறது என்று, 2018 ஜனவரி 19-ல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது.

காற்றின் சுவாசிக்கக்கூடிய நுண் துகள்களின் அளவு (பி.எம்.) 2.5-ல் ஒவ்வொரு 10 μg / m3 தினமும் அதிகரிப்பதால், 2017 ஆம் ஆண்டின் படி, தினசரி இறப்பு விகிதம் 1.05% அதிகரித்துள்ளது என ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொது சுகாதாரத்தின் ஹார்வர்ட் டி.கே.சான் ஸ்கூல் ஆப் டெக்னாலஜி துறை, 2017 டிசம்பர் மாதம் வெளியிட்ட ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

தற்போது உலகின் மிக மாசுபட்ட நகரமாக கருதப்படும் டெல்லியில், மிகவும் மோசமாக மாசடைந்து காற்றின் தரக்குறியீ (AQI) 390 ஆக உள்ளதாக, மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் -சிபிசிபி அறிக்கை தெரிவிக்கிறது.

மத்திய டெல்லியில் இருக்கும் வாஸிபூர் தான் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதி. இங்கு, கடந்த நவம்பர் 8ஆம் தேதி அதிகாலை 2.05 மணிக்கு காற்றின் 2.5 பி.எம். என்பது 4000 µg/m3 அளவீட்டை கடந்திருந்தது. இது, தேசிய பாதுகாப்பான காற்றின் அளவீடான 60 µg/m3 என்பதைவிட 66 மடங்கு அதிகமாகும். மனித நுரையீரலில் புகுந்து நோயுறவோ அல்லது இறப்புக்கோ காரணாமாகும் தலைமுடியைவிட, பி.எம். 2.5 ஆனது 30 மடங்கு சிறந்தது.

நச்சுக்காற்றை மேலும் மாசடைய செய்யும் பட்டாசுகள்

தீபாவளியன்று மாலை வெடிக்கப்பட்ட பட்டாசுகளால், ஏற்கனவே நச்சாக மாறியிருந்த டெல்லியின் காற்று மண்டலத்தை மேலும் மோசமடைந்தது. உச்ச நீதிமன்றம் அனுமதி தந்திருந்த இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலான நேரத்தில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டு, டெல்லியின் பல இடங்கள் காற்று மாசுபாட்டால் திணறியது.

உச்ச நீதிமன்றத்தின் தடை இருந்த போதும், டெல்லி நகரில் மட்டும் 5 மில்லியன் கிலோ பட்டாசுகள் வெடிக்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் டெல்லி நகரம், ஒருநாள் கூட சுவாசிப்பதற்கு உகந்த காற்றை கொண்டிருக்கவில்லை என்பது, அக். 1, 2018 முதல், நவ. 6, 2018 வரையில் டெல்லியில் உள்ள காற்று தரத்தை கண்காணிக்கும் 37 தானியங்கி நிலைங்களின் புள்ளி விவர அடிப்படையில் இந்தியா ஸ்பெண்ட் வெளியிட்ட பகுபாய்வில் கூறப்பட்டுள்ளது.

24 மணி நேர சராசரியை கணக்கிட்டால், இந்தியாவில் 41 நகரங்களில் கடும் காற்றுமாசுபாடு ஏற்பட்டு காற்றின் தரக்குறியீடு மிகமோசமாக இருந்துள்ளது.

இதில் மிக மோசமாக, 24 மணி நேர சராசரியில் பரிதாபாத் நகரில் காற்றின் தரக்குறியீடு அளவு 455 ஆக இருந்தது. அடுத்து நொய்டா, 432 ஐ கொண்டிருந்தது. லக்னோ, பாட்னா, காஸியாபாத் நகரங்கள் முறையே 412, 427 மற்றும் 422 என்ற மிக மோசமான அளவை தொட்டிருந்தன. சுவாசிக்க உகந்த காற்றின் தரக்குறியீடு, 100 என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Central Pollution Control Board

Source: Central Pollution Control Board

வட இந்திய நகரங்களில் அதிகரிக்கும் காற்று மாசு

நாம் முன்பு குறிப்பிட்ட வட இந்திய நகரங்களில் பெரும்பாலானவை, நவம்பர் 11 முதல் மூன்று நாட்களில் சுவாசிக்க முடியாத அளவுக்கு காற்று மிகமோசமாக மாசுபட்டிருந்தது; இது நவ. 10-க்கு பிறகே சரியாகும் என பி.எம்.2.5 அளவை நகர்ப்புறங்களில் கண்காணிக்கும் தொண்டு அமைப்பான அர்பன் எமிஷன் தெரிவித்தது.

டெல்லி சர் கங்காராம் மருத்துவமனையில் மார்பக அறுவை சிகிச்சை மைய தலைவர் அர்விந்த்குமாரின் பார்வைக்காக, இக்கட்டுரை புதுப்பிக்கப்பட்டுள்ளது.

(திரிபாதி, இந்தியா ஸ்பெண்ட் முதன்மை செய்தியாளர்)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.