புதைபடிவ எரிபொருட்களில் இருந்து மாறுதல்
நிலக்கரி என்பது மிகவும் அழுக்கான புதைபடிவ எரிபொருளாகும் மற்றும் இன்று வரை உலக வெப்பநிலை உயர்வுக்கு மிகப்பெரிய காரணம்.
தொழில்துறைக்கு முந்தைய காலத்தில் இருந்து, ஏறக்குறைய 1 டிகிரி செல்சியஸ் உயர்வில் நிலக்கரியின் பங்கு தோராயமாக, 0.3 டிகிரி செல்சியஸ் காரணமாகிறது. கார்பன் டை ஆக்சைடை விட 25 மடங்கு அதிக புவி வெப்பமடையும் திறன் கொண்ட மீத்தேன் வாயுவையும், இது வெளியிடுகிறது. தற்போதைய நிலவரப்படி, வெப்பமயமாதலை 1.5 டிகிரி செல்சியஸாகக் கட்டுப்படுத்த, புதிய எண்ணெய், எரிவாயு அல்லது நிலக்கரி வயல்களை உருவாக்க வேண்டிய அவசியமில்லை.
வரும் 2024 ஆம் ஆண்டளவில், கோவிட்-19க்கு முந்தைய, 2019 அளவுகளில் இருந்து, இயற்கை எரிவாயுக்கான உலகளாவிய தேவை 7% அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஏனெனில் இந்தியா போன்ற நாடுகள் மின்சார உற்பத்தி, தொழில்துறை மற்றும் போக்குவரத்து போன்ற துறைகளில் அதிக மாசுபடுத்தும் நிலக்கரி மற்றும் எண்ணெயை மாற்றுவதற்கு, எரிவாயுவை மாற்ற எரிபொருளாக ஊக்குவிக்கின்றன.
இந்தியாவின் எரிசக்தித் தேவையில் 70% இரண்டு படிம எரிபொருட்களால் பூர்த்தி செய்யப்படுகிறது - நிலக்கரி (44%) மற்றும் எண்ணெய் (25%), அடுத்த தசாப்தங்களில் இந்தியா இதை கணிசமாகக் குறைக்க வேண்டும்.
21 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக புதைபடிவ எரிபொருள் பொருளாதாரத்தை நம்பியுள்ளனர். இந்தியா தனது காலநிலை நடவடிக்கையை துரிதப்படுத்துவதால், பொருளாதார மறுசீரமைப்பு, பணியாளர்களை மறுசீரமைத்தல், நிலத்தை மறுபரிசீலனை செய்தல், வருவாய் மாற்றீடு மற்றும் பொறுப்பான சமூக நடைமுறைகள் உள்ளிட்ட மாற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
தொடர்புடைய COP26 பொறுப்புகள்:
Glasgow Financial Alliance for Net Zero (GFANZ): 45 நாடுகளில் உள்ள 450 நிதி நிறுவனங்கள் அடுத்த மூன்று தசாப்தங்களில் நிகர-பூஜ்ஜிய உமிழ்வுக்காக $130 டிரில்லியன் முதலீடு செய்யப்போவதாகக் கூறியுள்ளன.
வரும் 2022க்குள் புதைபடிவ எரிபொருட்களுக்கான சர்வதேச பொது நிதியை நிறுத்துவது குறித்த கூட்டு அறிக்கை: இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் 20 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் நிதி நிறுவனங்கள், சுத்தமான எரிசக்திக்கு பொது நிதிக்கு முன்னுரிமை அளிப்பதாக தெரிவித்தன. இதில் இந்தியா ஒரு அங்கம் இல்லை.
'நிலக்கரியில் இருந்து தூய்மையான ஆற்றலுக்கு மாற்றம்' அறிக்கை: புதிய நிலக்கரி ஆலைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், சமூகங்களுக்கு சுத்தமான எரிசக்திக்கான நியாயமான மற்றும் உள்ளடக்கிய மாற்றத்திற்கான, COP26 தலைவர் அலோக் ஷர்மாவின் அழைப்பில், 42 நாடுகளும் 32 நிறுவனங்களும் கையெழுத்திட்டுள்ளன. ஆனால் அமெரிக்கா, சீனா, இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இதில் கையெழுத்திடவில்லை.
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.