புதுடெல்லி: மார்ச் 2021 இல், தென் டெல்லியின் நர்மதா அடுக்குமாடி குடியிருப்பின் குடியிருப்பாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் புஷ்கர் சின்ஹா, கட்டிடத்தில் வசிக்கும் அனைத்து முதியவர்களின் விவரங்களையும் சேகரித்து, அருகிலுள்ள மருத்துவமனையின் ஒத்துழைப்புடன், கோவிட் -19 தடுப்பூசிக்கு அரசின் கோ-வின் (Co-WIN app) செயலியில் பதிவு செய்தார். மக்கள் சிலர் மருத்துவமனைக்கு வரமுடியாது என்று கூறியபோது, ​​அவர்களை அழைத்துச் செல்ல கார்களை ஏற்பாடு செய்தார்.

"இங்குள்ள பெரும்பாலான வயதானவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு உதவக்கூடிய குழந்தைகள் இல்லை. எனவே நாங்கள் குடியிருப்பாளர்கள் இதற்காக ஒன்றிணைய வேண்டியிருந்தது, "என்று சின்ஹா ​​இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடலாம் என்பதோடு, வணிகங்கள் மற்றும் சமூகங்கள் அணிதிரண்டு வருவதால், இந்தியாவின் தடுப்பூசி வேகம், 2021 மார்ச் 15 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் சராசரியாக 1.4 மில்லியன் டோஸ் என்ற நிலையில் இருந்து, ஏப்ரல் 15 உடன் முடிந்த வாரத்தில், 3.25 மில்லியன் டோஸாக வளர்ந்துள்ளது.

ஆனால் தடுப்பூசி இயக்கம் தொடங்கி மூன்று மாதங்களாகியும் கூட, இந்தியா இன்னும் ஒருநாளைக்கு சராசரியாக 3.58 மில்லியன் அளவை எட்டுவதற்கான தடுப்பூசி போடும் வேகத்தை மேம்படுத்த வேண்டும் மற்றும் ஜூலை 2021 க்குள் 250 மில்லியன் மக்களுக்கு, 500 மில்லியன் டோஸை வழங்குவதற்கான இலக்கை அடைய வேண்டும்.

தடுப்பூசிகளின் போதுமான விநியோகத்தை அரசால் உறுதிப்படுத்த முடியாவிட்டால் இந்தியாவின் தடுப்பூசி திட்டமும் குறையக்கூடும். "தடுப்பூசி பற்றாக்குறை இல்லை" என்று மத்திய அரசு கூறியுள்ளது, ஆனால் மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா உள்ளிட்ட பல மாநிலங்கள் பற்றாக்குறை இருப்பதாகத் தெரிவித்துள்ளன.

இந்தியாவின் இரண்டாவது அலை கோவிட்-19 நோய்த்தொற்றுகளுக்கு மத்தியில், இவை அனைத்தும் நடைபெறுகின்றன. இப்போது அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக (31.4 மில்லியன்) உலகில் இரண்டாவது மிக உயர்ந்த கோவிட்-19 வழக்குகளை, இந்தியா (14 மில்லியன்) கொண்டுள்ளது. இந்தியாவின் வழக்குகள் தொடர்ந்து வளர்ந்து வருகின்றன, ஏப்ரல் 15 ஆம் தேதியுடன் முடிவடைந்த கடந்த ஒரு வாரத்தில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 163,000 நோய்த்தொற்றுகள் பதிவாகின்றன, இது அமெரிக்காவில் 71,282 ஆக இருந்தது.

புதிய தடுப்பூசிகளுக்கான அனுமதி, தற்போதைய பற்றாக்குறையை குறைக்க வாய்ப்பில்லை

நிர்வகிக்கப்படும் 500 மில்லியன் டோஸ் என்ற அளவை அடைய இந்தியா அடுத்த மூன்றரை மாதங்களில் கிட்டத்தட்ட 383 மில்லியன் எண்ணிக்கையை நிர்வகிக்க வேண்டும், சராசரியாக 3.58 மில்லியன் தடுப்பூசிகள். சராசரியாக, அடுத்த மூன்று மாதங்களில், ஜூலை 2021 க்குள் இந்தியா தனது 500 மில்லியன் இலக்கை அடைய ஒரு மாதத்திற்கு 109 மில்லியனுக்கும் அதிகமான அளவு தேவைப்படும். இந்தியா தற்போது மாதத்திற்கு சுமார் 83-113 மில்லியன் கோவிட் -19 தடுப்பூசிகளை தயாரிக்க முடியும் என்று மாநிலங்களவை குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது வரை, இந்திய அரசு இரண்டு தடுப்பூசிகளை மட்டுமே அங்கீகரித்தது - கோவிஷீல்ட், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா ஆகியோரால் உருவாக்கப்பட்டது மற்றும் புனேவில் உள்ள சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது; மற்றும் கோவாக்சின், பாரத் பயோடெக் உருவாக்கியது மற்றும் தயாரித்தது.

தடுப்பூசிகளின் விநியோகத்தை அதிகரிக்கும் முயற்சியாக, ஏப்ரல் 13 ம் தேதி மூன்றாவது கோவிட் -19 தடுப்பூசியான ஸ்பூட்னிக்-வி என்ற மருந்திற்கு இந்தியா ஒப்புதல் அளித்தது, இது டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்களால் இறக்குமதி செய்யப்படும், இது இந்தியாவில் தடுப்பூசிக்கான மருத்துவ பரிசோதனைகளையும் நடத்தியது.

ரஷ்ய நேரடி முதலீட்டு நிதி (RDIF, ரஷ்யாவின் இறையாண்மை செல்வ நிதி), பல இந்திய மருந்து நிறுவனங்களுடன் ஸ்பூட்னிக் -வி ஐ உருவாக்க ஒப்பந்தங்களை செய்துள்ளது, மேலும் இந்த நிறுவனங்கள் ஆண்டுக்கு 850 மில்லியனுக்கும் அதிகமான அளவை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை என்று ஏப்ரல் 12ல் வெளியான செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எப்போது, ​​எந்த விலையில், எத்தனை அளவு தடுப்பூசி கிடைக்கும் என்று ஆர்.டி.ஐ.எஃப் அல்லது இந்திய அரசோ பகிரங்கமாகக் கூறவில்லை. இந்த தகவல் இல்லாமல், இந்த தடுப்பூசி உண்மையில் இந்தியாவின் தற்போதைய பற்றாக்குறையை சமாளிக்கவும், ஜூலை மாதத்தின் 500 மில்லியன் டோஸ் இலக்கை அடையவும் உதவுமா என்பதில் தெளிவு இல்லை.

நிறுவனங்களில் ஒன்றான ஸ்டெலிஸ் பயோபார்மா பிரைவேட் லிமிடெட் லிமிடெட், 2021ன் மூன்றாம் காலாண்டில் தடுப்பூசி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று, 2021 மார்ச் 19 அன்று கூறியது.

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற பிற நாடுகளில் அனுமதிக்கப்பட்ட தடுப்பூசிகளையும், இந்தியாவில் அவசரகால பயன்பாட்டு ஒப்புதலுக்காக பரிசீலிக்க முடியும் என்றும் அரசு கூறியுள்ளது.

வெளிநாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளை இந்தியாவில் விரைவாக அனுமதிக்க அரசின் சமீபத்திய அறிவிப்பு, "இந்தியாவில் உள்நாட்டு அல்லது வெளிநாட்டு பயன்பாட்டிற்காக இருந்தாலும், தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்கும் விநியோகிப்பதற்கும் ஒரு பெரிய தடை உண்டு, இப்போது அது குறைந்துவிட்டது. இது விவேகமான நடவடிக்கை"என்று ஹரியானாவில் உள்ள அசோகா பல்கலைக்கழகத்தின் இயற்பியல் மற்றும் உயிரியல் பேராசிரியர் கவுதம் மேனன் கூறினார். "இந்தியாவில் மாறுபட்ட தடுப்பூசிகளை உற்பத்தி செய்வது இறுதி தீர்வாக இருக்கும்" என்றார்.

இருப்பினும், இந்தியாவில் தற்போது தடுப்பூசிகளின் பற்றாக்குறையை சீரம் நிறுவனம் மற்றும் பாரத் பயோடெக் மட்டுமே தீர்க்க முடியும், ஆனால் உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் மையம் மற்றும் பிற ஏற்றுமதிகள் மீதான அவர்களின் வெளிநாட்டு கடமைகள் இதனுடன் மோதுகின்றன என்று மேனன் கூறினார். "தற்போதைய பற்றாக்குறை உடனடியாக தீர்க்கப்படாது" என்றார்.

அத்துடன், பல வளர்ந்த நாடுகள் தங்கள் மக்கள்தொகைக்குத் தேவையான தடுப்பூசிகளின் அளவை விட இரண்டு மடங்கு மற்றும் மூன்று மடங்காக முன்பதிவு செய்துள்ளன என்று, வல்லுனர்கள் நம்மிடம் தெரிவித்தனர். இது குறுகிய காலத்தில் இந்த வெளிநாட்டு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளைப் பெறுவதற்கான இந்தியாவின் திறனைத் தடுக்கும். மேலும், இந்த தடுப்பூசிகளில் சில, ஃபைசர் மற்றும் மாடர்னா தயாரித்தவை போன்றவை, பெரும்பாலான இந்தியர்களுக்கு மிகவும் விலை அதிகமானதாகவும் இருக்கலாம். இந்திய அரசு கோவாக்சின் ஒரு டோஸுக்கு ரூ .206 ஆகவும், கோவிஷீல்ட் ஒரு டோஸுக்கு ரூ. 200 எனவும் வாங்குகிறது. சர்வதேச அளவில், ஸ்பூட்னிக்- வி விலை சுமார் ரூ. 749 ($ 10). ஃபைசர் தடுப்பூசி -70 டிகிரி செல்சியஸில் சேமிக்கப்பட வேண்டும், மேலும் இரண்டு டோஸுக்கு $ 40 செலவாகும் என்று நாங்கள் டிசம்பர் 2020 கட்டுரையில் தெரிவித்தோம்.

தடுப்பூசிகள், எண்ணிக்கைகளில்

ஜனவரி 16, 2021 அன்று, உலகின் மிகப்பெரிய கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தை அறிவித்து இந்தியா தொடங்கியது. அப்போதிருந்து, இந்தியா 117 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி வழங்கியுள்ளது. இதில் முதல் மற்றும் இரண்டாவது அளவுகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகளும் அடங்கும். சராசரியாக, தினமும் சுமார் 45,000 தடுப்பூசி மையங்கள் இயங்குகின்றன.

தடுப்பூசியின் வேகம் சீராக வளர்ந்துள்ளது. பிப்ரவரி 15, 2021 க்குள், இந்தியா தனது 500 மில்லியன் டோஸ் இலக்கில் 3% மட்டுமே ஈட்டியது. இரண்டாவது மாதத்திற்குள், இது 7% ஆக வளர்ந்தது, இப்போது மூன்று மாதங்களின் முடிவில், 500 மில்லியன் அளவுகளில் இது 23% ஆக உள்ளது.

ஏப்ரல் 5, 2021 அன்று, இந்தியா ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசிகளை 4.3 மில்லியன் என்ற எண்ணிக்கையை அடைந்தது.


தடுப்பூசியின் வேகம் எவ்வாறு அதிகரித்தது

ஆரம்பத்தில், மார்ச் 1 வரை சுகாதார ஊழியர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போட இந்திய அரசு அனுமதி அளித்தது. பின்னர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், சில சுகாதாரச்சூழல் உள்ளவர்களுக்கும் தடுப்பூசிகளை போட அரசு அனுமதித்தது. ஏப்ரல் 1, 2021 முதல், 45 வயதுக்கு மேற்பட்ட எவருக்கும் தடுப்பூசி போடலாம் என்று அரசு அனுமதித்துள்ளது.

தடுப்பூசி போடுவதை அதிகரிக்க, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்கள் உட்பட வாரத்தின் அனைத்து நாட்களிலும் தடுப்பூசி போடும் திட்டத்தை அரசு அனுமதித்தது. ஏப்ரல் 11 முதல், 45 வயதிற்கு மேற்பட்ட 100 க்கும் மேற்பட்ட நபர்களுடன் பணியிடங்களை தடுப்பூசி போட அரசு அனுமதித்தது. தடுப்பூசியை ஊக்குவிப்பதற்காக ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 14 வரை 'டிக்கா உத்சவ்' (தடுப்பூசி திருவிழா) என்ற ஒன்றையும் அரசு அறிவித்தது.

இந்த முயற்சிகளுக்கு ஏற்ற ஒரு நிறுவனம் பி.வி.ஆர் லிமிடெட் ஆகும், இது இந்தியா முழுவதும் திரையரங்குகளை நடத்துகிறது. நிறுவனத்தின் அனைத்து அலுவலகங்களிலும் 7,000 ஊழியர்கள் மற்றும் 8,000 குடும்ப உறுப்பினர்களை உள்ளடக்குவதற்கு இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்று நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரி சுனில் குமார் தெரிவித்துள்ளார். "நாங்கள் எங்கள் வளாகங்களில் தடுப்பூசி இயக்கிகளை ஏற்பாடு செய்கிறோம், அதே நேரத்தில் தங்களையும் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் தடுப்பூசி போடவும், தடுப்பூசி செலவை [நிறுவனத்திடம் இருந்து] திரும்பப் பெற்றுக் கொள்ளவும் ஊழியர்களை ஊக்குவிக்கிறோம்" என்று குமார் கூறினார். ஊழியர்கள் தடுப்பூசி போடக்கூடிய தங்கள் அலுவலகங்கள் / பணியிடங்களுக்கு அருகிலுள்ள தடுப்பூசி மையங்களையும் அவர்கள் அடையாளம் காண்கின்றனர்.

ரோட்டரி கிளப் ஆஃப் இந்தியா தனது பரந்த வலையமைப்பைப் பயன்படுத்தி தடுப்பூசி இயக்கிகளை மேற்கொண்டு வருகிறது. அவர்களின் தேசிய பணிக்குழு மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுகிறது, இதுவரை 55 தடுப்பூசி மையங்களுக்கான தளவாடங்களை கையாண்டுள்ளது. அவர்கள் கேரளா, தமிழ்நாடு, குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய அரசுகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளதாக பணிக்குழுவின் தலைவர் அசோக் மகாஜன் தெரிவித்துள்ளார். "நாங்கள் தனியார் மருத்துவமனைகளிலும், ரோட்டரியின் சொந்த சமூக மையங்களிலும் தடுப்பூசி போடும் திட்டங்களை ஏற்பாடு செய்துள்ளோம். உள்கட்டமைப்பு, தளவாடங்கள் ஆகியவற்றை நாங்கள் வழங்குகிறோம், பணம் செலுத்துகிறோம், முகாம்களைப் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குகிறோம்," என்றார் மகாஜன்.

பராமரிப்பு இல்லங்களில் உள்ள முதியவர்களுக்கு, வேலை செய்யும் மற்றும் அதன் கூட்டாளர் அமைப்புகளுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை என்ற வகையில், ஒரு இலாப நோக்கற்ற நிறுவனமான ஹெல்ப் ஏஜ் இந்தியா உதவுகிறது. "எங்கள் நடமாடும் சுகாதார பிரிவுகள் இந்தியாவின் தொலைதூர பகுதிகளுக்கு சென்று தடுப்பூசி பற்றி பேசவும், தடுப்பூசி போடுவதற்கான வழிமுறைகளைப் பற்றி மக்களுக்குத் தெரிவிக்கவும் செய்கிறது" என்று அந்த அமைப்பின் சுகாதாரத் திட்டத் தலைவர் ரிது ராணா கூறினார். "நாங்கள் பஞ்சாப் மற்றும் தமிழ்நாட்டில் முதியோருக்காக நான்கு இல்லங்களை நடத்தி வருகிறோம். அங்கு வசிக்கும் முதியவர்கள் தடுப்பூசி பெற மிகவும் பயந்தனர். எங்கள் ஊழியர்களுக்கு முதலில் தடுப்பூசி போட்டு, அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினோம். பின்னர் இல்லவாசிகளும் தடுப்பூசி போட்டோம், "என்று ராணா கூறினார்.

தடுப்பூசி வழங்கல் மற்றும் வேகங்களே தடைகள்

அனைத்துவித முயற்சிகள் இருந்தபோதிலும், 2020 ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் 102.2 மில்லியன் மக்கள் மட்டுமே கோவிட்-19 தடுப்பூசி பெற்றுள்ளனர் என்று அரசு தரவு காட்டுகிறது. 14.8 மில்லியன்கள் மட்டுமே தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்றுள்ளனர், மீதமுள்ள 87.4 மில்லியன்கள் இன்னும் இரண்டாவது தடுப்பூசியை போட்டுக் கொள்ளவில்லை.

மாநிலங்கள் பற்றாக்குறையை தெரிவித்தாலும், இந்தியா ஏற்கனவே 'தடுப்பூசி மைத்ரி' (தடுப்பூசி நட்பு) திட்டத்தின் கீழ் 64.5 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்துள்ளது. வணிக ரீதியாக ஏற்றுமதி செய்யப்பட்ட 35.8 மில்லியன் டோஸ்கள், 10.4 மில்லியன் மானியங்கள் மற்றும் ஏழை நாடுகளின் தடுப்பூசிகளை அணுகுவதற்கான உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் வசதியின் கீழ் 39 நாடுகளுக்கு 18.2 மில்லியன் ஆகியவை இதில் அடங்கும்.

மேலும், 24 மில்லியன் தடுப்பூசிகள் இருப்பில் உள்ளது, 19 மில்லியன் தடுப்பூசிகள் கொண்டு வருவதும் கூட, ஏப்ரல் 22 வரை மட்டுமே நீடிக்கும் என்று, ஏப்ரல் 13 ஆம் தேதி, இந்தியாஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது. தடுப்பூசிகளின் இந்தியாவின் சராசரி வீணான வீதத்தை 6.5% ஆகக் கருத்தில் கொண்டு இது விரைவாகக் குறையக்கூடும்.

தடுப்பூசி விகிதம் தற்போதைய ஏழு நாள் சராசரியாக ஒரு நாளைக்கு 3.25 மில்லியன் தடுப்பூசிகளை தாண்டவில்லை எனில், இந்தியா தனது மக்கள்தொகையில் 40% தடுப்பூசி போட ஒன்பது மாதங்கள் (ஜனவரி 2022 வரை) மற்றும் 60% தடுப்பூசி போட 14 மாதங்கள் (ஜூன் 2022 வரை) எடுக்கும்.

(ஸ்ரேயா கைதன், இக்கட்டுரையை திருத்தியுள்ளார்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.