புதுடெல்லி: ஏப்ரல் 2021 இல் கோவிட் -19 இன் இரண்டாவது அலை இந்தியாவில் கிடுகிடுவென உயரத் தொடங்கியபோது, ​​பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு அமலானது. இதனால் பொருளாதார நடவடிக்கைகளில் முடக்கம் ஏற்பட்டது, ஜிதேந்திர சிங் மோசமாக அச்சமடைந்தார். 27 வயதான சிங், தனது நகர வேலையை இழந்து, மேற்கு உத்தரபிரதேசத்தின் எட்டாவா மாவட்டத்தில் உள்ள நக்லா மோதி என்ற சிறிய கிராமத்திற்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

சிங், எட்டாவாவில் வறுமையான குடும்பத்தில் பிறந்தவர். தனது குழந்தைப் பருவத்தில் தந்தையை இழந்ததாக, இந்தியாஸ்பெண்டிடம் அவர் கூறினார். ஆனால் 2000 ஆம் ஆண்டுகளில், இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வந்தது மற்றும் அதன் சிற்றலை விளைவுகள், பல்லாயிரக்கணக்கான சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் தென்பட்டன. சிங் குடும்பத்திற்கு, ஒரு கம்ப்யூட்டர் கடை வடிவத்தில் ஒரு மாற்றம் வந்தது, அதை அவர்கள் தங்கள் சேமித்து வந்த தொகையை கொண்டு திறந்தனர். அடுத்த சில ஆண்டுகளில், அவர்கள் நிலை, இந்தியாவின் நடுத்தர வர்க்கத்திற்கு சென்றனர். அவர் படித்து முடித்து, எட்டாவாவில் தனது முதல் வேலையைப் பெற்ற பிறகு, 2016 இல், மாதாந்திர வீட்டு வருமானம் சுமார் ரூ. 35,000 ஆக அதிகரித்தது என்று சிங் கூறினார்.

கடந்த 2019 ஆம் ஆண்டில், சிங் கவுகாத்தியில் உள்ள பால் நிறுவனத்தில் மாதம் 15,000 ரூபாய்க்கு வேலைக்குச் சென்றார், மேலும் அவரது கனவுகள் நனவாகத் தொடங்கினதா என்று ஆச்சரியப்பட்டார். "என் வாழ்க்கையின் பெரும்பகுதி வரை நான் ஒரு கனவு காண்பவனாக இருந்தேன்," என்று அவர் கூறினார். சிங் தனக்கென ஒரு வீடு வாங்க வேண்டும், கார் ஓட்ட வேண்டும், விடுமுறைக்காக ஒருநாள் சுவிட்சர்லாந்து செல்ல வேண்டும் என்று கனவு காணத் தொடங்கினான். ஆனால் கோவிட் -19 தொற்றுநோய் இந்தியாவின் பொருளாதாரத்தை, வரலாற்று ரீதியாக மந்தநிலைக்கு தள்ளியபோது, அவரது கனவுகள் அனைத்தும் கானல் நீராகிவிட்டன. 2020-21 ஆம் ஆண்டில் பொருளாதாரமானது 7.3% ஆக சரிந்தது, அதனுடன், வேலைவாய்ப்பு, ஊதியம் மற்றும் மில்லியன் கணக்கான இந்தியாவின் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் வருமானமும் தான் சரிந்து விழுந்தது.

கோவிட் -19 இரண்டாவது அலையின் போது, வேலையை இழந்தபோது சிங் அச்சத்தை உணரத் தொடங்கினார். இப்போதுஅவர் தனது கிராமத்திற்குத் திரும்பிவிட்டார், அங்கு தொடர்ச்சியான ஊரடங்கால் உள்ளூர் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. "பெருந்தொற்றுக்கு பிறகு, எங்கள் உள்ளூர் சந்தைகள் மாறிவிட்டன. அது முன்பு போல் இல்லை," என்று அவர் கூறினார். இதன் விளைவாக, அவர்களின் வீட்டு வருமானம் பாதிக்கும் மேல் சரிந்துவிட்டது மற்றும் அவரது தாயின் மருத்துவச் செலவுகளுக்காக குடும்பம், கடன் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வேலை ஒன்று மட்டுமே தன்னை துயரத்தில் இருந்து மீட்கும் என்று சிங் கூறினார், ஆனால் அவர் வேலையை கண்டறிய போராடினார்.

"நிறைய நெருக்கடி இருக்கிறது, என்னால் இரவில் தூங்க முடியாது. எனக்கு வேலை கிடைக்காத வரை எனக்கு எதிர்காலம் இல்லை," என்று சிங் கூறினார், இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரம், இறுதியில் தனது குடும்பத்திற்கு செழிப்பைக் கொண்டு வரும் என்று இளம் பருவத்தில் நினைத்து வந்த நம்பிக்கைக்குரிய நேரங்களை அவர் நினைவு கூர்ந்தார். "இத்தகைய ஒரு காலகட்டத்தில் வாழ வேண்டும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை" என்றார்.

கடந்த 1991 ஆம் ஆண்டின் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு பிறகு, பல தசாப்தங்களில் பொருளாதாரம் அதிக வளர்ச்சி விகிதங்களை கண்டதால், சிங்கின் குடும்பம், இந்தியாவின் விரிவடைந்து வரும் நடுத்தர வர்க்கத்தில் சேர்ந்த பத்து மில்லியன் மக்களில் ஒன்றானது. அதன் பின் வந்த ஆண்டுகளில், அது இந்தியாவின் வளர்ந்து வரும் பொருட்கள் மற்றும் சேவைகளின் நுகர்வுக்கு பங்களித்தது.

ஆனால் ஒரு வருடம் தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு, இத்தகைய மக்கள் குழுக்களின் வாய்ப்புகளைக் குறைத்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், அமெரிக்க சிந்தனைக்குழுவான பியூ ஆராய்ச்சி மையத்தின் பரவலான அறிக்கை, தொற்றுநோய் 2020 ஆம் ஆண்டில் சுமார் 32 மில்லியன் இந்தியர்களை, நடுத்தர வர்க்கத்தில் இருந்து வெளியேற்றியது என்று கூறியது. தொற்றுநோய்களின் போது நடுத்தர வர்க்கத்தின் மொத்த உலகளாவிய வீழ்ச்சியில்-60% என்ற-மிகப்பெரிய பங்களிப்பை இந்தியா கொண்டிருந்தது. இந்த எண்ணிக்கைகள், பியூ உலக வங்கியின் PovCalNet தரவுத்தளத்தை பயன்படுத்தி பெறப்பட்டது மற்றும் 2020-21 நிதியாண்டின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி மதிப்பீடுகளில் காரணியாக இருந்தது.

இருப்பினும், இந்தியாஸ்பெண்ட் பேசிய பொருளாதார வல்லுநர்கள், தொற்றுநோய் மில்லியன் கணக்கான ஏழை மற்றும் நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு --இந்தியாவின் வளர்ச்சி வாய்ப்புகளை கணிசமாக பாதிக்கும் போக்கு-- ஒரு அடியை ஏற்படுத்தியுள்ளது என்பதை ஒப்புக் கொண்டனர். ஆனால் இந்த வகுப்பின் தெளிவான வரையறைகள் மற்றும் அதன் அளவின் நம்பகமான மதிப்பீடுகள் இல்லாத நிலையில், எண்ணிக்கையை வைப்பதில் இருந்து விலக வேண்டியுள்ளது.

"நடுத்தர வர்க்கத்தை, திரவ வகை என்று கூறலாம், முக்கியமாக இந்தியாவில் வேலையின் நிலையற்ற தன்மை மற்றும் முறைசாரா பொருளாதாரம் காரணமாக,மக்கள் தொடர்ந்து உள்ளே மற்றும் வெளியே நகர்கிறார்கள்," என்று, பொருளாதார சமூகவியலாளரும், மாநிலங்களுக்கும் மக்களுக்கும் இடையே அமைதியான உறவுகள் குறித்து ஆராய்ச்சி நடத்தும் அமைப்பான, ஒஸ்லோவில் உள்ள அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளரும், மஸ்யம் அஸ்லானி இந்தியாஸ்பெண்டிடம் கூறினார். "இவை அனைத்தும் கோவிட் -19 நேரத்தில் எத்தனை பேர் நடுத்தர வர்க்க வகையை விட்டு வெளியேறினார்கள் என்பதை உறுதியாகக் கூறுவது மிகவும் கடினம்" என்றார்.

வரையறைகள் மற்றும் மதிப்பீடுகள் பரவலாக வேறுபடுகின்றன

கடந்த 2000ம் ஆண்டுகளின் முற்பகுதியில், சந்தை சார்ந்த சீர்திருத்தங்கள் தொடங்கியதால் இந்தியாவின் பொருளாதாரம் அதிக வளர்ச்சியை பதிவு செய்த பிறகு, பொருளாதார வல்லுநர்கள் மற்றும் நிறுவனங்கள் இந்தியாவின் நுகர்வு கதையை இயக்கும் மற்றும் பெரும்பாலும் நகர்ப்புறங்களை அடிப்படையாகக் கொண்ட இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தின் அளவை மதிப்பிட முயன்றனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டில், ப்ரூக்கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டின் ஹோமி கராஸ், 2015 - 2022ஆம் ஆண்டுகளுக்கு இடையில் சுமார் 380 மில்லியன் இந்தியர்கள் -- 2011 ல் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு $ 11 முதல் $ 110 வரை (வாங்கும் சக்தி நிகரான அடிப்படையில்) தனிநபர் வருமானம் (ரூ .117 மற்றும் ரூ .1,714 க்கு நிகரானது) -- நடுத்தர வர்க்கத்திற்குள் நுழைவார்கள் என்று மதிப்பிட்டார்.

இந்தியாவின் தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சில் (NCAER), நடுத்தர வர்க்கத்தை ஆண்டு வருமானம் ரூ.2 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை உள்ளவர்கள் என வரையறுக்கிறது, 2010 இல் இந்தியாவின் நடுத்தர வர்க்கம் 153 மில்லியனாக மதிப்பிடப்பட்டது. இருப்பினும், 2012 ஆம் ஆண்டில், வாஷிங்டன் டி.சி-யை அடிப்படையாகக் கொண்ட உலகளாவிய மேம்பாட்டு மையத்தின் ஆய்வு, இது போன்ற வருமான வரம்பைப் பயன்படுத்தியது. ஆனால் ஜூலை 2009 மற்றும் ஜூன் 2010 க்கு இடையில் நடத்தப்பட்ட தேசிய மாதிரி கணக்கெடுப்பில் காரணமான, நடுத்தர வர்க்கம் 100 மில்லியனுக்கும் குறைவாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த தசாப்தத்தில் மற்ற மதிப்பீடுகள் பல்வேறு விதமாக 70 மில்லியன் முதல் 600 மில்லியன் வரை உள்ளன.


"போதுமான தரவு இல்லாததால் பிரச்சனை உள்ளது" என்று அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியர் அமித் பசோல், இந்தியாஸ்பெண்டிடம் கூறினார். "நுகர்வு கணக்கெடுப்பு --(நுகர்வு குறைந்துவிட்டது என்று இது அறிவித்தது-- மக்கள் பொதுவாக என்ன நினைக்கிறார்கள் என்பதில் இருந்து மிகவும் மாறுபட்ட தோற்றத்தை வரைந்தது. எனவே பியூ நடுத்தர வர்க்கத்தில் [2020 இல்] வளர்ச்சி இல்லை என்பது மட்டுமல்லாமல் சுருங்குவதாகவும் கூறியது. இது, மிகவும் வித்தியாசமான அறிக்கை, அதை என்ன செய்வது என்று எனக்கு வெளிப்படையாகத் தெரியவில்லை" என்றார்.

தொற்றுநோய்க்கு முன்பே, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருந்தது. 2011 இல் சரிவுக்கு பிறகு வளர்ச்சி குறைந்தது 2012 முதல், போதுமான வேலைவாய்ப்புகளை உருவாக்க மற்றும் இந்தியாவின் முறையான பொருளாதாரத்தை விரிவாக்க மீட்பு போதுமானதாக இல்லை. பாசோல் குறிப்பிட்ட, 2019 இல் கசிந்த தேசிய புள்ளிவிவர அலுவலக கணக்கெடுப்பு, நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு 2017-18 இல் நுகர்வு முதன்முறையாக வீழ்ச்சியடைந்தது என்பதைக் காட்டுகிறது. இந்தியாவின் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் விரிவாக்கம் குறைந்து வருகிறது, அதே நேரத்தில் கிராமப்புற நடுத்தர வர்க்கத்தின் வளர்ச்சி 2015 இல் நிலையானதாக இருந்தது என்பதை, பொருளாதார நிபுணர்கள் அனிருத் கிருஷ்ணா மற்றும் தேவேந்திர வாஜ்பாய் கண்டறிந்தனர். நுகர்வு அல்லது செலவைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, சொத்துகள் இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தின் அளவை மதிப்பிடுவதற்கான அளவுகோலாக கிருஷ்ணா மற்றும் வாஜ்பாய் பயன்படுத்தினர். எச்சரிக்கையான நடுத்தர வர்க்கத்தினரின் பங்களிப்புடன், 2001 இல் 129 மில்லியனில் இருந்து 2011 இல் இது சுமார் 228 மில்லியனாக அதிகரித்ததாக அவர்கள் கூறினர்.

"முறையான துறையில் ஒரு சிறிய மற்றும் பாதுகாப்பான நடுத்தர வர்க்கம் உள்ளது மற்றும் நிலையான வேலைகள் மற்றும் வருமானம் இல்லாத [பெரிய] நிலையற்ற நடுத்தர வர்க்கம் உள்ளது: வர்த்தகர்கள், சிறு தொழிலதிபர்கள், திறமை காரணமாக நியாயமான ஊதியம் பெறும் மக்கள் வைத்திருக்கின்றனர். உதாரணமாக, ஒரு எக்ஸ்ரே கண்டறியும் நிபுணர்," என்று, அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழகத்தின் பொதுக் கொள்கை மற்றும் அரசியல் அறிவியல் பேராசிரியரான கிருஷ்ணா, இந்தியாஸ்பெண்டிடம் கூறினார். "எனவே இந்த நடுத்தர வர்க்கத்தின் வளர்ச்சியில் [மந்தநிலை] (பொருளாதாரம் மந்தமடைவதோடு சேர்ந்து) நடுத்தர வர்க்க வளர்ச்சியின் மேல் சரிவடைய வைக்கிறது" என்றார்.

"அமெரிக்க நிறுவனங்கள் நடுத்தர வர்க்கத்தைப் பற்றி அவர்களின் கண்களில் பிரகாசத்துடன் பேசும்போது, ​​அவர்கள் உண்மையில் பேசுவது இந்தியாவில் வாழும் [ஒப்பீட்டளவில் சிறிய] சர்வதேச நடுத்தர வர்க்கத்தைப் பற்றியது மற்றும் மேற்கத்திய நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்க்கை முறையைப் பொருத்து நுகர்வு வாழ்க்கை முறையை இந்தியா கொண்டுள்ளதை காண்கின்றனர்" என்று கிருஷ்ணா மேலும் கூறினார்.

"நடுத்தர வருமானம்" மற்றும் "நடுத்தர வர்க்கம்" என்ற சொற்களை வசதிக்காக மாற்றாகப் பயன்படுத்துகிறோம். எங்கள் பகுப்பாய்வின் கவனம் கண்டிப்பாக பொருளாதாரமானது, அதாவது தொற்றுநோய் ஒரு வருமான அடுக்கு அளவை எவ்வாறு பாதித்திருக்கலாம், மேலும் மற்றொரு வரையறையின் கீழ் கண்டுபிடிப்புகள் என்னவாக இருக்கும் என்பதை என்னால் சொல்ல முடியவில்லை," என்று, பியூ ஆராய்ச்சி மையத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் ராகேஷ் கோச்சார், இந்தியாஸ்பெண்டிடம் திலளித்தார். "கடந்த காலங்களில், நடுத்தர வர்க்கத்தில் யார் இருக்கிறார்கள் என்பதை அறிய அமெரிக்க பொதுமக்களின் கணக்கெடுப்புகளிலும் நாங்கள் சுய-அடையாளத்தைப் பயன்படுத்தினோம். ஆனால் இந்தியாவுக்கான ஒத்துப்போகும் பயிற்சியை பற்றி எனக்குத் தெரியாது" என்றார்.

கடந்த 2019 இல் இந்திய நடுத்தர வர்க்கம் குறித்த ஆய்வை வெளியிட்ட அஸ்லானி, பெரும்பாலான அனுமானங்களுக்கு மாறாக, இந்திய நடுத்தர வர்க்கத்தின் குறிப்பிடத்தக்க பகுதிகல், கிராமப்புறங்களில் வசிப்பதாகக் கண்டறிந்தார். இந்தியாவின் மக்கள்தொகையில் சுமார் 28.05% நடுத்தர வர்க்கத்தினர், கீழ் நடுத்தர வர்க்கத்தின் 52.31%, வசதியான நடுத்தர வர்க்கத்தின் 32% க்கும் அதிகமானவர்கள் மற்றும் மேல் நடுத்தர வர்க்கத்தின் 23% க்கும் அதிகமானவர்கள் கிராமப்புற இந்தியாவில் இருந்தனர். கிராமப்புற இந்தியாவில் உள்ள பெரும்பாலான கீழ் நடுத்தர வர்க்கத்தினர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர், என்றார்.

தொற்றுநோயின் ஆழமான தாக்கத்தை இந்தியர்கள் மீது அளவிட, ஏழைகள் மீது கவனம் செலுத்த வேண்டும், அஸ்லானி கூறினார். "நடுத்தர வர்க்கம் பொருளாதார மற்றும் பொது சொற்பொழிவுகளில் மைய நிலைக்கு வந்துள்ளது: அதன் அளவு பெரும்பாலும் ஒரு முக்கியமான வளர்ச்சி ப்ராக்ஸியாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்தியாவில் கோவிட் -19 இன் தாக்கத்தைப் பார்க்கும்போது, ​​கவனம் செலுத்த இது ஒரு பயனுள்ள வகையா? [தொடங்குவதற்கு] நடுத்தர வர்க்கத்தின் அளவு கருதுவதை விட மிகச் சிறியது. 2019 ஆம் ஆண்டில், இது இந்திய மக்கள்தொகையில் 28 சதவிகிதம் என மதிப்பிட்டேன். ஆனால் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்திய நடுத்தர வர்க்கத்தில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் உண்மையில் அதன் கீழ் மட்டத்தில் உள்ளனர், அவர்கள் உண்மையில் ஏழைகளின் எல்லையில் உள்ளனர் "என்று அஸ்லானி இந்தியாஸ்பெண்டிடம் கூறினார்.

தொற்றுநோய்க்குப் பிறகு ஏழை, ஆனால் இன்னும் நடுத்தர வர்க்கம்

ஜூன் மாதத்தில், யாரிடம் உதவி கேட்பது என்று தெரியவில்லை என்று, தெற்கு கேரளாவின் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த தரம் ஒன்பதாம் வகுப்பு மாணவரான ப்ராக் அம்புரோஸ், தனது இரண்டு சிலைகளை குறிப்பிட்டு, அமெரிக்க பாடகர் ஜஸ்டின் டிம்பர்லேக் மற்றும் ஹாலிவுட் நட்சத்திரம் ராபர்ட் டவுனி ஜூனியர் ஆகியோருக்கு ட்வீட் செய்தார். அவர் தனது படிப்பைத் தொடர ஸ்மார்ட்போன் தேவை என்றும், "எங்களைப் போன்ற மாணவர்களுக்கு உதவுவதற்கு உங்களால் முடியாதா இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்" என்று அவர் எழுதினார். கோவிட் -19 இன் இரண்டாவது அலை மெதுவாக பாய்ந்ததால், குடும்பத்தின் கொஞ்சம் செல்வமும் பொருளாதார அலைகளில் அடித்துச் செல்லப்பட்டு, அம்புரோஸ் குடும்பத்தை நிதி நெருக்கடியில் தள்ளியது.

"இது இப்படி இருக்கக்கூடாது. எங்கள் எதிர்காலத்திற்காக நான் திட்டமிட்டிருந்தேன் " என்று, கோவாவில் வசிக்கும் மற்றும் வேலை செய்யும் பிராக்கின் தந்தை ஆண்டனி, 42, இந்தியாஸ்பெண்டிடம் கூறினார். கடந்த சில வருடங்களாக, ஆண்டனி கிட்டத்தட்ட 4 லட்சம் ரூபாய் சேமித்து வைத்தார், அவரது வாழ்நாள் சேமிப்பு, மற்றும் தொற்றுநோயின் முதல் அலைக்குப் பிறகு, இந்த ஆண்டு மார்ச் மாதம் பழைய கோவாவில் உள்ள ஸ்ரீ பார் உணவகத்தில் தனது கனவுத் திட்டத்தில் முதலீடு செய்தார். "கோவிட் -19 இன் இரண்டாவது அலை இந்தியாவைத் தாக்கும் என்று யார் நினைத்தார்கள்? அரசு கூட எங்களை எச்சரிக்கவில்லை," என்று அவர் கூறினார். இன்று, அவருடைய வியாபாரம் முடக்கப்பட்டுள்ளது, மேலும் அவர் தனது மூன்று குழந்தைகளின் கல்விக்கு பணம் செலுத்த முடியாமல் கடனில் தள்ளப்பட்டுள்ளார். "மூன்றாவது அலை இல்லை, மேலும் ஊரடங்கு இல்லை என்ற சூழலை நான் விரும்புகிறேன். இது என் ஒரே நம்பிக்கை ... என் வாழ்க்கையில் இதுபோன்ற மோசமான நேரங்களை நான் பார்த்ததில்லை" என்று ஆண்டனி கூறினார்.

இதுபோன்ற பல குடும்பங்கள் சேமிப்பு மற்றும் வங்கி வைப்பு போன்ற நிதிச் சொத்துக்களை இழந்துவிட்டதாக சமீபத்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆய்வு கண்டறிந்துள்ளது. 2020-21 இரண்டாம் காலாண்டில் (ஜூலை-செப்டம்பர் 2020), மூன்றாவது காலாண்டில் (அக்டோபர்-டிசம்பர் 2020) வீட்டு வங்கி வைப்பு விகிதம் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7.7% ஆக 3% ஆக குறைந்துள்ளது. அதே நேரத்தில், 2018-19 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து வீட்டு கடன்-க்கு-ஜிடிபி விகிதம் சீராக அதிகரித்து வருகிறது, மேலும் செப்டம்பர் 30, 2020 அன்று 37.1% இல் இருந்து "டிசம்பர் 31, 2020 க்குள் 37.9% ஆக" கடுமையாக உயர்ந்தது. தொற்றுநோய்க்கு ஒரு வருடம், 230 மில்லியன் இந்தியர்கள் தேசிய குறைந்தபட்ச ஊதிய வரம்பிற்கு கீழே நழுவினர் என்று, அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

"நடுத்தர வர்க்கத்தின் வரையறை நம்மிடம் இல்லை, ஆனால் ஏழைகள் பற்றிய வரையறை உள்ளது மற்றும் அதற்கு மேல் உள்ள எவரும் ஏழைகள் அல்லாதவர்களாக வகைப்படுத்தப்படுகிறார்கள்," என்று, டெல்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியர் ஹிமான்ஷு, இந்தியாஸ்பெண்டிடம் கூறினார். "நிச்சயமாக நுகர்வோர் என்று அழைக்கும் நமது வர்க்கம் (அதிக அளவு விருப்பமான செலவினங்களைக் கொண்ட வர்க்கம்) மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. வேலைகள் இழக்கப்பட்டுள்ளன மற்றும் ஊதியங்கள் குறைக்கப்பட்டுள்ளன, எனவே இவர்களில் பெரும்பாலானோருக்கு செலவு பாதிக்கப்பட்டுள்ளது" என்றார்.

சீனா போன்ற பெரிய நடுத்தர வர்க்கத்தின் பற்றாக்குறை, இந்தியாவின் வளர்ச்சி மாதிரியில் உள்ள கட்டமைப்பு குறைபாடுகளால் வேரூன்றியுள்ளதாகவும், உதாரணமாக, போதுமான முறையான துறை மற்றும் சம்பள வேலைகளை உருவாக்க முடியவில்லை என்றும் பொருளாதார வல்லுநர்கள், இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தனர்.

"பொருளாதாரத்தில் முதல் 10% வருமானம் மற்றும் நுகர்வு வளர்ந்து வரும் நிலையில், 10% என்று சொல்லலாம், மற்றும் 90% பொருளாதாரத்தில் எதுவும் நடக்கவில்லை ... தேக்கம் உள்ளது. கணக்கிடப்பட்ட சராசரி உங்களுக்கு 1% வளர்ச்சி விகிதத்தை அளிக்கிறது. பொருளாதாரத்தின் சாத்தியமான பகுதியில் மக்கள்தொகையில் ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டுமே இருக்கும்போது நீங்கள் எப்படி வளர்ச்சி பெற முடியும்?" என்று, லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பொருளாதாரப் பேராசிரியர் மைத்ரீஷ் கட்டக், இந்தியாஸ்பெண்டிடம் கூறினார். தரவுத் தொகுப்பில் உள்ள எண்ணிக்கைகளின் முக்கியத்துவத்தின் மாறுபட்ட அளவுகளில் எடையிடப்பட்ட சராசரி காரணிகள் ஆகும். .

மூத்த பொருளாதார நிபுணரும் பொருளாதார ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு நிறுவனமான ஜேஎச் கன்சல்டிங்கின் இயக்குனருமான ஜோஷ் ஃபெல்மேன் கூறுகையில், தொற்றுநோய் இந்தியாவின் நடுத்தர மக்களை மோசமாக பாதித்தாலும், இந்தியர்கள் அதிலிருந்து மீண்டும்விட்டார்கள் என்பதற்கு சிறிய ஆதாரங்கள் இல்லை. "கடுமையாக பாதிக்கப்படுவதற்கும் நடுத்தர வர்க்கத்தில் இருந்து வெளியேறுவதற்கும் நாம் வேறுபாடு காட்ட வேண்டும். அவர்கள் நிச்சயமாக கஷ்டப்பட்டார்கள், ஆனால் அவர்கள் நடுத்தர வர்க்கத்தில் இருந்து வெளியேறிவிட்டார்களா? என்றால் நான் அப்படி நினைக்கவில்லை," ஃபெல்மேன் இந்தியாஸ்பெண்டிடம் கூறினார்.

மறுபுறம், சந்தை தாராளமயமாக்கலுக்குப் பிறகு இந்தியாவில் வருமான விநியோகம் மோசமடைந்தாலும், சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டது, நுகர்வோர் பொருட்களின் நுகர்வு, அதிக மதிப்புள்ள உணவு உட்கொள்ளல் மற்றும் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளின் அதிகரிப்பு ஆகியவற்றால் இது தெளிவாகிறது என்று ஃபெல்மேன் கூறினார். இந்தியாவின் கிராமங்கள். "1991 முதல் சீர்திருத்தங்கள் மக்கள்தொகையில் கணிசமான விகிதத்தைத் தொட்டன, டாப் 10 அல்லது 15%மட்டும் அல்ல," என்று அவர் மேலும் கூறினார்.

குறைந்த வருவாய் நிலைகளில் இலக்கு தொற்றுநோய் உதவி

இந்த பிப்ரவரியில், இரண்டாவது கோவிட் -19 அலை இந்தியாவைத் தாக்கும் முன், மில்லியன் கணக்கான இந்திய குடும்பங்கள் மற்றும் சிறு வணிகங்கள் வருமானத்தை இழந்து, அவர்களுக்குத் தேவையான கடனைப் பெற முடியாமல் போனது என்று, JP மோர்கனின் தலைமை வளர்ந்து வரும் சந்தைப் பொருளாதார நிபுணர் ஜஹாங்கீர் அஜிஸ் எச்சரித்தார். இது பொருளாதாரத்தில் நிரந்தர வடுவை ஏற்படுத்தும்.

கடந்த ஆண்டு முதல், தொற்றுநோய்க்கு பதிலளிக்கும் விதமாக அரசு செலவுகள் பாதிக்கப்படக்கூடிய மக்களை தொற்றுநோயின் மோசமான தாக்கங்களில் இருந்து தணிக்க ஓரளவு உதவியது, ஆனால் குறைந்துவிட்டது என, பல அறிக்கைகள் மற்றும் ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. கோவிட் -19 இன் இரண்டாவது அலையின் போது, ​​அரசு தொடர்ச்சியான ஊரடங்குகள், பொருளாதாரத்தை மோசமாக பாதித்த போதிலும், பட்ஜெட் செலவினங்களுக்கு அப்பால் கூடுதல் செலவுகளைத் தேர்ந்தெடுக்கவில்லை; இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில், அது சாதனை அளவாக வரிகளைச் வசூலித்திருந்தாலும், பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமான செலவினங்களுக்குப் பொறுப்பான அமைச்சர்களில் மூன்றில் ஒரு பங்கு ஜூன் 2021 காலாண்டில் செலவழிப்பதில் ஆண்டுக்கு ஆண்டு சுருங்குவதாக அறிவித்தது. இந்தியப் பொருளாதாரத்தின் கண்காணிப்பு (CMIE) பகுப்பாய்வு. "நெருக்கடியின் போது செலவுகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் சிக்கன நடவடிக்கைகளைத் திணிப்பது ஆகிய இரண்டிலும் அரசின் நடவடிக்கைகள் விவரிக்க முடியாதவை" என்றது.

மாறாக, இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ.), தணிப்பு பணியில் முன்வரிசையில் இறங்கியது. தொற்றுநோயின் தொடக்கத்தில் இருந்து, வட்டி விகிதங்களை அது குறைவாக வைத்திருக்கிறது, அதே நேரத்தில், நிதி அமைப்பில் 5.3 லட்சம் கோடியை பதிவு செய்துள்ளது என்று, மூத்த ஆய்வாளர் அனந்த் நாராயணின் ஆய்வுக்குழு ஆராய்ச்சி குறிப்பு தெரிவித்தது. குவாண்டிட்டேடிவ் ஈசிங் (QE- அளவு குறைத்தல்) எனப்படும் வழக்கத்திற்கு மாறான பணவியல் கொள்கை கருவியைப் பயன்படுத்தி அரசு பத்திரங்கள் மற்றும் பத்திரங்களை வாங்கியது. குவாண்டிட்டேடிவ் ஈசிங் என்பது, அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் மூலம் பிரபலமானது, இது 2008 இல் நிதி நெருக்கடிக்கு பதிலளிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டது. சில ஆய்வுகள் குவாண்டிட்டேடிவ் ஈசிங் வருமானம் மற்றும் செல்வ சமத்துவமின்மைக்கு வழிவகுக்கிறது என்பதைக் காட்டுகிறது.

எவ்வாறாயினும், பொருளாதாரத்தில் ஆர்பிஐ வைக்கும் பணம், உண்மையான பொருளாதாரம் மற்றும் உற்பத்தித் துறைகளுக்கு கடன் வடிவில் செல்வதை விட, பங்குச் சந்தைகளில் தன்னைக் கண்டறிந்துள்ளது. இதன் விளைவாக, எஸ் & பி - பி.எஸ்.இ. சென்செக்ஸ் இரண்டும், 30 பெரிய நிறுவனங்களின் குறியீடு மற்றும் தேசிய பங்குச் சந்தையில் பட்டியல் இடப்பட்ட 50 மிகப்பெரிய நிறுவனங்களின் குறியீடான என்.எஸ்.இ. நிப்டி-50, ஏப்ரல் 2020 மற்றும் ஜூலை 2021 க்கு இடையில் முறையே ஏறக்குறைய 86% மற்றும் 91% அதிகரித்துள்ளது, 2020 ஆம் ஆண்டில் 7.3% ஆக பதிவு செய்யப்பட்டது. ஆனால் ஜிடிபி வளர்ச்சி, பொருளாதாரத்தின் ஆரோக்கியத்திற்கான மானியாகும்.


ஜனவரி 2021-ல், உண்மையான பொருளாதாரம் மற்றும் நிதிச் சந்தைகளுக்கு இடையே இடைவெளி இருப்பதாக ஆர்.பி.ஐ. கவலை தெரிவித்தது, இது நிதி ஸ்திரத்தன்மைக்கு ஆபத்தை ஏற்படுத்தியது. சிஎம்ஐஇ பகுப்பாய்வின்படி, குடும்ப வருமானம் மற்றும் சேமிப்புகளை பெருந்தொற்று அழித்த நிலையில், பட்டியலிடப்பட்ட நிதி நிறுவனங்கள் மார்ச் 2021 காலாண்டில் சாதனை லாபம் ஈட்டின.

"பெருநிறுவன வருவாய் பெரிதாக்கப்பட்டிருந்தாலும், இந்தியாவில் எம்.எஸ்.எம்.இ. [நுண்ணிய, சிறு மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்கள்] துறைக்கு அது கிட்டத்தட்ட 30% ஜி.வி.ஏ [மொத்த மதிப்பு சேர்க்கப்பட்டது]" என்று என்.எஸ்.சி ஜூலை அறிக்கை குறிப்பிட்டது. "இந்த நிகழ்வு பொருளாதாரத்தில் பல துறைகளில் உடனடியாகத் தெரியும்" என்றார்.

ஆகஸ்ட் 'பொருளாதார சுற்றுச்சூழல்', கடந்த ஆண்டில் இருந்து தொழில்துறை கடன் சுருங்கியது, கார்ப்பரேட்டுகளுக்கு சந்தையில் கிடைக்கும் மலிவான கடனுடன் அதிக விலை கடன்களை மாற்று அமைப்பதாக, எஸ்பிஐ தெரிவித்தது. ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை, நுகர்வோர் விலை பணவீக்கம் மற்றும் சமத்துவமின்மையை அதிகரிக்க வழிவகுக்கும் என்று நாராயண், தனது ஆய்வு குறிப்பில் எழுதினார்.

பொருளாதார வல்லுநர்கள், இந்தியாஸ்பெண்ட் உடன் பேசுகையில், ஏழைகள், சிறு தொழில்கள் மற்றும் குறைந்த நடுத்தர வர்க்கத்தை குறிவைத்து நிதி செலவினங்கள் அதிகரிப்பது உள்நாட்டு தேவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் இந்தியாவின் விரைவான பொருளாதார மீட்சிக்கு பங்களிக்கும். கூடுதலாக, நுகர்வோர் பொருட்கள், கல்வி, சுகாதாரம் மற்றும் மலிவு வீடுகள் ஆகியவற்றின் வெகுஜன நுகர்வை அதிகரிக்கும் பொருளாதார மாதிரிக்கு மாறுவது பொருளாதாரத்தில் பன்மடங்கு விளைவை உருவாக்கும் என்று அவர்கள் கூறினர்.

"இந்தியா ஒரு பெரிய சந்தை. நீங்கள் வருமானத்தை கீழே உயர்த்தினால், மக்கள் அதை அத்தியாவசிய மற்றவற்றிற்காக செலவிடுவார்கள், இது தேவையை அதிகரிக்கும் மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களின் அதிக உற்பத்திக்கு வழிவகுக்கும், இது பொருளாதாரத்தில் பெருக்க விளைவுக்கு வழிவகுக்கும். மக்களுக்கு வேலை கிடைக்கும், ஊதியமும் அதிகரிக்கும். இது இயற்கையான செயல் "என்று ஹிமான்ஷு, இந்தியாஸ்பெண்டிடம் கூறினார்.

பணக்காரர்கள் மற்றும் உயர் நடுத்தர வர்க்க இந்தியர்களை குறிவைப்பது உள்நாட்டு தேவைக்கு சிறிதளவு உதவும் என்று ஹிமான்ஷு கூறினார். "அவர்கள் சம்பாதித்தவற்றின் பெரும்பகுதியை, அவர்கள் செலவிட மாட்டார்கள் [ஏனென்றால்] அதில் பெரும் பகுதி வெறுமனே பணம் போகிறது, இது வெளிப்படையான நுகர்வு. பணம் ஒரு ஐபோன் வாங்க பயன்படும், இது உங்கள் உள்நாட்டு பொருளாதாரத்தில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது. ஏழை மற்றும் [கீழ் நடுத்தர இந்தியர்கள்] நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு அதிகம் செலவழிக்கிறார்கள்.

"வேலைகள் திரும்பினால், அடுத்த இரண்டு-மூன்று ஆண்டுகளில் தொற்றுநோய்க்கு முந்தைய நிலைக்கு திரும்புவோம். ஆனால் தொற்றுநோய் நீண்டகால மாற்றங்களைத் தூண்டினால், நிறுவனங்கள் குறைவான தொழிலாளர்களுடன் செய்ய முடியும் என்று முடிவு செய்தால், குறைவான வேலைகள் திரும்பும். அதாவது, நடுத்தர வர்க்கத்தின் அளவில் நீண்டகாலக் குறைப்புகளை நாம் பார்க்கிறோம்," என்று அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் பசோல், இந்தியாஸ்பெண்டிடம் கூறினார்.

"ஆனால் பெரிய பிரச்சினை என்னவென்றால், சில மில்லியன் இந்தியர்கள் நுகர்வு பாதையை இயக்கிய முந்தைய பொருளாதார கட்டமைப்பிற்கு, நாம் திரும்ப விரும்புகிறோமா? என்பதுதான்" என்று, பசோல் கூறினார்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.