ஸ்ரீநகர் மற்றும் பாரமுல்லா: மருத்துவரின் அறைக்கு அருகில் ஒரு மூலையில் அமர்ந்திருக்கிறார் அந்த பெண். கம்பவுண்டர் மேஜையில் இருந்த அட்டவணை காகிதம் மற்றும் மருந்து பெட்டிகளால் மறைத்தபடி இருந்தார். "எதிர்காலம் பற்றி நினைத்து நான் வெறுப்பில் இருக்கிறேன். எங்களுக்கு எதிர்காலம் இல்லை என்று நான் நினைக்கிறேன்," என்று 24 வயதான சஹ்ரா, இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். ஜஹ்ரா ஒரு சட்டம் பயின்ற பட்டதாரி, அவர் இப்போது மாநில சிவில் சர்வீஸ் (நீதித்துறை) தேர்வுக்கு தயாராகி வருகிறார். அரசியல் சாசனப்பிரிவு 370-ஐ நீக்கியதால் ஏற்பட்ட பதட்டத்தம் தணியும் வரை, கடும் மன அழுத்தத்தில் உள்ள அவருக்கு மூன்று ஆண்டுகளாக மருந்துகள் தேவையில்லை. "நான் இனி என் படிப்பில் கவனம் செலுத்த முடியாது," என்று அவர் கூறினார்.

ஸ்ரீநகரில் இருந்து 55 கி.மீ தூரத்தில் உள்ள பாரமுல்லாவில் தனது கிளினிக்கில் நரம்பியல் நிபுணர் ஆகாஷ் யூசுப்கானை பார்க்க காத்திருந்த 15 நோயாளிகளில், ஜஹ்ராவும் ஒருவர். மோசமாக பராமரிக்கப்படும் நகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள இந்த மருத்துவமனை, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது; மற்ற நாட்களில், அவர் மாவட்ட மருத்துவமனையில் ஆலோசனை செய்கிறார்.

காஷ்மீரில், 370வது பிரிவு நீக்கப்பட்டதன் விளைவாகவும், அதை தொடர்ந்து இணையதளம் உள்ளிட்ட தகவல்தொடர்புகள் நிறுத்தப்பட்டதால், பலர் தங்கள் குடும்பத்தினருடன் பேசு முடியாமல் தவித்தனர்; அல்லது அவர்கள் முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் வீட்டை விட்டு வெளியேறுவதன் விளைவாக, மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கணித்துள்ளனர்.

ஆகஸ்ட் 5, 2019 க்குப் பின் ஏற்பட்ட நிகழ்வுகளின் சுகாதார நெருக்கடி மற்றும் காஷ்மீரின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இந்தியா ஸ்பெண்ட் தெரிவித்துள்ளது.

இந்த முடக்கத்தின் விளைவாக 2019 ஆகஸ்டில், குறைவான மக்கள் மனநல சுகாதார சேவையை அணுகியுள்ளனர். மெடிசின்ஸ் சான்ஸ் ஃபிரான்டியர்ஸ் (எம்.எஸ்.எஃப், அல்லது எல்லைகள் இல்லாத மருத்துவர்கள்) காஷ்மீர் பள்ளத்தாக்கின் நான்கு மாவட்டங்களில் மனநல சுகாதார சேவைகளை நிறுத்திவிட்டதால், அவர்கள் தங்கள் ஊழியர்களை அடைய முடியவில்லை.

மோதல்களால் பாதிக்கப்பட்ட பிராந்தியமான காஷ்மீர், வரலாற்று ரீதியாக மனநல பிரச்சினைகள் பரவலாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் கிட்டத்தட்ட 18 லட்சம் பெரியவர்கள் - மக்கள்தொகையில் 45% - மன உளைச்சலின் அறிகுறிகளைக் காட்டியுள்ளதாக எம்.எஸ்.எஃப் (MSF) என்ற மனிதாபிமான அமைப்பின் 2015 ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பில் 41% மக்கள் மனச்சோர்வின் அறிகுறிகளையும், 26% பேர் பதட்டத்தின் அறிகுறிகளையும், 19% பேர் பிந்தைய மனஉளைச்சல் சீர்கேடு (PTSD) அறிகுறிகளையும் காட்டியுள்ளனர்.

செப்டம்பர் 7, 2019 அன்று ஸ்ரீநகர், ஹைதர்புராவில் தரைவழி தொலைபேசி இணைப்புகளை சரி செய்யும் தொழில்நுட்ப பணியாளர்களை ஆர்வமுடன் சுற்றி நின்று கவனிக்கும் உள்ளூர் மக்கள்.

வேலையின்மை, மோதல்

தற்போது, மக்கள் தங்கள் வேலையை மீண்டும் தொடங்க முடியவில்லை, மேலும் கவனச்சிதறல் அல்லது பொழுதுபோக்கு எதுவும் இல்லை. நாங்கள் பல காஷ்மீர் மக்களிடம் பேசியதில், அவர்கள் உள்ளூர் வேலைநிறுத்தத்தை - கடைகள் மற்றும் வணிக நிறுவனங்க்ள் மூடப்படுவதை பொருட்படுத்தவில்லை என்று சொன்னார்கள், ஆனால் அடுத்தது என்ன என்ற நிச்சயமற்ற தன்மையைப் பற்றி அறிய ஆர்வமாக இருந்தனர்.பலர் தாங்கள் காயப்படுவதையும் அவமானப்படுவதையும் உணர்ந்ததாகக் கூறினர், அவர்களின் அடையாள உணர்வு பறிக்கப்பட்டது என்றும் கூறினர்.

உச்சகட்ட மோதல்கள் நடந்து வந்த நேரங்களில் கூட, ஜம்மு-காஷ்மீரில் வேலையின்மை விகிதம் அதிகமாக உள்ளது - 2015 ஆம் ஆண்டில் இது 18-29 வயதுக்குட்பட்டவர்களில் 22.4% ஆக இருந்தது, இந்த வயதினருக்கான இந்திய சராசரியான 13.2% என்பதை விட இது இரு மடங்காகும் என்று, 2016 பொருளாதார ஆய்வு தெரிவிக்கிறது.

தயங்கும் நோயாளிகள், சுகாதார சேவையை அணுக முடியவில்லை

ஆகஸ்ட் 5, 2019 முதல், மக்கள் சுகாதார வசதிகளை அணுகுவது கடினம், மற்றும் மருத்துவமனைகள் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக, 2019 செப்டம்பர் 6 இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்துள்ளது. ஒரு சாதாரண சூழ்நிலையில் கூட, குறிப்பாக. சிலர் மனநல சுகாதாரத்தை அணுகுகிறார்கள்.

ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது ஆகஸ்ட் மாதத்தில் ஸ்ரீநகரில் உள்ள மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தில் (IMHANS), சுமார் 44.5% குறைவான நோயாளிகளே வந்திருந்தனர். ஆனால் மே மாதத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை இன்னும் குறைவாக இருந்ததால் இந்த தரவு உறுதியற்றதாகிறது.

மறுபுறம், ஆகஸ்ட் 5-க்கு பிறகு சமீபத்திய வாரங்களில் அதிகமான நோயாளிகள் பதட்டம் மற்றும் படபடப்பு அறிகுறிகளுடன் பொது வெளி நோயாளி பிரிவிற்கு (OPD) வருகை தருகிறார்கள் என்று பாரமுல்லா மாவட்ட மருத்துவமனையில் பணிபுரியும், பெயர் வெளியிட விரும்பாத ஒரு பொதுமருத்துவர் கூறினார். அத்தகைய நோயாளிகள் மனநல வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவுக்கு பரிந்துரைக்கப்படுகிறார்கள். ஆண்டிடிரஸன் மற்றும் பதட்ட எதிர்ப்பு மருந்துகளின் தேவை,குறிப்பாக 16-30 வயதுக்குட்பட்டவர்களுக்கு அதிகரித்துள்ளது என்று மருத்துவமனைக்கு வெளியே உள்ள மருந்தாளுனர்கள் தெரிவித்தனர்.

மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் ஐ.எம்.எச்.ஏ.என்.எஸ். (IMHANS), ஸ்ரீநகரின் பழைய நகரத்தில் இருக்கிறது. மற்ற பகுதிகளை விட இங்கு நடமாட்டத்திற்கு அதிக கட்டுப்பாடுகள் உள்ளன, இது நோயாளிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. பாராமுல்லா போன்ற மாவட்ட மருத்துவமனைகளை நோயாளிகள் எளிதில் அடைவார்கள்.

தகவல்தொடர்பு முடக்கத்தால் ஏற்பட்டுள்ள சரியான தாக்கம் மற்றும் மக்களின் மன ஆரோக்கியம் குறித்த அரசியல் முடிவு சில ஆண்டுகளுக்குப் பிறகுதான் அறியப்படும் என்று பெயர் வெளியிட விரும்பாத ஐ.எம்.எச்.ஏ.என்.எஸ். மூத்த மனநல மருத்துவர் ஒருவர் கூறினார். "மனநல பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மற்றும் சிகிச்சை பெற விரும்பும் மக்களிடையே சராசரி பின்னடைவு சுமார் 3-5 ஆண்டுகள் ஆகும்" என்றார் அவர்.

இந்த இடைவெளி இப்போது குறைந்து வருகிறது, ஆனால் மக்கள் மனநல உதவி கேட்க இன்னும் சில மாதங்கள் ஆகும் என்று ஐ.எம்.எச்.ஏ.என்.எஸ். மனநல மருத்துவர் கூறினார். பள்ளத்தாக்கில் 2016 அமைதியின்மைக்கு உதாரணம் - இந்திய பாதுகாப்புப்படையினர் பயங்கரவாதி புர்ஹான் வானியை கொன்றபோது, அந்த ஆண்டு ஜூலை மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் மாநிலத்திற்கு ரூ.16,000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டது.

அந்த சம்பவம் நடந்த ஒரு வருடத்திற்குப் பிறகுதான் நோயாளிகள் வரத் தொடங்கினர் என்று ஐ.எம்.எச்.ஏ.என்.எஸ். மனநல மருத்துவர் கூறினார். கொந்தளிப்பான காலங்களில் மக்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள், மனநலத்திற்கு அல்ல, விஷயங்கள் இயல்பான பிறகு உதவி பெறுகிறார்கள் என்று அவர் விளக்கினார், “மேலும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் உதவியை நாடுகிறார்கள், மீதமுள்ளவர்கள் சமாளிக்க வேறு வழிகளைக் கண்டுபிடிப்பார்கள். மனிதர்கள் மிகவும் நெகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்” என்றார்.

காஷ்மீர் பெரியவர்கள் வழிபாடு செய்து சமாளிக்கும் உத்தியையும், குடும்ப உறுப்பினர் அல்லது நண்பருடன் பேசுவதில் “பிஸியாக இருப்பதையும்” கொண்டு, இதை சமாளிப்பதாக, எம்.எஸ்.எஃப் ஆய்வு தெரிவித்துள்ளது.

சராசரியாக, பள்ளத்தாக்கில் வசிக்கும் ஒரு வயதுவந்தோர் தங்கள் வாழ்நாளில் ஏழுக்கும் மேற்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவங்களை கண்டிருக்கிறார்கள் அல்லது அனுபவித்திருக்கிறார்கள் என்று, எம்.எஸ்.எஃப் கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது. அதிர்ச்சிகரமான நிகழ்வுகளின் வெளிப்பாடு மனச்சோர்வு, பதட்டம் மற்றும் பிந்தைய மனஉளைச்சல் சீர்கேடுடன் தொடர்புடையது. காஷ்மீரிகள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள் நிதி பிரச்சினைகள், மோசமான உடல்நலம் மற்றும் வேலையின்மை என்று எம்.எஸ்.எஃப் கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது.

தொடர்ச்சியான அரசியல் மோதல்கள் மற்றும் வன்முறை காரணமாக, காஷ்மீரில் போதைப்பழக்கம் வளர்ச்சி கண்டிருக்கிறது என, இந்தியா ஸ்பெண்ட் நவம்பர் 2017 கட்டுரை தெரிவித்தது.

வீட்டில் சிக்குண்ட குழந்தைகள் வருத்தம், கோபமடைகிறார்கள்

ஸ்ரீநகர் நகரத்தில் உள்ள ரெய்னாவரியைச் சேர்ந்த குழந்தைகள் ஒரு முற்றத்தில் அமர்ந்துள்ளனர். ஆகஸ்ட் 4, 2019 முதல், இவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை. பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக ஆகஸ்ட் 19 இல் அரசு கூறி இருக்கிறது.

13 வயதான சாடியா, கடந்த ஒரு மாதத்தில் செய்ததெல்லாம் வீட்டில் உட்கார்ந்து அக்கம் பக்கத்திலுள்ள மூன்று உறவினர்களின் வீடுகளுக்குச் செல்வதுதான். "எல்லா நேரத்திலும் வீட்டுக்குள்ளேயே இருப்பதால், நான் மூச்சுத் திணறலை உணர்கிறேன். ஆனால் நாங்கள் என்ன செய்ய முடியும்?" என்று சொன்ன அவர், மஞ்சள் சல்வார்-கமீஸ் மற்றும் கருப்பு துணியை தலைக்கவசம் அணிந்த சாடியா, தனது வீட்டின் அருகே ஒரு திறந்த முற்றத்தில் அமர்ந்திருந்தார்.

ஸ்ரீநகரின் பழைய நகரப்பகுதியில் உள்ள ரெய்னாவாரி என்ற பகுதியில் வசிக்கும் சாடியா, பாதுகாப்புப்படையினரால் பெரிதும் பாதுகாக்கப்பட்டு, தொடர்ச்சியான கட்டுப்பாடுகளையும் ஊரடங்கு உத்தரவுகளையும் எதிர்கொள்கிறார்.அவள் மயக்கம் மற்றும் தலைவலிக்கு ஆளாகிறார்; அவர் தமது தந்தையின் உயிர் பாதுகாப்பு பற்றி தொடர்ந்து கவலைப்படுவதாகக் கூறுகிறாள். "என் தந்தை காய்கறிகளை வாங்க அல்லது மசூதிக்கு (மஸ்ஜித்) பிரார்த்தனை செய்ய வெளியே செல்லும் போதெல்லாம் நான் எப்போதும் கவலைப்படுகிறேன், அவர் பாதுகாப்பாக திரும்ப வேண்டும் என்று நான் விரும்புகிறேன்," என்று அவர் கூறினார்.

ஆகஸ்ட் 4 முதல் சாடியா பள்ளிக்கு வரவில்லை; பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக ஆகஸ்ட் 19 அன்று அரசு கூறியுள்ளது. பாதுகாப்பு குறித்த நிச்சயமற்ற நிலைமையால், பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில்லை. "இப்போது எங்களுக்கு தேர்வுகள் வைக்கப்பட்டு இருக்க வேண்டும்... ஆனால் இப்போது நாங்கள் இருந்த இடத்தில் சிக்கிக்கொண்டோம்," என்று சாடியா கூறினார்; வீட்டிற்குள்ளேயே முடங்கியது முதல் அவருக்கு மயக்கம் மற்றும் தலைவலி மோசமடைந்தது.

அவரது தந்தை, ஒரு சலவைத் தொழிலாளி. வேலைக்குச் செல்லவில்லை என்றால், தமது கல்விக்கு அவரால் உதவ முடியாது. சாடியா சதியா மேலும் கூறினார். “நான் ஒரு பொறியியலாளராக விரும்புகிறேன், அதனால் எனது அப்பா இனி உழைக்க வேண்டியதில்லை. ஆனால், இனி என் கனவை நிறைவேற்ற முடியும் என்று நான் நினைக்கவில்லை” என்றார். நாங்கள் பேசிய பெரும்பாலான குழந்தைகள், 370 வது பிரிவை நீக்குவது பற்றி அறிந்திருந்தனர். ஏனெனில் அவர்கள் செய்தித்தாள்களை படிப்பவர்கள்; தொலைக்காட்சி செய்திகளைப் பார்த்தவர்கள்.

செப்டம்பர் 9, ஸ்ரீநகரில் தனது பாட வகுப்புக்குச் செல்லும் ஒரு மாணவி. ஆகஸ்ட் 19, 2019 அன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதாக அரசு கூறியது, ஆனால் பாதுகாப்பு காரணங்களால் ஆகஸ்ட் 5 முதல் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை.

நாங்கள் பேசிய குழந்தைகளிடையே, முடக்கிப்போன ஈத் கொண்டாட்டங்கள் மற்றும் அன்புக்குரியவர்களின் செய்திகள் போன்றவை, அடிக்கடி தொந்தரவு, பயம் மற்றும் கவலையை ஏற்படுத்திய காரணிகளாக குறிப்பிடப்படவில்லை.

இக்கட்டுரை தொடர் முடிந்தது. முதல் பகுதியை இங்கே, இரண்டாவது பகுதியை இங்கே படிக்கலாம்.

(யாதவர், இந்தியாஸ்பெண்ட் சிறப்பு நிருபர். பர்வேஸ் ஸ்ரீநகரை சேர்ந்த ஒரு சுயாதீன பத்திரிகையாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.