ஸ்ரீநகர் மற்றும் பாரமுல்லா: ஹாஜி முகமது கனி, 74, தனது ஆப்பிள் பழத்தோட்டத்தில், அழகாக வெட்டப்பட்ட வெள்ளை தாடியுடன் மற்றும் ஒரு கடுகடுப்புடன் இருக்கிறார். அவரைச் சுற்றிலும் ஆப்பிள்கள் நிறைந்த மரங்கள் இருந்தன.

வழக்கமாக ஆண்டின் இந்நேரத்தில் அவரது பழத்தோட்டம் - இந்தியாவில் மூன்றில் இரண்டு பங்கு ஆப்பிள் உற்பத்தி செய்து, 2016-17இல் ஏற்றுமதியில் ரூ. 6,500 கோடி (903 மில்லியன்) சம்பாதித்து, காஷ்மீரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 10வது பங்களிப்பு செய்து 33 லட்சம் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் ஒரு மாநிலத்தில் - இந்தியா முழுவதும் கப்பலுக்கு சரக்குகளை அனுப்ப பழங்கள் பறிக்கப்பட்டு பேக்கிங் செய்யப்பட்டு கொண்டிருக்க வேண்டும்.

ஆனால், செப்டம்பர் 8, 2019 அன்று, நாங்கள் அவரது பழத்தோட்டத்தை பார்வையிட்டபோது, எந்த செயல்பாடுகளுமின்றி அமைதியாக இருந்தது.

ஸ்ரீநகருக்கு வடமேற்கே 55 கி.மீ தொலைவில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தில் சோபூர் நகருக்கு அருகில் உள்ள சூரா என்ற கிராமத்தில் ஆப்பிள் பழத்தோட்டங்களுக்கு பிரபலமான பகுதியில் ஐந்து ஏக்கர் நிலம் கனிக்கு சொந்தமானது. மரங்கள் ஒவ்வொரு ஆண்டும் 5,000 பெட்டி பழங்களை விளைவிக்கின்றன, கனிக்கு ரூ. 5 லட்சம் லாபம் கிடைக்கும்.

இந்த ஆண்டு, அவர் எதைப் பெற்றாலும் அதை கொண்டு தான் தீர்க்க வேண்டும்.

ஆகஸ்ட் 5, 2019 முதல், காஷ்மீரின் அனைத்து தகவல்தொடர்பு வழிகளும் முடக்கப்பட்டதால்’ - இது ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அமலானது - டெல்லி, கொல்கத்தா மற்றும் பாட்னாவில் உள்ள வர்த்தகர்களிடம் கனியால் வர்த்தகப் பேச்சுவார்த்தை நடத்த முடியவில்லை. பல வணிகர்கள் பழங்களை சேகரிக்க காஷ்மீருக்கு வருவது வழக்கம், ஆனால் அவர்களால் இந்த ஆண்டு பயணத்தை மேற்கொள்ள முடியாது.

கனியின் தோட்டத்து ஆப்பிள்கள் சில, சோப்பூர் பழ சந்தையில் விற்கப்பட்டன, ஆனால், அங்குள்ள ஒரு வர்த்தகர் குடும்பம் மீது அடையாளம் தெரியாத துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டதால், ஆனால் செப்டம்பர் 7, 2019-க்கு பிறகு அதற்கான வாய்ப்பும் இல்லாமல் போனது.

"இந்த ஆண்டு ஆலங்கட்டி மழையில் இருந்து நாங்கள் தப்பித்தோம், ஆனால் இந்த பேரழிவில் இருந்து எங்களால் தப்பிக்க முடியாது" என்று கனி, இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். இப்போது, ஸ்ரீநகரில் உள்ள பழ விற்பனையாளர்கள் ஆப்பிள்களை சேமித்து வைத்திருக்கிறார்கள்; எனினும், அவர்கள் சாதாரண சந்தை விலையில் பாதிக்கு தான் கொடுக்க வேண்டியுள்ளது. ஆனால் கனி, தமது ஆப்பிள்களை அழுக விடாமல் பார்த்துக் கொள்கிறார். "நாங்கள் அழிக்கப்பட்டு விட்டோம்," என்று அவர் கூறினார்.

ஸ்ரீநகர் துணை ஆணையர் ஷாஹித் சவுத்ரி, செப்டம்பர் 4, 2019 அன்று தமது ட்வீட்டில், இந்தியாவின் தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு -நாஃபெட் (NAFED) - விவசாய பொருட்களை சந்தைப்படுத்த அரசு நடத்தும் தேசிய கூட்டுறவு அமைப்பு -காஷ்மீரில் வளர்க்கப்படும் அனைத்து ஆப்பிள்களையும் “போட்டி விகிதத்தில்” வாங்கும் என்று தெரிவித்தார்.

இணையதளம் அல்லது மொபைல் போன் சேவைகள் இல்லாததால், இந்த செய்தி, நாங்கள் செப்டம்பர் 8, 2019 அன்று பேசிய போது கூட, ஆப்பிள் பழத்தோட்ட விவசாயிகளை சென்றடையவில்லை.

நாஃபெட் (NAFED) 2019 வரையிலான மூன்று தசாப்தங்களில் எந்த ஆப்பிள்களையும் வாங்கவில்லை; இது செப்டம்பர் முதல் வாரத்தில் ஸ்ரீநகரில் ஒரு அலுவலகத்தைத் திறந்து, செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் ஆர்டர்களைப் பெற்றது என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. "விவசாயிகளை பதிவு செய்வதற்கும், அவர்களின் ஆதார் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை பெற்று, நேரடியாக அவர்களின் கணக்கில் தொகை செலுத்துவதற்கும் கூட, எங்களுக்கு அதிக அவகாசம் தரப்படவில்லை" என்று அதிகாரி ஒருவர் கூறியதை, அந்த நாளேடு மேற்கோள் காட்டியுள்ளது.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் வணிகங்களின் தகவல் தொடர்பு சீர்குலைவின் தாக்கத்தை மதிப்பிடுவதற்கு, நாங்கள் ஸ்ரீநகர் மற்றும் பாரமுல்லா மாவட்டங்களில் பயணம் செய்தோம்; பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில்முனைவோர் மற்றும் தொழிலாளர்களுடன் பேசினோம். தற்போதைய நெருக்கடியானது, கிட்டத்தட்ட ஒவ்வொரு வணிகத்தையும் - பாரம்பரிய பழ வர்த்தகம், சுற்றுலா, ஈ-காமர்ஸ் மற்றும் மென்பொருள் போன்றவற்றை - முடக்கியுள்ளது. கடைகள் மணிக்கணக்கில் மூடப்பட்டுள்ளன; புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மாநிலத்தை விட்டு வெளியேறிவிட்டனர்; உள்ளூர் பணியாளர்கள் வேலைக்குத் திரும்ப மறுக்கின்றனர்; ஹோட்டல்கள் காலியாக உள்ளன; இனி வாடிக்கையாளர்களுடன் வணிகத்தொடர்பு கொள்ள முடியாது என்ற நிலை உள்ளது.

மீண்டும் கனியின் கதைக்குத் திரும்புவோம்; செப்டம்பர் என்பது காஷ்மீரில் பழத்தோட்டங்களில் அறுவடை நடக்கும் காலம், ஆனால் ஆகஸ்ட் 2019 நிகழ்வுகள், பழ வர்த்தகத்தை கிட்டத்தட்ட கொன்றேவிட்டன.

ஸ்ரீநகரின் ஹைதர்புராவில், செப்டம்பர் 7, 2019 அன்று தரைவழி தொலைபேசி இணைப்பை சரிசெய்த தொழில்நுட்ப வல்லுநர்களை சூழ்ந்து கொண்டு ஆர்வமுடன் பார்க்கும் உள்ளூர்வாசிகள்

நாளொன்றுக்கு இருமுறை திறக்கப்படும் கடைகள்

இயல்புநிலை திரும்பி வருவதாக, அரசு கூறி வந்தாலும், இந்தியா ஸ்பெண்ட் பள்ளத்தாக்கு பகுதிக்கு பயணம் மேற்கொண்ட போது, காஷ்மீரில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டு இருந்தன. ஸ்ரீநகரில் பொது போக்குவரத்து எதுவும் நடக்கவில்லை; ஏழைகள் உட்பட அனைவரையும் தனியார் வாகனங்களில் செல்ல வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது.

கடைகள் ஒருநாளைக்கு இரண்டு முறை, அதிகாலை மற்றும் மாலை என்று தாமதமாக மட்டுமே திறக்கப்படுகின்றன. நாள் முழுவதும் கடை ஷட்டர்கள் மூடப்பட்டு கிடந்தன. ஆண்கள் அரட்டையடித்துக் கொண்டிருக்க, இளைஞர்கள் தங்கள் வீட்டு வாசலில் கேரம் போர்டு விளையாடிக் கொண்டிருந்தனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர்.

மத்திய ரிசர்வ் படையின் ஆயுதமேந்திய வீரர்கள் ஒவ்வொரு சில மீட்டருக்கும் நிற்கிறார்கள். பெரும்பாலான சாலைகளில் முள்வேலி தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன; பாதுகாப்பு காரணங்களுக்காக போக்குவரத்து அடிக்கடி திருப்பி விடப்பட்டது.

தரைவழி தொலைபேசி இணைப்புகள் ஓரளவு செயல்பட்டன; ஆனால் பெரும்பாலான வீடுகளில் தங்களது தரைவழி தொலைத்தொடர்பு இணைப்புகளை சரண்டர் செய்துவிட்டதால், தொடர்பு கொள்ள வேறுவழியின்றி இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம். கேபிள் மற்றும் டிஷ் டிவி சேனல்கள் தெரியும் நிலையில், சில சர்வதேச சேனல்களின் ஒளிபரப்பு தடுக்கப்பட்டு இருந்தன. ஆனால் ரேடியோக்கள் சர்வதேச நிலையங்களின் செய்திகளை ஒளிபரப்பின; மக்கள் செய்திகளுக்காக அவற்றுடன் இணைந்திருந்தனர்.

சீஸனிலும் சுற்றுலாவாகளின்றி வெறிச்சோடிய ஓட்டல்கள், படகு இல்லங்கள்

இது காஷ்மீரில் சுற்றுலா சீசனாகும். ஆனால் ஸ்ரீநகரில் அனைத்து ஓட்டல்கள், படகு இல்லங்கள் விருந்தினர் மாளிகைகள் வெறிச்சோடி உள்ளன. மதிப்பீடுகளின்படி, காஷ்மீர் பள்ளத்தாக்கில் 26 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திறன் சுற்றுலாவுக்கு உள்ளது.

நாங்கள் ஸ்ரீநகரை சென்றடைந்தோம். இங்கு தற்போது சுற்றுலா சீஸனாகும். ஆனால் பிரபலமான தால் ஏரிக்கரையோரம் எந்த பரபரப்பும் இல்லாமல் களையிழந்து காணப்பட்டன. படகு இல்லங்கள், செயல்பாடுகளின்றி கரையோரம் முடங்கிக் கிடந்தன. சிகரஸ் என்று அழைக்கப்படும் நூற்றுக்கணக்கான உள்ளூர் படகுகள் வெறுமனே மிதந்து கொண்டிருந்தன.

நகரில் உள்ள விருந்தினர் மாளிகைகள் மற்றும் ஓட்டல்கள் காலியாக இருந்தன. ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்கு முன்னர் அனைத்து சுற்றுலாப் பயணிகளையும் வெளியேறுமாறு அரசு உத்தரவிட்டது; பின்னர் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக உள்ளூர் வணிகர்கள் மற்றும் மக்களின் கதவடைப்பும் நிலைமையை மேலும் சிக்கலாக்கியது.

பாரம்பரியமாகவே, காஷ்மீரி சமூகத்தவர்கள், நெருங்கிப் பழகக்கூடியவர்கள்; பணக்காரர்கள் ஏழைகளுக்கு உதவுகிறார்கள், ஆனால் இப்போது பல குடும்பங்கள் வாழ்வாதாரத்திற்கே போராட வேண்டியுள்ளது என்று உள்ளூர்வாசிகள் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தனர்.

பர்வாஸ் அலி*, 45, தால் ஏரிப்பகுதியில் 14 அறைகளுடன் கூடிய ஒரு விருந்தினர் இல்லத்தை வைத்திருக்கிறார், நான்கு பணியாளர்கள் வேலை பார்க்கின்றனர். ஆனால் அங்கு இப்போது எல்லா அறைகளுமே காலியாக உள்ளன; பணியாளர்கள் ஆகஸ்ட் 5 அன்றே வெளியேறிவிட்டனர். சுற்றுலா சீஸனில் - அதாவது ஏப்ரல் முதல் அக்டோபர் வரை - அலி மாதம் ரூ.70,000 சம்பாதித்தார்; ஆனால், இந்த ஆண்டு இல்லை.

வழக்கமாக, ஏரியைச் சுற்றி இருக்கும் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள், வேலைநிறுத்த அழைப்புகளுக்கு செவிசாய்ப்பதில்லை, ஆனால் இந்தமுறை அப்படியல்ல. "இது எங்களின் அடையாளம் பற்றியது, இது எங்கள் காரணத்திற்காக நடக்கிறது" என்று அலி கூறினார். "இதற்காக எங்கள் வணிகங்களை நிறுத்துவதில் எங்களுக்கு விருப்பமில்லை" என்றார் அவர்.

55 வயதான அப்துல் அஜீஸ் தோபி, ஓட்டல்கள் மற்றும் படகு இல்லங்களில் இருந்து சலவைக்கு நிறைய ஆர்டர் பெற்று வந்தார். அவரது ஆறு பணியாளர்களில் மூன்று பேர், புலம்பெயர்ந்தவர்கள். அவர்கள், 2019 ஆகஸ்டில் வெளியேறினர்.

அலியின் சொத்தில் இருந்து கட்டப்பட்ட மூன்று மாடி புதிய மம்தா ஓட்டல், சாலையோரம் உள்ளது; அதன் வாயில்கள் பூட்டப்பட்டுள்ளன. வெளியில் உள்ள பலகை இது சுத்த சைவ உணவு மட்டுமே கிடைக்கும் என்று கூறுகிறது. "எங்களுக்கு இங்கு குஜராத்தி மற்றும் சமண விருந்தினர்கள் வருவார்கள். இங்குள்ள சமையல்காரர் சூரத்தில் இருந்து வருகிறார்" என்று ஓட்டல் மேலாளர் பசித் குல் கூறினார். ஆனால் இப்போது ஓட்டலில் துப்புரவு ஊழியர்கள் உடபட யாரும் இல்லை.

"எங்கள் மூன்று சொத்துக்களான ஓட்டலில் 118 அறைகள் மற்றும் சேவை ஊழியர்கள், கணக்காளர்கள் மற்றும் மேலாளர்கள் உட்பட 120 ஊழியர்கள் உள்ளனர்" என்று குல் கூறினார். “ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு, ஆறு ஊழியர்கள் மட்டுமே இங்கு பணியாற்றி வருகின்றனர். எங்கள் ஊழியர்களில் பெரும்பாலோர் காஷ்மீர் பள்ளத்தாக்கின் அனைத்து பகுதிகளை சேர்ந்த காஷ்மீரிகள், இருந்தும்கூட அவர்கள் வேலைக்கு வரவில்லை” என்றார் அவர்.

உள்ளூர் சுற்றுலாத் துறைக்கு 2019 ஆம் ஆண்டு சிறப்பாகத்தான் போய்க் கொண்டிருந்தது. "இது நடந்த [அமர்நாத்] யாத்திரை எங்களுக்கு நன்றாகவே இருந்தது" என்று குல் கூறினார், சுற்றுலாப் பயணிகளை பள்ளத்தாக்கில் இருந்து வெளியேறும்படி அரசு உத்தரவை தொடர்ந்து ஏற்பட்ட பீதியை அவர் நினைவு கூர்ந்தார். "நாங்கள் எங்கள் விருந்தினர்களை அதிகாலை வரை விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றோம்" என்றார் அவர்.

ஜம்மு காஷ்மீரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலாத் துறை 6.8% பங்களிப்பு செய்ததோடு 12 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை - அவர்களில் 260,000 அமர்நாத் யாத்ரீகர்கள் - ஈர்த்ததாக, பொருளாதார ஆய்வு 2017-18 தெரிவிக்கிறது. ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாத்துறை 2019 ஆம் ஆண்டில் 2.11 கோடி சுற்றுலா பயணிகளை ஈர்த்திருந்தால், 5,28,000 நேரடி வேலை; 26 லட்சம் மறைமுக வேலைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் 2019 ஜூலை வரை 521,000 சுற்றுலாப் பயணிகள் மட்டுமே ஜம்மு காஷ்மீருக்கு வந்ததாக இந்தியா டுடே செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் நகரில் உள்ள ரெய்னாவரியில், 55 வயதான வெள்ளை ஆடை மற்றும் பைஜாமா அணிந்திருந்த அப்துல் அஜீஸ் தோபி, தனது நண்பர்களுடன் அரட்டை அடித்துக்கொண்டிருந்தார். அவரது பெயரில் இருப்பது போலவே, அவர் ஒரு சலைவத்தொழில் செயபவர். படகு இல்லங்கள், ஓட்டல்களில் இருந்து துணியை பெற்று சலவை செய்து வந்தார். அவரது ஆறு பணியாளர்களில்மூவர் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் என்பதால், அவர்கள் வெளியேறிவிட்டனர். "நான் மாதத்திற்கு ரூ. 60,000 சம்பாதித்தேன்; இப்போது அது பூஜ்ஜியமாக குறைந்துவிட்டது" என்றார் அவர்.

வினியோகிக்கப்படாத சரக்குகள் நிறைந்த கிடங்குகள்

ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு அருகே உள்ள ஹம்ஹாமாவில் இருந்து ஒரு கிடங்கிற்கு செல்லும் வழியில், 45 வயது அப்துல் கரீம் * மற்றும் அவரது மூன்று பணியாளர்கள், கடந்தாண்டு காஷ்மீரில் அறிமுகமான ஆன் லைன் வர்த்தக நிறுவனமான அமேசானுடன் விற்பனை கூட்டாளியாக பணிபுரிந்து வருகின்றனர்.

வினியோகம் செய்யப்படாத பெட்டிகள் மற்றும் பொட்டல குவியல்கள் கிடங்கை நிரப்பி கிடக்கின்றன. சுமார் 60 டெலிவரி சிறுவர்கள் சமீபத்தில் வரை நிறுவனத்தில் பணிபுரிந்து, ஒவ்வொரு நாளும் 40 பாக்கெட்டுகளை வழங்கினர். சுதந்திர தினத்தை முன்னிட்டு, அமேசான் நிறுவனம் அதிக தள்ளுபடி விற்பனையை செய்வதால், ஆகஸ்ட் மாதம் பொதுவாக அவர்களுக்கு பரபரப்பான மாதமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இணையதளம் இல்லாமல், அமேசான் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன.

"இந்த தயாரிப்புகள் எல்லாம் அனுப்பியவருக்கே திருப்பி அனுப்பப்பட வேண்டும்," என்று கரீம் கூறினார். ஆனால், அது கூட இணையதள செயல்பாடு மீண்டும் இயல்பு நிலைக்கு வந்த பிறகே சாத்தியமாகும்.

ஒரு இளம் வயது டெலிவரி சிறுவன் விரக்தியில் வேலையை கைவிடுவதற்கு முன்பு, ஒரு மாதமாக வைத்திருந்த காலணிகளை திருப்பித் தரக் கிடங்கிற்குள் நுழைந்தான். அந்த இளைஞன் கரீமை அழைக்க முடியவில்லை, ஆனால் எப்படியும் என்ன நடக்கிறது என்று பார்க்க முடிவெடுத்தான். "காத்திருப்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை," என்று அவனது மூத்தவர்கள் சொன்னார்கள்.

மத்திய ஸ்ரீநகரின் பார்சுல்லாவில் உள்ள ப்ளூ டார்ட் கூரியர் நிறுவனத்தின் அலுவலகத்திலும், இந்தியா ஸ்பெண்ட் இதே போன்ற கதைகளைத் தான் கேட்டது. அந்த நிறுவனம், இந்தியாவின் பிற பகுதிகளுக்கு வழங்கப்பட வேண்டிய சரக்குகளை பெற்றுக்கொண்டது, ஆனால் நகருக்கானது எதுவும் வழங்கப்படவில்லை. "நாங்கள் ஏர்-இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்தோம், ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அவர்கள் காஷ்மீருக்கான சரக்குகளை ஏற்க மறுக்கின்றனர்" என்று மேலாளர் நெய்ம் அகமது கூறினார். "டெல்லியில் பல பார்சல்கள் சிக்கிக் கிடக்கின்றன. ஆகஸ்ட் 4-க்கு பிறகு வழங்க இயலாத 600 பார்சல்கள், எங்கள் அலுவலகங்களில் உள்ளன" என்ற அகமது, அலுவலகத்தில் பணிபுரியும் 55 ஊழியர்களில் ஐந்து பேர் மட்டுமே உள்ளனர்; அவர்களும் நிர்வாக மற்றும் அலுவலக ஊழியர்கள் என்றார்.

அரசு அலுவலகங்கள் திறந்தாலும் பெரும்பாலும் அரைநாள் தான் இயங்கும்

ஸ்ரீநகர் தபால் நிலைய வளாகம் நிரம்பியிருந்தது, பேருந்துகள் மற்றும் டெலிவரி வேன்கள் மற்றும் ஒரு சில வாடிக்கையாளர்கள் இருந்தனர். "முதல் சில வாரங்களில், 90% தபால்கள் அங்கேயே கிடந்தன," என்று பெயர் வெளியிட விரும்பாத தபால் அலுவலக அதிகாரி கூறினார். தரைவழி தொழிபேசி இணைப்பு வேலை செய்யத் தொடங்கியதும், பாதுகாப்பு நிலைமை குறித்த புதிய தகவல் கிடைத்த பிறகு தபால்கள் அனுப்பலாம் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

அஞ்சல் துறையை, அரசின் ஒரு பகுதியாக மக்கள் பார்ப்பதால் தபால்கள் விநியோகத்திற்காக அதிகாலையில் அனுப்பப்படுகிறது. "எங்கள் தபால்காரர்களில் சிலர் உள்ளூர்வாசிகளால் தாக்கப்பட்டனர், அவர்கள் அரசு வாகனத்தை கண்டிருந்தால் எரித்திருக்கக்கூடும்" என்று அந்த அதிகாரி கூறினார். ஆனால் இப்போது கூட வடக்கு மற்றும் தெற்கு காஷ்மீரில் உள்ள அஞ்சல் நிலையங்களுக்கு அனுப்பப்படும் தபால்களில் 50% மட்டுமே உண்மையில் அங்கு சென்றடைகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

பள்ளிகள், கல்லூரிகள், வங்கிகள், செயலகம் போன்ற பிற அலுவலகங்கள் திறந்த நிலையில் இருந்தன, ஆனால் இணையதள முடக்கத்தால் சிறியதளவு பணிகளே நடந்தன. அரசு ஊழியர்கள் காலையில் தங்கள் அலுவலகங்களுக்குச் சென்று வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு உடனே வீடு திரும்புவதாக எங்களிடம் தெரிவித்தனர்.

'இங்கு தகவல் தொழில்நுட்பத்துறை முடங்கிவிட்டது’

ஊடகங்களோடு பேசத் தயங்கிய மென்பொருள் தொழில்முனைவோரான ஆலம் கான்*, 43, தனது அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டார். ஒரு நண்பரின் அலுவலகத்தில் எங்களை சந்திக்க அவர் ஒப்புக் கொண்டார், அவருடைய அடையாளமோ, அவரது நிறுவனத்தின் அடையாளமோ தெரியப்படுத்தாது ரகசியம் காக்கப்படும் என்று அவருக்கு உறுதியளிக்கப்பட்டது.

"நான் உங்களிடம் பேசுவேன், ஏனென்றால் அவர்கள் [அரசு] ஏற்கனவே செய்ததைவிட இனி எங்களுக்கு வேறு தீங்கு செய்யவிட முடியாது," என்று அவர் கூறினார், "காஷ்மீரில் தகவல் தொழில்நுட்பத்துறை செயலிழந்துவிட்டது" என்றார்.

உயரமான, நீல நிற போலோ சட்டை மற்றும் கால்சட்டை அணிந்திருந்த கானின் கண்ணில் கவலை; அவரது கையில், தொழில்முனைவோர் மற்றும் நிதி குறித்த பிரபல புத்தகமான ரிச் டாட், பூவர் டாட் (Rich Dad, Poor Dad) வைத்திருந்தார். "நான் இதை மீண்டும் படித்து, தற்போதைய சூழ்நிலையுடன் ஒப்பிட்டு பார்க்கிறேன்; நான் ஏழை அப்பாவுடன் இருக்கிறேன்," என்றார் அவர்.

கான், ஒரு அமெரிக்க பன்னாட்டு நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலை பார்த்து வந்தவர்; ஆனால் சொந்தமாக நிறுவனம் அமைப்பதற்காக தாயகம் திரும்பினார்.

"வணிகத்தை புரிந்துகொள்ள எங்களுக்கு ஐந்து ஆண்டுகள் பிடித்தன, சரியான நபர்களை வேலைக்கு அமர்த்த மேலும் ஐந்து ஆண்டுகள் ஆனது, கடந்த ஐந்து ஆண்டுகளில் தான் நாங்கள் வளர்ந்தோம்," என்று அவர் எங்களிடம் கூறினார். அவரது நிறுவனம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கனடா, அமெரிக்கா மற்றும் பல நாடுகளில் உள்ள சுகாதார மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு நிதி தொடர்பான மென்பொருள் தயாரிப்புகளை வழங்கியது.

174 திறமையான பணியாளர்களை வேலைக்கு அமர்த்தினார் கான்; அவர்களில் பெரும்பாலோர் காஷ்மீர் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், அவரது கனவு நனவாகும் என்று நம்பியிருந்தனர். உலகத்தரம் வாய்ந்த மென்பொருள் சேவைகளை வழங்கும் ஸ்ரீநகரில் உள்ள தகவல் தொழில்நுட்ப பகுதியான ரங்கிரெத்தில், இதேபோல் சுமார் 12 நிறுவனங்கள் உள்ளதாக அவர் தெரிவித்தார். ஸ்ரீநகரில் உள்ள 50 பிற மென்பொருள் நிறுவனங்களும் ரூ.500 கோடி வருவாய் ஈட்டியதோடு 1,500 ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை தந்தன. "நாங்கள் ஒரு குறைந்த சுயவிவரத்தை வைத்திருந்தோம், எங்கள் வெற்றியைப் பற்றி பேசவில்லை - அதிக கவனம் அதிக இடையூறாக இருந்திருக்கும்," என்று அவர் கூறினார்.

நாங்கள் கானை சந்தித்தபோது, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இணையதளம் மற்றும் மொபைல் சேவைகளுக்கான அணுகல் இழந்து 35 நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டது. தடையற்ற இணைய இணைப்பு தேவைப்படும் மென்பொருள் நிறுவனங்களுக்கு, இது வாடிக்கையாளர்களின் உறவில் முடிவைக் குறிக்கிறது. "ஒவ்வொரு வாரமும் பல லட்சம் ரூபாயையும், வணிகங்களை இழக்கிறோம், இந்த வர்த்தகம் பல தசாப்தங்களாக கட்டப்பட்டது" என்று கான் கூறினார். "2016இல் ஊரடங்கு உத்தரவு அமலான போதும், கொந்தளிப்பாக இருந்த ஆறு மாதங்களில் கூட, எங்கள் பணி தடையின்றி தொடர்ந்தது" என்றார் அவர்.

மென்பொருள் நிறுவனங்கள், தங்களின் வாடிக்கையாளர்களை தொடர்பு தக்க வைத்துக் கொள்வதற்காக, தங்கள் ஊழியர்களை டெல்லிக்கு அனுப்புவதன் மூலம் நிலைமையை காப்பாற்ற முயன்றன, ஆனால், இது ஒரு அதிக செலவு பிடிக்கும் முயற்சியாகும். “அவை, தங்கள் ஊழியர்களை டெல்லியில் வைத்திருக்க ஒவ்வொரு நாளும் 1.5 லட்சம் ரூபாய் செலவிட வேண்டும்,” என்றார் கான்.

இந்நிறுவனங்கள் ஃபைபர் இணைப்புகள் மூலம் அதிவேக இணைய இணைப்பு - கண்காணிக்க எளிதான - வழித்தடங்களை குத்தகைக்கு எடுத்து செயல்படுவதால் சில கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்காக, அரசை அவர்கள் சமாதானப்படுத்தலாம் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால் அனைத்து மட்டங்களிலும் - துணை மாவட்ட ஆணையர் முதல் ஆலோசகர் வரை - உள்ள அதிகாரிகளுடனான சந்திப்புகளுக்கு பிறகு, இணையதள இணைப்பு விரவில் கிடைப்பதற்கான வாய்ப்பில்லை என்பது தெளிவாகியது.

"எங்கள் இழப்புகளுக்கு உரியவகையில் ஈடுசெய்யப்படும் என்று அவர்கள் எங்களிடம் தெரிவித்தனர்," என்று கான் கூறினார். அவர் விரைவில் தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றார். "இது இறந்த உடலுக்கு சிகிச்சை தருவது போன்றது- மிகக் குறைவு, மிகவும் தாமதமானது" என்றார்.

பெயர் வெளியிட விரும்பாத மற்றொரு தொழில்முனைவோர் கூறுகையில், இந்த ஆகஸ்டில் தனது உற்பத்தி பிரிவில் சேவை தொடங்க விரும்பியதாகவும், ஆனால் பின்னடைவை சந்தித்ததாக தெரிவித்தார். "டிஜிட்டல் இந்தியாவை அரசு விரும்புகிறது மற்றும் பாஸ்போர்ட் முதல் தேர்வு படிவங்கள் வரை பல அரசு செயல்முறைகள் ஆன்லைனில் தான் உள்ளன," என்று அவர் கூறினார். "எனது மாசு கட்டுப்பாட்டு சான்றிதழைப் பெற நான் சென்றேன்; ஆனால் அவர்கள் அதை ஆஃப்லைனில் வழங்க இயலாது என்பதை அறிந்தேன்" என்றர்.

ஜம்மு-காஷ்மீருக்கு வணிக முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியில், மாநில நிர்வாகம் அக்டோபர் 12, 2019 முதல் ஸ்ரீநகரில் மூன்று நாள் உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை அறிவித்தது. "இந்த சந்திப்பு ஜம்மு காஷ்மீரின் பலம், உத்திகள் மற்றும் திறன்களை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்கும்" என்று மாநில முதன்மை செயலாளர் கூறினார். ஆனால், நாங்கள் பேசியவரை தொழிலதிபர்கள் மத்தியில் அத்தகைய நம்பிக்கைகள் வளரவில்லை என்பதை பார்க்க முடிந்தது.

*வேண்டுகோளின் பேரில் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

(யாதவர், இந்தியா ஸ்பெண்ட் சிறப்பு நிருபர்; பர்வேஸ், ஸ்ரீநகரில் பணிபுரியும் ஒரு சுயாதீன பத்திரிகையாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.