புதுடில்லி: தற்போதைய கார்பன் உமிழ்வு விகிதத்தின்படி, இன்று பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் காலநிலை மாற்றத்தால் தனது வாழ்நாள் முழுவதும் உடல்நல பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடுமென்று புதிய அறிக்கை கூறுகிறது. குழந்தை 71 வயதாகும் போது, தொழில்துறைக்கு முந்தைய காலகட்டமான 1700ஆம் ஆண்டிகளின் நடுப்பகுதியை விட, 4 டிகிரி செல்சியஸ் (deg-C) வெப்பம் இருக்கும்.

ஏற்கனவே மோசமான காற்றால் பாதிக்கப்பட்டுள்ள, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் தொற்றுநோய்களுக்கு ஆளாகக்கூடிய இந்திய குழந்தைகள், காலநிலை மாற்றத்தின் அதிக தாக்கங்களையும் அனுபவிப்பார்கள்; இதுபற்றி நாங்கள் பின்னர் விளக்குகிறோம்.

காலநிலை மாற்றம் குழந்தை பருவத்தில் இருந்து முதியவராகும் வரை ஒருவரின் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கும் என்ற சில வழிகள் என்று, 2019 தி லான்செட் மருத்துவ இதழ் வெளியிட்ட லான்செட் கவுண்டவுன் அறிக்கை இங்கே:

  • அரிசி மற்றும் மக்காச்சோளத்தின் சராசரி விளைச்சலை குறைக்கும். இதனால் பயிர்களின் விலையை உயர்த்து, ஊட்டச்சத்து குறைபாட்டை அதிகரிக்கும். இது ஏற்கனவே இந்திய குழந்தைகளிடையே அதிகமாக உள்ளது.
  • வானிலை மாறுவதால் குழந்தைகளுக்கு, குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய தொற்றால் வயிற்றுப்போக்கு மற்றும் கொசுக்களால் பரவும் நோய்கள் அதிகரிக்கும்.
  • காற்று மாசுபாடு மோசமடையும்; நுண்ணிய துகள்களால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
  • பெரும் வெள்ளம், கடும் வறட்சி மற்றும் காட்டுத்தீ போன்றவை, அதிகரித்து வரும் வெப்பநிலையுடன் சேர்ந்து கொள்ளும். இது உயிரினங்களுக்கு ஆபத்தை அதிகரிக்கும்.

லான்செட் கவுண்டவுன், அதன் முதல் பதிப்பை 2016இல் அறிமுகப்படுத்தியது. இது ஒரு விரிவான வருடாந்திர பகுப்பாய்வாகும். இது 41 முக்கிய குறிகாட்டிகளில் முன்னேற்றத்தைக் கண்காணிக்கிறது; காலநிலை மாற்றத்தின் சுகாதார பாதிப்புகளை நிரூபிக்கிறது.

"மாறிவரும் காலநிலை, உடல்நல அபாயங்களை குறிப்பாக குழந்தைகளுக்கு பாதிப்பை உண்டாக்குகிறது" என்று தி லான்செட் கவுண்டவுன் நிர்வாக இயக்குனர் நிக் வாட்ஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். "அவர்களின் உடல் மற்றும் நோயெதிர்ப்பு அமைப்புகள் வளர்ந்து வருவதால்,அவை நோய் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடுத்தல்களுக்கு எளிதில் ஆளாகின்றன. குழந்தை பருவத்தில் ஏற்பட்ட தொடர் பாதிப்பு பரவலாக இருக்கும்; இதனால் சுகாதார தாக்கம் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்” என்றார்.

உலகளாவிய சராசரி வெப்பநிலை அதிகரிப்பால் சுமார் 60 கோடி இந்தியர்கள் ஆபத்தில் உள்ளதாக, அக்டோபர் 8, 2018 இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.

பாரிஸ் ஒப்பந்தத்தின் நோக்கத்தை எட்ட, அடுத்த தலைமுறையின் ஆரோக்கியத்தை பாதுகாக்க, நிலப்பரப்பின் ஆற்றலானது கடுமையாகவும் விரைவாகவும் மாற்ற வேண்டும் என்று அறிக்கை கூறியுள்ளது. பாரீஸ் ஒப்பந்தப்படி, தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளின் மூலம், கார்பன் உமிழ்வைக் குறைக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்தி, புவி வெப்பமடைதலை 2 டிகிரி செல்ஷியஸ் ஆக நாடுகள் குறைக்க வேண்டும்.

நடப்பு 2019 மற்றும் 2050-க்கு இடையில் புதைபடிவத்தில் வெளிப்படும் கார்பன் உமிழ்வை ஆண்டுக்கு ஆண்டு 7.4% குறைப்பதால் மட்டும் புவி வெப்பமடைதலை 1.5 டிகிரி செல்ஷியஸ் என்ற லட்சிய இலக்கை எட்ட உதவாது என்று அறிக்கை கூறியுள்ளது.

"காலநிலை நெருக்கடி இன்று மனிதகுலத்தின் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. அடுத்த தலைமுறை எதிர்கொள்ளும் இத்தகைய சவாலுக்கு பொருந்தக்கூடிய அளவில் அரசுகளிடம் தக்க பதிலை உலகம் இன்னும் காணவில்லை” என்று தி லான்செட்டின் தலைமை ஆசிரியர் ரிச்சர்ட் ஹார்டன் செய்திக்குறிப்பில் தெரிவித்தார். “பாரிஸ் ஒப்பந்தத்தின் முழு சக்தியும் 2020 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதால், மருத்துவ, உலகளாவிய சுகாதாரம் மற்றும் ஆராய்ச்சி சமூகம் ஒன்று சேர வேண்டும்; குழந்தை பருவத்திற்கும் வாழ்நாள் முழுவதுமான ஆரோக்கியத்திற்கும் உடனடி அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பீர்களா என சர்வதேச தலைவர்களுக்கு சவால் விட வேண்டும்” என்றார் அவர்.

ஊட்டச்சத்து குறைபாடு மோசமடையும்

வெப்பநிலை அதிகரிக்கும் போது, அறுவடை மகசூல் குறைந்துவிடும் - இதனால் உணவு விலை அதிகரித்து, அது ஏழைகளுக்கு உணவுப் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். கைக்குழந்தைகள், குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் அது தொடர்புடைய உடல்நலப் பிரச்சினைகளான வளர்ச்சி குறைபாடு, பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்புகள் மற்றும் நீண்டகால வளர்ச்சி பிரச்சினைகள் ஆகியவற்றால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது.

கடந்த 30 ஆண்டுகளில், தானியங்களின் உலகளாவிய மகசூல் திறன் - மக்காச்சோளம் 4%, குளிர்கால கோதுமை 6%, சோயாபீன் 3% மற்றும் அரிசி 4% என அதிகரித்துள்ளது. இந்தியாவில் மக்காச்சோளம் மற்றும் அரிசியின் சராசரி மகசூல் திறன் கடந்த 58 ஆண்டுகளில் (1960களில் இருந்து) கிட்டத்தட்ட 2% குறைந்துள்ளது; ஊட்டச்சத்து குறைபாடு ஏற்கனவே ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் இடையே மூன்றில் இரண்டு பங்கு இறப்புகளுக்கு காரணமாக உள்ளது என்பதையும் அறிக்கை தெரிவிக்கிறது.

காலநிலை மாற்றம் இந்தியாவின் விவசாய உற்பத்தியைக் குறைத்து வருகிறது என்று சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவன குறியீடு தெரிவிப்பதாக, மார்ச் 22, 2018இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது. குறியீட்டு மதிப்பெண்கள் 2010 நிலைகளுக்கு எதிராக உள்ளன: 2010 இல் வெளியீடு குறியீட்டில் ‘1.0’ எனக் கருதப்பட்டால், அது காலநிலை மாற்றத்தின் விளைவுகள் இல்லாமல் 2030 க்குள் ‘1.63’ ஆக அதிகரிக்கக்கூடும். ஆனால் வெப்பநிலை உயர்வு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டால், வெளியீடு குறியீட்டில் ‘1.56’ என்று மட்டுமே சொல்ல முடியும், முந்தைய நிலையை விட ஏழு புள்ளிகள் குறைவாக இருக்கும் என்று அறிக்கை கூறியுள்ளது.

இதேபோல், 2030 ஆம் ஆண்டில் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் பசியோடு இருப்பவர்களின் எண்ணிக்கை 22.5% அதிகரித்து, 9.05 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது; இது, தாக்கம் இல்லாவிடில் 7.39 கோடி என்பதைவிட அதிகம்.

காலநிலை மாற்றத்தால் நாடுகளில் மகசூல் குறைவதோடு, உணவின் ஊட்டச்சத்து உள்ளடக்கத்தைக் குறைத்து, உணவுப்பாதுகாப்பின்மை, கால்நடைகளின் வளர்ச்சியையும் உற்பத்தித்திறனையும் பாதிக்கும் என்று, ஐ.நா. காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச அரசு குழுவின் (ஐபிசிசி) சமீபத்திய சிறப்பு அறிக்கை தெரிவிக்கிறது. காலநிலை மாற்றத்தால் தானியங்களின் விலை 2050க்குள் 23% வரை உயரக்கூடும்; இது, ஏழைகளுக்கு கட்டுப்படியாகாது என, செப்டம்பர் 2, 2019 இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.

நோய் ஏற்படுவதற்கான கொடிய தாக்கம்

அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் மழை பெய்வதில் உள்ள மாற்றங்கள், குழந்தைகளை தொற்று நோய்கள் ஆபத்துக்கு ஆளாக நேரிடும்.கடந்த 30 ஆண்டுகளில், உலகளவில் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் விப்ரியோ பாக்டீரியாக்களின் எண்ணிக்கை, காலநிலை மாறுபாடு நாட்களில் இரு மடங்காக அதிகரித்ததாக, லான்செட் அறிக்கை கூறியுள்ளது.

இதேபோல், மாறிவரும் வானிலை முறைகள் விப்ரியோ காலரா பாக்டீரியாக்களுக்கு சாதகமான சூழலை உருவாக்குகின்றன; 1980 களின் முற்பகுதியில் இருந்து உலகளாவிய பொருந்தக்கூடிய தன்மை கிட்டத்தட்ட 10% உயர்ந்துள்ளது. இது, நோய் தொடர்ந்து ஏற்படாத நாடுகளில் காலரா பரவும் வாய்ப்பை அதிகரிக்கிறது. இந்தியாவில், 1980களின் முற்பகுதியில் இருந்து இந்த நோய் ஆண்டுக்கு 3% அதிகரித்து வருகிறது; காலநிலை மாற்றம், இதை மேலும் அதிகரிக்கக்கூடும்.

காலநிலை மாற்றத்தால் கொசுக்களால் உலகில் மிக வேகமாக பரவும் வைரஸ் நோயாக டெங்கு மாறியுள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2000 ஆண்டு முதல் 10 பேரில் ஒன்பது பேர் டெங்கு பரவலால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். உலக மக்கள்தொகையில் பாதி பேர் இப்போது ஆபத்தில் உள்ளனர்.

காற்றின் தரம் இதயம், நுரையீரல் ஆரோக்கியத்தை பாதிக்கும்

வளரிளம் பருவம், வயதுவந்த பருவத்தில், இன்று பிறக்கும் குழந்தைகள் புதைபடிவ எரிபொருட்களால் அதிக நச்சுக்காற்றை சுவாசிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்; இது, முன்பு நாம் கூறியது போல், வெப்பநிலை அதிகரிப்பால் மோசமடைகிறது. குழந்தைகளின் நுரையீரல் இன்னும் வளர வேண்டிய நிலையில் இது இன்னும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பிற்கால வாழ்க்கையில், நுரையீரல் செயல்பாடு குறைதல், ஆஸ்துமா, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற அபாயத்தை, இது அதிகரிக்கும்.

புதைபடிவ எரிபொருட்களில் இருந்து உலகளாவிய கார்பன் உமிழ்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது; இது, 2016-2018ஆம் ஆண்டுக்கு இடையில் 2.6% அதிகரித்துள்ளது. நிலக்கரியில் இருந்து மின்சார விநியோகமும் அதிகரித்து வருகிறது; இது, 2016-2018 க்கு இடையில் 1.7% அதிகரித்துள்ளது. இது முன்பிருந்த குறைந்த போக்கை மாற்றியுள்ளது.

காற்றில் நுண் துகள்களின் அளவு பி.எம்.(அதாவது இரத்த ஓட்டத்தில் கலந்து நோயாளியாக்கும் அல்லது கொல்லக்கூடிய மனித முடியை விட 30 மடங்கு மெல்லிய துகள்கள்) காரணமாக 2017 ஆம் ஆண்டில் உலகளவில் 29 லட்சம் இறப்புகள் நிகழ்ந்தன. 2016 ஆம் ஆண்டில் பி.எம். 2.5 (2.5 மைக்ரோகிராம் வரை அளவிடும் துகள்கள்) இல் இருந்து 440,000 க்கும் மேற்பட்ட மரணங்களுக்கு நிலக்கரி பங்களித்தது; நிலக்கரி எரிப்பதால் வெளிவரும் வரும் அனைத்து மாசுபடுத்தல்களையும் கருத்தில் கொண்டால், 10 லட்சத்துக்கும் அதிகமான இறப்புகள் ஏற்படக்கூடும்.

இந்தியாவின் பி.எம். 2.5 நிலைகள், உலகின் நான்காவது மிக அதிகபட்சம்; மற்றும் உலக சுகாதார அமைப்பின் பாதுகாப்பான வரம்பை விட ஒன்பது மடங்கு அதிகமாகும். இது இந்தியாவை உலகின் மிகவும் மாசுபடுத்தும் நாடுகளில் ஒன்றாக்கியுள்ளது. இந்தியாவின் 14 நகரங்கள், உலகின் 20 மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.

கடந்த 2016இல், இந்தியாவில் 5,29,500 க்கும் மேற்பட்ட மரணங்களுக்கு பி.எம். 2.5 அதிகம் இருந்தது காரணமானது - இதில் 97,400 க்கும் மேற்பட்டவைக்கு நிலக்கரி காரணமாக அமைந்தது.

வளரிளம் பருவத்தினரின் வாழ்க்கையில் தாக்கம் ஏற்படுத்தும் தீவிர வானிலை நிகழ்வுகள்

இன்று பிறக்கும் ஒரு குழந்தை, தனது பிற்கால வாழ்க்கையில் கடும் வெள்ளம், மோசமான வறட்சி, காட்டுத்தீ போன்ற ஆபத்துகளை அதிகம் எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. லான்செட் அறிக்கையின்படி, 196 நாடுகளில் 152இல், 2001-2004 இடையே, காட்டுத்தீக்கு பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தியாவில் மட்டும் 2.1 லட்சத்திற்கும் அதிகமான காட்டுத்தீ, சீனாவில் 1.7 லட்சத்திற்கும் அதிகரித்துள்ளது; இதனால் இறப்புகள், சுவாச நோய், வீடு இழப்புகள் ஏற்பட்டதாக, அறிக்கை தெரிவிக்கிறது.

காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட ஒருவரது பொருளாதாரச்சுமை, பூகம்பங்களை விட இரண்டு மடங்கு அதிகமாகும்; இது, வெள்ளத்தை விட 48 மடங்கு அதிகமாகும். இருப்பினும், உலகளவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை, காட்டுத்தீயை விட மிக அதிகம். அதிகரிக்கும் வெப்பநிலை, துருவங்களில் பனி உருகுதல் உள்ளிட்ட காலநிலை மாற்றங்கள், வெப்பம் மற்றும் வறட்சிக்கு வழிகோலுகிறது. இது, காட்டுத்தீ அபாயத்தை அதிகரிக்கும் என்று அறிக்கை தெரிவித்துள்ளது.

வெப்பம் மிகுந்த ஆண்டுகளில் 4வது அதிகபட்சமாக, 2018 ஆம் ஆண்டில் உலகளவில் வெப்ப அலைகளுக்கு 22 கோடி மக்கள் “சாதனை அளவாக” பாதிக்கப்பட்டனர். இது 2017இன் 6.3 கோடியைவிட, 2015இன் 1.1 கோடியைவிட அதிகமாகும். 2018 ஆம் ஆண்டில், வெப்ப அனல்காற்றின் வெளிப்பாடு எண்ணிக்கை அதிகரித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும் - இந்த ஆண்டில் கூடுதலாக 4.5 கோடி வெளிப்பாடுகள் இருந்துள்ளன.

நாள்பட்ட சுகாதார நிலைமைகளை கொண்ட பழைய நகரவாசிகள் பக்கவாதம் மற்றும் சிறுநீரக நோய் போன்ற வெப்பம் தொடர்பான நோய்களுக்கு மிகவும் பாதிக்கப்படுகின்றனர். நீண்ட வெப்ப அலைகள் உலகளாவிய தொழிலாளர் திறனை பாதிக்கும் என்று அறிக்கை எச்சரிக்கிறது. உலகளவில் கடும் வெப்பம் காரணமாக 2000 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2018இல் 4500 கோடி கூடுதல் மணிநேர வேலைகளை இழக்கச் செய்துள்ளது. இந்தியாவில், 2000 ஆம் ஆண்டில் இருந்து கடும் வெப்பத்தால், காரணமாக 2200 கோடி கூடுதல் மணிநேர வேலை இழப்பு ஏற்பட்டது; இதில், விவசாயத்தில் மட்டும் 1200 கோடி மணி நேரம் அதாவது, 54% வேலை நேரத்தை இழந்தது.

(திரிபாதி, இந்தியா ஸ்பெண்ட் செய்திப் பணியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.