பெங்களூரு (கர்நாடகா), முசோனி (மேற்கு வங்கம்): நாடக இயக்குனரான நிமி ரவிச்சந்திரன், 43, பள்ளிகளில் நாடகம் கற்பிக்க இரு ஆண்டுகளுக்கு முன் அனுமதி கிடைத்தபோது, உள்ளூர் கன்னட மொழியில் அவர்களுக்கு கற்பிப்பது போதுமானது என்று நம்பினார். ஆனால், பெங்களூரு மராத்தஹள்ளி பள்ளியின் ஐந்தாம் வகுப்பில் ஒருவரை தவிர அனைவரும் வங்க மொழியில் பேசியதை கண்டார்.

“அவர்களில் பெரும்பாலானவர்கள் மேற்கு வங்கத்தில் இருந்து வந்ததாக தெரிவித்தனர். சொந்த வீட்டில் இருந்து நீண்ட தொலைவில் அவர்கள் இங்கு வந்திருப்பது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது” என்கிறார் ரவிச்சந்திரன். அவர் இந்தியில் பாடம் நடந்த தொடங்கியபோது, இந்தி தெரிந்த குழந்தைகளில் சிலர் தங்களின் கதைகளை சொல்ல தொடங்கினர்.

“அவர்கள், தங்களது வீடுகளின் அருகே இருந்த மரங்கள், ஒற்றுமையாக வசித்து வந்ததை பற்றியும், சுத்தமான காற்றை பற்றி பேசினார்கள். அவர்கள் தங்களின் வீடுகளை இழந்துள்ளனர்” என்று ரவிச்சந்திரன் நினைவு கூறுகிறார்.

ஏறக்குறைய ஒரு மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள சுந்தரவன டெல்டா பகுதியில், கங்கை, பிரம்மபுத்திரா மற்றும் மேக்னா ஆறுகள் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. மூன்று ஆறுகளின் 100 கோடி டன் வண்டல்களை கொண்டிருப்பதால், இப்பகுதி வளமிக்கதாகும். இந்தியாவின் 40% சுந்தரவனக்காடுகள் -- இது உலகின் மிகப்பெரிய சதுப்பு நிலக்காடு; கோவாவை விட மூன்று மடங்கு பெரியது-- இதன் எஞ்சிய பகுதிகள் வங்கதேசத்தில் உள்ளது.

சுந்தரவனம் (இதன் பொருள் “அழகிய காடு”) காடுகள், யுனெஸ்கோவின் 209 இயற்கை, பாரம்பரிய புராதான பட்டியலில் இடம் பெற்றுள்ளது. "அதன் பிராந்திய, கடல் மற்றும் நீர் வாழ்விடங்களில் பல்லுயிரியலின் விதிவிலக்கான அளவில் உள்ளது" என்கிறார் அவர்.

கடந்த 40 ஆண்டுகளில் சுந்தரன வனக்காடுகளில் 220 சதுர கி.மீ. -- இது ஏறத்தாழ கொல்கத்தாவின் பரப்புக்கு சமம் -- கடலிடம் இழந்துவிட்டது என்று ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் கடலியல் துறை இயக்குனர் சுகதா ஹஸ்ரா கூறுகிறார்.

கடல் மட்டம் உயர்ந்து வருவதால், இத்தீவுகள் மூழ்கக் தொடங்கி அங்கிருந்தவர்களும், புலம் பெயர்ந்து வந்த வங்கதேசத்தவர்களும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கு குடிபெயர தொடங்கினர்.

இவர்கள் அனைவருமே சுற்றுச்சூழல் பாதிப்பால் குடியேறியவர்கள் இல்லை என்ற போதும், இவ்வாறு குடியேறியவர்கள் குறித்த ஆவணங்கள் இல்லாததால் எண்ணிக்கையை கணக்கிடுவது கடினமாக உள்ளது.

ஆனால் இவ்வாறு புலம் பெயர்ந்து தென்மேற்கு பகுதியில் இருந்து 2,000 கிமீ தொலைவில் இருந்து வந்துள்ளனர். பெங்களூருவில் உள்ள கன்னட மொழி பள்ளிகள் சிலவற்றில் 40% வரை வங்கமொழி பேசும் சிறுவர்கள் பயின்று வருகின்றனர் என்று, இத்தகைய குழந்தைகளுக்கு உதவும் பொருட்டு பாலம் பள்ளிகளை நடத்தி வரும் ஸ்மிருதி அறக்கட்டளை தெரிவிக்கிறது.

சுந்தரவனப்பகுதிகளில் இருந்து இடம் பெயர்ந்து, பெங்களூருவின் மராத்தஹள்ளி குடிசைப்பகுதிகளில் வசிக்கும் இத்தகைய புலம்பெயர்ந்தவர்கள் சிலரை இந்தியா ஸ்பெண்ட் கண்டறிந்தது. இந்த ஆய்வில், சுந்தரவனக்காடுகள் மட்டுமல்ல மேற்கு வங்கத்தின் பல மாவட்டங்களும் பருவநிலை மாற்றத்தால் மோசமாக பாதிக்கப்படிருப்பது தெரிய வந்துள்ளது.

உலகம் முழுவதும் 2060 ஆம் ஆண்டு வாக்கில் 140 கோடி மக்கள், சுற்றுச்சூழல் பாதிப்புகளால் புலம்பெயர வாய்ப்புள்ளது; இது உள்நாட்டளவில் மட்டுமின்றி எல்லை கடந்தும் செல்லும் சூழலை ஏற்படுத்தக்கூடும். கடல் மட்ட அளவில் வருடாந்திர அதிகரிப்பு விகிதம் 2100 ஆம் ஆண்டில் மூன்று மடங்கு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இதனால் விவசாயம், வாழ்வாதாரம் என தாழ்வான பகுதிகளை சார்ந்திருப்பவை, சுந்தரவனக்காடுகளை போலவே நீடித்திருக்க வாய்ப்பில்லை.

பருவநிலை மாற்றம் மக்களின் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது என்ற எமது தொடரில் இது மூன்றாவது கட்டுரை (நீங்கள் முதல் கட்டுரையை இங்கேயும், இரண்டாவதை இங்கேயும் படிக்கலாம்).

கள நிலவரங்களை, பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் இந்திய பகுதிகளில் இருந்து வழங்குவதோடு, சமீபத்திய அறிவியல் ஆய்வு முடிவுகள், பருவநிலை மாற்றத்தை ஏற்று மக்கள் வாழும் முறைகளையும் இந்த தொடரில் நாம் காணலாம்.

உலகின் மிகப்பெரிய சதுப்பு நிலப்பகுதிகளை கொண்ட சுந்தரவனம் டெல்டா பகுதி, புவி வெப்பம் காரணமாக கடல் மட்டம் அதிகரித்து, ஆபத்தை எதிர்நோக்கி இருக்கிறது.

இந்தியாவில் 10-ல் ஒருவர் இதுபோன்ற தாழ்வான கடற்கரை பகுதிகளில் வசிக்கின்றனர். சீனா, வங்கதேசம், இந்தோனேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுடன் இந்தியாவிலும் மக்கள்தொகை அதிகரித்து வருவதால், வெள்ளப்பெருக்கின் தாக்கங்கள் அதிகளவில் வெளிப்படுவதாக, 2015 ஆய்வு தெரிவிக்கிறது.

புவி வெப்பம் ஒரு டிகிரி செல்சியஸ் உயருவதர்கு, மனித செயல்பாடுகள் காரணம் என்று ஏற்கனவே எச்சரித்திருப்பதை, பருவநிலை மாற்றத்திற்கான சர்வதேசக்குழு -ஐ.பி.சி.சி. (IPCC) குழுவின் 2018 செப்டம்பர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றம் குறித்த அறிவியல் மதிப்பீடுகளை ஆய்வு செய்யும் உலகளாவிய இக்குழுவில் 195 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

“உண்மையில், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் அதிக வெப்பம் 90% கடற்பரப்பில் நிகழ்கிறது. சூடாகும் போது வெப்பமானி அளவு அதிகரிப்பது போல், அதிக வெப்பத்தால் கடல் மட்டமும் உயர்கிறது” என்று, ஆராய்ச்சியாளரும், கடல் மட்டம் அதிகரிப்பு தொடர்பான ஐ.பி.சி.சி. ஐந்தாவது மதிப்பீடு அறிக்கையின் முன்னணி ஆசிரியர்களில் ஒருவருமான ஜான் சர்ச் தெரிவித்தார்.

அதிகரிக்கும் வெப்பத்தால் துருவப்பகுதிகளில் இல்லாத இமயமலை போன்ற பகுதிகளில் பனிக்கட்டி உருகுவது, கிரீன்லாந்து, அண்டார்டிகா பகுதிகளில் பனிக்கட்டிகள் கரைவது போன்றவற்றால் உலக அளவில் கடல் மட்டத்தை அதிகரிக்க செய்கிறது.

‘‘தளர்த்தப்படாத உமிழ்வுகளால், 2100 ஆண்டில் கடல் மட்டம் உயர்வது ஒரு மீட்டர் அளவில் இருக்கும்” என்று சர்ச் தெரிவித்தார். கிரீன்லாந்தின் முழு பனிப்போர்வை முழுவதும் உருகினால், அதுமட்டுமே உலக கடல் மட்டம் ஏழு மீட்டர் அதிகரிக்க காரணமாக இருக்கும். அண்டார்டிகா பகுதியில் பனி முழுவதும் கடல் மட்டம் மேலும் 55 மீட்டர் உயரக்கூடும்.

ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) வெளியிட்ட ஒரு வீடியோ, கடல் மட்டம் உயரக்காரணமாக பங்களிப்புகளை விளக்குகிறது.

கடல் மட்டம் அதிகரிப்புக்கு நூற்றாண்டு வரை என காத்திருக்க வேண்டிய தேவையில்லை; 2100 ஆம் ஆண்டுக்கு முன்பே அது நடக்கும். சிறு தீவுகள், தாழ்வான கடலோர பகுதிகள், டெல்டாக்களில் அதிக கடல் நீர் புகுந்து விளை நிலங்களை உவர்ப்பு தன்மையாக்கி சாகுபடிக்கு லாயக்கற்றதாக மாற்றிவிடும். அப்பகுதியில் அடிக்கடி வெள்ளம், புயல், உள்கட்டமைப்புகள் சேதக்கு இலக்காகின்றன. மிக மோசமானது என்னவென்றால், வீடு என்று அவர்களால் அழைக்கப்படும் பகுதியானது, தண்ணீருக்குள் மூழ்கி இருக்கும்.

சுந்தரவனத்தின் இந்திய பகுதிகளில் ஆய்வு போதாது

சுந்தரவனத்தின் வங்கதேசப்பகுதியில் நிகழும் பருவநிலை மாற்றம் தொடர்பான நிகழ்வுகள் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இதன் இந்தியப் பகுதிகள் பற்றி நன்கு அறியப்படவில்லை என்று, கொல்கத்தாவில் உள்ள இந்திய சுற்றுச்சூழல் ஆய்வுகள் மற்றும் ஈரநில மேலாண்மை நிறுவனத்தின் (IESWM) கடலியல் ஆய்வாளர் செல்வின் பிச்சைக்கனி கூறுகிறார்.

சுந்தரவனம் பகுதியில் மாறிவரும் பருவநிலை மாற்றம் குறித்து, 2017-ல் பிச்சைக்கனி வெளியிட்ட புள்ளி விவரங்களில், அப்பகுதி நிலத்தில் உப்பு தன்மை அதிகரித்து வருவதையும், இதனால் அடிக்கடி புயல் சூறாவளிகள் ஏற்படுவதும் குறிப்பிடப்பட்டுள்ளது. மழைப்பொழிவு மாதிரிகள் ஏற்கனவே மாறிவிட்டன, விவசாயிகளுக்கு வழக்கமான சாகுபடி செய்வது கடினம் என்று அவரது ஆராய்ச்சிகளில் தெரிய வந்துள்ளது.

ஆனால் நாம் "எந்த முடிவுக்கும் வருவதற்கு, குறைந்தபட்சம் 20-25 ஆண்டுகளின் தரவுகள் தேவை.இப்பகுதியில் அதிகமான வானிலை நிலையங்களும், அதிக நிதியும் தேவை" என்ற அவர், இதுபற்றி மேலும் ஆராய்ச்சி செய்ய வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார்.

புலம்பெயர்ந்தோருடன், பெற்றோர் இல்லாமல் வளரும் குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் முதியோர் குறைவு.

கொல்கத்தாவில் இருந்து சுந்தரவனம் டெல்டா பகுதிக்கு நான்கு மணி நேர கார் சவாரி செல்ல வேண்டியுள்ளது. முன்பெல்லாம் இங்கே கார் பயனற்ற ஒன்றாக இருந்தது. அங்கிருந்து முசோனி தீவை எட்டுவதற்கு சைக்கிள் ரிக்‌ஷாவில் மணி நேர பயணமும் அதை தொடர்ந்து நீர்நிலைகளை கடக்க, படகிலும் சென்றாக வேண்டும்.

பெரிய டெல்டா தீவுகளில் ஒன்றும், 25,000 மக்கள் கொண்டதுமான முசோனி தீவு, பத்து ஆண்டுகளாக பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் ஓராண்டுக்கு முன் மின்சார வசதியை பெற்றது.

சுந்தரவனம் டெல்டாவில் உள்ள முசோனி தீவிரில் 25,000 பேர் வசிக்கின்றனர். அடிக்கடி மழை, அதிகரிக்கும் கடல் மட்டம் போன்ற இடர்பாடுகளால் பலர் இங்கிருந்து புலம் பெயர செய்கிறது.

ஷேக் சுபீ, 27, முசோனியில் வளர்ந்தவர். வங்காள விரிகுடாவை நோக்கியவாறு அவரது வீடு கடலோரத்தில் உள்ளது. ”நாங்கள் அரிசி, மிளகாய் போன்றவற்றை சாகுபடி செய்து வந்தோம். ஆனால், பத்தாண்டுகளுக்கு முன்பு தொடங்கி அடிக்கடி வெள்ளம் ஏற்படுகிறது. அதன் பிறகு பயிர்கள் வளருவதில்லை” என்று தனது 3 வயது மகன் அப்துல் ரஹ்மானை தோளில் சுமந்தபடி கூறுகிறார் ஷேக் சுபீ. உப்பு நீரால் அவர்களின் நிலம் மலட்டுத்தன்மை கொண்டதாக மாறியதால் அவர்கள் மீன் பிடிக்க கற்றுக் கொண்டனர். இப்போது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, 2000 கி.மீ. தொலைவில் உள்ள கேரளாவுக்கு கட்டட தொழிலுக்கு சென்று தினமும் ரூ.300 சம்பாதிக்கிறார்.

சுபீயை போலவே, இதுபோன்ற சுற்றுச்சூழல் புலம்பெயர்வோரில் 96% பேர் இந்தியாவின் பல பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர் என்று, இங்குள்ள 1,315 வீடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. டெல்டா பகுதியில் “பருவ நிலை மாற்றமும் & பாதிப்பும்” என்ற தலைப்பில், இங்கிலாந்து, கானா, வங்கதேசம், இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சியாளர்கள் கூட்டமைப்பு (DECCMA) சார்பில் இடம்பெயர்வு மற்றும் ஏற்றுக் கொள்ளுதல் மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு குடியேறியவர்களில் 83% ஆண்கள் மற்றும் 17% பெண்கள். பெரும்பாலானவர்கள் 21 முதல் 30 வயது வரையுள்ள இளைஞர்கள். விவசாயம் செய்ய இனி வழியில்லை என்பதால், வேலை தேடி செல்வதாக, ஆய்வில் பங்கேற்ற இளைஞர்கள் தெரிவித்தனர். பெண்கள் தங்கள் கணவருடனோ அல்லது குடும்பத்தினருடனோ இடம் பெயர்கின்றனர்.

இவர்களுடன் வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் பெரும்பாலும் பெண்களே உள்ளனர்.

"புலம் பெயருவோரில் இரண்டு வகையினர் உள்ளனர் - ஒன்று, முன்கூட்டியே கடற்கரையில் இருந்து செல்வது என்று திட்டமிட்டவர்கள்; மற்றொன்று, வேறு வழி எதுவும் தெரியாத சூழலில் மாற்று வாய்ப்பின்றி புலம் பெயருவோர். “சுந்தர வனம் பகுதியில் இரண்டாம் வகையினரையே பார்க்க முடிந்தது” என்று கொல்கத்தா வசந்திதேவி கல்லூரி முதல்வரும், சுற்றுச்சூழல் பொருளாதார ஆய்வாளருமான இந்திரிலா குஹா தெரிவித்தார்.

பெற்றோர் இல்லாத குழந்தைகள், முதியவர் கவனிப்பில் வளருவது, ஏழை பெண்கள் சமூக விரோதிகளுக்கு இலக்காவது போன்றவை, இத்தகைய சூழலால் ஏற்பட்டு வரும் விளைவுகளாகும் என்கிறார் குஹா.

குடும்பத்தை விட்டு ஒருவர் பிரிந்துவிட்டால், பிறகு அவரது வாழ்க்கையே கடினமான பாதையாகிவிடுகிறது. பெங்களூரு பிரிட்ஜ் பள்ளிகளில் படித்து வரும் இத்தகைய குழந்தைகள், நகர வாழ்க்கைக்கு தங்களை மாற்றிக் கொள்ளவும், மொழி பிரச்சனையும் சமாளிக்க கடுமையாக போராடுகின்றனர். வேலை தேடி பெற்றோர் செல்வதால் ஏற்படும் முதலாவது பாதிப்பு, குழந்தைகளின் கல்வி தான்.

டெல்டா பகுதியில் “பருவ நிலை மாற்றமும் & பாதிப்பும்” என்ற தலைப்பில் இங்கிலாந்து, கானா, வங்கதேசம், இந்திய பல்கலை ஆராய்ச்சியாளர்கள் கூட்டமைப்பு (DECCMA) சார்பில் இடம்பெயர்வு மற்றும் ஏற்றுக் கொள்ளுதல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆதாரம்: https://generic.wordpress.soton.ac.uk/deccma/

அதிகரிக்கும் கடல் மட்டம்; பழகிக்கொண்ட குடியிருப்பாளர்கள்

அதிகரித்து வரும் கடலில் சீறிய அலைகளுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சுபீயின் வீடு கரையத் தொடங்கியது. உயர்ந்த அலைகளின் விளிம்பு அவரது வீட்டை தொட்டுச் செல்கிறது. இந்தியா ஸ்பெண்ட் குழு சென்றிருந்த அலைகள் குறைந்த நேரத்தில், அவர்கள் வீட்டை பார்ப்பது சுற்றுலா பயணிகள் உலகை பார்ப்பது போன்ற தோற்றத்தை தந்தது.

வேறு வழி தெரியாமல் சுபீ, அவரது மனைவி, மகள் ஆகியோர் அருகாமையில் வசிக்கின்றனர். “வேறு வீடு கட்டுவதற்கு எங்களிடம் பணம் இல்லை; நாங்கள் எங்கே செல்வது?” என்று கண்ணீரோடு அவர் கேட்கிறார்.

ஷேக் சுபீ, 27 தனது குழந்தையுடன் சேதமடைந்தை வீட்டை பார்க்கிறார். இவர், 2000 கி.மீ. கடந்து கேரளாவில் கட்டட கூலித் தொழிலாளியாக வேலை பார்க்கிறார்.

”கடல் மட்டம் அதிகரிப்பு, கடல் அரிப்பால் பாதிக்கப்படும் மக்களின் புனரமைப்பு, மறுவாழ்வுக்கு இதுவரை எவ்வித கொள்கைகளும் வகுக்கப்படவில்லை” என்று ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் ஹஸ்ரா கூறுகிறார்.

பலத்த மழைப்பொழிவு மற்றும் கடுமையான சூறாவளி புயல்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இந்திய சராசரி ஆண்டு மழைப்பொழிவான 801-1,500 மி.மீ. உடன் ஒப்பிடும்போது, இப்பகுதி 1,501 முதல் 2,500 மி.மீ. வரை மழை பெற்று வருகிறது.

குடிபெயராதவர்களை, இந்த சூழலை ஏற்று பழகச் செய்ய வேண்டும். திருமணமாகி 12 ஆண்டுகளாகும் ஷபீர் ஷேக் 27, குஷ்பானு பீவி 25 இருவரும், தங்களுக்காகவும், தங்களின் மூன்று குழந்தைகளுக்காகவும், உயரமான பகுதியில் வீடு கட்டி வருகின்றனர்.

“வெள்ளத்தின் போது அடுப்பு ஈரமாகிவிடுகிறது. எனவே, புதிய வீட்டில், தண்ணீர் தொடாதபடி உயரமான இடத்தில் அடுப்பு அமைக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்று குஷ்பானு தெரிவிக்கிறார். இங்குள்ள பலரும் திறந்த வெளியில் மண் அடுப்பும், விறகையும் பயன்படுத்துகின்றனர். வெள்ளத்தின் போது இதை பயன்படுத்த முடிவதில்லை.

ஷபீர் ஷேக், அவரது மனைவி குஷ்பானு இருவரின் புதிய வீடு வெள்ளத்தால் பாதிக்காதவாறு, உயரமான பகுதியில் கட்டப்படுகிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்கரையோரம் தடுப்புகள் அமைத்தல், கூடாரங்களை அமைத்து தருவதன் மூலம், அவர்களுக்கு அரசு உதவி புரிகிறது. எனினும், குடியிருப்பாளர்கள் இடம் பெயருவதை தடுக்கவோ, அவர்களின் மறுவாழ்வுக்கோ நீண்டகால கொள்கை எதுவும் இல்லை.

பருவநிலை மாற்றங்களை ஏற்க தயாராகுதல்: சுந்தரவனம் டெல்டா

சுந்தரவனத்தில் மறுவாழ்வு மற்றும் ஏழை சுகாதாரம் என்ற இரட்டை சுமை

உலக அளவில் வெள்ளப் பெருக்கு அபாயத்தை எதிர் கொண்டிருக்கும் தாழ்வான கடலோர பகுதிகள் பெரும்பாலும் வளர்ச்சியடையாத அல்லது வளர்ந்து வரும் நாடுகளிலேயே உள்ளன.

முசோனி பகுதி அமைந்துள்ள தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் மூன்றில் ஒரு பகுதியினர் வயதுக்கேற்ற வளர்ச்சியின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கும் மேற்பட்ட வீடுகளில் போதிய சுகாதார, துப்புரவு வசதி இல்லை; 10 பெண்களில் ஆறு பேர் ரத்தச்சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் கட்டமைப்புகளை மாவட்ட நிர்வாகம் இன்னமும் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

கரையோரம் தடுப்புச்சுவர் உருவாக்க பயன்படுத்தப்படும் பொருள் பொறுத்து, ஒரு கி.மீ. நீளம் கொண்ட பிரிவை ஏற்படுத்த ஒரு கோடி ரூபாய் வரை செலவு ஆகும்.

கடல் மட்டம் அதிகரித்து வரும் நிலையில், பெரியசுவர் எழுப்பி, தற்காப்பு நடவடிக்கை எடுக்குமாறு உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பருவநிலை மாற்றத்திற்கு எதிராக இது நிரந்தர தீர்வல்ல என்பதை அவர்கள் அறிந்துள்ளனர்.

பல்லுயிரியலுக்கு அச்சுறுத்தல்

சுந்தரவனப்பகுதியை, 200 க்கும் மேற்பட்ட தாவர இனங்கள், 400 மீன்கள், 300க்கும் அதிகமான பறவை இனங்கள், தாவர வகைகள், பூஞ்சை, பாக்டீரியா, மிதவைப் பிராணிகளின், ஊர்வன, நீர்நில வாழ்வன உள்ளிட்டவை வீடாகக் கொண்டவை. சுந்தரவன காடுகளில் உள்ள பல்லுயிரி இனங்களின் தன்மை, இங்குள்ள உப்புத்தன்மையைப் பொறுத்து வேறுபடுகிறது. இந்திய மலைப்பாம்பு, பெங்கால் ராயல் புலி, முதலைகள் உள்ளிட்ட அச்சுறுத்தும் விலங்கள் பலவற்றின் புகலிடமாகவும் சுந்தரவன காடுகள் உள்ளன.

மாறுபடும் தண்ணீரின் வெப்பநிலை மற்றும் அதிகரித்த உப்புத்தன்மை மற்றும் அமிலத்தன்மை ஆகியவற்றால் ஏற்கனவே இப்பகுதியின் பல்லுயிரியல் சூழலை பாதித்துள்ளது என, கொல்கத்தா பல்கலை கடல் அறிவியல் துறை மற்றும் கொல்கத்தா இந்திய கல்வி அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் உயிரிய அறிவியல் துறை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கடல் மட்டங்கள் அதிகரித்து பல்லுயிரினத்தை பாதிக்கும் சூழலில், மனித நடவடிக்கைகளே இதற்கு காரணம் என்று நிபுணர்கள் குற்றம்சாட்டுகின்றனர். “உதாரணத்திற்கு பெரிய ஆறுகள், நீர்வரத்துகளில் உள்ள அழிக்க முடியாத கழிவு பொருட்களை கடலில் கலப்பதை தடுக்காவிட்டால், அவை டெல்டா பகுதியை வந்தடையும்” என்று உலக வனவிலங்கு நிதியத்தின் காலநிலை மாற்றம் ஏற்பது தொடர்பான மூத்த ஆலோசகர் அனுராக் தண்டா கூறினார்.

“தெஹ்ரி அணை (உத்தரகண்ட்) மற்றும் ஃபராகாக் பாறை (முர்ஷிதாபாத், மேற்கு வங்கம்) ஆகியன கங்கையின் கழிவுகளை தடுக்கும் வகையில் ஆயிரம் தடுப்புகளை கொண்டுள்ளன. தண்ணீரை திசை திருப்புதல் அல்லது நீரை தேக்கி வைத்து விடுதல் என்பது குறைவான கழிவுகளையே எடுத்து வருகிறது” என்று அவர் விளக்கினார்.

கடல் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், இயற்கை மற்றும் மனிதனுக்கான சிக்கல்கள் அதிகரித்த வண்ணம் இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். “இப்போது கேள்வி, அது நடக்கிறதா, இல்லையா என்பதல்ல; அது எவ்வளவு சீக்கிரம் நடக்கும் என்பது தான்” என்று ஐ.பி.சி.சி. சமீபத்திய அறிக்கையின் இணை ஆசிரியர் சர்ச் தெரிவித்தார்.

சரி, கடலோரப் பகுதிகளில் வாழும் மக்களின் பாதுகாப்புக்கு என்ன வழி? அரசு உதவியுடன் அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவது தான் முக்கிய வாய்ப்பாக உள்ளது என்கிறார் ஹஸ்ரா. “மொத்த மக்களையும் முழுமையாக நகர்த்துவதைவிட தடுப்புச்சுவர்களை கட்டியெழுப்புவது பொருளாதார ரீதியாக நன்மை பயக்கும்”.

பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் இந்திய பகுதிகள் குறித்த தொடரில் இது மூன்றாவது பகுதி. முதல் பகுதியை இங்கேயும், இரண்டாம் பகுதியை இங்கேயும் படிக்கலாம்.

(திஷா ஷெட்டி, கொலம்பியா இதழியல் கல்வி நிறுவனத்தை சார்ந்தவர்; இந்தியா ஸ்பெண்ட்டில் பருவநிலை மாற்றம் குறித்த செய்திகளை வழங்குகிறார்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.