ஹொன்னாவர், கர்நாடகா: முதலில், 2011-ல் அவர்களின் நிலத்தை கடல் கபளீகரம் செய்தது. மூன்றாண்டுகளுக்கு பின் அவர்களின் வீட்டை கடல் சீற்றம் பதம் பார்த்தது. ஆபத்தை உணர்ந்து கொண்ட 40 வயது புத்வந்த் கார்வி, இடம் பெயர இதுவே தருணம் என்று உணர்ந்து கொண்டார்; ஆனால் அவரது வயதான பெற்றோர்கள் மறுக்கின்றனர்.

“தலைமுறைக்கு மேலாக இங்கு வாழ்ந்துவிட்டோம். இருக்கும் கொஞ்ச காலத்தையும் இங்கேயே செலவிட அவர்கள் விரும்புகின்றனர்” என்றார் கார்வி. இவர், அரபிக்கடலுக்கு சென்று மீன் பிடித்து வரும் மீனவர்.

கார்வியின் வீடு, மேற்கு கர்நாடகாவில், கடலோர பகுதியான ஹன்னோவர் அருகே கடலின் நீலத்தை வானத்தில் பிரதிபலிக்கும் பவினாகுர்வே கிராமம். அரபிக்கடலின் மணல் நிறைந்த கடற்கரையோரம் குறுக்கலான பகுதியில் இவரது வீடு உள்ளது. வலதுபுறம் பசவராஜ் துர்கா என்ற ஒரு பிரபலமான சுற்றுலாத்தீவு உள்ளது.

புட்நோட்: கர்நாடகாவின் பவினாகுர்வே கிராம கடற்கரை. தொலைவில் தெரிவது பசவராஜ் துர்கா தீவு. கடலோரப்பகுதி அரிப்பால் பாதிக்கப்பட்டு வருகிறது.

ஏழு ஆண்டுக்கு முன் கார்வியின் சிவப்பு நிற பெரிய செங்கற்களால் கட்டப்பட்ட வீட்டு சுவற்றை கடல் அலைகள் சேதப்படுத்தின. “ என் வீட்டை நாசப்படுத்திய கடல் அலைகள், மனிதர்களால் கடலில் கலக்கும் வீணான கழிவுகளை என் நிலத்தில் விட்டுச் சென்றன” என்றவாரே பிளாஸ்டிக் பாட்டில்களை கார்வி காட்டினார். கடற்கரை மணல் பரப்பும் கொஞ்சம் கொஞ்சமாக கடலில் மூழ்கத் தொடங்கின. கொஞ்சம் கொஞ்சமாக அவர்களது குடும்பத்திற்கு சொந்தமான ஆறு குண்டு நிலத்தை (ஒரு ஏக்கரில் 1/7 பகுதி) கடல் விழுங்க தொடங்கியது. இது, இரு படுக்கை அறை கொண்ட வீட்டைப்போல் ஆறு மடங்கு அதிகம்.

இந்திய கடலோரப்பகுதிகளில் வாழும் பல மில்லியன் பேருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கடந்த 1990 முதல் 2006 வரையிலான 26 ஆண்டுகளில் கடற்கரை நீளத்தில் 33% ஐ இந்தியா இழந்துள்ளதாக, மத்திய புவிசார் அறிவியல் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சென்னையில் உள்ள கடலோர ஆராய்ச்சிக்கான தேசிய மையம் (NCCR) வெளியிட்ட 2018 ஜூலை அறிக்கை தெரிவிக்கிறது.

பருவநிலை மாற்றம் மக்களை எவ்வாறு பாதிக்கிறது என்ற தொடரில் எங்களின் இரண்டாவது கட்டுரை இதுவாகும். (முதல் கட்டுரையை நீங்கள் இங்கே படிக்கலாம்). பருவநிலை மாற்றத்தால் பாதிக்கும் இந்திய பகுதிகளின் கள நிலவரத்தை, சமீபத்திய அறிவியல் ஆராய்ச்சி புள்ளி விவரங்களுடன் இத்தொடர் விவரிக்கிறது.

இந்தியாவின் கடற்கரை நீளம் 7500 கி.மீ.; இது அகமதாபாத் - கொல்காத்தா இடையிலான தொலைவைவிட மூன்றரை மடங்கு அதிகம். இது இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் சம அளவாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்பது மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள், 2 தீவு யூனியன் பிரதேசங்கள் கடலோரப் பகுதியை கொண்டுள்ளன. நாட்டின் 1.28 பில்லியன் மக்கள் தொகையில் 560 மில்லியன் பேர் அதாவது 43% பேர், கடலோர பிராந்தித்தில் வசிக்கின்றனர்.

கரையோரத்தில் 40%, நான்கு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் மட்டுமே உள்ளது. கடந்த 26 ஆண்டுகளில் மேற்கு வங்கம் 99 சதுர கி.மீ. நிலத்தை இழந்துள்ளது. இது மாநில கடற்கரையின் 63% ஆகும்; இது, 18,500 கால்பந்து மைதானங்கள் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளுக்கு சமம். புதுச்சேரி 57%, கேரளா 45%, தமிழ்நாடு 41% கடல் அரிப்பால் நிலத்தை இழந்துள்ளன.

பருவநிலை மாற்றம், கடல் மட்டம் உயர்ந்தல் என இயற்கையாலும், மனித செயல்பாடுகளாலும் (அதாவது அதிகரிக்கும் கட்டுமானம், ஆறுகளை பராமரிக்காதது, மணல் அள்ளுதல், சதுப்பு நிலங்களை அழித்தல்) இந்திய கடலோரப்பகுதிகள் பாதிப்புக்குள்ளாகி வருவதாக, அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

வளர்ந்து வரும் கட்டுமானங்கள், அதிகரிக்கும் வெப்பத்தால் கடற்கரைக்கு அச்சுறுத்தல்

இந்தியாவில் 5,264 அணைகள் உள்ளன; 437 அணைகள் கட்டப்பட்டு வருவதாக, மத்திய நீர்வள ஆணையம் (CWC) தெரிவிக்கிறது. இதில் மகாராஷ்டிராவில் 2,354, மத்தியப்பிரதேசத்தில் 906, குஜராத்தில் 632 அணைகள் உள்ளன. இந்த அணைகள் கடற்கரை வளங்களை பாதிக்கின்றன; ஆறுகள் இல்லையெனில் இயற்கை சமநிலை பாதிக்கும்.

மேலும், 13 முக்கிய துறைமுகங்கள், 46 மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் 187 சிறிய துறைமுகங்கள், பராமரிப்பு கட்டுமானங்கள் போன்றவை கடற்கரை வளத்தை அகற்றின. இத்தகைய வளங்கள் கடலோரத்திற்கு அரிதாகவே திரும்ப கிடைக்கின்றன.

இவை அனைத்து காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை இந்திய கடலோர பகுதிகளில் விட்டுச் சென்றன. ”காலநிலை மாற்றம் வங்காள விரிகுடா பகுதியில் ஒழுங்கற்ற வானிலை அமைப்பை உருவாக்குகிறது” என்று என்.சி.சி.ஆர். இயக்குனர் எம்.பி.ரமணமூர்த்தி தெரிவிக்கிறார். “கடல் மட்டம் உயர்வுக்கு சில சான்றுகள் உள்ளன. நீரால் சூழப்பட்டுள்ள லட்சத்தீவுகள், கடல் மட்டம் உயர்வால் கடல் அரிப்பை சந்தித்து வருகிறது” என்றார் அவர்.

உலக வெப்பமயமாதல், 2100 ஆம் ஆண்டிற்கு அப்பாலும் கடல் மட்டத்தை அதிகரிக்க செய்யும். புவி வெப்பமயமாதல் 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரித்தால், கடல் மட்டமானது, 500 மிலி கோக் பாட்டில்கள் நான்கை ஒன்றின் மீது ஒன்று அடுக்கி வைத்தது போன்ற உயரத்திற்கு இருக்கக்கூடும். இதற்கு அப்பாலும் பூமி வெப்பமடைந்தால், கடல் மட்டம் மேலும் அதிகரிக்கும் என, காலநிலை மாற்றம் குறித்த ஐ.நா. சர்வதேச அரசுக்குழுவின் அக்டோபர் மாத அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல் மட்டம் உயருவது என்பது, கார்வி போன்ற கடலோரப்பகுதிகளில் மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் நிலங்களில் விகிதாச்சார பாதிப்பு ஏற்படும் என்பதற்கான அறிகுறியாகும்.

கடந்த 2 ஆண்டுகளில் கார்வியின் வீடு கடல் நீரால் முழுமையாக சேதமடைந்தது. பெற்றோர் மறுத்துவிட்ட நிலையில் கார்வி தனது குடும்பத்தோடு அங்கிருந்து சென்றுவிட்டார். இப்போது அவர்கள் வாடகை வீட்டில் வசிக்கின்றனர்.

கையில் இருந்த கொஞ்சம் காசில் ஜன்னல் இல்லாத மண் சுவரில் இரு அறை கொண்ட சிறு வீடு கட்டினர். தாழ்வான கூரை கொண்ட அந்த வீட்டில் ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே நுழைய முடியும். இந்த வீட்டில் தான் கார்வியின் பெற்றோர் 2017-ல் அவர்கள் இறக்கும் வரை வாழ்ந்தனர்.

அரசால் நடப்பட்டிருந்த கற்களை கடந்து அலைகள் ஆர்பரித்து கொஞ்சம் கொஞ்சமாக கடக்க தொடங்கி, வீட்டின் சுவர்களையும் அரிக்க தொடங்கின. இப்போது அவர்களிம் பழைய வீட்டு முற்றிலுமாக கரைந்துவிட்டது. அரிதாக தனது வீட்டை பார்க்க வந்த கர்வீஸ், குப்பைக்கூளமாக அப்பகுதி இருப்பது கண்டு திகைத்தார். தசரா நாளில் வீட்டை பார்க்க சென்ற அவர், வீடு இருந்ததற்கான அடையாளமாக மிஞ்சியிருந்த துளசி மாடத்தை மட்டும் வழிபட்டு திரும்பினார். ஹொன்னாவரில் கார்வி போன்றவர்களுக்கு வீடும், நிலமும் மட்டுமே சொத்தாக இருந்தன. கார்வி போன்றவர்களுக்கு எதுவும் விட்டுச்செல்லாமல் அனைத்தையும் கடல் விழுங்கிவிட்டது.

பவினாகுர்வே கிராமத்தில் முன்பு அதிக விளைச்சல் தந்த நெல் வயல்கள் தற்போது பயிரிடப்படாமல் தரிசாக கிடக்கின்றன. கடலில் உப்புநீர் நிலத்தில் புகுந்து நிலத்தின் தன்மை கெட்டதால் எதையும் சாகுபடி செய்ய முடியாத நிலை உள்ளது.

பருவநிலை மாற்றத்தால் காற்றின் வேகம் அதிகரித்து, வழக்கத்திற்கு மாறாக அதிக உயரத்திற்கு அலைகள் எழும்புகின்றன. கடந்த 30 ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, அடுத்த 30 ஆண்டுகளில் கடல் அரிப்பானது 1.5 மடங்கு வேகமாக இருக்கும் என்று மும்பை ஐ.ஐ.டி. மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள பூகோள அறிவியல் படிப்புக்கான தேசிய மையம் இணைந்து 2016-ல் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலைகளுடன் போராடும் சுவர்கள்

இத்தகைய இயற்கையின் சவால்களுக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கடலோரப்பகுதிகளில் மேற்கொண்டு வரும் பல்வேறு கட்டுமான, பொறியியல் பணிகளே காரணமாகிறது. இது குறுகியகால தீர்வு தான் என்கிறார், கர்வார் மாவட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் பிராந்திய இயக்குனர் பிரசன்னா பட்கர். இம்மையம், ஹொன்னாவரையும் மேற்பார்வையிடுகிறது. அலைகளை வேறு பகுதிக்கு அவர்கள் திருப்பிவிடக்கூடும்; இது வேறொரு பகுதியின் அரிப்புக்கு காரணமாகும். இதில் மோசமானது, அவர்களின் சுவர் மூழ்கிவிடுவது தான்.

கோடிக்கணக்கானவர்களின் வரிப்பணத்தை செலவிட்டு, கடலோரங்களில் அரிப்பை தடுக்க சுவர்களை எழுப்புகிறது. ஆனால், சில ஆண்டுகளில் கடல் அரிப்பால் அவை வீணாகிவிடுகின்றன. பிறகு ஏன் கட்ட வேண்டும்?

”மக்கள் உடனடித்தீர்வை எதிர்பார்க்கிறார்கள்; அதற்கான வழிகளில் ஒன்று தான் சுவர் எழுப்புவது” என்று பட்கர் விளக்கம் அளிக்கிறார். வாழ்நாள் முழுவதும் சேர்க்கப்பட்ட சொத்துக்களை அலைகள் அடித்து செல்லும் போது, பீதியடையும் மக்கள் உடனடி தீர்வு கேட்டு நிர்வாகத்திற்கு நிர்பந்தம் தருகிறார்கள்.

சதுப்புநில காடுகள் அமைத்தல் போன்ற மற்ற தீர்வுகள் நீண்ட காலம் பிடிப்பதோடு, அதிக செலவை ஏற்படுத்துகின்றன.

கடல் அரிப்பை தடுக்க இதுபோன்ற இயற்கை முறையில் அரண். அமைப்பதே சிறந்தது. செயல்படுத்த நேரம், பொருட்செலவு ஆனாலும் சிறந்த வழிமுறையாகும்.

புயல் போன்ற காலத்தில் காற்றின் வேகத்தை குறைத்து, கபளீகரம் செய்யும் அலையை கட்டுப்படுத்துவதில் சதுப்புநில காடுகள் உதவுகின்றன. மண்ணுடன் அவை பிணைந்துவிடுவதால், அரிப்பு ஏற்படுவதும் தடுக்கப்படுகிறது. “வெப்பமண்டல தங்குமிட மாதிரியை போல், இதில் நான்கு நிலைகளில் இது பயிரிடப்படுகிறது” என்று பட்கர் விளக்கினார். “கடலுக்கு அருகே முதலில் புற்கள் நடப்பட வேண்டும்; அதை தொடர்ந்து அடர் தாவரங்கள், பின்னர் மூலிகைகள், கடைசியாக மரங்களை நட வேண்டும். ஆனால், இவை வளர்ந்து பலன் தருவதற்கு 5-10 ஆண்டுகள் ஆகலாம்” என்றர் அவர்.

மற்றொரு வாய்ப்பு, குறிப்பிட்ட நீள கடல் அரிப்பு முறை மற்றும் தேவைகளின் அடிப்படையிலான கட்டமைப்பு ஏற்படுத்துவதாகும். புதுச்சேரி கடற்கரையின் 40 கி.மீ. நீளத்திற்கு இம்முறை உள்ளது. “கடற்கரையில் இருந்து சில மீட்டர் முன்பே திட்டு போன்ற ஒரு மூழ்கும் அமைப்பை நிறுவி, அலையின் வேகத்தை அதன் மூலம் குறைத்து கரையை பாதுகாக்கலாம்” என்று மூர்த்தி விளக்குகிறார். அறிவியல் ஆய்வு நடத்தி செயல்படுத்தப்பட்டுள்ள சிறந்த இம்முறைக்கு, வடிவமைப்பு செலவு ரூ.50 லட்சமே பிடித்துள்ளது.

அதேநேரம், இந்தியாவின் 7500 கி.மீ. நீள கடற்கரையில் இதுபோன்று செய்வது என்பது மிகவும் செலவு பிடிக்கக்கூடியது. ஒருவேளை அதற்கான நிதியாதாரம் கிடைக்கும் போது, திட்டத்திற்கான ஆய்வுகளை மேற்கொள்ள வல்லுனர்கள் இருக்க மாட்டார்கள்.

துயரத்தில் ஒரு கடற்கரை

கடல் அரிப்பு பகுதிகள் என்பது இந்திய கடலோரம் முழுவதுமாக பரவிக் கிடக்கிறது. அண்மையில் வெள்ள பாதிப்பை சந்தித்த கேரளாவில் கடல் அரிப்பு பகுதிகள் நிறைய இருப்பதாக, 2015 ஆய்வு தெரிவிக்கிறது. ஏறத்தாள 2 கி.மீ. நீள தீவுப்பகுதிகள் அரிக்கப்பட்டுள்ளன. தமிழக கடலோரப்பகுதிகளிலும் அரிப்பு காணப்படுகிறது. இதில், கிழக்கில் உள்ள வங்கக்கடலோர பகுதிகளில் கடல் அரிப்பால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

Low and moderate erosion spots along India’s coastline.
Source: National Assessment of Shoreline Changes along Indian Coast; July 2018.

கடல் மட்டம் உயருவதோடு, காலநிலை மாற்றமும் வானிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, கடலோர பாதிப்புக்கு காரணமாகிறது. “இந்தியாவில் சூறாவளி எனப்படும் புயல்களின் தீவிரம், கடலோரப்பகுதிகளில் அதிகரிக்கும்” என்று, இங்கிலாந்தின் பிளைமவுத் பல்கலைக்கழக கடலோர உருமாற்றவியல் துறை பேராசிரியர் ஜெர்ட் மாஸ்லிங்க் தெரிவித்தார். "உலகில் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதை பொறுத்து விளைவு இருக்கும். சில பகுதிகளில் குறைந்த புயல்; பிற பகுதிகளில் அதிக புயல்கள் உருவாகும்" என்றார் அவர்.

பருவநிலை மாற்றத்தால் அலைகளின் திசையும் கூட மாறும் என்ற அவர், இது மணலுடன் கூடிய கடலோர வளத்தையே மாற்றிவிடும் என்றார்.

சில கடலோரப்பகுதிகள் அதிக வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்றன. புவி வெப்பம் அடைந்து நீரின் வெப்பநிலை அதிகரிப்பதே இதற்கு காரணம். இவையெல்லாம் மீன் வளத்தையும், அதை சார்ந்திருக்கும் கார்வி போன்றவர்களின் வாழ்வாதாரத்தையும் நேரடியாக பாதிக்கும்.

புட்நோட்: நாயக்கின் குடும்பத்தாருக்கு வடமேற்கு கர்நாடகாவின் பவினாகுர்வே தீவில் (பின்னால் தெரிவது) நிலம் இருந்தது. கடல் அரிப்பில் சிக்கி அது மாயமாகிவிட்டது.

ஹொன்னாவரின் கார்கி கிராம கடலோரத்தில் நின்றாவரே, அரபிக்கடல் எவ்வாறு விரிவடைந்திருக்கிறது என்று, 74 வயதான டி.எச். நாயக் தெரிவிக்கிறார். கர்நாடக அரசின் முன்னாள் அலுவலரான இவர், “இங்கு உறவினர்களோடு நாங்கள் இருந்தோம். அப்பகுதி தற்போது கடலுக்கடியில் உள்ளது” என்றார். அவரது வீடு தற்போது கரையில் இருந்து 5 கி.மீ.யில் கடலுக்கடியில் மூழ்கிக்கிடக்கிறது. கடலிடம் இருந்து அவரது வீட்டுக்கு பவினாகுர்வே கிராமம் அரணாக இருந்துள்ளது. “அப்பகுதி ஆழமின்றி இருந்தது. நாங்கள் நடந்து தான் அதை கடப்போம்” என்றார். கடந்த சில ஆண்டுகளில் இப்பகுதி நிலப்பரப்பு மாறிவிட்டது.

புட்நோட்: இடதுபுறம் இருப்பது, கூகுளின் செயற்கைக்கோள் படம்; வலது பக்கம் இருப்பது, 1932ஆம் ஆண்டின் வரைபடம். இடது: ஷாராவதி ஆற்றின் வாய்ப்பகுதி காசர்கோட் (தெற்கு) பகுதியில் இருந்து கார்கி (வடக்கு) நோக்கி நகர்ந்துள்ளது. வலது: 1932ஆம் ஆண்டு வரைபடம் அதே பகுதியில் ஷாராவதி ஆறு எவ்வாறு இருந்தது என்பதை காட்டுகிறது. பவினாகுர்வே கிராமம் நீடித்த நிலப்பகுதியை கொண்டிருந்தது. கார்கி கிராமத்திற்கு முன் அரபிக்கடலுக்கு பதில் ஓடை இருந்தது.

ஷாராவதி ஆறு அரபிக்கடலில் கலக்குமிடத்தில் கார்வி கிராமம் உள்ளது. நாயக் வளர்ந்து வரும் காலத்தில் ஆறு கடலில் கலக்குமிடம், அருகேயுள்ள கஸர்கோட் கிராமத்தில் இருந்தது.

“கடல் அரிப்பு என்பது ஒரு இயற்கையான செயல்பாடாகும். ஆனால், கடந்த சில வருடங்களாக இதன் வேகம் மிக அதிகமாக உள்ளது” என்று கும்தாவில் உள்ள சுற்றுச்சூழல் அறிவியல் மைய கடல் உயிரியலாளர் பிரகாஷ் மெஸ்தா கூறுகிறார். இவர் தற்போது கடலோர சுற்றுச்சூழல் மற்றும் புவி வெப்பமடைதல் பற்றிய திட்டப்பணியில் ஈடுபட்டுள்ளார்.

ஆற்றின் வாய்ப்பகுதி நிலம் தண்ணீரில் மூழ்கும் போது மறுபுறம் புதிய நிலப்பகுதி வளர்கிறது. இந்த செயல்முறையே வளர்ச்சிப் பெருக்கம் எனப்படுகிறது.

இந்தியாவில் ஏறத்தாழ 29% நிலப்பகுதி இவ்வாறு அரிக்கப்பட்டுள்ளதாக, என்.சி.சி.ஆர். அறிக்கை தெரிவிக்கிறது. ஒடிசா (51%), ஆந்திரா (42%) ஆகியன அதிகபட்ச கடல் அரிப்பை சந்தித்து வருகின்றன.

பவினாகுர்வே புட்நோட்: கடல் அரிப்பால் பவினாகுர்வே கிராமப்பகுதிகள் கடலினுள் மூழ்கிவிட, அருகேயுள்ள காசர்கோட் பகுதியில் புதிய நிலப்பரப்பு உருவாகியுள்ளது. கடல் அரிப்பால் நிலத்தை இழந்தவர்களுக்கு, புதிய பகுதி வழங்கப்படவில்லை; அரசே எடுத்துக் கொண்டுள்ளது.

கடல் அரிப்பால் கார்வியும், நாயக்கும் தங்கள் இடங்களை இழந்தாலும் அதற்குரிய இழப்பீடு அவர்களுக்கு வழங்கப்படவில்லை. கடலுக்குள் செல்லும் புதிய நிலம் அரசுக்கு செல்கிறது.

கடலோரத்தில் ஏற்படும் பருவநிலை மாற்றம் மீனவ சமுதாய மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது. ”புதிய நிலம் அவர்களுக்கு தரப்படுமானால், அவர்கள் இழந்ததை சரி செய்து கொள்ள முடியும்” என்று மங்களூருவில் உள்ள மீன்வளத்துறை கல்லூரியின் மீன்வள பொருளாதாரத்துறை முன்னாள் பேராசிரியர் ராமச்சந்திர பட் தெரிவித்தார். ”ஆபத்துகள் குறித்து அரசு மதிப்பீடு செய்து மீனவர்களுக்கு காப்பீடு திட்டம் செயல்படுத்தினால், புயல் போன்ற பேரிடர் காலங்களில் அதிகாரிகளிடம் மீனவர்கள் கையேந்தும் அவலம் இருக்காது” என்று கூறும் பட், ஆனால் ஆபத்துக்கால அபாயம் குறித்து அரசு இன்னும் மதிப்பிடவில்லை என்றார்.

கடல் அரிப்பை மேலும் மோசமாக்கும் மனித செயல்பாடுகள்

புதுச்சேரி மக்கள் செயல்பாட்டு வலையகம் (PondyCAN) இணை நிறுவனர் ஏரோபிலியோ ஷியாவினா, இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, புதுச்சேரி கடற்கரை, அரிப்பால் மறைந்து வருவதை கவனித்து வருகிறார். இதற்கு பருவநிலை மாற்றம் மட்டுமின்றி, கடலோரங்களில் கட்டுமானம் மேற்கொள்ளுதல், சுவர், அணைகள் எழுப்புதல், மணல் கடத்தல் போன்ற சட்ட விரோதச் செயல்களும் காரணமாகின்றன என்கிறார்.

உதாரணத்திற்கு, ஹொன்னாவரில் ஒரு கிலோ மணல் ரூ. 5 என்ற அடிப்படையில் சமூக விரோதிகளால் கடற்கரையில் உள்ள மணல் சுரண்டப்பட்டு விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளது.

கடந்த 2004 சுனாமிக்கு பிறகு சென்னை- கன்னியாகுமரி இடையே கடலோரத்தில் சுவர் எழுப்பும் முடிவுடன் உடன்படும் ஷியாவினா “பத்து ஆண்டுகளில் ஏற்படும் பாதிப்பு, தட்பவெப்ப நிலை மாற்றத்தால் அடுத்த பத்து ஆண்டுகளில் உண்டாகும் பாதிப்பைவிட அதிகமாக செய்திருக்கும்” என்றார். ”விஞ்ஞானத்துடன் பிணைந்த கொள்கை நமக்கு தேவை” என்றார்.

கடலோர ஒழுங்குமுறை புதிய விதிகள் அறிவியல் சாராதவை

கடற்கரைக்கு அருகே கட்டுமானத்தை தவிர்ப்பது மிக எளிதான வழிமுறை என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். கடல் அரிப்பால் அதிகம் பாதிக்கக்கூடிய பகுதிகளை கண்டறியும் தொழில் நுட்பமும் உள்ளது.

“கடல் அரிப்பை மக்கள் எப்போதும் கெட்ட ஒன்றாகவே கருதுகின்றனர். ஒரு இடத்தில் அரிப்பு ஏற்பட்டு வளங்கள் பாதித்தால், அது வேரிடத்தில் போய் சேர்கிறது” என்கிறார் மெஸ்சிலிங். ”பெரிதும் நிர்வகிக்கப்படும் கடற்கரை, உதாரணத்துக்கு கடல் சுவர் கொண்ட கடற்பரப்பானது பருவநிலை தாக்கங்களை நன்றாக ஏற்க முடியாது. அதேநேரம் காலநிலை மாற்றத்தை எதிகொள்ள இயற்கையாக சூழலில் ஏற்படுத்தப்படும் வழிமுறைகள், கடற்கரைக்கு ஊட்டச்சத்து போன்றது; பருவநிலை மாற்ற தாக்கங்களை இயற்கையாக ஏற்றுக் கொள்ளும்” கடற்கரையில் இருந்து எடுக்கப்படும் மணல், திரும்ப சேர்க்கப்பட வேண்டும் என்று கூறும் மூர்த்தி, ”கடற்கரையில் இருந்து குறைந்தது 100 மீட்டர் இடைவெளியாவது இருக்க வேண்டும்” என்றார்.

எனினும் அரசு மற்ற திட்டங்களை கொண்டுள்ளது. இந்தாண்டு ஏப்ரலில், ஒரு புதிய கடலோர ஒழுங்குமுறை மண்டல வரைவு விதிகள் வெளியிடப்பட்டது. விஞ்ஞானிகளின் பரிந்துரைக்கு எதிராக, இதில் வளர்ச்சிப்பணி மேற்கொள்ளாத பகுதி (NDZ), கடலோரப்பகுதியில் இருந்து 100 மீட்டரில் இருந்து 50 மீட்டராக குறைக்கப்பட்டது. நகர்ப்புற கடலோரப் பகுதிகளுக்கு வளர்ச்சிப்பணி மேற்கொள்ளாத பகுதி என்பதே இல்லை. இம்முடிவை பாராட்டக்கூடியவர்கள் கட்டுமானத்துறையில் இருப்பவர்களாக இருக்கலாம்.

பருவநிலை மாற்றத்துக்கு எதிரான நமது பாதுகாப்பு தான் என்ன? ”விழிப்புடன் இருப்பதை தவிர வேறு வழியில்லை” என்றார் மூர்த்தி.

(திஷா ஷெட்டி, கொலம்பியா இதழியல் கல்வி நிறுவனத்தை சார்ந்தவர்; இந்தியா ஸ்பெண்ட்டில் பருவநிலை மாற்றம் குறித்த செய்திகளை வழங்குகிறார்)

இந்திய பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் பகுதிகள் குறித்த தொடரின் இரண்டாவது பகுதி இது. முதல் பகுதியை நீங்கள் இங்கே படிக்கலாம்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.