பெங்களூரு: இந்தியா இப்போது 15 லட்சத்திற்கும் அதிகமான கோவிட்-19 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது, இது அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது அதிக எண்ணிக்கையிலான வழக்குகளைக் கொண்ட நாடாக விளங்குகிறது. நாடு முழுவதும் தொற்று அதிகரித்துள்ள நிலையில், துப்புரவுத் தொழிலாளர்கள் போதியளவு பாதுகாக்கப்படுவதில்லை என்று ஐந்து மாநிலங்கள் மற்றும் இரண்டு பெரு நகரங்களில் 214 துப்புரவுத் தொழிலாளர்களிடம் இரண்டு சுதந்திர ஆராய்ச்சியாளர்கள் தொலைபேசி வாயிலாக பேசிய குறிப்புகளின் அடிப்படையிலான கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இதில் கண்டறிந்தவை:

  • ஏப்ரல்-மே 2020 இல் பணிபுரிந்த 188 துப்புரவு தொழிலாளர்களில் கிட்டத்தட்ட 64% பேர், கோவிட்-19 தொற்றில் இருந்து தங்களை பாதுகாப்பு தொடர்பான எந்தவொரு அறிவுறுத்தல்கள், பயிற்சிகளை பெறவில்லை.
  • 192 தொழிலாளர்களில் கிட்டத்தட்ட 93% பேர், சுகாதார பரிசோதனை குறித்து எந்த அறிவுறுத்தலும் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்று தெரிவித்தனர்.
  • 57 பேரில் 55 பெண்கள் (96.5%)பணியில் தங்களுக்கு தனிப்பட்ட ஏற்பாடு எதுவும் செய்யப்படவில்லை என்று தெரிவித்தனர்.

ஏப்ரல்-மே மாதங்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் பதிலளித்த 214 பேரில் 70% ஆண்கள் மற்றும் 30% பெண்கள். 80 (37.4%) பங்கேற்பாளர்கள் அரசு ஊழியர்களாக இருந்தனர்; பாதிக்கும் மேற்பட்டவர்கள் அதாவது 117 பேர், ஒப்பந்தக்காரர்களால் பணியமர்த்தப்பட்டனர்; 17 (7.9%) பேர் சுயாதீனமாக, நேரடியாக அரசு சாரா இடங்களில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டனர்.

கணக்கெடுப்பு நடந்த ஏழு இடங்களில், அதிகம் பதிலளித்தவர்கள் வரிசையில் மத்தியப் பிரதேசம் (31%), அடுத்து அஸ்ஸாம் (27%), டெல்லி (16%), மும்பை (15%),உத்தரபிரதேசம் (6%), ஜார்க்கண்ட் (4%), சத்தீஸ்கர் (1%) ஆகியன இருந்தன. கோவிட்-19 நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடுகளில் இருக்கும் மருத்துவக்கழிவுகளை கையாளுவதால் துப்புரவுத்தொழிலாளர்கள் மற்றும் குப்பை அள்ளுவோர் ஆபத்தை எதிர்கொள்வதாக, ஏப்ரல் 9 இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்துள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சமூக சுகாதாரப் பணியாளர்களைப் போலவே துப்புரவுத் தொழிலாளர்களும் நோய்த்தொற்றுக்கு ஆளாகின்றனர்; ஆனால் மருத்துவ நிபுணர்களை போல், அவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தெரியாது என்று வல்லுநர்கள் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நெறிப்படுத்தப்பட்ட சம்பளம்; பாதுகாப்பு இன்னும் ஒரு கேள்விக்குறி

கோவிட்-19 நெருக்கடியின் போது 71%-க்கும் அதிகமானோர் தங்களது முழு சம்பளத்தையும் சரியான நேரத்தில் பெற்றனர் என்பது அரசு மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை கொண்ட கணக்கெடுக்கப்பட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் கூறிய முக்கிய மாற்றங்களில் ஒன்று. "இது சரியான திசையில் ஒரு நீண்ட கால நடவடிக்கை மற்றும் தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து துப்புரவு சேவையின் மதிப்பு அதிகரித்துள்ளது என்பதற்கான ஒரு குறிகாட்டியாகவே நாங்கள் காண்கிறோம்" என்று அறிக்கையின் ஆசிரியர்களில் ஒருவரான ஷீவா துபே கூறினார்.

நேரடியாக வேலை செய்பவர்கள் வருவாயில் குறைப்பு அல்லது தாமதம் அல்லது வருமானத்தை முற்றிலுமாக நிறுத்தப்படுவதை கண்டனர். நேரடியாக பணியாற்றும் 17 (18%) பேரில் மூன்று பேர் மட்டுமே (ஒப்பந்த அல்லது அரசுசாராத) துப்புரவுத் தொழிலாளர்கள் வருமானத்தில் எந்த பாதிப்பையும் தெரிவிக்கவில்லை என்று அறிக்கை தெரிவித்துள்ளது.

"சம்பளம் வரும் என்று சில உறுதிமொழிகள் இருந்தாலும், கிராமப்புறங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளது" என்று பெங்களூரில் உள்ள சஃபாய் கரம்ச்சாரி காவலு சமிதி அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பி. ஒபாலேஷ் கூறினார். கர்நாடகாவில் செப்டிக் டேங்க் அல்லது கழிவுநீர் சாக்கடைகளை கையால் சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் வீடுகளில் நேரடியாக வேலை செய்கிறார்கள்; ஆனால் துப்புரவு பணியாளர்களாக பணியாற்றும் தொழிலாளர்கள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் நிரந்தரத் தொழிலாளர்கள் என்பதால் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. [ஆசிரியரின் குறிப்பு: இந்த அறிக்கையில் எந்த தென்னிந்திய மாநிலமும் ஆய்வு செய்யப்படவில்லை].

கணக்கெடுக்கப்பட்டவர்களில், 92.5% பேருக்கு துப்புரவுப் பணிகளைச் செய்ய தேவையான உபகரணங்கள் இல்லை, 89.9% தொழிலாளர்கள் வேலைக்கான சீருடை கிடைக்கவில்லை என்று அறிக்கை தெரிவிக்கிறது; 90% தொழிலாளர்கள் தங்களுக்கு எந்தவிதமான சுகாதார காப்பீடோ அல்லது சுகாதார வசதிகளோ இல்லை என்றனர்.

பெங்களூரில் குறைந்தது 23 துப்புரவுத் தொழிலாளர்களுக்கு கோவிட்19 நேர்மறை கண்டறியப்பட்டு உள்ளது. பெங்களூரில் 28 வயது துப்புரவுத் தொழிலாளி ஜூலை 16 ஆம் தேதி கொரோனா வைரஸ் நேர்மறை கண்டறியப்பட்டு, பின்னர் இறந்தார்; அவரது சிகிச்சையில் அலட்சியம் காட்டப்பட்டதாக, அவர் சார்ந்திருந்த தொழிற்சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. நகரின் துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் குடிநீர் வடிகால் மற்றும் பராமரிப்பு பணியாளர்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை நகராட்சி நிர்வாகம் வழங்கத்தவறியதால் ஜூலை 21 முதல் காலவரையற்ற போராட்டம் நடத்த முடிவு செய்தனர். "நகரின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் தொடர்கிறது," என்று புருஹத் பெங்களூரு மகாநகர பாலிகே பூரகர்மிகா சங்கத்தின் [மாநகராட்சி துப்புரவு தொழிலாளர் சங்கம்] மற்றும் அகில இந்திய மத்திய தொழிற்சங்க கவுன்சில் தலைவர் எம். நிர்மலா ஜூலை 29 அன்று இந்தியா ஸ்பெண்டிடம் கூறினார்.

தொழிலாளர்கள் கையுறைகள், முகக்கவசம், காலுறை, தொப்பிகள் போன்ற தரமான பாதுகாப்பு உபகரணங்களைப் பெறவில்லை; துப்புரவுத் தொழிலாளர் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அரசுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் அறிவுறுத்திய போதும் நோயைக் கையாள தேவையான தகவல்கள் வழங்கப்படவில்லை என்று ஒபாலேஷ் கூறினார்.

"துப்புரவுத் தொழிலாளர்களின் சவால்கள் தொழில் சார்ந்தவை அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்," என்று துபே கூறினார். "இன்று துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஒடுக்கப்பட்ட சாதி சமூகத்தினர் தான் காலம் காலமாக கையால் கழிவுகளை அள்ளுவதற்கு நிர்பந்திக்கப்படுகின்றன" என்றார் அவர்.

பெண்கள் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்

கிட்டத்தட்ட 97% பெண் தொழிலாளர்கள், பணியில் தங்களுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்படவில்லை என்றனர். ஒரு பெண் பங்கேற்பாளர் மட்டுமே ஊரடங்கு காலத்தில் சம்பளத்துடன் விடுப்பு பெற்றதாக கூறினார்; மற்றொருவர் தனது முதலாளி கர்ப்பிணித் தொழிலாளர்களுக்கு வேலையில் சலுகை அளிப்பதாகக் கூறினார்.

மும்பையில், நான்கு தொழிலாளர்கள் "துப்புரவுத் தொழிலாளர்கள், குறிப்பாக பெண் தொழிலாளர்கள், வேலைக்கு முன்னும் பின்னும் உடை மாற்றவும் கை கழுவவும் பாதுகாப்பான இடம் இல்லை" என்றனர். இது தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமல்ல, பொதுமக்களும் தொற்றுநோய்க்கான ஆபத்தை வெளிப்படுத்துகிறது.

ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் அரசு ஊழியர்கள்

தொழிலாளர்களுக்கு ஒட்டுமொத்தமாக சம்பளம் தருவது வழக்கத்தை விட அதிகம் என்று கூறினாலும், கோவிட்-19இன் போது ஒப்பந்தத் தொழிலாளர்களின் நிலை அரசு ஊழியர்களை விட மோசமாக உள்ளதை கணக்கெடுப்பு கண்டறிந்தது.

"அனைத்து அம்சங்களிலும் அரசு ஊழியர்களை விட ஒப்பந்தக்காரர்கள் அல்லது தனியார் நிறுவனங்களால் பணியமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் மிகவும் பின்தங்கி இருக்கின்றனர்" என்று கணக்கெடுப்பு கண்டறிந்து இருப்பதாக அறிக்கையின் இணை ஆசிரியர் தம்மா நிகம் கூறினார். பங்கேற்ற 214 பேரில், 117 (54.7%) பேர், நாங்கள் கூறியது போல், ஒப்பந்தத்தில் பணியமர்த்தப்பட்டனர்; மூன்றில் ஒரு பகுதியினர் நேரடியாக அரசின் கீழ் பணிபுரிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 10 பேரில் ஒன்பது பேருக்கு சுகாதார பரிசோதனைகள் உறுதி செய்யப்படவில்லை; மேலும் 93.1% ஒப்பந்த தொழிலாளர்களும், 93.5% அரசு ஊழியர்களும், பணியின் போது கோவிட்-19 ஏற்பட்டால் குணமடைய என்ன வழிமுறை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படாதது இதில் கண்டறியப்பட்டது.

சுகாதார ஊழியர்களுக்காக ரூ.50 லட்சம் காப்பீட்டுத் தொகையை அரசு அறிவித்த போதும் “துப்புரவுத் தொழிலாளர்களை [திட்டத்தில்] மத்திய அரசு சேர்க்கவில்லை; இது அவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படாததை காட்டுகிறது” என்று ஒபலேஷ் கூறினார்.

"தொழிலாளர்கள் அரசின் வசமிடம் இருந்து விலக்கப்பட்டதும் அவர்களுக்கான உரிமைகள், வசதிகளை உறுதி செய்யும் பொறுப்பு ஒப்பந்தக்காரர்களுக்கு மாற்றப்படும்" என்று அறிக்கை கூறியது. ஆனால், "துப்புரவுத் திட்டங்களை மேற்கொள்ளும் ஒப்பந்தக்காரர்கள் ஏராளமான விதிமீறல்களை புரிந்து, அதிலிருந்து தப்பிவிடுகின்றனர். ஏனெனில் அவர்கள் எந்தவொருவரின் மேற்பார்வையிலும் செயல்படவில்லை" என்று அறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது.

கடந்த 2016 மற்றும் நவம்பர் 2019 க்கு இடையில், இந்தியா 282 கழிவுநீர் தொட்டி இறப்புகளை பதிவுசெய்ததாக மார்ச் 12இல் பாராளுமன்றத்தில் அரசு அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக தமிழ்நாடு (40 மரணங்கள்) பதிவு செய்துள்ளது. அடுத்து ஹரியானா (31), டெல்லி மற்றும் குஜராத் (இரண்டும் 30) ஆகும்."பெரும்பாலான வழக்குகளில், அரசு பொறுப்பேற்கவில்லை" என்று சஃபாய் கர்மாச்சாரி அந்தோலனின் (துப்புரவு தொழிலாளர்கள் இயக்கம்) தேசிய அமைப்பாளர் பெஸ்வாடா வில்சன், அக்டோபர் 2019 நேர்காணலில் எங்களிடம் கூறினார். “அவர்கள் தொழிலாளர்களை நேரடியாக வேலைக்கு அமர்த்தவில்லை என்று கூறுகிறார்கள். இந்த சட்டம் [கையால் கழிவுகளை அகற்றும் வேலைக்கு தடை மற்றும் அவர்களின் மறுவாழ்வு சட்டம், 2013] கூறுகிறது [ஒரு தொழிலாளரை பணியமர்த்தும்] ஒரு ஒப்பந்தக்காரர் அல்லது யாராலும் எந்த வகையிலும் மனிதக்கழிவுகளை அகற்ற, எடுத்துச் செல்ல, அப்புறப்படுத்த அமைர்த்துவது தண்டனைக்குரிய குற்றமாகும்” என்கிறது.

உலர்ந்த கழிவுகளை (38.2%) சுத்தம் செய்வதோடு ஒப்பிடும்போது ஈரமான கழிவுகளை சுத்தம் செய்வதற்கு (65.8%) அதிக ஒப்பந்தம் செய்யப்படுகிறது. இந்திய நகரங்களில் ஈரமான கழிவுகளை அகற்றுவது பெரும்பாலும் உரிய பாதுகாப்பு மற்றும் உபகரணங்கள் இல்லாமல் கையால் செய்யப்படுகிறது; மேலும் கையால் சுத்தம் செய்யவேண்டிய நிர்பந்தம் காரணமாகவே இந்த வேலை “அரசிடம் இருந்து ஒப்பந்தப்பணிகளின் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது” என்று அறிக்கை குறிப்பிட்டது.

இருப்பினும், 71% தொழிலாளர்கள் சம்பளத்தை பெறுவதில் முன்னேற்றம் கண்டிருந்தாலும், கோவிட்-19 க்கு முன், 83.8% (117 இல் 98) ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணப்பட்டுவாடா “பெரும்பாலும் ஒழுங்கற்றவை” என்று தெரிவித்தனர்; இது, அரசு ஊழியர்களுடன் ஒப்பிட்டால் 63.8% (80 இல் 51 பேர்) என்று உள்ளது."அரசு ஊழியர்கள் வழக்கமான வருவாயையே பெறுகிறார்கள்; எனவே அவர்கள் ஒப்பந்தத்தொழிலாளர்களை விட சற்றே சிறந்தவர்கள். அதே வேலைக்கு ஒரே கட்டணம் செலுத்தப்பட வேண்டும்,” என்று, டாட்டா இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் சயின்ஸில் பி.எச்.டி முடிக்க ஊதியம் பெறாத விடுப்பில் உள்ள பிரஹன் மும்பை மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளி சுனில் யாதவ் கூறினார். மும்பையில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் வழக்கமாக அதே மாநிலத்தைச் சேர்ந்தவர்களல்ல, நிரந்தரத் தொழிலாளர்களை போலவே அதே வேலையைச் செய்ய வேண்டி இருந்தாலும் பெரும்பாலும் போதுமான ஊதியம் வழங்கப்படுவதில்லை" என்றார் அவர். அவர்கள் [அரசு] மலிவு தொகைக்கு உழைப்பை விரும்புகிறார்கள்; அதனால்தான் அவர்கள் இயந்திரமயமாக்கலை அறிமுகப்படுத்தவில்லை அல்லது [நிலைமையை] மேம்படுத்த எந்த ஆராய்ச்சியும் செய்யவில்லை" என்று அவர் கூறினார்.

மத்திய பிரதேசத்தில், கணக்கெடுக்கப்பட்ட 66 தொழிலாளர்களில் 80% பேர் அரசால் பணியமர்த்தப்பட்டவர்கள், 30% பேர் ஊரடங்குக்கு முன்பு தவறாமல் சம்பளம் பெறுவதாக கூறினர்; அதே நேரம் ஊரடங்கு தொடங்கியதில் இருந்து கிட்டத்தட்ட 85% பேர், தொடர்ந்து அதை பெறத் தொடங்கினர். "இது அரசால் நேரடியாகப் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளர்களின் அதிகப்படியான பிரதிநிதித்துவம் (52 பங்கேற்பாளர்கள்) காரணமாகவும் இருக்கலாம்" என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.

ஒப்பந்த ஊழியர்களில், 71.1% பேர் போதுமான முகக்கவசங்கள் இல்லாமல் பணிபுரிந்தனர்; அரசு ஊழியர்களில் இது 62% ஆக இருந்தது; 71.4% அரசு ஊழியர்களுடன் ஒப்பிடும்போது 81.9% கையுறைகள் இல்லாமல் பணிபுரிந்தனர், 40% அரசு ஊழியர்களுடன் ஒப்பிடும்போது 86.4% ஒப்பந்த ஊழியர்களுக்கு போதுமான சோப்பு இல்லை. மேலும், 87% ஒப்பந்த ஊழியர்கள் போதுமான சானிடிசர்கள் இல்லாமல் பணிபுரிந்தனர்.

பெருநகரங்களிலும் எந்த வேறுபாடும் இல்லை

ஜூலை 29 ஆம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் ஆறு கோவிட்-19 வழக்குகளில் ஒன்று மும்பை மற்றும் டெல்லி ஆகிய இரண்டு பெருநகரங்களில் உள்ளது.

இந்த ஆய்வில் மும்பையில் 32 துப்புரவுத் தொழிலாளர்களும், டெல்லியில் 34 பேரும் பங்கேற்றனர். ஊரடங்கால் டெல்லியில் கணக்கெடுக்கப்பட்ட நான்கு பேரில் மூன்று பேரின் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது, மூன்றில் ஒருவருக்கு வருமானம் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் பங்கேற்ற 34 பேரில், எவருக்கும் சுகாதார பரிசோதனை உறுதி செய்யப்படவில்லை அல்லது கோவிட்-19 நேர்மறை கண்டறியப்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த எந்த அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை; 27 பேருக்கு போதுமான கையுறைகள் இல்லை, 14 பேருக்கு போதுமான முகக்கவசங்கள் இல்லை, 33 பேருக்கு சானிடிசர்கள் மற்றும் சோப்புகள் தரப்படவில்லை.

கோவிட் -19 நோயாளிக்கு சேவை செய்யும் போது உயிரிழந்தால், துப்புரவு ஊழியர்கள் உள்ளிட்ட முன்வரி களப்பணியாளரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படுவது குறித்து, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஏப்ரல் 1 ம் தேதி ட்வீட் செய்துள்ளார்.

புலம்பெயர்ந்த மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், அமைப்புசாரா துறையின் கீழ் கையால் கழிவு அகற்றும் தொழிலாளர்கள் கருதப்படுவதில்லை, மற்றும் கோவிட்-19 முடக்கம் அவர்களின் வருமானத்தை பாதித்துள்ளது என்று ஒபலேஷ் கூறினார். "அவர்களுக்கு [துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் கையால் கழிவு அகற்றும் தொழிலாளர்களுக்கு] சுகாதார ஊழியர்களை போலவே நிதி உதவிகளும் சலுகைகளும் வழங்கப்பட வேண்டும்; அவர்களையும் [வைரஸ் தொற்றில் இருந்து] பாதுகாக்க தேவையான சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை வழங்க வேண்டும்" என்றார் அவர்.

எல்லா பிராந்தியங்களையும் விட மிக அதிகபட்சமாக டெல்லியில் 50 சதவிகித தொழிலாளர்கள், கணக்கெடுப்பின் போது உணவுப் பொருட்கள் தேவை என்றனர்- தலைநகரில் கணக்கெடுக்கப்பட்ட 16 அல்லது கிட்டத்தட்ட பாதி தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு இல்லை, இது அவர்களின் உணவு அணுகலை பாதித்தது; மூன்றில் ஒருவர் நிதி நெருக்கடியை எதிர்கொள்வதாகக் கூறினார்.

மும்பையிலும் இதே நிலை ஒத்திருந்தது. கணக்கெடுப்பில் பதில் அளித்த 32 பேரில் 11 பேர் பெண்கள்; சமமான எண்ணிக்கையிலான (37.5%) தொழிலாளர்கள் ஒப்பந்த மற்றும் அரசு ஊழியர்களாக பணியாற்றினர், மீதமுள்ளவர்கள் நேரடியாக வேலைக்கு அமர்த்தப்பட்டனர். ஊரடங்கின் போது வருமானத்தில் தாக்கம் ஏற்பட்டதாக 47% பேர் தெரிவித்தனர்; ஆறு பேர் வேலை செய்ய இயலாது என்பதால் ஊரடங்கின் போது தங்களது முதலாளியிடம் இருந்து ஊதியம் எதையும் பெறவில்லை என்றனர்.

மும்பை பெருநகர பிராந்தியத்தில், 47% பேர் இன்னும் போதுமான கையுறைகள் மற்றும் சானிடிசர்களைப் பெறவில்லை; பதிலளித்தவர்களில் 16 பேர் போதுமான முகக்கவசம் கிடைக்கவில்லை என்றனர். அவர்களில் பாதி பேருக்கு தொற்றுநோய்களின் போது வேலைக்கான பாதுகாப்பு வழிமுறைகள் எதுவும் அளிக்கப்படவில்லை. கோவிட்-19 நேர்மறை கண்டறியப்பட்டால் செய்ய வேண்டிய வழிமுறைகள், 10 இல் 9 பேருக்கு தெரியவில்லை. நான்கில் மூன்று பேருக்கு அரசின் இருந்து எவ்வித உத்தரவாதமும் கிடைக்கவில்லை.

கோவிட்-19க்கு முன்பு, துப்புரவுத் தொழிலாளர்கள் (பெரும்பாலும் நகரத்திற்கு வெளியே அல்லது புறநகரில் வசிப்பவர்கள்) தங்கள் பணி இடங்களுக்கு ரயிலில் பயணம் செய்து வந்தனர்; ஆனால் இப்போது அவர்கள் உள்ளூர் பேருந்துகளை சார்ந்துள்ளனர்; அவை குறைவாகவே இயக்கப்படுவதாக யாதவ் கூறினார். "ரயில்கள் இயங்கவில்லை. தொழிலாளர்கள் [தினமும்] வருகைப்பதிவை உறுதிப்படுத்துமாறு கூறப்பட்டுள்ளனர். இதற்கு எந்தவிதமான வசதிகளும் [ஏற்பாடும்]இல்லை,” என்ற யாதவ், இது தொழிலாளர்களின் பயண நேரத்தையும் பணியில் இருக்கும் நேரத்தையும் அதிகரிக்கிறது, வைரஸ் தொற்று பரவலுக்கான வாய்ப்பை அதிகரிக்கிறது என்றார்.

மும்பையின் புறநகர் ரயில்கள் தினமும் 80 லட்சத்திற்கும் அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்கின்றன; பிரஹன் மும்பை மின் வழங்கல் மற்றும் போக்குவரத்து நிறுவனம் (பெஸ்ட்), ஒருநாளைக்கு சராசரி 28 லட்சம் பயணிகளை ஏற்றிச் செல்லும் 2,865 பேருந்துகளை இயக்குவதாக, இந்தியா ஸ்பெண்ட் ஜூன் 9 கட்டுரை தெரிவித்துள்ளது. மே 25ம் தேதிக்குள் 200 பெஸ்ட் நிறுவன ஊழியர்கள் (அவர்களில் 70% ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் போன்ற போக்குவரத்து பிரிவைச் சேர்ந்தவர்கள்) கோவிட்-19 நேர்மறையை உறுதி செய்தவர்கள்; அவர்களில் பாதி பேர் குணமடைந்து வந்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(பல்லியாத், இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளைrespond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கண நடை கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.