பெங்களூரு: காற்று மாசுபாடு மரணங்களை ஏற்படுத்துவதோடு மட்டுமின்றி, கருவுறுதல் மற்றும் பிரசவ செயல்முறையையும் பாதிக்கிறது என்று வளர்ந்து வரும் அறிவியல் கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன. பல ஆய்வுளும் காற்று மாசுபாட்டை கருவுறாமை, பிரசவ சிக்கல்கள், வாரிசுகளின் பிறப்பு குறைபாடுகள் மற்றும் குறை பிரசவங்களுடன் இணைத்துள்ளன. காற்று மாசுபாடு விந்து தரத்தையும் பாதிக்கக்கூடும் என்று, சான்றுகள் புலப்படுத்துகின்றன.

காற்றில் நுண்துகள் கரையும் அளவு அல்லது பி.எம். (PM) 2.5, ஒவ்வொரு 10-μg / m3 அதிகரிப்பும், கர்ப்பிணிக்கு குழந்தையின் பிரசவ எடையில் நான்கு கிராம் சரிவு ஏற்படலாம் என, சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் 1,285 கர்ப்பிணிகளிடம் நடத்தப்பட்ட 2018 ஆய்வு தெரிவித்தது. பி.எம் 2.5 அளவீடு என்பது ஒரு மீட்டர் சதுர பரப்பளவில் 2.5 மைக்ரோ மீட்டருக்கும் குறைவான அளவுள்ள நுண் துகள்கள் எவ்வளவு உள்ளன என்பதாகும். ஒரு மீட்டர் சதுர பரப்பளவில் பத்து மைக்ரோ கிராம் நுண்துகள் இருந்தால் சுவாசிக்க உகந்த காற்றாகும். அதற்கு மேல் நுண்துகள்கள் இருப்பின் மனிதர்களுக்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். டெல்லியின் சராசரி பி.எம். 2.5, உலக சுகாதார அமைப்பு (WHO) நிர்ணயித்த தரத்தைவிட 10 மடங்குக்கும் மேலாக 100 முதல் 180 10-μg / m3 வரை உள்ளது.

"பிரசவ எடையின் சராசரி மதிப்பீடு 72 கிராம் அதிகரிப்பு ஆகும்; அதாவது, [கர்ப்பிணிகள் ] தூய்மையான பகுதியில் வசித்தால், பிறந்த குழந்தையின் பிரசவ எடையில் 70 முதல் 80 கிராம் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்,” என, சென்னை ஸ்ரீ ராமச்சந்திர உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின், எஸ்.ஆர்.யு - ஐ.சி.எம்.ஆர் மையத்தின் காற்று தரம், காலநிலை மற்றும் ஆரோக்கியம் குறித்த மேம்பட்ட ஆராய்ச்சிக்கான இணை டீன் (ஆராய்ச்சி) கல்பனா பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், காற்று மாசுக்கும் இறப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என 2019 டிசம்பரில் நாடாளுமன்றத்தில் மறுத்தார்; இது அரசின் 2018 ஆய்வுக்கு முரணான கருத்தாகும். ஆனால் வளர்ந்து வரும் அறிவியல் சான்றுகள், ஒரு மாறுபட்ட, மிகவும் சிக்கலான தோற்றத்தை வெளிப்படுத்துகிறது. "மோசமான காற்றின் தரம், மோசமான இனப்பெருக்க ஆரோக்கியத்துடன் தொடர்புடையது என்பதற்கு கணிசமான பாடங்கள் உள்ளன" என்று யூனிஸ் கென்னடி ஸ்ரீவர் தேசிய குழந்தை சுகாதார மற்றும் மனித மேம்பாட்டு நிறுவனத்தில் உள்ளார்ந்த மக்கள் தொகை சுகாதார ஆராய்ச்சி பிரிவின் தொற்றுநோயியல் கிளை மூத்த புலனாய்வாளர் பவுலின் மெண்டோலா கூறினார்.

குறிப்பிட்ட மாசுபடுத்திகளின் கலவை, காலம் மற்றும் இடத்திற்கேற்ப மாறுவதால், காற்று மாசுபாட்டிற்கு பல்வேறு நிலைகளில் உள்ளவர்கள் பல்வேறு விதமாக பாதிக்கப்படுகிறார்கள் என்று மெண்டோலா கூறினார். "எனவே, உலகளாவிய தோற்றமானது, குறிப்பாக சிறந்த துகள்கள் அல்லது போக்குவரத்து தொடர்பான மாசுபடுத்தல்களுக்கு, அதிக ஆபத்தை சுட்டிக்காட்டுகிறது. ஆனால் தனிப்பட்ட ஆய்வுகள், சில மாறுபாடுகளைக் கொண்டுள்ளன," என்று அவர் மேலும் கூறினார்.

காற்று மாசு விதிகளை நீர்த்துப் போகச்செய்யும் அரசு

உலகின் மிக நச்சுத்தன்மையான சிலவகை காற்றை இந்தியர்கள் சுவாசிக்கின்றனர். உலகின் மிக மாசுபட்ட 20 நகரங்களில் 15, இந்தியாவில் உள்ளது என்று கிரீன் பீஸ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மார்ச் 2019 இல் வெளியிட்ட ஆய்வில் கூறப்பட்டுள்ளது. சுத்தமான காற்றை மட்டும் சுவாசிப்பதன் மூலம், இந்தியர்களின் ஆயுள் சராசரி 1.7 ஆண்டு கூடும் என்று, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தலைமையில் நடந்த டிசம்பர் 2018 ஆய்வில் கண்டறியப்பட்டது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, காற்று மாசுபாட்டுடன் தொடர்புடைய குறைப்பிரசவ இறப்புகளில் சுமார் 91%, குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளில் ஏற்படுகின்றன. தூய்மையான காற்றை உறுதி செய்வதன் மூலம், பக்கவாதம், இதய நோய், நுரையீரல் புற்றுநோய் மற்றும் சுவாச நோய்களின் சுமையை, நாடுகள் குறைக்க முடியும் என்று அது கூறியது.

தேசிய அனல் மின் கழகம் -என்டிபிசி (NTPC) தலைமையிலான உமிழ்வுகளுக்கான இந்தியாவின் மின் உற்பத்தித்துறை, மரணம் விளைவிக்கும் ஆபத்தான நைட்ரஸ் ஆக்சைடு (NOx) விதிமுறைகளை நீக்க நெருக்கடி தருவது, இந்தியா ஸ்பெண்ட் விசாரணையில் தெரிய வந்தது. இத்தகைய நீண்டகால உமிழ்வானது, கருக்களின் வளர்ச்சியை பாதிக்கிறது; பெரியவர்களுக்கு உயிருக்கு ஆபத்தான எலும்பு மஜ்ஜை, மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. 2017ஆம் ஆண்டுக்கு பிறகு தொடங்கப்பட்ட புதிய ஆலைகளுக்கான விதிமுறைகள், ஒரு கன மீட்டருக்கு 100 மில்லி கிராமில் இருந்து (அல்லது மி.கி / என்.எம் 3, இதில் ‘என்’ நிலையான வெப்பநிலை மற்றும் அழுத்தத்தைக் குறிக்கும்) 450 மி.கி / என்.எம் 3 ஆகக் குறைக்க வேண்டும் என்று என்.டி.பி.சி பரிந்துரைக்கிறது. 2003 மற்றும் 2016ஆம் ஆண்டுக்கு இடையில் வந்த மின் உற்பத்தி நிலையங்களுக்கான விதிமுறைகளை - அதாவது 300 மி.கி / என்.எம் 3 இல் இருந்து 450 மி.கி / என்.எம் 3 என - நீர்த்துப்போகச் செய்யும் வேலையில் அரசு ஏற்கனவே உள்ளதை, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அளித்த பிரமாண வாக்குமூலமே காட்டுகிறது.

எதிர்க்கட்சிகளை, "மக்களிடையே அச்ச உணர்வை" ஏற்படுத்துவதாக, அமைச்சர் ஜவடேகர் குற்றம்சாட்டியபோது, அவர் உலக சுகாதார அமைப்பு அதிகாரிகளின் கண்டனத்திற்கு ஆளானார். காற்று மாசுபாடு மக்களைக் கொல்லக்கூடாது என்று அந்த அமைப்பு விரும்புகிறது. “ஆனால் அது துரதிர்ஷ்டவசமாக தொடர்கிறது” என, உலக சுகாதார அமைப்பின் பொது சுகாதார இயக்குனர் மரியா நீரா, டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியாளரிடம் தெரிவித்தார்.

மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், மக்களவையில் பேசிய போது, முதலாவதற்கு பதிலாக, காற்று மாசுபாட்டை ஆயுளுடன் இணைக்கும் ஆய்வுகள் குறித்த விரிவான இரண்டாம்நிலை தரவுகளது முடிவுகளுடன் வெளிவர உள்ளது என்றார்.

நிதி பற்றாக்குறை, வரம்புடன் கூடிய ஆராய்ச்சி

நிதி பற்றாக்குறையால், இந்தியாவில் காற்று மாசுபாடு - பொது சுகாதாரம் இடையிலான தொடர்புகள் குறித்த ஆராய்ச்சி, மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். "இந்தியாவில் பல ஆராய்ச்சியாளர்கள் உட்புற காற்று மாசுபாட்டிற்கும் ஆரோக்கியத்திற்கும் இடையே தொடர்பு குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருந்தனர்" என்று இந்தியாவின் உலக வள நிறுவனத்தில் நிலையான நகரங்கள் திட்டத்திற்கான காற்று மாசுபாடு பிரிவின் தலைவர் அஜய் நாக்புரே கூறினார். “நம்மிடம் ஆரோக்கியத்திற்கும் வெளிப்பாட்டிற்கும் இடையிலான உறவு (காற்று மாசுபாட்டிற்கு) குறித்த செறிவு மறுமொழி செயல்பாடுள்ள இந்தியா இல்லை” என்றார்.

அமைச்சர் ஜவடேகர் நாடாளுமன்றத்தில் செய்தது போல், தரவுகள் இல்லாததால் காற்று மாசுபாடு - பொது சுகாதார இணைப்பு கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. நீண்ட கால ஆய்வை நடத்துவதற்கு தேவையான தரவுகளின் தரம் கடந்த தசாப்தத்தில் இந்தியாவில் மட்டுமே மேம்பட்டுள்ளது; இப்போது உலகின் சிறந்தவற்றுடன் ஒப்பிடத்தக்கது என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

"நீண்டகால மக்கள் தொகை ஆய்வுகளை நடத்த வேண்டும்," என்று நாக்பூர் கூறினார். "சில நிறுவனங்கள் அவற்றைச் செய்கின்றன, ஆனால் சுகாதாரத் தரவுகளுக்கு இன்னும் மூன்று முதல் நான்கு ஆண்டுகள் ஆகும்" என்றார்.

ஏற்கனவே செயல்படும் அளவுக்கு போதுமான உலகளாவிய சான்றுகள் நம் நாட்டில் உள்ளதாக என்ற ஸ்ரீ ராமச்சந்திர உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கல்பனா பாலகிருஷ்ணன், டெல்லியின் காற்று மாசுபாட்டின் உடல்நல பாதிப்புகள் குறித்த ஆய்வு செய்து வருகிறார்; இதற்கு இரண்டு ஆண்டுகள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "இந்தியாவில் நீண்டகால ஆய்வுகள் நிகழும்போது, எண்ணிக்கை உலகளாவிய சான்றுகளுடன் ஒப்பிடத்தக்கதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்," என்ற அவர், "ஆனால் பி.எம். 2.5 வெளிப்பாட்டை குறைக்க முதன்மை ஆதாரங்களில் செயல்படத் தொடங்க எங்களுக்கு போதுமான தகவல்கள் உள்ளன" என்றார்.

4 ல் 3 இந்தியர்கள் நச்சு காற்றை சுவாசிக்கின்றனர்

கடந்த 2017இல் கிட்டத்தட்ட 77% இந்தியர்கள் பி.எம்.2.5 க்கு 40 μg / m3 க்கு மேல் ஆண்டு அளவில் வெளிப்படுத்தப்பட்டனர் - இது இந்தியாவின் தேசிய சுற்றுப்புற காற்று தர நிர்ணயங்களால் பரிந்துரைக்கப்பட்ட வரம்பு, உலக சுகாதார அமைப்பின் இன் 10 μg / m3 உடன் ஒப்பிடும்போது ஒரு தளர்வான தரமாகும்.

"வீட்டுகளில் இருந்து வெளிப்படும் காற்று மாசு (சமையல், வெப்பமூட்டும் மற்றும் மண்ணெண்ணெய் விளக்குகளிலிருந்து) இந்தியாவில் உள்ள PM 2.5 க்கு அதிகபட்ச பங்களிப்பை அளிக்கிறது," என்று டெல்லியில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் வளிமண்டல அறிவியல் மைய இணை பேராசிரியர் சாக்னிக் டே கூறினார்; இவர், இந்தியாவில் காற்று மாசுபாடு குறித்த ஆய்வின் இணை ஆசிரியர்; இது பி.என்.ஏ.எஸ் (அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாடமியின் செயல்முறைகள்) இதழின் மே 2019 பதிப்பில் வெளியிடப்பட்டது.

பி.எம் 2.5 துகள்கள் ஒரு மனித தலைமுடியின் 1/30 வது அளவை அளவிடுகின்றன, மேலும் ஆஸ்துமா, சுவாச அழற்சி மற்றும் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

"இந்திய மக்கள் தொகையில் 77% பேர் இந்திய தரத்தை பூர்த்தி செய்யக்கூடிய பகுதிகளில் வசிக்கவில்லை என்ற உண்மை அனைவரின் கண்ணை திறக்கக் கூடியதாக இருக்க வேண்டும்” என்று டே கூறினார். " இந்திய மக்கள்தொகையில் 70% வசிக்கும் மிக முக்கியமான பகுதியான இந்தோ- கங்கை படுகையில், (அங்கே) ஆண்டு பி.எம். 2.5 இந்திய தரத்தை விட இரண்டு மடங்கு அதிகம்" என்றார்.

பி.எம் 2.5 வெளிப்பாடு டெல்லி மாநிலத்தில் மிக அதிகமாக இருந்தது; அடுத்து வட இந்திய மாநிலங்களான உத்தரபிரதேசம், பீகார் மற்றும் ஹரியானாவில் உள்ளது. இந்த அளவிலான காற்று மாசுபாட்டின் தாக்கங்கள் இந்தியர்களுக்கு மிக மோசமானது என்று கண்டறியப்பட்டது.

இந்தியாவின் நச்சுக் காற்றை சுத்தம் செய்தல்

கடந்த 2017இல் இந்தியாவின் வெளிப்புற காற்று மாசுபாட்டால் 6,70,000 இறப்புகளையும், வீட்டினுள் ஏற்பட்ட காற்று மாசுபாட்டால் மேலும் 4,80,000 இறப்புகளையும் கண்டதாக 2018 ஐசிஎம்ஆர் ஆய்வு தெரிவித்தது. 2017 ஆம் ஆண்டில் இந்தியாவில் எட்டு பேரில் ஒருவர் காற்று மாசுபாடு காரணமாக இறந்தார் - இந்தியாவில் இறப்புக்கு முக்கிய ஆபத்தான காரணமான தாய் மற்றும் குழந்தை ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு அடுத்து இரண்டாவதாக, இது உள்ளது.

இந்தியா ஏற்கனவே 102 நகரங்களில், தேசிய தூய்மையான காற்றுத் திட்டத்தை கொண்டிருக்கிறது; இது 2020 ஆம் ஆண்டில் மேலும் பல நகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது. இத்திட்டம் நோடல் ஆராய்ச்சி நிறுவனங்களை மாநில மாசு அதிகாரிகளுடன் இணைக்கிறது; இதனால் மாசுபாட்டைக் குறைக்க சமீபத்திய அறிவியல் தொழில்நுட்பத்தையும் நிபுணத்துவத்தையும் எளிதாக அணுக முடியும்.

காற்று மாசுபாட்டை எதிர்கொள்வதற்காக தனிப்பட்ட திட்டங்களை வகுக்க, நகர நிர்வாகங்களை மத்திய அரசு கேட்டுள்ளதுடன், 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்டவற்றுக்கு தலா ரூ.10 கோடியை அனுமதி அளித்துள்ளது என்று அமைச்சர் ஜவடேகர் 2019 டிசம்பர் 6 அன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஆனால் இந்தியாவின் இலக்கு, காற்றின் தரத்தை பூர்த்தி செய்வது மட்டுமாக இருக்கக்கூடாது என்று நிபுணர்கள் நம்புகின்றனர். "இந்திய காற்றின் தரத்தை எதிர்கொள்வதோடு நாம் மனநிறைவுடன் இருக்கக்கூடாது; ஏனெனில், இது உலக சுகாதார அமைப்பின் தரத்தை விட நான்கு மடங்கு மோசமாக உள்ளது" என்று டே கூறினார். "இன்று, மிதமான வரம்பில் காற்றின் தரக்குறியீடு (AQI) கண்டால், மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறார்கள்".

இந்தியா, யோசனைகளைப் பொறுத்தவரை கிழக்கு நோக்கி மட்டுமே பார்க்க வேண்டும். நிலக்கரி ஆலைகளில் இருந்து உமிழ்வைக் குறைத்து, இயற்கை எரிவாயுவுக்கு மாறியதன் மூலம் சில நகரங்களில் சீனா தனது காற்றின் தரத்தை 32% மேம்படுத்தியது.

"செயல்திறனை மதிப்பிடுவதற்கு உதவும் ஆய்வுகளில் விஞ்ஞானிகள் ஈடுபடுவதன் மூலம், காற்றின் தர நடவடிக்கைகளை பெரிதும் வேகப்படுத்த முடியும்" என்று கல்பனா பாலகிருஷ்ணன் கூறினார். காற்று மாசுபாட்டின் மூலங்கள் எங்கும் இருப்பதால், எல்லா இடங்களிலும் இதை சாத்தியப்படுத்த இயலாது என்று அவர் மேலும் கூறினார்.

."செயல்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியது அவசியம்" என்று பரிந்துரைக்கும் பாலகிருஷ்ணன், அமெரிக்க அரசின் முதன்மை பொது சுகாதாரம் மற்றும் உயிரியல் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், தேசிய சுகாதார நிறுவனத்தின் நிதியுதவியுடன் தற்போது தமிழகத்தில் வீட்டு காற்று மாசுபாடு குறுக்கீடுகள் வலைபின்னல் அமைப்பின் சோதனையோட்டத்திற்கு தலைமை தாங்கியுள்ளார். "இதற்காக, ஆதாரங்களின் வலிமைக்கு, அதே நேரத்தில் வளங்களை எங்கு முதலீடு செய்வது என்பது குறித்து கொள்கை வகுப்பாளர்களுக்கு தெரிவிக்கவும், தொற்றுநோயியல் உத்தி அணுகுமுறைகளை ஒருவர் பின்பற்றலாம்” என்றார்.

உலக சுகாதார அமைப்பை சேர்ந்த நீராவின் கூற்றுப்படி, தீர்வுகள் எல்லாம் ஏற்கனவே கொள்கை வகுப்பாளர்களிடம் தான் உள்ளன. "இங்குள்ள கேள்வி என்னவெனில், எத்தனை பேர் நுரையீரல் அல்லது வாழ்க்கைத் தரத்தை இழப்பது அல்லது நமது மூளைத்திறனிய இழப்பது என்பதை கூட நீங்கள் ஏற்கத் தயாராக இருக்கிறீர்களா என்பது தான்," என்று அவர் செப்டம்பர் 2019 இல் இந்தியா ஸ்பெண்டிற்கு அளித்த நேர்காணலில் கூறினார்.

(ஷெட்டி, இந்தியா ஸ்பெண்ட் செய்திப்பணியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.