நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை தொடர்பான அவசர உச்சி மாநாட்டில், உலகில் பெரியளவில் கார்பன் மாசு ஏற்படுத்தும் ஐந்து நாடுகள் - அர்ஜென்டினா, பிரேசில், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் துருக்கி- ஆகியவற்றுக்கு எதிராக, கார்பன் உமிழ்வை போதியளவு குறைக்கத் தவறியதால் குழந்தைகளின் உரிமைகளை மீறுவதாக, இந்தியாவின் ரிதிமா பாண்டே உட்பட 16 குழந்தைகள் ஐ.நா.வில் புகார் அளிக்கவுள்ளதாக தெரிவித்தனர்.

11 வயதான பாண்டே, உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வார் நகரை சேர்ந்தவர். 2017 ஆம் ஆண்டில், காலநிலை மாற்றத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறியதற்காக இந்திய பசுமை தீர்ப்பாயத்தில் இந்திய அரசு மீது வழக்கு பதிவு செய்திருந்தார்.

காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான பழைய வாக்குறுதிகளை நாடுகள் மீண்டும் வலியுறுத்தியதால், 16 வயதான ஸ்வீடனின் காலநிலை ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் தலைமையிலான இளைஞர்கள், காலநிலை தலைவர்களாக உருவெடுத்தனர். “நான், இந்த கடலின் மறுபக்கத்தில் உள்ள பள்ளிக்கு மீண்டும் சென்றாக வேண்டும். ஆனாலும் நீங்கள் நம்பிக்கையோடு இளைஞர்களிடம் வருகிறீர்களே. உங்களுக்கு எவ்வளவு தைரியம்? ”என்று கேட்டார் துன்பெர்க்.

அமெரிக்காவைத் தவிர ஒவ்வொரு நாடும் குழந்தைகளின் உரிமைகள் தொடர்பான ஐ.நா. உடன்படிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அந்நாடுகளில், 45 நாடுகள் கூடுதல் நெறிமுறைக்கு ஒப்புக் கொண்டுள்ளன; இது உடன்படிக்கை மீறல்கள் குறித்து நேரடியாக மனு செய்ய குழந்தைகளை ஐ.நா. அனுமதிக்கிறது.

அந்த 45 நாடுகள் குழுவில் அர்ஜென்டினா, பிரேசில், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் துருக்கி ஆகியவை காலநிலை மாற்றத்தை ஏற்படுத்தும் மாசுபாட்டின் மிகப்பெரிய உமிழ்பவையாக உள்ளன. ஐந்து நாடுகள், இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் பூமியை 1.5 அல்லது 2 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பம் ஏற்படுத்தும் பாதையில் இல்லை.

குழந்தைகள் அளித்த மனுவானது, உலக வானிலை அமைப்பின் (WMO) சமீபத்திய அறிக்கையின் பின்னணியில் வந்துள்ளது; 1850 ஆம் ஆண்டில் முறையான பதிவுகள் தொடங்கியதில் இருந்து உலக வெப்பநிலை 1.1 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது; 2011-2015 உடன் ஒப்பிடும்போது 0.2 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

உலக வானிலை அமைப்பின் பொதுச் செயலாளர் பெட்டேரி தலாஸ் கூறுகையில், "காலநிலை மாற்ற காரணங்கள் மற்றும் தாக்கங்கள் குறைந்து வருவதை விட அதிகரித்து வருகின்றன” என்றார்.

ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், தன்பெர்க்கின் தலைமைத்துவத்தை பாராட்டியுள்ளார், இது "முற்றிலும் குறிப்பிடத்தக்கது" என்று கூறினார். நாடுகள் முழுவதும் காலநிலை நடவடிக்கைகளை மேற்கொண்டாக வேண்டும் என்ற இளைஞர்களிடம் இருந்து வந்த அழுத்தத்தை ஐ.நா. பாராட்டியுள்ளது.

நான், இந்த கடலின் மறுபக்கத்தில் உள்ள பள்ளிக்கு மீண்டும் சென்றாக வேண்டும். ஆனாலும் நீங்கள் நம்பிக்கையோடு இளைஞர்களிடம் வருகிறீர்களே, உங்களுக்கு எவ்வளவு தைரியம்?என்று நியூயார்க்கில் நடந்த ஐக்கிய நாடுகளின் காலநிலை நடவடிக்கை உச்சி மாநாடு-2019 இல் 16 வயதான ஸ்வீடன் காலநிலை ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் கேள்வி எழுப்பினார்.

உலக வங்கியின் மதிப்பீடுகள் கூறுவதன்படி இந்தோ-கங்கை சமவெளியில் வாழும் 60 கோடி மக்கள் பாதிக்கப்படுகின்றனர்; ஏனெனில் புவி வெப்பமடைதல் இமயமலை பனிப்பாறைகள் உருகுவதற்கு காரணமாகிறது. இது கங்கை மற்றும் அதன் துணை நதிகளுக்கு நிலையான நீரோட்டத்தை அச்சுறுத்துகிறது.

ஏறக்குறைய 14.8 கோடி இந்தியர்கள், காலநிலை மாற்றத்தின் "கடும் வெப்பப்பகுதிகள்" நிலவும் பகுதிகளில் வாழ்கின்றனர்; ஏற்கனவே பெரிய அளவிலான மாற்றங்களை சந்தித்து வருகின்றனர் என்று, இந்தியா ஸ்பெண்ட் சிறப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. காலநிலை மாற்றம் வெள்ளம் மற்றும் வெப்ப அலைகள் போன்ற தீவிர நிகழ்வுகளின் அதிகரிப்புக்கு வழிவகுத்தது. இது இந்தியாவின் நீர் பாதுகாப்பை அச்சுறுத்துகிறது மற்றும் சமத்துவமின்மையை விரிவாக்கக்கூடும்.

ஆயினும்கூட, இந்த உச்சி மாநாட்டில், இந்தியா ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பு செய்த கடமைகளை மட்டுமே மீண்டும் வலியுறுத்தியது.

இந்தியாவின் திட்டம்

நடவடிக்கைகள் இருந்தபோதிலும், கார்பன் டை ஆக்சைடு (CO2) உமிழ்வு 2% வளர்ச்சி விகிதத்தில் தொடர்ந்து உயர்கிறது. தற்போது பூமியை வெப்பமாக்கும் பசுமை இல்ல வாயுக்களை-ஜிஹெச்ஜி (GHG) சீனா அதிகமாக வெளியேற்றுகிறது, அதைத் தொடர்ந்து அமெரிக்கா (US), ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் இந்தியா ஆகியன உள்ளன.

காலநிலை உச்சி மாநாட்டில் 90 க்கும் மேற்பட்ட உரை நிகழ்த்துவோரில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் ஒருவர். இந்தியா 2022இல் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை 175 ஜிகாவாட் (GW) ஆகவும், வரும் ஆண்டுகளில் 450 ஜிகாவாட்டாகவும் உயர்த்தும் என்று ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவை தெரிவிக்காமல் அவர் கூறினார். உயிர் எரிபொருட்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் இந்தியா கவனம் செலுத்துவதாகவும், 15 கோடி குடும்பங்களுக்கு சமையல் எரிவாயுவை வழங்குவதில் வெற்றி கண்டிருப்பதாகவும் அவர் கூறினார். ஒருமுறிய பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு எதிரான இந்தியாவின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார். எனினும், நிலக்கரி பயன்பாட்டை குறைப்பது பற்றி எதுவும் கூறவில்லை; இது வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவிலும் சீனாவிலும் ஒரு கவலைக்குரிய ஒன்றாகும்.

2015 பாரிஸ் உச்சி மாநாடு நிர்ணயித்த இலக்குகளை பூர்த்தி செய்யும் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று; மேலும் காலநிலை உச்சி மாநாட்டில் பேச ஐ.நா. வழங்கிய தளத்தை நியாயப்படுத்துகிறது என்று டெல்லியை சேர்ந்த துணைவேந்தர் லீனா ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார். அவர், எரிசக்தி மற்றும் வள நிறுவனம் -டெரி (TERI) மற்றும் மேம்பட்ட ஆய்வுகள் பள்ளி மற்றும் ஐ.நா. காலநிலை உச்சிமாநாட்டின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் இணைத் தலைவர். "நீங்கள் ஒரு பகுதியை மட்டும் பார்க்காமல் அதன் மொத்தத்தையும் பார்த்தால், நாம் மேடையில் இருக்க தகுதியானவர்கள் என்று நான் நினைக்கிறேன்" என்றார்.

நாடுகள் அதிகம் செய்ய வேண்டும்

பசுமை இல்ல வாயுக்கள் உமிழ்வதில் சீனாவை தொடர்ந்து அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா உள்ளன.
Source: CAIT Climate Data Explorer. 2017. Country Greenhouse Gas Emissions. Washington, DC: World Resources Institute

"நமது தற்போதைய பாதையில், நூற்றாண்டின் இறுதியில் குறைந்தது 3 டிகிரி செல்சியஸ் உலகளாவிய வெப்பத்தை எதிர்கொள்கிறோம் என்று அறிவியல் கூறுகிறது" என்று ஐ.நா பொதுச்செயலாளர் குடெரெஸ் கூறினார். கலந்துகொள்பவர்களுக்கு அவர் ஒரு லட்சிய இலக்கை நிர்ணயித்திருந்தார்: 2030 ஆம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வை 45% குறைத்து 2050 க்குள் பூஜ்ஜியமாக்குங்கள் என்பதாகும்.

பசுமை இல்ல வாயுக்கள் உமிழ்வை குறைப்பதற்கான கொள்கைகள், 2 டிகிரி செல்சியஸ் என்ற இலக்கை அடைவதற்கு மூன்று மடங்கு அதிகரிக்க வேண்டும் மற்றும் ஐ.நா. நிர்ணயித்த 1.5 டிகிரி செல்சியஸ் இலக்கை அடைய ஐந்து மடங்கு அதிகரிக்க வேண்டும் என்று, செப்டம்பர் 22 அன்று நியூயார்க்கில் வெளியிடப்பட்ட சமீபத்திய உலக வானிலை அமைப்பின் அறிக்கை கண்டறிந்தது.

"நாட்டின் அமைப்புகளில் பல முக்கியமான முனைப்புள்ளிகளைக் கடக்கும் அபாயம் எங்களுக்கு உள்ளது" என்று டெரியின் ஸ்ரீவஸ்தவா கூறினார். "கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்கு முன்னர் காலநிலை மதிப்பீடுகள் மதிப்பிட்டதை விட காலநிலை மாற்ற தாக்கங்கள் கடினமாகவும் விரைவாகவும் பாதிக்கப்படுகின்றன. அறிவியல் சமூகத்தில் அதிக அங்கீகாரம் உள்ளது, இது நாம் கவலைப்பட வேண்டிய ஒன்று" என்றார்.

2015 பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் ஒவ்வொரு நாடும் தனக்குத்தானே நிர்ணயிக்கும் கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கான இலக்குகள் - இதுவரை 66 நாடுகள் தங்களது தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள் அல்லது என்.டி.சி.களை (NDCs) முடுக்கிவிடுவதாகக் கூறியுள்ளன.

வலுவான திட்டங்களைக் கொண்ட நாடுகள் மட்டுமே நியூயார்க் அவசர காலநிலை உச்சி மாநாட்டில் பேச அனுமதிக்கப்படும் என்று ஐ.நா. கூறியிருந்தது. ஆனால் இந்தியா உட்பட பெரும்பாலான நாடுகள், நாம் மேலே விளக்கியது போல, பழைய வாக்குறுதிகளை மட்டுமே மீண்டும் வலியுறுத்தின.

"நாடுகள் தங்கள் காலநிலை லட்சியம் குறித்த மேம்படுத்தப்பட்ட அறிவிப்பை வெளியிட உச்சிமாநாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், பெரும்பாலான பெரிய பொருளாதார நாடுகள் மிக மோசமாக குறைந்துவிட்டன. அவற்றின் லட்சியத்தின் பற்றாக்குறை, உலகெங்கிலும் அதிகரித்து வரும் நடவடிக்கைக்கு முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது, ”என்று உலக ஆராய்ச்சி நிறுவனமான உலக வள நிறுவனம் (WRI) தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்ட்ரூ ஸ்டியர் கூறினார்.

பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் 600 கோடி புதிய மரங்களை நடப்படும் என்ற முன்னர் அளித்த அதே வாக்குறுதியை மீண்டும் கூறினார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அழைக்கப்பட்டார், ஆனால் அவர் காலநிலை உச்சிமாநாட்டைத் தவிர்த்துவிட்டு அதற்கு பதிலாக ஒரு தூதுக்குழுவை அனுப்புவதாக கூறினார்; பிரதமர் மோடி மேடைக்கு வந்தபோது சிறிது நேரம் அவரும் இருந்தார். மிக அதிகளவில் பசுமை இல்ல வாயுக்களை வெளியிடும் நாடுகளில் ஒன்றான அமெரிக்கா, பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து விலகி உள்ளது.

நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் 2028ஆம் ஆண்டுக்குள் 100 கோடி மரங்களை நடவு செய்வதற்கான தனது நாட்டின் உறுதிப்பாட்டைப் பற்றி பேசினார். கடலில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுக்கான அனுமதி வழங்குவதையும் நிறுத்தியுள்ளதாகவும், 2023 க்குள் 100% புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தியை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் நியூசிலாந்து பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.

ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல், தனது நாடு 2038க்குள் நிலக்கரியை முற்றிலும் நிறுத்திவிடும் என்று, இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பையே மீண்டும் தெரிவித்தார்.

வணிகங்கள் உறுதிமொழி

நிறுவனங்களுக்கு தடைக்கயிறு கட்ட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த ஐ.நா., லட்சிய இலக்குகளை நிர்ணயிக்க அவர்களை ஊக்குவிக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. எண்பத்தி ஏழு பெரிய நிறுவனங்கள் - 2.3 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான சந்தை மூலதனம் மற்றும் 73 நிலக்கரி எரி மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிகரான வருடாந்திர நேரடி உமிழ்வு - பாரிஸ் காலநிலை உச்சிமாநாடு இலக்குகளுடன் தங்கள் வணிகங்களை சீரமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன.

முன்னேற்ற திட்டங்களுக்கு நிதியளிக்கும் வங்கிகள், நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள், நிலக்கரியில் முதலீட்டை நிறுத்தப்போவதாகக் கூறினர். "நிலக்கரி நிதியுதவிக்கான சாளரத்திற்கு வெளியே உள்ளது," என்று ஜெர்மனி வங்கியான கே.எப்.டபிள்யு-வின் காலநிலை மாற்றத்தின் தலைவர் பீட்டர் ஹிலிகெஸ் கூறினார். காப்பீட்டு நிறுவனமான அலையன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆலிவர் பெட், நிலக்கரியில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு காப்பீட்டை விற்கக்கூடாது என்ற தங்கள் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

பதிவு செய்யப்பட்ட தகவலில், போப் பிரான்சிஸ் தொழில்துறைக்கு பிந்தைய சகாப்தத்தை மிகவும் "பொறுப்பற்றது" என்று அழைத்தார் மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை தணிப்பதற்கான அரசியல் விருப்பத்தை கேள்வி எழுப்பினார்.

புதைபடிவ எரிபொருள் மானியங்கள் இல்லை

1850 ஆம் ஆண்டில் முறையான பதிவுப்பணி தொடங்கியதில் இருந்து உலக வெப்பநிலை 1.1 டிகிரி செல்சியஸ் மற்றும் 2011-2015 உடன் ஒப்பிடும்போது 0.2 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது.
Source: United in Science report, WMO, September 2019.

காலநிலை நடவடிக்கை இல்லாமல், மனித உமிழ்வு 2030 க்கு அப்பால் உச்சம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, சமீபத்திய உலக வானிலை மைய அறிக்கை தெரிவிக்கிறது.

புதைபடிவ எரிபொருள் நிறுவனங்களுக்கான அனைத்து மானியங்களையும் 2020 ஆம் ஆண்டுக்குள் நிறுத்தவும், புதுப்பிக்கத்தக்கவற்றை ஊக்குவிக்க வேண்டும்; மானியம் அளிக்க வேண்டுமென ஐ.நா. தெரிவித்துள்ளது.

“எல்லாவற்றிற்கும் மேலாக, கடினமாக சம்பாதித்த வரி செலுத்துவோரின் கோடிக்கணக்கான பணத்தை, சூறாவளிகளை அதிகரிக்கும், வெப்பமண்டல நோய்களை பரப்பும் புதைபடிவ எரிபொருள் தொழிலுக்கு வழங்குவது அறிவார்ந்த செயலா?” என்று காலநிலை உச்சி மாநாட்டில் கெட்டெரஸ் கேட்டார்.

"புதைபடிவ எரிபொருள் நிறுவனங்கள் தாங்கள் செய்த சிக்கலை சரிசெய்ய பணம் செலுத்த வேண்டும். செல்வந்த நாட்டு அரசுகள், அந்நிறுவனங்களுக்கு உதவி அளிப்பதை நிறுத்த வேண்டும். அதற்கு பதிலாக, முதலில் நெருக்கடியை உருவாக்கியவர்களைக் காட்டிலும் அவர்கள் காலநிலை அவசரத்தின் முன்னணியில் சமூகங்களை ஆதரிக்க வேண்டும்,” என்று தென்னாப்பிரிக்காவை சேர்ந்த இலாப நோக்கற்ற நிறுவனமான ஆக்சன் ஏய்ட் (ActionAid) அமைப்பின் காலநிலை மாற்றம் பிரிவின் ஹர்ஜீத் சிங் கூறினார்.

வரும் 2020 ஆம் ஆண்டு முதல், புதிய நிலக்கரி ஆலைகள் கூடாது என்றும் ஐ.நா அழைப்பு விடுத்துள்ளது; அதற்கு பதிலாக புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாற வேண்டுமென்ற நாடுகளை ஐ.நா. கேட்டுக் கொண்டுள்ளது. இந்தியா ஸ்பெண்ட் முன்னர் அறிவித்தபடி, தற்போது இந்தியா அதன் எரிசக்தி தேவைகளில் 76%- க்கும் அதிகமாக, நிலக்கரியில் இருந்து தான் பெறுகிறது. அதன் ஆற்றலில் இருபதில் ஒரு பங்கு மட்டுமே, புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இருந்து வருகிறது;, இருப்பினும் இது வேகமாக வளர்ந்து வரும் பிரிவாகும். பிரதமர் மோடி தனது ஐ.நா. உரையில், நிலக்கரி குறித்து மவுனமாகவே இருந்தார்.

ஐ.நா. நிர்ணயித்த 2020 காலக்கெடுவை மீறி இந்தியாவும் சீனாவும் தொடர்ந்து புதிய நிலக்கரி ஆலைகளைத் திறக்கின்றன; ஏனெனில் இந்த நாடுகள் காலநிலை இலக்குகளை பூர்த்தி செய்யும் போது குறைந்த மக்கள்தொகையின் ஆற்றல் தேவைகளை சமப்படுத்த வேண்டும்.

"ஆம், நிலக்கரி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்க திட்டங்கள் உள்ளன, ஆனால் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விரிவாக்கத்தின் அடிப்படையில் நாங்கள் மிகச் சிறப்பாக செயல்படுகிறோம்" என்று இந்தியாவின் டெரி-யின் ஸ்ரீவஸ்தவா கூறினார்.

(ஷெட்டி, இந்தியா ஸ்பெண்ட் செய்தி பணியாளர்; மற்றும் ரெஹாம் அல்-ஃபர்ரா மெமோரியல் ஜர்னலிசம் பெல்லோஷிப் சார்பில், ஐக்கிய நாடுகள் சபையில் இருந்து கட்டுரை வழங்கியுள்ளார்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.