பெங்களூரு:கேரளாவில் 2018ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்குபிறகு, அரசின் முன்னுரிமைகளில்ஒன்றாக தொற்றுநோய் இருந்தது. சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் தகவல் புதுப்பிப்புகள், சந்திப்புகள் மற்றும் தகவல்களை பரிமாறிக் கொள்ளுதல் ஆகியன அப்போதைய கேரள கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த ராஜீவ் சதானந்தனுக்கு தினசரி வழக்கமாக இருந்தன. அவர் மாநில சுகாதாரத்துறை அமைச்சரான கே.கே. ஷைலாஜாவுடன் இணைந்து பணியாற்றிவர் மற்றும் அந்த முக்கியமான கால கட்டத்தில் சுகாதாரத்துறைக்கு தலைமை தாங்கி இருந்தவர்.

சதானந்தனுக்கும் அவரது குழுவுக்கும் இத்தகைய சுகாதார நெருக்கடிகளை எதிர்கொள்வது, அது முதல்முறையல்ல. பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு தான், 2018 மே மாதம் கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவி, 17 பேர் கொல்லப்பட்டனர். நிபாவை கட்டுப்படுத்துவதற்கான ஒரு உத்தியை உருவாக்குவதிலும் செயல்படுத்துவதிலும் அவர் முக்கிய பங்கு வகித்தார், மேலும் இரண்டாம் முறை அது பரவுவதை முன்கூட்டியே அறிவித்தார். இது ஜூன் 2019 இல் நடந்தது. “நிபாவுடன் நாங்கள் முன்பின் தெரியாத ஒரு வைரஸை கையாண்டோம், அது மன அழுத்தமாக இருந்தது” என்று சதானந்தன் செப்டம்பர் 2018 இல் எங்களிடம் கூறிஇருந்தார்.

"சுகாதார அமைப்பின் பின்னடைவை, காலப்போக்கில் நாம் கட்டமைக்க வேண்டும்," என்று இப்போது இந்திய நிர்வாக சேவையில் இருந்து ஓய்வு பெற்ற சதானந்தன் கூறினார்; ஏனெனில் இந்தியாவில் கொவிட் - 19பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கொவிட் -19 வைரஸ் பாதிப்பு, இதுவரை 31 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது என்று மார்ச் 6, 2020 அரசு செய்திக்குறிப்பில்குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது மார்ச் 2, 2020 முதல்,மேலும் 26 நோயாளிகள் அறிகுறியுடன் கண்டறியப்பட்டுள்ளனர். உலக சுகாதார அமைப்பு (WHO) அறிக்கையின்படி, 2020 மார்ச் 5 ஆம் தேதி உலகளவில் 95,333 கொவிட உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் மற்றும் 3,282 இறப்புகள் நிகழ்ந்துள்ளன. இது மார்ச் 5, 2020 வரையிலான ஒரு மாதத்தில் உலகளவில் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 288% அதிகரிப்பு ஆகும்.

"அவசரகாலத்தின் போது நெருக்கடிநிலையை சமாளிக்க போதுமான சுகாதார முறையை நம்மால் உருவாக்க முடியாது," என்று அவர் கூறினார். நகரங்களையும், பல லட்சக்கணக்கான மக்களையும் சீனா அடைத்து வைத்தாலும் இந்தியாவில் "இது கட்டாயமாக செய்யப்படும் என்பதை அவர் முன்கூட்டியே பார்க்கவில்லை" என்றார்.

கேரளாவின் சுகாதாரச்செயலாளராக இருந்த மூன்று பதவிக்காலங்களில், சதானந்தன் மாநிலத்தில் சுகாதார அமைப்பில் மாற்றங்களை தொடங்கினார், அவை, முதன்மை பராமரிப்பு, நோய் தடுப்பு மற்றும் சுகாதார மேம்பாட்டுத் திட்டங்களை வடிவமைத்தல் மற்றும் செயல்படுத்துதல், சமூக மற்றும் தொற்றுநோயியல் தீர்மானிப்பாளர்களை சுகாதாரப்பாதுகாப்புடன் ஒருங்கிணைத்தல், சுகாதாரத்தை மேம்படுத்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் ஆகியனவாகும். தேசிய சமூக சுகாதாரத்திட்டமான ராஷ்டிரிய ஸ்வஸ்திய பீமா யோஜனாவின்தலைமை செயல் அதிகாரியாக (சி.இ.ஓ.) பணியாற்றினார்.

அவர் யு.என்.எ.ஐ.டி.எஸ். (UNAIDS) மற்றும் உலக சுகாதார அமைப்பால்(WHO) உருவாக்கப்பட்ட தொழில்நுட்பக் குழுக்களில் உறுப்பினராக இருந்துள்ளார். சதானந்தன் தற்போது ஹெல்த் சிஸ்டம் டிரான்ஸ்ஃபர்மேஷன் பிளாட்ஃபார்ம் என்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார்; இலாப நோக்கற்ற இந்த நிறுவனம், சுகாதார அமைப்புகள் ஆராய்ச்சியை மேற்கொள்கிறது; மேலும் சுகாதார அமைப்புகள் ஆராய்ச்சிக்கான இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவராக உள்ளார்.

இந்தியா ஸ்பெண்டிற்குஅவர் அளித்த பேட்டியில், அவர் கொவிட் -19 வைரஸ் மீதான நடவடிக்கை, நோய் பரவலை கையாள்வது குறித்த கருத்துக்கள் மற்றும் திறமையாக தகவல் பகிர்வதன் அவசியம் குறித்து பேசுகிறார்.

கேரளாவில் 2018ம் ஆண்டில் 17 பேரை கொன்ற நிபா வைரஸ் பரவலின் போது நீங்கள் கேரள சுகாதாரச்செயலாளராக இருந்தீர்கள். "நிபாவுடன் நாங்கள் முன்பின் தெரியாத ஒரு வைரஸைக் கையாண்டோம்; அது மன அழுத்தத்தை தந்தது" என்று நீங்கள் சொன்னீர்கள். நிபாவுக்கான நடவடிக்கையை நீங்கள் எவ்வாறு தற்போது ஒப்பிட்டுப் பார்க்கிறீர்கள். மிகக்கொடிய தொற்றுநோயான ஆனால் அபாயம் சற்று குறைந்த கொவிட்-19 வைரஸை எதிர்கொள்ள அரசு எவ்வாறு தயார்நிலையில் உள்ளது.

கொவித்-19 வேறுபட்டது. வுஹானில் மையம் கொண்டதில் தொடங்கி, இப்போது பல நாடுகளுக்கும் பரவி இருப்பதை நாம் அறிவோம். எனவே, அந்த மையப்பகுதியுடன் தொடர்பு கொண்டிருந்த எவரும் அதிக ஆபத்துள்ள நபராக இருக்கிறார்; அவர் கவனிக்கப்பட வேண்டும் மற்றும் நோயாளிகள் ஆரம்பத்திலேயே கவனிக்கப்பட வேண்டும். முதலிலேயே அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் மற்றும் அவருடன் தொடர்பில் உள்ளவர்களை கவனிக்க வேண்டும். இது பரவிய பகுதிகள் குறைவாக இருந்தபோது அது சாத்தியமாக இருந்தது; இப்போது அது இனி எளிதான காரியமல்ல. வளைகுடாவில் உள்ள பெரும்பாலான நாடுகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவில், சமூகத்தினர் மத்தியில் இது பரவத்தொடங்கினால் மிகவும் கடினமாகிவிடும். எனவே நடவடிக்க எடுத்தாக வேண்டும். இதற்காக நோயாளிகளை கண்டறிந்து புகார் தர முழு சுகாதார அமைப்பும் சமூகமும் அணி திரட்டப்பட வேண்டும். முறைசாராத அமைப்புகள் உட்பட தனியார் துறைக்கு, அறிகுறிகளையும் அடையாளம் காணவும் [பார்க்கவும் ] பயிற்சி அளிக்கப்பட வேண்டும். எனவே, கண்காணிப்பு முறையை சீரமைக்க வேண்டும்.

அதிர்ஷ்டவசமாக கொவிட்-19 வேகமாக பரவக்கூடியதாக இருந்தாலும் அது அவ்வளவு ஆபத்தானது அல்ல. 10% க்கும் குறைவானவர்களுக்கு தீவிர பராமரிப்பு மற்றும் 5% பேருக்கு தான் தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது. இதில், பிந்தையவர்களுக்கு ஆக்ஸிஜன் சிகிச்சை தேவைப்படும். பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை பெரிதாகிவிட்டால் இது கடினம். அரசும் தனியார் துறையும், தங்களது தீவிர சிகிச்சைக்கான திறனை அதிகரிக்க வேண்டும்; கூடுதல் பணியாளர்களை நியமிக்கவும் பயிற்சியளிக்கவும், பரிசோதிக்கவும் கூடுதல் கட்டிடங்களை அடையாளம் காணவும் [போர், இயற்கை பேரிடர் மண்டலங்கள் மற்றும் அவசர அறைகள் போன்ற அதிகபட்ச முடிவுகளுக்கு, வரையறுக்கப்பட்ட மருத்துவ வளங்கள் ஒதுக்கப்படும்போது நோயாளிகளுக்கு எவ்வாறு முன்னுரிமை அளிப்பது என்பதை தீர்மானிக்க] ஆயத்தமாக இருக்க வேண்டும். இதுபோன்ற நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பணம் செலுத்த வேண்டுமா என்பதை அரசு தீர்மானிக்க வேண்டும். சீனாவில் கண்டறிதல் சோதனைகள் மற்றும் சிகிச்சைகள் இலவசமாக செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொவிட் -19 உறுதி செய்யப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 31ஆக அதிகரித்துள்ளது. ஆரம்பத்தில் கேரளாவில் மூன்று பேர் இருந்தனர்; அவர்கள் குணமாகிவிட்டனர். மத்திய அரசின் ஆயத்த நிலையை எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள்?

தற்போதுள்ள நிலைமைக்கு, இத்தகைய ஆயத்தம் போதுமானது. ஆனால் நோய்த்தொற்றுகள் கணிசமாக அதிகரித்தால், திறன் பற்றாக்குறையால் கண்காணிப்பு என்பது முடியாததாகிவிடும். நோயாளி இறப்பு விகிதம் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 15%, 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனில் 8% [ஆய்வின் அடிப்படையில்] ஆகும்.

இந்தியாவில் சமூகத்தினர் மத்தியில் இது பரவத் தொடங்கினால், கூடுதலாக ஆக்ஸிஜன் தேவைப்படும் நபர்களின் எண்ணிக்கை பெரியதாக இருக்கும். இந்த சுமையை கையாள பெரும்பாலான இந்திய மாநிலங்களில் போதுமான வென்டிலேட்டர்களையோ, பயிற்சி பெற்ற ஊழியர்களையோ நாம் கொண்டிருக்கவில்லை. இது, வுஹானில் நடந்ததை போலவே சிகிச்சை தேவைப்படும் நபர்களைத் திருப்பிவிடும். கொவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான நெருக்கடி அதிகமாக இருப்பதால், சுகாதார ஊழியர்கள் தீவிர சிகிச்சை தேவைப்படும் பிற நோயாளிகளை கைவிட்டுவிடக்கூடும். வுஹானிலும் அப்படித்தான் நடந்தது.

கேரளாவில் வலுவான ஆரம்ப சுகாதார அமைப்பு உள்ளது மற்றும் பொதுமக்கள் அரசு சேவைகள் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். ஆனால், பொதுவாக தனியார் சுகாதார சேவையை பலரும் நம்புகின்றனர். இதில் திறமை மற்றும் ஒருங்கிணைப்புக்கான சவால்கள் மற்றும் அணுகுமுறைகள் என்ன?

தனியார் துறையில் அரசைவிட தீவிர சிகிச்சைக்கான படுக்கைகள் உள்ளன. அவற்றை எப்போதும் கிடைக்கும்படி கோரலாம். கேரளாவில், தேவை ஏற்படும் போது தனியார் மற்றும் அரசுத்துறைகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு மாநிலமும் தனியார் துறை உட்பட முழு சுகாதார அமைப்பின் திறனை அணிதிரட்ட வேண்டிய நேரம் இது. ஆனால் சிகிச்சைக்கான செலவை ஈடுசெய்ய அரசு ஒப்புக் கொள்ள வேண்டும். குறிப்பிடப்படும் ஒவ்வொரு நோயாளிக்கும் சிகிச்சை தர தனியார் மருத்துவமனைகளை கட்டாயப்படுத்த வேண்டும்.

இத்தகைய நோய் பரவலின் போது சிறந்த சர்வதேச நடைமுறைகள் யாவை? பொது சுகாதார அவசர காலங்களில் அரசு எவ்வாறு சிறந்த முறையில் செயலாற்ற வேண்டும், அது எவ்வாறு விழிப்புடன் இருக்க வேண்டும்?

எந்தவொரு பொது சுகாதார அவசரநிலையிலும் சிறந்த நடைமுறைகள் ஒன்றே: நோய் கண்டறியப்பட்ட மையப்பகுதியில் இருந்து பரவுவதற்கு எதிரான விழிப்புணர்வு; நோயாளிகளை முன்கூட்டியே கண்டறிவதற்கான கண்காணிப்பு; பாதிக்கப்பட்ட நபர்களை தனிமைப்படுத்துதல் மற்றும் சரியான பராமரிப்பு; அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்காணித்தல்; தகவல்களைப் பகிர்வதில் வெளிப்படைத்தன்மை; பரவிய மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் பொருளாதார மற்றும் உளவியல் தேவைகளை நிவர்த்தி செய்தல் ஆகியன தான். அரசு, சமூகத்தில் நம்பிக்கையை ஊக்குவிக்க வேண்டும்.

நிபா மற்றும் வெள்ளத்தை எதிர்கொண்ட கேரளாவின் அனுபவம் பிற மாநிலங்களுக்கு படிப்பினையாக உள்ளதா?

அவசர காலத்தில் நெருக்கடிக்கு செயலாற்ற போதுமான சுகாதார முறையை நம்மால் உருவாக்க முடியாது. சுகாதார அமைப்பில் உள்ள பின்னடைவு, காலப்போக்கில் கட்டமைக்கப்பட வேண்டும்.

அரசு, அக்கறையுடனும் திறமையுடனும் இருக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் அரசை நம்புவார்கள், பீதியடைய மாட்டார்கள். பீதியை பரப்பி, சூழ்நிலையில் இருந்து லாபம் ஈட்ட முயற்சிக்கும் நபர்கள் கடுமையாகவும் பகிரங்கமாகவும் தண்டிக்கப்பட வேண்டும்.

மிக முக்கியமானது, ஆரம்ப மற்றும் நம்பகமான தகவல்கள் தான். ஏற்கனவே உள்ள அமைப்புகளை பயன்படுத்தி தகவல்களை சேகரிக்கவும் பகுப்பாய்வு செய்யவும் புதியவற்றை வைக்க வேண்டும். தேவையான மருந்துகள் மற்றும் நுகர்பொருட்கள் தருவித்து போதுமான பொருட்களை இருப்பில் வைக்க வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, சரியான மற்றும் புலப்படக்கூடிய தலைமையை காட்டுவதாகும். அணியின் மன உறுதியானது ஆதரவான, பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் மற்றும் முடிவுகளை எடுக்க தைரியம் கொண்ட ஒரு தலைமையைப் பொறுத்தது.

அனைத்து சர்வதேச பயணிகளும் விமான நிலையங்களில் கண்காணிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. துறைமுகங்களில் வெப்ப கண்காணிப்புகள் போதுமானதா? பரந்த நிலப்பரப்பில் இவ்வளவு பெரிய மக்கள் இணைக்கப்பட்டுள்ள சூழலில், மாநில உள்கட்டமைப்பு இதை எவ்வாறு கையாளுகிறது?

அறிகுறி உள்ளவர்களை கண்காணிப்பது பயனுள்ளதாக இருக்கும். ஆனால் தற்போது அத்தகைய நபர்கள் ஒரு விமானத்தில் கூட செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். வெளிநாட்டில் இருந்து வந்த நோயாளிகள் பலருக்கு வருகையின் போது அதன் அறிகுறி இருக்காது. அவர்கள் தங்களது பகுதிகளுக்கு சமூகத்தவருடன் இரண்டற கலக்கும் போது, அங்கு அவர்களை கவனிக்க ஒரு அமைப்பு இருக்க வேண்டும்.

சமூகத்தின் ஆதரவை பெற்ற சமூக அளவிலான சுகாதார ஊழியர்களால் மட்டுமே இதைச் செய்ய முடியும். ஆனால், நகர்ப்புறங்களில் அத்தகைய பணியாளர்கள் இல்லை. நகர்ப்புற மக்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் நலச் சங்கங்களுடன் இணைந்து அரசு செயல்படும் வகையில் இது கட்டமைக்கப்பட வேண்டும்.

கொவிட் -19 வைரஸ் பரவுவதை தடுக்க சீனா வுஹானில் கிட்டத்தட்ட 11 மில்லியன் மக்களை தனிமைப்படுத்தியது. இதில், அடிப்படை சுதந்திரங்களுக்கு கட்டுப்பாடு என்பதில் பெரிய சிக்கல்கள் உள்ளன, அவை பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும். ஒரு நிர்வாகியாக, இதுபோன்ற பிரச்சினைகளை நாம் எவ்வாறு சமாளிப்பது மற்றும் இந்தியாவில் இத்தகைய கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு தகுதியானதா?

கொவிட் -19 ஐ மத்திய அரசு மட்டுமே [தனியாக] கையாள முடியாது. முக்கிய பங்கு மாநில அரசுகள், கிராம பஞ்சாயத்துகள்[கிராம சபைகள்] மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிடம் உள்ளன. இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட அதிவேக பரவல் பகுதி (சூப்பர் ஸ்ப்ரெடர்) உருவானால், அந்த பகுதியை அதிகபட்சம் 10 நாட்களுக்கு தான் தனிமைப்படுத்தி துண்டிக்க முடியும்.

ஆனால் இது போதுமானதாக இருக்காது; ஏனெனில் அதிக பரவல் உள்ல மையப்பகுதியில் நோயாளிகள் தொடர்ந்து வெளிப்படுவார்கள். இது தனிமைப்படுத்தலின் நீட்டிப்பு தேவைப்படுகிறது. இது கட்டாயமாக செய்யப்படுவதை நான் முன்கூட்டியே எதிர்பார்க்கவில்லை. ஆனால் வைரஸ் பற்றிய நம்பத்தகாத பயம் சமூகத்தின் அதிகாரப்பூர்வமற்ற தனிமைப்படுத்தலை ஏற்படுத்தும்.

சீனாவால் ஒரு சில நாட்களிலேயே சுகாதார வசதிகளை உருவாக்க முடிந்தது. இங்கு நோயாளிகளை கையாளும் முன்வரிசை சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மருத்துவர்களுக்கான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் சாதனங்களை வழங்க, இங்குள்ள சுகாதார உள்கட்டமைப்பு எவ்வளவு தயாராக உள்ளது? எச்சரிக்கை அல்லது பீதி ஏற்படுத்தாத சிறந்த அணுகுமுறை எது? இத்தகைய அணுகுமுறையை பின்பற்றக்கூடிய பிற நாடுகளும் உள்ளனவா?

தற்போதைய உள்கட்டமைப்பு ஒரு சிறிய அளவை கையாள எவ்வளவு தயாராக உள்ளது என்பது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும். தனிமைப்படுத்த பல கட்டிடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. சிலவற்றை பரிசோதனை மற்றும் வழக்கமான நிர்வாகத்திற்காக மாற்றலாம். ஆனால் போதுமான நோயறிதல் உபகரணங்கள் மற்றும் வென்டிலேட்டர்களைப் பெறுவதற்கான வாய்ப்பு, மற்றும் பணியாளர்களை நியமித்தல், பயிற்சி அளிப்பது என்பது இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் கடினமாக இருக்கும்.

நோய்த்தொற்றானது தண்ணீர் மற்றும் காற்று வழியாக பரவாததால் முழு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் தேவையில்லை. ஒரு சாதாரண நபருக்கு முகக்கவசம் இருந்தால் மட்டும் போது. ஒருவர் முகத்தைத் தொடுவதை தடுப்பதே சிறந்தது என்பதை பொதுமக்களுக்குக் கற்பிக்க வேண்டும். வாய் மற்றும் மூக்கை ஒரு துணியால் மூடி இதைச் செய்யலாம்.

புதுடெல்லி, தெலுங்கானா, கேரளா, ஜெய்ப்பூர் மற்றும் ஆக்ரா உள்ளிட்ட நாடு முழுவதும் கொவிட் -19 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஒரு மாநில அரசுக்கும், பிற மாநில அரசுகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பு மிக முக்கியமானதாகத் தெரிகிறது. ஒரு ஒத்திசைவான பொது சுகாதார உத்திகள் மற்றும் செயல்பாடுகளை உறுதிப்படுத்த இதை எவ்வாறு சிறப்பாக நிர்வகிக்க முடியும்?

தொடர்புகளை கண்டறிய, தகவல்களைப் பகிர்வது மிகவும் பயனுள்ள ஒன்றாக இருக்கும். தேவையான ஒருங்கிணைப்பை வழங்க, நோயறிதல் மையம், சரியான இடத்தில் அமைக்கப்பட வேண்டும்.

மாட்டுச்சாணம் மற்றும் பசு கோமியம், பாரம்பரிய மருத்துவம், யோகா போன்றவை, கொரோனா பரவலை தவிர்க்கும் இயற்கை வைத்தியங்கள் என்ற தவறான தகவல்கள் உள்ளன. சமூக வலைதள ஊடகங்களின் தகவல்களை பரப்புவது எவ்வளவு முக்கியமானது? வதந்தியை தடுக்க மாநிலங்களும், மத்திய அரசும் எவ்வாறு ஒருங்கிணைய வேண்டும்?

இதுபோன்ற தவறான தகவல்கள் பரப்புவோரை சகித்துக் கொண்டிருக்கக் கூடாது என்ற அணுகுமுறையை எடுப்பது முக்கியம். நிபா வைரஸ் பரவலின் போது ஊடகங்களுக்கு கேரள அரசு இது பற்றி பாடம் நடத்தி, அவர்களையும் இதில் ஈடுபடச் செய்தோம். இது குறித்த பாடங்களை எடுத்துச் செல்வது, தவறான பிரச்சாரத்தை உடைப்பது மற்றும் பரபரப்பைத் தவிர்ப்பது ஆகியவை இதில் அடங்கும். பதிலுக்கு அவர்களுக்கு முழு தகவலையும் அணுகுவதற்கான வாய்ப்பு உறுதி செய்யப்பட்டது. இது நன்றாக கைகொடுத்தது; கேரளாவில் ஒரு நிலையான நடைமுறையாக இது மாறியுள்ளது. பிரதான ஊடகங்களுடன் இதேபோன்ற ஈடுபாடு இருக்க வேண்டும்.

சமூக ஊடகங்களை, சமூக ஊடகங்கள் வாயிலாகவே முக்கியமாக நிர்வகிக்க வேண்டும். சுகாதாரத்துறையின் முகநூல் பக்கம் மட்டுமே ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளித்து மற்றும் துல்லியமான தகவல்கள் வழங்கும் முக்கிய ஆதாரமாக இருந்தது. இது, பரவக்கூடிய தவறான செய்திகளையும் அடையாளம் காட்டி நீக்கியது. அனைத்து மாநில மற்றும் மத்திய அரசுஊடகங்களிலும் இதை செயல்பட வேண்டும்.

தற்போதைய தகவல் தொழில்நுட்பச் சட்டம், பீதி, தவறான தகவல் மற்றும் வதந்தியை பரப்பும் நபர்களுக்கு தண்டனை வழங்குகிறது. இதை பயன்படுத்த வேண்டும், பொய்யான தகவல்களைப் பரப்பும் மக்கள் தங்கள் செயலுக்கு தண்டிக்கப்பட வேண்டும். இயற்கையான தீர்வு அந்த வகையில் வராது. துல்லியமான தகவல்களை வழங்குவதே, இவ்விஷயத்தில் சிறந்த செயல்பாடாக இருக்கும்.

(பல்லியாத், இந்தியா ஸ்பெண்ட்பகுப்பாய்வாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.