புதுடெல்லி: மஹாராஷ்டிராவின் அவுரங்காபாத் அடுத்த புலாம்பரியில், டேங்கர் லாரி - சாலையில் உள்ள புழுதியை கட்டுப்படுத்த தண்ணீர் தெளித்தபடி சென்ற போது - பின்னால் தண்ணீர் பிடிக்க காலி பாத்திரங்களுடன் ஓடும் பெண்களின் வீடியோ, 2019 ஜூன் 2இல் சமூக வலைதளங்களில் வைரலானது.

கர்நாடகாவில் 80%, மகாராஷ்டிராவில் 72% மாவட்டங்கள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டு, சாகுபடி பொய்த்துவிட்டது; இந்த இரண்டு மாநிலங்களிலும் மட்டும் 82 லட்சம் விவசாயிகள் வாழ்வாதாரத்திற்கு போராடுகிறார்கள். வறட்சி தாக்கிய மஹாராஷ்டிராவில் தினமும் 4,920 கிராமங்கள் மற்றும் 10,506 குக்கிராமங்கள் அல்லது குடியேற்றங்கள் (பஸ்திஸ்) 6,000 க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது; இரு மாநிலங்களுக்கும் பொதுவான நீர் ஆதாரங்களை பகிர்வதில் மோதல் உள்ளது.

மேலும் தெற்கில் எடுத்துக் கொண்டால், தமிழக அரசு பல்வேறு அவசர தண்ணீர் திட்டங்களுக்காக ரூ. 233 கோடியை ஒதுக்கி உள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் நான்கு நீர்த்தேக்கங்களில் நீர்இருப்பு 1% என்று குறைந்து, கடும் தண்ணீர் பிரச்சனையை ஏற்படுத்தியது; இதனால், சென்னை மெட்ரோ திட்டமே தற்காலிகமாக முடங்கியது. வினியோகிக்கும் நீரிலும் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுவதாக புகார் எழுந்தது.

கர்நாடகாவில் உள்ள மாவட்டங்களில் நிலவும் கடும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக, பள்ளிகள் திறப்பு மேலும் ஒரு வாரத்திற்கு தள்ளிப்போடப்பட்டு மூடப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டிலும் மகாராஷ்டிராவிலும் கோடை கால பயிர் சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இதே நிலை என்று, இந்தியா தற்போது ஒரு கடுமையான தண்ணீர் பிரச்சனையை அனுபவித்து வரும் நிலையில், அதை நாம் பிறகு விவரிக்க இருக்கிறோம். இந்தியாவின் மழைப்பொழிவில் 80% கொண்டுள்ள தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு எப்படியிருந்தாலும், வட மற்றும் தென் இந்தியாவில் தாமதமாகவும் இயல்பு அளவை விட குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மே 30, 2019ன் படி, நாட்டில் 43.4% க்கும் அதிகமான பகுதிகள் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளதாக, ஒரு உண்மையான வறட்சி கண்காணிக்கும் தளமான முன்கூட்டியே வறட்சியை எச்சரிக்கை அமைப்பு (Drought Early Warning System - DEWS) தெரிவித்துள்ளது. தற்போதைய சூழலுக்கு பருவ மழை தவறியதே முக்கிய காரணம். 2015ஆம் ஆண்டு முதல், 2017 தவிர்த்து ஒவ்வொரு ஆண்டும் பரவலாக வறட்சியை இந்தியா அனுபவித்து வருவதாக, ஏப்ரல் 3, 2019 இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.

வடகிழக்கு பருவ மழை அதாவது 'பருவ மழைக்கு பிநதைய மழை' (அக்டோபர்-டிசம்பர்) - இது இந்தியாவின் மொத்த மழைப்பொழிவில் 10-20% அளவை வழங்குகிறது - நீண்ட கால இயல்பு அளவான 127.2 மி.மீ. என்பதை விட 2018 ஆம் ஆண்டில் 44% குறைவாக பதிவானதாக, இந்திய வானிலை ஆய்வு மைய (IMD) தரவுகள் தெரிவிக்கின்றன. இது தென்மேற்கு பருவமழை (ஜூன்-செப்டம்பர்) மழை பற்றாக்குறையை அதிகரித்துள்ளது; 2018இல் இது 9.4% குறைவாக பெய்ததால் வறட்சி என்று இந்திய வானிலை மையம் அறிவித்ததை, இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை கூறுகிறது.

மழைக்காலத்திற்கு முந்தைய மழைப்பொழிவு (மார்ச் 1-மே 31) 2019 ஆம் ஆண்டில், கடந்த 65 ஆண்டுகளில் மிகக் குறைவான அளவாக இருந்தது.

இந்தியாவின் மேற்பரப்பு மற்றும் நிலத்தடி நீர் வளங்கள் தொடர்ந்து சரிந்து வரும் சூழலில், பருவ மழையளவு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது; இதை நாங்கள் பிறகு விவரிக்கிறோம்.

இந்தியாவின் 91 முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு அளவு, மே 30, 2019ன் படி, 20% ஆக சரிந்தன. இது கடந்த ஆண்டைவிடவும், மற்றும் கடந்த பத்து ஆண்டின் சராசரி அளவைக் காட்டிலும் குறைவாக உள்ளது.

நாட்டில் நிலவும் தண்ணீர் பிரச்சனையை சமாளிக்க - மக்கள் தொகையில் 60 கோடி பேர் ஒவ்வொரு ஆண்டும் "அதி -தீவிர" தண்ணீர் நெருக்கடியை எதிர்கொள்ளும் சூழலில் - இரண்டாவது முறையாக மே 31, 2019 இல் பதவியேற்றா நரேந்திர மோடி தலைமையிலான அரசு, 'நல் சீ ஜல்' என்ற திட்டத்தின் கீழ் வரும் 2024ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் குடிநீர் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ், இந்த பணி நிறைவேற்றப்படும்; இந்த அமைச்சகம் நீர்வளத்துறை மற்றும் நதி மேம்பாட்டு அமைச்சகங்கள், தூய்மை கங்கை திட்டம் ஆகிங்களை ஒருங்கிணைக்கிறது.

இந்த திட்டத்தின் முதல் சவால், தண்ணீரை கிடைக்க செய்வதில் இருக்கிறது.

இந்தியாவின் குறைந்து வரும் நீர் வளங்கள்

மேற்பரப்பு மற்றும் நிலத்தடி நீர் உட்பட இந்தியாவின் மொத்த நீர் ஆதார அடிப்படை 2,518 பில்லியன் கன மீட்டர் -பிசிஎம் (bcm) ஆகும். மாசுபடுதல் காரணமாக இந்தியாவில், 1,869 பிசிஎம் மேற்பரப்பு நீர் ஆதாரங்களின் 690 பிசிஎம் (37%) மட்டுமே பயன்படுத்தப்படலாம். 400 பிசிஎம் நிலத்தடி நீரில் 230 பிசிஎம் (58%) மட்டுமே அணுகத்தக்கதாக உள்ளது என, அரசின் பொருளாதார கொள்கைகளை வகுக்கும் அமைப்பான நிதி ஆயோக்கின் 2018 அறிக்கையின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் தண்ணீர் தேவைகளில் 40% பூர்த்தி செய்யும் நிலத்தடி நீரானது நீடித்த வீதத்தில் சரிந்து வந்துள்ளதாக, நிதி ஆயோக் தெரிவிக்கிறது. உலகின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வளம் கொண்டுள்ளது இந்தியா - இது உலக மொத்த இருப்பில் 12%. ஒரு ஆய்வு முடிவின்படி, 21 இந்திய நகரங்களில் - டெல்லி, பெங்களூரு, சென்னை மற்றும் ஹைதராபாத் உட்பட - வரும் 2020ஆம் ஆண்டு வாக்கில் நிலத்தடி நீர் வற்றிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது; இது, 10 கோடி மக்களை பாதிக்கும்; இந்தியாவின் மக்கள்தொகையில் 40% மக்களுக்கு 2030 வாக்கில் குடிநீர் கிடைக்காது என்று அறிக்கை கூறுகிறது.

இதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் செயல்படுத்தப்படவில்லை என்றால், தண்ணீரின் தேவை அதிகரித்து, 2050 ஆம் ஆண்டுக்குள் இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% இழப்பை சந்திக்கும் என்று கூறும் நிதி ஆயோக் அறிக்கை, மேலும் மாநிலங்களிடம் இருந்து “உடனடி நடவடிக்கை” தேவை என்கிறது. இத்தகைய குடிநீர் பற்றாக்குறை, நாட்டின் சுகாதார சுமையை அதிகரிக்கும்: தற்போது, ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் பாதுகாப்பான குடிநீர் கிடைக்காமல் 200,000 பேர் இறந்து போகின்றனர்.

உலகளாவிய தூய்மையான நீரில் இந்தியா 4% மற்றும் அதன் மக்கள் தொகையில் 16% கொண்டுள்ளது. ஏறக்குறைய 70% நீர் அசுத்தம் அடைந்து இருப்பதுடன், உலகளாவிய நீர்தர குறியீட்டில் 122 நாடுகளில் 120வது இடத்தில் இந்தியா உள்ளதாக, நிதி ஆயோக் அறிக்கை தெரிவிக்கிறது. இந்த ஆய்வு, நிலத்தடி நீர், நீர்ப்பாசனம், பண்ணை நடைமுறைகள் மற்றும் குடிநீர் உட்பட ஒன்பது பரந்த துறைகளில் 24 மாநிலங்கள் மற்றும் 28 குறிகாட்டிகளை பகுப்பாய்வு செய்து தரவரிசைப்படுத்தியது.

நிலத்தடி நீர் பெருக்கலில், 24 மாநிலங்களில் 10, 50 சதவீதத்திற்கும் குறைவாக குறைந்து, மோசமடைந்த நிலைமையை உயர்த்தி காட்டுகிறது: இந்தியாவின் நிலத்தடி நீர் கிணறுகளில் 54 சதவிகிதம் குறைந்து வருகின்றன.

கடந்த 2015-16ல், 24 மாநிலங்களில் உள்ள 14 பகுதிகள் தண்ணீர் முகாமைத்துவத்தில் 50% க்கும் குறைவாக மதிப்பீட்டை பெற்று, "குறைந்த செயல்திறன்" என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மாநிலங்கள் வடக்கு, கிழக்கு இந்தியாவிலும் மற்றும் இமாலய பகுதி மாநிலங்களிலும் உள்ள மக்கள்தொகை நிறைந்த வேளாண் பகுதியை சுற்றி அமைந்துள்ளது.

குஜராத்தில் 76% மதிப்பெண்களுடன் முதலிடம் வகிக்கிறது. அதை தொடர்ந்து மத்தியப் பிரதேசம் (69%), ஆந்திரா (68%).

ஏழு மாநிலங்கள் - கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப், தமிழ்நாடு, தெலுங்கானா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் திரிபுரா - ஆகியன 50-65% மதிப்பெண்களை பெற்று "நடுத்தர செயல்பாட்டாளர்கள் " என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

"நீர் குறியீட்டு மதிப்பீடுகள் மாநிலங்களுக்கு மாநிலம் பரவலாக வேறுபடுகின்றன; ஆனால் பெரும்பாலான மாநிலங்கள் 50% க்கும் குறைவான மதிப்பெண்களையே கொண்டுள்ளன; அவற்றின் நீர் ஆதார மேலாண்மை நடைமுறைகள் கணிசமாக மேம்படுத்த வேண்டும்" என்று அறிக்கை கூறுகிறது.

Source: Composite Water Management Index, NITI Aayog

நிலமை எவ்வாறு மோசமடைந்துள்ளது

தென்மேற்கு பருவமழை 2018 இல் தவறினாலும், 2015 க்குப் பிறகு தொடர்ச்சியான வறட்சிக்கு முந்தைய ஆண்டு, நாம் எற்கனவே கூறியவாறு 2019 ம் ஆண்டு முற்பகுதி மழைக்கால (மார்ச் 1 முதல் மே 31 வரை) மழைப்பதிவு - 65 ஆண்டுகளில் இல்லாதவாறு - மிகக்குறைவாகவே பெய்ததாக, வானிலை ஆய்வு மைய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

தெற்கு தீபகற்பத்தில் - ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் உட்பட- மழைக்காலத்திற்கு முந்தைய ஆற்றுப் படுகையில் பதிவாகும் மழையும் குறைந்ததாக, வானிலை ஆய்வு மைய தரவுகள் தெரிவிக்கின்றன.

Source: India Meteorological Department

தென் தீபகற்பத்தின் படுகைகள் மற்றும் மத்திய இந்தியா பகுதிகள் மழை "பற்றாக்குறை" (-59% முதல் -20% வரை) மற்றும் "அதிக பற்றாக்குறை" (-99% முதல் -60% வரை) உள்ள பகுதிகள்.

மழை பற்றாக்குறை நிலவுவதால் இந்த பகுதிகளில் உள்ளவர்கள் தங்களது நீர்த்தேக்கங்களை பயன்படுத்தியாக வேண்டும். மே 30, 2019 அன்றின்படி, 91 நீர்த்தேக்கங்களில் சராசரி நீர் இருப்பு 20% என்று சரிந்தது; ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள 31 நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு, 11% என்றளவிலேயே இருந்தது.

மேற்கு பகுதியில் இருக்கும் 27 பெரிய நீர்த்தேக்கங்களில் -குஜராத் மற்றும் மகாராஷ்டிராவை உள்ளடக்கிய - நீர் இருப்பு அளவானது 11% என்று சரிந்தது. வெப்பநிலையானது 50 டிகிரி செல்சியஸ் (டிகிரி சி) என்ற அளவை கடந்து சுட்டெரித்து, இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களை பொசுக்கிக் கொண்டிருக்கிறது. இத்தகைய வெப்பக்காற்றால் நீர் ஆவியாகி தண்ணீர் இல்லாமையை அதிகப்படுத்தியது. நாட்டின் அதிகபட்ச வெப்பநிலை 50.8 டிகிரி செல்சியஸில் ஜூன் 2, 2019 அன்று மேற்கு ராஜஸ்தானில் உள்ள சாரு பகுதி அனுபவித்தது; அடுத்து 49.6 டிகிரி செல்சியஸ், ஸ்ரீ கங்கநகரில் பதிவானது. இந்தியாவிந் எட்டு வெப்பமான இடங்களில் உள்ள இந்த இரு நகரங்களும், உலகின் 15 மிக வெப்பமான இடங்களின் பட்டியலிலும் உள்ளன.

கடந்த எட்டு அல்லது ஒன்பது ஆண்டுகளில் இந்தியா கடும் வறட்சியை எதிர்கொண்டது என்பது, கடந்த நூற்றாண்டில் மழைச்சரிவு குறித்த தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இன்னும், ஐந்து மாவட்டங்களில் மூன்று வறட்சியை எதிர்கொள்ள தயாராக இல்லை என, இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, இந்தூர் மற்றும் கவுஹாத்தி வெளியிட்ட 2018 செப்டம்பர் அறிக்கை தெரிவிப்பதாக, ஏப்ரல் 3, 2019 இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.

சுமார் 634 மாவட்டங்களில் குறைந்தபட்சம் 133 மாவட்டங்கள் ஒவ்வொரு வருடமும் கடும் வறட்சியை எதிர்கொள்கின்றன; அவற்றில் பெரும்பாலும் சத்தீஸ்கர், கர்நாடகா, மஹாராஷ்ட்ரா மற்றும் ராஜஸ்தான் ஆகியன உள்ளன. தண்ணீர் காலநிலை பாதிப்புகளை மாவட்டங்களில் தண்ணீரை எப்படி பயன்படுத்தி சமாளிக்கின்றன என்பது மதிப்பிட்டுள்ளது.

இந்தியா தனது நீர் வளத்தை எவ்வாறு நிர்வகிக்க முடியும்

திறமையான நீர்ப்பாசன முறைகளைப் பயன்படுத்துவது, இந்திய நகரங்களில் மழைநீர் சேமிப்பு மேற்கொள்வது, நிலத்தடி நீர் பயன்பாட்டு முறையை ஒழுங்குபடுத்த, நகர்ப்புற நீர் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது, நீர் மறுசுழற்சி திறன் அதிகரிப்பது போன்றவை, இந்தியா முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசர நடவடிக்கைகள் ஆகும் என்று, நிபுணர்கள் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தனர்.

நாட்டில் உள்ள அனைத்து நீர்வள ஆதாரங்களில் 80% வரை விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இத்துறையில் நீர் பயன்பாட்டை முறைப்படுத்துவது மிக முக்கியம் என்று நிதி ஆயோக் கூறுகிறது. இந்தியாவில் நீர் நுகர்வுகளில் 4% மட்டுமே குடிநீர் பயன்பாடு ஆகும்.

இந்தியா, அதன் நிகர சாகுபடி பரப்பளவில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேல் - அதாவது 14 கோடி ஹெக்டேர் - நுண்நீர் பாசன திட்டத்தின் கீழ் கொண்டு வரும் சாத்தியம் உள்ளது; ஆனால் இதுவரை 7.73 லட்சம் ஹெக்டேர் (mha) மட்டுமே - இதில் சொட்டு நீர் பாசனம் 3.37 லட்சம் ஹெக்டேர் மற்றும் தெளிப்பு நீர்ப்பாசனம் 4.36 லட்சம் ஹெக்டேர் -- உள்ளது; இது, 69.5 லட்சம் ஹெக்டேருக்கு நுண்நீர் என்ற மதிப்பீட்டின் அடிப்படையிலானது என்று, வேர்ல்டு ரிசோர்ஸ் இன்ஸ்டிடியூட் சேர்ந்த நீர் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கான நிபுணரான சாம்ரட் பசாக் கூறியதை சுட்டிக்காட்டி, ஜூன் 25, 2018 அன்று இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்திருந்தது.

தெளிப்பு நீர்ப்பாசனம் முறையில் 30-40% அளவுக்கு தண்ணீரை குறைவாக பயன்படுத்தலாம்; சொட்டு நீர்ப்பாசன முறையில், 40-60% குறைவான நீரை பயன்படுத்த முடியும் என்பதை ஆராய்ச்சிகள் காட்டுவதாக, அவர் மேலும் கூறினார்.

நிலத்தடி நீரை அதிகரிப்பது பற்றிய செயல்திறன் குறிப்பிடத்தக்க அளவில் நிலத்தடி நீரின் கட்டுப்பாடுகள் மற்றும் கடுமையான நடைமுறைகளை வலுப்படுத்துவதன் மூலம் மேம்படுத்த முடியும். கண்காணிப்பு அமைப்பில் முன்னேற்றம் மற்றும் நிலத்தடி நீர் மற்றும் அதன் தரத்தை தொடர்ந்து கண்காணித்தல், மழைநீர் சேமிக்க தொடர்ச்சியான செயல்பாடு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும் என்று பசாக் குறிப்பிட்டார்.

கடந்த 2018 ஜூன் மாதத்தின்படி, மத்திய நிலத்தடி நீர் வாரியம் - இது நாட்டின் நிலத்தடி நீர் ஆதாரங்களை கண்காணிக்கவும், நிர்வகிக்கவும் அதிகாரம் கொண்ட அமைப்பு - இந்தியாவில் 22,339 நிலத்தடி நீர் கண்காணிப்பு கிணறுகள் கொண்ட ஒரு அமைப்பை கொண்டுள்ளது. அதாவது இது மைசூர் நகரின் அளவுள்ள, சுமார் 147 சதுர கிமீ அளவிற்கு ஒரு கண்காணிப்புப் புள்ளியாகும்.

இந்தியாவுக்கு தற்போது "தேசிய நகர்ப்புற நீர் கொள்கை, இது ஒரு நீர் ஸ்மார்ட் நகரம் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கும்: மழைநீரை அதன் முழுத் திறனுடன் சேமிக்க வேண்டும், நிலத்தடி நீர் மறுசீரமைப்பு மற்றும் நிலத்தடி நீர் பயன்பாட்டை கட்டுப்படுத்துதல் " போன்ற தேவை உள்ளது என்று, தெற்காசிய அணைகளுக்கான அமைப்பு மற்றும் ஆறுகள் மக்கள் ஒருங்கிணைப்பாளர் ஹிமான்ஷு தக்கர், இந்தியா ஸ்பெண்டிடம் கூறினார். "நிலத்தடி நீர் மற்றும் உள்ளூர் நீர் அமைப்புகளை பாதுகாத்தல் மிக அவசியம்" என்றார் அவர்.

நதிகளை சுத்தப்படுத்த பல ஆயிரம் கோடி ரூபாய்களிய செலவழிப்பதற்கு பதிலாக, நதி நீரை மாசுபடுத்தும் தொழில்சாலைகள் மற்றும் பொதுமக்களை தடுக்கக்கூடிய, ஆறு பாதுகாப்பு தொடர்பான ஒரு சட்டத்திய அரசு முன்மொழிய வேண்டும் என்று, பீஸ் (PEACE) அறக்கட்டளை நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் யமுனா ஜீய அப்யானின் தலைவரான மனோஜ் மிஸ்ரா, இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். "ஆறுகளில் கலக்கும் தண்ணீரை சுத்தம் செய்வதற்கு பதிலாக, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து "நமது கழிவுகளை சுத்தப்படுத்தவும், மறுசுழற்சி செய்து குடிநீர் அல்லாத பிற தேவைகளுக்கு பயன்படுத்த செய்யப்பட வேண்டும்" என்று அவர் மேலும் தெரிவித்தார். தற்போது இந்தியாவில் கழிவுநீரில் 63% சுத்திகரிக்கப்படுவதில்லை.

(ஷர்மா, ஒரு பயிற்சியாளர்; திரிபாதி, இந்தியா ஸ்பெண்ட் முதன்மை செய்தியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.