பெங்களூரு: இந்தியாவின் கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டமான 'மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்' (MGNREGS - எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ்), தனது ஊதியத்தை அணுகுவதில் பல தாமதங்களையும் தடைகளையும் எதிர்கொண்டதாக, மூன்று மாநிலங்களில் கணக்கெடுப்பு நடத்திய வெளிப்படைத்தன்மை திட்ட அமைப்பான லிப்டெக் இந்தியா கண்டறிந்துள்ளது. தாமதமான ஊதியம் வழங்குதல், தொழிலாளர்களுக்கு மிகவும் சாதாரணமாகிவிட்டன, மாதக்கணக்கில் ஊதியம் தாமதமாக வழங்குவது, இத்திட்டத்தின் கீழ் தங்களது உரிமைகளை மீறுவதாகும் என்பதை அவர்கள் அறியவில்லை என்று கணக்கெடுப்பு குறிப்பிட்டது.

கடந்த 2018 செப்டம்பர் மற்றும் நவம்பருக்கு இடையில் ஆந்திரா மற்றும் ராஜஸ்தானில் தலா ஒரு ஒன்றியத்தில் 1,947 தொழிலாளர்களிடம் நடத்திய 'கடைசி மைளின் நீளம்' என்ற தலைப்பிலான கணக்கெடுப்பில், ஊதியத்தை அணுகுவதில் எதிர்கொள்ளும் கஷ்டங்களின் தன்மை, வங்கி விதிமுறைகளைப் பற்றிய விழிப்புணர்வு, தகவல்களை அணுகல், திட்டத்தின் கீழ் குறை தீர்க்கல், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் குறித்த எம்.ஜி.என்.ஆர்.ஜி.எஸ் தொழிலாளர்களின் பார்வைகள் கிடைக்கப்பெற்றன. கணக்கெடுப்பின் அடிப்படையிலான அறிக்கை 2020 நவம்பர் 18 அன்று வெளியிடப்பட்டது.

கூலியைப் பெற பலமுறை வந்து செல்ல வேண்டும், பல்வேறு விநியோக முகமைகளில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும், ஒவ்வொரு முறை வந்து செல்லும் பயணத்திற்கு ரூ .6 முதல் 67 ரூபாய் வரை செலவிட வேண்டும் என்று, ஆய்வில் பதிலளித்தவர்கள் கூறியதாக கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. பல பயணங்களும் நீண்ட காத்திருப்புகளும் தொழிலாளர்கள் தங்கள் எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ் நிலுவைத் தொகையைச் சேகரிப்பதற்காக மேலும் வருவாயை இழக்க வேண்டியிருந்தது என்பதையே குறிக்கிறது.

கணக்கெடுக்கப்பட்ட தொழிலாளர்களில் கிட்டத்தட்ட 13% பேர், பணப்பட்டுவாடா நிராகரிக்கப்பட்டதாக கூறினர், அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு நிராகரிப்பதற்கான காரணம் கூறப்படவில்லை. அதாவது இந்த நபர்களுக்கு எதிர்கால ஊதிய பட்டுவாடா தொடர்ந்து நிராகரிக்கப்படும் என்று கணக்கெடுப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பணப்பட்டுவாடா நிராகரிக்கப்பட்டவர்களில் 6.3% தொழிலாளர்கள் மட்டுமே எழுத்துபூர்வமாக புகார் அளித்தனர், அதில் 60% பேர் தங்களது புகார் திருப்திகரமாக தீர்க்கப்படவில்லை, அல்லது பதில் இல்லை என்று கூறியுள்ளனர். ஒரு வலுவான குறை தீர்க்கும் முறையால் மட்டுமே இதை சரிசெய்ய முடியும் என்று நிபுணர்கள் இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தனர்.

ஒவ்வொரு கிராமப்புற குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 100 நாட்கள் திறன் குறைந்த வேலைக்கு உத்தரவாதம் அளிக்கும் 15 ஆண்டு பழமையான எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ் திட்டத்தில் சுமார் 14 கோடி தொழிலாளர்கள் உள்ளனர். நாடு தழுவிய கோவிட்-19 ஊரடங்கில் இருந்து அமைப்புசாரா துறையில் திடீரென வேலை இழப்புக்கள் ஏற்பட்ட நிலையில், கிராமப்புற துயரத்தின் பொருளாதார துயரங்களைத் தாண்டி குடியிருப்பாளர்களுக்கு உதவுவதில் எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ் பங்களிப்பு குறைந்து வருவதாக இந்தியா ஸ்பெண்ட் ஆகஸ்ட் கட்டுரை தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் சுமார் 42 லட்சம் நிராகரிக்கப்பட்ட ஊதிய பரிவர்த்தனைகள் தீர்வுக்கு, நிலுவையில் உள்ளன.

ஊதியம் பெற 'கடைசி தொலைவிற்கு' பலமுறை வருகைகள் மற்றும் செலவுகள்

எம்.ஜி.என்.ஆர்.ஜி.எஸ் திட்ட ஊதியம் வழங்கலில் நான்கு வகையான முகமைகள் உள்ளன; அதாவது வங்கிகள், வாடிக்கையாளர் சேவை மையங்கள் (CSP)- இது வாடிக்கையாளர்கள் வரையறுக்கப்பட்ட வங்கி சேவைகளை அணுகும் மையம், வணிக தொடர்பாளர்கள் (BC) - இது, பாயிண்ட் ஆப் சேல் கருவியுடன் சிறிய வங்கி பரிவர்த்தனைகளுக்கான மையம், மற்றும் ஏடிஎம் மையங்கள் ஆகியன கொண்டு பணம் பெற பயன்படுத்தப்பட்டதாக, பதிலளித்தவர்கள் தெரிவித்தனர். வாடிக்கையாளர் சேவை மையங்கள் மற்றும் வணிக தொடர்பாளர்கள் இரண்டும் வாடிக்கையாளர்களுக்கு ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் மூலம் பரிவர்த்தனைகளை அங்கீகரிக்க வேண்டும். ஆந்திராவில், தொழிலாளர்கள் தபால் நிலையங்களில் இருந்து ஊதியத்தை பெறலாம்.

ஆய்வில் பதில் கூறியவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர், ஊதியங்களைப் பெற ஒவ்வொரு வகை வழங்கல் முகமைக்கும் பலமுறை செல்ல வேண்டியிருந்ததாக கூறினர். ஐந்தில் இரண்டு தொழிலாளர்கள் வாடிக்கையாளர் சேவை மையங்கள் அல்லது வணிக தொடர்பாளர்களை சந்திக்க பல முறை வருகை தர வேண்டியிருந்தது, இது குறைந்த எண்ணிக்கையிலான வருகைகளைக் கொண்டிருந்தது; 45% பேர் வங்கிகளுக்கு பல முறை செல்ல வேண்டியிருந்தது. ஏடிஎம்களில் இருந்து பணம் எடுப்பது மிகவும் தொந்தரவாக இருந்ததாக, பாதிக்கும் மேற்பட்டவர்கள் (55.3%) பதிலளித்தனர்; ஏடிஎம் மையங்களில் பெரும்பாலும் போதுமான பணம் இல்லாததால் பலமுறை சென்று வர வேண்டியிருந்தது.

ஆந்திரப் பிரதேசத்தில், ஆய்வில் பதிலளித்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் எந்தவொரு விநியோக முகவர் நிறுவனங்களுக்கும் பல முறை வருகை தர வேண்டியிருந்தது என்றனர்; மூன்று மாநிலங்களுக்கிடையில் மிக அதிகபட்சமாக, நான்கில் மூன்று பேர், பயோமெட்ரிக் செயலிழப்பு காரணமாக வாடிக்கையாளர் சேவை மையங்கள் அல்லது வணிக தொடர்பாளர்களிடம் பலமுறை சென்று வர வேண்டியிருந்ததாக கூறினர்.

ஒவ்வொரு முறையும் பயோ மெட்ரிக் தோல்வி, அடிக்கடி வருவதை அதிகரித்ததால், ஊதியங்களை பெறுவதற்கான செலவுகள் உயர்ந்தன. ஏஜென்சிகளுக்கான பயணச் செலவு தபால் நிலையத்திற்கு என்றால் (ஆந்திராவில்) ரூ .6; வங்கிக்கு செல்ல ரூ .31; வாடிக்கையாளர் சேவை மையங்கள் / வணிக தொடர்பாளர்களை பார்க்க ரூ .11 மற்றும் ஏடிஎம்-க்கு ரூ.67 என்று சராசரியாக இருந்தது.

எட்டு மாவட்டங்களில் 2018-19 முதல் ஐந்து ஆண்டுகள் வரை மின்னணு நிதி மேலாண்மை முறை மூலம் எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ் பயனாளிகளுக்கு ஊதியம் மற்றும் பொருட்கள் வழங்களின் தாக்கத்தை மதிப்பீடு செய்யும் போது, ​​தொழிலாளர்கள் அணுகல் தொடர்பான இதே பிரச்சினைகள் இருந்ததை கர்நாடக மதிப்பீட்டு ஆணையத்தின் (KEA) 2020 பிப்ரவரி குறிப்பு தெரிவித்தது. அணுகல் சிக்கல்கள் தொழிலாளர்களுக்கான பரிவர்த்தனை செலவை அதிகரிப்பதாக, கர்நாடக மதிப்பீட்டு ஆணையம் அறிக்கை குறிப்பிட்டது. "கஷ்டங்கள் மேலும் சேருவதால் தொழிலாளர்கள் பெரும்பாலும் நடந்து செல்ல சிரமப்படுவார்கள்; அல்லது ஒரு வாகனம் மூலம் வாடிக்கையாளர் சேவை மையங்கள் செல்வது, அல்லது செலவளித்து [ஏடிஎம்] மையத்திற்கு சென்றால், "பயன்பாட்டில் இல்லை" அல்லது "பணம் இல்லை" என்றோ, அல்லது "மின்சாரம் இல்லை" என்றோ, அல்லது " ஊதியம் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை," என்று பதிலே கிடைப்பதாக கர்நாடக மதிப்பீட்டு ஆணையத்தின் அறிக்கை கூறியது.

"தபால் நிலைய நிதி வங்கிகள் வாயிலாக தொழிலாளர்கள் பணப்பட்டுவாடா அணுகுவதில் உள்ள நன்மைகளை பற்றி சிந்திக்கலாம்," என்று, லிப்டெக் இந்தியா கணக்கெடுப்பு அறிக்கையின் இணை ஆசிரியர் சாகினா தோராஜிவாலா இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். ஆனால் ஆந்திராவில் தபால் நிலையங்கள் நீண்ட காலமாக பணத்தை கைவசம் வைத்திருப்பதாக பல வழக்குகள் உள்ளதாக அவர் கூறினார். பலமுறை வந்து செல்ல வேண்டிய தேவை இருந்தலும், தபால் நிலையங்களில் இருந்து ஊதியத்தை பெறுவது, தொழிலாளர்களின் செலவை குறைக்கும் என்று தெரிகிறது. இந்த பயன்பாட்டிலும் பயோ மெட்ரிக் முறை தேவைப்படும் என்பதால் சரிபார்ப்பு தோல்வி போன்ற அதே சிக்கல்கள் எழக்கூடும் என்று தோராஜிவாலா மேலும் கூறினார்.

பல்வேறு ஊதிய தள்ளுபடி முகமைகளில் நீண்ட நேரம்

கணக்கெடுக்கப்பட்ட 1,947 தொழிலாளர்களில் 1,204 பேர், ஜார்க்கண்டில் சுமார் 42% தொழிலாளர்களுக்கும், ராஜஸ்தானில் 38% தொழிலாளர்களுக்கும் ஊதியத்தை அணுக நான்கு மணி நேரத்திற்கும் மேலாக ஆனதாக கூறினர். ஆந்திராவில் இது வெறும் 2% தொழிலாளர்கள்தான். மேலும், ஜார்க்கண்டில் 30% தொழிலாளர்களுக்கு வங்கிகளிடம் இருந்து ஊதியத்தை அணுக ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக ஆனது.

வங்கிகள் வழக்கமாக ஒன்றியத்தின் தலைமையகத்தில் அமைந்திருக்கின்றன, இதனால் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று கணக்கெடுப்பு குறிப்பிட்டது. பணம் பெற நீண்ட நேரம் ஆனாலும் கூட, சுமார் 80% வங்கி பயனர்கள் வங்கி மூலம் பணம் எடுக்கவே விரும்பினதாக, ஆய்வு தெரிவித்தது. ஏனெனில் இவை மிகவும் பாதுகாப்பானவை என்று உணரப்பட்டன, அதோடு பாஸ் புத்தகம் புதுப்பித்தல் போன்ற முழு அளவிலான சேவைகளையும் வங்கிகள் வழங்குகின்றன.

வாடிக்கையாளர் சேவை மையங்கள் அல்லது வணிக தொடப்ராளர்கள் வாயிலான பரிவர்த்தனைகளுக்கு குறைந்த நேரமே ஆகிறது; வங்கிகளைக் காட்டிலும் குறைவான கூட்டம் தான் இருந்தது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், பெரும்பாலான தொழிலாளர்கள் வாடிக்கையாளர் சேவை மையங்கள் மற்றும் வங்கி தொடர்பாளர் மையம் வாயிலாக பணம் எடுக்க, குறைந்தபட்சம் ஒரு மணிநேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆந்திராவில், 50% வாடிக்கையாளர் சேவை மையங்கள் மற்றும் வங்கி தொடர்பாளர் மையத்தின் பயனர்கள் ஊதியத்தை அணுக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக எடுத்துக்கொண்டனர், அதே நேரத்தில் ஜார்க்கண்ட் மற்றும் ராஜஸ்தானில் உள்ளவர்கள் ஊதியத்தை அணுக இரண்டு மணி நேரத்திற்கும் ஆனது. ஜார்கண்ட் மற்றும் ராஜஸ்தானில் பதிலளித்தவர்களில் சுமார் 30% பேருக்கு இந்த அனுபவம் மிக மோசமாக இருந்தது, அவர்கள் வாடிக்கையாளர் சேவை மையங்கள் மற்றும் வங்கி தொடர்பாளர் மையம் வாயிலாக ஊதியத்தை அணுக மூன்று மணி நேரத்திற்கும் மேலாக எடுத்துக் கொண்டனர்.

பலமுறை வந்து செல்வது, பணம் வழங்க முகமைகளில் நீண்ட நேரம் செலவிட வேண்டியிருப்பது ஆகியவற்றுக்காக, தொழிலாளர்கள் தங்கள் நிலுவைத் தொகையை திரும்பப் பெற, அதிக வேலை மற்றும் ஊதியத்தை கைவிட வேண்டியிருந்தது என்பதைக் குறிக்கிறது. 2018-19ம் ஆண்டில் கணக்கெடுப்பு நடந்த நேரத்தில் ஆந்திரா, ஜார்க்கண்ட் மற்றும் ராஜஸ்தானின் எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ் திட்ட ஊதிய விகிதம் முறையே ரூ.205, ரூ. 168 மற்றும் ரூ. 192 ஆகும். இது 2020-21ல் ரூ.237, ரூ.194 மற்றும் ரூ .220 என திருத்தப்பட்டது.

எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ் பட்டுவாடாவை பாதிக்கும் கிராமப்புற வங்கி முறை சிக்கல்கள்

கடந்த 2014-15ம் ஆண்டுக்கு பிறகு, எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ் தொழிலாளர்களின் ஆதார் எண், அவர்களின் வேலை அட்டைகள் மற்றும் வங்கிக் கணக்குகளுடன் ஊதியத்தை பெறுவதற்காக பதிக்கப்பட்டது, குறிப்பிட்ட சில வழங்கல் நிறுவனங்களில் பணத்தை பெறுவதற்கு ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் அங்கீகாரம் தேவைப்படுகிறது.

இந்த நடைமுறை, சில தொழிலாளர்களுக்கு ஊதியங்களை பெறுவதில் தொழில்நுட்ப சவால்களை உருவாக்கியது, இதில் முதன்மை பட்டியலில் தொழிலாளர்களின் பெயர் விடுபடுதல், வேலை அட்டைகள் மற்றும் வங்கி கணக்குகளுடன் அல்லது ஆதார் எண் பெயர் பொருந்தாதது போன்ற சிக்கல்கள் இருந்ததாக, ஜார்க்கண்டில் எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ் தொடர்பான பிரச்சினைகளில் பணியாற்றும் ஒரு சுயாதீன ஆராய்ச்சியாளர் சன்னி பகத் கூறினார். "2016 ஆம் ஆண்டில், [ஜார்கண்ட்] மாநில அரசு விதிமுறைகளின்படி அதிக எண்ணிக்கையிலான ஆதார் இணைப்புகள் [வங்கிக் கணக்குகளுடன்] செய்யப்பட்டன, இது அத்தகைய இயற்கையின் பிழைகளுக்கு வழிவகுத்தது [பெயர்களின் பொருத்தமின்மை],"என்று பகத் இந்தியாஸ்பெண்டிடம் கூறினார்.

ராஜஸ்தானில், பதில் அளித்தவர்களில் மூன்று பேரில் ஒருவர், தங்கள் வங்கிக் கணக்குடன் தங்கள் ஆதார் எண்ணை இணைப்பதில் சிரமத்தை எதிர்கொண்டதாகக் கூறினர், ஜார்கண்டில் ஐந்தில் ஒருவர் மற்றும் ஆந்திராவில் 14 பேரில் ஒருவராக இருந்து இருந்தது. வாடிக்கையாளர் சேவை மையங்கள் மற்றும் வணிக தொடர்பாளர்கள் பயனர்களில் சுமார் 40% பேர், கடந்த ஐந்து பரிவர்த்தனைகளில் ஒரு முறையாவது பயோமெட்ரிக் அங்கீகார தோல்வியை சந்தித்ததாகக் கூறினர்.

லிப்டெக் இந்தியா ஆய்வு செய்த மூன்று மாநிலங்களில் இத்தகைய வங்கி தொடர்பான சிக்கல்கல் கட்டுப்படுத்தப்படவில்லை. 2018ம் ஆண்டில், மொத்த எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ் தொழிலாளர்கள் தங்களது வேலை அட்டையுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளை கொண்டிருக்கவில்லை, மேலும் குறைந்த படிப்பு அல்லது குறைந்த தகவலறிந்த தொழிலாளர்கள் வங்கியில் அல்லது ஏடிஎம் மையங்களில் பரிவர்த்தனை செய்ய "வங்கி இடைத்தரகர்களை" நம்பியிருப்பதாக, கர்நாடக மதிப்பீட்டு ஆணைய அறிக்கை குறிப்பிட்டது.

கிராமப்புற இந்தியா முழுவதும் கட்டணத்துடன் வங்கி உள்ளிட்ட அரசின் ஆன்லைன் சேவைகளை வழங்கும் தனிப்பட்ட முறையில் இயங்கும் பொது சேவை மையங்களும் (CSC) இதை வழங்கத் தவறிவிட்டதாக, ஜார்க்கண்டில் ஒரு கணக்கெடுப்பின் அடிப்படையில், இந்தியா ஸ்பெண்ட் 2019 நவம்பர் கட்டுரை தெரிவித்துள்ளது. பொது சேவை மையங்களும் ஆதார் அடிப்படையில் கட்டண முறை வாயிலாக வங்கி போன்ற சேவைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்க முனைவதாக, நாங்கள் தெரிவித்தோம். இங்கேயும், பயோமெட்ரிக் செயலிழப்பு, நெட்வொர்க் இணைப்பு இல்லாமை மற்றும் மின்சாரம் காரணமாக தொழிலாளர்கள் பலமுறை வந்து செல்ல வேண்டியிருந்தது.

கடந்த 2018ம் ஆண்டில் லிப்டெக் இந்தியா கணக்கெடுப்புக்கு பிறகு, கிராமப்புற வங்கியில் உள்ள இந்த சிக்கல்கள் பெரிதாக மாறவில்லை, மேலும் கோவிட் -19 ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஏற்கனவே வாடிக்கையாளர் கூட்டங்களால் நிரம்பிய வங்கிகளின் நிலைமையை மேலும் அதிகப்படுத்தியுள்ளதாக, தோராஜிவாலா தெரிவித்தார்.

கடந்த 2014ம் ஆண்டில் ரிசர்வ் வங்கியால் நியமிக்கப்பட்ட குழு, 2016ம் ஆண்டுக்குள் 15 நிமிடங்களுக்குள் நடந்து செல்லும் தூரத்திற்குள் மின்னணு கட்டண அணுகல் புள்ளிகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. "கிராமப்புற இந்தியாவில் வங்கி கிளைகளை அதிகரிக்க வேண்டிய அவசியம்" என்று, 2018இல் லிப்டெக் இந்தியா அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும், ஜன்தன் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களில் சுமார் 40% பேர் அரசின் கோவிட் -19 நிவாரணத்தை அணுக முடியவில்லை என்று, ஜூனில் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டது. கிராமப்புறங்களில் உள்ள வங்கிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அணுகல், கடைசி மைல் தொலைவில் என்பது உள்ளிட்ட பொதுவான இடைவெளிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட்டுவாடா நிராகரிப்பு மற்றும் பொறுப்பேற்பு இல்லாமை

மொத்தம் ரூ .7.19 லட்சம் பணப்பட்டுவாடா 249 பேருக்கு (சராசரியாக ஒரு தொழிலாளிக்கு ரூ.2,900) செலுத்தப்படவில்லை என்பது, லிப்டெக் இந்தியா கணக்கெடுப்பின் போது தெரியவந்தது. சுமார் 89% பேர், தங்களுக்கு ஊதியம் ஏன் நிராகரிக்கப்பட்டது என்பதற்கான காரணத்தை அறியவில்லை, இதனால் அந்த சிக்கலை எவ்வாறு சரிசெய்வது என்று தெரியவில்லை. எவ்வாறாயினும், இந்த தொழிலாளர்களுக்கு எதிர்கால எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ் பணப்பட்டுவாடா தொடர்ந்து நிராகரிக்கப்படும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ் திட்ட வழிகாட்டுதலின் கீழ் பணியாளர் வருகைப்பதிவேடு கணக்கு முடித்த 15 நாட்களுக்குள் தொழிலாளர்கள் பணம் கொடுத்தாக வேண்டும்; ஆனால் நிராகரிக்கப்பட்ட ஊதியப்பட்டுவாடாக்களை தீர்ப்பதற்கான செயல்முறை தெளிவாக இல்லை, அதை சரி செய்ய மாதங்கள் பிடிக்கலாம் என்று லிப்டெக் இந்தியா அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும், "பிரச்சினையை அடையாளம் காணுதல் மற்றும் சரிசெய்தல் ஆகியவற்றின் பொறுப்பு அவர்கள் தரப்பில் இல்லை, முழுக்க முழுக்க தொழிலாளி மீதுதான் விழுகிறது," என்று கணக்கெடுப்பு அறிக்கை தெரிவித்துள்ளது. ஊராட்சி அளவில் உதவியாளர்கள் மற்றும் பிற எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ் பணியாளர்களுக்கு, "நிராகரிப்புகள் குறித்து தெளிவு இருப்பதாக தெரியவில்லை" என்று அறிக்கை மேலும் கூறியுள்ளது.

கடந்த 2020 ஜூலை வரையிலான ஐந்தாண்டுகளில், சுமார் 4,800 கோடி ரூபாய் மதிப்புள்ள ஊதியம் நிராகரிக்கப்பட்டன, சுமார் 1,274 கோடி ரூபாய் மதிப்புள்ள மொத்த எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ் தொழிலாளர்களுக்கும் செலுத்த வேண்டிய நிலுவையில் உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நவம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி, 2020-21 நிதியாண்டில் 15 நாட்களுக்குள் 98.2% பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக, அரசு தரவு தெரிவிக்கிறது.

நிராகரிக்கப்பட்ட எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ் ஊதியத்தில், கட்டண முறைமையில் தொழில்நுட்ப பிழைகள் காரணமாக தோல்வியுற்றவை, தொழிலாளர் கணக்குகளில் அங்கீகரிக்கப்பட்ட 'நிதி பரிமாற்ற உத்தரவுகள்' (FTO) கொண்டவை. உள்ளூர் நிர்வாகத்தின் தரவு உள்ளீட்டு பிழைகள் (தவறான வங்கி கணக்கு அல்லது உள்ளிடப்பட்ட ஆதார் எண்), வங்கி கணக்கு தொடர்பான சிக்கல்கள் (செயலற்ற, கூட்டு அல்லது மூடிய கணக்குகள்), ஆதார் தொடர்பான (பெயர்கள் பொருந்தாததால் வங்கிக் கணக்கிலிருந்து ஆதார் நீக்குதல் போன்றவை) அடங்கும். ஒவ்வொரு வகை பிழையும் ஒரு குறிப்பிட்ட பிழைக் குறியீட்டை எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ் மேலாண்மை தகவல் அமைப்பில் (MIS) உள்ளது. 2020-21ம் ஆண்டில் நிலுவையில் உள்ள மொத்த நிராகரிக்கப்பட்டநிதி பரிமாற்ற உத்தரவுகளின் தீர்மானம் 42 லட்சம் ஆகும்.

ஒன்றிய அளவில் உள்ள கணினி ஆபரேட்டர்கள் எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ் எம்.ஐ.எஸ் இல் காட்டப்படும் வெவ்வேறு பிழைக் குறியீடுகளின் பொருளைப் புரிந்துகொள்கிறார்கள் என்று கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், டிஜிட்டல் மயமாக்கலுக்கான நகர்வுடன், "கணினி ஆபரேட்டர்கள் மிகவும் சக்திவாய்ந்தவர்களாக மாறிவிட்டனர், இதனால் தொழிலாளர்கள் கணினி ஆபரேட்டர்களை அணுகுவது கடினம்" என்று அந்த அறிக்கை கூறியுள்ளது. பெரும்பாலும், ஒன்றிய அளவில் உள்ள ஒரு கணினி ஆபரேட்டர் பல ஊராட்சிகளுக்கு இடையில் பகிரப்படுகிறார், இது மனித வள சிக்கலை உருவாக்குகிறது என்று அனோட் கவர்னன்ஸ் லேப் திட்ட மேலாளர் பத்மா பரேடி இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். கணினி ஆபரேட்டர்கள் சில சிக்கல்களை உயர் அளவில் அதிகரிக்க வேண்டும், ஏனெனில் மாநில, மாவட்ட மற்றும் ஊராட்சி அளவில் வெவ்வேறு எம்ஐஎஸ் பயனர் பொறுப்புகள் உள்ளதாக, பகத் மேலும் கூறினார்.

தொழில்நுட்பம் குழிக்குள் வேலை செய்யாது மற்றும் அதன் வடிவமைப்பில் பயன்படுத்தப்படும் கொள்கைகளால் இயக்கப்படுகிறது, உதாரணமாக, ஆதாரை மையமாகக் கொண்ட தளங்களை வடிவமைக்கும் ஏஜென்சிகள், மக்களுக்கு பொறுப்புக்கூறாது என்று தோராஜிவாலா கூறினார். "இந்த தளங்கள் ஒளிபுகா மற்றும் மின்சாரம் மற்றும் நெட்வொர்க் சவால்கள் போன்ற மாநிலத்தின் சூழலைக் கருத்தில் கொள்ளாது" என்று அவர் கூறினார்.

எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ் வேலை மற்றும் பணப்பட்டுவாடாக்களை மேற்பார்வையிடும் பெரும்பாலான ஊராட்சி செயல்பாட்டாளர்கள் பயிற்சியின்மை காரணமாக தொழில்நுட்ப சிக்கல்களைத் தாங்களே தீர்க்கும் திறன் கொண்டவர்களாக இருப்பதில்லை என்று பகத் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். "அவர்கள் தொழில்நுட்ப சிக்கல்களை எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ் பிரிவுக்கு [ஜார்க்கண்டில் மாநில அளவில்] அல்லது பிற தொடர்புடைய அதிகாரிகளுக்கு அதிகரிக்க முனைகிறார்கள். வெறுமனே, இந்த பிரச்சினைகள் ஊராட்சி அளவில் தீர்க்கப்பட வேண்டும்,"என்று அவர் கூறினார். "ஊராட்சிகளுக்கு போதுமான ஆதாரங்களும் பயிற்சியும் வழங்கப்பட்டால், அவை உரிமையை எடுத்துக் கொள்ளும் திறன் கொண்டவை" என்று பரேடி கூறினார்.

தாமதமான எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ் ஊதியப்பட்டுவாடா மற்றும் நிலுவைத் தொகைக்கு தொழில்நுட்பமற்ற காரணங்களும் உள்ளன. தாமதமாக தணிக்கை மற்றும் அரசின் ஒப்புதல்களால் 19 மாநிலங்களில் ஊதிய பட்டுவாடா முடக்கப்பட்டன என்று, லிப்டெக் இந்தியா கணக்கெடுப்புக்கு முந்தைய ஆண்டான நவம்பர் 2017ல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டது. "அலுவலகத்தில் கையொப்பமிட்டவர்கள் தேவைப்படும் போது இல்லாதது, கணக்கு விவரங்களுக்கும் ஊதிய மசோதாக்களில் கூறப்பட்டவற்றிற்கும் இடையில் பொருந்தமற்ற தன்மை மற்றும் குழுத் தலைவர்களால் ஊதிய பில்கள் தயாரிப்பதில் தாமதம்" என்பதும் 2018ம் ஆண்டு கர்நாடக மதிப்பீட்டு ஆணையம் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

தாமதம், தொழிலாளர்களுக்கு 'இயல்பானது', குறைதீர்ப்பும் போதாது

கணக்கெடுக்கப்பட்ட 1,947 தொழிலாளர்களில், 546 புகார்கள் மற்றும் 79% நிலுவையில் உள்ள ஊதியங்கள் அல்லது பெறப்பட்ட பகுதி ஊதியங்கள் தொடர்பானவை என்று லிப்டெக் இந்தியா அறிக்கை தெரிவித்துள்ளது. இங்கேயும், புகார்களைத் தீர்ப்பதற்காக ஊராட்சிக்கு செல்லும் பயணங்களுக்கான கூடுதல் செலவுகள் சில தொழிலாளர்களுக்கு ஏற்பட்டன. சுமார் 94% புகார்கள் வாய்மொழியாக செய்யப்பட்டன, உதாரணமாக ஊராட்சி அதிகாரிகளுக்கு, 6% எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யப்பட்டன. கணக்கெடுக்கப்பட்ட தொழிலாளர்களில் சுமார் 6.3% பேர் மட்டுமே எழுத்துப்பூர்வ புகாரைப் பதிவு செய்தனர், கிட்டத்தட்ட 30% பேர் தங்களுக்கு புகார் இருப்பதாகக் கூறினர், ஆனால் அதை பதிவு செய்யவில்லை. புகார் அளித்தவர்களில் கிட்டத்தட்ட 60% பேர் இது திருப்திகரமாக தீர்க்கப்படவில்லை, அல்லது தீர்வில்லை என்று கூறியுள்ளனர். எவ்வாறாயினும், வாய்மொழி புகார்களுக்கு "அதிகாரபூர்வமாக யாரும் இல்லை, எனவே அதை தாக்கல் செய்யாததற்கு சமம்" என்று அறிக்கை குறிப்பிட்டது.

குறைகளை பதிவு செய்வதில் ஒரு சிக்கல் என்னவென்றால், தாமதமான ஊதியம் வழங்கல் தொழிலாளர்களுக்கு மிகவும் சாதாரணமாகிவிட்டன; பல மாதம் தாமதமாக தருவது, எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ் இன் கீழ் தங்கள் உரிமைகளை மீறுவதாக அவர்களில் பலரும் கருதவில்லை என்று அறிக்கை குறிப்பிட்டது. தொழிலாளர்கள் வாய்மொழியாக புகார் அளிப்பதால், ஒரு வலுவான மற்றும் உழைக்கும் குறை தீர்க்கும் முறை உருவாக்கப்பட்டால், அதிகமான தொழிலாளர்கள் புகார்களை அளிப்பார்கள் என்று நம்புவதற்கு காரணம் உள்ளதாக, தோராஜிவாலா கூறினார்.

பெரும்பாலும் எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ் திட்டத்தை செயல்படுத்தும் நபர்கள்தான் பிரச்சினையை தீர்க்க அணுகப்பட வேண்டும் என்ற பலவீனமான குறை தீர்க்கும் முறையை உருவாக்குகிறார்கள் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, விண்ணப்பம் கிடைத்த 15 நாட்களுக்குள் ஒரு தொழிலாளிக்கு வேலை வழங்கப்படாவிட்டால், அவர்களுக்கு தினசரி வேலையின்மைக்கான ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும் என்று எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ் திட்டத்திற்கான 2019-20 ஆண்டு முதன்மை சுற்றறிக்கை தெரிவிக்கிறது. இழப்பீடு, தாமதமாகிவிட்டால், "தாமதத்திற்கு பொறுப்பான செயல்பாட்டாளர்கள் / ஏஜென்சிகளிடம் இருந்து மீட்க முடியும்" என்று சுற்றறிக்கை கூறுகிறது. "ஒன்றியம், அவர்களின் பைகளில் இருந்து வேலையின்மைக்கான ஊக்கத்தொகை செலுத்த வேண்டுமானால், வேலையின்மை ஊக்கத்தொகைக்கான எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ் தொழிலாளர்களின் கூற்றுக்களை அவர்கள் எப்போதுமே ஏற்றுக்கொள்வார்கள் என்பது சாத்தியமில்லை" என்று தோராஜிவாலா எச்சரித்தார்.

தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகள் முதல், ஊராட்சி அளவில் ஊதியம் பட்டுவாடா வரை போதுமான அளவு விழிப்புணர்வை ஏற்படுத்துவதை அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று, முன்னோக்கி செல்லும் வழியில் பரிந்துரைகளாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது, மேலும் "தொழிலாளர் மையமாக" இருக்கும் எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ் தகவல் அமைப்பு வடிவமைப்பிற்கும் தள்ளப்படுகிறது. எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ் திட்டத்திற்கான தொழில்நுட்ப தீர்வுகளை வடிவமைத்து உருவாக்கும் அனைத்து ஏஜென்சிகளையும் தாமதங்களுக்கு பொறுப்பேற்கச் செய்ய வேண்டிய அவசியத்தை சுட்டிக்காட்டுகிறது, அனைத்து "இந்திய அடையாள அட்டை ஆணையகம் [ஆதாரை நிர்வகிக்கிறது], இந்திய தேசிய பட்டுவாடா கழகம் [டிஜிட்டல் பட்டுவாடாகள் மற்றும் தீர்வை நிர்வகிக்கிறது] போன்ற அனைத்து கட்டண இடைத்தரகர்களும், பொது நிதி மேலாண்மை அமைப்பு [அனைத்து மத்திய அரசு திட்டத் திட்டங்களின் கீழ் வெளியிடப்பட்ட நிதிகளைக் கண்காணிக்கிறது] மற்றும் பொதுச்சேவை மையங்கள் ஒரு தொடக்கமாக சமூக தணிக்கைகளின் வரம்பிற்குள் கொண்டுவரப்பட வேண்டும்", என்று தோராஜிவாலா கூறினார்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.