மும்பை: இருபத்தைந்து வயதான மெஹக்* எப்போதும் கிரிமினல் வழக்கறிஞராக இருக்க வேண்டுமென்று விரும்பினார், ஆனால் பெற்றோர்கள் அவரது தொழில் தேர்விற்கு ஒப்புதல் அளிக்கவில்லை, ஏனெனில் அது பாதுகாப்பற்றது என்று அவர்கள் கருதினர். "நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதிருந்தே ஒரு குற்றவியல் வழக்கறிஞராக ஆக வேண்டுமென்று விரும்பினேன்," என்று, இந்தியா ஸ்பெண்டிடம் மெஹக் கூறினார். "நான் கிண்டலாக சொல்வதாகவோ அல்லது இது விளையாட்டாகவோ கருதுவதாகவோ என் பெற்றோர் நினைத்தார்கள், நான் வேறு ஏதாவது கண்டுபிடித்தாக வேண்டும்" என்றார்.

தற்போது தனது சொந்த ஊரான ஹரியானா மாநிலம் சோனேபட் சட்டக்கல்லூரியில் தனது பெற்றோருக்கு தெரிந்தவர்களால் நடத்தப்படும் சட்டக்கல்லூரியில், சட்டம் படிக்கும் மாணவியான மெஹக், சண்டிகரில் உளவியலில் இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்பை மேற்கொண்டார். புனே மற்றும் பெங்களூருவில் உள்ள பல மதிப்புமிக்க சட்ட கல்வி நிறுவனங்களில் தனக்கு சேர்க்கைக்கு அனுமதி பெற்றதாகவும், ஆனால் அவரது பாதுகாப்பில் பெற்றோர் காட்டிய அக்கறையின் காரணமாக பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளுக்குப் பிறகு, வெளியே செல்ல அனுமதி வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

தற்போது தனது பெற்றோர் மகிழ்ச்சியாக இருப்பதாக மெஹக் கூறினார். அவர் படித்துக் கொண்டிருக்கிறார், ஆனால் இன்னும் வேலை செய்ய அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் மெஹத்திற்கு தெளிவுபடுத்தினார்கள்: அதாவது "மெஹத்திற்கு வசதியாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் பொருத்தமான பணிச்சூழலை" அவர்கள் கண்டறிந்த பின்னரே பணியிடத்தில் சேர முடியும், என்பதே அது.

பாதுகாப்பு குறித்த பயம் அல்லது கவலைகள் இந்தியாவில் நகர்ப்புறங்களில் பணிபுரியும் பெண்களின் நிகழ்தகவைக் குறைக்கின்றன என்று பல ஆய்வுக் கட்டுரைகள் கண்டறிந்துள்ளன.

2018 ஆம் ஆண்டின் ஆய்வறிக்கையில், பாலியல் வன்கொடுமைகளைப் பற்றிய ஊடக அறிக்கைகள் அதிகரிப்பது, ஒரு பெண் பணியமர்த்தப்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது என்பதை கண்டறிந்தது. தி வேர்ல்ட் டெவலப்மெண்ட் (World Development) இதழில் தனிகா சக்ரவர்த்தி மற்றும் பிறரால் வெளியிடப்பட்ட அதே வருடத்தின் மற்றொரு கட்டுரை, இதே போன்ற தொடர்புகளை கண்டறிந்தது. பலாத்காரத்துடன் தொடர்புடைய சமூக இழிவு, பெண்களை கூலி வேலையிலிருந்து விலக்கி வைப்பதில் பங்கு வகிக்கிறது என்றும் அது கண்டறிந்துள்ளது.

புலனுணர்வுகள் மற்றும் அச்சங்களுக்கு அப்பால், 2021-ன் சில ஆய்வுகள், IWWAGE அமைப்பின் குற்ற விகிதம் மற்றும் பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பைப் பார்க்கிறது. ஒட்டுமொத்த குற்ற விகிதத்திற்கும் தொழிலாளர் பங்கேற்பிற்கும் இடையே குறைந்த ஆனால் எதிர்மறையான தொடர்பை இந்த கட்டுரை கண்டறிந்துள்ளது, அதாவது குறைந்த குற்ற விகிதம் சற்று அதிக தொழிலாளர் பங்கேற்பைக் குறிக்கும்.

ஆனால், மற்ற ஆராய்ச்சி வேலைகள் இந்த இணைப்பு மிகச் சிறந்ததாக இருப்பதைக் காட்டுகிறது, மேலும் வீட்டிற்கு வெளியே பெண்களின் வேலையைக் கட்டுப்படுத்துவதில் பல காரணிகள் இருக்கலாம்.

எங்களின் பணியிடத்தில் பெண்கள் 3.0 (Women@work 3.0) தொடரின் ஆறாவது கட்டுரைக்காக நாங்கள் இளம் நகர்ப்புற பெண்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களிடம் பேசினோம், பாதுகாப்பு குறித்த குடும்பக் கவலைகள் பெண்களை வாய்ப்புகளை கைவிடவும், குறைந்த சம்பளம் கிடைக்கும் வேலைகளை எடுக்கவும் அல்லது "பாதுகாப்பான" தொழிலைத் தேர்ந்தெடுக்கவும் தூண்டுகிறது. குற்றம் குறித்த பயம் தொழில் பாதையை பாதிக்கும் அதே வேளையில், அது எப்போதும் பணியாளர்களை விட்டு வெளியேற வழிவகுக்காது என்று, எங்கள் நேர்காணல்களில் கண்டறிந்தோம். இந்தக் கட்டுரையில், வன்முறையின் பங்கு மற்றும் பொதுப் பாதுகாப்பு பற்றிய உணர்வுகள் எவ்வாறு தொழிலாளர் பங்கேற்பைத் தொடர்ந்து பாதிக்கிறது என்பதைப் பார்க்கிறோம்.


வீழ்ச்சி

கோவிட்-19 தொற்று நம்மை தாக்கிய நேரத்தில், இந்தியாவின் பெண் தொழிலாளர் பங்கேற்பு ஏற்கனவே சரிந்து வீழ்ந்திருந்தது. 2004-05 மற்றும் 2011-12 ஆம் ஆண்டுக்கு இடையில், 19.6 மில்லியன் பெண்கள், ஊதியம் பெறும் வேலையை விட்டுவிட்டார்கள் என்று 2012 உலக வங்கி அறிக்கை கூறுகிறது.

இதற்குப் பல காரணங்கள் இருந்தன என்பதை, எங்கள் முந்தைய தொடர் கண்டறிந்தது. ஊதியம் இல்லாத வீட்டு வேலையின் சுமை, போதுமான பொது போக்குவரத்து விருப்பங்கள் மற்றும் ஒரு பெண்ணின் உண்மையான வேலை வீட்டிற்குள் தான் உள்ளது என்பது போன்ற பாலின பாகுபாடு கருத்து ஆகியவை இதில் அடங்கும்; அதாவது ஆண் தான் வேலைக்கு செல்வதும் குடும்பத்தை பராமரிப்பதும் ஆகும்.

கோவிட்-19 தொற்றுநோய், இப்பிரச்சனையை அதிகப்படுத்தியது. சதவீத அடிப்படையில் ஆண்களை விட பெண்களுக்கு, பரவலாக வேலை இழப்பு ஏற்பட்டது. வீட்டிலிருந்து வேலை செய்வது பெண்களுக்கு வீட்டு வேலைகளின் சுமை அதிகரித்தது, இருப்பினும் ஊரடங்கின் ஆரம்ப நாட்களில் வீட்டு வேலைகளில் ஆண்கள் முன்பை விட அதிகமாக பங்களித்ததற்கான சான்றுகள் உள்ளன.

பெண்கள்@வேலை 3.0ஐ நாங்கள் துவக்கியபோது, ​​காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பின்படி, நான்கு ஆண்டுகளில் பெண்களின் பணியாளர்களின் பங்களிப்பு மிக அதிகமாக இருப்பதைக் கண்டோம். ஆனால், ஒரு எச்சரிக்கை உள்ளது: இந்த வளர்ச்சி கிராமப்புற பெண்களால் சுயமாக நடத்தப்படும் சிறு நிறுவனங்களால் உந்தப்பட்டது. பொருளாதார நெருக்கடி பெண்களை சமையல் அறையை இயங்க வைப்பதற்காக குறைந்த சம்பளத்தில் வேலை செய்ய வழிவகுத்தது.

தொழில் லட்சியங்களில் பயத்தின் தாக்கம்

29 வயதான ஸ்வாதி* பள்ளியில் படிக்கும் போது, ​​இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (IIT) நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராவதற்காக ஒரு பயிற்சி வகுப்பில் சேர விரும்பினார். ஆனால் பிரயாக்ராஜின் புறநகரில் உள்ள அவர்களது வீட்டிலிருந்து பயிற்சி வகுப்பு நடக்கும் இடம் வெகு தொலைவில் இருப்பதாகவும், நகர மையத்தில் உள்ள பயிற்சி வகுப்புகளுக்குச் செல்வது ஸ்வாதிக்கு பாதுகாப்பாக இருக்காது என்றும், அவரது பெற்றோர் கூறியதால் பயிற்சிக்கு அவர் அனுமதிக்கப்படவில்லை. "என்னை விடுங்கள் என்று நான் என் பெற்றோரிடம் மன்றாடிக் கேட்டுக் கொண்டிருந்தேன்," என்று சுவாதி கூறினார். "நான் செல்ல அனுமதித்தால், நான் சிறப்பாகச் செய்வேன் என்று உணர்ந்தேன்" என்று அவர் எவ்வளவோ வேண்டுகோள் விடுத்தும், பெற்றோர் சம்மதிக்கவில்லை.

ஸ்வாதியைப் போலவே, நாங்கள் பேசிய பல பெண்களும் தங்களது பெற்றோரின் இத்தகைய கவலைகளால் பல வாய்ப்புகளை அல்லது ஊதியத்தை இழந்துள்ளனர். 26 வயதான உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான வர்ஷா*, தேசிய சட்டப் பல்கலைக்கழக (NLUs) சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. சட்டப்படிப்பு படிக்க வேண்டுமானால், டெல்லியில் படிக்க வேண்டும் என்று அப்பா சொன்னார். என்.எல்.யு. ரெசிடென்ஷியல் கல்லூரி என்பதால் அதுவும் ஒரு விருப்பமாக இல்லை.

வர்ஷா இன்னும் கட்டுப்பாடுகளை எதிர்கொள்கிறார். வெகுநேரம் வரை அவரால் வெளியில் இருக்க முடியாது. அவர், மாவட்ட நீதிமன்றங்களில் வேலைக்குச் செல்ல முடியாது. "வழக்குகளை ஒரு தொழிலாக எடுத்துக் கொள்வது எனக்கு ஒரு கடுமையான பணியாக இருந்தது," வர்ஷா கூறினார். "நான் உச்ச நீதிமன்றத்தில் பணிபுரிவேன், விசாரணை நீதிமன்றங்களில் பணிபுரிவதில்லை என்ற அடிப்படையில் மட்டுமே [என்னை சட்டம் படிக்க அனுமதிக்க] நான் அவர்களை சமாதானப்படுத்த முடியும். ஏனென்றால், நான் விசாரணை நீதிமன்றங்களில் பணியாற்றத் தொடங்கினால், நான் துன்புறுத்தப்படுவேன் என்று அவர்கள் பயந்தார்கள்.

[வாசிக்க: Judge to Worker: The Spread of Sexual Harrasment in India]

வர்ஷாவிற்கு, டில்லியில் பொதுப் போக்குவரத்து பாதுகாப்பற்றது என்று எண்ணும் நிலையில், அவருக்கு எப்படி வாகனம் ஓட்டுவது என்று தெரியாமல் இருப்பதும் ஒரு தடையாக இருக்கிறது. இப்படி, அவர் மட்டும் தனியாக இல்லை. காமன்வெல்த் மனித உரிமைகள் முன்முயற்சியின் (CHRI) 2015 அறிக்கையின் 4,950 பதிலளித்தவர்களில் கிட்டத்தட்ட கால் பகுதியினர், டெல்லியில் பேருந்துகள் மற்றும் மெட்ரோ பாதுகாப்பற்றதாக இருப்பதாகக் கூறியுள்ளனர்.

2021 ஆம் ஆண்டு உலக வங்கியின் ஆய்வறிக்கையில், டெல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவிகள் தரம் குறைந்த கல்லூரியைத் தேர்வு செய்து, "பாதுகாப்பான" பாதைக்கு ரூ. 17,500 அதிகமாகச் செலவிடுவார்கள் என்று கண்டறியப்பட்டது. அகமதாபாத் மற்றும் பெங்களூரைச் சேர்ந்த பெண்களும் பேருந்துகளில் பயணிக்கும்போது பதட்டமாக உணர்கிறார்கள் என்று, 2020 ஆய்வறிக்கை கண்டறிந்தது.

சில நேரங்களில், இத்தகைய தேர்வுகள் வருமான இழப்புக்கு வழிவகுக்கும். கோமல்* தனது 20-களின் பிற்பகுதியில் கணக்காளராக பணிபுரிகிறார், அந்த இடம் தனது வீட்டிற்கு அருகில் இருப்பதால், வேலையின்போது இரவு நேரத்தில் பணிகளை செய்வதில்லை என்பதால், குறைந்த ஊதியத்தில் வேலை செய்துள்ளார். "உங்களுக்கு நன்றாக சம்பளம் கொடுக்கும் அலுவலகங்கள், வேலை நேரம், இரவு நேரங்கள் மற்றும் பெரும்பாலானவை குர்கான் மற்றும் நொய்டாவில் அமைந்துள்ளன" என்று கோமல் கூறினார். "அங்கே வேலை செய்வது தாமதமாக வீட்டிற்கு வருவதைக் குறிக்கிறது. நான் எவ்வளவு தாமதமாக வீட்டிற்கு வருவேன் என்று நினைத்து என் குடும்பத்தினர் பீதி அடையலாம். சில கூடுதல் ரூபாய்களை சம்பாதிப்பது மதிப்புக்குரியது அல்ல என்று நான் உணர்கிறேன்" என்றார்.

பாலின அடிப்படையிலான வன்முறை குறித்த ஊடக அறிக்கைகளாலும் இந்த பாதுகாப்பு பயம் பாதிக்கப்படுகிறது என்று, நாங்கள் பேட்டி கண்ட பெண்கள் எங்களிடம் தெரிவித்தனர். மும்பையைச் சேர்ந்த 28 வயதான எழுத்தாளர் பூஜா*, 2013 இல் மும்பையின் சக்தி மில்ஸில் 22 வயதான புகைப்படப் பத்திரிக்கையாளர் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பிறகு, தனது தந்தை தனது நடமாட்டத்தை எவ்வாறு கட்டுப்படுத்தினார் என்பது தனக்கு நினைவிருக்கிறது என்று கூறினார். நாங்கள் நேர்காணல் செய்த பெண்களில் இருவர், ஊடகங்களில் சித்தரிக்கப்பட்டதைப் போல பாதுகாப்பற்ற நகரம் என்று குடும்பங்கள் நம்பியதால், பத்திரிகைகளில் பணியை தொடர டெல்லிக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

கவலை ஆணாதிக்கக் கட்டுப்பாட்டை மறைக்கிறது

மேஹக்கின் பெற்றோரைப் போலவே, பூஜாவின் தந்தையும் அவரே தொழிலைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பினை தரவில்லை. அவர் ஒரு டாக்டராகவோ அல்லது பொறியியலாளராகவோ ஆக வேண்டும் என்றும், குறிப்பிட்ட நேரமும் பயணமும் இல்லாத வேலையும் இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆனால் அதற்கு பதிலாக பூஜா ஒரு பி.ஆர். நிறுவனத்தில் சேர்ந்தார். வேலை நீண்ட நேரம், வார இறுதி நாட்களில் வேலை செய்தல், நிகழ்வுகளில் கலந்து கொள்வது மற்றும் வாடிக்கையாளர்களைச் சந்திப்பது என்றிருந்தது. அவரது தந்தை அதை "ஒரு பெண்ணுக்கு ஏற்ற வேலை" என்று கருதாமல், அவரது நடமாட்டத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். பூஜாவின் பட்டப்படிப்புச் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் அனைத்தையும் வைத்துக் கொண்டு அவரது வங்கிக் கணக்குகளைக் கண்காணித்தார். அவருக்கு ஒரு ஆவணம் அல்லது சான்றிதழ் தேவைப்பட்டால், அதற்கான காரணத்தைக் குறிப்பிட்டு, அதைப் பயன்படுத்திய பிறகு உடனடியாக அவரிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும்.

நாங்கள் பேசிய பெரும்பாலான பெண்களுக்கு, பாதுகாப்பு குறித்த இந்த அக்கறை ஒருவித ஆணாதிக்கக் கட்டுப்பாட்டுடன் கலந்திருந்தது. "எனது தந்தையின் கவலை [நான் நகரத்தை விட்டு வெளியேறுவது] எனக்கு என்ன நடக்கும், நான் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் நான் என்ன செய்யப் போகிறேன் என்பது பற்றிய கவலை" என்று சுவாதி கூறினார். "இது இரண்டு வழிகள். [கவலை என்னவென்றால்] அவர் மீது உங்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இருக்காது" என்றார்.

வர்ஷா தனது பெற்றோருக்கு தன்னைக் கட்டுப்படுத்த முடியாது என்றும், தான் வயது வந்தவள் என்றும் பலமுறை விளக்க முயன்றார். ஆனால், இதை அவர்களை நம்ப வைப்பது எளிதல்ல என்று அவர் கூறினார். "ஒரு ஆண் தன் குடும்பத்துக்காக என்ன முடிவெடுத்தாலும் அதுதான் குடும்ப வழக்கம் என்ற எண்ணத்தில் வளர்ந்து இருக்கிறார்கள்" என்கிறார் வர்ஷா. "அப்போது என் அம்மா என்னிடம், 'உன் தந்தை கவலையில் அதைச் சொல்கிறார், அவர் உன்னைக் கட்டுப்படுத்த முயற்சிக்கவில்லை. நாங்கள் உன்னை மிகவும் நேசிக்கிறோம், அதனால்தான் நாங்கள் இதைச் செய்கிறோம்' என்பார். ஒரு கட்டத்திற்குப் பிறகு எதுவும் சொல்ல முடியாது" என்றார் வர்ஷா.

இந்த கட்டுப்பாடு என்பது, அவர்களின் திருமணம் ஆகும் வரை நீடிக்கும் என்று, எங்கள் நேர்காணல்களில் பலரும் தங்களின் பெற்றோர்கள் பற்றி கூறியுள்ளனர். மெஹக்கின் பெற்றோர்கள் அவரது வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டனர். அங்குள்ள ஒருவரை மெஹக்கிற்கு திருமணத்தை ஏற்பாடு செய்யும் போது, ​​அவரோ பிரிட்டன் சென்று படிக்க வேண்டும் என்று நினைக்கிறார். "எனக்கு திருமணமாகிவிட்டால், நான் பாதுகாப்பாக இருக்கிறேன்,'' என்று மெஹக் கூறினார். "யாராவது எனக்குப் பொறுப்பேற்பார்கள். அது என்னவாக இருந்தாலும் சரி" என்றார்.

ஆனால் மெஹக்கிற்கு வேறு திட்டங்கள் உள்ளன. சட்டத்துறையில் இளங்கலைப் பட்டம் பெற்ற பிறகு ஒரு வேலையைப் பெற விரும்புகிறார், அதற்காகப் போராடத் தயாராக உள்ளார். "நான் சண்டையிட வேண்டும், ஆனால் நான் அதற்குச் செல்வேன், திரும்பிப் பார்க்காமல், என் பெற்றோருக்கு இன்னும் பிரச்சனை இருந்தால் அவர்களிடம் பேசமாட்டேன் என்று முடிவு செய்துவிட்டேன்" என்றார்.

மெஹக்கைப் போலவே, நாங்கள் பேசிய சில பெண்கள் இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்துப் போராடுகிறார்கள், தங்கள் பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் மற்றும் அவர்கள் விரும்பியதைச் செய்வதற்கான வழிகளைக் கண்டுபிடித்துள்ளனர். ஐஐடியில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வில் ஸ்வாதி தேர்ச்சி பெறாத நிலையில், கான்பூரில் பொறியியல் முடித்து, இந்திய மேலாண்மை நிறுவனத்தில் சேர்ந்து, இப்போது கனடாவில் இருக்கிறார்.

புதிரின் மாயமான பகுதிகள்

கடந்த சில ஆண்டுகளாக, பாலின அடிப்படையிலான வன்முறை, நகர்ப்புற பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு விகிதங்களை பாதிக்கும் பல்வேறு வழிகளை, பல ஆய்வுக் கட்டுரைகள் ஆராய்ந்தன. முன்னர் குறிப்பிட்டபடி, இரண்டு ஆவணங்கள், ஊடக அறிக்கையின் தாக்கம் மற்றும் பங்கேற்பு விகிதங்களை பாதிக்கும் காரணிகளாக பாதுகாப்பின் உணர்வைப் பார்த்தன.

2009-10 மற்றும் 2011-12 வரையிலான உலகளாவிய தரவு தளத்தில் இருந்து நிகழ்வுகள், மொழி மற்றும் தொனி மற்றும் தேசிய மாதிரி ஆய்வு (NSS - என்எஸ்எஸ்) தரவுகளின் அடிப்படையிலான ஊடக அறிக்கை பயன்படுத்தியது. இந்தத் தொடர்பைத் தூண்டக்கூடிய பிற சாத்தியமான காரணிகளுக்கு காரணியாக, ஊடக அறிக்கை மற்றும் தேசிய மாதிரி அறிக்கை கணக்கெடுப்பின் பதில்களுக்கு இடையே ஒரு பின்னடைவை இந்த முறை உள்ளடக்கியது என்று, இந்த ஆய்வறிக்கையின் ஆசிரியரும், பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்தில் இணை பேராசிரியருமான ஜஹ்ரா சித்திக் இந்தியா ஸ்பெண்டிடம் கூறினார்.

சித்திக், மாவட்ட நிலையான விளைவுகளையும் பயன்படுத்தினார், அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள போக்குகளைப் பார்த்து, இந்தப் போக்கைத் தூண்டக்கூடிய பிற சமூக-பொருளாதார காரணிகளை அவர் கணக்கிடுகிறார். "இது பல பல விஷயங்களைக் கட்டுப்படுத்திய பிறகும் நீடிக்கும் மிகவும் வலுவான உறவு" என்று சித்திக் கூறினார். இந்த போக்கு இளம் பெண்கள் (30 வயதுக்கு குறைவானவர்கள்), உயர் சாதி பெண்கள் மற்றும் முஸ்லீம் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதை அவர் கண்டறிந்தார்.

மற்ற அறிக்கை, பாதுகாப்பு பற்றிய கருத்து, 2004-2005 இந்திய மனித மேம்பாட்டு ஆய்வின் (IHDS) தரவைப் பயன்படுத்தியது. முதல் எழுத்தாளர் தனிகா சக்ரவர்த்தி இந்தியா ஸ்பெண்டிடம், பிற குழப்பமான காரணிகளைக் கணக்கிட மாவட்ட நிலையான விளைவுகளையும் செயல்படுத்தியதாகக் கூறினார். மேலும், திருட்டு போன்ற பாலின-நடுநிலை குற்றங்களுக்கு இந்த விளைவு இல்லை என்றும் பாலியல் குற்றங்களுடன் தொடர்புடைய களங்கம் இந்த போக்கில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இளம் பெண்களுக்கும் (21-30 மற்றும் 31-40 வயதுக்குட்பட்டவர்களுக்கு) மற்றும் பர்தா முறையைப் பின்பற்றும் பழமைவாத குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கும் இந்த விளைவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்த கட்டுரை கண்டறிந்துள்ளது.

இந்த வலுவான இணைப்புகள் இருந்தபோதிலும், ஆய்வுகள் இல்லாமல் இந்த முடிவுகள் எவ்வாறு எடுக்கப்படுகின்றன என்று சொல்வது கடினம் என்று சித்திக் கூறினார். "தெற்காசிய சூழலில், குடும்பம் அல்லது கணவர் என்ன நினைக்கிறார்கள் என்பதும் முக்கியம், பெண்கள் மட்டுமல்ல. ஆனால், பெண்களிடம் சென்று, இதுபோன்ற முடிவெடுப்பது எப்படி நடக்கிறது என்பது குறித்து விரிவான ஆய்வு செய்யும் வரை என்ன நடக்கிறது என்று என்னால் கூற முடியாது.

இருப்பினும், அனைத்து ஆராய்ச்சியாளர்களும் வன்முறை அல்லது அதன் பயம் இந்தியாவில் பெண் தொழிலாளர் பங்கேற்பைக் குறைப்பதாக நம்பவில்லை.

2005 முதல், பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 2021 இல் 32% இலிருந்து 19% ஆக கூர்மையான சரிவைக் கண்டது. அசோகா பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிபுணரும் பேராசிரியருமான அஸ்வினி தேஷ்பாண்டே, ஜனவரி 2021 இல் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், கிராமப்புற பெண்களால், குறிப்பாக கிராமப்புற ஆதிவாசி பெண்களால் இந்த சரிவு ஏற்பட்டது என்று வாதிடுகிறார். "பாதுகாப்பு பற்றிய பயம் உண்மையானது, மேலும் வெளியில் வேலை செய்ய விரும்புவதும் உண்மையானது" என்று தேஷ்பாண்டே கூறினார். "ஆனால் அது சரிவை எவ்வாறு விளக்குகிறது என்பது எனக்குப் புரியவில்லை. 2004 முதல் கிராமப்புற இந்தியாவில் பாதுகாப்பு பற்றிய கருத்து மோசமடைந்துள்ளதா? உறுதியாக தெரியவில்லை" என்றார்.

மேலும், வன்முறையைச் சுற்றியுள்ள முழு விவரிப்பும் மற்றும் பாதுகாப்பைப் பற்றிய கருத்தும் வீட்டிற்கு வெளியே உள்ள வன்முறையைப் பற்றியது என்று தேஷ்பாண்டே கூறினார்.

"வீடு ஒரு பாதுகாப்பான இடம் மற்றும் பாதுகாப்பாக இருக்க, நான் வீட்டிற்குள் இருக்க வேண்டும். அதுவே மிகவும் ஆணாதிக்கமான விஷயம்." பெரும்பாலான வன்முறைகள் வீட்டுக்குள்ளேயே நடக்கின்றன என்பதையும், பெண்களுக்குத் தெரிந்தவர்களால்தான் அது நிகழ்த்தப்படுகிறது என்பதையும் இது மறைக்கிறது.

ஜூன் 2016 ஆய்வறிக்கை, பெண்களின் தொழிலாளர் பங்கேற்புக்கும் குடும்ப வன்முறைக்கும் இடையே ஒரு நேர்மறையான தொடர்பு இருப்பதைக் கண்டறிந்தது. இந்த உறவுக்கு இருவழிக் காரணம் இருக்கக்கூடும் என்று ஆய்வறிக்கையின் ஆசிரியரும், சர்வதேச இலாப நோக்கற்ற மக்கள்தொகை கவுன்சிலின் மூத்த திட்ட அதிகாரியுமான சோஹினி பால் கூறினார்.

"ஒரு பெண் பணியமர்த்தப்பட்டால், அது மனைவியின் ஈகோவை காயப்படுத்தலாம், மேலும் ஆதிக்கத்தை மீட்டெடுக்க, அவர் வன்முறையில் ஈடுபடலாம்" என்று அந்த ஆய்வறிக்கை கூறியது. "மறுபுறம், வன்முறையின் நிகழ்தகவு அதிகரித்தால், அது மேலும் வன்முறையைப் பற்றிய கவலையின் காரணமாக தொழிலாளர் சந்தையில் ஒரு பெண்ணின் பங்கேற்பைப் பாதிக்கிறது" என்கிறது.

விநியோக காரணிகள் இந்தியாவில் குறைந்த அளவிலான பங்கேற்புக்கு பங்களிக்கக்கூடும் என்றாலும், அது சரிவை விளக்கவில்லை என்று தேஷ்பாண்டே கூறினார். சரிவை தேவை பக்க காரணிகளால் மட்டுமே விளக்க முடியும். "நாம் பேனல் தரவைப் பார்த்தோம், அங்கு ஒரே நபர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின்தொடர்கிறார்கள்" என்று தேஷ்பாண்டே கூறினார். "நாம் நான்கு வருடங்களைப் பார்த்தோம், ஒவ்வொரு வருடத்திற்கும் நமக்கு மூன்று காலங்கள் இருந்தன. எனவே நம்மிடம் மொத்தம் 12 தரவு புள்ளிகள் இருந்தன. நான்காண்டுகள் என்ற குறுகிய காலத்தில், பெண்கள் பலமுறை ஊதியத்துடன் வேலைக்குச் செல்வதையும் வெளியேறுவதையும் நாம் கண்டறிந்தோம். இது ஒரு கோரிக்கை பக்க கதையாக இருக்க வேண்டும். வினியோக பக்க காரணிகள் அவ்வளவு விரைவாக மாறாது, பாதுகாப்பு பற்றிய கருத்து அவ்வளவு விரைவாக மாறாது" என்றார்.

* வேண்டுகோளின்படி, பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.