புதுடெல்லி: பெண்கள் தங்கள் வாழ்க்கையில், காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை உணர அதிக வாய்ப்புள்ளது; இதுபோன்ற சிக்கல்களால் அவர்கள் அதிக பாதிப்புக்குள்ளாகிறார்கள் என்று நிகழ்வு சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆயினும்கூட, காலநிலை மாற்றத்தழுவலில் பெண்களின் பங்கு மற்றும் ஈடுபாட்டை அளவிட நம்பகமான எந்த தரவுகளும் இல்லை.

பெண்கள் தங்கள் வீடுகளுக்குள் உள்ள இயற்கை வளங்களை நிர்வகிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளில் - எல்.எம்.ஐ.சி (LMICs), 10இல் 8 பெண்கள் தங்கள் வீட்டுக்கு தண்ணீர் சேகரிப்பதற்கு பொறுப்பாளிகளாக உள்ளனர். உலகளவில் 70% க்கும் மேற்பட்ட தண்ணீருக்கான பணிகள் மற்றும் நிர்வகிப்பதற்கு பெண்களே பொறுப்பாக உள்ளனர். இந்தியாவில் மட்டும் 65% அதிகமான பெண்கள், விவசாயத் தொழிலாளர்களிலும் உள்ளனர்.

பெண்கள் காலநிலை மாற்ற விவாதங்களில் ஒருங்கிணைந்தவர்கள் என்று உலக அளவில் ஒருமித்த கருத்து உள்ளது; அவர்களின் பங்கு மற்றும் இயற்கை வளங்களை சார்ந்து இருப்பதால் மட்டுமல்ல; சமமற்ற பாதிப்பு, காலநிலை மாற்ற அச்சுறுத்தல்களுக்கு அவற்றின் விகிதாச்சார பாதிப்பு காரணமாகவும் தான். ஆயினும்கூட, நாங்கள் ஏற்கனவே சொன்னது போல், பெண்களின் பாத்திரங்கள் மற்றும் காலநிலை மாற்ற தழுவல் பாதிப்பு குறித்து தரவுகளை ஆவணப்படுத்தல் என்பது குறைவு. இந்த சிக்கல்களில் கவனம் செலுத்தும் எந்த ஒரு நிலையான நடவடிக்கையையும் நம்மால் அடையாளம் காண முடியவில்லை. பெண்கள் பற்றிய உலகளாவிய குறிகாட்டிகள் மற்றும் காலநிலை மாற்ற நடவடிக்கை ஆகியவை இல்லை.

எவ்வாறு ஆயினும், 2019 மார்ச் மாதம் நைரோபியில் நடைபெற்ற ஐ.நா. சுற்றுச்சூழல் பேரவையின் 4 வது அமர்வில் அனைத்து 193 ஐ.நா. உறுப்பு நாடுகளும் கலந்து கொண்டன; இது, காலநிலை நடவடிக்கை திட்டமிடல் மற்றும் அவற்றின் தாக்கத்தை கண்காணிப்பதில் பெண்களை அதிக அளவில் ஈடுபடுத்துவதற்கான நம்பிக்கையை வழங்குகிறது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான காலநிலை மாற்றத்தின் ஏற்றத்தாழ்வான சுமையை ஒப்புக் கொண்டதோடு மட்டுமல்லாமல், "அவர்களின் அறிவு மற்றும் கூட்டு நடவடிக்கைகளின் சக்தி", சுற்றுச்சூழல் முடிவெடுப்பதில் பெண்களின் பங்களிப்பு மற்றும் தலைமையை - உள்ளூர் முதல் சர்வதேச அளவில் வரை - ஊக்குவிக்க வேண்டியதன் அவசியம் மற்றும் "பாலின முக்கிய நீரோட்டத்தில் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சிகளுக்கு ஆதரவளித்தல்" உலகளாவிய செயல்முறைகளில் அர்த்தமுள்ள பங்களிப்பை உறுதி செய்தல் ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் கொள்கைகள் மற்றும் திட்டங்களின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கு பாலின சமத்துவம் மற்றும் அதிகாரமளித்தல் பற்றிய தரவுகளை சேகரிக்கவும் தீர்மானம் கோருகிறது.

தொழில்துறைக்கு முந்தைய காலங்களுடன் ஒப்பிடும்போதே, மனித நடவடிக்கைகளால் ஏற்கனவே 1.0 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்துள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச குழுவின் -ஐபிசிசி (IPCC) சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2030 வாக்கில், அல்லது இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் புவி வெப்பமடைதல் 1.5 டிகிரி செல்சியஸை எட்டும்.

இதுவரை, உலக வெப்பநிலை 1 ° C உயர்ந்துள்ள நிலையில், கேரளாவில் வெள்ளம், உத்தரகண்ட் மாநிலத்தில் காட்டுத்தீ மற்றும் வடக்கு மற்றும் கிழக்கில் அனல்காற்று போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளை, அதன் பாதிப்பை இந்தியா ஏற்கனவே அனுபவித்திருக்கிறது.

பெண்கள், குறிப்பாக விவசாயம் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்துள்ளவர்கள் இதனால் மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்களாக இருக்கலாம்.

விவசாய உற்பத்தித்திறன், கால்நடை பிரச்சினைகள் மற்றும் தண்ணீர் கிடைப்பதில் ஏற்படும் காலநிலை மாற்ற தாக்கங்களை, ஆண்களை விட பெண்கள் அதிகம் சந்திக்கும் நிலையில், காலநிலை மற்றும் விவசாயத் தகவல்கள் குறித்த முக்கிய தரவுகள் பெறுவதில் ஆண்களை விட பெண்கள் குறைவாகவே உள்ளனர், அவை காலநிலை கவலைகளைத் திட்டமிட அனுமதிக்கும் என, அக்டோபர் 2015 உகாண்டாவின் ராகாயின் ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.

மே 2018 இல் வெளியிடப்பட்ட உகாண்டாவில் இருந்து இரண்டாவது ஆய்வு, காலநிலை மாற்றம், பெண்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்கான ஆபத்து ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை எடுத்துக்காட்டுகிறது: பயிர் சாகுபடி செயலிழப்பு மற்றும் வீட்டு வருமானத்தில் ஏற்படும் இழப்பு ஆகியவற்றால் ஏற்படும் நிதி அழுத்தங்கள், திருமண மன அழுத்தத்தை அதிகரிக்கும்; மேலும் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைக்கு வழிவகுக்கும். இது பெண்களின் பொருளாதார துஷ்பிரயோகத்திற்கும் வழிவகுக்கும்; ஆண்கள் பெரும்பாலும் பயிர் விற்க விரும்புகிறார்கள்; ஆனால் பெண்களோ வறட்சியிலும் வளர்ந்திருக்கிறார்கள், முடிவில் தங்களது மனைவியை கலந்தாலோசிக்காமல் ஆண்கள் முடிவு எடுக்கிறார்கள்.

காலநிலை மாற்றத்தின் விளைவாக ஏற்படும் இயற்கை பேரழிவுகள் பெண்களுக்கும் அதிக ஆபத்தை உருவாக்குகின்றன. 2004 ஆம் ஆண்டு தாய்லாந்தில் ஏற்பட்ட சுனாமியின் போது, ஆண்களை விட அதிகமான பெண்களே இறந்தனர், ஏனெனில் அவர்கள் தங்களுக்கே உரிய குடும்ப பொறுப்பில் கவலையில், குழந்தைகள் மற்றும் உறவினர்களை தேட வந்தவர்கள். அத்துடன் ஆண்கள் மற்றும் சிறுவர்களை போல தண்ணீரில் நீந்தவோ, மரங்கள் மீது ஏறி தப்பவும் தெரியாது.

காலநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் இயற்கை பேரழிவுகள், பெண்கள் மற்றும் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டலுக்கு குறிப்பாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடிய சூழல்களில் ஆளாக்குகின்றன. ஹைதியில் 2016 இல் சூறாவளியை தொடர்ந்து, பொருளாதார நெருக்கடிகள் வேகமாக அதிகரித்தன; இதன் முடிவில் சிறுமியர் பாலியல் கடத்தல் வழக்குகளும், அப்பகுதியில் பெருகின. 2015இல் நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்தைத் தொடர்ந்து, அனாதைப் பெண்கள் குறித்த கவலைகளால், இளம் வயது சிறுமியர் திருமணம் அதிகரித்தது.

காலநிலை மாற்றம் குறித்து பாலின தரவு - மற்றும் இலக்குகள் - இல்லை

போதிய தரவு இல்லாததால் காலநிலை மாற்றம் தொடர்பான பெண்களின் சுமைகளின் அளவு மற்றும் நோக்கம் நன்கு புரிந்து கொள்ளப்படவில்லை. ஐ.நா. பாலின குறிகாட்டிகளின் குறைந்தபட்ச தொகுப்பு பாலின சமத்துவம் மற்றும் காலநிலை குறித்து எந்த நடவடிக்கையும் கொண்டிருக்கவில்லை.

வளர்ச்சி மற்றும் சுகாதார பிரச்சினைகள் முழுவதும் பாலின சமத்துவம் மற்றும் அதிகாரமளித்தல் நடவடிக்கைகளை அடையாளம் காணவும் பகிர்ந்து கொள்ளவும் உருவாக்கப்பட்ட EMERGE திட்டத்தின் பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, காலநிலை மாற்ற நடவடிக்கை தொடர்பான இந்த பிரச்சினைகள் குறித்த நடவடிக்கைகளை நாங்கள் தேடினோம். நாங்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லை.

நிலையான மேம்பாட்டு இலக்கு - எஸ்டிஜி (SDG) 13 “காலநிலை மாற்றத்தையும் அதன் தாக்கத்தையும் எதிர்த்துப் போராடுவதற்கான அவசர நடவடிக்கை” தேவை, மேலும் பின்னடைவு மற்றும் தகவமைப்புத் திறனை வலுப்படுத்துவது பற்றி குறிப்பிட்ட குறிப்பை அளிக்கிறது. தற்போதுள்ள எஸ்டிஜி 13 குறிகாட்டிகள் உலகளாவிய வெப்பநிலை, மழைப்பொழிவு, கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு, ஆற்றல் நுகர்வு, நில பயன்பாடு மற்றும் வானிலை அடிப்படையிலான மற்றும் புவியியல் குறிகாட்டிகளில் கவனம் செலுத்துகின்றன.

இருப்பினும், இந்த நடவடிக்கைகள் பாலின சமத்துவ முன்னோக்கி கொண்டிருக்கவில்லை. எஸ்டிஜி 13-க்கு பாலின உணர்திறன் இலக்குகள் அல்லது குறிகாட்டிகள் எதுவும் இல்லை.

தொடர்புடைய எஸ்டிஜிக்கள், தண்ணீர் மற்றும் சுகாதாரம் # 6, ஆற்றல் # 7, தண்ணீருக்குள் கீழே # 14 மற்றும் நிலத்தின் மேல் வாழ்க்கை # 15 ஆகியன காலநிலை மாற்ற உரையாடலுக்கு பங்களிக்கின்றன; ஆனால் பாலின உணர்திறன் குறிகாட்டிகள் இல்லை.

எஸ்.டி.ஜி 5 (பாலின சமத்துவம்) இதனுள் ஒரு குறிகாட்டி உள்ளது, இது விவசாய மக்களிடையே நில உரிமையை பாலினத்தால் அளவிடுவதன் மூலம், இந்த உரையாடலை மேலும் விரிவுபடுத்துகிறது. இது உரிமையாளர் முறைகளைப் புரிந்துகொள்ள உதவுகிறது, ஆனால் நில உரிமை என்பது காலநிலை மாற்றத் திட்டமிடல் முயற்சிகளில் பெண்களின் ஈடுபாட்டை அளவிடுவதற்கான ஒரு வழிமுறையாக இல்லை, இருப்பினும் இந்த பிரச்சினையில் சில நுண்ணறிவை இதனால் வழங்க முடியும்.

தீர்வு: மாற்றத்தின் முகவர்களாக பெண்கள்

நைரோபியில் மார்ச் 2019 நடந்த கூட்டத்தின் அறிக்கைகள் அடுத்த மூன்று முதல், ஐந்து ஆண்டுகளில் நமது பணிகளை முன்னேற்றும் வகையில் உடனடி காலநிலை நடவடிக்கை திட்டமிடலை கோருகின்றன. இந்த செயல்பாட்டில் பெண்களை ஈடுபடுத்த வேண்டியதன் அவசியத்தை - குறிப்பாக, முன்கூட்டியே மாற்றத்திற்கு உதவ அரசியல் தலைமைத்துவத்தில் பெண்களின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது,

காலநிலை மாற்ற நடவடிக்கை திட்டத்தில் பாலின சமத்துவம் என்பதில், பெண்களை அதிக அளவில் ஈடுபடுத்துவதற்கான உலகளாவிய அழைப்புகள் மற்றும் பிரச்சினைகள் உள்ளன. தரவுகள் இல்லாதது அல்லது நிலையான நடவடிக்கை இன்மை கூட இந்த இலக்கை அடைவதற்கான பாதையில் இருந்தால், மதிப்பீடு செய்வது கடினமானது. எஸ்.டி.ஜி மாற்றத்திற்கான ஒரு அடிப்படையை விரைவாக நிறுவுவது கட்டாய தேவையாகும். இதற்காக பாலினம் மற்றும் காலநிலை மாற்றம் குறித்து நாம் சேகரிக்கும் தரத்தையும் தரவுகளின் வகைகளையும் மேம்படுத்த வேண்டும்.

இக்கூட்டத்தின் வழிகாட்டுதல்கள், காலநிலை நடவடிக்கை திட்டமிடலில் பெண்களின் மதிப்பு குறித்த வளர்ந்து வரும் ஆதாரங்களுடன் ஒத்துப்போகிறது. பெண்கள் ஒரே நேரத்தில் "அதிர்ச்சி உறிஞ்சிகள்’" மற்றும் காலநிலை மாற்ற தழுவலுக்கான "மாற்றத்தின் முகவர்கள்" என்று விவரிக்கப்படுகிறார்கள்.

காலநிலை மாற்றத்தின் விளைவுகளுடன் பெண்கள் எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் சவால்கள் இருந்தபோதிலும், பெண்கள் தலைமையிலான காலநிலை மாற்றத் திட்டமிடல் மற்றும் தழுவல் முயற்சிகளுக்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.

வடகிழக்கு கென்யாவின் மற்றொரு திட்டம், காலநிலை மாற்றத்தைப் பற்றி பேச பெண்களை ஊக்குவிக்க சமூகம் சார்ந்த புகைப்படக் கதைகளை பயன்படுத்தியது - குறிப்பாக அவர்களின் சமூகத்தை பாதிக்கும் வறட்சி குறித்து. பெண்கள் ஆயர் முஸ்லீம் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், பாரம்பரியமாக பேச ஊக்குவிக்கப்படுவதில்லை. சமூக விவாதங்கள் மற்றும் குறுகிய வீடியோக்களை உருவாக்குவதன் மூலம், இந்த பெண்கள் நீண்ட கால வறட்சியை சமாளுக்கும் தங்களது அனுபவங்களையும் உத்திகளையும் பகிர்ந்து கொள்ள முடிந்தது. இந்த சமூகத்தின் ஆண் உறுப்பினர்கள், காலநிலை மாற்றத்தின் சிக்கல்கள் மற்றும் தழுவல் உத்திகளை நன்கு புரிந்துகொள்ள, இந்த வீடியோக்களைப் பார்க்க விரும்பினர்.

ஒடிசாவின் பத்ராக் நகரில், கடல் நீர்மட்டம் அதிகரிப்பதாலும், பருவமழை குறைவதாலும் உள்ளூர் நிலத்தடி நீரில் உப்புத்தன்மை அதிகரிக்கும் நிலையில், பெண்கள் கூட்டாக சேர்ந்து அல்லது சுய உதவிக்குழுக்கள் எஸ்.எச்.ஜி - (SHGs ) ஒன்று சேர்ந்து குடிநீரை உறுதி செய்வதற்கான தீர்வுகளை உருவாக்கி வருவதாக, இந்தியா ஸ்பெண்ட் பிப்ரவரி 2019 கட்டுரை தெரிவித்தது. வீட்டுக்கான தண்ணீர் சேகரிப்பதற்காக செல்லும் நேரமும் தூரமும் அதிகரிப்பதால், பெண்கள் மோசமாக பாதிக்கப்படுகிறார்கள்; இதனால், தமக்கும் தங்கள் குழந்தைகளுக்கும் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து அவர்கள் கவலைப்படுகிறார்கள். பெண்களுக்கு வெள்ளம் மற்றும் மாதவிடாய் மற்றும் சுகாதாரத்தின் போது தனியுரிமை இல்லாமை போன்ற பெண்கள் தொடர்பான கவலைகளைப் பற்றி விவாதிக்க, சுய உதவிக் குழுக்கள் ஒரு தளத்தை வழங்குகிறது.

இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் உள்ள நஹி சமூகத்தைப் போல மற்ற முயற்சிகள் தனிமைப்படுத்தப்பட்ட சோதனைகளாகிறது. நஹி பெண்கள் தங்கள் கோழி கூண்டுகளை, குளங்களுக்கு மேல் வைக்க ஆரம்பித்தனர். குளத்தில் விழும் கோழியின் கழிவு, மீனுக்கு தீவனமாக செயல்படக்கூடும் என்பதையும், இதனால் பெரிய அளவில் மீன் உற்பத்தியாகும் என்பதையும் பெண்கள் உணர்ந்தனர்.இந்த முறையானது, அந்த பெண்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு பெரும் பொருளாதார நன்மைகளை அளித்துள்ளது; அத்துடன், வாழ்வாதாரத்தை பராமரிக்க அல்லது மேம்படுத்த உதவியது.

இந்த திட்டங்கள் காலநிலை மாற்ற நடவடிக்கைகளில் பெண்கள் ஈடுபடுவதன் மதிப்பு மற்றும் திறன்களை எடுத்துக்காட்டுகின்றன. இந்த முயற்சிகளை சிறப்பாக கொண்டு செல்லவும், காலநிலை திட்டமிடல் நிகழ்ச்சி நிரலில் பெண்கள் சேர்க்கப்படுவதை ஊக்குவிக்கவும் தேசிய மற்றும் உலகளாவிய குறிகாட்டிகள் தேவை.

(நம்ரதா ராவ், புதுடெல்லியைச் சேர்ந்தவர்; சான் டியாகோ (யு.சி.எஸ்.டி), கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பாலின சமத்துவம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய மையத்தில் ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளர். அனிதா ராஜ், சமூகம் மற்றும் சுகாதாரம் தொடர்பானா டாடா சான்சிலர் பேராசிரியர்; மருத்துவம் மற்றும் கல்வி ஆய்வுகள் பேராசிரியர்; மற்றும் யு.சி.எஸ்.டி.யில் பாலின சமத்துவம் மற்றும் ஆரோக்கியம் குறித்த மையத்தின் இயக்குனர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.