மும்பை: 2018 ஆம் ஆண்டின்படி, 27.9 ஆண்டுகள் என்ற நடுத்தர வயதினரை அதிகம் கொண்ட இந்தியா, ஒரு இளமையான நாடு. 2020ஆம் ஆண்டில் மக்கள் தொகையில் 34% பேர் இளைஞர்களாக இருப்பார்கள். 18 வயது கடந்த 4.5 கோடி இளம் வாக்காளர்கள், 2014ல் இருந்து வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டதாக தேர்தல் ஆணையத்தின் 2018 தரவுகள் தெரிவிக்கின்றன. இது, 2014 பட்டியலை விட வாக்காளர் பட்டியலை 5% அதிகரிக்கச் செய்துள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் (பா.ஜ.க.) ஐந்து ஆண்டு ஆட்சி முடிவுற்று, விரைவில் 2019 பொதுத்தேர்தல் நடக்கும் நிலையில், இதில் வெற்றியை தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்றாக இந்திய இளைஞர்களின் வாக்குகள் இருக்கும். 2014 பொதுத்தேர்தலிலும், அப்போது வாக்காளர் பட்டியலில் புதியதாக 2.4 கோடி இளம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருந்தனர்.

கடந்த 2014 பொதுத்தேர்தலுக்கு பின், இளம் வாக்காளர் விகிதங்கள் அதிகம் கொண்டிருந்த மாநிலங்களில் எவ்வாறு வாக்குகள் பதிவாகியிருந்தன என்ற பகுப்பாய்வை இந்தியா ஸ்பெண்ட் மேற்கொண்டிருந்தது. பா.ஜ.க. அதிகாரத்திற்கு வருவதற்கு, ஐந்து மாநிலங்களில் இளம் வாக்காளர்கள் காரணமாக இருந்துள்ளனர் என்பதை அதில் கண்டறிந்தோம்.

இளைஞர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான பிரச்சினைகள் இத்தேர்தலில் மையப்பொருளாக இடம் பெற வாய்ப்புள்ளது. இந்தியாவில் அதிக ஆதாரவளம் மற்றும் கவனம் தேவைப்படுவை இவ்விரண்டு பகுதிகளாகும்: இந்தியா ஸ்பெண்டின் பட்ஜெட்டுக்கு முந்தைய பகுப்பாய்வில் உயர் கல்விக்கு அதிக நிதி தேவை எனவும், திறன் மேம்பாட்டு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 2000 ஆம் ஆண்டு முதல், உயர் கல்விக்கான இந்தியாவின் செலவு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (மொத்த உள்நாட்டு உற்பத்தியில்) 0.73% -0.87% ஆகும்; இது 2015ல் 0.62% என்று சரிந்திருந்தது. பிரதம மந்திரி கவுஷல் விகாஷ் யோஜனா (பிரதமரின் திறன் மேம்பாட்டு திட்டம்) பதிவானது, இலக்கைவிட 64% பற்றாக்குறையாக இருக்கும் என்று, 2019 ஜனவரியில் பேக்ட் செக்கர்.இன் செய்தி வெளியிட்டிருந்தது.

இளம் வாக்காளர் வங்கியை ஈர்ப்பதில் வேலைவாய்ப்ப் பிரச்சனை பெரும் பிரச்சனையாக இருக்கும்; வேலைவாய்ப்பு குறித்த அதிகாரபூர்வமான அண்மை புள்ளி விவரங்கள் இல்லாத நிலையில், அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் அறிக்கையில் இதை புறக்கணிக்க முடியாது. அண்மையில் கசிந்த தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகத்தின் - என்.எஸ்.எஸ்.ஓ. (NSSO) வேலைவாய்ப்பு குறித்த அறிக்கையில், 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை 6.1% என்றளவை எட்டியதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் அரசின் பதிலில் வருமான வரி வருவாய் அதிகரித்துள்ளது என்றும், வருங்கால வைப்பு நிதி கணக்கு அதிகரித்துள்ளது வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதை காட்டுவதாகவும் கூறப்பட்டது.

ஒரு 'இளம்' இந்தியர் யார்?

என்.எஸ்.எஸ்.ஓ.வின் 2017 'இந்தியாவில் இளைஞர்' அறிக்கையின்படி, இந்தியாவின் மக்கள்தொகையில் இளைஞர்களின் பங்களிப்பு 2010ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 35.11%ஐ எட்டியது. 1971ஆம் ஆண்டை விட (30.6%), இது 4.2% புள்ளிகள் உயர்ந்துள்ளது; அதாவது, 16.8 கோடியில் இருந்து, 42.3 கோடி அதிகரிப்பு என்று அறிக்கை தெரிவிக்கிறது.

மக்கள்தொகையில் பருவ வயதிலிருந்து நடுத்தர வயது வரை உள்ளவர்கள் 'இளைஞர்' என வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் கொள்கை முகமைகளின் கூறுகளின்படி இந்த வரையறைகள் வேறுபடுகின்றன. ஐக்கிய நாடுகள் ஆராய்ச்சி அறிக்கைகள் பொதுவாக, 15 வயது முதல் 24 வயது வரை உள்ளவர்களை, இளைஞர் என்று வகைப்படுத்துகிறது. இந்தியாவின் தேசிய இளைஞர் கொள்கை (2003), 13 முதல் 35 வயது உள்ளவர்களை இளைஞர் என்று வரையறை செய்துள்ளது.

பின்னர், தேசிய இளைஞர் கொள்கை 2014 மறுவரையறை செய்யப்பட்டு, 15 முதல் 29 வயதுள்ளவர்களை இளைஞர் என்று வரையறுத்துள்ளது. என்.எஸ்.எஸ்.ஓ.வின் 68வது சுற்று, 15 முதல் 29 வயது என்று தொழிலாளர் பங்களிப்பு புள்ளி விவரங்கள் முடிவு செய்தது. 2017ல் வெளியிடப்பட்ட இளைஞர்களின் சமீபத்திய என்.எஸ்.எஸ்.ஓ. அறிக்கையில், அடைப்புக்குறி 15-34 வயது என்று குறிக்கப்பட்டது. 'இளைஞர்களின்' வரையறைகளை அடுத்தடுத்த அறிக்கையில் மாற்றுவது மற்றும் ஆண்டு காலம், வயது குழுக்களுடன் தரவுகளை ஒப்பிடுவது கடினமானது.

வேலைவாய்ப்பு புள்ளி விவரங்கள் குறித்த சமீபத்திய அறிக்கை இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாத நிலையில், எங்களது பகுப்பாய்வு நோக்கங்களுக்காக, என்.எஸ்.எஸ்.ஓ.வின் 2017 'இந்தியாவில் இளைஞர்' அறிக்கை தரவுகளை பயன்படுத்தியுள்ளோம். 2011-12 தரவு மேற்கோளின்படி, கிராமப்புற இந்தியாவில் உள்ள 15-29 வயதினர்களில் 55% ஆண்கள்; 18% பெண்கள் உழைக்கும் திறன் கொண்டவர்கள்; நகர்ப்புறங்களில் ஆண்கள் 56%; பெண்கள் 13% இருந்தது.

அதிக இளம் வாக்காளர் உள்ள 5 மாநிலங்கள்

புதிய வாக்காளர்களை அதிக எண்ணிக்கையில் கொண்டுள்ள ஐந்து இந்திய மாநிலங்கள், மக்களவையில் அதிக இடங்களைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாக இருந்தன; மக்கள் தொகையில் உயர் தரவரிசை கொண்டிருந்தன. மாநிலங்களின் மக்கள் தொகைக்கேற்ப அவற்றின் மக்களவை தொகுதி இடங்கள் உள்ளன; அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்கள் மக்களவையில் அதற்கேற்ப பெரும்பான்மை இடங்களை பெறுவதாக, இங்கு மற்றும் இங்கு இந்தியா ஸ்பெண்ட் குறிப்பிட்டிருந்தது.

Top Five States That Added Maximum New Voters
State 2014 Electoral Roll 2018 Electoral Roll New Voters Lok Sabha Seats
Bihar 63,800,160 69,934,100 6133940 40
West Bengal 62,833,113 68,335,671 5502558 42
Rajasthan 42994657 47,339,902 4345245 25
Maharashtra 80798823 84,969,764 4170941 48
Uttar Pradesh 138810557 142,784,587 3974030 80
Total In Top Five States 389237310 413,364,024 24126714 235

Source: Election Commission of India, Lok Sabha

அனைத்து மக்களவை உறுப்பினர்களில் 43% பேர், புதிய வாக்காளர்கள் அதிகம் கொண்டமுதல் ஐந்து மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், அவை: பீகார், மேற்கு வங்கம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் உத்திரப்பிரதேசம். இந்த ஐந்து மாநிலங்களில் நான்கில், கடந்த மக்களவை தேர்தலில் பா.ஜ.க. முன்னணி கட்சியாக இருந்தது - மேற்கு வங்காளம் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தது.

Source: Election Commission of India

குறிப்பு: கட்சிகளின் வாக்கு விகிதங்கள் 100 வரை சேர்க்கப்படவில்லை. ஏனெனில் தொகுதியில் வெற்றி பெறும் கட்சிகள் மட்டுமே பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

கடந்த 2014 பொதுத்தேர்தலி்ல் பெற்ற பெரிய வெற்றிக்கு பிறகு, மகாராஷ்டிரா மாநிலத் தேர்தல்களிலும் பா.ஜ.க. வெற்றி பெற்றது. ஜனதாதளம் (ஐக்கிய) மற்றும் ராஷ்ட்ரிய ஜனதாதளம் (ஆர்.ஜே.டி) கூட்டணி, 2015 ல் பீகார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றது; ஆனால் இது ஒரு குறுகிய கால கூட்டணியாக இருந்தது. ஆர்.ஜே.டி வெளியேறியபின் நிதீஷ் குமார் தலைமையிலான ஜனதாதளம் (ஐக்கிய) அரசு தொடர்ந்து ஆட்சியில் உள்ளது. பீகார் அரசியல் கட்சிகள், விரைவில் நடக்கும் 2019 மக்களவை தேர்தலில் ‘மகாகாத்பந்தன்’ (கட்சிகளின் பெரும் கூட்டணி) வரிசை மாற்றி களமிறங்க முனைப்பு காட்டுகின்றன.

உத்தரபிரதேசத்தில், 2014 ல் மக்களவை தேர்தலில் பா.ஜ.க. 43% வாக்குகளுடன், 71 இடங்களை வென்றது; 2017 சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்றது. வரும் 2019 பொதுத்தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்க்க, அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாதி கட்சி, மாயாவதி தலைமையில் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியன கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளன. 2014 தேர்தலில் ராஜஸ்தானில் உள்ள அனைத்து 25 மக்களவை தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெற்றது; எனினும் 2018 டிசம்பரில் நடந்த மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியிடம் அது தோல்வி அடைந்தது.

மேற்கு வங்கத்தில், 2014 பொதுத்தேர்தலில் பா.ஜ.க. 17% வாக்குகளைப் பெற்ற போதும் அக்கட்சி இரு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 2019 தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் மோதுவதற்கு, தயாராகி வருகிறது.

அதிக வாக்கு பெறுபவரே வெற்றியாளர் என்ற இந்திய தேர்தல் நடைமுறையில் வேட்பாளர் (அல்லது கட்சி) மிக அதிகமான வாக்குகளிய பெற்று வெற்றி பெறுகிறார்; ஒருசில வாக்குகள் மாறுவது, சில நேரங்களில் தேர்தல் முடிவை பாதிக்கலாம். பீகார் போன்ற மாநிலங்களில் 13% புதிய இளம் வாக்காளர்கள் உள்ள நிலையில், தேர்தல் முடிவுகளை அவர்கள் தீர்மானிக்க முடியும். ஏன் என்பதற்கு விடை இதோ: லோக் ஜனசக்தி கட்சி (எல்.ஜே.பி.) மாநிலத்தில் 7% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது; ஆனால் ஆறு இடங்களை வென்றது. அதேசமயம்ஜனதாதளம் (ஐக்கிய), ராஷ்ட்ரீய ஜனததளம் ஆகியன, மக்களவையில் சில இடங்களை (முறையே 2 மற்றும் 4 இடங்கள்) வென்றன; ஆனால் அவற்றின் வாக்கு விகிதம் லோக் ஜனசக்தியை விட அதிகம். மாநில சட்டசபை தேர்தலில் ஜனதாதளம் (ஐக்கிய)16%; ராஷ்ட்ரீய ஜனததளம் 21% வாக்குகளை பெற்றதாக, 2015 நவம்பரில் இந்தியா ஸ்பெண்ட் செய்தி தெரிவித்தது.

இளம் வாக்காளர்கள் அதிகமுள்ள மாநிலங்கள், கட்சிகளுக்கு ஏன் முக்கியம்

அரசியல் கட்சிகள் அதிக இளம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ள முதல் ஐந்து மாநிலங்களில் கூடுதல் கவனம் செலுத்துகின்றன; இதன் மூலம் வெற்றி பெற்று மக்களவையில் அதிக இடங்களை பெற வாய்ப்பு உள்ளதாக அவை கருதுவது எங்கள் ஆய்வில் தெரிய வருகிறது. இம்மாநிலங்களில் மக்கள் தொகை அதிகம்; இங்கு வெற்றி பெறும் கட்சி அல்லது கூட்டணியால் மத்தியில் அரசு அமைக்கும் வாய்ப்புள்ளது என, 2016 மே இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.

மக்களவையின் மொத்த இடங்களில் 211 (37%) இடங்கள், 2014 தேர்தலில் இருந்து அதிக வாக்காளர்களை பட்டியலில் சேர்த்த முதல் 10 மாநிலங்களை சேர்ந்தவை.

States That Added New Voters In Largest Proportion
States Proportion of New Voters in 2018 (In %) Lok Sabha Seats
Assam 13 14
Rajasthan 10 25
Bihar 10 40
West Bengal 9 42
NCT OF Delhi 9 7
Gujarat 8 26
Karnataka 8 28
Jharkhand 7 14
Uttarakhand 7 5
Haryana 7 10
All India Average Increase 5
Total Lok Sabha Seats From States With New Voters 211

Source: Election Commission of India, Lok Sabha

குறிப்பு: மக்களவைக்கு ஒன்று அல்லது இரண்டு உறுப்பினர்களை அனுப்பும் யூனியன் பிரதேசங்கள் மற்றும் சிறிய மாநிலங்கள் இந்த பகுப்பாய்வில் பரிசீலிக்கப்படவில்லை.

திறன் மேம்பாடு, உயர் கல்வி வாய்ப்புகள் மற்றும் வேலைகள் ஆகியன, இளைஞர்களின் அதிக வாக்கு விகிதங்களை கொண்ட மாநிலங்களில், வரும் தேர்தலில் முன்னுரிமைப் பிரச்சினையாக இருக்கும். கட்சிகள் தங்களது கூட்டணி, வாக்கு விகிதம், இடங்கள் ஒதுக்கீடு போன்றவை தொடர்பான தேர்தல் கணக்குகளை தொடங்கியுள்ள நிலையில், இளைஞர்களோ அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைக்காக காத்திருக்கின்றனர்.

(திவாரி, மும்பையில் உள்ள டாடா சமூக அறிவியல் கல்வி நிறுவனத்தின் மேம்பாட்டு ஆய்வுகள் பள்ளி ஆராய்ச்சி மாணவர் மற்றும் இந்தியா ஸ்பெண்ட் பங்களிப்பாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.