மும்பை: கிராமப்புற இந்தியாவில் வேலை செய்யும் பெண்களின் எண்ணிக்கை, நகர்ப்புற வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கையை விட வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக, அரசு புள்ளி விவரங்களை இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வு செய்ததில் தெரிய வருகிறது.

கடந்த 1990களின் தொடக்கத்தில் இருந்து அதிக பொருளாதார வளர்ச்சியை இந்தியா தக்க வைத்துக் கொண்டது, இங்கு பெண்களின் மேம்பட்ட கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு வழிவகுத்தது. இருப்பினும் தேசிய மாதிரி கணக்கெடுப்பு அறிக்கை (2014) படி, பெண்கள் தொழிலாளர் வேலைத்திறன் 2005 ஆம் ஆண்டில் 33% என்றிருந்தது, 2011-12-ல் 25% என்றளவில் சரிந்தது. அண்டை நாடுகளான வங்கதேசம் (29%), நேபாளம் (52%) மற்றும் இலங்கை (34%) ஆகியவற்றை விட இந்தியா விட மோசமான விகிதத்தை கொண்டிருப்பதாக, 2017 மே 4-ல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது.

ஆனால் இந்த சரிவு கிராமப்புற பெண்களையே குறிக்கிறது என்று புள்ளியியல் மற்றும் நிகழ்ச்சி திட்டமிடல் அமைச்சகத்தின் தேசிய மாதிரி ஆய்வு (NSS) -2014 தரவுகள் தெரிவிக்கின்றன.

கிராமப்புறங்களில் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதி திட்டத்தால் (MGNREGS), பெண்கள் தங்களின் விருப்பங்கள் அதிகரித்து, கல்வி கற்கும் வாய்ப்புகளை அதிகரித்து கொண்டுள்ளனர். குடும்ப பண்ணைகளில் சம்பளம் இல்லாத வேலையில் இருந்து விலகி, முறைசார்ந்த பணிக்கு திரும்பி வருகின்றனர்.

ஆயினும் கிராமப்புறங்களில் போதிய முறையான துறை வேலைகள் இல்லை. தொழிலாளர் தேவைக்கேற்ற திட்டமான நூறு நாள் வேலைத்திட்டத்தில் (MGNREGS) பொதுத்துறை சார்ந்த வேலைகள் ஆண்டுக்கு நூறு நாட்களுக்கு மட்டுமே உழைத்து ஊதியம் பெற முடியும். நூறு நாள் திட்டம் தவிர, சாதாரண வேலைவாய்ப்புகளை பெறுவதற்காக, ஆண்கள், பெண்கள் பட்டம் படிக்க முற்படுகின்றனர்; விவசாயம் சாராத பணிக்கு செல்லும் தகுதியை பெற, பெண்கள் மேல்நிலை பள்ளி வரை செல்கின்றனர்; ஆனால் அத்தகைய குறைந்த வேலையே கிடைப்பதாக, மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தின் 2018 ஆய்வு தெரிவிக்கிறது.

முறைசார்ந்த வேலைகள், வேளாண் பணிகள் சுருங்கி வருவதால் கிராமப்புற வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.

தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (LFPR) என்பது ஆயிரம் நபர்களில் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கையாகும். தேசிய மாதிரி ஆய்வானது, 2011ஆம் ஆண்டுடன் முடிந்த 18 ஆண்டுகளில் கிராம, நகர்ப்புற பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை பதிவு செய்துள்ளது. இதில், இருதரப்பிலும் பங்கேற்பு விகிதம் குறைந்துள்ளது.

இந்த புள்ளி விவரங்கள், கிராமப்புறங்களில் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் அதிகளவில் இருப்பதை காட்டுகிறது. நகர்ப்புறங்களில் பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 1993ஆம் ஆண்டில் 1,000க்கு 165 ஆக இருந்தது, 2011ஆம் ஆண்டில் 155 என்று சரிந்துள்ளது; அதே காலகட்டத்தில் கிராமப்புறங்களில் இது முறையே 330 மற்றும் 253 ஆக இருந்தது.

இந்த சரிவுக்கு விவசாய வேலை வாய்ப்புகள் குறைந்து போனதே காரணம். விவசாய நிலப்பகுதி அளவு குடும்பங்களால் பங்கிடப்படுவதால் சுருங்கி விட்டதாக, வேளாண்துறை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

விவசாய நிலப்பரப்பின் அளவு, 2000-01ஆம் ஆண்டில் சராசரி அளவு 1.23 ஹெக்டேர் என்பது 2010-11ஆம் ஆண்டில் 1.15 ஹெக்டேராக சரிந்தது என, 2011 வேளாண் துறை அமைச்சகத்தின் வேளாண்துறை கணக்கெடுப்பு தரவுகள் கூறுகின்றன. வேளாண் துறையில் அதிகரித்து வரும் இயந்திரமயமாக்கலும் தினக்கூலி தொழிலாளர்களின் தேவையை குறைத்து வருகிறது என்று, பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சிக்கான தேசிய கவுன்சில் (NCAER) மற்றும் மேரிலாண்ட் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய ஆய்வுகள் கூறுகின்றன.

குறைந்த வருவாய் பிரிவினரில் அதிக சரிவு

கிராமப்புற பெண்களிடையே தொழிலாளர் பங்களிப்பு குறைந்து வருவது என்பது, குறைந்த வருவாய் பிரிவினரிலேயே அதிகம் இருப்பதை தேசிய மாதிரி ஆய்வு புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. கிராமப்புற இந்தியாவில் மிகக்குறைந்த வருமானத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முதல் மூன்று வருவாய் பிரிவினரில் பெண் தொழிலாளர்கள் விகிதம் (WPR) ( ஆயிரம் நபர்களில் வேலைக்கு செல்லும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை இது வரையறுக்கிறது) குறைவாகவே உள்ளதாக, என்.எஸ்.எஸ். தரவுகள் கூறுகின்றன. மூன்றாவது குறைந்த வருவாய் பிரிவினரில் 1000 பேரில் 198 பேர் என, 20%- 30% என்ற குறைந்த தொழிலாளர் விகிதத்தையும்; மூன்றாவது குறைந்த வருவாய் பிரிவில் 70%- 80% என்றளவில் அதிகபட்சமாக 288 என்று உள்ளது.

அதிகரித்து வரும் தொழிலாளர் விகிதம், கிராமப்புற இந்தியாவில் உயர் வருவாய் கொண்ட பிரிவு பெண்கள் அதிகமான முறையான ஊதியம் பெறும் பணிக்கு விரும்பி மாறுவதை சுட்டிக்காட்டுகிறது. நூறுநாள் வேலைத்திட்டம் போன்ற ஊதியத்துடன் கூடிய மாற்று வேலைவாய்ப்புகள் காரணமாக, ஊதியமற்ற வேலையை கைவிடுவதாக, நிதி ஆயோக்கிற்காக அகமதாபாத் இந்திய மேலாண்மை நிறுவனம் (IIM) நடத்திய 2015 ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த வருவாய் பிரிவில் பெண் தொழிலாளர் விகிதம் சரிவுக்கு பல காரணிகள் காரணமாக இருக்கலாம் என்று, அந்த ஆய்வு கூறுகிறது. அதிகரித்த வருமானம் குடும்ப பண்ணை வேலை போன்ற துயர் வேலைவாய்ப்பில் இருந்து பெண்களை விலகச் செய்துள்ளது. குறைந்த வருமானம் உள்ள கிராமப்புற குடும்பங்களில் பெண்களால் செய்யப்படும் சில முறைசாரா வேலைகள் கூட பதிவு செய்யப்படவில்லை. உதாரணமாக, கட்டுமானத்துறை போன்ற பணிகளில் பெண்கள், சிறுமியர் பணிக்கு அமர்த்தப்பட்டு, அவர்களின் ஆண் உறவினர் பெயரில் கூலி பெறுவதை ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

சிறந்த கல்வி அதிகரித்த வேலைக்கு வழிவகுக்கவில்லை

தொழிலாளர் விகிதத்தில் பெண்களின் பங்களிப்பு குறைவதற்கான முக்கிய காரணிகளில் ஒன்று, அவர்களுக்கான குறைந்த கல்வி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

பெண் கல்விக்கு ஊக்கம் தரப்பட்டதால் கிராமப்புறங்களில் உயர் கல்வியறிவு விகிதம் (1983ல் 22% என்பது 2011ஆம் ஆண்டு 55% என) அதிகரித்துள்ளது; தொடக்க கல்வி பயின்றவர் விகிதமும் (2005ஆம் ஆண்டில் 10% என்பது 2011ல் 17% என) உயர்ந்துள்ளதாக என்.எஸ்.எஸ். தரவுகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், சிறந்த கல்வி கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கவில்லை. கிராமங்களில் பெண் கல்வி உயர்ந்த போதும், கல்வி நிலை வாரியாக பெண் தொழிலாளர் விகிதத்தில் சரிவு இருப்பதையே என்.எஸ்.எஸ். தரவுகள் காட்டுகின்றன.

கல்லாமையில் இருந்து மேல்நிலை கல்வி (12ஆம் வகுப்பு வரை) முடிப்பது என-- கல்வி அதிகரிப்பு என்பது, 53.3% என்பதில் இருந்து 22.4% என கிராமப்புற தொழிலாளர் விகிதம் சரிவுடன் தொடர்புடையது.

கல்வி நிலை உயர்வும் பெண் தொழிலாளர் விகிதம் சரிவும்: கிராமப்புற பெண்களில் 1000 பேரில் 445 பேர் கல்வி பெறாதவர்கள்; மேல்நிலை கல்வி முடித்த பெண்கள் 121 பேர் ஆகும்.

கிராமப்புற இந்தியாவில் பெரும்பாலான பெண்கள் ஆரம்பக்கல்வி பெற்றுள்ளனர்; உயர்நிலை பள்ளி சேர்க்கையும் அதிகரித்துள்ளது. மேல்நிலை கல்வி பயில இளம் பெண்கள் செல்வது, கிராமப்புற தொழிலாளர் விகிதத்தில் பெண்களின் விகிதம் குறைவதற்கு காரணமாகிறது.

அதேபோல், 20 வயது முதல் 64 வயதுக்கு அப்பால் உள்ள பெண்களின் தொழிலாளர் விகிதம் குறைவதற்கு பள்ளிச் சேர்க்கை காரணமாக இருப்பதில்லை. எனினும், பெண் தொழிலாளர் விகிதம் குறைவதால் கிராமப்புறங்களில் அனைத்து தரப்பு பெண்களும் பாதிக்கப்படுவதாக, என்.எஸ்.எஸ். தரவுகள் கூறுகின்றன. இந்த பரிந்துரை, பள்ளியில் செலவிட்ட நேரம், பணியிடத்தில் செலவிட்ட நேரத்திற்கு இடையே வர்த்த ரீதியாக சிக்கலை ஏற்படுத்துகிறது.

மேல்நிலை கல்வி முடித்த பெண்களின் தொழிலாளர் விகிதம் நகர்ப்புறங்களில் அதிகரித்த நிலையில், கிராமப்புறத்தில் சரிந்துள்ளது. இது, நகர்ப்புறங்களில் முறையான வேலைவாய்ப்புகள் அதிக கிடைப்பதையே பிரதிபலிக்கிறது.

கிராமப்புறங்களில், உயர்கல்வி தகுதி கொண்ட பெண்கள் மட்டுமே விவசாயம் சாராத வேலையை தேடிக் கொள்ள முடிகிறது. மேல்நிலை பள்ளிக்கு செல்லும் வயதுக்கு அப்பால், பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை விகிதம் சரிவு, அதிகளவில் இல்லை; இது இடைநிலை கல்வியுள்ள பெண்களுக்கானது.

கிராமப்பகுதிகளில், கல்லூரி பட்டதாரிகளான 28.1% பெண்கள் வேலையில் இருப்பவர்கள் என்று, மேரிலாண்ட் பல்கலையின் 2018 ஆய்வு தெரிவிக்கிறது. "கல்வியறிவு பெற்ற பெண்கள் சிறந்த தரமான வேலையை, குறிப்பாக ஊதியம் கிடைக்கக்கூடியதாக பார்க்கின்றனர்" என்று கூறும் ஆய்வு "அனைத்து அல்லது அதிக வேலைவாய்ப்புகள் சம்பளத்துடன் கூடியதாக இருப்பின், இந்திய பெண்கள் அதிக கல்வியுடன் உயர் வேலைவாய்ப்புகளில் வழக்கமான நேர்மறை உறவைக் காட்டுவார்கள் என்ற அனுமானம் இருக்கலாம்" என்கிறது.

"எனினும், இத்தகைய வேலைகள் குறைவானவை; உயர் கல்வி பயின்றவர்கள் தான் அணுகத்தக்கவை" என்று ஆய்வு தெரிவிக்கிறது. "இடைநிலை கல்வி படித்த பெண்களுக்கு பொருத்தமான வேலை கிடைத்தால், அவர்களின் உழைப்பு பங்களிப்பை அதிகம் எதிர்பார்க்கலாம்".

மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து கட்டமைப்பு கிராம பெண்களின் பணி பங்களிப்பை அதிகரிக்கிறது

பெரும்பாலான ஊதியம் சார்ந்த வேலைகள் பெருநகரங்கள், நகரங்கள், சிறு நகரங்களில் தான் கிடைக்கிறது. எனவே பணித்திறனில் பெண்களின் பங்கேற்பில் போக்குவரத்து, அதுசார்ந்த கட்டமைப்புகள் தாக்கத்தை ஏற்படுத்துவதாக, இந்திய மனிதவள மேம்பாட்டு ஆய்வு (IHDS) 2004-05 மற்றும் 2011-12 புள்ளி விவரங்கள் அடிப்படையில் என்.சி.ஏ.இ.ஆர். மற்றும் மேரிலாண்ட் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய 2017 ஆய்வு தெரிவிக்கிறது.

"போக்குவரத்து உள்கட்டமைப்புகளின் நிலைமை சர்வே இடைவெளியில் வியத்தகு முறையில் மாறிவிட்டது; குறிப்பாக பி.எம்.ஜி.எஸ்.ஒய்.(பிரதமரின் கிராம் சதக் யோஜனா) வாயிலாக மத்திய அரசு தந்த வலுவான அழுத்தமே காரணம்” என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.”2005ல் இருந்ததை விட பல கிராமங்கள் 2012ல் கூச்சா (மண்பாதை) மற்றும் புக்கா (தார் லை) சாலைகள் மூலம் அணுகப்பட்டன. ஏழு ஆண்டுகள் இடைவெளியில் "சாலை அணுகல் இல்லை" என்ற சதவீதம் [கிராமங்களில்] 6% என்பது 1% ஆக வரை வீழ்ச்சியடைந்தது".

“பேருந்து சேவை அடுத்தடுத்து இயக்கப்படுவதால் கிராமப்புறங்களில் பேருந்து வசதியில்லை என்ற சதவீதமும், 2005ல் 47% என்பது, 2018ல் 38% ஆக சரிந்தது” என்று ஆய்வறிக்கை கூறுகிறது. ”பல கிராமங்களில் 2005ல் இருந்ததை விட 2012ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு ஒன்று முதல் ஆறு முறை வரை பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 2005 ஆண்டை, 2012 உடன் ஒப்பிடும் போது சில கிராமங்களில் ஏழு முறை அல்லது ஒரு நாளைக்கு மேலாக பேருந்து சேவையை கொண்டுள்ளன”.

மண்பாதை அல்லது தார் சாலை கட்டுமானம் என்பது முறையே 1.5 மற்றும் 1.4 முறை பண்ணை வேலையில் பெண்கள் பங்களிப்பு முரண்பாடுகளை அதிகரித்து இருப்பதாக இந்திய மனிதவள மேம்பாட்டு ஆய்வு தெரிவிக்கிறது. ஆண்களின் தங்களின் சாலைப்பணிகளில் பெற்ற பலன் அதிகம்; மண் சாலை கட்டமைப்பு எனில் 1.2 முறை, தார் சாலை எனில் 1.4 முறை என்ற இந்த ஆய்வு முடிவு, வேலைவாய்ப்பில் நீண்டகாலமாக இருக்கும் பாலின இடைவெளியை பிரதிபலிக்கிறது. பணித்திறனில் பெண்களை விட ஆண்கள் எண்ணிக்கை அதிகம் இருந்தாலும், மேம்பட்ட சாலை வசதியால் ஆண்களை விட பெண்களே அதிகம் பயனடைகின்றனர்.

கடந்த 2012ஆம் ஆண்டுடன் முடிந்த ஏழு ஆண்டுகளில் வேளாண் சாராத வேலைவாய்ப்பு விகிதம், ஆண்- பெண் இருபாலர் இடையே அதிகரித்துள்ளது; எனினும் இதில் ஆண்களுடன் ஒப்பிடும் போது பெண்களின் விகிதம் குறைவு. வேளாண் அல்லாத பணியில் பங்கேற்கும் பெண்களின் விகிதம், 2005ல் 10% என்றிருந்தது, 2012ல் 17% ஆக அதிகரித்துள்ளது. இதே துறையில் ஆண்களின் விகிதம் 2005-ல் 47% என்பது, 2012ஆம் ஆண்டில் 55% ஆக அதிகரித்தது.

ஆண்களின் சந்தை ஊதியத்தை அதிகரிக்க நூறு நாள் வேலை; பெண்களுக்கு இல்லை

2004-05 ஆம் ஆண்டை விட (50%) குறைவாக (46%) 2011-12ஆம் ஆண்டில் பெண்களுக்கு 'வேலை கிடைக்கவில்லை' என்று இந்திய மனிதவள மேம்பாட்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதம் சட்டம் 2005 இல் இயற்றப்பட்டது.

மனிதவள மேம்பாட்டு ஆய்வின்படி,2004-05 முதல் 2011-12 வரை பண்ணை வேலைகளில் ஈடுபடுத்தப்பட்ட 6 சதவீதத்தை விட அதிகமான பெண்கள் (9%) வேளாண் வேலைகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நூறு நாள் வேலை திட்ட பணி வாய்ப்புகள் விரிவடைவதால், பெண்களை ஊதியம் பெறும் தொழிலாளராக இது ஈர்க்கிறது; இல்லையெனில் குடும்ப பண்ணைகளில் மட்டுமே வேலை செய்ய முடியும். நூறு நாள் வேலை திட்டத்தில் உள்ள பெண் தொழிலாளர்களில் 45% பேர், 2004-05 ஆம் ஆண்டுகளில் பண்ணை வீடுகளில் ஊதியமின்றி பணி புரிந்து வந்தவர்கள் என்பதை ஆய்வு காட்டுகிறது.

நூறு நாள் வேலை உறுதி திட்ட பணிக்கான அதிக ஒதுக்கீடு, அத்திட்டத்தில் பணிபுரியும் ஆண் தொழிலாளர்களின் சந்தை ஊதியங்களை உயர்த்துவது (நூறு நாள் வேலை திட்டத்துக்கு அப்பால் முறையான வேலைக்கு) தெரிய வந்துள்ளது. ஆனால், இதேபோன்ற அதிகரிப்பு புள்ளி விவர அடிப்படையில் பெண்களுக்கு இல்லை என, என்.சி.ஏ.இ.ஆர். 2018 ஆய்வு தெரிவிக்கிறது. இது, முறைசார்ந்த வேலை அணுகலில் பாலின சார்பை அடிக்கோடிடுகிறது. கிராமப்புறங்களில் நூறு நாள் வேலை உறுதி திட்ட பணிக்கு அப்பால் சாதாரண வேலைகள் கிடைக்கின்றன. இது பெரும்பாலும் நூறுநாள் திட்ட ஆண் தொழிலாளர்களுக்கே கிடைக்கிறது; இப்பணி கிடைக்காத பெண்கள் முறைசாராத பணி வரம்புக்குள் சிக்கிக் கொள்கின்றனர்.

(சால்வி, இந்தியா ஸ்பெண்ட் மூத்த கொள்கை பகுப்பாய்வாளர்)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.