அனுப்பும் தொகையை சார்ந்துள்ள மாநிலங்கள் ஆட்சேர்ப்பு முகவர்கள் பிழைக்க ஏன் உதவ வேண்டும்
மும்பை: நீடிக்கும் ஊரடங்கு, எண்ணெய் விலை மற்றும் வளைகுடாவில் வளர்ச்சி வாய்ப்புகள் பற்றிய நிச்சயமற்ற தன்மை ஆகியன இந்தியாவின் வெளிநாட்டு தொழிலாளர் ஆட்சேர்ப்பு முகவர்களை கடுமையாக பாதித்து உள்ளதாக, மும்பையை சேர்ந்த இடம்பெயர்வு ஆராய்ச்சி அமைப்பான இந்தியா மிக்ரேசன் நவ் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. 2010 மற்றும் 2019ஆம் ஆண்டுகளுக்கு இடையில், அரசின் ஈ-மிக்ரேட் (e-Migrate) போர்ட்டல் மூலம் நடந்த வெளிநாட்டு தொழிலாளர் ஆட்சேர்ப்பில், இந்த முகமைகள் 90%-க்கும் மேலான பணி வாய்ப்புகளை சேர்த்துள்ளன. கடந்த மூன்று மாதங்களாக இத்தொழில் முடங்கிப்போய் சம்பளம் மற்றும் வாடகைகளை செலுத்தவே முகமைகள் சிரமப்படுகின்றன.
ஜூலை 2020 நிலவரப்படி இந்தியாவில் 1,454 பதிவு செய்யப்பட்ட முகவர்கள், சர்வதேச தொழிலாளர் சந்தையில்உள்ளதாக, வெளியுறவு அமைச்சகத்தின் (MEA) கீழ் செயல்படும் ஈ-மிக்ரேட் போர்ட்டல் தெரிவிக்கிறது. கோவிட்-19 ஊரடங்கின்போது இந்தியா மிக்ரேசன் அமைப்பு, நாட்டின் முக்கிய மாநிலங்களில் செயல்படும் 11 முகமைகள் மற்றும் நூற்றுக்கணக்கான தனிப்பட்ட முகவர்களின் நலன்களை மேற்பார்வையிடும் முக்கிய கூட்டமைப்புகளின் பிரதிநிதிகளை பேட்டி கண்டது. சமீபத்திய நிகழ்வுகளால் தங்களது வணிகம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக பெரும்பாலானோர் தெரிவித்தனர்.
"தொழில்துறைக்கான ஆட்சேர்ப்பு முகவர்களில் 50% மூடப்பட்டும், அவர்களுக்கு ஊதியம் கிடைக்காத நிலையை நாங்கள் காண்கிறோம்," என்று, ஆட்சேர்ப்பு முகவர்கள் கூட்டமைப்பான ‘இந்திய புலம்பெயர்ந்தோர் மேலாண்மை கவுன்சில்கள் மற்றும் சங்கங்களின் கூட்டமைப்பு’ (FIMCA- ஃபிம்கா) தலைவர் தீபக் எச். சாப்ரியா கூறினார்.
2018 ஆம் ஆண்டின் தரவுகளின்படி, வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC - ஜி.சி.சி) நாடுகள், குடியேறாத இந்திய மக்களில் 65% வாழ்ந்த ஒரு முக்கியமான இடம்பெயர்வு பகுதியாகும். கோவிட் தொடர்பான கட்டுப்பாடுகள் இருந்தும் கூட, கத்தார் (ஃபிஃபா உலகக் கோப்பை 2022) மற்றும் துபாய் (எக்ஸ்போ 2021-22) ஆகியவற்றில் வரவிருக்கும் முக்கிய சர்வதேச நிகழ்வுகள் வெளிநாட்டு வேலைவாய்ப்பின் புதிய வழிகளைத் திறக்கும் என்று நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். கட்டுமானத்துறையை எடுத்துக் கொண்டால், 100 வெவ்வேறு இடங்களில் 40,000 தொழிலாளர்கள் தேவைப்படும் என்று துபாய் எக்ஸ்போ மதிப்பிட்டு உள்ளது. உலகக் கோப்பை போட்டிக்கான உள்கட்டமைப்பு பணிகளுக்கு, கத்தாருக்கு இன்னும் 5,00,000 தொழிலாளர்கள் தேவை என்று மதிப்பிடப்பட்டு உள்ளதாக சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பின்-2015 அறிக்கை தெரிவிக்கிறது. ஊரடங்கு காரணமாக கட்டுமான நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன; நிகழ்வுகள் நெருங்கி வருவதால் பணிகள் புத்துயிர் பெற வேண்டும்.
விருந்தோம்பல், சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்து போன்ற பிற துறைகளுக்கும் தொழிலாளர்கள் தேவைப்படலாம்; இந்த கால்பந்து இரண்டு நிகழ்வுகளும் அதற்கான சூழலை உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிற்கு திரும்பி வந்த புலம்பெயர்ந்தோரின் மறுதிறன், இந்தியாவுக்கு வெளியே வெளிநாட்டு ஆட்சேர்ப்பை புதுப்பிக்க உதவும் என்று ஆட்சேர்ப்பு முகவர்கள் தெரிவித்தனர்.
நெறிமுறையற்ற பணி, ஊழல் மற்றும் சுரண்டல் நடைமுறைகள் என்ற குற்றச்சாட்டுக்கு ஆட்சேர்ப்பு முகவர்கள் பெரும்பாலும் ஆளாகிறார்கள். எனவே, ஆட்சேர்ப்பு பாதுகாப்பானதாகவும், ஒழுங்குபடுத்தப்பட்டதாகவும், தொழிலாளர்களின் உரிமைகளில் அக்கறை இருப்பதை உறுதி செய்வதற்காக இடம்பெயர்வு முறைகளை மீண்டும் உருவாக்குவதற்கான வாய்ப்பாகவும் தற்போதைய நெருக்கடி அமையும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். ஒழுங்குள்ள சேவைகள் குறைவாக இருக்கும்போது அல்லது நீண்ட அதிகாரத்துவ செயல்முறைகளில் ஈடுபடும்போது, புலம்பெயர்ந்தோர் சில நேரங்களில் ஒழுங்கற்ற வாய்ப்புகளை தேர்வு செய்கிறார்கள். ஏழைகள், அதிக பாதிப்புக்குள்ளான புலம்பெயர்ந்தோர் பெரும்பாலும் ஒழுங்கற்ற முறையில் குடியேற அதிகளவு செலுத்துவதைக் காணலாம் என்று, இடம்பெயர்வு செலவுகள் குறித்த 2018 உலக வங்கி ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
"இந்தியாவில், ஒழுங்குள்ள பாதைகளை (இ-மிக்ரேட்) தேர்வு செய்பவர்கள் மீது பதிவான புகார்கள் மொத்த எண்ணிக்கைகளில் 1% க்கும் குறைவு" என்று இந்தியாவின் பழமையான தனியார் ஆட்சேர்ப்பு நிறுவனமான அம்பே இன்டர்நேஷனலின் இயக்குனர் அமித் சக்சேனா கூறினார். "பெரும்பாலும், நாங்கள் சட்டவிரோத ஆபரேட்டர்களுடன் ஒன்றிணைக்கப்படுகிறோம், அவை புலம்பெயர்ந்தோர் சிக்கலில் சிக்கியிருக்கும் ஒழுங்கற்ற கட்டமைப்பை எளிதாக்குகின்றன" என்றார்.
வேலை நேரம் குறைப்பு, வேலையிழப்பு மற்றும் உலகெங்கிலும் கட்டாய தற்காலிக விடுப்பு ஆகியவை உலகளாவிய தொழிலாளர் தொகுப்பை பாதித்துள்ளன; 93% பேர் பணியிடங்களை மூடுவதற்கான நடவடிக்கைகளைக் கொண்ட நாடுகளில் அவர்கள் வாழ்கின்றனர் என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO - ஐ.எல்.ஓ) ஜூன் 30 செய்தி தெரிவித்தது. உலக வங்கியின் கூற்றுப்படி, தொகை அனுப்பும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னணியில் உள்ளது (2019 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 83 பில்லியன் டாலர் அனுப்பப்பட்டது). ஆனால், ஏப்ரல் 2020 உலக வங்கியில் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி, சர்வதேச தொகை அனுப்புவது "சமீபத்திய வரலாற்றில் மிகக்கடும் சரிவை" கண்டிருப்பதாக தெரிவித்துள்ளது.
முகவர்கள் ஏன் முக்கியம்
கடந்த 2015 மற்றும் 2018ஆம் ஆண்டுகளுக்கு இடையில், இந்தியாவில் இருந்து குடியேற்றம் தேவைப்படும் நாடுகளுக்கு ஆட்சேர்ப்பு (அவை, கடும் வெளிநாட்டு ஆட்சேர்ப்பு சட்டங்கள் மற்றும் குறை தீர்க்கும் தீர்வுகள் இல்லாதவை; இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் மதிப்பீட்டில், எண் 18 மற்றும் அனைத்து ஆறு ஜி.சி.சி நாடுகளையும் உள்ளடக்கியது) 56% -அதாவது 7,84,152 என்பது 3,40,157 ஆக குறைந்துள்ளது என, ஈ-மிக்ரேட் போர்டல் தரவு தெரிவிக்கிறது. ஈ.சி.ஆர் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் பொதுவாக மெட்ரிகுலேஷன் (10 ஆம் வகுப்பு) முடிக்காதவர்களை உள்ளடக்கியது. வேலைக்கு இடம்பெயரும் முன்பு புலம்பெயர்ந்தோரின் பாதுகாவலரிடம் இருந்து அனுமதி தேவை. ஈ.சி.ஆர் அல்லாத நாடுகளுக்கு குடிபெயர்ந்தவர்கள் மற்றும் பரிசோதனை தேவையில்லாத பாஸ்போர்ட்டுகளின் தரவு பொதுவில் கிடைக்காது. 2019 ஆம் ஆண்டில் ஆட்சேர்ப்பு 8% அதிகரித்துள்ள போதும், கோவிட் தொற்று நோய் பரவலால் மார்ச் 25 முதல் வணிக சர்வதேச வினாம பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டு, கடந்த சில மாதங்களில் கிட்டத்தட்ட முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
"இந்த மொத்த சூழ்நிலையும் எங்களது தொழில்துறையை குறைந்தது இரண்டரை ஆண்டு பின்னுக்குத் தள்ளிவிட்டது" என்று பெயர் தெரிவிக்க விரும்பாத ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆட்சேர்ப்பு முகவர் ஒருவர் கூறினார். "ஊரடங்குக்கு முன்பே, வேலைவாய்ப்புகள் மற்றும் நேர்காணல் அழைப்புகள் குறைந்து வந்தனா. இப்போது எங்களிடம் 50-60 ஆர்வலர்கள் உள்ளனர்; அவர்களின் விசாக்கள் நிலுவையில் உள்ளன" என்றார்.
பாதுகாப்பான, ஒழுங்குபடுத்தப்பட்ட இடம்பெயர்வுகளை ஊக்குவிப்பதன் முக்கியத்துவம் - குறிப்பாக தொழிலாளர்களை (குடியேறியவர்கள் குடும்பங்கள், மாணவர்கள், முதலியன)- பாதுகாப்பான, ஒழுங்கான மற்றும் வழக்கமான இடம்பெயர்வுக்கான உலகளாவிய ஒப்பந்தத்தில் வலியுறுத்தப்பட்டது, இது ஐக்கிய நாடுகள் பொதுச்சபையால் 2018 டிசம்பரில் முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. உலகளாவிய இடம்பெயர்வு ஆளுகைக்கான இந்த பிணைப்பு முயற்சி பலதுறை, பல பங்குதாரர் அணுகுமுறையின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது மற்றும் தொழிலாளர் வழங்கல் சங்கிலியில் முதலாளிகள், ஆட்சேர்ப்பு செய்பவர்கள் மற்றும் துணை ஒப்பந்தக்காரர்களுக்கு இடையிலான கூட்டாண்மை மூலம் அடையப்பட வேண்டிய நியாயமான மற்றும் நெறிமுறை ஆட்சேர்ப்பு நடைமுறைகளில் கவனம் செலுத்துகிறது. கொள்கை வகுத்தலில் முக்கிய பங்கு வகிக்க ஏதுவாக ஆட்சேர்ப்புத்துறையை சேர்க்க வேண்டியதன் அவசியமும் ஐ.எல்.ஓ-வின் சுதந்திர வேலைத்திட்டம் மற்றும் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (IOM- ஐ.ஓ.எம்) சர்வதேச ஆட்சேர்ப்பு ஒருமித்த அமைப்பு ஆகியவற்றில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
இந்திய சூழலில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வெளியே பங்குதாரர்களில், ஆட்சேர்ப்பு முகவர்கள், அரசு, வெளிநாட்டு நிறுவனங்கள், தூதரகங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அடங்கும். அவர்களின் முக்கிய பங்கு இருந்தபோதிலும், 2017 ஆம் ஆண்டில் தான் ஐ.எல்.ஓ மற்றும் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் நடுநிலையான கூட்டத்தின் மூலம் ஆட்சேர்ப்பு முகவர்கள் கொள்கை வகுக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஐ.எல்.ஓ ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டம், 2020 ஏப்ரலில் இந்திய வெளியுறவுத்துறையுடன் இணைந்து தொழில்துறையை வெளிநாடுகளில் உள்ள இந்திய தொழிலாளர்கள் பற்றிய விவாதங்களுக்கு வழிவகுத்ததாக, தொழில்துறை பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
Based on interviews by India Migration Now
அரசின் ஈ-மிக்ரேட் போர்டல் வெளிநாட்டு முதலாளிகள் தங்களை பதிவுசெய்து நேரடியாக ஆட்சேர்ப்பு செய்ய அனுமதித்தாலும், நாங்கள் முன்பு கூறியது போல் 2010 மற்றும் 2019 க்கு இடையில், 91% ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் முகவர்கள் மூலமாகவே நடந்தன. பெரும்பாலும் துணை முகவர்களின் தொடர்பு மூலம் செயல்படும் இந்த முகவர்கள், வெளிநாட்டு முதலாளிகளின் ஆட்சேர்ப்பு தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பொறுப்பாவார்கள்; அதே நேரம் குடியேற்றத்திற்கான சட்டரீதியான இந்திய வெளியுறவு அமைச்சகத்தால் ஏற்படுத்தப்பட்ட செயல்முறைக்கு இணங்குகின்றனர். நேர்காணல்கள், குடியேற்ற அனுமதி, புறப்படுவதற்கு முந்தைய ஒருங்கிணைப்பு மற்றும் தொழிலாளர்களுக்கான விமான டிக்கெட் போன்றவற்றை இவை ஒருங்கிணைக்கின்றன.
ஆட்சேர்ப்பு முகவர்கள் பல காரணங்களுக்காக அவசியமானவர்கள்: அவர்கள், சர்வதேச அளவில் தொழிலாளர் தேவைகளை பூர்த்தி செய்பவர்கள். வெளிநாட்டு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சரியான நபர்களை சரியான இடத்தில் பணிமர்த்துகின்றன. இடம்பெயர்வுப் பயணங்களை எளிதாக்குவதுடன், பல இடங்களில் உள்ள தொழிலாளர்களின் தொடர்புக்கான ஒரு முக்கிய புள்ளியாகத் தொடர்கின்றன. அவர்களின் சேவைகளை அங்கீகரித்த இந்திய வெளியுறவு அமைச்சகம், 1983 ஆம் ஆண்டின் குடியேற்ற சட்டத்தின் 2017 திருத்தத்தில் தேர்வு, விளம்பரம், சான்றளிப்பு மற்றும் செலவு, உள்நாட்டு நேர்காணலுக்கான பயணச்செலவு ஆகியவற்றை ஈடுசெய்ய ஆட்சேர்ப்பு சேவைக்காக தொழிலாளியிடம் ரூ.30,000 வரை பெறலாம் என்ற உயர் வரம்பை நிர்ணயித்துள்ளது.
Source: e-Migrate portal
Note: Based on interviews conducted by India Migration Now
வளைகுடாவில் தேசியமயமாக்கப்படும் தொழிலாளர் திறன்
இடம்பெயர்வு திட்டங்கள் முடங்கியுள்ளன; வழக்கமான ஆசிய வம்சாவளி நாடுகளில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நிகழும் குடியேற்றத்தைவிட மிகக் குறைவான மக்களே இடம் பெயர்ந்துள்ளதாக, ஜூன் மாத ஐ.எல்.ஓ கொள்கை குறிப்பு தெரிவிக்கிறது. "கோவிட்-19 பரவலால் முதல் கட்டமாக பல லட்சம் பேர் சொந்தஊராட இந்தியாவுக்கு திரும்பி வந்தனர்" என்று அம்பே இன்டர்நேஷனலின் சக்சேனா கூறினார். "இந்த ஊரடங்கின் இரண்டாம் கட்டம் பல மாதங்கள் நீடிக்கும்; அத்துடன் மத்திய கிழக்கு நோக்கிச் செல்லுவோரின் உத்தியையும் இது உள்ளடக்கி இருக்கும். உண்மையான பொருளாதார வளர்ச்சி மற்றும் புதிய திட்டங்களின் அடிப்படையில் மீண்டும் பணியமர்த்தல் பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் பிடிக்கலாம்” என்றார்.
பல நாடுகள் தொழிலாளர்களை தேசியமயமாக்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதால் எதிர்கால ஆட்சேர்ப்பும் பாதிக்கப்படலாம் என்று, 400 ஆட்சேர்ப்பு முகவர்கள் சங்கங்களை உள்ளடக்கிய இந்திய பணியாளர் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (IPEPCIL) தெரிவித்துள்ளது. குவைத்தின் புதிய வெளிநாட்டவர் ஒதுக்கீட்டு மசோதா, இந்தியர்களை 15% என்றளவில் மட்டுப்படுத்த முன்மொழிகிறது, இது ஏற்கனவே வசிக்கும் மற்றும் அங்கு பணிபுரியும் 8,00,000 இந்தியர்களை பாதிக்கும். "2020 ஆம் ஆண்டின் பெரும்பகுதிக்கு வர்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளது, இது ஆண்டு முழுவதும் தொடரக்கூடும். ஏஜென்சிகள் பணப்புழக்கச் சிக்கல்களை எதிர்கொள்கின்றன, ”என்று ஐபிஇபிசிஐஎல் தகவல் தொழில் நுட்பப்பிரிவு தலைவர் சஃப்வான் யூசுப் ஷேக் கூறினார்.
வரும் 2022 ஆம் ஆண்டில் கத்தார் உலகக் கோப்பை போன்ற நிகழ்வுகளால், இந்த சரிவில் இருந்து மீட்கப்படும் வாய்ப்புகள் எதிர்பார்க்கப்படுகிறது என்று பெயரிட விரும்பாத பீகார் சரண் நகரைச் சேர்ந்த ஒரு முகவர் கூறினார். தர்பங்காவைச் சேர்ந்த பெயர் தெரிவிக்க விரும்பாத மற்றொரு முகவர், வளைகுடா குடியேற்றத்தின் எதிர்காலம் குறித்து அவநம்பிக்கை வெளிப்படுத்தினார். ஒரு முக்கிய புலம்பெயர்ந்த மாநிலமான பீகார், பிற இந்திய மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஜி.சி.சி.க்கும் தொழிலாளர்களை அனுப்புகிறது.
உலகப் பொருளாதார வளர்ச்சி 3% வரை சரியும் என்று கணிக்கப்பட்டு இருந்தாலும் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் வளைகுடா நாடுகளின் பொருளாதாரங்களில் பாதிப்பு மிக மோசமாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் ஏப்ரல் மாதம் மதிப்பிட்டுள்ளது. கோவிட் ஊரடங்கால் எண்ணெய் விலை வீழ்ச்சி, அவர்களது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்றது ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறது, எண்ணெய் ஏற்றுமதி நாடுகளில் (அனைத்து ஜி.சி.சி நாடுகளிலும்) எதிர்பார்க்கப்படும் சரிவு தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பீடு, ஏப்ரலில் 3.9%இல் இருந்து ஜூன் வரை 7.6% ஆக உயர்ந்துள்ளது.
என்ன செய்ய முடியும்
ஆட்சேர்ப்பு முகவர்கள் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் பதிவு செய்யப்பட்டு, குடியேற்ற சட்ட விதிகள்-1983 இல் 2017ம் ஆண்டு திருத்தத்தின்படி ரூ.50 லட்சத்திற்கு வங்கி உத்தரவாதத்தை சமர்ப்பிக்க வேண்டும். மும்பை, டெல்லி, ஹைதராபாத் போன்ற மெட்ரோ நகரங்களில் பெரும்பாலானவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்; இருப்பினும் உத்தரபிரதேசம், பீகார், தெலுங்கானா மற்றும் கேரளா போன்ற புலம்பெயர்ந்தோருக்கான பல முக்கிய மாநிலங்களும் மாவட்ட அளவில் செயல்படும் முகவர்களைக் கொண்டுள்ளன. பதிவுசெய்த காலத்தில் 100 தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக சிறிய அளவிலான ஏஜென்சிகள் ரூ.8 லட்சம் வங்கி உத்தரவாதத்துடன் பதிவு செய்ய சமீபத்திய அறிவிக்கை அனுமதிப்பதன் மூலம், இது விரிவாக்கப்பட்டுள்ளது. ஈ-மிக்ரேட் போர்ட்டலின் ஆட்சேர்ப்பு செயல்முறை சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து வளைகுடாவுக்கு இடம் பெயர்வதை தடைசெய்ததாகக் கூறப்படுகிறது, ஏனெனில் இது நேரத்தை எடுத்துக்கொள்வதுடன் சிவப்பு நாடா முறையில் இருந்தது.
அவர்கள் சந்திக்கும் பணப்புழக்க நெருக்கடியை குறைக்க, ஆட்சேர்ப்பு முகவர்கள் பதிவு செய்தவுடன் சமர்ப்பிக்கும் வங்கி உத்தரவாதங்களை அரசு வெளியிட வேண்டும் என்று ஃபிம்கா பரிந்துரைத்தது. "வங்கி உத்தரவாதங்களுக்குப் பதிலாக, ஆட்சேர்ப்பு முகவர்கள் சட்டத்தின் அனைத்து விதிகளையும் உள்ளடக்கிய சமமான தொகையின் கடன் காப்பீட்டுக் கொள்கையை வழங்குமாறு கேட்கப்பட வேண்டும்; தற்போது தொழில் பிழைக்க இது உதவும்,” என்று ஃபிம்கா இயக்குநர் அலிஜன் ராஜன் தெரிவித்தார். இவர், மும்பையில் விரா இன்டர்நேஷனல் என்ற ஆட்சேர்ப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதேபோன்ற பணப்புழக்க சிக்கல்கள் இந்தியாவின் கட்டுமானத் தொழிலில் நடக்கும் உள்நாட்டு தொழிலாளர்களின் இடம் பெயர்வுகள், இடைத்தரகர்களைப் பாதிப்பதாக ஜூன் 3 இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்துள்ளது.
பணியாளர் அவசரநிலைகள் அல்லது தவறான செயல்பாடுகள் அவர்களைத் திரும்பத் தள்ளும் சந்தர்ப்பங்களில் தொழிலாளர்களின் குறைகள் வெளிப்படுகின்றன, மேலும் அவை ஆளெடுப்பு முகமைகளுக்கு எதிராக குறைகளை புலப்படுத்துவதாக, அம்பே இன்டர்நேஷனலின் சக்சேனா கூறினார். சக்சேனாவின் கூற்றுப்படி, அவர்களுக்கும் ஆளெடுப்பு முகமைக்கும் இடையில் குறைபாடு தொடர்பான மோதல் இல்லாமல், இந்த விஷயங்கள் நடந்தால் தொழிலாளி கவனித்துக் கொள்ளப்படுவதை காப்பீட்டுக் கொள்கை உறுதி செய்யும்.
ஒரு புதிய வரைவு குடியேற்ற மசோதா செயல்பாட்டில் உள்ளது, மேலும் அதன் முந்தையவற்றுடன் பல வழிகளில் முன்னேற்றம் காணப்படுகிறது; குடியேற்ற ஓட்டங்களை நிர்வகிப்பதில் கவனம் செலுத்துகிறது மற்றும் பல முக்கிய விலக்குகளைக் கொண்டுள்ளது என்று Economic and Political Weekly 2019 விமர்சனம் தெரிவித்தது. இந்த புதிய மசோதா தொழிலாளர் வழங்கல் சங்கிலியில் துணை முகவர்களை அடையாளம் கண்டு பதிவு செய்ய வழிவகுக்கிறது; அவர்கள் இப்போது வரை ஆய்வில் இருந்து தப்பித்துள்ளனர். எவ்வாறாயினும், துணை முகவரின் தவறான நடத்தை, வழக்குகளில் ஆட்சேர்ப்பு முகவரையும் பொறுப்பேற்கச் செய்கிறது; மேலும் இது நெறிமுறையுள்ள சர்வதேச இடம்பெயர்வு பாதைகளை மீண்டும் உருவாக்குவதை பாதிக்கும். வெளிநாடுகளில் கல்வித் திட்டங்களில் மாணவர்களை நியமித்தல் அல்லது ஆலோசனை வழங்குவதை அதன் நோக்கத்திற்குக் கொண்டுவர முற்படுகிறது. இது ஒரு வளர்ந்து வரும் துறை மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத இடைத்தரகர்கள் காரணமாக கடினமான சூழ்நிலைகளில் சிக்கித் தவிக்கும் மாணவர்களிடம் இருந்து பல புகார்கள் வந்துள்ளதாக சக்சேனா கூறினார்.
கடந்த ஏப்ரல் மாதம் முதல், வெளியுறவுத்துறை அமைச்சகம் வந்தே பாரத் என்ற திட்டத்தில் (கட்டணம் செலுத்தி) வெளிநாட்டில் உள்ள இந்தியர்களை தாயகம் திருப்பி அழைத்து வரும் நடவடிக்கையை தொடங்கியது. மே 7ம் தேதி முதல் 15 வரை முதல் கட்ட நடவடிக்கையில் 12 நாடுகளுக்கு 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்பட்டன; நான்காவது கட்டம், ஜூலை 4ம் தேதி தொடங்கியது. வெளிநாட்டில் இருந்து கட்டணம் செலுத்தி வர இயலாதவர்களுக்கு வெளியுறவு அமைச்சகத்தின் இந்திய சமூக நல நிதியை பயன்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது; ஆனால் மனுவை ஜூன் மாதம் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிற்கு அனுப்ப, மே 5 முதல் தனியார் விமானங்களை அனுப்ப முயற்சித்தன; இந்தியாவும் அதை ஏற்றுக்கொண்டது, இருப்பினும் குடியேறியும் வேலையில்லாமல் இருப்பவர்கள் அல்லது விமான செலவுகளை ஏற்காத நிறுவனங்களில் உள்ளவர்கள் இந்த முறையின் கீழ் தாயகம் திரும்ப முடியாது.
சுமையாகிப்போன முறிந்த ஒப்பந்தங்கள்
ஆட்சேர்ப்புத்துறை இருப்பதும், கடும் நிதி நெருக்கடியில் உள்ளவர்களின் பிழைப்பும் அடுத்த சில மாதங்களில் மிக முக்கியமானவை என்று தொழில் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.நடுத்தர காலகட்டத்தில் முறிந்து போன ஒப்பந்தங்கள் மற்றும் திரும்புவதற்கான கடினமான சூழ்நிலைகள் ஆகியன, முகமைகளுக்கு எதிரான குறைகளாக மாறும் என்று ஆட்சேர்ப்பு முகவர்கள் ஏப்ரல் 2020 நேர்காணலின் போது தெரிவித்தனர். 2020 ஆம் ஆண்டின் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அமைச்சரின் ஆணை 279 (மார்ச் 26) போன்ற வளைகுடா நாடுகளில் சட்டங்களை மாற்றுவது, தற்போதுள்ள ஒப்பந்தங்களைத் திரும்பப் பெறவும், தொழிலாளர்களை ஊதியம் பெறவோ அல்லது ஊதியம் பெறாத விடுப்பில் கட்டாயப்படுத்தவோ நிறுவனங்களை அனுமதித்துள்ளது. எவ்வாறாயினும், முன்எப்போதும் இல்லாத நிலைமையை கருத்தில் கொண்டு, முகவர்களை இதற்கு பொறுப்பாக்கக்கூடாது என்று தொழில்துறை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
"பல வெளிநாட்டு நிறுவனங்கள் மூடப்பட்டுகின்றன மற்றும் ஊழியர்களுக்கு நிலுவைத் தொகையை செலுத்த முடியவில்லை; இது ஒரு இக்கட்டான சூழ்நிலை" என்று ஃபிம்கா ஒரு அறிக்கை தெரிவித்துள்ளது. "கோவிட் தொற்றின் விளைவாக புலம்பெயர்ந்தோரை திருப்பி அனுப்புவதன் மூலம் பாதிக்கப்பட்டு, அத்தகைய எந்தவொரு புகாரும் முகவருக்கு எதிரானதாக கருத முடியாது" என்று அது கூறியது. துயருடன் திரும்புவோருக்கு ஆதரவு தேவை என்பதால், மறுவாழ்வு மற்றும் மறு ஒருங்கிணைப்புக்கு ரூ.5 லட்சம் வரை கடனை மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என்று அது கூறியுள்ளது. திருப்பி அனுப்ப வேண்டிய அசாதாரண சூழ்நிலைகளுக்குக் காரணமான வரைவு குடியேற்ற மசோதாவில் ஒரு பிரிவைச் சேர்ப்பது முக்கியம் என்று ஐபிஇபிசிஐஎல் நிறுவனத்தின் ஷேக் கூறினார்.
தாயகம் திரும்புவோர் எதிர்வரும் மாதங்களில் மறு ஒருங்கிணைப்பு சிக்கல்களை - அதாவது வருமான இழப்பு மற்றும் எதிர்கால வேலைவாய்ப்பு கவலைக்குரிய ஆதாரங்கள் போன்றவற்றை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது என்று தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் திரும்பிய புலம்பெயர்ந்தோருடனான எங்கள் 2020 மே மாத நேர்காணல்கள் காட்டியது. இந்தியாவில் சில மாநிலங்கள் தாயகம் திரும்புவோருக்கு என விரிவான மறுசீரமைப்பு கொள்கைகளை கொண்டுள்ளன. கேரளாவில், குடியுரிமை பெறாத கேரள மக்களுக்கான துறை, தாயகம் திரும்புவோரின் மேம்பாடு, தொழில்முனைவோர் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றுக்காக பல திட்டங்களை மேற்கொண்டுள்ளது. இதேபோல் அரசால் நடத்தப்படும் அமைப்புகளும், தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் குடியேறிய மக்களுக்காக உள்ளன.
இருப்பினும், முக்கிய மூல மாநிலங்களான உத்தரபிரதேசம், பீகார் மற்றும் ராஜஸ்தான் ஆகியவை தேவையான உள்கட்டமைப்பைக் கொண்டிருக்கவில்லை; மேலும் இந்தியாவுக்குள் இருந்து திரும்பி வரும் ஏராளமான புலம்பெயர்ந்தோரையும் அவை கையாண்டு வருகின்றன. 2019 ஆம் ஆண்டில் அதிக குடியேற்றங்கள் நிகழ்ந்த முதல் 50 மாவட்டங்களில் உத்திரப்பிரதேசம், பீகார் மற்றும் ராஜஸ்தான் 66%ஐ (உ.பி.யில் 21, பீகாரில் 8, ராஜஸ்தானில் 4) கொண்டிருந்ததாக, ஈ-மிக்ரேட் போர்ட்டலின் தரவுகள் தெரிவிக்கின்றன. புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் 70% பேர் இந்த 50 மாவட்டங்களில் இருந்து சென்றவர்கள்.
‘புதிய வழிகள், துறைகள், திறன்கள் ஆராயப்பட வேண்டும்’துபாய் எக்ஸ்போ மற்றும் கத்தார் உலகக் கோப்பை போன்ற வரவிருக்கும் பெரிய அளவிலான நிகழ்வுகள், நாம் முன்னர் குறிப்பிட்டது போல, கட்டுமானம் மற்றும் விருந்தோம்பல் தொடர்புடைய துறைகளில் உழைப்புக்கான தேவையை உருவாக்கக்கூடும். 2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயுவில் மீண்டும் எழுச்சி எதிர்பார்க்கப்படுவதாக அம்பே இன்டர்நேஷனல் வெளியிட்ட மதிப்பீடு தெரிவிக்கிறது.
இந்தியாவுக்கான வர்த்தக மற்றும் வணிக நலன்களுக்கான கூட்டாளியாக உள்ள ஜி.சி.சி நாடுகளின் நிலையும் மாறக்கூடும் என்று அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளையின் ஏப்ரல் 2020 அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியாவில் ஜி.சி.சி நாடுகளின் முதலீடுகள் மற்றும் தற்போதுள்ள வணிக உறவுகள் போன்ற பணப்பரிமாற்றங்கள் பாதிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வரலாற்று ரீதியாகவும் அளவிலும் கணிசமாக இந்தியா-ஜி.சி.சி வர்த்தகம் உள்ளதால், தாயகம் திரும்பியவர்கள் மீண்டும் குடியேறலாம் என்ற தங்களது கனவுகளை விட்டுவிடக்கூடாது.
ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பானில் உள்ள புதிய வழிகளையும் ஆராய வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். உடல்நலம், அத்தியாவசிய வசதிகள் மேலாண்மை மற்றும் உயர் திறன் ஐடி / ஐடிஇஎஸ் போன்ற துறைகளில் வரும் நாட்களில் தேவைகள் இருக்கும் என்று தொழில் பிரதிநிதிகள் தெரிவித்தனர். "வெல்டிங் போன்ற வேலைகளுக்குப் பதிலாக, பேக்கிங் தொழிலாளர்கள், துப்புரவாளர்கள், சுகாதார இயக்குநர்கள் மற்றும் வீட்டு பராமரிப்பு போன்ற புதியதொழில்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும்," என்று, ஃபிம்கா இயக்குநரும், முக்கிய ஆட்சேர்ப்பு முகவரான சின்க்ளஸ் குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குநருமான ஷைலேந்திர நிகாம் கூறினார். "நாம் அதற்கேற்ப மாறாவிட்டால் இழப்பை சந்திக்க நேரிடும் - குறிப்பாக ஆந்திரா, தெலுங்கானா, உ.பி., பீகார் போன்ற மாநிலங்களில் தொழிலாளர்கள் பெரும்பாலும் பகுதி திறன் பிரிவில் உள்ளனர்" என்றார். ஈ.சி.ஆர் நாடுகளில் வளர்ந்து வரும் துறைகளைப் பயன்படுத்திக்கொள்ள ஆர்வமுள்ள புலம்பெயர்ந்தோருக்கான திறன் மையங்கள் (இந்தியா சர்வதேச திறன் மையங்கள்) 2017ம் ஆண்டில் வெளியுறவு அமைச்சகம் மற்றும் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தால் அமைக்கப்பட்டன.
(மித்ரா, இடம் பெயர்வோர் குறித்த ஆராய்ச்சியாளர். அகர்வால் மும்பையைச் சேர்ந்த இடம் பெயர்ந்தோர் ஆராய்ச்சி நிறுவனமான இந்தியா மிக்ரேஷன் நவ் நிறுவனத்தில் நிறுவனர். ஐ.எம்.என் என்பது தென்கிழக்கு புலம்பெயர்வு அறக்கட்டளையின் ஒரு முயற்சியாகும்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளைrespond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கண நடை கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.