பெங்களூரு: முப்பத்தாறு வயது ஷிவானிக்கு (பெயர் மாற்றப்பட்டது) திருமணமாகி 16 ஆண்டுகள் ஆகின்றன. திருமணத்திற்கு பிறகிருந்தே கணவரும் குடும்பத்தினரும், அவரை ஒரு வேலைக்காரியை போல் நடத்தி வந்தனர்; வீட்டிற்குள் அடைத்து வைக்கப்பட்ட அவர், மிகவும் மனச்சோர்வடைந்ததாக, ஹரியானாவின் ரோஹ்தக்கில் இருந்தவாறு, இந்தியா ஸ்பெண்டிடம் அவர் தெரிவித்தார். குண்டாக மற்றும் அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டதற்காக கணவர் அவரை அவமதித்து வந்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான ஷிவானி, ஆகஸ்ட் 2017 இல் தற்கொலை முயற்சியாக அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்டார்.

மயங்கிக்கிடந்த ஷிவானியின் அருகில் தூக்க மாத்திரை வெற்று காகிதங்கள் இருந்ததை பார்த்து பதறிப்போன அவரது மாமியார், தனது சகோதரரை அழைத்தார். அவர்கள், ஷிவானியை அருகில் உள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அவருக்கு சுய நினைவு கொண்டு வருவதற்காக மருத்துவர்கள், வாந்தி எடுக்கச் செய்து, கடுமையாக போராடினர். இறுதியில் ஷிவானி பிழைத்துக் கொண்டார்.

இந்திய தேசிய குற்றப்பதிவு பணியகத்தின் (என்.சி.ஆர்.பி) தரவுகளின்படி, தற்கொலை முயற்சி செய்து அதில் தோல்வியுற்ற 2,075 இந்தியர்களில் இவரும் ஒருவர்; இவர்கள், தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டவர்களில் (134,516) ஒரு சிறு பகுதியினர். இந்தியாவில் தற்கொலை செய்துகொள்வோர் பிரிவில் முதலாவதாக உள்ளது இல்லத்தரசிகள் - 2018 ஆம் ஆண்டில், ஒவ்வொரு நாளும் சுமார் 63 இல்லத்தரசிகள் தற்கொலை செய்து கொண்டனர்; இது, சராசரியாக அனைத்து தற்கொலைகளிலும் 17.1% பேர் ஆகும். தேசிய தரவுகளை பற்றிய எங்கள் பகுப்பாய்வின்படி, 2001 ஆம் ஆண்டு முதல், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 20,000க்கும் மேற்பட்ட இல்லத்தரசிகள் தற்கொலை செய்துள்ளனர்.

இதில், அடுத்து இரண்டாமிடத்தில் இருப்பவர்கள் தினக்கூலிகள் - வேலையின்மை, விவசாய நெருக்கடி மற்றும் அமைப்புசாரா துறையின் மெதுவான வளர்ச்சி ஆகியவற்றால் அவர்கள் வறுமை மற்றும் மனச்சோர்வில் தள்ளப்படும் அபாயத்திலும் தற்கொலைக்கும் வழிவகுக்கிறது.

கடந்த 2016ல், உலகில் நடந்த பெண் தற்கொலைகளில் மூன்றில் ஒரு பங்கு (36.6%) இந்தியாவில் நிகழ்ந்தவை; இது 1990ல் 25.3% ஆக இருந்தது என்று 2018 லான்செட் அறிக்கை கூறியது. இந்தியாவில் தற்கொலை செய்து கொள்ளும் பெண்களில் அதிகம் பேர் திருமணமானவர்கள் தான்; காரணம் சிறு வயது திருமணம், இளம் வயதில் தாய்மை, குறைந்த சமூக அந்தஸ்து, குடும்பத்தினர் கொடுமை மற்றும் பொருளாதார சார்பு போன்றவை என்று அறிக்கை கூறியுள்ளது.

மருத்துவமனையில் ஷிவானி இருந்தபோது, மருத்துவமனை நிர்வாகம் காவல்துறையை அழைத்தது; ஷிவானியின் தற்கொலை முயற்சிக்கு அவரது கணவர் காரணமில்லை என்று அவரிடம் குடும்பத்தினர் மிரட்டி எழுதி வாங்கிக் கொண்டதாகவும், இதனால், கணவர் மீது எந்த வழக்கும் பதிவாகவில்லை என்றும் ஷிவானி கூறினார்.

தற்கொலைக்கான இதுபோன்ற பெரும்பாலான முயற்சிகளில், வழக்கை காவல்துறை அரிதாகவே பதிவு செய்கிறது. மேலும் சரியான சூழ்நிலையை கண்டறிவதும் கடினமாக உள்ளது.

"பெண்கள் திருமணம் செய்து கொள்வதில் மிக உற்சாகமாக உள்ளனர், ஆனால் திருமணத்தின் யதார்த்த நிலையால் தாக்கப்படும் போது, அது ஒரு மோசமான சிறைச்சாலையாக மாறும்" என்று சமூக விஞ்ஞானியும் ‘இந்தியாவின் பெண்கள் பற்றிய மவுனத்தை உடைத்தல்’ (Chup: Breaking the Silence About India’s Women) என்ற புத்தகத்தின் ஆசிரியருமான தீபா நாராயண் கூறினார். இதுபோன்ற பல இளம் பெண்கள் மனச்சோர்வுக்கு ஆளாகிறார்கள், ஆனால் உதவியை அடையவில்லை, பெரும்பாலும், அவர்கள் செய்யும்போது, அவர்களுக்கு தேவையான ஆதரவு கிடைக்காது என்று அவர் கூறினார். இதுபோல் பல இளம் பெண்கள் மனச்சோர்வுக்கு ஆளாகிறார்கள், ஆனால் அவர்களுக்கு உதவி கிடைக்கவில்லை பெரும்பாலும், அவர்கள் அதை செய்யும்போது, அவர்களுக்கு தேவையான ஆதரவு கிடைக்காது என்று அவர் கூறினார்.

“அவர்கள் தவறாக நடத்தப்பட்டாலும் கூட, வழக்கமாக அவர்களது குடும்பத்தினர் ‘சகித்துக் கொண்டு’ இருக்கும்படி அறிவுறுத்துகிறார்கள். இதனால் அவர்கள் மேலும் விரக்தியும் தனிமையையும் ஏற்படுத்துகிறார்கள்” என்று தீபா நாராயண் கூறினார். இது இல்லத்தரசிகள் தற்கொலை செய்து கொள்வதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும் என்றார். ஷிவானியின் திருமணம் அவரது குடும்பத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டது. திருமணமான முதல் வருடத்தில் இருந்தே, அவர் கணவரை விவாகரத்து செய்ய விரும்புவதாக தனது குடும்பத்தினரிடம் சொல்லிக்கொண்டிருந்தார்; ஆனால் விவாகரத்து கூடாது என்று மட்டும் தான் குடும்பத்தினர் அவருக்கு அறிவுறுத்தி வந்தனர்.

குறைவாக பதிவாகும் பெண்கள் தற்கொலைகள்

கடந்த 2017ம் ஆண்டுடன் (21,453) ஒப்பிடும்போது 2018 ஆம் ஆண்டில், தற்கொலை செய்து கொண்ட இல்லத்தரசிகளின் எண்ணிக்கை (22,937) 6.9% அதிகரித்துள்ளது என்று என்சிஆர்பி தரவு காட்டுகிறது. இது தற்கொலைகளின் அதிகரிப்பு அல்லது இதுபோன்ற வழக்குகளை காவல்துறை பதிவு செய்வது அதிகரித்திருப்பது காரணமாக இருக்கலாம்.

ஷிவானியின் மைத்துனி (மைத்துனரின் மனைவி) 2012 இல் தற்கொலை செய்துகொண்டார். அடிக்கடி ஒற்றைத்தலைவலி ஏற்பட்டதால் தற்கொலை செய்து கொண்டதாக, அவரது கணவரின் குடும்பத்தினர் கூறுகின்றனர். ஆனால் தனது மைத்துனி தலைவலி பற்றி தன்னிடம் ஒருபோதும் பேசியதில்லை என்று ஷிவானி கூறினார். இதுபற்றி போலீசாரும் வழக்கு எதையும் பதிவு செய்யவில்லை.

ஷிவானி மற்றும் அவரது மைத்துனியின் விஷயத்தில் நடந்தது போலவே, இதுபோன்ற பல வழக்குகள் காவல்துறையினரிடம் தெரிவிக்க பல குடும்பங்கள் தயக்கம் காட்டுவதால் என்.சி.ஆர்.பி எண்ணிக்கை என்பது குறைந்த மதிப்பீடாகவே இருக்கக்கூடும்.

"யாரோ ஒருவர் மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளாகி அல்லது மோசமான நிலையில் இருந்து தற்கொலை என்றை இறுதி வழியை எடுத்துக் கொள்வது மொத்த குடும்பத்திற்கு மோசமானதாகவே தெரிகிறது" என்று தீபா நாராயண் கூறினார். "மருமகள் தற்கொலை செய்து கொண்டால், அது குடும்பத்திற்கு அவமானகரமான விஷயமாகக் கருதப்படுகிறது. எனவே குடும்பத்தினர் வேறு சில காரணங்களை உருவாக்குகின்றன," என்று அவர் கூறினார்.

சில நேரங்களில் வரதட்சணை இறப்புகளும் தற்கொலைகளாக அறிவிக்கப்படலாம்.

"பெண்களின் தற்கொலைகளில் குறைந்தது 50% வரதட்சணை சம்பந்தப்பட்டதாக இருக்கலாம். ஆனால் அவை குறைவாக மதிப்பிடப்படுகின்றன. ஏனெனில் சிறுமியின் பெற்றோர் வரதட்சணை கொடுப்பதில் தொடர்புள்ளவர்கள்; வரதட்சணை கொடுப்பது ஒரு குற்றமாகும்" என்று விமோச்சனா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த டோனா பெர்னாண்டஸ் கூறினார்; இந்த அமைப்பு பெண்கள் உரிமைகளுக்காக உழைக்கிறது. ஆனால் தற்கொலையைவிட அதிகமான வரதட்சணை மரணங்கள் தற்செயலான மரணம் அதாவது எரிதல், காஸ் அடுப்பு வெடித்தல், குளியலறையில் விழுதல் போன்றவையாக கூறப்படுகிறது என்றார் அவர்.

உடனிருக்கும் மாமியார் அல்லது பிற பெண்களால் ஏற்படும் பல தீக்காயங்கள் மற்றும் இறப்புகள், விபத்துக்கள் என்றே வகைப்படுத்தப்பட்டுள்ளன என்று, “சமையலறை விபத்து கட்டுக்கதையை உடைத்தல்: இந்தியாவில் தீக்காய வழக்குகள்” என்ற தலைப்பிலான 2016 ஆய்வு தெரிவிக்கிறது; மும்பையை சேர்ந்த சுகாதார மற்றும் அதனுடன் அலைட் தீம்ஸ் மற்றும் டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் சயின்சஸ் ஆகியவற்றால் இது நடத்தப்பட்டது; இதுபற்றி இந்தியா ஸ்பெண்ட் ஜனவரி 2017ல் கட்டுரை வெளியிட்டது. ஆய்வில் பெண்களுக்கு ஏற்பட்ட 22 தீக்காயங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது; அதில், 15 விபத்துக்கள் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையில் மூன்று மட்டுமே விபத்துக்கள் என்று தெரியவந்தது, மற்றவர்கள் தானாக அல்லது பிறரால் ஏற்பட்டவை என்று கூறப்பட்டுள்ளது. 22 பெண்களில் 19 பேர் குடும்ப வன்முறையை அனுபவித்து வருவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக, தற்கொலை (தற்கொலை பற்றிய எண்ணங்கள் மற்றும் உண்மையான முயற்சிகள் உட்பட) சிந்தனை என்பது ஆண்களை விட (4.1%) பெண்களுக்கே அதிகமாக (6%) இருந்தது என்று 2015-16 தேசிய மனநல சுகாதார கணக்கெடுப்பின் தரவுகளின் அடிப்படையில் தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் 2020 ஜனவரி ஆய்வு தெரிவிக்கிறது. 40-49 வயதுடைய பெண்களில் தற்கொலை பாதிப்பு அதிகமாக உள்ளது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

நாம் முன்பு கூறியது போல், என்.சி.ஆர்.பி தரவின் அடிப்படையில், இல்லத்தரசிகள் தற்கொலை, இரண்டாவது பெரியதாக உள்ளது.

பயம், சமூக நிலைமை, ஆதரவு இல்லாமை பெண்களை தற்கொலைக்கு தள்ளும்

கணவன் அல்லது அவரது உறவினர்களால் கிட்டத்தட்ட 20 வரதட்சணை மரணங்கள், 35 வரதட்சணை வழக்குகள் மற்றும் மனைவியை கொடுமைப்படுத்தும் 283 வழக்குகள் இந்தியாவில் ஒவ்வொரு நாளும் சராசரியாக பதிவாகின்றன என்று, 2018 என்.சி.ஆர்.பி தரவுகள் கூறுகின்றன.

"நமது சமுதாயத்தில், ஆணின் குரல் மிகைப்படுத்தப்பட்டுள்ளது, அதே நேரத்தில் பெண்ணின் குரல் குறைவாக மதிப்பிடப்படுகிறது" என்று சமூக விஞ்ஞானி தீபா நாராயண் கூறினார்.

2018 ஆம் ஆண்டு ஆக்ஸ்பாம் இந்தியா கணக்கெடுப்பில் உத்தரபிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் இருந்து பதிலளித்த 1,000 பேரில் பாதிக்கும் மேற்பட்டோர் (53%) ஒரு குழந்தையை நன்கு கவனித்துக்கொள்ளத் தவறினால் ஒரு பெண்ணை கடுமையாக விமர்சிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது என்றும் 33% பேர் அதே காரணத்திற்காக ஒரு பெண்ணை அடிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது என்று கூறினர்.

இந்தியாவில் பாலின அடிப்படையிலான வன்முறை பற்றிய உணர்வுகள்

Source: Mind the Gap- The state of employment in India

கட்டாய திருமணம், கருவுறாமை, குடும்ப வன்முறை, கணவரின் துரோகம், வரதட்சணை மற்றும் கல்வி அல்லது வேலையைத் தொடர இயலாமை ஆகியன பெண்களுக்கு இடையே கடும் மனச்சோர்விற்கு வழிவகுத்து, அது இறுதியில் தற்கொலைக்கும் வழிவகுக்கிறது என்று, சமூக மற்றும் பாலின சமத்துவத்தை மையமாகக் கொண்ட டெல்லியை சேர்ந்த சீர்திருத்தம் மற்றும் கல்வி அறக்கட்டளை நிறுவனரும் வழக்கறிஞருமான கர்னிகா சேத் கூறினார்.

பொதுவாக பெண்ணின் பெற்றோர் திருமணம் செய்து கொடுத்தவுடன் தங்களின் மகள் மீதான பொறுப்பு முடிந்துவிடுவதாக உணர்கிறார்கள் என்று அவர் கூறினார். எனவே, மாமியாருடன், குறிப்பாக ஒரு கூட்டுக் குடும்பத்தில் சரிசெய்ய போராடும் ஒரு பெண், மவுனமாக கஷ்டப்பட வேண்டும் அல்லது சட்ட ரீதியான உதவியை நாட வேண்டும். ஆனால் சட்டரீதியான உதவியை நாடுவது அரிது, குறிப்பாக பெண்ணுக்கு குழந்தைகள் இருந்தால், களங்கம் குறித்த பயம் மற்றும் ஒரு பெற்றோராக இருந்து வாழ்க்கைச்செலவுகளை செய்ய இயலாமை காரணமாகிறது என்று சேத் மேலும் கூறினார்.

உதவி பெறத் தயங்கும் பெண்கள்

அதிக எண்ணிக்கையிலான இல்லத்தரசிகள் தற்கொலைக்கு காரணம் சமூகம் மட்டுமல்ல, உடல் ரீதியான பிரச்சனையும் அமைகிறது என்று, மனநல உதவிகளை வழங்கும் பெங்களூருவை சேர்ந்த் தி மைண்ட் ரிசர்ச் பவுண்டேஷனின் உளவியலாளர் டெபாட்டியா மித்ரா கூறினார்.

இளம் பெண்கள் மாதவிடாய்க்கு முன் அமைதியற்ற மனநிலைக்கு (டிஸ்ஃபோரிக்) அல்லது பிரசவத்திற்குப் பிறகான மனச்சோர்வுக்கு ஆளாகுவது மிகவும் பொதுவானது என்று அவர் கூறினார். ஆண்களில் புரோஜெஸ்ட்டிரோன் மன அழுத்த அளவு அதிகரிப்பதைத் தடுக்கிறது; இது பெண்களுக்கு பொருந்தாது; இதனால் அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் என்று மித்ரா விளக்கினார்.

கொடுமைக்குள்ளாகும் இல்லத்தரசிகளில் ஒருசிலர் மட்டுமே தொழில்ரீதியான உதவியை நாடுகிறார்கள்; ஏனென்றால் அவர்களில் பெரும்பாலோருக்கு, உணவு மற்றும் கவனித்துக்கொள்வதற்கான வீடு போன்ற பிற அடிப்படை பிரச்சினைகள் இருக்கும்போது மனச்சோர்வு ஒரு பிரச்சினையாகக் கூட கருதப்படுவதில்லை என்று மித்ரா கூறினார்.

மேலும், மன ஆரோக்கியம் குறித்த பிரச்சினையை களங்கமாக பெண்கள் கருதுவதால், அதுபற்றி பேச வெளிப்படையாக பேசுவதில்லை என்று தீபா நாராயண் கூறினார்.

வீட்டில் கொடுமையை எதிர்கொள்ளும் பெண்களுக்கு, தேசிய பெண்கள் ஆணையம் (என்.சி.டபிள்யூ) ஆலோசனை வழங்குவதோடு, அவர்களை நீதித்துறை உதவிக்காக மாவட்ட மாஜிஸ்திரேட்டுடன் நேரடியாக இணைப்பதன் மூலம் அவர்களுக்கு உதவுகிறது என்று என்.சி.டபிள்யூ ஊடக ஆலோசகர் நாங் தன்வி மன்பூங் தெரிவித்தார். ஆனால் பெரும்பாலான பெண்கள் பேசுவதில்லை அல்லது உதவிக்கு கிடைக்கக்கூடிய வழிகளைப் பயன்படுத்துவதில்லை என்று அவர் கூறினார்.

விழிப்புணர்வு திட்டங்களை என்.சி.டபிள்யூ மேற்கொண்டாலும், சமூகம் பெண்களை எவ்வாறு நடத்துகிறது என்பதில் மாற்றமும், சட்ட அமலாக்கத்தில் இருந்து அதிக செயல்திறனும் இருக்க வேண்டும் என்றார் அவர்.

ஆணாதிக்க மனப்பான்மையை மாற்ற, விழிப்புணர்வு மட்டுமல்ல, சமூகத்தில் கருத்து மாற்றமும் தேவை என்று தி மைண்ட் ரிசர்ச் ஃபவுண்டேஷனின் இணை நிறுவனர் விஸ்வகீர்த்தி பன் சாப்ரா ஒப்புக் கொண்டார். வீட்டில் பெண்களுக்கு கல்வி கற்பிக்கப்பட வேண்டும், அவர்கள் மதிக்கப்பட வேண்டும்; ஆண்களாக பிறப்போர் வீட்டுக்கு வெளியே வேலைக்கு செல்ல வேண்டும்; பெண் குழந்தைகள் வீட்டுக்குள் தான் முடங்கிக்கிடக்க வேண்டும்; வீட்டு வேலைகளை செய்யதாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்ற மனப்பான்மை இருக்கக்கூடாது என்று அவர் கூறினார்.

"நாம் ஸ்வச் பாரத் (தூய்மை இந்தியா திட்டம்) மூலம் நமது இந்தியாவை சுத்தம் செய்கிறோம்; ஆனால் நாம் நமது மனதை சுத்தம் செய்யவில்லை" என்று தீபா நாராயண் கூறினார். "பெண்கள் தங்களது சொத்து அல்ல; அவளுக்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்றார்.

ஷிவானி குணமடைந்த பிறகு, தனது சகோதரர் மற்றும் அவரது நண்பர்களின் உதவியுடன் உடைகள் மற்றும் எடை குறைக்கும் பொருட்களை விற்கத் தொடங்கினார். அவள் கணவனை விவாகரத்து செய்தாள்; வேறொருவரை, காதலித்து மறுமணம் செய்து கொண்டார்.

“பெண்கள் தங்கள் நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். நான் என் நிலைப்பாட்டை எடுத்தேன்; நிறைய விஷயங்களை சமூகம் சொல்கிறது. ஆனால் [அவர்கள்] வலுவாக இருக்க வேண்டும், ”என்று அவர் கூறினார். “இன்று நான் என் வாழ்க்கையை மாற்றிக்கொண்டேன் என்று நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். தற்கொலை ஒரு வாய்ப்பல்ல என்பதை மற்ற பெண்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன். உங்களுக்காக நீங்களே நடவடிக்கை எடுங்கள், உலகத்துடன் போராடுங்கள்" என்றார். தனது சகோதரனின் ஆதரவு தனித்துவமானது என்பதை அவள் உணர்ந்தாள். மேலும் தற்கொலை செய்துகொள்வதில் இருந்து மீள அவருக்கு உதவியது; "வாழ்க்கை விலைமதிப்பற்றது; அது வாழத்தான், வீழ அல்ல" என்று அவர் மேலும் கூறினார்.

(கபில் காஜல், நிருபர்களின் பான்-இந்தியா நெட்வொர்க் அமைப்பான 101 ரிப்போர்ட்டர்ஸ்.காம் நிருபர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.