எதிர்வரும் காலநிலை பேரிடர்களை சமாளிக்க இந்தியா தனது சுகாதார பட்ஜெட்டை ஏன் உயர்த்த வேண்டும்
நவி மும்பை: கோவிட்19 தொற்று நெருக்கடி, இந்தியாவின் சுகாதார அமைப்பின் மோசமான நிலையை வெளிப்படுத்தி வரும் நிலையில், வல்லுநர்கள் இந்தியா மற்றொரு உலகளாவிய நெருக்கடிக்கு - அதாவது காலநிலை மாற்றத்திற்கு தயாராக இல்லை என்று எச்சரிக்கின்றனர்.
தீவிர வானிலை நிகழ்வுகளான வெப்பம் மற்றும் ஈரப்பதம் தொடர்பான இறப்பு, வெள்ளம், புயல்களைத் தொடர்ந்து தொற்று நோய்கள் மற்றும் அடிக்கடி பயிர் விளைச்சல் பாதிப்பால் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றை இது கொண்டு வரும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். "காலநிலை மாற்றத்துடன் தொடர்புடையதாக அறியப்படும் எண்ணற்ற சுகாதாரம் சார்ந்த பிரச்சனைகளுக்கு சுகாதார அமைப்பு தயாராக இருக்க வேண்டும்" என்று ஹைதராபாத்தில் உள்ள இந்திய பொது சுகாதார நிறுவனத்தின் பேராசிரியர் வி.ரமண தாரா கூறினார். கடல் மட்டம் உயர்ந்து வருவது, மக்கள் இடம்பெயர்வு, காயம், நோய் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்டவற்றில் இருந்து சுகாதார விளைவுகளை ஏற்படும் என்றார் அவர்.
இதை தணிக்கும் நடவடிக்கை சுகாதாரத்துக்கான செலவினங்களை அதிகரித்தல், சிறந்த நடைமுறைகளை உள்ளடக்கிய அமைப்புகளை உறுதி செய்தல் மற்றும் ஆதார வளங்களின் ஆதரவுடன் முடிவுகளை எடுக்க ஏதுவாக தரவு சேகரிப்பின் தரத்தை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
அடிப்படையில் இருந்து தொடங்குதல்
பான் (Bonn) சார்ந்த சிந்தனைக்குழுவான ஜெர்மன்வாட்ச் தயாரித்த உலகளாவிய காலநிலை இடர் குறியீட்டு 2020 இன் 15வது பதிப்பின்படி, இந்தியா காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படக்கூடிய ஐந்தாவது நாடாகும்.
இந்த சவாலை எதிர்கொள்ளத் தொடங்க, இந்தியா தனது சுகாதார செலவினங்களை அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP - ஜிடிபி) 2.5% ஆக உயர்த்த வேண்டும் என்று நிபுணர்கள், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தனர். கோவிட்19 ஏற்கனவே இந்தியாவின் பொது சுகாதார அமைப்பு நிதியத்தில் உள்ள பாதிப்புகளை வெளிக்கொணர்ந்து வருகிறது, இது கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1% தேக்கநிலையில் உள்ளது. நோயாளிகள் தனியார் சுகாதார அமைப்பின் தயவைநாடி விடப்பட்டுள்ளனர், அங்கு பராமரிப்பின் தரம் சீரற்று, கட்டணங்கள் மிக அதிகச்சுமை என்ற புகார்கள் உள்ளன. இதுபற்றி, தொற்றுநோய் தொடர் மூலம், இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டு வருகிறது.
கடந்த 2017-18 ஆம் ஆண்டில், இந்தியா சுகாதாரத்திற்காக தனிநபருக்கு ரூ. 1,657 செலவிட்டதாக, தேசிய சுகாதார ஆய்வறிக்கை - 2019 கூறுகிறது. ஆனால், சுகாதார வல்லுநர்கள் மதிப்பிட்டுள்ளபடி, காலநிலை மாற்றத்தின் கூடுதல் அழுத்தங்களைச் சமாளிக்க, இது ஒருவருக்கு கிட்டத்தட்ட ரூ .4,000 செலவழிக்க வேண்டும். சுகாதார பயிற்சியாளர்கள் விஷயத்திலும் இந்தியா பற்றாக்குறையாக உள்ளது: நாட்டில் 10,000 மக்கள்தொகைக்கு 7.776 மருத்துவர்களே உள்ளதாக, உலக சுகாதார அமைப்பின் கூற்று தெரிவிக்கிறது.
ஆரம்ப சுகாதாரத்தை சரிசெய்யவும்
காலநிலை மாற்றத்தின் மிக மோசமான தாக்கங்களை தாமதப்படுத்த இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் புவி வெப்பமடைதல் 1.5 ° C ஆக இருக்க வேண்டும் என்பது அறிவியல்துறையின் ஒருமித்த கருத்து. இந்தியாவில், சிறந்த சூழ்நிலையில், நூற்றாண்டின் தொடக்கத்தில் சராசரி வெப்பநிலை 2.4 டிகிரி செல்சியஸ் (° C) உயரும் என்று, மத்திய புவி அறிவியல் அமைச்சகத்திற்கு (MoES), இந்திய விஞ்ஞானிகள் குழு தயாரித்து ஜூன் 14, 2020 அன்று வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
இது வெப்ப அலைகள், வெள்ளம் மற்றும் புயல் போன்ற தீவிர நிகழ்வுகளை அடிக்கடி ஏற்படுத்தி மேலும் தீவிரமாக்கும். அடுத்த சில தசாப்தங்களுக்குள் இந்தியாவின் கடலோரப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் என்று வெளிவரக்கூடிய அறிவியல் சான்றுகள் தெரிவிக்கின்றன. கூடுதல் சவால்களைச் சமாளிக்க சுகாதார அமைப்பு முடுக்கிவிட வேண்டி இருக்கும்; இதன் தாக்கத்தை குடும்ப மருத்துவம், உள்நாட்டு மருத்துவம், குழந்தை மருத்துவம், முதியோர் மருத்துவம் மற்றும் மனநல மருத்துவம் போன்ற துறைகளில் உள்ளவர்கள் அதிகளவில் உணருவார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உதாரணமாக, வெள்ளத்தின் பின்விளைவு போன்ற தீவிர நிகழ்வுகள் தொற்று நோய்களைப் பரப்பும் சூழலை உருவாக்கும்; வயிற்றுப்போக்கு மற்றும் பிற பாக்டீரியா, வைரஸ் நோய்கள் பெருக அனுமதிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த நோய்களில் பலவற்றை இந்தியா போதியளவு ஆய்வு செய்யவில்லை அல்லது கண்காணிக்கவில்லை; குறிப்பாக விலங்குகளில் தோன்றும் விலங்குகள் மூலம் பரவும் நோய்களை கூறலாம். எனவே அவற்றை கணக்கிடுவது கடினம் என்பதை, இந்தியா ஸ்பெண்ட் தனது முந்தைய கட்டுரையில் பகுப்பாய்வு செய்தது.
இந்நோய்கள், ஏற்கனவே வளங்கள், மருந்துகள் மற்றும் பராமரிப்பு வழங்குநர்கள் குறைவாகக் கொண்டிருக்கும் இந்தியாவின் ஆரம்ப சுகாதார நெட்வொர்க்கை மேலும் சிரமத்திற்கு உள்ளாக்கும். ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனை புறநோயாளிகள் துறை ஆகியவற்றை நோக்கி, வளர்ந்து வரும் பரவக்கூடிய நோய்கள் உள்ளவர்களை முதலில் திரும்பச் செய்யும். அவசரகால மருத்துவ சேவைகள் மற்றும் வெளிநோயாளி சேவைகளின் தேவையை உயர்த்தவும், காலநிலை மாற்றம் அழுத்தம் தருகிறது.
ஆரம்ப சுகாதாரத்துக்கான செலவிடுவதில்இந்தியாவின் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்கள் பின்தங்கியுள்ளன.
இந்தியாவில் உள்ள 156,231 துணை ஆரம்ப சுகாதார மையங்களில், 78,569 ஆண் சுகாதார ஊழியர்கள் இல்லை; 6,371 துணை செவிலியர்கள் இல்லை; 4,243 மருத்துவர்கள் இல்லையென கிராம சுகாதார புள்ளிவிவரங்கள்-2017 தெரிவித்துள்ளது.
இந்திய பொது சுகாதார தரநிலைகளின்படி (ஐ.பி.எச்.எஸ்), அடிப்படை சுகாதார அமைப்பின் அடுக்கு-2 ஐ உருவாக்கும் ஆரம்ப சுகாதார மையங்களுக்கு, வெளிநோயாளிகளுக்கான பராமரிப்புக்கு ஒருநாளைக்கு குறைந்தபட்சம் 40 நோயாளிகளுக்கு, இந்தியா முழுவதும் 25,650 மருத்துவர்கள் தேவை என்ற நிலையில் அதற்கு பரிந்துரைக்க வேண்டும். இந்த தரங்களை பூர்த்தி செய்தால், 10 லட்சம் நோயாளிகள் தினமும் பயனடையலாம். ஆனால் 3,027 மருத்துவர்கள் பற்றாக்குறையுடன் 1,974 ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் இல்லாமல் உள்ளன. இதன் பொருள் 12%, அல்லது 121,080 நோயாளிகள், ஒவ்வொரு நாளும் ஆரம்ப சுகாதார சேவையை அணுகாமல் செல்வதாக, இந்தியாஸ்பெண்ட் கட்டுரை முன்பு விரிவாகக் கூறியது.
இந்தியாவின் கிராமப்புற சுகாதார அமைப்பு, காலநிலை மாற்றத்தின் தாக்கங்களில் இருந்து பல லட்சம் பேரை பாதுகாக்க வலுவாக இருக்க வேண்டும், இது இந்தியா ஸ்பெண்ட் முன்பு அறிவித்தபடி, சேவை செய்ய வேண்டிய ஏழ்மையானவர்களை விட்டுவிடுகிறது. புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதன் மூலம் உந்தப்படும் காலநிலை நெருக்கடியை உருவாக்குவதில், மட்டுப்படுத்தப்பட்ட அல்லது கிட்டத்தட்ட எந்தப் பங்கையும் வகிக்கவில்லை என்றாலும், காலநிலை மாற்றம் ஏழ்மைச்சமூகங்களையே மிகவும் பாதிக்கும்.
மாநில பட்ஜெட்டில் சுகாதாரத்திற்கு 8%
ஆரம்ப சுகாதாரத்துறையில் முதலீடு செய்ய வேண்டிய அவசியத்தை இந்தியா குரல் கொடுத்துள்ளது, ஆனால் பட்ஜெட் நிதி ஒதுக்கீடு வேகமாய் இருக்கவில்லை என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
“சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்கள் (எச்.டபிள்யூ.சி) வழியாக ஆரம்ப சுகாதார சேவையை வலுப்படுத்துவது பற்றி சுகாதாரக் கொள்கை பேசுகிறது, இது விரிவான ஆரம்ப சுகாதார சேவையை வழங்கும்; ஆனால் துரதிர்ஷ்டவசமாக 2017 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட அத்தகைய கொள்கைக்கு ஏற்ப பட்ஜெட் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படவில்லை,” என்று சுயாதீன பொதுசுகாதார ஆராய்ச்சியாளரும் ஆர்வலருமான ரவி துக்கல் கூறினார். "இந்தியா 2017 சுகாதாரக் கொள்கையை பின்பற்றினால், பட்ஜெட் உடனடியாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5% வரை அதிகரிக்கப்பட வேண்டும்" என்றார்.
இந்தியாவில், சுகாதாரச்செலவுகள் மத்திய- மாநிலங்களுக்கு இடையில் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன, ஆனால் செலவினங்களின் பெரும்பகுதிக்கு மாநில அரசுகள் பொறுப்பாகும். செலவினம் அதிகரிப்பதற்கு மாநிலங்கள் தங்களது பட்ஜெட்டில் குறைந்தது 8% சுகாதாரத்துக்காக செலவிட வேண்டும், இது கிட்டத்தட்ட 60% பொது சுகாதார செலவினங்களை ஈடுகட்டும்; அதே நேரத்தில் மீதமுள்ள 40% ஐ வழங்க வேண்டியது மத்திய அரசின் கடமை என்று துகல் கூறினார்.
டெல்லி மற்றும் புதுச்சேரி மட்டுமே இந்த எண்ணிக்கையை [8%] எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, 2019-20க்கான மாநில அரசின் பட்ஜெட் குறித்த ரிசர்வ் வங்கி ஆய்வு அடிப்படையில் இவ்வாறு கணிக்கப்பட்டுள்ளது.
பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான தணிப்பு நடவடிக்கைகள் சுகாதார அமைப்புக்கு வெளியே உள்ளன என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
"பாதுகாப்பான மற்றும் சுத்தமான குடிநீரை வழங்குதல், பணி நேரக்குறைப்பு மூலம் வெப்பம் தொடர்பான நோய்களைத் தடுப்பது, பாதுகாப்பான குடிநீர் போதுமான அளவு வழங்குதல், ஓய்வு காலம் மற்றும் உழைக்கும் மக்களுக்கு வீட்டுவசதி" ஆகியவை சுகாதார அமைப்பில் மன அழுத்தத்தைக் குறைப்பதில் முக்கியமாக இருக்கும் என்று தாரா கூறுகிறார் . பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றம் மற்றும் மாசு குறைப்பு ஆகியன முக்கியமானதாக இருக்கும்.
இந்தியாவின் சமீபத்திய பட்ஜெட் உரையை பிப்ரவரியில் வெளியிட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், காலநிலை மாற்றத்திற்கான ஆயத்தப்பணிகளை குறிப்பிட்டார், ஆனால் அதில் குறிப்பிடத்தக்க அறிவிப்புகள் தெளிவற்று இருந்தன. "ஒவ்வொரு துறைக்கும் சுகாதார கவனம் இருக்க வேண்டும்," என்று சூரத்தில் உள்ள நகர்ப்புற சுகாதார மற்றும் காலநிலை மறுசீரமைப்பு மையத்தின் (UHCRCE) தொழில்நுட்ப இயக்குனர் விகாஸ் தேசாய் கூறினார். "காலநிலை நோக்குடன் பட்ஜெட்டை வடிவமைப்பீர்கள் என்று சொல்வது எளிது, ஆனால் துறைகள் அவற்றில் கவனம் செலுத்த வேண்டியதில் தெளிவு இருக்க வேண்டும்" என்றார்.
தேவை, கண்காணிப்பு, தரவு சேகரிப்பு
சிக்குன் குனியா, டெங்கு போன்ற கொசுக்களால் பரவும் நோய்கள், லீஷ்மேனியாசிஸ், நிணநீர் ஃபைலேரியாஸிஸ் மற்றும் ஒன்கோசெர்சியாசிஸ் போன்ற ஒட்டுண்ணி நோய்கள் உள்ளிட்ட தெற்காசியாவில் பரவக்கூடிய பிற நோய்களை வெப்பமான காலநிலை பாதிக்கலாம். வெப்பநிலை மாறும்போது, கொசுக்களால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். இதையொட்டி பரவல் தீவிரத்தில் மாற்றங்கள் ஏற்படலாம் அல்லது நோய்கள் காணப்படும் புவியியல் வரம்புகளில் மாற்றங்கள் ஏற்படலாம்.இந்தியா, உலகின் பிற நாடுகளுடன் சேர்ந்து, நோய்களை மாற்றும் முறைகளைக் கண்டறிய கண்காணிப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்த வேண்டும் என்று, வளர்ந்து வரும் ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
"நாடு முழுவதும் தரவு சேகரிப்பு மற்றும் அதன் தரத்தை மேம்படுத்த இப்போது பல முயற்சிகள் உள்ளன" என்று தேசாய் கூறினார். "தரவின் தரப்படுத்தல் மற்றும் சில துறைகளை உருவாக்குதல் அல்லது காலநிலை தரவுகளுடன் சுகாதாரத்தரவைப் பார்க்கும் ஒரு அமைப்பின் ஈடுபாடு ஆகியவை தேவை" என்றார்.
இதற்கு தீர்வாக அரசுகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் போன்ற பங்குதாரர்கள் அறிவு இடைவெளிகளைக் குறைக்க, பாலமாக செயல்பட வேண்டும். தொற்று நோய் கண்டறிதல், கண்காணிப்பு மற்றும் அத்தியாவசிய மருந்துகளுக்கான அணுகலை மேம்படுத்துதல் ஆகியவற்றில் முதலீடு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் சுட்டிக்காட்டியுள்ளன.
காலநிலை மாற்றத்தின் பொது சுகாதார பாதிப்புகள் குறித்த சான்றுகள் புதிதல்ல. காலநிலை மாற்றம் தொடர்பான அறிவியலை மதிப்பிடுவதற்காக ஐ.நா. அமைப்பு உருவாக்கிய காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச அரசு குழுவின் அறிக்கையில் அவை 2007 வரை முன்னிலைப்படுத்தப்பட்டன.
செயல்பட நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் உள்ளன.
சிறந்த நடைமுறைகளில் இருந்து கற்றல்
உலக சுகாதார அமைப்பில் இடம் பெற்றுள்ள அனைத்து ஐரோப்பிய உறுப்பு நாடுகளும், முதன்மை முயற்சிகள் மற்றும் வளர்ச்சியில் சுகாதார பின்னடைவை வலுப்படுத்துவதில் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதாக அறிவிப்பு செய்துள்ளன. இந்த ஐரோப்பிய நாடுகளில் 24 நாடுகள் தங்களது தேசிய சுகாதார பாதிப்பு மற்றும் ஏற்புக் கொள்கையை மதிப்பீடு செய்கின்றன. ஆப்பிரிக்காவும் கூட, காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய சுகாதார ஆபத்துகளை அடையாளம் காண, பிராந்திய செயல்முறையை நிறுவியுள்ளது மற்றும் அந்தந்த சுகாதார அமைப்புகளை சிறந்த நடைமுறைகளைத் தயாரிக்கவும், பதிலளிக்கவும் மற்றும் பகிர்ந்து கொள்ளவும் வழிவகை செய்கிறது.
இந்தியா, மத்திய அளவில் சுகாதார செலவினங்களை அதிகரிக்கவில்லை என்றாலும், சில மாநிலங்கள் முதன்மை சுகாதாரத்துக்கான முதலீட்டை அதிகரித்துள்ளன. உதாரணமாக, மிசோரம், சிக்கிம், புதுச்சேரி, கோவா, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், இமாச்சலப் பிரதேசம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகியவை, தலைக்கு தலா 4,000 ரூபாய்க்கு மிக அருகில் செலவழிக்கின்றன என்று துக்கல் கூறினார்.
காலநிலை மாற்றத்தின் பொது சுகாதார பாதிப்புகளைச் சமாளிக்க தனி பட்ஜெட் ஒதுக்கீடு தேவையில்லை. "நம்மிடம் வலுவான ஆரம்ப சுகாதார அமைப்பு இருந்தால், ஆரோக்கியத்தை பாதிக்கும் காலநிலை மாற்ற பிரச்சினைகள் நன்கு கவனிக்கப்படும்" என்று துக்கல் மேலும் கூறினார்.
(ஷெட்டி, இந்தியா ஸ்பெண்ட் செய்திப் பணியாளர்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளைrespond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கண நடை கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.