புதுடெல்லி: கோவிட் -19 பரவலால் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, அது பகுதியளவு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், அதனால் மாசு இல்லாத நீல வானம் தெளிவாக தெரிவதாக இந்தியர்கள் மகிழ்ச்சியடைந்தாலும், இந்த நேரத்தில் மிக வேகமாக வளர்ந்துள்ள ஒரு அமைதியான ஆபத்து குறித்து, அவர்கள் கொஞ்சமும் கவனிக்கவில்லை, அது: வீட்டில் ஏற்படும் உட்புற காற்று மாசுபாடு (HAP) ஆகும்.

கடந்த 2020 மார்ச் 25 முதல் ஊரடங்கு அமலில் இருப்பதால், வீடுகளில் வழக்கத்தை விட அதிக உணவு சமைக்கப்பட்டு வருகிறது; இதனால் இந்தியாவின் மொத்த பி.எம்2.5 உமிழ்வுகளின் (அதாவது காற்றில் நுண்துகள் கரையும் அளவு) வழக்கத்தைவிட 2% - அல்லது ஒரு நாளைக்கு சுமார் 150 டன் - அதிகரித்துள்ளதாக, உலக வள நிறுவனம் (WRI) - இந்தியா அமைப்பால் இன்னும் வெளியிடப்படாத ஆய்வின் ஆரம்ப கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்ற்னா. இது, சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டு பிரச்சினைகளை ஆய்வு செய்யும் உலகளாவிய சிந்தனைக் குழுவின் இந்தியப்பிரிவு ஆகும்.

மேலும், மக்கள்தொகையில் 50% பேர், அதிகபட்ச சமையல் நேரங்களில் வீட்டுக்குள் அடைந்து கிடக்கும் நிலையில், வீட்டு உட்புற காற்று மாசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கக்கூடும் என்று ஆய்வு கூறுகிறது.மரம், கரி மற்றும் சாணம் போன்ற திட உயிரி எரிபொருள்கள் சமையல் அல்லது சூடாக்குவதற்காக எரிக்கப்படும்போது பி.எம்.2.5 துகள்கள் - இரத்த ஓட்டத்தில் கலக்கக்கூடிய நுண்ணிய துகள்கள் - வெளிவருகின்றன. உலக வள நிறுவனம்-இந்தியா (WRI) அமைப்பின் கணக்கீட்டின்படி, இந்தியாவின் 13 லட்சம் மக்கள்தொகையில் சுமார் 78% பேர் இத்தகைய திட எரிபொருட்களை தங்களது முதன்மை மற்றும் இரண்டாம் நிலை தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர்.

"சுற்றுப்புறக்காற்றைப் போல பொதுமக்கள் பார்வையில் கவனம் பெறாத உட்புற காற்று மாசுபாடு, ஒரு அமைதியான கொலையாளி என்று குறிப்பிடலாம்; குறிப்பாக திட உயிரி எரிபொருட்களைப் பயன்படுத்தும் நகர்ப்புற ஏழைகள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு இது ஆபத்து என்று, உலக வள நிறுவன அமைப்பின் இந்தியாவுக்கான பிரிவின் தலைவர் அஜய் நாக்பூர் கூறினார்.

இதய நோய், பக்கவாதம், சுவாச நோய்கள் மற்றும் நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட உட்புற காற்று மாசுபாடு வெளிப்பாட்டால் ஏற்படும் நோய்களால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஐந்து லட்சம் இந்தியர்கள் முன்கூட்டியே இறக்கின்றனர். சிறு குழந்தைகள், பெண்கள் மற்றும் வயதானவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். உட்புற காற்று மாசுபாட்டால் ஏற்படும் மனித ஆரோக்கியத்திற்கான செலவை நிவர்த்தி செய்ய அரசு எடுத்துள்ள முக்கிய கொள்கை நடவடிக்கை, மாசு ஏற்படுத்தும் உயிரி எரிபொருட்களை பயன்படுத்துவதற்கு பதிலாக சமையலுக்கு சுத்தமான திரவ பெட்ரோலிய வாயுவை (எல்பிஜி) பயன்படுத்த வீடுகளை ஊக்குவிப்பதாகும். ஆனால் அதன் தாக்கம் இதுவரை குறைவாகவே உள்ளது என்பதை நாங்கள் கண்டறிந்து குறிப்பிட்டோம்; இந்த நோக்கத்தை அடைய இன்னும் நீடித்த, இலக்குடன் முயற்சி மேற்கொள்ள வேண்டுமென்று வல்லுநர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

திட சமையல் எரிபொருளைப் பயன்படுத்தி ஒரு வீட்டிற்குள் பி.எம் 2.5 இன் சராசரி தினசரி செறிவு ஒரு கன மீட்டருக்கு (µg / m3) 163-600 மைக்ரோகிராம் வரம்பில் எங்கும் இருக்கலாம் என்று இந்த ஆய்வு கூறுகிறது. இது உலக சுகாதார அமைப்பு (WHO) பரிந்துரைத்த 25 µg / m3 என்ற தினசரி காற்று மாசுபாட்டின் வெளிப்பாட்டுடன் ஒப்பிடும்போது ஆறு முதல் 23 மடங்கு அதிகம் ஆகும்.

வெளிப்புற vs உட்புற மாசுபாடு

கடந்த மார்ச் 25 அன்று, இந்தியா தனது ஊரடங்கின் ஆரம்பத்தில் அனைத்துவகை போக்குவரத்து, பெரும்பாலான தொழில்கள் மற்றும் வணிக நடவடிக்கைகளை முடக்கியது. அடுத்த சில வாரங்களில் -உலகின் 20 அதிக மாசுபட்ட நகரங்களில் 14ஐ கொண்டுள்ள - நம் நாட்டின் வெளிப்புற காற்று மாசுபாடு அதிவேகமாக சரிவை சந்தித்ததாக, இந்தியா ஸ்பெண்ட் 2020 ஜூன் 24 கட்டுரை தெரிவித்தது. உதாரணமாக, மார்ச் 25 முதல் ஏப்ரல் 15 வரை டெல்லியில் வெளிப்புற காற்று மாசுபாடு 20 நாட்களுக்குள் பாதியாக குறைந்துவிட்டதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் கண்டறிந்தது.

மறுபுறம், வீட்டினுள் ஏற்படும் மாசுபாடு அதிகரிப்பு மிக வித்தியாசமானது என்பதை உலக வள நிறுவனம் -இந்தியாவின் ஆராய்ச்சி காட்டுகிறது. ஊரடங்கின் போது வீட்டு மாசு அளவை மதிப்பிடுவதற்காக, உலக வள நிறுவனம்-இந்தியாவின் ஆராய்ச்சியாளர்கள் மூன்று வகையான தரவுகளை தொகுத்தனர்: 2020 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் மாநில வாரியான மக்கள்தொகை புள்ளிவிவரங்கள், முதன்மை மற்றும் இரண்டாம் நிலை நோக்கங்களுக்காக வீடுகளின் மாநில வாரியாக சமையல் எரிபொருள் பயன்பாடு மற்றும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற வீடுகளில் ஒருநாளில் உட்கொள்ளப்படும் உணவின் எண்ணிக்கை; அதாவது எங்கே சாப்பாடு தரப்பட்டது, யார் வழங்கியது உள்ளிட்ட நுகர்வு முறைகள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டன. இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகம் நடத்திய ஆய்வு அடிப்படையில் இந்த புள்ளிவிவரங்கள் பெறப்பட்டுள்ளன.

நாடு தழுவிய ஊரடங்கின் முதல் இரு மாதங்களில் மக்கள் பெரும்பாலும் தங்களது வீட்டிற்குள் முடங்கி இருந்தனர். அப்போது நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே சாப்பிடும் 3% உணவுகள், வீட்டிற்குள் என்று மாறிவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்; நமது 13 லட்சம் மக்கள்தொகையில் 78% பேர், மாசுபடுத்தும் எரிபொருட்களை சமைப்பதற்கு தங்களது முதன்மை அல்லது இரண்டாம் எரிபொருளாக பயன்படுத்தி வருகின்றனர். இக்காலகட்டத்தில் வீட்டில் சமைத்த உணவுகள் பொதுவாக உணவகங்களில் இருந்து வாங்கப்பட்டவை, முதலாளிகளால் வழங்கப்பட்டவை மற்றும் அரசு அல்லது தொண்டு நிறுவனங்கள் வழங்கியவை (எடுத்துக்காட்டாக, பள்ளி-குழந்தைகளுக்கான மதிய உணவு).

இந்த கணக்கீட்டின் அடிப்படையில், உலக வள நிறுவனம்- இந்தியா ஆராய்ச்சியாளர்கள் மதிப்பீடுகளின்படி நகர்ப்புற குடும்பங்கள் தினசரி பி.எம். 2.5 உமிழ்வில் 3% அதிகரிப்பு மற்றும் கிராமப்புற குடும்பங்கள் கிட்டத்தட்ட 2% அதிகரிப்பை பதிவு செய்துள்ளன. இருப்பினும், கிராமப்புற இந்தியாவில் (ஒரு நாளைக்கு 121 டன்) அதிகரிப்பு, நகர்ப்புற இந்தியாவை விட (ஒரு நாளைக்கு 22 டன்) ஐந்து மடங்கு அதிகமாகும்; ஏனெனில் கிராமப்புற குடும்பங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன.

உலக வள நிறுவனம்- இந்தியா பகுப்பாய்வின்படி, பி.எம். 2.5 க்கான தேசிய தினசரி சராசரி வீட்டு உமிழ்வு, ஊரடங்கு காலத்தில் கிட்டத்தட்ட 8,600 டன்னில் இருந்து ஒரு நாளைக்கு சுமார் 8,750 டன்னாக அதிகரித்துள்ளது.

உலக வள நிறுவனம்- இந்தியாவின் தினசரி வீட்டு பி.எம். 2.5 உமிழ்வுகளுக்கான மதிப்பீடுகள், முந்தைய ஆய்வுகளை விட மிகவும் துல்லியமாக இருந்ததாக, அஜய் நாக்பூர் கூறினார்; ஏனென்றால், முதன்மை பயன்பாட்டிற்கு மட்டுமே கணக்கீடு செய்வதற்கு பதிலாக முதன்மை எரிபொருட்களின் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை பயன்பாட்டிற்கான பி.எம். 2.5 உமிழ்வுகளை அவை கணக்கில் எடுத்துக்கொண்டன. முதன்மை பயன்பாடு என்பது திட எரிபொருட்களை ஒரு வீட்டில் சமைப்பதற்கான முதன்மை ஆதாரம் என்பதை குறிக்கிறது மற்றும் இரண்டாம் நிலை பயன்பாடு என்பது எல்பிஜி போன்ற சுத்தமான எரிபொருட்களுடன் சேர்ந்து திட எரிபொருட்களைப் பயன்படுத்துவதைக் குறிக்கிறது.

கேரளா, மகாராஷ்டிரா மிகப்பெரிய அளவில் உட்புற காற்று மாசுபாடு

உலக வள நிறுவனம் - இந்தியா ஆராய்ச்சி சுட்டிக்காட்டியதை விட ஊரடங்கின்போது பி.எம். 2.5 இன் வீட்டு உமிழ்வு அளவு இன்னும் அதிகமாக இருக்கலாம் என்றும் அஜய் நாக்பூர் பரிந்துரைத்தார்; ஏனெனில் பல எல்.பி.ஜி. பயனாளிகள் தங்களது வேலை அல்லது வருவாய் ஆதாரங்களை இழந்து, அதனால் விலை அதிகமான எல்பிஜி சமையல் எரிவாயு பயன்படுத்துவதை நிறுத்தி இருக்கக்கூடும்.

"கோவிட்-19 பரவலை கட்டுப்படுத்த பின்பற்றப்படும் சமூக இடைவெளி, போக்குவரத்து தொடர்பான காற்று மாசு உமிழ்வைக் குறைத்திருக்கலாம்; ஆனால் இது எல்பிஜி விநியோகத்தை சீர்குலைத்து, இதனால் வீடுகளில் திட எரிபொருள் பயன்பாடு அதிகரித்து புகை உமிழ்வை அதிகரிக்கும்” என்று சுதந்திர கொள்கை ஆராய்ச்சியாளர் ஹேம் தோலாகியா கூறினார்.

தற்போது இந்தியாவின் ஊரடங்கு ஓரளவு தளர்த்தப்பட்டாலும், அது உட்புற மாசு அளவுகளில் பெரியளவில் குறைவதற்கு வழிவகுக்காது என்று அஜய் நாக்பூர் தெரிவித்துள்ளது. "ஊரடங்கு பெருமளவு தளர்த்தப்படும் போதுதான் தினசரி உமிழ்வுகளின் அதிகரிப்பு ஓரளவு குறையக்கூடும்" என்று அவர் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். “மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுவது மட்டுமல்ல; சமுதாய சமையலறைகள் மற்றும் உணவகங்கள் உட்பட வீட்டிற்கு வெளியே உணவுக்கான வழிகளும் திறந்திருக்க வேண்டும்,”என்றார் அவர்.

அதன்படி இந்த ஆய்வில் பி.எம். 2.5 உமிழ்வில் ஒருநாளைக்கு 20 டன் அதிகரிப்புடன் கேரளா முதலிடத்திலும், அடுத்த இடங்களில் மகாராஷ்டிரா (15 டன் / நாளொன்றுக்கு), மேற்கு வங்கம் (14 டன் ) மற்றும் ஜார்க்கண்ட் (ஒரு நாளைக்கு 12 டன்) என, மிகப்பெரிய உட்புற உமிழும் மாநிலங்கள் உள்ளதாக, ஆய்வு குறிப்பிட்டது; இந்த ஆய்வு வீட்டில் ஏற்படும் புகை உமிழ்வில் மாநிலங்களுக்கு இடையிலான வேறுபாடுகளை ஆராய்கிறது. ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் உமிழ்வுகளின் அளவு மாநிலத்தின் அல்லது யூனியன் பிரதேசத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகை, வீட்டிற்கு வெளியே சாப்பிடும் மக்களின் விகிதம் மற்றும் சமையலுக்கு உயிரி எரிபொருளைப் பயன்படுத்தும் மக்களின் பங்கு போன்ற காரணிகளைப் பொறுத்தது என்று, அஜய் நாக்பூர் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்படி, முதலிடம் வகிக்கும் கேரளாவில் 50% கிராமப்புற குடும்பங்கள் எல்பிஜி போன்ற சுத்தமான சமையல் எரிபொருட்களைப் பயன்படுத்துகின்றன; ஆனால் அவர்கள் அதற்கு முக்கியத்துவம் தந்து பயன்படுத்துவதில்லை; அத்துடன் சமையலறையில் ஆபத்து ஏற்படுத்தும் எரிபொருட்களையும் பயன்படுத்துவதாக, இந்தியா ஸ்பெண்ட் ஏப்ரல் 2018 கட்டுரை தெரிவித்தது.

வீட்டு காற்று மாசுபாட்டில் பிற முக்கிய பங்களிப்பாளர்களில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவு, சண்டிகர், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, மற்றும் டாமன் மற்றும் டையு ஆகியனவும் அடங்கும்.

கொடிய வெளிப்பாடு

இந்திய மக்கள்தொகையில் சுமார் 50% -அதாவது பொதுவாக வீடுகளில் சமையல் நேரத்தில் அங்கிருந்து வெளியேறுபவர்கள் அல்லது பள்ளிக்குச் செல்வோர்- ஊரடங்கு காலத்தில் வீட்டுக்குள்ளேயே தங்கி இருப்பதால், வீடு அல்லது உட்புற காற்று மாசுபாடு அதிகரித்தபோது, அதனால் பாதித்தவர்களின் எண்ணிக்கையும் பெரியளவில் அதிகரித்ததை ஆய்வு கண்டறிந்துள்ளது.வீட்டில் உருவாகும் திட எரிபொருள் எரிப்பதால் பி.எம். 2.5 அதிகம் வெளிப்பட்டு, சுவாச நோய்களை உருவாக்க அதிக வாய்ப்புள்ளது; அத்தகைய வெளிப்படுவதால் குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் பெண்கள் மோசமாக பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் ஏற்கனவே பெரும்பாலான சமையலைச் செய்து வருவதால் வீடு அல்லது உட்புற காற்று மாசுபாட்டின் சுமையை மேலும் தாங்கிக் கொள்கிறார்கள்.

புதிதாக பிறந்த மற்றும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் வளர்ச்சியடையாத நுரையீரல் இதனால் மிகவும் பாதிக்கப்படும். வீட்டுக்குள் ஏற்படும் காற்று மாசுபாட்டால், 2016 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் 66,800 பேர் இறந்துள்ளனர்; இது, அதே ஆண்டில் வெளிப்புற காற்று மாசுபாட்டால் இறந்த ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் 60,900 பேர் என்ற எண்ணிக்கைவிட 10% அதிகம் என்று, உலக சுகாதார அமைப்பின் ஆய்வை மேற்கோள்காட்டி, அக்டோபர் 2018 இல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது.

தூய்மையான எல்.பி.ஜி. போன்ற எரிபொருள் பயன்படுத்துவதை விட திட எரிபொருள் பயன்படுத்தும் வீடுகளில் இருக்கும் 60 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு, ஆஸ்துமா அதிகம் என்பதை, இந்த ஆய்வு சுட்டிக்காட்டியது.

நேரடியாக புகை வெளிப்படுவதன் மூலம் சுகாதார பாதிப்பை ஏற்படுத்துவதோடு, இந்தியாவில் வெளிப்புற அல்லது சுற்றுப்புற காற்று மாசுபாட்டின் மிகப்பெரிய பங்களிப்பையும் வீட்டின் உட்புற காற்று மாசுபாடு செய்கிறது. "சராசரியாக சுற்றுப்புற காற்றின் தர வெளிப்பாட்டில் சுமார் 30% வீடுகளோடு தொடர்புடையவை - தேசிய அளவில் மிகப்பெரிய பங்களிப்பு செய்யுமொன்றாக உள்ளது" என்று, டெல்லியை சேர்ந்த கொள்கை ஆராய்ச்சி மையத்தின் (CPR - சிபிஆர்) சந்தோஷ் ஹரிஷ், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

கடந்த 2015 ஆம் ஆண்டில், இந்தியாவில் துகள் மாசுபாட்டால் இறந்த நான்கு பேரில் ஒருவர், வீட்டின் திட உயிரி எரிபொருள் காரணமாக ஏற்பட்டது என, இந்தியா ஸ்பெண்ட் 2018 ஜனவரி கட்டுரை தெரிவித்துள்ளது. அதேநேரம், தரமான அளவை விடக் குறைவான துகள்களின் மாசுபாட்டின் குறைவான வெளிப்பாடு கூட ஆபத்தானது என்று நாங்கள் தெரிவித்து இருந்தோம்.

எல்.பி.ஜி. பயன்பாட்டை அதிகரித்தல்

எல்பிஜி இணைப்பைப் பெறுவதற்கு முன்கூட்டிய செலவினங்களுக்கு மானியம் மற்றும் கடன் தருவதன் மூலம் உட்புற காற்று மாசுபாட்டால் எழும் பொது சுகாதாரச்சுமையைத் தணிக்க, மத்திய அரசு தனது முதன்மை சமையல் எரிபொருள் திட்டமான உஜ்வாலாவை, 2016ம் ஆண்டில் அறிமுகம் செய்தது. அப்போது முதல் இதுவரை 8 கோடிக்கும் அதிகமான இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக, 2020 மே 11 அன்று இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்துள்ளது.

இலவச எல்.பி.ஜி. இணைப்பு இருந்தால் மட்டும் போதாது. வீட்டின் திட எரிபொருட்கள் எளிதாக செலவின்றி கிடைத்துவிடும் சூழலில், எல்பிஜி காஸ் இணைப்பால் தொடர்ச்சியான செலவுகள், அத்துடன் கிராமப்பகுதிகளில் எல்.பி.ஜி. குறைவாக கிடைப்பது ஆகியன, சமையலுக்கு எல்.பி.ஜி.-யை எந்த அளவிற்கு வீடுகள் பயன்படுத்துகின்றன என்பதை நிர்ணயிக்கும் காரணிகள் என்று நாம் தெரிவித்திருந்தோம்.

பிரதம மந்திரி கரிப் கல்யாண் தொகுப்பின் கீழ் கோவிட்-19 நிவாரண பதிலின் ஒரு பகுதியாக, 8 கோடிக்கு அதிகமான உஜ்வாலா பயனாளிகளுக்கு 2020 ஏப்ரல் 1 முதல், மூன்று இலவச எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது; அதாவது 80 மில்லியன் சிலிண்டர்கள் ஒவ்வொரு 30 நாட்களுக்கும் விநியோகிக்கப்படும். இருப்பினும், 2020 மே 20 முதல் 50 நாட்களில் 6.8 கோடி சிலிண்டர்கள் மட்டுமே விநியோகித்து இருப்பதாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. ஒரு இலவச சிலிண்டர் ஒரு குடும்பத்திற்குச் சென்றதாகக் கருதினால், சுமார் 1.2 கோடி குடும்பங்கள் 2020 மார்ச் 25 அன்று தொடங்கிய ஊரடங்கு காலத்தில் தங்களது முதல் இலவச சிலிண்டரை கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு பெறவில்லை.

முன்னோக்கிய வழி

கோவிட்-19 நிவாரண நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இலவச எல்பிஜி சிலிண்டர்களை வழங்குவது வரவேற்கத்தக்க ஒரு நடவடிக்கையாகும்; இது ஒரு சமூக பாதுகாப்பு தொகுப்பின் ஒரு பகுதியாக தொடரப்பட வேண்டும், இதனால், வீட்டு உட்புற காற்றுமாசு அளவும் குறையும் என்று ஹரிஷ் கூறினார். (மே 11, 2020 அன்று வெளியிடப்பட்ட இதற்கான தீர்வு குறித்த இந்தியா ஸ்பெண்ட் கட்டுரையை படியுங்கள்).

எப்படியானாலும், எல்பிஜி எரிவாயு மானியம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று ஹரிஷ் வலியுறுத்தினார்; அதாவது இது உண்மையிலேயே தேவைப்படுபவர்களை இலக்காகக் கொண்டு, அதிக எண்ணிக்கையிலான மக்களைச் சென்றடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால், இத்திட்டத்தின் மூலம் நகர்ப்புற நடுத்தர வர்க்க நுகர்வோருக்கும் மானியம் தருவது என்பது ஒரு மோசமான வள ஒதுக்கீடு ஆகும் என்றார் அவர்.

ஏழை வீடுகளுக்கான எல்பிஜி மறு நிரப்பல்களின் மலிவுத்தன்மையை மேலும் மேம்படுத்துவதற்கான இலக்கு கொள்கைகள், சமூக மட்டத்தில் அதன் பயன்பாட்டை ஊக்குவித்தல், எல்பிஜி வாங்குவதற்கான பயண தூரத்தை குறைத்தல் மற்றும் ஏழைகளுக்கு கணிக்கக்கூடிய மற்றும் வழக்கமான பணப்புழக்கத்தை உறுதி செய்தல் ஆகியவை சுத்தமான சமையல் எரிபொருட்களின் தொடர்ச்சியான பயன்பாட்டை எளிதாக்கும் என்று, எங்களின் மே 11, 2020 கட்டுரை கூறியது.

(திரிபாதி, இந்தியா ஸ்பெண்ட் செய்திப்பணியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளைrespond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கண நடை கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.