மும்பை: இந்தியா, உலகின் மிகப்பெரியதாக உள்ள அதன் மக்கள்தொகை விகிதத்திற்கேற்ப உயர்கல்வியில் அதிக முதலீடு செய்யவில்லை; பொதுத்தேர்தல்களுக்கு முன்பான அரசின் கடைசி பட்ஜெட் இந்த உண்மையை ஒப்புக் கொள்ளவிட்டால், அதற்கான சாத்தியம் மேலும் சரியும்.

இந்தியா தனது பட்ஜெட்டில் உயர்கல்விக்கென தொகை பெருமளவில் தேக்க நிலையில் உள்ளது. 2018-19ஆம் ஆண்டுடனான 12 ஆண்டுகளில் சராசரியாக 1.47% என்றளவில் உள்ளது. இந்தியா, 15 முதல் 24 வயதுடைய இளைஞர்களை அதிகம் கொண்டுள்ள சூழலில் (24.1 கோடி அல்லது மொத்த இந்தியர்களில் 18%) இத்தகு மந்தகதியை சந்திக்கிறது. இந்தியாவுக்கு அடுத்ததாக சீனா 16.94 கோடி பேரை கொண்டுள்ளது என, ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறையின் 2017 அறிக்கை தெரிவிக்கிறது.

அதேபோல், மத்திய புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட செயலாக்கம் (MOSPI) அமைச்சகத்தின் 2017 அறிக்கை படி, 2020ல் இந்திய மக்கள் தொகையில் 34.33% பேர் 15 முதல் 24 வயதுடையவர்களாக இருப்பார்கள். ஆளும் பாரதிய ஜனதா (பா.ஜ.க.) அரசால் 2019 பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட், இதை கருத்தில் கொள்ள வேண்டும். வளர்ந்து வரும் இந்த இளைஞர், உலகளாவிய அளவில் போட்டியிட தேவையான உயர் கல்வியை பெறுவார்கள் என்பதை பட்ஜெட் உறுதி செய்ய வேண்டும். அதற்கு பட்ஜெட்டில் அதிக நிதிய ஒதுக்க வேண்டும் என்று வல்லுனர்கள் எதிர்பார்க்கின்றனர்.

"2018-19 ஆம் ஆண்டில் உயர் கல்விக்கென ரூ. 35,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது - இந்தியா போன்ற பெரிய நாட்டிற்கு இது சிறிய தொகையாகும்" என்று, இந்தியா போட்டித்திறன் இன்ஸ்டிடியூட் தலைவர் அமீத் கபூர் தெரிவித்தார். இது, ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலின் வியூகம் மற்றும் போட்டித்திறன் தொடர்பான உலக நெட்வொர்க் இன்ஸ்டிடியூட் தலைவரும் ஆவார்.

பல்கலைக்கழகங்களுக்கு நிதி அளிப்பதில் இணக்கமற்ற முறை உள்ளது. பொது பல்கலைக்கழகங்களை எடுத்துக் கொண்டால், 97% மாணவர்கள் மாநில பல்கலைக்கழகங்களிலும், எஞ்சிய 3% பேர் மத்திய பல்கலைக்கழகங்களில் படிக்கின்றனர். ஆனால் அரசின் பட்ஜெட்டில் உயர் கல்விக்கான ஒதுக்கீட்டில் 57.5% மத்திய பல்கலைக்கழகங்கள், ஐஐடி மற்றும் ஐஐஎம் போன்ற முதன்மை நிறுவனங்களுக்கு செல்கிறது. இதனால், அதிக நிதி தேவைப்படும் மாநில பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கு சுமையை தருகின்றன; இத்தகைய புறக்கணிப்பால் மாணவர்கள் இன்னலுக்குள்ளாவதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

மாநில பல்கலைக்கழகங்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு (UGC), ராஷ்ட்ரீய உச்சதார் சிக்‌ஷா அப்யான் -ரூசா (RUSA அல்லது தேசிய உயர்கல்வி திட்டம்) வாயிலாக ஒரு பகுதி நிதியை மத்திய அரசும், எஞ்சிய நிதியை மாநில அரசுகளும் வழங்குகின்றன. மாநில அரசுகளை விட மத்திய அரசிடமிருந்து நிதி பெறுவது மிகவும் திறமையானது என்று, உயர்கல்வி, திறன் கல்வி மற்றும் பயிற்சி ஆகியவற்றுக்காக பணிபுரியும் அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளை (ORF) சகாவான அந்தாரா செங்குப்தா தெரிவித்தார்.

2018-19 ஆம் ஆண்டில் ரூஸா-வுக்கான அரசு ஒதுக்கீடு ரூ.1400 கோடியாகும்; இது2017-18 ஒதுக்கீடான ரூ.100 கோடி என்பதைவிட அதிகம். யூ.ஜி.சி.க்கான ஒதுக்கீடு ரூ.4922.74 கோடி என்பது ரூ. 4722.75 கோடியாக குறைக்கப்பட்டது. இந்தியாவில் உயர்கல்வி சேர்க்கை விகிதம் குறைவாகவே உள்ளது. நாட்டில் 18 முதல் 23 வயதுடையவர்களில் 70% க்கும் அதிகமானோர் உயர் கல்வி நிறுவனத்தில் சேர்ந்திருக்கவில்லை என உயர் கல்வி குறித்த அகில இந்திய ஆய்வு 2017-18 தெரிவிக்கிறது. உயர் கல்வி கற்கும் நிறுவனங்கள் மற்றும் அவர்கள் நடத்தும் ஆராய்ச்சியின் தரத்தில் பதிவு விகிதங்களை மேம்படுத்த பரிந்துரையில் கவனம் செலுத்திய நிபுணர்களிடம் நாங்கள் பேசினோம்.

கல்வியானது வறுமை ஒழிப்புடன் வலுவாக இணைக்கப்பட்டுள்ளது. சராசரியாக,ஒரு கல்வி ஆண்டு, 10% ஊதிய வருவாயுடன் தொடர்புடையது என 2014 ஐக்கிய நாடுகள் பண்பாட்டு அமைப்பு (UNESCO) அறிக்கை தெரிவித்தது. இது, வாய்ப்பை அதிகரித்து, ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, வருமான வேறுபாடுகளை குறைத்து, பொருளாதார முன்னேற்றத்தை தூண்டுவதன் மூலம் உழைக்கும் மக்களை சுரண்டுவதில் இருந்து பாதுகாக்கிறது என அறிக்கை கூறுகிறது.

உயர்கல்விக்கான பட்ஜெட்டில் உலகுடன் இந்தியா எப்படி ஒப்பிடுகிறது

கடந்த 2000 ஆம் ஆண்டில், இந்தியா மற்றும் சீனா ஆகியன தங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) ஏறத்தாழ ஒரே விகிதத்தை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கு செலவிட்டதாக யுனெஸ்கோ தெரிவிக்கிறது. இந்தியா மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.77% மற்றும் சீனா 0.89% செலவழித்தது. அப்போது முதல் சீனா அதன் செலவினங்களை சீராக அதிகரித்து 2016 ல் 2.11% செலவழித்துள்ளது. இந்தியா, 0.73% - 0.87% என்ற நிலையில் உள்ளது; இது 2015ல் 0.62% ஆக சரிந்தது.

உலக பல்கலைக்கழக தரவரிசையில் இந்திய பல்கலைக்கழகங்கள் தொடர்ந்து குறைந்த இடங்களைக் கொண்டுள்ளன. டைம்ஸ் உயர் கல்வி உலகளாவிய பல்கலைக்கழக தரவரிசை- 2019 பட்டியலின் முதல் 200 இடங்களில் ஒரு இந்திய பல்கலைக்கழகம் கூட இடம் பெறவில்லை; 500 இடங்களுக்குள் ஐந்து இந்திய கல்வி நிறுவனங்களே இடம் பெற்றுள்ளன. இந்த தரவரிசை பட்டியல், ஆசிரியர்களின் எண்ணிக்கை, கற்பித்தலின் தரம், ஆராய்ச்சி அளவு மற்றும் அதன் தரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.

இந்தியாவின் மத்திய பல்கலைக்கழகங்கள் போதிய ஆதார வளங்களை - அதாவது 2018 ஜூலையின் படி 33% காலியிடங்கள் நிரப்பாத நிலையில், அவற்றை பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக, 2018 ஆகஸ்ட் 16-ல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை குறிப்பிட்டிருந்தது. மேலும், ஆராய்ச்சிக்கு இந்தியா செலவிடுவது அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.62%; இது பிரிக்ஸ் (BRICS) நாடுகளைவிட குறைவு; அமெரிக்கா (2.74%), ஐரோப்பா (1.85%) ஆகியவற்றை விட மூன்றில் ஒரு பங்கு குறைவாகும்.

"தரமான வெளியீடுகள் மற்றும் ஆராய்ச்சி இல்லாவிட்டால் உயர் கல்வி அர்த்தமற்றதாகிவிடும். சிறப்பு மற்றும் பிரதான கல்வி நிறுவனங்களிடமிருந்து மத்திய மற்றும் மாநில பல்கலைக்கழகங்களுக்கு ஆய்வுகளை விரிவுபடுத்த வேண்டிய நேரம் இது" என்று செங்குப்தா கூறினார்.

உயர் கல்விக்கான பட்ஜெட்: என்.டி.ஏ. Vs யு.பி.ஏ.

பட்ஜெட்டில் உயர் கல்விக்கான ஒதுக்கீடு விகிதம் 2007-08ஆம் ஆண்டு முதல் மாறவில்லை. 2007-08ல் இருந்து ஒதுக்கீடுகளில் அதிக சதவீதம் 2017-18ல் இருந்தது; பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி- என்.டி.ஏ (NDA) அரசு உயர் கல்விக்கு பட்ஜெட்டில் 1.62% செலவிட்டது. குறைந்த விகிதம் எனில் தற்போதைய பா.ஜ.க. அரசு ஒதுக்கிய 1.29%ஐ (ரூ.23152.48 கோடி) குறிப்பிடலாம்.

Source: Union Budget

உயர் கல்விக்கான அரசின் நிதி ஒதுக்கீடு 2017-18ல் ரூ. 34,862.46 கோடியில் இருந்து 0.42% அதிகரித்து, 2018-19ல் ரூ.35,010.29 கோடியாக இருந்தது. ஆனால் மொத்த பட்ஜெட்டில் ஒதுக்கீட்டின் விகிதம் 1.62% என்பதில் இருந்து 0.19% புள்ளிகள் குறைந்து 1.43% ஆனது.

உயர் கல்விக்கான பட்ஜெட்டில் மத்திய பல்கலைக்கழகங்களுக்கு அரசின் உதவி 2017-18ல் ரூ.7,261.42 கோடி என்பது, 2018-19ஆம் ஆண்டில் ரூ.6,445.23 கோடியாக குறைந்தது. ஐ.ஐ.டி.க்களுக்கான அரசின் நிதி பங்களிப்பு கூட 2017-18ல் ரூ .7,503.5 கோடி தொகை, பின்னர் ரூ. 5,613 கோடியாக குறைந்தது.

உயர் கல்விக்கான மூலதன செலவு 2015-16 ல் பூஜ்ஜியமாக இருந்தது. 2016-17 பட்ஜெட்டில், பிரதான கல்வி நிறுவனங்களின் உள்கட்டமைப்புக்காக மனிதவளமேம்பாட்டு அமைச்சகம், கனரா வங்கியுடன் இணைந்து உயர்கல்வி நிதியளிப்பு முகமையை- ஹெபா (HEFA) தொடங்கியது. 2016-17ல் மூலதனச்செலவு ஒரு கோடி ரூபாய்க்கு உயர்ந்தது. 2017-18 ஆம் ஆண்டில் இது 250 கோடி ரூபாயாக அதிகரித்தது. 2018-19 ஆம் ஆண்டில் இந்த ஒதுக்கீடு 10 மடங்கு அதிகரித்து ரூ. 2,750 கோடியாக அதிகரித்தது.

அடுத்த 4 ஆண்டுகளில் ஹெபா, ரூ.1,00,000 கோடியை கடனாக வழங்கும். இதுவரை ரூ. 12,700 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது என, 2019 ஜனவரி 11ல் வெளியான மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆண்டு இறுதி அறிக்கை தெரிவிக்கிறது.

அரசு, ஹெபா-வுக்கு நிதியை அதிகரிப்பது மட்டுமே பிரச்சினைகளை தீர்த்துவிடாது என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர். “அவசர மேம்பாட்டு பணிகளுக்கு ஹெபா நிதி வழங்கினாலும், அதை நிறுவனம் திருப்பி செலுத்த வேண்டிய ஒன்று என்பதை கவனிக்க வேண்டும்” என்றார் செங்குப்தா. "இதன் பொருள். நிறுவனங்களின் கடனை திருப்பிச் செலுத்த, நிதி திரட்ட, நமது பிரதமர் தனது கடின உழைப்பை இரட்டிப்பாக வேண்டும், இது அவர்கள் இதுவரை உயர்த்தப்பட்ட நிதிக்கு கூடுதலாக இருக்கும்," என்றார் அவர்.

உயர்கல்வி முன்னுரிமைகள் என்னவாக இருக்க வேண்டும்

மொத்த உயர்கல்வி சேர்க்கை விகிதம் மற்றும் கல்வியின் தரத்தை மேம்படுத்த அரசு விரும்பினால், பொது பல்கலைக்கழகங்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று வல்லுனர்கள் எங்களிடம் கூறினர்.

"மத்திய மற்றும் மாநில பல்கலைக்கழகங்களிலும், அதனுடன் இணைந்த கல்லூரிகளிலும் அரசு மேம்படுத்த மற்றும் முதலீடு செய்ய வேண்டும்," என்கிறார் செங்குப்தா. "சில மாநில பல்கலைக்கழகங்கள் உயர்ந்த திறனை கொண்டுள்ளன; ஆனால் மத்திய மற்றும் மாநில அரசுகளின் புறக்கணிப்பால் பாதிக்கப்படுகின்றன," என்றார் அவர்.

2017ஆம் ஆண்டில் நிலைக்குழு அறிக்கை, இந்த பிரச்சனையை முன் வைத்தது.

பல்கலைக்கழக மானியக்குழுவின் பட்ஜெட் நிதியில் 65% ஐ மத்திய பல்கலைக் கழகங்களும் அதன்கீழ் உள்ள கல்வி நிறுவனங்களும் பயன்படுத்துகின்றன; மாநில பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு 35% நிதி மட்டுமே கிடைப்பதாக, அறிக்கை கூறுகிறது.

"அரசு பல்கலைக்கழகங்கள் ஒரு மோசமான நிலையில் உள்ளன," என்கிறார் டெல்லி பல்கலைக்கழக டீன் மற்றும் ஓய்வுபெற்ற பேராசிரியரான அனிதா ராம்பால். "சிறப்பாக செயல்படும் கல்வி நிறுவனங்களுக்கு அரசு கூடுதல் நிதி அளிப்பதை தொடர்ந்தால் அது மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் தரமான உயர் கல்வி தேவைப்படும் மாணவர்களை கைவிடும்" என்றார் அவர்.

(ஸ்ரேயா ராமன், இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.