பெங்களூரு: அமெரிக்கா மற்றும் 27 நாடுகளின் குழுவான ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன, காலநிலை மாற்றத்தை தழுவல் மற்றும் தணிப்பு செலவில் 54%-க்கு பொறுப்பு என, நூற்றுக்கும் மேற்பட்ட சிவில் சமூக அமைப்புகளின் புதிய அறிக்கை கூறுகிறது.

சமபங்கு என்பதை முன்னிலைப்படுத்தி, வரலாற்று முக்கியத்துவ உமிழ்வுகளின் பெரும்பகுதிக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியமே பொறுப்பு என்கிறது அந்த அறிக்கை.

தொழில்துறைக்கு முந்தைய காலத்தை விட உலகம் ஏற்கனவே 1.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை கூடுதால கொண்டிருக்கிறது. இதே போக்குகள் தொடர்ந்தால், இந்த நூற்றாண்டின் கால் பகுதிக்குள்ளாகவே சராசரி உலக வெப்பநிலை 3.4 - 3.9 டிகிரி செல்சியஸ் உயருமென எதிர்பார்க்கலாம் என்று ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) தெரிவிக்கிறது.

வருடாந்திர காலநிலை விவாதங்களுக்காக உலக நாடுகளின் பிரதிநிதிகள் ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் (டிசம்பர் 2 - 9, 2019), ஐ.நா. காலநிலை மாற்றத்திற்கான கட்டமைப்பு 25வது மாநாட்டின் (COP25 - சிஓபி 25) அமர்வில் சந்திக்கும் சூழலில், இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

இந்த அறிக்கை, உலக வனவிலங்கு நிதியம் (WWF) மற்றும் ஆக்சன் எய்ட் போன்ற அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிகரித்து வரும் உலக வெப்பநிலையின் பேரழிவு தாக்கங்களுக்கு செல்வந்த நாடுகள் எவ்வாறு பொறுப்பு என்பதை தெரிவிக்கிறது. "காலநிலை மாற்றம் - எரிபொருள் இழப்பு, சேதம் எப்போதும் நியாயமாக இருக்க முடியுமா?" என்ற இந்த அறிக்கை, செல்வ நாடுகளுக்கான முதல் படியாக, ஏற்கனவே ஏற்படுத்திய இழப்பு மற்றும் சேதத்தின் அடிப்படையில் உடனடி பொது காலநிலை நிதியுதவியை பரிந்துரைக்கிறது.

ஸ்டாக்ஹோம் சுற்றுச்சூழல் நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி சிவன் கர்த்தா, இந்த அறிக்கையில் பங்கீட்டு பகுப்பாய்வை உருவாக்கியவர்.

பொறுப்பின் ‘நியாயமான பங்கை’ கணக்கிடுகிறது

முதலாவது காலநிலை மாற்றத்தின் முதல் கூட்டம் நடந்த 1995 ஆம் ஆண்டில் இருந்து தற்போது கால் நூற்றாண்டு கடந்துவிட்டது. கடலோரப்பகுதி மற்றும் தீவு நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ள கடல் நீர்மட்டம் உயர்வுக்கு உரிய நடவடிக்கை இல்லாதது, வல்லுநர்கள் மத்தியில் விரக்தியை அதிகரிக்க செய்துள்ளது.

இந்த ஆண்டு சிஓபிக்கு கூடுதலாக, ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸ், செப்டம்பர் மாதம் மற்றொரு காலநிலை கூட்டத்தை நடத்தினார். துணிச்சலான திட்டங்களுடன் உலகத் தலைவர்களை ஒன்று கூட செய்தார் - இது குறிப்பிட்ட அளவிலேயே வெற்றி கண்டது. இதில் மேடையேறிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள், ஏற்கனவே தங்களது அரசு எடுத்த முயற்சிகளையே மீண்டும் மீண்டும் கூறினர்; காலநிலை தொடர்பான எதிர்கால வாக்குறுதிகளுக்கான காலக்கெடு தருவதில் தெளிவற்று இருந்தனர்.

ஆயினும்கூட, குறைந்த திறன் கொண்ட ஏழை நாடுகளை காலநிலை நெருக்கடி அளவுக்கு மீறி பாதிக்கிறது என்பதற்கான தெளிவான சான்றுகள் உள்ளதாக கூறும் அறிக்கை, ஆப்பிரிக்காவின் மேற்கு கடற்கரையில் உள்ள மொசாம்பிக்கை உதாரணம் காட்டுகிறது. "மொசாம்பிக்கில் மட்டும் 300 கோடி டாலருக்கும் அதிகமான பொருளாதார சேதங்களை ஏற்படுத்திய சோக நிகழ்வால்- அதாவது இடாய் மற்றும் கென்னத் புயல் - அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 20% பாதிப்பையும், நீடித்த தாக்கங்களையும் ஏற்படுத்தியது. இதில் உயிர்ச்சேதம் மற்றும் வாழ்வாதார இழப்புகள் சேர்க்கப்படவில்லை, ”என்று அறிக்கை கூறுகிறது.

இந்த ஆண்டு வெப்ப அனல் காற்று பிரான்சில் இருந்து இந்தியா பக்கம் திரும்பி, சேதத்தை ஏற்படுத்தின. இதனால் உயிர் மற்றும் உற்பத்தித்திறன் இழப்பு ஏற்பட்டதாக, ஆகஸ்ட் 2019 இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.

பூமி வெப்பமடையும் போது சூறாவளி, வெள்ளம் போன்ற தீவிர நிகழ்வுகள், அதன் தீவிரம் உயரும் என்று செப்டம்பர் 2019 இல் வெளியான சமீபத்திய காலநிலை மாற்ற அறிக்கை தெரிவிக்கிறது. புவி வெப்பமடைதல் தொடர்பான அறிவியலை மதிப்பிடும் ஐ.நா. காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச அரசு குழு (ஐபிசிசி) இதை வெளியிட்டது. ஒரு குறிப்பிட்ட நிகழ்வு காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டதாகக் கூற முடியாது என்றாலும், இதுபோன்ற தீவிர நிகழ்வுகள் அதிகரித்து வருவதை சமீபத்திய ஆராய்ச்சி முடிவு நிரூபிக்கிறது.

'நியாயமான பங்கு'

தற்போதைய அறிக்கையானது, காலநிலை நிதியுதவிக்கான பொறுப்பின் ‘நியாயமான பங்கை’ கணக்கிட, வரலாற்று கார்பன் உமிழ்வு பற்றிய தரவை ஆராய்கிறது.

வரலாற்று உமிழ்வு மற்றும் பொறுப்பேற்கும் நிதித்திறன் ஆகியவற்றை கணக்கில் கொண்டு, அமெரிக்கா 30%, ஐரோப்பிய ஒன்றியம் 24% இதற்கென கடன்பட்டிருப்பதாக அறிக்கை மதிப்பிடுகிறது. முழுமையான எண்ணிக்கையில், வளரும் நாடுகளுக்கு 2022 ஆம் ஆண்டில் 50 பில்லியன் டாலர், 2025 ஆம் ஆண்டில் 150 பில்லியன் டாலர் மற்றும் 2030 ஆம் ஆண்டில் 300 பில்லியன் டாலர்களை வழங்குவதற்கான குறைந்தபட்ச இலக்கை, இந்த அறிக்கை பரிந்துரைக்கிறது.

மனிதர்களுக்கு ஏற்படும் நோய் மற்றும் இறப்பு, பல்லுயிர் பெருக்க இழப்பு போன்றவற்றை கணக்கிடுவது கடினம் என்றும், அறிக்கையில் இருப்பது ஒரு மதிப்பீடு மட்டுமே என்றும், அது மேலும் கூறியுள்ளது.

"காலநிலை நெருக்கடி இயல்பாகவே அநியாயமானது. இப்போது கார்பன் உமிழ்வதை நிறுத்த பணக்கார நாடுகளின் உதவி தேவை. எனவே இழப்பு மற்றும் சேதங்களுக்கு அவை நிதி வழங்க வேண்டும்,” என்று, மொசாம்பிக்கில் உள்ள ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் எர்த் இன்டர்நேஷனல் அமைப்பின் காலநிலை நீதி மற்றும் எரிசக்தி ஒருங்கிணைப்பாளர் திப்தி பட்நாகர் கூறினார்."காலநிலை கடனை திருப்பிச் செலுத்த வேண்டும். அது தெற்கு அரசுகளுக்கு (ஏழை மற்றும் நடுத்தர வருவாய் நாடுகள்) வர வேண்டும். அவை, தங்களது மக்கள் சந்திக்கும் காலநிலை நெருக்கடியைச் சமாளிப்பதற்கு பொறுப்பேற்க வேண்டும்" என்றார்.

உலகம் முழுவதும் கார்பன் உமிழ்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது; இது 2018இல் மிக அதிகளவை எட்டியதாக, 2019 நவம்பர் 28 இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது. அதிக கார்பன் உமிழ்வில் சீனா தற்போது முதலிடம் வகிக்கிறது; அடுத்து அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா உள்ளன. தனிநபரில் மிக அதிக கார்பன் உமிழ்வை கனடாவும், குறைந்த அளவாக இந்தியாவும் வெளியேற்றுவதாக, செப்டம்பர் 2019 இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை குறிப்பிட்டது.

"காலநிலை நெருக்கடி என்பது நமது காலத்தின் மிகப்பெரிய பங்கீட்டு சவால்" என்று இந்த அறிக்கை தயாரிப்பு அமைப்புகளில் ஒன்றான ஆக்சன் ஏய்ட் அமைப்பின் ஹர்ஜீத் சிங் கூறினார். "காலநிலை பேரழிவுகளுக்கு பொறுப்பேற்பதில் தற்போதைய, நியாயமற்ற போக்கானது வளரும் நாடுகளை மேலும் வறுமை மற்றும் கடனில் தள்ளுகிறது" என்றார் அவர். சி.ஓ.பி. 25 என்பது காலநிலை நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள அந்த நாடுகளுக்கு தங்கள் பொறுப்பை நிறைவேற்ற, பணக்கார நாடுகளுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகும் என்று சிங் கூறினார்.

விலகிய அமெரிக்கா; காணாமல் போன ஐ.யு. இலக்கு

காற்றில் உள்ள கார்பனை உறிஞ்சும் காடுகள் போன்ற கார்பன் மூழ்கிகளை அதிகரிப்பதன் மூலம், வரும் 2030 ஆம் ஆண்டளவில் கார்பன் உமிழ்வை கிட்டத்தட்ட பாதியாகக் குறைத்து பூஜ்ஜியத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று இலக்கை அடைய உலக நாடுகளை ஐ.நா. கேட்டுக் கொண்டுள்ளது.

பெரும்பாலான சிறிய தீவு நாடுகள் உட்பட 60-க்கும் மேற்பட்ட நாடுகள் ஏற்கனவே 2030-க்குள் கார்பன் நடுநிலை என்பதை எட்ட உறுதிபூண்டுள்ளன. இத்தனைக்கும் அந்த நாடுகள் எதுவும் பெரிய அளவில் கார்பன் உமிழ்ப்பவை அல்ல. ஐரோப்பா தனது காலநிலை இலக்குகளை இழக்கும் நிலையில், உலக வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் உயர்வு கொண்ட நாடுகளின் உமிழ்வு வெட்டுக்களைக் கோரும் 2015 பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகி உள்ளது - இது பேரழிவு மாற்றங்களுக்கு வழிவகுக்கும் குறைந்த இலக்கிற்கு வழிவகுக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

ஆயினும்கூட, உலகளாவிய வெப்பநிலை உயர்ந்து மழையின் வடிவங்களை மாற்றும்போது, உலகளாவிய உணவு முறைகளில் அழுத்தத்தை அதிகரிக்கிறது.பொருளாதார துயரங்கள் இடம்பெயர்வு நெருக்கடிக்கு தூண்டுகின்றன.

"உலகெங்கிலும் உள்ள பல லட்சம் மக்கள், காலநிலை நெருக்கடிக்கு அவர்கள் காரணமாக இல்லாத போதும் அதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்று, உலகளாவிய காலநிலை மாற்ற கொள்கையை வழிநடத்தும் கேர் (CARE) இண்டர்நேஷனல் அமைப்பின் ஸ்வென் ஹார்மெலிங் கூறினார். "ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் இருந்து ஐரோப்பா மற்றும் அமெரிக்கா வரை, இந்த சுமை ஏழை மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய, குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமியர் மீது அளவுக்கு மீறி விழுகிறது. காலநிலை பாதிப்புகளைக் குறைக்க நிதி திரட்டுதல் மற்றும் அனுமதிக்கப்படாதவர்களிடம் இருந்து மீள்வது தாமதமாகும் " என்று அவர் கூறினார்.

(ஷெட்டி, இந்தியா ஸ்பெண்ட் செய்திப்பணியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.