சண்டிகர்: சுக்விந்தர் சிங் தனது நண்பர்கள் செய்வதை பார்த்து தாமும் ஹெராயின் போதை மருந்து உட்கொள்ளத் தொடங்கினார். இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அவர் 33 வயதாக இருந்தபோது, கபுர்தலாவில் உள்ள மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதத் திட்டத்தின் கீழ் தினக்கூலியாக சம்பாதிக்க தொடங்கிய நேரத்தில் போது ஏற்பட்ட பழக்கம். ஹெராயின், 100 கிராம் பொட்டலம் சந்தையில் ரூ.300-400க்கு விற்கப்பட்டது; இது உழைப்பால் உடலுக்கு ஏற்படும் அலுப்புகள், கஷ்டங்களை தாங்கிக்கொள்ள உதவியதாக கருதினார். ஹெராயின் வாங்குவதற்கு பணம் குறைவாக இருக்கும்போது, வீட்டில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் போன்ற பொருட்களை அவர் விற்று அதை வாங்கிவிடுவார்.

நான்கு மாதங்களுக்கு முன்பு, கோவிட் -19 பரவுவதைத் தடுக்க பஞ்சாப் மாநிலத்தில் மார்ச் 23 அன்று ஊரடங்கு அமலுக்கு வந்தததும், ஹெராயின் வினியோகம் தடைபட்டது; அதன் விலைகள் உயர்ந்தன. "100 கிராம் பொட்டலம் ரூ. 10,000-க்கு வாங்கும்படி என்னிடம் கேட்கப்பட்டது," என்று, கபுர்தலாவில் உள்ள போதை அடிமை மீட்பு மையத்தில் இருந்து தொலைபேசி வழியாக இந்தியா ஸ்பெண்டிடம் சிங் தெரிவித்தார். “என்னால் அதை வாங்க முடியவில்லை. ஊரடங்கால் தினக்கூலி பெற்று சம்பாதிக்கவோ, வீட்டு உபயோகப் பொருட்களை விற்று காசு ஈட்டவோ என்னால் முடியவில்லை. போதைமருந்து இல்லாமல் உடல்வலியை என்னால் தாங்கமுடியவில்லை. அதுவே என்னை மறுவாழ்வு சிகிச்சையில் சேர வைத்தது” என்றார் அவர்.

மார்ச் 23 முதல் ஜூன் 19 வரையிலான 89 நாட்கள் ஊரடங்கு காலத்தில் பஞ்சாப் முழுவதும் 341 அரசு மற்றும் தனியார் போதைப்பொருள் மையங்களில் சேர்ந்த 1,29,000 நபர்களில் சிங் ஒருவர். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல், மாநிலத்தில் போதைப்பொருள் சிகிச்சையை நாடிய 5,44,000 பேரில், இந்த நபர்கள் 24% என்று மாநில அரசு கூறியுள்ளது.

மாநிலத்தில் உள்ள மருத்துவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், கோவிட்19 ஆல் போடப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், மாநிலத்தில் போதைப்பொருள் அபாயங்களை தடுக்க, நிர்வாகத்திற்கு ஒரு பொன்னான வாய்ப்பை தந்திருப்பதாக கருதுகின்றனர். "நடமாட கட்டுப்பாடுகள் உள்ளதால், போதைப்பொருள் விநியோகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன; போதைக்கு அடிமையானவர்களை சிகிச்சை பெற அது தூண்டுகிறது," என, பி.டி. அமிர்தசரஸ் அரசு மருத்துவக்கல்லூரியின் மனநல மருத்துவர் கார்க், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். "சட்ட அமலாக்கத்தில் இந்த கண்டிப்பு பராமரிக்கப்பட்டால், போதைப்பொருள் தடுப்பு திட்டத்தில் அரசு சிறப்பாக செயல்பட முடியும்" என்றார் அவர்.

தீவிரமான போதைபொருள் அச்சுறுத்தல்

உளவியல் ரீதியான போதைப்பொருட்களின் அத்துமீறல் என்பது இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக பஞ்சாபின் பெரும் துயராக உள்ளது. பாகிஸ்தானுடன் 553 கி.மீ. நீள எல்லையை பகிர்ந்து கொள்ளும் இந்த மாநிலம், ஆப்கானிஸ்தானில் இருந்து உலகளாவிய ஓபியேட் போதைப்பொருள் கடத்தலுக்கான ஒரு இடமாகவும், போக்குவரத்து பகுதியாகவும் உள்ளதாக, ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான அலுவலகம் (UNODC) தெரிவித்துள்ளது. போதைப்பொருட்களை கடத்த, அதை வர்த்தகப்பொருட்களில் மறைத்து வைப்பது, நதி வழியாகவும் நிலத்தடி சுரங்கங்கள் வழியாகவும் கொண்டு செல்வது உட்பட பல்வேறு வழிமுறைகளை கடத்தல்காரர்கள் நம்பி உள்ளனர்.

ஓபியம் சார்ந்த போதைப்பொருட்களான ஹெராயின் மற்றும் பாப்பி உமி, கஞ்சா மற்றும் மயக்கம் தரவல்ல மருந்துகள் ஆகியன, பஞ்சாப் மாநிலத்தில் அதிகளவு அத்துமீறி வினியோகிக்கப்படுகிறது என்று 2019 பிப்ரவரியில் வெளியான மாக்னிட்யூட் ஆஃப் சப்ஸ்டன்ஸ் அப்யூஸ் என்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017-18 ஆம் ஆண்டில் பஞ்சாபில் ஓபியாய்டு தொடர்பான பிரச்சினைகளுக்கு 7,20,000 பேருக்கு உதவி தேவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்று சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் அதே அறிக்கையை கூறியது; இது, அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் மற்றும் தேசிய மருந்து சார்பு சிகிச்சை மையத்துடன் இணைந்து வெளியிட்டது. கஞ்சா தொடர்பான பிரச்சினைகளுக்கு சுமார் 5,70,000 பேருக்கு உதவி தேவைப்படுகிறது; 2,00,000 பேர் மருந்து மயக்க மருந்துகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு உதவி தேவை என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்திற்கு (1,00,000) அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் 88,000 போதைப்பொருள் பயன்படுத்துபவர்களுடன் பஞ்சாப் உள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டில் நாட்டில் போதைப்பொருள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டம் 1985 (NDPS) இன் கீழ் பதிவுசெய்யப்பட்ட 11,654 வழக்குகளில், இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான வழக்குகளை பஞ்சாப் பதிவு செய்தது என்று தேசிய குற்றப்பதிவு பணியகத்தின் சமீபத்திய தரவு தெரிவிக்கிறது. நாடு முழுவதும் பதிவுசெய்யப்பட்ட இதுபோன்ற வழக்குகளில் இது 19% ஆகும்.

போதைப்பொருள் பஞ்சாபின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் பாதித்துள்ளது. 2017 சட்டமன்றத் தேர்தலின் போது அப்போதைய எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி ஆகியன போதைப்பொருள் கும்பலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததில் இது ஒரு முக்கிய பிரச்சினையாக இருந்தது என்பது புலப்படும். காங்கிரஸ் ஆட்சியை பிடித்த நிலையில், மாநில அரசு போதை மருந்துகளுக்கு எதிராக ஒரு சிறப்பு பணிக்குழுவை (STF) உருவாக்கி, மாநிலம் முழுவதும் 193 வெளிநோயாளர் ஓபியாய்டு உதவி சிகிச்சை (OOAT) கிளினிக்குகளைத் திறந்தது. போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மீது குற்றவியல் வழக்குத் தொடுப்பது, அடிமையானவர்களை மீட்டு மறுவாழ்வு அளிப்பது மற்றும் போதைப்பொருட்களுக்கு எதிராக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றை உறுதி செய்வது எஸ்.டி.எஃப் கட்டாயப்படுத்துகிறது. போதைக்கு அடிமையானவர்கள் மீது வழக்குத் தொடுப்பதற்கும் சிறையில் அடைப்பதற்கும் பதிலாக மறுவாழ்வு அளிப்பதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. சிறிய அளவில் போதைப்பொருள் உட்கொண்ட அல்லது வைத்திருக்கும் நபர்கள் சிகிச்சையைத்தேர்வு செய்தால், அவர்கள் வழக்கில் இருந்து விடுபடலாம் என்பதற்கு என்.டி.பி.எஸ் சட்டம் வழிவகை செய்கிறது.

மார்ச் 25 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த நாடு தழுவிய ஊரடங்கு, போதைப்பொருள் வர்த்தகத்தில் தடைகளை ஏற்படுத்தியது; ஏனெனில் போலீசாரும் பிற சட்ட அமலாக்க அதிகாரிகளும் தீவிர ஊரடங்கு உத்தரவு மற்றும் நாடு முழுவதும் போக்குவரத்திற்கு தடை விதித்தனர்.“கோவிட்-19 இல் இருந்து பெற்ற ஒரேயொரு நல்ல விஷயம், ஹெராயின் மற்றும் பிற மருந்துகளின் வினியோகம் தடைபட்டுள்ளன. நாங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளோம்,”என்று பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் ஏப்ரல் 10 அன்று காணொலி காட்சி மூலம் கூறினார்.

திரும்பப்பெறும் அறிகுறிகள் அடிமையாக்கப்பட்டவர்களை சிகிச்சை மையங்களுக்கு அழைத்துச் செல்கின்றன

போதைப்பொருள் இல்லாத நிலையில், அதற்கு அடிமையானவர்கள் உடல் ரீதியான எதிர்வினைகள் மற்றும் கடும் உடல்வலி, வாந்தி, தூக்கமின்மை, வயிற்றுப்போக்கு மற்றும் மூக்கு மற்றும் கண்ணில் நீர் வடிதல் போன்ற அறிகுறிகளை பெறுகிறார்கள். இந்த அறிகுறிகளை சமாளிக்க முடியாமல் சிகிச்சை பெறவும், வலியில் இருந்து விடுபடவும் அவர்களை கட்டாயப்படுத்துகிறது.

ஊரடங்கு அமலாக்கத்தை அறியாமலேயே போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களை உதவி பெற தூண்டியது இப்படித்தான். "கிராமம் ஒன்றில் நிறுத்தப்பட்டுள்ள போலீஸ்காரர்களிடம் இருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது; அங்கு நூற்றுக்கணக்கான போதை அடிமையாளர்கள் அங்கு கூடியிருந்தனர். மது அடிமைத்தனத்தில் இருந்து விடுபடும் சிகிச்சையைப் பெற அவர்கள் ஆசைப்பட்டனர்,”என்று அமிர்தசரஸ் அரசு மருத்துவக் கல்லூரியின் மனநல மருத்துவர் கார்க் கூறினார். “அவர்களின் சேவைக்காக ஆம்புலன்ஸ் அனுப்பப்பட்டது. பெரும்பாலான புதிய நோயாளிகள், ஹெராயினுக்கு அடிமையான இளைஞர்கள்” என்றார்.பஞ்சாப் மாநிலம் முழுவதும் போதைப்பொருள் மற்றும் மறுவாழ்வு மையங்கள் - 198 ஓஓஏடி மையங்கள், 35 அரசு போதை மருந்து மீட்பு மையங்கள் மற்றும் 108 உரிமம் பெற்ற தனியார் போதை மறுவாழ்வு மையங்கள் - இதேபோன்ற அழைப்புகளைப் பெற்றன மற்றும் கோவிட் 19 ஊரடங்கு காலத்தில் போதைக்கு அடிமையானவர்களின் வருகையை அதிகம் கண்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

"ஊரடங்கு காலத்தில் எங்கள் மையத்தில் புதிய நோயாளிகள் 10,000 பேர் இருந்தனர்," என்று கபூர்தலாவில் உள்ள சிவில் மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு சங்கமான நவ்கிரானின் பொறுப்பாளர் சந்தீப் போலா, இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். "பெரும்பாலானவர்கள், விண்ணை தொட்ட போதை மருந்துகளின் விலை உயர்வால் அதை வாங்க முடியாமல் அதற்கு பதிலாக மறுவாழ்வு சிகிச்சையைத் தேர்ந்தெடுத்தனர்" என்றார்.

போதைக்கு அடிமையானவர்களுக்கு உரிய மீட்பு மருந்துகளை விநியோகிப்பதற்காக அருகில் உள்ள 14 கிராமங்களுக்கு சுற்றுப்பயணம் செய்ய, நடமாடும் வேன் சேவைக்கு நவ்கிரன் அமைப்பு அழுத்தம் கொடுத்தது. "ஊரடங்கு உத்தரவால் மையத்திற்கு வரமுடியாத மக்களைச் சென்றடைய, இது உதவியதுடன் சமூக இடைவெளி விதிமுறைகளுக்கு உட்படுவதையும் உறுதிசெய்தது" என்று போலா கூறினார்.

களத்தில் மருந்துகளின் பற்றாக்குறை இருப்பது, போலீசாரின் ஆவணப் பதிவுகளில் பிரதிபலித்தது. மாநிலம் முழுவதும் என்டிபிஎஸ் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் பாதி குறைந்துவிட்டன, கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 39% குறைந்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் 23 முதல் மே 28 வரை, 854 வழக்குகளை பதிவு செய்ததுடன் 1,355 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்; இது 2019 ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் 1,679 வழக்குகள் மற்றும் 2,250 பேர் கைது என்பதைவிட குறைவு என்று, போதைப்பொருட்களுக்கு எதிரான சிறப்பு பணிக்குழுவில் துணை ஆய்வாளர் ஜெனரல் சஞ்சீவ் குமார் ராம்பால் கூறுகிறார்.

"ஊரடங்குக்கு முன்பே போதைப்பொருள் கும்பலை தடுப்பதில் நாங்கள் வெற்றி பெற்றோம்; போதைப்பொருள் கைப்பற்றும் நடவடிக்கைகளை வலுப்படுத்துவதில் தொடர்ந்து செயல்படுவோம்" என்று போதைப்பொருட்களுக்கு எதிரான எஸ்.டி.எஃப் தலைவரான ஹர்பிரீத் சிங் சித்து இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

போலீசாருக்கு தொடர்பு

எஸ்.டி.எஃப்- இன் பணி முடிந்துவிட்டது. பல கிராமங்களில் கோவிட்19 பரவுவதைத் தடுப்பதற்காக அமைக்கப்பட்ட சோதனைச்சாவடிகளை நிர்வகித்து வந்த விழிப்புணர்வு குடியிருப்பாளர்கள், போலீஸ் நண்பர்கள் உட்பட போதைப்பொருள் நடமாட்டத்தை கண்காணிக்க உதவினர். உதாரணமாக, பதிந்தா மாவட்டத்தின் மான்சா கலான் கிராமத்தில், ஏப்ரல் 4 ஆம் தேதி ஒரு குடியிருப்பாளரிடம் இருந்து போதைப்பொருள் சேகரிக்க வந்திருந்த மூன்று பேருடன் கிராமவாசிகள் ஒரு கான்ஸ்டபிளை மடக்கி பிடித்தனர்.இதேபோல், பதீண்டா மாவட்டத்தில் உள்ள பாண்டி கிராமத்தில், ஹெராயின் மற்றும் போதிய மருந்து மாத்திரைகள் வைத்திருந்ததற்காக இரண்டு மாத காலத்திற்குள் 10 பேர் சோதனைச் சாவடிகளில் கைது செய்யப்பட்டதாக, கிராமத்தலைவர் (சர்பஞ்ச்) பகதூர் சிங் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

பஞ்சாபின் போதைப்பொருள் வர்த்தகத்தில் காவல்துறையினர் சிலரின் தொடர்பு நன்கு ஆவணப்படுத்தப்பட்டு உள்ளது. 2019 ஆம் ஆண்டில், முன்னாள் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜகதீஷ் சிங் போலாவுக்கு, பல கோடி போதைப்பொருள் மோசடியில் ஈடுபட்டதற்காக 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஏப்ரல் 2017 முதல் 2020 ஏப்ரல் 30 வரை, பஞ்சாப் காவல்துறை தனது சொந்த பணியாளர்களில் 148 பேர் மீது 114 கிரிமினல் வழக்குகளை பதிவு செய்ததுடன், 61 பேருக்கு எதிராக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது. அதே காலகட்டத்தில் 47 காவல்துறையினர் பணிநீக்கம் செய்யப்பட்டனர், மேலும் 17 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

என்.டி.பி.எஸ் வழக்குகளின் எண்ணிக்கை குறைந்து வருவதும், ஊரடங்கின் போது சிகிச்சை பெற விரும்பும் போதைப்பொருள் அடிமைகளின் எண்ணிக்கையும் போதைப்பொருள் பிரச்சினைக்கு அரசு தீர்வு கண்டிருப்பதை குறிக்கவில்லை என்று விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். "அதிக விலையை செலுத்தக்கூடியவர்களுக்கு ஊரடங்கின் போது போதைப்பொருட்கள் தாராளமாக கிடைத்தன," என்று எதிர்க்கட்சித் தலைவர் ஹர்பால் சிங் சீமா, சட்டசபையில் கூறினார். "கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலோர் சிறிய அளவில் பயன்படுத்துவோர் தானே தவிர, பணம் சம்பாதிக்கும் போதைப்பொருள் பிரபுக்கள் அல்ல. அரசியல்வாதிகள், காவல்துறை மற்றும் போதைப் பொருள் வர்த்தகர்கள் இடையேயான தொடர்பு முறிந்து போகும் வரை இந்த பிரச்சனை தீராது” என்றார்."முன் எப்போதும் இல்லாதவகையில் நோயாளிகளின் வருகையை சமாளிக்க சுகாதாரத்துறை இந்த சந்தர்ப்பத்தில் பயன்படுத்திக் கொண்டிருந்தாலும், போதைப்பொருள் வர்த்தகத்தை சரிபார்க்க அரசு இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டும்; இதற்காக காவல்துறையில் உள்ள கறுப்பு ஆடுகளுக்கு நன்றி செலுத்துகிறது" என்று பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் வினீத் ஜோஷி கூறினார்.

போதை மருந்தில் மோசடி

திரும்ப உபயோகிக்கும் அறிகுறிகளைப் போக்க ஓபியாய்டுக்கு அடிமையான நோயாளிகளுக்கு புப்ரெனோர்பைன்-நலோக்சோன் என்ற மாத்திரைகளின் கலவை வழங்கப்படுகிறது. இருப்பினும், நோயாளிகள் இந்த மருந்துக்கு அடிமையாகலாம், அதனால்தான் அதன் பயன்பாடு மருத்துவ மேற்பார்வையின் கீழ் மட்டுமே வழங்க அறிவுறுத்தப்படுகிறது.

இந்த மருந்துகளின் வெவ்வேறு எடுத்துக்கொள்ளும் அளவுகளை பஞ்சாப் அரசு பரிசோதித்துள்ளது; போதைக்கு அடிமையானவர்கள் ஆரம்பத்தில் தினசரி நுகர்வுக்கு மாத்திரைகள் பெறுகிறார்கள், பின்னர் வாராந்திர நுகர்வுக்கு அதிக மாத்திரைகள் கிடைக்கும். "குறுகிய கால அளவு மருந்து உட்கொள்ளுதல், சிகிச்சையை சிறப்பாக கண்காணிக்க உதவுகிறது," என்று போலா கூறினார். இருப்பினும், ஊரங்கின் போது, மருத்துவமனைகளுக்கான வருகையை குறைப்பதற்கும், கோவிட்19 பரவலை தடுக்கும் நோக்கிலும் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் அளவு 21 நாட்களாக அதிகரிக்கப்பட்டது.

இந்த மருந்துகளை அரசால் நடத்தப்படும் புனர்வாழ்வு மையங்களில் இருந்து இலவசமாகப் பெறும் போதைக்கு அடிமையானவர்கள் சிலர், அதை அதிக விலைக்கு மறுவிற்பனை செய்வதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். கடந்த ஆண்டின் பிற்பகுதியில், தனியார் மது அடிமை மறுவாழ்வு மையங்களால் வாங்கப்பட்ட அல்லது விநியோகிக்கப்பட்ட மாத்திரைகளில் கிட்டத்தட்ட 70% கணக்கில் வராதவை என்று மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகம் கண்டறிந்தது. இது குறித்து விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்தது.

நிச்சயமற்ற எதிர்காலம்

"மாநிலம் இன்னும் ஒரு பகுதி ஊரடங்கு உத்தரவின் கீழ் உள்ளது, போதைப்பொருள் வியாபாரத்தின் நிலமையை சரிபார்க்க காவல்துறை கடுமையாக உழைத்து வருகிறது" என்று மாநில சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் பல்பீர் சிங் சித்து, இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். "போதைப்பொருள் தடுப்பு திட்டத்தில் சேர்ந்தவர்கள் வெளியேறாமல் இருப்பதை உறுதி செய்ய மருத்துவச்சிகிச்சையில் புதிய முறைகளை நாங்கள் கொண்டு வருவோம்" என்றார்.ஊரடங்கை, ஒரு ஆசீர்வாதம் என்ற மாற்று கண்ணோட்டத்தில் பாண்டி கிராமத்தலைவர் சிங் கருதுகிறார். "பல போதை அடிமைகள் இப்போது பொருள் இல்லாமல் உள்ளனர்; முன்பு வேலையில்லாமல் இருந்தவர்கள் கூட தற்போது தினக்கூலி தொழிலை மேற்கொண்டுள்ளனர்," என்று அவர் கூறினார். "கிராம ஊராட்சிகள் மூலம் கிடைக்கும் சமூக ஆதரவு மட்டுமே போதைப்பொருள் அச்சுறுத்தலை குடும்பங்களால் சமாளிக்க முடியும்; அத்துடன் ஊரடங்கு எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பை அளித்தது" என்றார்.

பஞ்சாப் எல்லைகளைத் திறந்து, நடமாடுவதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்துவதால், இப்போது மக்கள் மீண்டும் போதைக்கு அடிமையாகவும், பொருளாதார நிச்சயமற்ற தன்மையை அடுத்து போதைப்பொருட்களை மீண்டும் பயன்படுத்துவதை நோக்கி மீண்டும் செல்லும் அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது. மாநிலத்தின் சமீபத்திய பொருளாதார கணக்கெடுப்பு (2019-20) படி, பஞ்சாபில் இளைஞர்களின் வேலையின்மை விகிதம் 2017-18 ஆம் ஆண்டில் 21.6% ஆக இருந்தது, இது தேசிய சராசரியான 17.8% ஐ விட அதிகம். ஊரடங்கு அதிக இளைஞர்களை வேலையில் இருந்து வெளியேற்றி இருக்கலாம்.

கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டவுடன் வருமானம் மற்றும் வேலையின்மை ஆகியவற்றை ஈடுசெய்ய அதிக எண்ணிக்கையிலான மக்கள் சட்டவிரோத நடவடிக்கைகளை நாடலாம் என்று கோவிட்-19 மற்றும் மருந்து வழங்கல் தொடர் சங்கிலி பற்றிய ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான அலுவலக அறிக்கை கூறுகிறது. போதைப்பொருள் வாங்க முடியாத பல வேலையற்றவர்கள், அதன் வர்த்தகத்தில் ஈர்க்கப்படலாம், இதனால் அவர்கள் சரக்குகளின் ஒரு பகுதியாக தங்கள் தீர்வைப் பெற முடியும்.

"கடந்த மூன்று தசாப்தங்களாக மாநிலத்தின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருகிறது; முதலில் போர்க்குணம் மற்றும் பின்னர் 1990-களில் தாராளமயமாக்கல் காரணமாக உள்நாட்டு தொழில்துறையை பாதித்தது," என்று ஆர்.எஸ். சண்டிகரில் உள்ள கிராம மற்றும் தொழில்துறை மேம்பாட்டு ஆராய்ச்சி மையத்தின் குமான், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். "மருந்து வணிகம் அதே காலகட்டத்தில் விரிவடைந்தது, அதிக பணம் சம்பாதிக்க விரும்புவோருக்கு இலாபகரமான விருப்பத்தை வழங்குகிறது. கோவிட்19 காரணமாக ஏற்பட்டுள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடி சரிசெய்யப்படாவிட்டால், அந்த இடத்தை போதைப்பொருள் வர்த்தகம் த்திற்கு மற்றொரு நிரப்புதலைக் கொடுக்கும்” என்றார்.

(மோத்கில், சண்டிகரை சேர்ந்த சுதந்திர பத்திரிகையாளர். எடிட் செய்வதவர், மரிஷா கார்வா).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளைrespond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கண நடை கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.