புதுடெல்லி: காலநிலை மாற்றத்தை ஏற்படுத்தும் பசுமை இல்ல வாயுக்கள் (GHG) உமிழ்வை உலகம் வெகுவாகக் குறைக்க வேண்டும்; ஆனால் உண்மையில் 2018 ஆம் ஆண்டில் இது புதிய உயர்வை எட்டியதாக ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கை தெரிவிக்கிறது.

பசுமை இல்ல வாயுக்கள் உமிழ்வு, 2018 ஆம் ஆண்டில் 55.3 ஜிகா டன்னாக அதிகரித்தன. இந்த விகிதம் தொடர்ந்தால் அடுத்த ஒன்பது ஆண்டுகளில் உலக வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த 81 ஆண்டுகளில் 480 ஜிகா டன் நச்சு வாயுக்கள் பரவியிருக்கக்கூடும்.

கடந்த 2018 வரையிலான 10 ஆண்டுகளில், பசுமை இல்ல வாயுக்கள் உமிழ்வு ஆண்டுதோறும் 1.5% உயர்ந்துள்ளது. 2030 வரையிலான 10 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் அவை 7.6% வீழ்ச்சியடையாவிட்டால், 2015 பாரிஸ் ஒப்பந்தத்தின்படி உலக வெப்பமயமாதலை 1.5 டிகிரி செல்சியஸ் ஆக கட்டுப்படுத்த முடியாது என்று, 2019 நவம்பர் 26 இல் தொடங்கப்பட்டஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP - யுஎன்இபி) உமிழ்வு இடைவெளி அறிக்கை கூறுகிறது.

இதன் கண்டுபிடிப்புகள் "இருண்டவை"; பசுமை இல்ல வாயுக்கள் உமிழ்வை தடுப்பதில் உள்ள உலகளாவிய தோல்வியை ஈடுசெய்ய ஆழமான மற்றும் வேகமான உமிழ்வு குறைப்புகள் தேவைப்படும் என்கிறது அறிக்கை.

"புதிய காலநிலை கடமைகள் வரும்போது, நடவடிக்கைகளை முடுக்கிவிட 2020 இறுதி வரை நாடுகள் வெறுமனே காத்திருக்க முடியாது என்பதை இது காட்டுகிறது" என்று யுஎன்இபி நிர்வாக இயக்குனர் இங்கர் ஆண்டர்சன் அறிக்கையில் தெரிவித்தார். "நாடுகள் - ஒவ்வொரு நகரம், பிராந்தியம், வணிகம் மற்றும் தனிநபர் - என்று இப்போது செயல்பட வேண்டும். நாம் இதைச் செய்யாவிட்டால், 1.5° செல்சியஸ் குறைப்பு என்ற இலக்கு 2030ஆம் ஆண்டுக்கு முன்னர் எட்டாது” என்றார் அவர்.

மேலும், ஜி 20 குழுவின் பல நாடுகள் (இவை உலகளாவிய பசுமை இல்ல வாயுக்கள் உமிழ்வுகளில் 78% பங்கைக் கொண்டுள்ளன), 2015 பாரிஸ் ஒப்பந்தத்தில் தேசிய தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள் (என்.டி.சி) படி உமிழ்வைக் குறைப்பதாக அவை அளித்த வாக்குறுதிகளைத் தவறவிட்டன. எனினும், நான்காவது பெரிய உமிழ்வை கொண்டுள்ள இந்தியா, தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட அதன் இலக்கை அடைவதற்கான பாதையில் உள்ளது. உலகளாவிய வெப்பநிலையை 1.5 - 2 டிகிரி செல்சியசாக கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த ஒப்பந்தம் பற்றி நாங்கள் மேலும் விளக்குகிறோம்.

உமிழ்வு இடைவெளி அறிக்கை (இது காலநிலை மாற்றம் தொடர்பாக ஸ்பெயினில் டிசம்பர் 2, 2019இல் தொடங்கும் 25வது மாநாட்டை (COP25) முன்னிட்டு வெளியாகிறது) தற்போதைய மற்றும் மதிப்பிடப்பட்ட எதிர்கால பசுமை இல்ல வாயுக்கள் உமிழ்வு குறித்த அறிவியல் ஆய்வுகளின் சமீபத்திய மதிப்பீட்டை வழங்குகிறது. பாரிஸ் ஒப்பந்த இலக்குகளை அடைவதற்கான மிகக் குறைந்த செலவில் உலகம் முன்னேற அனுமதிக்கப்பட்ட அளவுகளுடன் இது ஒப்பிடுகிறது.

தற்போதைய உமிழ்வு அளவு தொடர்ந்தால், 2100 க்குள் உலக வெப்பம் 3.9 டிகிரி-சி இருக்கும்

"அடுத்த சில ஆண்டுகளில் பசுமை இல்ல வாயுக்கள் உமிழ்வு உயர்வதற்கான அறிகுறி எதுவும் இல்லை; ஒத்திவைக்கப்பட்ட ஒவ்வொரு ஆண்டும் தீவிரமான மற்றும் வேகமான உமிழ்வு குறைப்பு தேவைப்படுகிறது என்பதாகும் ”என்று உமிழ்வு இடைவெளி அறிக்கை தெரிவித்துள்ளது.

தற்போதைய உமிழ்வு அளவு தொடர்ந்தால் உலக வெப்பநிலை 2100ஆம் ஆண்டுக்குள் 3.4 - 3.9 டிகிரி செல்சியஸ் உயரும் என்று எதிர்பார்க்கலாம். இது சூறாவளிகள், காட்டுத்தீ, வறட்சி, வெள்ளம் போன்ற அழிவைத்தரக்கூடிய காலநிலை தாக்கங்களை கொண்டு வரும் என்று அந்த அறிக்கையின் முடிவு தெரிவிக்கிறது.

பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் அனைத்து நாடுகளும் தங்களின் தேசிய தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளை (என்.டி.சி) சந்தித்தாலும், 2030 ஆம் ஆண்டளவில் ஆண்டு உமிழ்வு 56 ஜிகா டன்னை எட்டும் என்று அந்த அறிக்கை கூறியுள்ளது. இது நூற்றாண்டின் இறுதியில் 3.0 - 3.2 டிகிரி செல்சியஸ் வெப்பமான உலகத்திற்கு வழிவகுக்கும்.

உலக வெப்பநிலையின் உயர்வை 1.5 டிகிரி செல்சியஸ் ஆக கட்டுப்படுத்த, 2030 ஆம் ஆண்டில் வருடாந்திர பசுமை இல்ல வாயுக்கள் உமிழ்வு தற்போதைய தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளில் குறிப்பிடுவதை விட 32 ஜிகா டன் குறைவாக இருக்க வேண்டும் - இது 57% குறைப்பு. இதேபோல் 2030 ஆம் ஆண்டில் வருடாந்திர உமிழ்வு 2 டிகிரி செல்சியஸ் இலக்கிற்கு 15 ஜிகா டன் குறைவாக இருக்க வேண்டும் - இது 27% சரிவு. வருடாந்திர அடிப்படையில், இதன் பொருள் 2020 மற்றும் 2030ஆம் ஆண்டுக்கு இடையில் 7.6% உலகளாவிய உமிழ்வு 1.5 டிகிரி செல்சியஸ் இலக்கை அடையவும்; 2 டிகிரி செல்சியஸ் இலக்கை அடைய 2.7% ஆகவும் குறைக்கப்படுகிறது என்பதாகும்.

இந்த உமிழ்வு குறைப்புகளை நிறைவேற்ற, 1.5 டிகிரி செல்சியஸ் என்ற இலக்கை அடைய தீர்மானிக்கப்பட்ட பங்களிப்பு லட்சியங்கள் குறைந்தது ஐந்து மடங்கு உயர்த்தப்பட வேண்டும்; மேலும் 2020 க்குள் 2 டிகிரி செல்சியஸ் இலக்கை அடைய மூன்று மடங்கு முயல வேண்டும் என்று அறிக்கை கூறுகிறது.

கடந்த 2010ஆம் ஆண்டிலேயே காலநிலை நடவடிக்கைகளை தீவிரமாக தொடங்கி இருந்தால், 2° செல்சியஸ் மற்றும் 1.5 ° செல்சியசுக்கு திட்டமிடப்பட்ட உமிழ்வு அளவை பூர்த்தி செய்ய தேவையான சராசரி ஆண்டு குறைப்புகள் முறையே 0.7% மற்றும் 3.3% ஆக இருந்திருக்கும் என்று அறிக்கை தெரிவிக்கிறது.

ஜி 20 நாடுகளுடன் நம்பிக்கை உள்ளது

இந்த அறிக்கை, ஜி 20 உறுப்பு நாடுகளில் கவனம் செலுத்துகிறது. ஏனெனில், நாம் முன்பு கூறியது போல் அவை உலகளாவிய பசுமை இல்ல வாயுக்கள் உமிழ்வில் 78% கொண்டிருக்கின்றன. இதனால், 2030 உமிழ்வு இடைவெளி எந்த அளவிற்கு குறைக்கப்படும் என்பதை இந்த நாடுகள் தீர்மானிக்கும்.

ஆறு உறுப்பினர்கள் (சீனா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, மெக்ஸிகோ, ரஷ்யா மற்றும் துருக்கி) தற்போதைய கொள்கைகளுடன் தங்கள் தேசிய தீர்மானிக்க வேண்டிய பங்களிப்பு இலக்குகளை பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளன. இதில் இந்தியா, ரஷ்யா மற்றும் துருக்கி ஆகியன தங்களின் உமிழ்வு குறைப்பு இலக்குகளை 15% அதிகப்படுத்தக்கூடும்.

இந்தியா தனது முயற்சிகளை விரைவுபடுத்த வேண்டும்

இந்தியாவின் தேசிய தீர்மானிப்பு பங்களிப்பு பின்வருவனவற்றை உள்ளடக்குகிறது:

  • புதைபடிவமற்ற எரிபொருள் மூலங்களில் இருந்து நிறுவப்பட்ட மின்சார திறனில் 40% அடைதல்
  • வரும் 2030ஆம் ஆண்டுக்குள் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் உமிழ்வு தீவிரத்தை 33 - 35% (2005 அளவில் இருந்து) குறைத்தல்
  • வனம் வளர்ப்பு மற்றும் மரங்களை நடுவதன் மூலம் கூடுதலாக 2.5 - 3 பில்லியன் டன் கார்பன் மூழ்கி [கார்பன் டை ஆக்சைடு குவித்து சேமிப்பவை] உருவாக்குதல்.

இந்தியாவின் முன்னேற்றம் அதன் தேசிய தீர்மானிக்க வேண்டிய பங்களிப்புகளை கணிசமாக அதிகரிக்கக்கூடும் என்பதை குறிப்பதாக கூறும் அந்த அறிக்கை, இதை அடைய முடியும் என்றும் கீழ்கண்டவாறு பரிந்துரைத்தது:

  • நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களை மாற்றத்திட்டமிடல்
  • பூஜ்ஜிய-உமிழ்வு தொழில்நுட்பங்களை நோக்கி பொருளாதார அளவிலான பசுமை தொழில்மயமாக்கல் உத்திகளை உருவாக்குதல்
  • வெகுஜன மக்களின் பொது போக்குவரத்து அமைப்புகளை விரிவுபடுத்துதல்
  • உள்நாட்டு மின்சார வாகன இலக்குகளை உருவாக்குதல் மற்றும் பூஜ்ஜியம் உமிழ்வு வகை கார்களின் 100% புதிய விற்பனையை நோக்கி செயல்படுவது.

இருப்பினும், உலகின் முக்கிய பொருளாதார நாடுகள் வாக்குறுதி அளித்தவாறு உமிழ்வு வெட்டுக்களில் இருந்து பின்வாங்குகின்றன. ஏழு ஜி-20 உறுப்பு நாடுகள் (ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, ஜப்பான், கொரியா குடியரசு, தென்னாப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா) தங்கள் தேசிய தீர்மானிக்க வேண்டிய பங்களிப்புகளை அடைய பல்வேறு அளவிலான நடவடிக்கைகள் தேவை என்று அறிக்கை தெரிவித்துள்ளது.

கடந்த 2009இல், ஜி-20 உறுப்பு நாடுகள் படிப்படியாக புதைபடிவ எரிபொருள் மானியங்களை அகற்றுவதற்கான முடிவை ஏற்றுக்கொண்டன. ஆனால் அவற்றில் எதுவும் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அவற்றை முழுமையாக குறைப்பது பற்றி இன்னும் உறுதியளிக்கவில்லை. உலகளவில், ஒட்டுமொத்த உமிழ்வுகளில் ஆதிக்கம் செலுத்தும் எரிசக்தி மற்றும் தொழில்துறை துறைகளில் புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டில் இருந்து கார்பன் டை ஆக்சைடு மையப்படுத்தப்பட்ட பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வு, 2018 ஆம் ஆண்டில் 2% அதிகரித்து, சாதனை அளவாக ஆண்டுக்கு 37.5 ஜிகா டன்களை எட்டியுள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(திரிபாதி, இந்தியா ஸ்பெண்ட் செய்திப்பணியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.