பெங்களூரு: மாமியாருடன் வாழ்வது, மருமகளின் நடமாட்டம் மற்றும் வீட்டுக்கு வெளியே சமூக தொடர்புகளை உருவாக்கும் திறனைக் கட்டுப்படுத்துகிறது; சுகாதாரச்சேவை மற்றும் குடும்பக் கட்டுப்பாடு முறை அணுகலைக் குறைக்கிறது என்று உத்தரப்பிரதேசத்தின் ஜான்பூர் மாவட்டத்தில் திருமணமான பெண்களின் தரவுகளை பகுப்பாய்வு செய்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

மருமகள் கர்ப்பமடைவது, அவர் எத்தனை குழந்தைகளை பெற விரும்புகிறார் என்பதிலும் மருமகளின் பார்வை ஒத்துவராவிட்டால், மாமியாரின் எதிர்மறை செல்வாக்கே அதில் வலுப்பெறுகிறது என, 28 கிராமங்களில் 698 வீடுகளை சேர்ந்த 18-30 வயதுக்குட்பட்ட திருமணமான பெண்களிடம் நடத்திய ஆய்வின் முதன்மைத் தரவை பகுப்பாய்வு செய்தில் தெரியவருகிறது.

பெண்கள் தங்களது மாமியாருடன் வாழ்வதன் நேரடி விளைவாக, தங்கள் குடும்பத்திற்கு வெளியே ஒருசில தோழியரையே கொண்டுள்ளனர்; 2020 ஜனவரியில் கூட்டணி சமூக அறிவியல் சங்கத்தின் (அஸ்ஸா) 2020 ஆண்டு கூட்டத்தில் அளிக்கப்படும் இரண்டாண்டு ஆய்வின் ஆரம்ப முடிவுகள் இதை காட்டுகிறது.

"பெண்களுக்கு ஏன் இத்தகைய குறைவான வெளித்தொடர்புகளே உள்ளன என்பதை நாங்கள் ஆராயத் தொடங்கினோம். அவர்கள் மாமியாருடன் வாழ்கின்றனரா என்று பார்க்கத் தொடங்கினோம்" என்று பாஸசன் கல்லூரியின் பொருளாதார உதவி பேராசிரியரும், ஆய்வின் இணை ஆசிரியருமான எஸ்.அனுக்ரிதி கூறினார்.

இது, அதன் முதல் ஆய்வுகளில் ஒன்றாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினர்; முந்தைய ஆய்வுகள், வாழ்க்கைத் துணையுடன் உடன்படாதபோது குடும்பக் கட்டுப்பாட்டில் ஏற்படும் தாக்கத்தை மையமாக கொண்டிருந்தது. இது ஜான்பூர் சமூக வலைப்பின்னல் ஆய்வு என்ற பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

தனிமைப்படுத்தப்பட்ட பெண்கள்

கணவர் மற்றும் மாமியார் ஆகியோருடன் வழக்கமான தொடர்பு தவிர, திருமணமான பெண்கள் மிகவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்வு கண்டறிந்துள்ளது. ஜான்பூரில் ஒரு திருமணமான பெண், சராசரியாக தனது குடும்ப வட்டத்திற்கு வெளியே 1.6 நபருடன் மட்டுமே உரையாடினார். ஒரு சராசரி அமெரிக்கப் பெண்ணுக்கு 7.9 நெருங்கிய நண்பர்கள் உள்ளனர் என்று பத்து ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்ட கேலப் கணக்கெடுப்பு கூறியது.

இனப்பெருக்க சுகாதாரம், கருவுறுதல் மற்றும் குடும்பக் கட்டுப்பாடு போன்ற தனிப்பட்ட விஷயங்களில், பெண்கள் குறைந்த எண்ணிக்கை தோழியருடனே - சராசரி 0.7 நபர்கள் - பேசினர்.

ஜான்பூரில் மூன்று பெண்களில் ஒருவர் அல்லது கிட்டத்தட்ட 36% பேர் நெருங்கிய சகாக்களை கொண்டிருக்கவில்லை. ஒவ்வொரு ஐந்து பெண்களில் ஒருவர் அல்லது தோராயமாக 22% பேருக்கு நெருங்கிய தோழி இல்லை. பெண்களுக்கு இருந்த சிலரும் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, அதே சாதியினரும் கூட; 75% பேர் இதேபோன்ற பொருளாதார பின்னணியை கொண்டிருந்தவர்கள். இது இணை ஜோடி அமைப்பில் முழுமையான ஒருமுகத் தன்மையை சுட்டிக்காட்டுகிறது.

ஒட்டுமொத்தமாக பார்த்தால், பெண்கள் கடும் நடமாடும் கட்டுப்பாடுகளை அனுபவித்தனர்; 14% மட்டுமே சுகாதார அணுகலுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்; 12% பேர் மட்டுமே குடும்பத்தினரையும் நண்பர்களையும் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.

இந்த ஆய்வு, மாமியாருடன் வாழ்ந்த பெண்களை கவனித்தது; அவர்கள் கிராமத்தில் 18% குறைவான நண்பர்களை கொண்டிருப்பதையும், அவர்களுடன் ஆரோக்கியம், கருவுறுதல் மற்றும் குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான பிரச்சினைகளைப் பற்றி விவாதித்ததையும் கண்டறிந்தது. இது, மாமியாருடன் வாழாத, வீட்டிற்கு வெளியே தோழிகளை கொண்டிருந்தவர்கள் 36% பெண்கள் என்பதுடன் குறைவானது ஆகும்.

இனப்பெருக்க விருப்பங்கள்

ஆராய்ச்சியாளர்கள் கேட்டனர்: ஒரு மருமகளின் சமூக தொடர்புகளை மாமியார் ஏன் கட்டுப்படுத்துகிறார்? மாமியாரின் நடவடிக்கைகள் ஒரு ஆண் பேரக்குழந்தை அல்லது தான் விரும்பும் எண்ணிக்கையில் மருமகள் குழந்தை பெற்றுத் தர வேண்டும் என்ற எண்ணிக்கையால் இயக்கப்படுவது இதில் தெரிய வருகிறது.

மாமியாருடன் வசிக்கும் மருமகள், குடும்பக் கட்டுப்பாடு கிளினிக்கிற்கு வருவது 50% குறைவாகவும்; நவீன கருத்தடைகளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு 12.5% குறைவாகவும் உள்ளது.

வீட்டிற்கு வெளியே குறைந்த நபர்களையே சந்திக்கும் ஒரு பெண்ணிற்கு, சமூகம் குடும்பக் கட்டுப்பாடு முறைகளை எவ்வாறு கருதுகிறது, அல்லது கிளினிக்கிற்கு செல்வதற்கான ஆதரவை தனக்கு தருகிறதா என்பது அவளுக்குத் தெரியாது. தோழியருடனான தொடர்பு ஒரு பெண்ணின் தன்னம்பிக்கை, அவரது விருப்பங்களை மேம்படுத்த உதவியதை ஆய்வு கண்டறிந்துள்ளது.

"அடிப்படையில் மருமகள் வெளியில் இருப்பவர்களுடன் தொடர்பு கொள்வதை மாமியார் தடுக்க முயற்சிக்கிறார் என்று தோன்றுகிறது. ஏனெனில், குடும்பக் கட்டுப்பாடு முறைகளை பின்பற்றுவதில் அல்லது கருவுறுதலை மருமகள் ஆதிக்கம் செலுத்துவதை மாமியார் விரும்பவில்லை. மாமியார் மருமகளிடம் எதிர்பார்ப்பது வித்தியாசமானது,” என்றார் அனுக்ரிதி.

இந்திய சமுதாயத்தின் ஆழ்ந்த ஆணாதிக்கத்தைப் பற்றிய புரிதலுடன் கூடிய வல்லுநர்கள், இந்த விஷயத்தில் மாமியாரைக் குற்றம் சாட்டுவது வெளிப்படையாக தெரிந்தாலும், அவரே ஆணாதிக்கத்திற்கு இரையாவதாக நம்புகிறார்கள். "ஒரு ஆணாதிக்க சமுதாயத்திற்குள் பெண்கள் உரிய வயதை அடையும் போது, அதிகாரத்தையும் சலுகையையும் மட்டுமே பெறுகிறார்கள். அவர்கள் குழந்தைகளைப் பெற்றெடுத்தால்தான் அந்த அதிகாரமும் சலுகையும் கிடைக்கும்” என்று மும்பை டிஐஎஸ்எஸ்-இல் உள்ள மீடியா மற்றும் கலாச்சார ஆய்வுகள் பள்ளியின் பேராசிரியர் லட்சுமி லிங்கம் கூறினார். “மேலும், அவர்கள் ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்திருந்தால் மட்டுமே. இது ஒருவகை சலுகை” என்றார்.

பல தெற்காசிய நாடுகளான பாகிஸ்தான், நேபாளம் போன்றவற்றிலும் இது பொதுவானது, அவை ஆணாதிக்க இயல்புடையவை.

ஆணாதிக்கம் கொண்ட பெண் போலீஸ்

‘மம்மிஜி எபெக்ட்’ என்ற சொல் முதன்முதலில் தி எகனாமிஸ்ட் இதழால் இந்திய மாமியார் குறித்த 2013 ஆம் ஆண்டு கட்டுரையில் பயன்படுத்தி பிரபலமானது. மருமகளுக்கு எதிரான கொடுமைகளில் அவர்களின் பங்கு அதில் நன்கு ஆவணப்படுத்தப்பட்டு’ இருந்தது. "ஒரு மாமியார் அடையாளம் மற்றும் சாதனைகள், மகன் மற்றும் தனது கணவரிடம் இருந்து மட்டுமே வந்தால், அவர் அடிப்படையில் மருமகளுடன் ஏட்டிக்கு போட்டி செய்ய வேண்டும்," என்று லிங்கம் கூறினார்; மாமியாரை ஆணாதிக்கம் கொண்ட பெண் போலீஸ் என்று அழைத்தார். "நீங்கள் எப்போதுமே அடிபணிதல் மற்றும் சமர்ப்பிப்பு மூலம் மேல்நோக்கி செல்ல முடிந்த சூழ்நிலையை உங்கள் மருமகளிடம் இருந்து மட்டுமே எதிர்பார்க்கிறீர்கள்" என்றார் அவர்.

ஒரு மகனிடம் இருந்து மாமியாரின் எதிர்பார்ப்பு, விருப்பம் என்ன? "குடும்பத்தின் விருப்பங்கள்தான் அவர்கள் முன்னெடுத்துச் செல்கிறார்கள்; ஆனால் அவர்கள் அந்த பையங்களை பாதுகாக்க முயல்கிறார்கள்" என்று லிங்கம் கூறினார். மகன்களை பெற்றதால் மாமியார் குடும்பத்தில் தமது அந்தஸ்தை நிலைநாட்ட முடிந்தது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டி, அது தொடர வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.

முக்கிய உதாரணங்கள் மற்றும் மேலும் ஆராய்ச்சி

சுகாதார சேவைக்கான தகவல்களுக்கு மாமியார் நுழைவாயிலாக இருப்பதை நிரூபிப்பதன் மூலம், குடும்பக் கட்டுப்பாடு, நோய்த்தடுப்பு மற்றும் குழந்தை மற்றும் தாய்வழி சுகாதார மேம்பாட்டு முயற்சி போன்ற எதிர்காலக் கொள்கைகள் ஈடுபடுத்துவதில் மாமியார் ஆதிக்கம் செலுத்தக்கூடும்.

“உதாரணமாக, குடும்பக் கட்டுப்பாடு அல்லது நோய்த்தடுப்பு மருந்துகளை ஊக்குவிக்க அரசு முயன்றால், தம்பதிக்கு மட்டும் அரசு குறிவைத்தால் போதாது.

நீங்கள் வீட்டு கட்டமைப்பை கணக்கில் எடுத்துக்கொண்டு மாமியாரையும் இலக்காக கொள்ள வேண்டும்,” என்றார் அனுக்ரிதி.

வீட்டில் மாமியார் இருப்பதும் அல்லது இல்லாதிருப்பதும் மருமகளின் இயக்கம் மற்றும் அவரது சமூக வட்டத்தின் அளவு ஆகியவற்றில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இம்முடிவுகள் இந்திய துணைக் கண்டத்தின் பிற நாடுகளுக்கும் உண்மையாக இருக்கக்கூடும்; ஒரு பெண்ணின் சுயாட்சியை நிர்ணயிப்பதில் மற்ற குடும்ப உறுப்பினர்களின் பங்கு குறித்த எதிர்கால ஆய்வுகளை இக்கட்டுரை பரிந்துரைத்தது.

(ஷெட்டி, இந்தியா ஸ்பெண்ட் செய்திப்பணியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.