மும்பை: ரூ.2,989 கோடியில் படேலின் ஒற்றுமைச்சிலை கட்டப்பட்டுள்ளதற்கு பதில் அந்த நிதியில், இரு இந்திய தொழில்நுட்பக் கழக (ஐ.ஐ.டி.) வளாகம் அல்லது இந்திய மேலாண்மை கல்விக்கழக (ஐ.ஐ.எம்.)வளாகத்தையோ அல்லது செவ்வாய் கிரகத்திற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் ஆறு திட்டங்களையோ செயல்படுத்தியிருக்க முடியும்.

இச்சிலை கட்டுமானத்திற்கு ஆன செலவானது, குஜராத் அரசால் மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்ட, பிரதம மந்திரி க்ரிஷி சின்சாய் யோஜனா (பிரதமரின் வேளாண் நீர்ப்பாசன திட்டம்) திட்டங்களுக்கான மதிப்பீட்டை விட இரு மடங்கு அதிகமாகும். இத்திட்டத்திற்கான நிதியை கொண்டு 40,192 ஹெக்டர் நிலங்களுக்கு பாசன வசதியை ஏற்படுத்தலாம்; 162 சிறு நீர்பாசன திட்டங்களை பழுது நீக்கி புதுப்பிக்கலாம்; 425 தடுப்பணைகளை கட்ட முடியும்.

சுதந்திரத்திற்கு பின் இந்தியாவை படேல் ஒருங்கிணைத்ததை நினைவுகூறும் வகையில் ஒற்றுமைச்சிலை எனப்படும் இது, 2018 அக்டோபர் 31-ல், சர்தார் வல்லபாய் படேலின் 143வது பிறந்தநாளில், பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது. 182 மீட்டர் (597 அடி) உயரம் கொண்ட இந்த சிலை, தற்போது உலகின் மிக உயரமானதாகும். 6 அடி சிலையைவிட 100 மடங்கு உயரம் கொண்டது இது.

இந்தியாவின் முதல் துணை பிரதமரும், உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேல்,சுதந்திரத்திற்கு பின் பிரிந்து கிடந்த மாநிலங்களை ஒன்றாக இணைப்பதில் ஆற்றிய பங்கு பணிக்காக “இந்தியாவின் இரும்பு மனிதர்” என்று அழைக்கப்பட்டார்.

விவசாயிகள், உள்ளூர் மக்கள் கொந்தளிப்பு

இந்த சிலைக்காக செலவிடப்பட்ட தொகையானது ஆயிரக்கணக்கான குஜராத் பழங்குடியின மக்கள், விவசாயிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சிலை திறப்பு பகுதியில் நீர்ப்பாசன பற்றாக்குறை உள்ள நிலையில், போதிய அடிப்படை,மறுவாழ்வு கட்டமைப்புகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது அவர்களின் குற்றச்சாட்டு. சிலை திறப்புக்கு எதிராக பொதுமக்களை அழைத்து போராட்டத்தில் ஈடுபடவும் அவர்கள் திட்டமிட்டனர்.

இந்த சிலை கட்டுமானத்தால், குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் 72 கிராமங்களை சேர்ந்த 75,000 பழங்குடியின மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, என்.டி.டி.வி. 2018 அக்.20-ல் செய்தி வெளியிட்டிருந்தது. இதில், 32 கிராமங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

19 கிராமங்களில் இழப்பீடு தொகை முழுமையாக வழங்கப்பட்டுள்ள நிலையில், மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதேபோல், 13 கிராமங்களில் நிலம் மற்றும் வேலைகள் போன்ற கூடுதலான பலன்கள் செய்து தரப்படவிலை.

சிலை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து விழா நடக்கும் நாளில் நர்மதை ஆற்றில் குதித்து எதிர்ப்பை தெரிவிக்க விவசாயிகள் திட்டமிட்டிருந்தது குறித்த செய்தி, 2018, அக்.29-ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.

குஜராத்தின் சோட்டா உதேபூர், பஞ்ச்மஹால்ஸ், வதோதரா மற்றும் நர்மதா ஆகிய நான்கு மாவட்டங்களை சேர்ந்த 1500 கரும்பு விவசாயிகளின் கோபமும் சிலை திறப்பு எதிராக திரும்பியுள்ளது. இவர்கள், 2,62,000 டன் சர்க்கரையை வழங்கி கொண்டிருந்த சங்கேதாவில் உள்ள சர்தார் சர்க்கலை ஆலை, நிதி நெருக்கடியால் மூடப்பட்டுள்ளது. இந்த கரும்பு விவசாயிகள் தங்களுக்கு ஆலை நிர்வாகம் வழங்க வேண்டிய ரூ.12 கோடி தொகைக்காக காத்திருக்கின்றனர்.

”நர்மதை ஆற்றில் தண்ணீர் குறைந்து குஜராத்தில் கடும் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டதால், இத்திட்டம் ஓராண்டுக்கு தள்ளிப்போடப்படும் என்று கருதினேன்” என்று, அரசியல் விமர்சகரான கன்ஷியாம் ஷா கூறியதை மேற்கோள்காட்டி, குஜராத் மிண்ட் 2018, அக்.30ல் செய்தி வெளியிட்டிருந்தது.

குஜராத் மாநில விவசாயியான விஜேந்திர திவேதி, தனது மூன்று ஏக்கர் விளை நிலத்தில் பாசனம் மேற்கொள்வது மிகவும் சிரமமாக உள்ளது என்று கூறியதை, 2018 அக்.28-ல் பி.பி.சி. சுட்டிக் காட்டியிருந்தது. ”இவ்வளவு பெரிய சிலைக்கு நிதி செலவிடுவதற்கு பதில் மாவட்ட விவசாயிகளின் நலனுக்கு பயன்படுத்தி இருக்க வேண்டும்” என்று அவர்கள் கூறியுள்ளனர்.

 • சிலைக்கு செலவிட்ட ரூ. 2,989 கோடியின் மதிப்பானது, ராஷ்ட்ரீய க்ரிஷி விகாஸ் யோஜனா (தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம்) கீழ் 2017-18ல் குஜராத்துக்கு மத்திய அரசு ஒதுக்கிய (ரூ.385 கோடி) நிதியை விட எட்டு மடங்கு அதிகமானது. அதேபோல், 56 புதிய திட்டங்களுக்கும், 32 தொடர் திட்டப் பணிகளுக்கும் மாநில அரசு ஒதுக்கிய (ரூ.602 கோடி) நிதியை விட ஏறத்தாழ ஐந்து மடங்கு அதிகம்.
 • இந்த சிலைக்கான நிதியைவிட இரண்டு குழாய் குடிநீர் திட்டங்களுக்கான (ரூ.1090 கோடியை) நிதி குறைவான ஒன்று தான். முதலாவது திட்டம், கடனா நீர்த்தேக்கத்தை அடிப்படையாக கொண்டது. இத்திட்டம், தஹோத் மற்றும் மஹிசாகர் மாவட்டங்களில் 10,000 ஹெக்டேர் பாசனத்திற்கு உகந்ததாக இருக்கும். இரண்டாவது, சூரத் மாவட்டத்தில் 1,800 எக்டர் பாசன வசதி பெறக்கூடிய தினோட்-போரித்ரா திட்டமாகும்.
 • இந்த நிதியானது, குஜராத் மாநில அரசால் மத்திய அரசிடம் கோரப்பட்ட, பிரதம மந்திரி க்ரிஷி சின்சாய் யோஜனா திட்ட (பிரதமரின் வேளாண் நீர்ப்பாசன திட்டம்) மதிப்பீட்டை விட இரு மடங்கு அதிகம். சிலைக்கு செலவிட்ட நிதி மூலம், 40,192 ஹெக்டர் நிலங்களுக்கு பாசன வசதியை செய்து தர முடியும்; அத்துடன், 162 சிறு நீர்பாசன திட்டங்களை சீரமைத்து, புதுப்பித்திருக்க முடியும்; மேலும், 425 தடுப்பணைகளை கட்டலாம்.

இந்த சிலை கட்டுமானக்கான தொகை மூலம்,

 1. இரண்டு ஐ.ஐ.டி. வளாகங்கள் (ஐ.ஐ.டி. வளாகம் ஒவ்வொன்றின் மதிப்பும் ரூ.1,167 கோடி)
 2. இரண்டு எய்ம்ஸ் மருத்துவமனை வளாகங்கள் ( ஒவ்வொன்றின் மதிப்பும் ரூ.1,103 கோடி).
 3. புதியதாக ஐந்து நிரந்தர ஐ.ஐ.எம். வளாகங்கள் (ஒரு ஐ.ஐ.எம். வளாகத்திற்கான மதிப்பு ரூ.539 கோடி).
 4. ஐந்து புதிய சூரிய ஒளி மின்சார திட்டங்கள், ஒவ்வொன்றின் மூலம் 75 மெகாவாட் மின் உற்பத்தி செய்யக்கூடியது (ஒரு திட்டத்திற்கான
  மதிப்பு
  ரூ.528 கோடி).
 5. செவ்வாய் கிரகத்திற்கான ஆறு விண்வெளி திட்டங்கள் (ஒவ்வொன்றின் மதிப்பும் ரூ.450 கோடி); இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் -இஸ்ரோவின் சந்திரனுக்கான மூன்று சந்திராயன் - 2 திட்டங்கள் (ஒவ்வொன்றும் ரூ.800 கோடி மதிப்புடையது) ஆகியவற்றை நிறைவேற்ற முடியும்.

கலை, தொழில்நுட்பம் கொண்ட உலகின் மிக உயரமான சிலை

ஒற்றுமைச்சிலை எனப்படும் இது, உலகின் உயரமான சிலையாக இருந்து வந்த 153 மீட்டர் உயர ஸ்பிரிங்க் டெம்பிள் புத்தர் சிலையை விட, 29 மீட்டர் உயரமானது; அமெரிக்காவின் சுதந்திர தேவி (93 மீட்டர்) சிலையை விட இரு மடங்கு அதிகம்.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள வீரஅபியா ஆஞ்சநேய ஹனுமன் ஸ்வாமி சிலை தான் இந்தியாவில் இதுவரை இருந்த மிக உயரமான சிலை (41 மீட்டர் அல்லது 135 அடி) ஆகும்.

“இந்த ஒற்றுமை சிலையானது சுதந்திரப்போரில் பங்கேற்ற ஒவ்வொருவரையும் நினைவு கூறுவது மட்டுமல்ல; சர்தார் படேலின் சிந்தனைகளான ஒற்றுமை, தேசபக்தி, வளர்ச்சியுடன் கூடிய நல்ல நிர்வாகம் ஆகியவற்றின்பால் மக்களை ஈர்ப்பதாகும்” என்று இத்திட்டத்தின் குறிக்கோளாக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.