மும்பை & போபால்: குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவு (என்ஆர்சி) ஆகியவற்றிற்கு எதிரான போராட்டங்கள் முதல், ஊரடங்கு மற்றும் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடந்து வரும் போராட்டங்கள் வரை, 2020ம் ஆண்டில் கோவிட்19 அல்லாமல் நிகழ்ந்த முக்கியமானவை. இந்த பிரச்சினைகள் செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக தளங்களில் ஆதிக்கம் செலுத்தியிருந்தாலும், தொற்றுநோய் மற்றும் அதன் அவசரத்தால் இப்பிரச்சனைகள் மூழ்கடிக்கப்பட்டன.

நாம் 2021ம் ஆண்டுக்குள் நுழைந்துள்ள நிலையில், 2020 ஆம் ஆண்டின் முக்கிய செய்திகளை சுருக்கமாகப் பார்க்கலாம்:

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள்

குடியுரிமைச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு தழுவிய எதிர்ப்புக்கு மத்தியில் 2020 ஆம் ஆண்டு பிறந்தது. 2019 டிசம்பரில் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது போராட்டங்கள் தொடங்கி இருந்தாலும், அவை 2020 வரை ஆக்ரோஷத்துடன் தொடர்ந்தன.

ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அல்லது பாஸ்தானைச் சேர்ந்த இந்து, சீக்கிய, புத்த, சமண, பார்சி அல்லது கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த, 2014 டிசம்பர் 31 ஆம் தேதி அல்லது அதற்கு முன்னர் இந்தியாவுக்குள் நுழைந்த எந்தவொரு நபருக்கும் இந்திய குடியுரிமையை வழங்கும் இந்த சட்டத்தை ஆயிரக்கணக்கான இந்தியர்கள் கடுமையாக எதிர்த்தனர்.

இந்தச் சட்டம், குடிமக்களின் தேசிய பதிவேடு (என்.ஆர்.சி) உடன் இணைந்து, சிறுபான்மையினரையும், சமூகத்தின் பிற பிரிவுகளைச் சேர்ந்தவர்களையும் சட்டவிரோத குடியேறியவர்கள் என ஆவணங்கள் இல்லாமல் கருதக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

டிசம்பர் 11, 2019 மற்றும் மார்ச் 9, 2020 க்கு இடையில், குறைந்தது 802 ஆர்ப்பாட்டங்கள் இந்தச் சட்டம் தொடர்பாக நடைபெற்றன, அதில் 85% இந்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் மீதமுள்ளவை அதை ஆதரித்தும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள்.


ஊரடங்கு மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வெளியேற்றம்

இந்தியா தனது முதலாவது கோவிட் -19 வழக்குகள் சிலவற்றை கண்டறியத் தொடங்கியபோதும், குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் அதை கைவிட மறுத்துவிட்டனர். முதல் மூன்று வழக்குகள் ஜனவரி 30 முதல் பிப்ரவரி 3 வரை பதிவாகி இருந்தாலும், மார்ச் 2ம் தேதிக்கு பிறகுகே கோவிட்-19 வழக்குகள் அதிகரிக்கத் தொடங்கின.

மார்ச் 3 முதல் மார்ச் 23 வரை, இந்தியாவில் கோவிட்-19 வழக்குகள் ஐந்தில் இருந்து 500 வரை உயர்ந்தன. வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த, மார்ச் 24, இரவு 8 மணிக்கு, பிரதமர் நரேந்திர மோடி நாடு தழுவிய ஊரடங்கை அறிவித்தார். நள்ளிரவில் இருந்து ஊரடங்கு என்று, வெறும் நான்கு மணிநேர அறிவிப்புடன், இந்தியா உலகின் மிகக் கடுமையான ஊரடங்குகளில் ஒன்றை சந்தித்தது.

உடனடி வாழ்வாதாரம் மற்றும் நிச்சயமற்ற தன்மை நிலவியதால் இந்தியாவின் பல லட்சக்கணக்கான கிராமப்புற - நகர்ப்புற புலம்பெயர்ந்தோரை தங்கள் சொந்த ஊர்களுக்கு விரைந்து செல்ல நிர்பந்தித்தது. ஜனதா ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டதற்கு முந்தைய நாள் மார்ச் 20 ஆம் தேதி மும்பை போன்ற நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு விரைந்தனர்.

அடுத்த சில வாரங்களில், ஆயிரக்கணக்கானோர் சிக்கித் தவித்தனர் அல்லது நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம், நடந்தே தங்களது கிராமங்களை அடைய வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.



பி.எம். கேர்ஸ் நிதியத்தின் அறிவிப்பு

மார்ச் மாத இறுதிக்குள், இந்தியா 1,000 கோவிட் -19 வழக்குகளை சந்தித்துக் கொண்டிருந்த போது, ​​பிரதமர் நரேந்திர மோடி, தொற்றுநோய் போன்ற அவசரகால அல்லது துயர சூழ்நிலைகளைச் சமாளிக்க, ஒரு புதிய நிதியை அறிவித்தார். பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரணம் (PM CARES Fund) என அழைக்கப்படும் இந்த நிதியம், பிரதமரை தலைவராகவும், பாதுகாப்பு அமைச்சர், உள்துறை அமைச்சர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட பொது அறக்கட்டளையாக நிறுவப்பட்டது.

பிரதமர் அலுவலகத்தின் தகவல் அதிகாரியிடம் கேட்டபோது, இந்த நிதி குறித்த விவரங்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வராது என்று கூறியதன் மூலம், இதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதற்காக இது விமர்சிக்கப்பட்டது.

மார்ச் 31 ஆம் தேதியில் இருந்து ஐந்து நாட்களில் ரூ.3,076.62 கோடியைப் பெற்றதாக பி.எம்.கேர் நிதியம் தொடர்பான இணையதளம் அறிவித்தாலும், பின்னர் அது பெற்ற தொகை குறித்து எந்த விவரமும் அறிவிக்கப்படவில்லை. மே 20 வரை இந்த நிதிக்கு குறைந்தபட்சம் ரூ.9,677.9 கோடி (1.27 பில்லியன்) கிடைத்துள்ளது என்பதை, இந்தியாஸ்பெண்ட் பகுப்பாய்வு கண்டறிந்தது.


இதேபோன்ற நோக்கங்களுக்காக 1948ஆம் ஆண்டு முதல் இதேபோன்ற மற்றொரு நிதியம் இருந்தது: பிரதமரின் தேசிய நிவாரண நிதி (PMNRF - பிஎம்என்ஆர்எஃப்). மார்ச் 2019 நிலவரப்படி, பி.எம்.என்.ஆர்.எஃப், தனது நிதியில் ரூ.3,800 கோடி செலவழிக்கவில்லை. இச்சூழலில், மற்றொரு நிதியம் ஏன் அமைக்கப்பட்டது என்பதை அரசு விளக்கவில்லை.

தமிழ்நாட்டில் லாக்-அப் மரணங்கள்

மார்ச் 24 அன்று அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, மே 31 வரை நான்கு முறை நீட்டிக்கப்பட்டது. ஜூன் 1 ம் தேதி, ஊரடங்கில் முதல் கட்ட தளர்வு தொடங்கியது, இது தொடங்கிய 19 நாட்களுக்குப் பிறகு, ஜூன் 19ம் தேதி, தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் தந்தை மற்றும் மகன் என்ற இரண்டு வியாபாரிகள், ஊரடங்கு விதிகளை மீறியதாகக் கைது செய்யப்பட்டனர்.

போலீஸ் காவலில் வைக்கப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு, மகன் ஜே. பென்னிக்ஸ் மருத்துவமனையில் இறந்தார், மறுநாள் அவரது தந்தை பி.ஜெயராஜ் காலமானார். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் போலீசாரால் பலமணி நேரம் அடித்து சித்திரவதை செய்யப்பட்டதாக, அவர்கள் கூறினர். செப்டம்பர் 26 அன்று, மத்திய புலனாய்வுப்பிரிவு ஒரு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து, ஒன்பது தமிழக காவல்துறை அதிகாரிகள் மீது கொலை குற்றச்சாட்டை தெரிவித்தது.

இச்சம்பவம் இந்தியாவில் காவலில் வைக்கப்பட்டவர்களின் மரணங்கள் மற்றும் அது குறித்த குறைவான செய்திகள் வெளியாவது பற்றிய விவாதத்தைத் தூண்டியது. ராஜஸ்தானில் பிப்ரவரி மாதம், திருட்டு குற்றச்சாட்டில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த ஒரு தலித் நபரும் போலீஸ் காவலில் இறந்ததாக கூறப்படுகிறது. சிறைச்சாலை அமைப்பில், கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு கைதிகள் விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்தவர்கள், இந்த சம்பவம் சாதி குறித்த தவறான கண்ணோட்டங்களையும், சில சமூகங்களை அதிகமாக குறிவைப்பதையும் எடுத்துக்காட்டுகிறது.


ஹத்ராஸில் தலித் சிறுமியை பாலியல் பலாத்காரம்

செப்டம்பர் 14 ஆம் தேதி, உத்தரபிரதேசத்தில் ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது தலித் சிறுமி நான்கு ஆதிக்க சாதியினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இரண்டு வாரங்களுக்குப் பிறகு, செப்டம்பர் 29 அன்று, டெல்லியின் சப்தர்ஜங் மருத்துவமனையில் சிறுமி காயங்களுடன் உயிரிழந்தார். முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) மற்றும் தடயவியல் பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்வதில் தாமதம், மற்றும் செப்டம்பர் 30 ஆம் தேதி நள்ளிரவில், குடும்பத்தினர் இறுதி சடங்குகள் செய்வதை தடுத்து, பாதிக்கப்பட்டவரின் உடலை அவசரகதியில் தகனம் செய்ததாக, மாநில காவல்துறை மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கு, பெரியளவில் ஆர்ப்பாட்டங்களை தூண்டியது, பின்னர் இது மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ) விசாரணைக்கு வழிவகுத்தது. டிசம்பர் 18 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட சிபிஐ குற்றப்பத்திரிகை, பாதிக்கப்பட்டவரின் அறிக்கையை புறக்கணித்ததற்காக மாநில காவல்துறையினரை குற்றம் சாட்டியதுடன், குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேர் மீதும் கூட்டு பலாத்காரம் மற்றும் கொலை குற்றச்சாட்டுகளை சுமத்தியது. இந்த சம்பவம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைத் தூண்டும் சாதி வளைவையும் எடுத்துக்காட்டுகிறது.


வன்கொடுமைகளை தடுப்புச் சட்டம்-1989 (வன்கொடுமை சட்டம்) பிரிவு 3 இன் படி, சாதி மற்றும் பழங்குடியின அடையாளத்தை அடிப்படையாகக் கொண்ட பாரபட்சமான நடவடிக்கைகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. 2015 ஆம் ஆண்டில், 30 க்கும் மேற்பட்ட குற்றங்களை உள்ளடக்கியதாக இந்த சட்டம் திருத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்தியாவில் குற்றங்கள் தொடர்பான தேசிய குற்றப் பதிவேட்டின் ஆண்டு அறிக்கையில், நான்கு குற்றங்கள் பற்றிய தகவல்கள் உள்ளன. வன்கொடுமை சட்டத்தின் கீழ் உள்ள மற்ற அனைத்து குற்றங்களும் 'மற்றவை' என்று சேர்க்கப்படுகிறது. வன்கொடுமை குறித்த பிரிக்கப்படாத தரவு இல்லாததால், சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டுள்ள பாகுபாட்டின் தினசரி, வாழ்நாள் அனுபவங்களின் அளவீடு இல்லை.

மேலும், வன்கொடுமை சட்டத்தின் கீழ் உள்ள வழக்குகள் பட்டியல் சாதியினருக்கு எதிரான மொத்த குற்றங்களில் வெறும் 8.9% மட்டுமே மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்களில் 5.3% ஆகும். 2019 ஆம் ஆண்டில் எஸ்.சி.க்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட மொத்த குற்றங்களில், 91% வழக்குகள் இந்திய தண்டனைச் சட்டத்துடன் படித்த வன்கொடுமை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2013 ஆம் ஆண்டில், டெல்லியில் ஓடும் பேருந்தில் 23 வயது பெண்ணை (பின்னர் நிர்பயா அல்லது அச்சமற்றவர் என்று பெயரிடப்பட்டது) கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து தாக்கிய பின்னர், இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு நிர்பயா நிதியை அமைத்தது. இருப்பினும், இந்த நிதி பயன்படுத்தப்படாமல் உள்ளது.


புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடரும் போராட்டங்கள்

செப்டம்பர் 14 அன்று, இந்தியா கிட்டத்தட்ட 50 லட்சத்திற்கும் அதிகமான கோவிட்-19 வழக்குகளைத் தாண்டியபோது, பாராளுமன்றம் அதன் மழைக்கால தொடருக்கான கூடியது. 10 நாள் அமர்வில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தலா 25 மசோதாக்கள், அதாவது ஒருநாளைக்கு 2.7 மசோதா என்ற விகிதத்தில் நிறைவேற்றப்பட்டன.

இவற்றில் மூன்று, வேளாண் சட்டங்களும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. நாடு முழுவதும் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டங்களுக்கு இந்த சட்டங்களே முக்கிய காரணம்.

இந்த ஆர்ப்பாட்டங்கள், நவம்பர் மாத இறுதியில் 3,00,000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லி எல்லையை அடைந்தபோது மட்டுமே தேசிய கவனத்தை ஈர்த்தது, ஜூன் மாதத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது முதல், இந்த சட்டங்களுக்கு எதிராக பஞ்சாபில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போதிருந்து, போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. விவசாயிகள் - முக்கியமாக பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள் - டெல்லியின் எல்லையில் ஒரு மாதத்திற்கும் மேலாக முகாமிட்டுள்ளனர். மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தரபிரதேசம் போன்ற பிற மாநிலங்களைச் சேர்ந்த சில விவசாயிகளும் இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


கோவாவில் காடு அழிப்புக்கு எதிராக போராட்டங்கள்

வேளாண் ட்டங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் வேகம் பெற்றுக்கொண்டிருந்த நிலையில், கோவா மாநிலத்தில் உள்ள குடிமக்கள் மொல்லெம் தேசிய பூங்கா மற்றும் பகவான் மகாவீர் வனவிலங்கு சரணாலயத்திலும் அதைச் சுற்றியுள்ள பெரிய வனப்பகுதிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

மார்காவோ - சன்வோர்டெம் இடையிலான இரயில் பாதை அகலமாக்கும் திட்டத்தை தடுக்கும் நோக்கில், நவம்பர் 1 ம் தேதி, இரவு, ஆயிரக்கணக்கான குடிமக்கள் ரயில் பாதையில் கூடினர்; இத்திட்டம், அரசால் அனுமதிக்கப்பட்ட மூன்று பெரிய திட்டங்களில் ஒன்றாகும். மற்ற இரண்டு திட்டங்கள் நான்கு வழிச்சாலையான நெடுஞ்சாலை விரிவாக்கம் மற்றும் 400 கி.வா. மின்சார பாதை அமைத்தல்.

இந்த மூன்றையும் சேர்த்து, ஏப்ரல் மாதம் நடைபெற்ற இரண்டு வீடியோ கான்பரன்சிங் மாநாட்டுக் கூட்டங்களில் 16 திட்டங்களுக்கு அனுமதி தரப்பட்டன, அப்போது நாடு முழுவதும் கோவிட்-19 தொற்றுநோய் அதிகளவில் பரவிக் கொண்டிருந்தது.

இரவு முழுவதும் கண் விழித்தும், ரயில் பாதையில் தடை ஏற்படுத்தி குடிமக்கள் கூடியிருந்ததால் மொல்லெமில் போராட்டங்கள் பல வாரங்களாக தொடர்ந்தன. சமூக வலைதளங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பெற்ற ஆதரவு, அவர்களுக்கு தேசிய கவனத்தை ஈர்க்க உதவியது.

கடந்த 2020 ஜூலை வரையிலான ஆறு ஆண்டுகளில், பல்லுயிர் வெப்பப்பகுதிகள் மற்றும் தேசிய பூங்காக்கள் உட்பட அதன் மிகவும் பாதுகாக்கப்பட்ட சூழல்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், 270 க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. அதே காலகட்டத்தில், சுற்றுச்சூழல் அனுமதிக்கான திட்டங்களில் 87% க்கும் மேற்பட்டவை (2,592 இல் 2,256) அங்கீகரிக்கப்பட்டுள்ளன. சில உள்கட்டமைப்பு திட்டங்கள் சுற்றுச்சூழலை எவ்வாறு பாதிக்கின்றன என்பதையும், சட்ட பாதுகாப்புகள் எவ்வாறு இந்த சேதத்தைத் தடுக்கத் தவறிவிடுகின்றன என்பது பற்றியும் நாங்கள் ஒரு வருடகால விசாரணையை மேற்கொண்டோம்.


(ரிஸ்வி சைஃப், ஆசிய இதழியல் கல்லூரியின் சமீபத்திய பட்டதாரி மற்றும் இந்தியா ஸ்பெண்ட் பயிற்சியாளர், இந்த கட்டுரைக்கு பங்களித்துள்ளார்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.