பெங்களூரு மற்றும் மும்பை: கோவிட்19 தொற்றுநோயைத் தாக்கும் முன்பு, இந்தியாவில் உள்ள சிறைகளில் 60% பேருக்கு மட்டுமே வீடியோ கான்பரன்சிங் வசதிகள் இருந்தன என்று டாடா டிரஸ்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பாதிக்கும் மேற்பட்டவற்றில் தான், அவற்றில் சிறைகளில் 90%, இவ்வசதியை கொண்டுள்ளன.

பல நாடுகளை போலவே, இந்திய உச்சநீதிமன்றம் 2020 ஏப்ரலில், நேரடியாக நீதிமன்றங்களுக்கு வருகை தருவதை குறைப்பதற்கும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்கும், வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிமன்ற நடவடிக்கைகள் நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. எவ்வாறாயினும், அவசரநிலையைச் சமாளிக்க இந்தியாவின் நீதி அமைப்புகள் முழுமையாக ஆயத்தமாக இருக்கவில்லை என்று, இந்திய நீதி அறிக்கை 2020 (IJR 2020) கண்டறிந்துள்ளது.

ஜனவரி 1, 2020 அன்றின்படி, போலீசாருக்கான இந்திய நீதி அறிக்கை 2020 தரவு, போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகத்தில் இருந்து; சிறைத்துறைக்கு, டிசம்பர் 31, 2020ன்படி இந்தியாவின் சிறைச்சாலை புள்ளிவிவரம்; நீதித்துறைக்கு, 2018-19 மற்றும் 2020 (உச்ச நீதிமன்றம் மற்றும் நீதித் துறை); மற்றும் சட்ட உதவி, 2019-20 மற்றும் மார்ச் 2020 (தேசிய சட்ட சேவைகள் ஆணையம்) புள்ளி விவரங்கள் பெறப்பட்டன.

ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 18 பெரிய மற்றும் நடுத்தர அளவிலான மாநிலங்கள் மற்றும் ஏழு சிறிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள "நீதி வழங்கலின் நான்கு தூண்களில்" - அதாவது காவல்துறை, நீதித்துறை, சிறைச்சாலைகள் மற்றும் சட்டரீதியான உதவி - ஆகியவற்றை, மார்ச் 2020 இல் கோவிட்-19 ஊரடங்கிற்கு முன்பு இருந்த முன்னேற்றங்களை, இந்திய நீதி அறிக்கை 2020 பகுப்பாய்வு செய்தது. அதன் இரண்டாவது பதிப்பில், இந்திய நீதி அறிக்கை 2020 நீதி அமைப்பில் தொழில்நுட்பத்தை இணைப்பது குறித்த இரண்டு புதிய குறிகாட்டிகளை -- சிறைகளில் வீடியோ-கான்பரன்சிங் வசதிகள் மற்றும் மாநில குடிமக்களுக்கான ஆன்லைன் அணுகல் -- உள்ளடக்கியது. தொற்றுநோய் காரணமாக, இத்தகைய தொழில்நுட்பங்களை நம்பியிருப்பதன் தேவை தூண்டப்படுகிறது. 36 மாநிலங்களில் 10 மற்றும் யூனியன் பிரதேசங்கள் மட்டுமே அனைத்து சிறைகளிலும் வீடியோ கான்பரன்சிங் வசதிகளைக் கொண்டிருந்தன.

இந்திய நீதி அறிக்கை 2020, மேலும் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முன்னேற்றத்தை, 53 குறிகாட்டிகளில் பகுப்பாய்வு செய்கிறது: அதன்படி, பட்ஜெட் ஒதுக்கீடு மற்றும் பயன்பாடு; உள்கட்டமைப்பு மற்றும் மனித வளங்கள்; வழக்கு நிலுவை உட்பட பணிச்சுமை; மற்றும் காவல், நீதித்துறை, சிறை மற்றும் சட்ட உதவி அமைப்புகளில் பன்முகத்தன்மை. மீதமுள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கான தரவு வழங்கப்பட்டுள்ள்ளது, ஆனால் அவை தரவரிசையில் சேர்க்கப்படவில்லை.

இந்த அறிக்கையானது, 18 பெரிய மாநிலங்களில் ஒட்டுமொத்தமாக நீதியை வழங்குவதில் சிறந்ததாக மகாராஷ்டிராவையும், மோசமானதாக உத்தரபிரதேசத்தையும் தரவரிசைப்படுத்தியது. பணியாளர்களின் சாதி வேறுபாட்டின் அடிப்படையில் கர்நாடகா முதலிடத்தில் உள்ளது, ​ஜம்மு-காஷ்மீர் தனது காவல்துறையில் பரிந்துரைக்கப்பட்ட 33% பெண்கள் இடஒதுக்கீட்டை அடைய, தற்போதைய விகிதத்தின்படி, 428 ஆண்டுகள் வரை ஆகும் என்று அறிக்கை மதிப்பிடுகிறது.

ரூல் ஆப் லா இண்டெக்ஸ் 2020-க்கு பின்னர் வந்த உலகளாவிய அமைதி குறியீடு - 2020 இல், 163 நாடுகளில் முதல் 25 இடங்களில் இந்தியாவும் இடம் பெற்றது, கோவிட்-19 தொற்றுநோயின் விளைவாக "ஒரு புதிய பரபரப்பு மற்றும் நிச்சயமற்ற தன்மை" காரணமாக உலகளவில் அமைதி குறைந்துவிட்ட நேரத்தில், இரண்டு புள்ளிகள் உயர்ந்தது. இது இந்தியாவை பூடான் (19), நேபாளம் (73), இலங்கை (77), பங்களாதேஷ் (97) ஆகியவற்றுக்கு கீழே இந்தியாவை தள்ளியது.

அறிக்கையின் முக்கிய கண்டுபிடிப்புகள் இங்கே, அவற்றில் வேறுசிலவற்றை எதிர்கால கட்டுரைகளில் விரிவாக ஆராய்வோம். (காவல்துறை மற்றும் நீதி சீர்திருத்தங்கள் குறித்த எங்கள் கட்டுரைகள் அனைத்தையும் இங்கே படிக்கலாம்).

வீடியோ கான்பரன்சிங், ஆன்லைன் குடிமக்கள் இணையதளங்கள்

குற்றம் சாட்டப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு மாற்றாக, பரிந்துரைக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கும், வீடியோ கான்பரன்சிங் செய்ய அனுமதிக்க குற்றவியல் நடைமுறைகளில் திருத்தம் செய்யப்பட்ட 11 ஆண்டுகளுக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் -- கோவிட்19 பரவுவதைத் தடுக்கும் அதே வேளையில், "நீதியின் தொடர்ச்சியான வழங்கலை உறுதி செய்வதற்காக" உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் வீடியோ கான்பரன்சிங்கின் பயன்பாடு அதிகரிப்படும் சூழலில்-- வந்தன.

இருப்பினும், இரண்டு பெரிய மற்றும் நடுத்தர அளவிலான மாநிலங்கள் (ஹரியானா மற்றும் உத்தரகண்ட்) மட்டுமே 2019 டிசம்பர் வரை, தங்களின் ஒட்டு மொத்த சிறைகளிலும் வீடியோ கான்பரன்சிங் வசதிகளைக் கொண்டிருந்தன என்று ஐ.ஜே.ஆர் 2020 தெரிவித்துள்ளது. இந்த வசதிகளுடன் கூடிய சிறைகளில் தமிழ்நாடு மிகக் குறைவு, 9%, அதைத் தொடர்ந்து கர்நாடகா (31%), மேற்கு வங்கம் (32%), ராஜஸ்தான் (38%), கேரளா (42%).

"தூண்களாக விளங்கும் கடமை செய்யக்கூடியவர்களின் பொறுப்புணர்வை மேம்படுத்துவதற்கும், பொதுமக்களை கண்காணிப்பதற்கும் மட்டுமல்லாமல், அமைப்பில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டும்" என்று ஐ.ஜே.ஆரின் தலைமை ஆசிரியர் மஜா தாருவாலா, இந்தியாஸ்பெண்டிடம் தெரிவித்தார். சிறைச்சாலைகளை சரி செய்வதற்கு, உயர் அதிகாரக் குழுக்களை அமைக்க உயர்நீதிமன்றங்களுக்கு மார்ச் 2020 உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதன் பின்னணியில் வீடியோ கான்பரன்சிங் வசதிகள் முக்கியமானவை என்று அவர் மேலும் கூறினார்.

சிறிய மாநிலங்களை பொருத்தவரை, யூனியன் பிரதேசங்கள் மற்றும் தரவரிசையில் சேர்க்கப்படாத அருணாச்சல பிரதேசம், கோவா, இமாச்சலப் பிரதேசம், அசாம், சண்டிகர், தாத்ரா & நகர் ஹவேலி, டெல்லி மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள், தங்கள் சிறைகளில் வீடியோ கான்பரன்சிங் வசதிகளைக் கொண்டிருந்தன.

டாமன் டையூ, லட்சத்தீவு, மிசோரம், நாகாலாந்து மற்றும் சிக்கிம் ஆகியவற்றில் உள்ள சிறைகளில் எந்த வீடியோ கான்பரன்சிங் வசதிகளும் இல்லை.


புகார்களை தாக்கல் செய்தல் மற்றும் கண்காணித்தல், வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் இழப்பு பற்றி தெரிவித்தல், பல்வேறு சரிபார்ப்புகள் மற்றும் அனுமதிகளுக்கு விண்ணப்பித்தல் போன்ற ஒன்பது அடிப்படை சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஆன்லைன் குடிமக்கள் இணையதளங்கள், அணுகல் இடைவெளிகளைக் கொண்டிருந்ததாக அறிக்கை கண்டறிந்துள்ளது. பீகார் தவிர அனைத்து மாநிலங்களிலும் இந்த இணையதளங்கள் இருந்தாலும், அவற்றில் பலவும் வேலை செய்யவில்லை, அல்லது குறிப்பிட்ட இணைய பிரவுசர்கள் தேவைப்பட்டன அல்லது உள்ளூர் மொழிகளில் கிடைக்கவில்லை. "ஒட்டுமொத்தமாக இந்த இணையதளங்கள் தத்தளிப்பதைக் கண்டோம்" என்று தாருவாலா கூறினார்.

பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநில இணையதளங்கள், அவற்றிற்கான அணுகல், வழங்கப்பட்ட சேவைகளின் முழுமை மற்றும் ஆங்கிலம் தவிர வேறு மாநில மொழியில் கிடைப்பது ஆகியவற்றின் அடிப்படையில் 10 புள்ளிகளில் 9 புள்ளிகளை பெற்றன.

2020 ஜூன் முதல் அக்டோபர் வரை ஐந்து மாதங்களுக்கு மேலாக மீண்டும் மீண்டும் முயற்சித்த போதிலும், பலகட்ட ஊரடங்கு தளர்வுக்கு பிந்தைய கட்டத்தின் போது, ​​ஆறு மாநிலங்களில் -- அதாவது அருணாச்சல பிரதேசம், ராஜஸ்தான், உத்தரகண்ட், மிசோரம், சிக்கிம், திரிபுரா -- மற்றும் யூனியன் பிரதேசமான லட்சத்தீவு ஆகியவற்றின் இணையதளங்களை அணுக முடியவில்லை என்று அறிக்கை தெரிவித்தது. இந்தியாஸ்பெண்ட் கட்டுரை வெளியாகும் தருணத்தில் கூட அருணாச்சல பிரதேசம், மிசோரம் மற்றும் லட்சத்தீவு ஆகியவற்றுக்கான போர்ட்டல்கள் செயலிழந்து காணப்பட்டன.இரண்டாம் ஆண்டில் மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேசம் இரண்டாவது ஆண்டிற்கு சிறந்த மற்றும் மோசமானவை

ஐ.ஜே.ஆர் 2020 தரவரிசை, 53 குறிகாட்டிகளை அடிப்படையாகக் கொண்டது, அவற்றுள்:

- நீதிபதிகள், போலீஸ் மற்றும் காவல்துறை அதிகாரிகள், சிறை ஊழியர்கள் மற்றும் சட்ட உதவி குழு வழக்கறிஞர்கள் மத்தியில் பெண்களின் எண்ணிக்கை

- காவல்துறை கான்ஸ்டபிள்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையே பட்டியல் சாதி (எஸ்சி), பட்டியல் பழங்குடியினர் (எஸ்டி) மற்றும், இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) எண்ணிக்கை

- காவல்துறை படையினர், சிறை ஊழியர்கள் மற்றும் நீதிபதிகள் அமர்வில் உள்ள காலியிடங்கள்

- வழக்கு நிலுவை மற்றும் தீர்க்கப்பட்டவற்றின் விகிதங்கள்

- பட்ஜெட் திட்டங்களை நீதி அமைப்பு முழுவதற்கும் பயன்படுத்துதல்.

எட்டு யூனியன் பிரதேசங்கள் மற்றும் மூன்று மாநிலங்களுக்கான -- அசாம், மணிப்பூர் மற்றும் நாகாலாந்து, அங்கு ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் (AFSPA) அமல்படுத்தப்படுகிறது -- ஆகியவற்றுக்கான தரவு தரவரிசைப்படுத்தப்படவில்லை. ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களுக்கான தரவு, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் நடைமுறையில் உள்ளது, ஒரு அலகாக கணக்கிடப்பட்டு வழங்கப்படுகிறது.

ஐ.ஜே.ஆர் 2019 இன் முதல் ஐந்து பெரிய மற்றும் நடுத்தர மாநிலங்களில் இரண்டு மாநிலங்கள் - மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் - முறையே ஒன்று மற்றும் நான்கு இடங்களில் தங்கள் நிலைகளைத் தக்க வைத்துக் கொண்டுள்ளன. சட்ட உதவி, காவல்துறை மற்றும் சிறைகளில் தரவரிசையில் சரிவு ஏற்பட்டதால் கேரளா இரண்டாவது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு சென்றது. "கேரளாவின் அடிப்படை தொடக்க புள்ளிகள் மற்ற மாநிலங்களை விட உயர்ந்தவை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் - மீண்டும் இது கட்டமைப்புகள் பற்றியது, செயல்திறன் அல்லது தரம் அல்ல" என்று தாருவாலா கூறினார்.

ஹரியானா, ஐந்தாம் இடத்தில் இருந்து, ஒன்பதாவது இடத்திற்கு வந்துவிட்டது, அதன் செயல்திறன் நான்கு துறைகளிலும் மோசமடைந்துள்ளது. 2019 ஆம் ஆண்டில் மிக மோசமானதாக வகைபடுத்தப்பட்ட பின்னர், சிறிய மாநிலங்களில் திரிபுரா சிறந்த இடத்தில் உள்ளது. இது சட்ட உதவி மற்றும் சிறைகளில் அதன் செயல்திறனை மேம்படுத்தி, 5ஆம் இடத்தில் இருந்து 2ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஒட்டுமொத்தமாக 14வது இடத்தில் உள்ள கர்நாடகா, காவல்துறை தொடர்பான குறிகாட்டிகளில் சிறப்பாக இருந்தது, நீதித்துறையை பொருத்தவரை தமிழகம் (ஒட்டுமொத்தமாக 2வது இடம்), சிறைச்சாலைகளில் ராஜஸ்தான் (ஒட்டுமொத்தமாக 10ம் இடம்) மற்றும் சட்ட உதவியில் மகாராஷ்டிராவுக்கு அதே இடம் கிடைத்தது.

ஒட்டுமொத்தமாக மகாராஷ்டிரா சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலமாக இருந்தாலும், நான்கு துறைகளில் அதன் செயல்திறனை ஒட்டுமொத்த மதிப்பீட்டில் சாத்தியமான, 10 இல் ஆறு புள்ளிகளுக்கு மேல் பெற முடியவில்லை. கடைசியாக 18 வது இடத்தில் உள்ள உத்தரப்பிரதேசம், ஐ.ஜே.ஆர் 2020-இல் எந்த முன்னேற்றத்தையும் காட்டாத 2019 ஆம் ஆண்டின் கடைசி மூன்றில் ஒரே மாநிலமாகும். 2019ஆம் ஆண்டில் 17வது இடத்தில் இருந்த பீகார் நான்கு இடங்களை 13 வது இடத்திற்கும், ஜார்கண்ட் 16வது இடத்தில் இருந்து எட்டாவது இடத்திற்கும் உயர்ந்துள்ளது.


காவல்துறை, சிறைச்சாலைகள், நீதித்துறை மற்றும் சட்ட உதவி ஆகியவற்றின் சிறந்த செயல்பாட்டில் மகாராஷ்டிரா, கேரளா மற்றும் தமிழ்நாடு முதல் மூன்று மாநிலங்களாக இருந்ததாக, இந்தியாஸ்பெண்ட் 2019 நவம்பர் கட்டுரை தெரிவித்தது.

பெண்கள் பிரதிநிதித்துவம் மேம்படுகிறது, ஆனால் இன்னும் குறைவாகவே உள்ளது

உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட அளவிலான நீதித்துறை, காவல் மற்றும் சிறை ஊழியர்களுக்கு இடையேயும், பெண்களின் பங்கு உட்பட 13 குறிகாட்டிகளில் பன்முகத் தன்மையை ஐ.ஜே.ஆர் 2020 அளவிடுகிறது.

காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகம், சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் மொத்த காவல் படையில் பெண்கள் 10.3% உள்ளனர், இது பரிந்துரைக்கப்பட்ட 33% ஐ விட கணிசமாகக் குறைவு. எந்தவொரு மாநிலமும், பரிந்துரைக்கப்பட்ட விகிதத்தை எட்டவில்லை, பெரும்பாலானவை அவ்வாறு செய்வதற்கு, பல தசாப்தங்கள் எடுக்கும் என்று, ஐ.ஜே.ஆர் 2020 கணக்கிடுகிறது, இது, கடந்த ஐந்து ஆண்டுகளில் அவற்றின் போலீஸ் படையில் பெண்களின் சராசரி எண்ணிக்கையின் அடிப்படையில் கணக்கிடப்பட்டது. எட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், தற்போதைய சராசரிகளில் பரிந்துரைக்கப்பட்ட 33% ஒதுக்கீட்டை எட்டுவதற்கு, 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகும்.

2019 முதல், 12 மாநிலங்கள் தங்கள் காவல் துறையில் பெண்களின் பங்களிப்பைக் குறைத்துள்ளன. கடந்த ஆண்டு காவல்துறையில் 33% பெண்களை அடைய 87 ஆண்டுகள் தேவை என்று கணக்கிடப்பட்ட கேரளா, தற்போதைய மதிப்பீடுகளின்படி 117 ஆண்டுகள் ஆகும். இதேபோல், 2019ஆம் ஆண்டில் 14 ஆண்டுகள் என்றிருந்த மகாராஷ்டிராவுக்கு, தற்போது மதிப்பீடுகளின் படி மகளிர் ஒதுக்கீட்டை பூர்த்திய செய்ய, 67 ஆண்டுகள் ஆகலாம்.

சிறிய அளவிலான மேம்பாடுகள் உள்ளன, ஆனால் வரலாற்று பாலின இடைவெளியைக் குறைக்க "சீர்குலைக்குக்கு எதிரான சில சாதகமான மாற்றம்" தேவைப்படும் என்று தாருவாலா கூறினார். "பொதுவாக ஆண்களின் ஆதிக்கம் நிறைந்ததாக கருதப்படும் நீதி அமைப்பில், பெண்கள் இடம் பெற்றிருந்தாலும் அது பெரும்பாலும் கீழ் மட்டங்களில் அல்லது குறைந்த 'குறிப்பிடத்தக்க' நிலைகளில் இருப்பதைக் காண்கிறோம்" என்றார்.

தேர்வு மற்றும் நியமனம் ஆகியவற்றில் அதிகாரத்துவ தாமதங்கள் படையில் பெண்களின் பங்கை அதிகரிப்பதில் தடைகளாக உள்ளன என்று இந்தியாஸ்பெண்ட் 2020 பிப்ரவரி கட்டுரை, கேரளாவில் இருந்து தெரிவித்தது.


பீகார் தனது காவல் துறையில் பெண்களில் அதிக பங்கைக் கொண்டிருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது, இது கால் பகுதி (25.3%) ஆகும், ஆனால் அதன் பெரும்பாலான பெண்கள் காவல்துறையினர் கீழ் நிலைகளில் தான் இருக்கின்றனர். பீகார் போலீஸ் அதிகாரிகளை பொருத்தவரை, 6% மட்டுமே பெண்கள். இந்த போக்கு பெரும்பாலான மாநிலங்களில், நீதித்துறை மற்றும் சட்ட உதவி ஊழியர்களிடமும் காணலாம்.


கர்நாடகாவில் அதிக சாதி வேறுபாடு

காவல்துறை அதிகாரி மற்றும் கான்ஸ்டபிள் அளவில் சாதி அமைப்பு குறிகாட்டிகளிலும் பன்முகத்தன்மை அளவிடப்படுகிறது. ஐ.ஜே.ஆர் 2020 இன் படி, பெரிய மற்றும் நடுத்தர மாநிலங்களில், கர்நாடகாவில் மிகவும் மாறுபட்ட நீதி அமைப்பு இருந்தது, ஒடிசா மற்றும் கேரளா ஆகியன அடுத்த இடங்களில் இருந்தன. எஸ்சி (126%), எஸ்.டி (186%) மற்றும் ஓபிசி (164%) ஆகிய மூன்று சாதிக் குழுக்களுக்கும், அதன் காவல்துறை அதிகாரி அளவிலான ஒதுக்கீட்டை கடந்த ஒரே மாநிலம் இதுவாகும். ஆறு மாநிலங்கள் தங்கள் எஸ்சி ஒதுக்கீட்டை நிறைவு செய்தன அல்லது கடந்துவிட்டன, ஏழு மாநிலங்கள் தங்கள் எஸ்டி அதிகாரி ஒதுக்கீட்டையும், எட்டு மாநிலங்கள் ஓபிசி அதிகாரி ஒதுக்கீட்டையும் பூர்த்தி செய்தன அல்லது அந்த அளவையும் கடந்துவிட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கர்நாடகா மற்றும் சத்தீஸ்கர் தங்களது எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி இட ஒதுக்கீட்டை சந்தித்தன அல்லது அந்த வரம்பையும் கடந்தன. எட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்கள் எஸ்சி கான்ஸ்டபிள் ஒதுக்கீட்டிற்கும், 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்கள் எஸ்.டி மற்றும் ஓபிசி ஒதுக்கீட்டிற்கும், அவ்வாறு செய்துள்ளன.

"வெறுமனே, அதிகாரபூர்வ தரவு ஒவ்வொரு நிறுவனத்திலும் அனைத்து மட்டங்களிலும் பல்வேறு வகையான பன்முகத்தன்மையை (சாதி, பழங்குடி, மொழி, மதம் மற்றும் பாலினம்) பதிவு செய்ய வேண்டும், ஆனால், அது அவ்வாறு இல்லை," என்று, ஐ.ஜே.ஆர் 2020 சுட்டிக்காட்டுகிறது,"தற்போது, ​​பொதுவில் கிடைக்கக்கூடிய உத்தியோகபூர்வ அளவீடுகள் சாதிகள் மற்றும் பெண்களை மட்டுமே சேர்ப்பதைக் கட்டுப்படுத்துகின்றன" என்று அறிக்கை கூறியது. ஆனால் சாதி தரவுகளுக்குள் கூட இடைவெளிகள் உள்ளன, குறைந்த அளவிலான அமைப்பைக் கணக்கிடும்போது, ​​உயர்மட்டத்தில் உள்ளவர்கள் - உயர் நீதிமன்ற நீதிபதிகள் உட்பட - ஆவணப்படுத்தப்படாமல் இருக்கிறார்கள். சாதித் தரவை வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் அமைப்புகளில் ஒரே மாதிரியாக ஒப்பிட முடியாது, ஏனெனில் அது ஒரே மாதிரியாக சேகரிக்கப்படவில்லை என்று, அறிக்கை குறிப்பிடுகிறது.

எட்டு மாநிலங்களில் 40% க்கும் மேற்பட்ட உயர்நீதிமன்ற நீதிபதி காலியிடங்கள்

12 பெரிய மற்றும் நடுத்தர மாநிலங்களில் குறைந்தபட்சம் மூன்று சிறை அதிகாரி பதவிகள் காலியாக இருந்தன, மேலும் எட்டு மாநிலங்களில் 40% க்கும் மேற்பட்ட உயர்நீதிமன்ற நீதிபதி பணியிடங்கள் காலி என்று பதிவாகியுள்ளன. சட்ட உதவியை பொருத்தவரை, ஒன்பது பெரிய மற்றும் நடுத்தர மாநிலங்கள் மாவட்ட சட்ட சேவைகள் ஆணைய செயலாளர்கள் பதவிக்கு காலியிடங்கள் எதையும் தெரிவிக்கவில்லை. சத்தீஸ்கரில் அதிக காலியிடங்கள் 48% ஆக உள்ளன. சட்ட உதவி அமைப்பினுள் மனித வளங்களின் பற்றாக்குறை, சட்ட உதவி கிடைப்பது குறித்த குறைந்த விழிப்புணர்வு, பெண்கள் சட்ட உதவியாளர் பற்றாக்குறைகள் மற்றும் கண்காணிப்பு இல்லாமை ஆகியன, பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவியை அணுகுவதை கடினமாக்கும் என்று, இந்தியாஸ்பெண்ட் கள அறிக்கை பிப்ரவரி 2020 இல் குறிப்பிட்டது.

(கவுதம் தோஷி, இந்தியாஸ்பெண்ட் பயிற்சியாளர், இக்கட்டுரைக்கு பங்களிப்பு செய்துள்ளார்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை
respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.