சென்னை: நாடு முழுவதும் ஒரே நேர மண்டலம் பின்பற்றி வந்தாலும், நாட்டின் கிழக்கு பகுதியுடன் ஒப்பிடும் போது மேற்கு பகுதிகளில் சூரியன் 90 நிமிடங்கள் தாமதமாகவே மறைகிறது. சூரிய அஸ்தமனத்தில் தாமதம் என்பது மக்களை நீண்ட நேரம் கண் விழித்திருக்க செய்கிறது; இது குழந்தைகள் மத்தியில் தூக்கம் இன்மையை உண்டாக்கி, அவர்களின் கல்வியில் எதிர்மறை பாதிப்புகளை ஏற்படுத்துவதாக, கார்னெல் பல்கலைக்கழகத்தின்ஆராய்ச்சி படிப்பாளர்களின் புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

தாமதமாக உறங்கச் செல்வதால் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி குழந்தைகள் குறைந்தளவே படிக்கும் சூழல் உண்டாகிறது; இந்த பாதிப்பு ஏழ்மைக் குடும்பங்கள் மத்தியில் அதிகம் உணரப்படுகிறது என்று ‘மோசமான தூக்கம்: சூரிய அஸ்தமன நேரமும் மனித மூலதன உற்பத்தியும்’ (‘Poor Sleep: Sunset Time and Human Capital Production’) என்ற தலைப்பில், இந்தியாவின் ஒற்றை நேர மாறுபாடு ஏற்படுத்தும் தாக்கம் குறித்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

"தற்போதுள்ள ஒரே நேர மண்டல எல்லை ஒழுங்குபடுத்தல் கொள்கையால், வருடாந்திர மனித மூலதன செலவுகள் சுமார் $ 4.1 பில்லியன் (ஏறத்தாழ ரூ. 29,000 கோடி) அல்லது பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.2 சதவீதம் (மொத்த உள்நாட்டு உற்பத்தி) இந்தியாவிற்கும் ஏற்படும்” என்று ஆய்வின் ஆசிரியரான மாலிக் ஜாக்னானி, இந்தியா ஸ்பெண்டிற்கு அனுப்பிய மின் அஞ்சலில் தெரிவித்துள்ளார்.

நேர மண்டலம் எப்படி வேலை செய்கிறது

ஒவ்வொரு நேர மண்டலமும் 15 டிகிரி தீர்க்க ரேகை இடைவெளியில், உலகம் முழுவதும் உள்ள நாடுகள், சூரியனின் ஓட்டத்திற்கேற்ப 24 மணி நேர மண்டலங்களாக ஒருங்கிணைப்பிற்காக பிரிக்கப்பட்டுள்ளன; உதாரணத்திற்கு ரயில்வே மற்றும் விமான சேவைகள்.

ஆஸ்திரேலியா, பிரிட்டன், ரஷ்யா, நியூசிலாந்து, மெக்ஸிகோ மற்றும் பிரேசில் போன்ற பல நாடுகள் தங்கள் பிரதேசங்களில் பல நேர மண்டலங்களை பயன்படுத்துகின்றன. ஆப்பிரிக்காவிலும், வட மற்றும் தென் அமெரிக்காவிலும் உள்ள 70 நாடுகள் பகல் சேமிப்பு நேரம் (DST) -- பகல் நேரத்தை சேமிக்கும் வகையில் கோடை காலத்தில் வழக்கமான நேரத்தில் இருந்து தங்களது கால நேரத்தை ஒருமணி நேரம் முன்னோக்கியும், குளிர் காலத்தில் ஒரு மணி நேரம் பின்னோக்கியும் -- பயன்படுத்தப்படுகிறது.

அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் பலதரப்பட்ட நேர மண்டலங்கள் மற்றும் பகல் சேமிப்பு நேரங்களை கொண்டிருக்கின்றன.

இந்தியா உள்பட 70 நாடுகள் பகல் சேமிப்பு நேரம் அல்லது நேர மண்டலங்களை பயன்படுத்துகின்றன.

முன் கூட்டியே சூரிய உதயம்; தாமதமாக அஸ்தமனம்

புவியியல் ரீதியாக, இந்தியாவின் கிழக்கு பகுதியில் உள்ள அருணாச்சல பிரதேசம் மற்றும் மேற்கு பகுதியில் இருக்கும் குஜராத்திற்கு இடையே 30 டிகிரி நீள வேறுபாடு உள்ளது. இது ஒரு இரட்டை நேர மண்டல அமைப்புக்கான தகுதியை தருகிறது.

சுதந்திரத்திற்கு முன்பு வரை இந்தியாவில் இரட்டை நேர மண்டலங்கள் -- அதாவது பம்பாய் நேரம் மற்றும் கல்கத்தா நேரம் - இருந்தது; வர்த்தகங்களுக்கு அதிக பகல் நேரத்தை பயன்படுத்த, இது உதவியது.

இருப்பினும், சுதந்திரத்திற்கு பின் இந்தியாவுக்கென கொள்கைகள் வகுக்கப்பட்ட போது, ஒற்றை நேர மண்டலத்தை பின்பற்றுவது என்று அரசு முடிவு செய்தது. அதன்படி, 82.5 ° கிழக்கில் கிரீன்விச் இடைநிலை நேரத்திற்கு (GMT) 5.5 மணி நேரம் முன்பானது பின்பற்றப்படுகிறது.

சூரிய உதயம் மற்றும் சூரியன் மறையும் நேரங்கள் பரவலாக மாறுபட்டு இருந்தாலும், நாடு முழுவதும் உள்ள அனைத்து நிறுவனங்களும் ஒற்றை மண்டல இந்திய நேரத்தை (IST) பின்பற்றி வருகின்றன. உதாரணமாக, குஜராத்தில் மிக தாமதமாக சூரிய உதயம் காலை 8:00 மணிக்கு எனில், அங்கு பள்ளிகள் திறப்பு காலை 8:30 மணிக்கு; இதனால் குழந்தைகளின் உடல் தினசரி சூரிய சுழற்சிக்கு இணங்கமாக இருப்பதில்லை. அதே நேரம், சூரியன் மறைய இரவு 8 மணி கூட ஆகிறது (ஆண்டின் நேரத்தை பொறுத்து); ஆனால் பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் மாலை 5.00 அல்லது 6.00 மணிக்கு எல்லாம் மூடப்படுகின்றன.

அதிக இயற்கை ஒளி மற்றும் மக்கள் விழித்திருப்பதற்கான திறமை இதன் மூலம் வீணடிக்கப்படுகிறது; நாட்டின் நிலையான நேர மண்டலத்தை பின்பற்றுவதற்காக சமரசம் செய்து கொள்ளப்படுகிறது.

இது தூங்குவதற்கான நேரம் என்று கடிகாரம் காட்டினாலும், அப்போது பகல் வெளிச்சம் இருக்கும்; இதனால், கிக்கேடியன் கடிகாரத்தின் அடிப்படையில் -- இது சூரியனின் உடலிசைவை ஒருங்கிணைக்கிறது - உடலின் இயற்கையான சமிக்ஞைகள் முரண்படுகின்றன. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ளிடத்திலும் தூக்கமின்மைக்கு வழிவகுக்கும் என்று, தனது முந்தைய ஆராய்ச்சி முடிவுகளிய மேற்கோள்காட்டி ஜாக்னானி விளக்கம் அளித்தார்.

கடந்த 1998-99ஆம் ஆண்டு இந்தியா டைம் யூஸ் ஆய்வில் இருந்து 24 மணி நேர பயன்பாட்டுத்தரவுகளின் அடிப்படையில் ஜாக்னானிக்கு தெரிய வந்தது என்னவெனில், தாமதமான சூரியன் மறைவால் 30 நிமிடங்கள் தூக்கமின்மை உண்டாகும் என்பது தான். அதாவது, சூரியன் மறைந்த பிறகும் பகல் நேரம் அதிகமாக இருக்கும்போது, மக்கள் தூக்கமின்மையை அனுபவிப்பார்கள் என்பதை இது குறிக்கிறது.

பகல் இழப்பின் விலை

இதன் விளைவுகள் பள்ளி கல்வி முடிவுகளில் தெளிவாக தெரியும் என்று, ஜாக்னானி தெரிவித்தார்.

“சூரியன் மறைவது தாமதமாவதால் குழந்தைகள் உறங்கச் செல்வதும் தாமதமாகிறது; அதேநேரம் முரண்பாடாக, காலையில் விழிப்பது சூரிய உதயத்திற்கேற்ப ஒழுங்குபடுத்தப்படவில்லை. தூக்கமின்மையால் ஏற்படும் அழுத்தம், படிப்புத்திறனை குறைக்கிறது; தூக்கம் உற்பத்தித்திறனுள்ள ஒரு மாதிரியுடன் ஒத்திருக்கும்- விளிம்பு நிலை திரும்புதல் அதிகரிக்கும்” என்றார் அவர். தூக்கம் என்பது கூடுதல் உற்பத்திக்கு நிலையான முயற்சியை தரும். ஆனால், சூரிய அஸ்தமனம் தாமதம் என்பது தூக்கத்தை குறைக்கிறது; இது படிப்பு திறனை மங்கச் செய்து, குழந்தைகளின் படிப்பு நேரத்தையும் குறைக்கிறது.

சூரியன் ஒருமணி நேரம் தாமதமாக மறைவதால், தோராயமாக குழந்தைகளின் அரைமணி நேர தூக்கம் குறைகிறது; ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளி குழந்தைகள் பள்ளியில் செலவிடும் நேரம் 0.8 ஆண்டுகள் குறைகிறது; பள்ளியில் மாணவர் சேர்க்கையை 11% குறைக்கிறது; மாணவர்களின் கணித சோதனை திறனை மழுங்கச் செய்வது எங்கள் ஆய்வில் தெரிய வந்தது என்றார்.

சூரியன் மறைவது தாமதமாவதால், பெரியவர்களின் தூக்கம் குறைவதோடு, குறைந்த வருவாயுடன் அது தொடர்பு கொண்டுள்ளது; குறிப்பாக ஏழை மக்களிடையே இன்னும் அதிகமாக காணப்படுவதாக, ஜாக்னானி தெரிவித்தார். “ஏழ்மை நிலையில் அல்லாதவர்கள், தாமதமாக சூரியன் மறைந்தாலும் கூட பாதிப்பு ஏற்படாதவாறு தங்களது தூக்க நேரத்தை சரி செய்து கொள்கின்றனர். சூரியன் தாமதமாக மறைவதால் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் ஏழைகள் மத்தியில், குறிப்பாக வீடுகளில் கடும் நிதி நெருக்கடி உண்டாகும் போது பேசப்படுகிறது” என்றார்.

பள்ளிகள் துவங்குவதை தாமதப்படுத்துவது, குழந்தைகள் தாமதமாக உறங்கச் செல்வதை ஈடுகட்ட உதவும்; தூக்கமின்றமை, அறிவாற்றல் குறைபாடுகளை சரிசெய்ய உதவும் என்று ஆய்வு பரிந்துரை செய்கிறது. அமெரிக்க மருத்துவ அகாடமி பரிந்துரையின்படி காலை 8:30 மணிக்கு பிறகு பள்ளி வகுப்பை தொடங்குவது, சூரியன் மறைவு தாமதத்தால் மதிப்பெண் சரிவு பிரச்சனையை தோராயமாக 50% குறையக்கூடும் என்று ஜாக்னானி தெரிவித்தார்.

இந்திய நேரத்தை (IST) அரை மணி நேரம் முன்கூட்டியே வைப்பதால், இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் ஆண்டுக்கு 270 கோடி யூனிட் மின்சாரம் சேமிக்கலாம் என்று, மேம்பட்ட ஆய்வுகளுக்கான தேசிய நிறுவன பேராசிரியர்கள் டி.பி. சென்குப்தா மற்றும் திலிப் அகுஜா ஆகியோரின் முந்தைய ஆராய்ச்சியில் தெரிய வந்ததாக கூறிய ஜாக்னானி, தனது சொந்த ஆய்வு ஒரு உகந்த நேர மண்டலம் அல்லது பகல் சேமிப்பு நேரத்தை (DST) பரிந்துரைக்கவில்லை என்றார்.

(ஜி.வி. நீலாம்பரி, சென்னை பல்கலைக்கழக இதழியல் மற்றும் தொடர்பியல் பாட முதுகலை பட்டதாரி; இந்தியா ஸ்பெண்ட் பயிற்சியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.