புதுடெல்லி: கடந்த ஐந்தாண்டுகளில் கல்வி பட்ஜெட்டில் கணிசமாக நிதி குறைப்பு என்பது, விளிம்புநிலை சமூக மாணவர்களின் உதவித்தொகைக்கான ஒதுக்கீட்டை குறைத்து, அவர்கள் கல்வி தொடர்வதற்கான திறனை பாதிப்பதாக, 2015-16 மற்றும் 2019-20ஆம் ஆண்டுக்கு இடையிலான அரசு தரவுகளை பகுப்பாய்வு செய்வதில் தெரிகிறது.

நாடு முழுவதும் உள்ள நிறுவனங்கள், நிதி வெட்டுக்களை சமாளிக்க தங்களது கட்டணங்களை உயர்த்தி, அதனால் அவை பரவலாகபோராட்டங்களை சந்தித்து வரும் நேரத்தில், கல்வி பட்ஜெட் திட்டத்தை மேம்படுத்த வேண்டிய தேவை மிக அவசியமாகிறது. எடுத்துக்காட்டாக, பட்டியலின சாதிகள் (எஸ்சி) மற்றும் பட்டியலின பழங்குடியினர் (எஸ்.டி) போன்ற நலிந்த சமூகங்கள், நாட்டு மக்கள் தொகையில் 25.2% ஆக உள்ள நிலையில், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அவர்களில் படித்தவர்களில் 20% மட்டுமே உள்ளனர். கட்டண உயர்வானது, கல்வியை அவர்கள் இன்னும் அணுக முடியாததாக மாற்றும்.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), ஆகஸ்ட் 2019இல், 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான வாரியத் தேர்வுக்கட்டணத்தை - பொது வகை மாணவர்களுக்கு ரூ.750 என்பது, ரூ.1,500 ஆக 100%- உயர்த்தியது; எஸ்.சி/ எஸ்.டி மாணவர்களுக்கு ரூ.50 என்பது, ரூ.1,200 ஆக, 2,300% அதிகரிக்கப்பட்டது. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மாஸ் கம்யூனிகேஷன், அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனங்கள் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களும் கல்விக் கட்டணத்தை உயர்த்தி உள்ளன.

கடந்த 2014-15 (உண்மையில், ஏ) மற்றும் 2019-20ஆம் (பட்ஜெட் மதிப்பீடுகள், பி.இ.) ஆண்டுகளுக்கு இடையில், மொத்த மத்திய பட்ஜெட்டில் கல்விச் செலவின பங்கு 4.1%ல் இருந்து 3.4% ஆக குறைந்தது.உதவித்தொகைக்கு ஒதுக்கப்பட்ட தொகை, உதவித்தொகை பயனாளிகளின் எண்ணிக்கை என இரண்டிலும் நிதிப்பற்றாக்குறை பிரதிபலிக்கிறது என்பதை எங்கள் ஆய்வு காட்டுகிறது.

விளிம்புநிலை சமூக மாணவர்களுக்கு - மெட்ரிக் படிப்புக்கு முந்தையது மற்றும் பிந்தையது- என இருவகை உதவித்தொகைகள் உள்ளன; எஸ்சி/ எஸ்டி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் (ஓபிசி) மற்றும் சிறுபான்மை பிரிவுகளில், இரு வகை கல்வி உதவித்தொகைகளிலும் வெட்டுக்கள் உள்ளதை கீழே உள்ள அட்டவணைகள் காட்டுகின்றன. ஆனால் பல்வேறு அறிக்கைகளில் இருந்து பெறப்பட்ட எங்கள் பகுப்பாய்வின் சில முக்கிய அம்சங்கள் இங்கே:

  • எஸ்சி பிரிவுக்கான மெட்ரிக் முந்தைய உதவித்தொகை 2015-16 முதல் 2019-20 வரை தொடர்ந்து குறைந்தது; ஓ.பி.சி-களை பொறுத்தவரை, அது தேக்கமடைந்தது அல்லது ஓரளவு அதிகரித்தது. பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 2015-16ல் 24 லட்சத்தில் இருந்து 2017-18ல் 22 லட்சம் பேராக குறைந்தது, இது 8.3% சரிவு.
  • தேவை அதிகரித்த போதும், எஸ்சி மாணவர்களுக்கான மெட்ரிக் பிந்தைய உதவித்தொகை திட்டத்தில் பயனாளிகளின் எண்ணிக்கை 2016-17ல் 58 லட்சத்தில் இருந்து, 2018-19ல் 33 லட்சமாக 43% குறைந்தது.
  • எஸ்.டி பிரிவினருக்கான மெட்ரிக் முந்தைய மற்றும் பிந்தைய உதவித்தொகைகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு, ஆண்டுதோறும் தேங்கி நிற்கிறது. 2015-16 மற்றும் 2017-18 க்கு இடையில், மெட்ரிக் பிந்தைய பயனாளிகளின் எண்ணிக்கை 20.3 லட்சத்தில் இருந்து 18.6 லட்சமாக, 8.4% குறைந்தது.
  • கடந்த 2018-19 கல்வியாண்டில், சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சகம் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களிடம் இருந்து தற்போதுள்ள மெட்ரிக் முந்தைய உதவித்தொகைக்கு 73 லட்சம் புதிய விண்ணப்பங்களையும், புதுப்பிக்க, 35 லட்சம் விண்ணப்பங்களையும் பெற்றது.இதில் 29 லட்சம் புதிய விண்ணப்பதாரர்கள் (40%) மற்றும் 27 லட்சம் (77%) புதுப்பித்தல் செய்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.

அரசியலமைப்பின் 46வது பிரிவினாது, "பலவீனப்பிரிவு மக்களின், குறிப்பாக பட்டியலின சாதியினர் மற்றும் பட்டியலின பழங்குடியினரின் கல்வி மற்றும் பொருளாதார நலன்களை சிறப்பு கவனத்துடன் ஊக்குவிக்க வேண்டும் " என்று அரசை வழிநடத்தியுள்ளது.

இதற்கு, உறுதியான நடவடிக்கைகள் எடுத்து வந்த போதும், இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் பின்தங்கிய சமூகங்களின் விகிதம், அவர்களின் மக்கள்தொகை எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது மிகச்சிறியது என்று, இடஒதுக்கீடு குறித்த சிறப்புத்தொடரில் இந்தியா ஸ்பெண்ட் தெரிவித்துள்ளது. பொதுவான மக்கள்தொகையில் எஸ்சி மற்றும் எஸ்டி பங்கிற்கும், உயர் கல்வியில் பங்கேற்பதற்கும் இடையில் சமத்துவம் இருந்திருந்தால், எஸ்சிக்கள் இப்போது இருப்பதை விட மூன்று மடங்கும், எஸ்.டி.க்கள் இரு மடங்கு இடங்களை பெற்றிருப்பார்கள் என்று நாங்கள் தெரிவித்தோம்.

எஸ்சி/ ஓபிசிக்கான மெட்ரிக் முந்தைய உதவித்தொகை ஒதுக்கீட்டில் சரிவு

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் (எம்.எஸ்.ஜே.இ) என்பது எஸ்சி மற்றும் ஓபிசி பிரிவு மாணவர்களுக்கு நிதி உதவி வழங்குவதற்கான முன்மாதிரி அமைச்சகமாகும்; அதேநேரம், எஸ்.டி.களுக்கு பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகம் வழங்குகிறது. நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல், அனைத்து வகை பின்தங்கிய பிரிவு மாணவர்களுக்கும் உள்ள இரு முக்கிய திட்டங்கள் மெட்ரிக் முந்தைய மற்றும் பிந்தைய கல்வி உதவித்தொகை ஆகும்.

எஸ்சி/ எஸ்டி மற்றும் ஓபிசி மாணவர்களுக்கான மெட்ரிக் முந்தைய உதவித்தொகை திட்டம், இந்த பிரிவு மாணவர்களின் சேர்க்கை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டது மற்றும் 9 மற்றும் 10 வகுப்புகளில் இடை நிற்றல் எண்ணிக்கையை குறைப்பதாகும். எஸ்சி / எஸ்டி மற்றும் ஓபிசி மாணவர்களுக்கு மெட்ரிக் பிந்தைய உதவித்தொகை, அவர்களின் கல்வியை முழுமையாக முடிக்க உதவுகிறது.

எஸ்சி மற்றும் ஓபிசி பிரிவு மாணவர்களுக்கான மெட்ரிக் முந்தைய உதவித்தொகை, ‘நிதி வரையறை’ கொண்டவை; அதாவது இது பட்ஜெட்டைப் பொறுத்தது மற்றும் கோரிக்கை அடிப்படையிலானது அல்ல. 2015-16 மற்றும் 2019-20க்கு இடையில், எஸ்.சி. உதவித்தொகை ஒதுக்கீடு தொடர்ச்சியாக ரூ.834 கோடியில் இருந்து ரூ.355 கோடியாக 58% குறைந்தது; ஓ.பி.சி.க்களை பொறுத்தவரை, உதவித்தொகைக்கான செலவு தேக்கமடைந்து அல்லது ஓரளவு அதிகரித்தது எனலாம். உதவித்தொகை பெறும் மாணவர்களின் எண்ணிக்கை இதே காலகட்டத்தில் 24 லட்சத்தில் இருந்து 22 லட்சமாக, 8.3% குறைந்துள்ளது.

இந்த போக்கு எஸ்சி மற்றும் ஓபிசி வகையினரில், 12 மற்றும் 10ம் வகுப்புகளில் அதிக எண்ணிக்கையிலான இடை நிற்றல் எண்ணிக்கயுடன் ஒத்துப்போனது: பொதுவகை மாணவர்களுக்கு இரண்டாம் நிலை முதல், உயர்நிலை வரை மாறுதல் விகிதம் 75.91% ஆகவும்; எஸ்சி மற்றும் ஓபிசிக்கு முறையே, 63.05% மற்றும் 63.57% ஆகவும் உள்ளது என, கல்விக்கான மாவட்ட தகவல் அமைப்பு (DISE) தரவுகள் தெரிவிக்கின்றன.

12வது ஐந்தாண்டு திட்டம் (2012-17), எஸ்.சி.க்களுக்கான மெட்ரிக் முந்தைய உதவித்தொகையை, 1 - 8ம் வகுப்புகளுக்கு நீட்டிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது. ஆனால் எந்த நிதியும் ஒதுக்கப்படாததால் திட்டம் மேம்படுத்தப்படவில்லை.

துப்புரவு மற்றும் உடல்நலக் கேடுகளுக்கு ஆளாகக்கூடிய தொழில்களில் உள்ளவர்களின் குழந்தைகளுக்கு, மெட்ரிக் முந்தைய உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் இங்கு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின்படி மாநிலங்கள் சரியான நேரத்தில் திட்டங்களை அனுப்பாததால், ஒதுக்கப்பட்ட நிதியை அரசு முழுமையாக பயன்படுத்தவில்லை. இதன் விளைவாக, இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளின் எண்ணிக்கை 2015-16ல் 3,40,000 ஆக இருந்து 2017-18ஆம் ஆண்டில் 20,000 ஆகக் குறைந்தது.

தொடக்கத்தில் இருந்தே, எஸ்சிக்களுக்கான மெட்ரிக் முந்தையை உதவித்தொகை, ஒரு மைய திட்டமாக 100% நிதியுதவியுடன் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டது. இருப்பினும், நிதி பகிர்வுக்கான வழிகாட்டுதல் மாற்றத்துடன், 2019-20 முதல், இத்திட்டத்தின் மொத்த நிதி 60:40 என்ற விகிதம் அல்லது மாநிலத்தின் எஸ்சி மக்கள்தொகையின் அடிப்படையில், இதில் எது குறைவாக இருந்தாலும் அதன் அடிப்படையில் மத்திய - அந்தந்த மாநில அரசுகள் பங்களிப்பு செலுத்தும்.

செப்டம்பர் 6, 2019 தேதியிட்ட சுற்றறிக்கையின்படி, இந்த திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூ.300 கோடியை கருத்தியலாக ஒதுக்கியுள்ளது, அதாவது 2019-20 (பிஇ) க்கான உத்தேச பட்ஜெட்டுக்கு மத்திய அரசின் விடுவிப்பு, ரூ.355 கோடிக்கு கீழே உள்ளது.

மெட்ரிக் பிந்தைய உதவி குறைவாகவே உள்ளது

எம்.எஸ்.ஜே.இ.ஆல் நடத்தப்படும் மெட்ரிக் பிந்தைய உதவித்தொகை திட்டங்களுக்கும் இதே போக்குகளே வெளிப்படுகின்றன. 1944 இல் அறிமுகப்படுத்தப்பட்ட, எஸ்சிக்களுக்கான இந்த உதவித்தொகை நீண்ட காலமாக உயர் கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கு பொருளாதார முதுகெலும்பாக இருந்து வருகிறது. 2006-07 ஆம் ஆண்டில், ஓபிசிக்களுக்கான மெட்ரிக் பிந்தைய உதவித்தொகை அறிமுகப்படுத்தப்பட்டது; இதற்கான 100% செலவையும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசே செலுத்தி வருகிறது.

தேவை அதிகரித்தபோதும், எஸ்சி மாணவர்களுக்கான மெட்ரிக் பிந்தைய உதவித்தொகை திட்டம் தொடர்ந்து நிதியுதவி செய்யப்படுகிறது. இது, திட்டத்தின் கீழ் பயனாளிகளின் எண்ணிக்கை 2016-17ல் 58 லட்சத்தில் இருந்து 2018-19ஆம் ஆண்டில் 33 லட்சமாக குறைந்துள்ளதை பிரதிபலிக்கிறது.

இந்த திட்டங்களின் கீழ் போதுமான பட்ஜெட் ஒதுக்கீடு இல்லாததற்கு, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் கோரப்பட்ட நிதிகளுக்கும், நிதி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிதிகளுக்கும் இடையிலான இடைவெளி காரணமாகும். அமைச்சகம், 2019-20 (பி.இ.) ஆம் ஆண்டில் ரூ.7,125 கோடி (1 பில்லியன் டாலர்) கேட்டது; ஆனால் ஒதுக்கப்பட்ட நிதி ரூ.2,927 கோடி (410 மில்லியன் டாலர்); இது ரூ.4,198 கோடி (590 மில்லியன் டாலர் அல்லது 59%) பற்றாக்குறை என்று நிலைக்குழு அறிக்கை தெரிவிக்கிறது.

ஓபிசி மாணவர்களுக்கு, கோரிக்கையாக கேட்கப்பட்டது ரூ.2,500 கோடி (350 மில்லியன் டாலர்); ஆனால், ஒப்புதல் ஒதுக்கீடு ரூ.1,360 கோடி (190 மில்லியன் டாலர்) ஆகும்; இது, 54% குறைவாக இருந்தது. இத்தகைய தொடர் பட்ஜெட் வெட்டின் விளைவாக, நிலுவையில் உள்ள உதவித்தொகைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை அமைச்சகம் பயன்படுத்துகிறது; ஆயினும், பெருமளவில் நிலுவைத் தொகை வழங்கப்பட வேண்டியுள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது.

எஸ்.டி.க்கள் ஒதுக்கீட்டில் தேக்கம்

கடந்த 2016-17 ஆம் ஆண்டில், தொடக்க கல்வியில் எஸ்.டி மாணவர்களின் மொத்த சேர்க்கை விகிதம் (ஜி.இ.ஆர்) அகில இந்திய சராசரியான 93.55% என்பது, 99.57% ஆக இருந்தது. இது ஒட்டுமொத்த கல்வி மொத்த சேர்க்கை விகிதம் 26.3% உடன் ஒப்பிடும்போது உயர்கல்வி மட்டத்தில் 17.2% ஆக குறைகிறது என்று அகில இந்திய உயர்கல்வி கணக்கெடுப்பு, 2018-19 தெரிவித்துள்ளது. எஸ்.டி மாணவர்கள் அடிக்கடி வெளியேறுகிறார்கள் - 100 குழந்தைகளில், 57 பேர் மட்டுமே இரண்டாம் நிலை முதல் உயர்நிலை நிலை வரை தொடர்ந்தாக, கல்விக்கான மாவட்ட தகவல் அமைப்பு (DISE) 2016-17 காட்டுகிறது.

எவ்வாறாயினும், எஸ்.டி மாணவர்களை பள்ளியில் தொடர்ந்து இருப்பதை ஊக்குவிப்பதற்காக அரசு கூடுதல் நிதி உதவிகளை வழங்கவில்லை - இதனால் மெட்ரிக் முந்தைய மற்றும் பிந்தைய உதவித்தொகைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ஆண்டுதோறும் தேக்கநிலையில் உள்ளது.

கடந்த 2015-16 மற்றும் 2017-18க்கு இடையில், மெட்ரிக் பிந்தைய உதவித்தொகையின் கீழ் பயனாளிகள் 20.3 லட்சத்தில் இருந்து 18.6 லட்சமாக (8.4%) குறைந்துவிட்டனர். சுயநிதி கல்வி நிறுவனங்களில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் படிப்புகளில் சேரும்போது எஸ்சி / எஸ்டி மாணவர்களுக்கு மெட்ரிக் பிந்தைய உதவித்தொகை பெற அனுமதிக்கக்கூடாது என்ற அரசின் கொள்கைக்கு எதிராக 2019 ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

கடந்த 2019 டிசம்பரில், மெட்ரிக் முந்தைய உதவித்தொகை, டெய்லி ஸ்காலருக்கு மாதத்திற்கு ரூ.150 முதல் ரூ. 225 ஆகவும், ஹோஸ்டலர்களுக்கு மாதம் ரூ. 350 முதல் 525 ஆகவும் திருத்தி அமைக்கப்பட்டது. இருப்பினும், ஒதுக்கீடு 2018-19 (பி.இ) இல் ரூ.350 கோடியில் இருந்து 2019-20ல் (பி.இ) ரூ.340 கோடியாக குறைந்தது.

சிறுபான்மை உதவித்தொகை தேவையைவிட மிகக்குறைவு

சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சகம் (MOMA) சிறுபான்மை மாணவர்களுக்கு மூன்று முக்கிய உதவித்தொகை திட்டங்களின் கீழ் - மெட்ரிக் முந்தையது, பிந்தையது மற்றும் தகுதி வழிமுறைகள்படி நிதி உதவி வழங்குகிறது. இவற்றின் கீழ், அறிவிக்கப்பட்ட ஆறு - முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள் மற்றும் பார்சிகள்- சிறுபான்மை சமூகங்களை சேர்ந்த ஏழை மாணவர்களுக்கு சுமார் 70 லட்சம் உதவித்தொகை வழங்கப்படலாம்.

கடந்த 2018-19 கல்வியாண்டில், அமைச்சகம் 73 லட்சம் புதிய விண்ணப்பங்களையும், மெட்ரிக் முந்தைய உதவித்தொகை புதுப்பிக்க 35 லட்சம் விண்ணப்பங்களையும் பெற்றது. இவற்றில் 29 லட்சம் புதிய விண்ணப்பதாரர்களுக்கும் (40%), புதுப்பித்தலுக்கான 27 லட்சம் விண்ணப்பங்களுக்கும் (77%) உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. மெட்ரிக் பிந்தைய உதவித்தொகை விஷயத்தில், புதிய மற்றும் புதுப்பித்தல் இணைந்து, சிறுபான்மை விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 20 லட்சமாக இருந்தது; ஆனால் 6,80,000 (34%) பேர் மட்டுமே உதவித்தொகை பெற்றனர்.

தொழில்முறை மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கு வழங்கப்பட்ட தகுதி அடிப்படையிலான உதவித்தொகையின் கீழ், 2018-19 ஆம் ஆண்டில் 1,20,000 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது;, இது மொத்த விண்ணப்பங்களில் 36% மட்டுமே.

உதவித்தொகைக்கான தேவை அதிகரித்த போதும், இந்த மூன்று திட்டங்களுக்கும் பட்ஜெட் ஒதுக்கீடு கணிசமாக அதிகரிக்கவில்லை. கடந்த ஆண்டின் பட்ஜெட் மதிப்பீடுகள் அல்லது திருத்தப்பட்ட மதிப்பீடுகளுடன் ஒப்பிடுகையில் 2019-20 ஆம் ஆண்டில் ஒதுக்கீடு உண்மையில் குறைந்துவிட்டது.

(குந்து, புதுடெல்லியில் உள்ள பட்ஜெட் மற்றும் ஆளுமை பொறுப்புக்கூறல் மையத்தில் (சிபிஜிஏ) பணியாற்றுகிறார். அவளை என்ற மின் அஞ்சலில் protiva@cbgaindia.org தொடர்பு கொள்ளலாம்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.