மும்பை: இனி, இந்திய மாநிலங்கள், 5 மற்றும் 8ஆம் வகுப்பு ஆண்டு இறுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத குழந்தைகளை நிறுத்தி வைக்க முடியும்; ஆனால் கற்றல் விளைவுகளை மேம்படுத்த. இது மட்டும் போதாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

முன்பு, குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி சட்டம்- 2009ன் (RTE Act) கீழ், 9ஆம் வகுப்பு வரை மாணவர்களை தேர்ச்சியடையவில்லை என்று --அதாவது தோல்வி என்று- நிறுத்தி வைக்கக்கூடாது என்று கூறப்பட்டிருந்தது. இதன் பொருள் மாணவர்கள் தங்களின் வகுப்புக்குரிய தரத்திலான கல்வியை பெறாவிட்டாலும் அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி பெற வைக்கலாம் என்பது பொருள்.

நாடாளுமன்றத்தில் 2019, ஜனவரி 2ல், இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் நிறைவேறியது; இது 5 மற்றும் 8ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களை நிறுத்தி வைக்கும் முடிவை மாநிலங்களே தேர்வு செய்ய வழிவகை செய்தது.

இந்த திருத்தத்தை, 22 மாநிலங்கள் கேட்டுக் கொண்டதாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் 2018 ஜூலை 18ல் மக்களவையில் தெரிவித்தார்; எந்தவொரு தடுத்து நிறுத்தி வைக்கும் கொள்கையும் கல்வியின் தரத்தின் பொறுப்பைக் குறைக்காத சூழ்நிலைக்கு வழிவகுத்தது என்றார்.

"பள்ளிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கல்விக்கு குறைந்தளவே பொறுப்பேற்றுள்ளனர்" என்ற ஜவடேகர் “பல பள்ளிகள் மதிய உணவு கூடங்களாக உள்ளன. பிள்ளைகள் மதியம் வந்து உணவு சாப்பிட்டு பிறகு வீட்டுக்கு சென்று விடுகிறார்கள்” என்றார்.

இந்த திருத்தத்தின்படி, ஆண்டு இறுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத 5 மற்றும் 8ஆம் வகுப்புகளில் மாணவர்களை நிறுத்தி வைக்கும் திட்டத்தை ஒரு மாநில அரசு அறிமுகம் செய்தால், தேர்வு முடிவு வெளியான இரு மாதங்களுக்குள் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு இரண்டாம் வாய்ப்புக்கு அனுமதி தர வேண்டும் என்று கூறுகிறது. இரண்டாம் முறை தேர்வில் மாணவர் தேர்ச்சி பெறாவிட்டால் தான் அவரை அதே வகுப்பில் மீண்டும் இருக்கச் செய்ய முடியும்.

இந்திய பள்ளிகளில் கற்றல் முன்னேற்றங்களை மேம்படுத்துவதே இந்த திருத்தத்தின் நோக்கம் என்று ஜவடேகர் கூறினார்.

எண்ணறிவு மற்றும் எழுத்தறிவின் தரம் மோசமானதாகவே உள்ளது; பத்து ஆண்டுகளுக்கு முன்பு 2008 இருந்த தரத்தைவிட கீழே இருப்பதற்கு பல உதாரணங்களை காட்டி, 2018 வருடாந்திர கல்வி நிலை அறிக்கை அடிப்படையில், 2019 ஜனவரி 15ல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது.

அதேபோல், 2ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தை படிக்கும் 5ஆம் வகுப்பு படிக்கும் குழந்தைகளின் விகிதம் 2009ஆம் ஆண்டில் 52.9% என்பது, கல்வி உரிமை சட்டத்திற்கு பிறகு 2016ல், 47.8% என்று குறைந்தது என, இந்தியாவில் கல்வி தரத்தை உயர்த்துவதற்காக இயங்கும் அரசுசாரா அமைப்பான பிரதாம் கல்வி அறக்கட்டளை மற்றும் வருடாந்திர கல்விநிலை அறிக்கை (ASER) மேற்கோள்காட்டி தெரிவிக்கிறது. வகுத்தல் கணக்கை செய்து காட்டும் குழந்தைகளின் விகிதம், 2009ஆம் ஆண்டு 38.1% என்றிருந்தது, 2016ல் 26% ஆக குறைந்தது.

எனினும், இந்த விகிதங்கள் சமீபத்தில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. 2ஆம் வகுப்பு புத்தகத்தை படிக்க இயலும் 5ஆம் வகுப்பு மாணவர்களின் விகிதம் 2018ஆம் ஆண்டில் 50.5% ஆகும்; இது, 2016ஆம் ஆண்டின் புள்ளிகளை விட 2.7% அதிகமாகும். இதேபோல் வகுத்தல் கணக்கு செய்யக்கூடிய 5ஆம் வகுப்பு மாணவர் விகிதம் 27.9% ஆக உள்ளது; இது 2016ன் விகிதத்தை விட 1.9% கூடுதலாகும்.

மோசமான கற்றல் விளைவுகளுக்கு, 2009 ஆம் ஆண்டில் கல்வி உரிமை சட்டத்தின் மூலம் அறிமுகமான அனைவரும் தேர்ச்சி என்ற தானியங்கு ஊக்குவிப்புகளே காரணம் என்று சில வல்லுனர்கள் குற்றம் சாட்டினர். "அனைவரும் தேர்ச்சி எனும் கொள்கை, கற்றல் விளைவுகளை பாதித்தது," என்று மும்பை மேற்கு புறநகரான வில்லே பர்லேவில் உள்ள ஸ்ரீ மாதவராவ் பகவத் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுதா நாயர் கூறினார். “அனைவரும் தேர்ச்சி என்பது குழந்தைக்கு பொறுப்பின்மையை ஏற்படுத்தியது; அவன் அல்லது அவள் படித்திருப்பதை அறிய மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இந்த முறைமை வழங்கப்பட்டது. இது மாற்றப்பட வேண்டும்” என்றார்.

இந்த திருத்தம் ஒரு நல்ல நடவடிக்கை என்று புகழ்ந்துள்ள நாயர் “தேர்ச்சி பெறாததல் ஒரு குழந்தை ஒரு ஆண்டை இழக்கக்கூடாது. தேர்வில் குழந்தை சரிவர எழுதாமல் தேர்ச்சி பெறவில்லையெனில், மீண்டும் தேர்வெழுத வாய்ப்பு தந்து, அடுத்த வகுப்பு குழந்தையை தகுதி பெறச்செய்ய வேண்டும்” என்றார்.

எனினும், தேர்ச்சி பெறாத குழந்தைகளை அடுத்த வகுப்புக்கு அனுப்புவதை நிறுத்தும் முடிவுக்கு சில வல்லுனர்கள் எதிர்க்கின்றனர். காலி ஆசிரியர் பணி இடம் நிரப்புதல், பள்ளி உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் போன்றவற்றில் கவனம் செலுத்தாமல் மாணவர்களை மட்டுமே சட்ட திருத்தம் தண்டிப்பதாக, அவர்கள் கூறுகின்றனர்.

"தேர்த்தி பெறாத குழந்தைகளை அதே வகுப்பில் தடுத்து வைப்பது வேறு விளைவுகளை ஏற்படுத்தும்; குழந்தையின் ஆன்மாவின் மீதும், அவரது சுய மரியாதை மீதும் ஆழமான தாக்கத்தை உண்டுபண்ணும்" என்று, ஆசிரியர் சங்கங்கள், அரசு சாரா அமைப்புகள், கல்வியாளர்களை ஒருங்கிணைக்கும் தளமான கல்வி உரிமை மன்ற தேசிய அமைப்பாளர் அம்பரீஷ் ராய் தெரிவித்தார். “குழந்தைகளை பாதிக்கும் இம்முடிவு மிகவும் துரதிர்ஷ்டவசமானது. குறிப்பாக வறுமை விளிம்பில் உள்ள குழந்தைகளை பாதிக்கும்; பள்ளியில் இருந்து அவர்கள் விலகுவதற்கு இது காரணமாகிவிடும்” என்றார் அவர்.

மீண்டும் அதே வகுப்பில் அமர்த்துவது என்பது, எதிர்பார்த்த நன்மைகளுக்கு பதில் எதிர்மறை விளைவுகளையே தந்ததாக, கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியம் (CABE) கீழுள்ள துணைக்குழுவின் 2015 அறிக்கை தெரிவிக்கிறது; அதே வகுப்பில் மீண்டும் அமர்த்துவது மாணவர் வளங்களை வீணடிக்க வழிவகுக்கும்; வகுப்புகளின் திறனைக் குறைக்கும் என்று அது மேலும் தெரிவித்தது.

அனைவரும் தேர்ச்சி என்பதை நிறுத்துவது மட்டுமே இந்த பிரச்சனைகளை தீர்த்துவிடாது என்பதில் வல்லுனர்கள் உடன்படுகின்றனர். அவர்களின் தேவை, கற்ற மதிப்பீடு முறையில் மாற்றம் இருக்க வேண்டும் என்பது தான் என்று, பிரதாம் கல்வி அறக்கட்டளை இணை இயக்குனர் மாதவ் சவாண் தெரிவித்தார். "அடிப்படையான கற்றல் திறமைகள் மீது கவனம் செலுத்த வேண்டும்; 'பாடத் திட்டங்களை முடிப்பதில்” மட்டுமல்ல. பாடங்களை மனப்பாடம் செய்வதை காட்டிலும் கற்றல் திறன்கள், புரிந்து கொள்ளுதலை மேம்படுத்த வேண்டும்” என்று அவர் கூறினார்.

தொடரும் நிதி பயன்படுத்தாமை; திசை திரும்பி தவறான வழிக்கு சென்றதாக குறிப்பு: அரசு தணிக்கையாளர்

கடந்த மூன்று ஆண்டுகளில், பட்ஜெட்டில் பள்ளி கல்விக்கான நிதி முழுமையாக அதிகரித்துள்ளது என, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புத்தன்மைக்காக செயல்படும் லாப நோக்கற்ற அமைப்பான பட்ஜெட் மற்றும் நிர்வாக பொறுப்பு மையம் (CBGA) மற்றும் குழந்தைகள் உரிமைகளுக்காக இயங்கும் அரசு சாரா அமைப்பான ’க்ரை’ (Child Rights and You - CRY) அமைப்பின் 2018 டிசம்பர் ஆய்வு தெரிவிக்கிறது.

இது, 2014-15 முதல் 2017 வரையிலான உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்கம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய 6 மாநிலங்களின் கல்வி பட்ஜெட் திட்டங்களை ஆய்வு செய்தது; இதில், நிதி ஒதுக்கீடு அதிகரித்தும் கூட, மாநிலங்கள் தங்கள் செலவினத்தை மாற்றியமைக்க பட்ஜெட் திட்டத்தை பயன்படுத்தவில்லை என்பது தெரிந்தது.

மாநில அரசுகளின் மோசமான திட்டமிடல் மற்றும் செயலாக்கம், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் சில இலக்குகளை நிறைவேற்ற முடியாததற்கு வழிவகுத்தது என, தலைமை கணக்கு தணிக்கையாளரின் (CAG) 2017 அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டாய கல்வி உரிமை சட்டத்திற்கான தனி பட்ஜெட் கிடையாது; தற்போது சமக்ரா சிக்‌ஷா திட்டத்தின் கீழ் வரும் சர்வ சிக்‌ஷா அப்யான் (எஸ்.எஸ்.ஏ. அல்லது அனைவருக்கும் கல்வி) திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கப்படுகிறது. இந்த சட்டத்தின் கீழ் செலவினமானது மத்திய மற்றும் மாநில அரசுகள் 60:40 என்ற விகிதத்தில் (மத்திய அரசின் செல்வில் 60%) பகிர்ந்து கொள்ளப்படுகிறது. இதற்கு வடகிழக்கு மாநிலங்கள், இமாச்சலப்பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் ஜம்மு-காஷ்மீர் விலக்கு. அவற்றின் விகிதம் 90:10 ஆகும்.

எஸ்.எஸ்.ஏ.வின் கீழ் பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாடு, ஆசிரியர்களுக்கு ஏற்பாடு, ஆசிரிய பயிற்சி மற்றும் கல்வி ஆதார ஆதரவு உள்ளிட்டவை தரப்படுகிறது.

கடந்த 2010 ஏப்ரல் முதல், 2016 மார்ச் வரை, நாடு முழுவதும் 112 மாவட்டங்களை சேர்ந்த 3,370 பள்ளிகளை உள்ளடக்கி வெளியான இந்த தணிக்கை அறிக்கையில், எஸ்எஸ்ஏ நிதி ஒவ்வொரு ஆண்டும் ரூ.12,259.46 கோடியில் இருந்து, ரூ. 17,281.66 கோடி வரை பயன்படுத்தாமல் இருந்தது தெரிய வந்தது.

பல வழிகளில் நிதியை திசைதிருப்பி பயன்படுத்துதல் மற்றும் பல்வேறு நிலைகளில் மானியங்களின் முறையற்ற பயன்பாடு ஆகியன குறித்து சி.ஏ.ஜி. தனது அறிக்கையில் குறிப்பிட்டது.

கடந்த 2010-16 இடையே, உத்திரப்பிரதேசம் ரூ. 47,403.24 ($7.24 பில்லியன்) செலவினத்திற்கான அறிக்கையை மத்திய அரசுக்கு தந்தது. ஆனால், கணக்கு தணிக்கையில் 96.61% (ரூ.45,797.05 கோடி அல்லது $6.99 பில்லியன்) அளவுக்கு தான் கணக்கு காட்டப்பட்டிருந்தது.

ஒடிசா மாநிலத்தில், ஐந்து மாதிரி மாவட்டங்களில் 58 தலைமை ஆசிரியர்கள் அவர்களுக்கு 80 அடிப்படை கட்டமைப்பு பணிகளுக்கென ஒதுக்கப்பட்ட ரூ.1.04 கோடியை செலவிடாமல் திருப்பப் பெற்றது தணிக்கை ஆய்வில் தெரிய வந்தது. இதேபோல் பீகாரில் ஆறு மாவட்டங்களை சேர்ந்த 234 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் ரூ.12.06 கோடியை, முழுமையடையாத பணிகளுக்கு செலவழிக்காமல் இருந்துள்ளனர்.

ஆராய்ச்சி மதிப்பீட்டு கண்காணிப்பு மற்றும் மேற்பார்வைத் திட்டங்களுக்கான -- அதாவது ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், சாதனை பரிசோதனை அல்லது மதிப்பீடு மேற்கொள்வது மற்றும் பயனுள்ள கள அடிப்படையிலான கண்காணிப்புக்கு பல்வேறு மட்டங்களில் ஆதார நபர்களை உருவாக்குதல்- ஆகியவற்றுக்கான நிதியங்கள் பயன்பாடின்றி உள்ளன.

மேலும், கற்றல் விரிவாக்க திட்டத்தில் - அதாவது குழந்தை மையத்தின் பாடத்திட்ட சீர்திருத்தங்கள் -கற்பித்தல்-கற்றல் செயல்முறைகளை இது பாதிப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2013 மார்ச் மாதத்தில் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டிய உள்கட்டமைப்பு இலக்குகள், 2016 ஆம் ஆண்டளவிலும் நிலையற்றதாகவே இருந்தாக, அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இதனால் தான் பல பள்ளிகளில் பணியாளர் பற்றாக்குறை, அடிப்படை உள்கட்டமைப்பு வசதி இல்லாதவையாக உள்ளன.

கற்றல் விளைவை பாதிக்கும் ஆசிரியர் பற்றாக்குறை, குறைந்த உள்கட்டமைப்பு வசதிகள்

2014 ஏப்ரம் மாதத்தின்படி, தொடக்கப்பள்ளிகளில் 5,00,000 ஆசிரியர்கள், அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 14% ஆசிரியர்கள் நிரப்பப்படவில்லை; குறைந்தபட்சம் ஆறு ஆசிரியர்கள் என்பது கூட இல்லை என்று சி.பி.ஜி.ஏ-க்ரை (CBGA-CRY) அறிக்கை கூறுகிறது. பீகார், உத்தரப்பிரதேசத்தில் அதிகபட்சமாக 4,20,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன; மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு ஆகியன, அனுமதிக்கப்பட்டதில் 95% பணியிடங்களை நிரப்பியுள்ளன.

வழக்கமாக ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து நியமிப்பதற்கு பதிலாக மாநிலங்கள் ஆசிரியர்களை பணியில் ஈடுபடுத்துவது அல்லது ஒப்பந்த அடிப்படையில் அமர்த்துகின்றன. குறைவான ஆள்சேர்ப்பு விகிதம் அல்லது ஆட்சேர்ப்பு நிலைக்கு குறைவான நிதியால் ஏற்படுகிறது என அறிக்கை தெரிவித்துள்ளது.

ஏனெனில் எஸ்.எஸ்.ஏ. இன் கீழ் தரப்படும் நிதியுதவி நிபந்தனைக்குட்பட்டது;ஆசிரியர் ஆட்சேர்ப்புக்கு வரும்போது மாநிலங்கள் நிதி குறைபாடுகளை எதிர்கொள்கின்றன என்று, சி.பி.ஜி.ஏ. மூத்த ஆராய்ச்சியாளரும், சி.பி.ஜி.ஏ - க்ரை ஆய்வை எழுதியவருமான புரோதிவா குந்து தெரிவித்தார். " ஆசிரியர்களை நிரந்தரமாக நியமித்தால் ஊதியக் குழுவின்படி அதிக சம்பளம், மற்றும் பிற பயன்களையும் ஆசிரியர்களுக்கு அரசுகள் வழங்க வேண்டும்." என்றார் அவர்.

ஆசிரியர்களுக்கான சம்பளம், இந்திய மாநிலங்களின் பள்ளி கல்வி பட்ஜெட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது; இது 60% (சத்தீஸ்கர்) முதல், 82% (மகாராஷ்ட்ரா) வரை உள்ளது. ஆனால் இது, தொழில்முறை தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் பெரும் பற்றாக்குறைக்கு தரப்பட்டதை விட இது அதிகமாக இருக்க வேண்டும் என்று ஆய்வு கூறுகிறது.

மேலும், ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் 66.4 லட்சம் பேரில் 11 லட்சம் பேர் (16.5%) இன்னும் பயிற்சி பெறாதவர்கள்.

தொழில்ரீதியாக பயிற்சி பெறாத ஆசிரியர்கள் - மாநிலம் வாரியாக

கட்டாயக்கல்வி உரிமை சட்டம் வந்த பிறகு, ஆசிரியர் கல்விக்கான நிறுவன திறனை கட்டியெழுப்புவதற்கு பதிலாக, சர்வ சிக்‌ஷா அப்யான் திட்டத்தில் பயிற்சி பெறாதவர்களுக்கு சேவை ஆசிரியர் பயிற்சி அளித்து, இப்பிரச்சனையை கையாண்டது என்று அறிக்கை தெரிவித்தது. நிறுவனத் திறனைக் கட்டி எழுப்பும் வளம் தீவிரமானது மற்றும் மாநிலங்களில் இதில் நீண்ட காலமாக முதலீடு செய்யவில்லை.

தரமான கல்வியை வழங்குவதில் பள்ளி உள்கட்டமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. கற்பதற்கான சூழலை உருவாக்க, பள்ளி அடிப்படை உள்கட்டமைப்பு கிடைப்பதும் ஒரு முன்தேவையாகும்.

இருப்பினும், மாநிலங்களில் பரவலாக பள்ளி கட்டடங்கள், வகுப்பறைகள், பழுது பார்த்தல், குடிநீர், விளையாட்டு மைதானங்கள், தனி கழிப்பறை போன்ற பிற உள்கட்டமைப்புகளில் இடைவெளிகள் உள்ளன.

2016 ஏப்ரல் நிலவரப்படி பீகாரில் 34.9% மற்றும் உத்தரபிரதேசத்தில் 40.5% பள்ளிகளில் மட்டுமே மின்சார வசதி இருந்தது.

ஆரம்பப் பள்ளிகளில் (1 - 5 வகுப்புகள் வரை) 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர், நடுநிலை பள்ளிகளில் (6 முதல் 8ஆம் வகுப்பு வரை) 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் இருந்தாக வேண்டும். மேலும், பள்ளியில் ஒரு ஆசிரியருக்கு ஒரு வகுப்பறை இருக்க வேண்டும். 2016 ஏப்ரல் மாதத்தின்படி, பீகாரில் மூன்றில் இரண்டு பள்ளிகளில், 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்பறைகளில் இருந்தனர்; நடுநிலைப் பள்ளிகளில் 10ல் ஏழு, 35க்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்டிருந்ததாக, தரவுகள் தெரிவிக்கின்றன.

School Infrastructure At Elementary Level, By State
States Bihar Chhattisgarh Maharashtra Tamil Nadu Uttar Pradesh West Bengal
Govt. primary schools with SCR > 30 66.3 19.7 22 17.6 39.5 21.3
Govt. upper primary schools with SCR > 35 71.9 26.4 35.4 29.8 27.9 55
Schools with drinking water facility 94.20 99.2 99.7 100 98.7 98.4
Schools with girls' toilet facility 89.90 99.4 99.4 99.9 99.8 98.3
Schools with ramp 86.70 77.9 93 72.8 86.5 91.9
Schools with playground 35.30 54.6 87.2 77 70.5 40.4
Schools with boundary wall 52.50 61.1 81.3 79.6 71.6 42.8
Schools with kitchen shed 62.5 84.7 88.2 96.3 82.3 86.3
Schools with electricity 34.9 64.8 85.9 98.7 40.5 72.4

Source: Budgeting for School Education: What Has Changed and What Has Not?, December 2018
Figures in %; SCR- Student-Classroom Ratio

அடிப்படை உள்கட்டமைப்புகளில் பற்றாக்குறை இருந்தபோதும் அதற்கான ஆதார ஒதுக்கீட்டில் தெளிவான போக்கு இல்லை. பீகார் மற்றும் சத்தீஸ்கர் தங்களது ஒதுக்கீடுகளை அதிகரித்த நிலையில், உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகியன, அவற்றை குறைத்தன.

உள்கட்டமைப்புகளுக்கு மாநில கல்வி பட்ஜெட்டில் ஒதுக்கீடு

"பொருள் வளங்களின் சிறப்பான மற்றும் திறமையான மேலாண்மைடன், கல்வி அமைப்பின் தரத்தை உயர்த்துவதற்கு மனித வளங்களில் பற்றாக்குறை பிரச்சினையை தீர்ப்பது அவசியம்" என்று, ’க்ரை’ அமைப்பின் கொள்கை ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை இயக்குனர் ப்ரீத்தி மஹாரா தெரிவித்தார். திட்டத்தின் மேம்பட்ட செயல்முறை, மெதுவான நிதி விடுப்பு, நிதி பயன்பாட்டு செயல்முறை ஆகியவற்றை தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம், வள ஆதாரங்கள், பட்ஜெட் ஒதுக்கீடு, உண்மையான செலவு ஆகியவற்றிற்கான இடைவெளிகளைக் கட்டுப்படுத்த உதவும்" என்றார் அவர்.

"எந்தவொரு நிறுத்தி வைக்கும் கொள்கையும் ஒரு 'உயர்ந்த கற்றல் விளைவுகளை' கொள்கையால் சமநிலைப்படுத்தப்படவில்லை," என்று பிரதாம் கல்வி அறக்கட்டளையின் சவாண் கூறினார். "எனவே தேர்ச்சி பெறாதவர்களை நிறுத்தி வைக்கும் கொள்கையானது, அதற்கான காரணங்களுக்கு போதுமான கவனமின்றி ஒட்டுமொத்த தளர்வுக்கும் வழிவகுத்தது” என்று அவர் மேலும் கூறினார்.

(ஸ்ரேயா ராமன், இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர்)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.