வறுமைக்கோட்டை விட 8 மடங்கு சம்பாதித்தும் இன்னமும் ஏழை: அதிகாரபூர்வ ஏழ்மை குறித்த புள்ளிவிவரங்கள் எதை தவறவிடுகின்றன
வறுமைக் கோட்டிற்கு மேலாக, வசதியாக இருப்பதற்கு போதுமான பணம் சம்பாதிப்பது இன்னும் பல வழிகளில் இழக்கப்படலாம்
நொய்டா: சாந்தினி கட்டூன் (26), குடும்பத்திற்கு, ரேஷன் கடையில் இருந்து ஒரு மாதத்தில் 9 கிலோ கோதுமை மற்றும் 6 கிலோ அரிசி கிடைக்கிறது. மகள், மனைவி, மூன்று மகன்கள், ஒரு மருமகள் மற்றும் இரண்டு பேரக்குழந்தைகளுக்கு உணவளிக்க, அவரது தந்தை ஒரு மாதத்தில் 25 முதல் 30 கிலோ அரிசியை, சில்லறை விலையில் வாங்குகிறார்.
"நாங்கள் இப்போது [ஊரடங்கில் இருன்ந்து] சனாவைப் பெறுகிறோம், ஆனால் ஒரு மாதத்தில் வெறும் 1 கிலோ மட்டுமே. மற்ற அனைத்தையும் (பருப்பு, எண்ணெய், மசாலாப் பொருட்கள்) நாங்கள் இங்குள்ள கடைகளில் இருந்து வாங்குகிறோம்," என்று அவர், இந்தியா ஸ்பெண்டிடம் கூறினார். குடும்பத்தினருக்கு ரொட்டியை விட அரிசியை அதிகம் பிடிக்கிறது, எப்போதாவது பருப்பு, இறைச்சி மற்றும் காய்கறிகளை சாப்பிடுகிறது, "எங்களால் முடிந்தால்," சாந்தினி கூறினார்.
வீட்டில் உள்ள இரண்டு குழந்தைகளைக் கணக்கிடாமல், வயது வந்த ஏழு உறுப்பினர்களுக்கு ஒரு மாதத்திற்கு 45 கிலோ அரிசி என்பது, ஒரு நாளைக்கு 214 கிராம் தானியமாகும், இது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரைத்த 345 கிராமுக்குக் குறைவு. குடும்பம், மண் சுவர்கள் கொண்ட மூன்று அறைகள் கொண்ட குடியிருப்பில் வாழ்கிறது, மேலும் அவர்களின் முக்கிய வருமானம், சாந்தினியின் தந்தையின் சைக்கிள் ரிக்ஷா ஓட்டுவதன் மூலம் கிடைத்து வருகிறது, மேலும் சாந்தினியின் வீட்டுப் பணிகள் வாயிலாக நிரப்பப்படுகிறது. சாந்தினியின் குடும்பம் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக ஏழைகளில் ஒன்றாக இருக்குமா?
அதிகாரபூர்வ மதிப்பீட்டின்படி, நாட்டில் 269.3 மில்லியன் மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்றனர். மானிய விலையில் வழங்கப்படும் உணவு தானியங்கள், வீட்டுவசதி மற்றும் கடன் திட்டங்கள் போன்ற பல நலத்திட்டங்களுக்கு, அவர்கள் தகுதி உடையவர்கள். ஏழைகளின் எண்ணிக்கை குறித்த துல்லியமான மதிப்பீடு, நலத் திட்டங்களுக்கான பயனாளிகளின் எண்ணிக்கையைத் தீர்மானிப்பதற்கு மட்டுமல்ல, குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்வதற்கும் தேவை என்று, பெங்களூரில் உள்ள அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிபுணர் மஞ்சுளா எம் தெரிவித்தார்.
வருமானம், நுகர்வு அல்லது "திறன்கள்" இல்லாமை: இந்தியாவில் ஒரு நபரை ஏழையாக்குவது எது?
பிரயாக்ராஜ் பகுதியில் வீட்டு வேலை செய்யும் சாந்தினி, ஒரு மாதத்தில் 8,000 ரூபாய் சம்பாதிக்கிறார். அவரது தந்தை ரூ. 10,000-ரூ. 15,000 சம்பாதிக்கிறார், அவரது மூன்று சகோதரர்கள் அவர்கள் ரூ. 10,000 முதல் ரூ. 11,000 வரை சம்பளம் கொண்டு வருகிறார்கள்.
உத்தரப் பிரதேச அரசிடம் இருந்து, அவர்கள் மானிய விலையில் தானியங்களைப் பெறும்போது (நகர்ப்புற ஏழைகளைக் கண்டறிவதற்கான அளவுகோல்கள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். நாங்கள் அதை கீழே விளக்குகிறோம்), ஒரு நல்ல மாதத்தில் குடும்பத்தின் வருமானம், டெண்டுல்கர் கமிட்டி அறிக்கையின்படி, அவர்களை அதிகாரபூர்வ வறுமைக்கோட்டிற்கு மேலே வைத்திருக்க போதுமானது. கிராமப்புறங்களில் ஒரு நபருக்கு மாதம் ரூ.816 ஆகவும், நகர்ப்புறங்களில் ஒரு நபருக்கு மாதம் ரூ.1,000 ஆகவும் இந்த அளவீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த புள்ளிவிவர உண்மை, அவர்களின் வாழ்க்கையில் மிகக் குறைவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
சாந்தினியின் உடன்பிறந்தவர்கள் யாருக்கும் படிக்கவோ பள்ளிக்கூடம் சென்றிருக்கவோ தெரியாது. அவர்களுக்கு மருத்துவ கவனிப்பு தேவைப்படும் போது, அவரது குடும்பத்தினர் ஒரு நாள் ஊதியத்தை விட்டுவிட்டு பிரயாக்ராஜில் உள்ள மோதிலால் நேரு பிரதேச மருத்துவமனைக்கு வெளியே வரிசையில் நிற்பதையோ அல்லது அவர் வசிக்கும் இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள ஒரு தனியார் கிளினிக்கிற்குச் செல்வதையோ தேர்வு செய்ய வேண்டும். நோய் தீவிரமாக இல்லாவிட்டால் (மயோலிபோமா, தசை திசுக்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பினால் ஆன தீங்கற்ற கட்டி, சாந்தினிக்கு உள்ளது), குடும்பத்தினர் அக்கம் பக்கத்தில் உள்ள கிளினிக்கை விரும்புகிறார்கள். சாந்தினியின் மகள், வீட்டில் செவிலியரின் முன்னிலையில் பிறந்தாள், அவரது சகோதரனின் குழந்தைகளும் அப்படித்தான் பிறந்தனர். நகரின் புகழ்பெற்ற பள்ளிகள் தங்கள் சுற்றுப்புறங்களில் வசிப்பவர்களை அனுமதிப்பதில்லை, மேலும் அருகே உள்ள பள்ளிகள் மிகவும் அதிக கட்டணம் கொண்டவை என்று சாந்தினி கூறினார், எனவே அவரது மகளும் மருமகனும் மசூதியில், தங்கள் பெற்றோர்கள் முன்பு செய்ததைப் போலவே, வகுப்புகளுக்குச் செல்கிறார்கள்.
வறுமைக்கோடு என்பது குறைந்தபட்ச ஆரோக்கியம், கல்வி மற்றும் ஊட்டச்சத்து விளைவுகளைப் பராமரிக்கத் தேவையான செலவினங்களை அடிப்படையாகக் கொண்டது, இது உட்கொள்ளும் கலோரிகளை மட்டுமே நம்பியிருக்கும் பழைய முறையை விட முன்னேற்றம். எவ்வாறாயினும், நல்ல தரமான கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற வசதிகள் அனைவருக்கும் கிடைக்குமா என்பதை அது கருத்தில் கொள்ளவில்லை, இது சாந்தினியின் குடும்பம் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனை.
"வறுமைக் கோடு என்பது, அணுகலைப் பற்றியது அல்ல. குறைந்தபட்ச ஏற்றுக்கொள்ளக்கூடிய வாழ்க்கைத் தரத்தை பராமரிக்க தேவையான உணவு, கல்வி, சுகாதாரம் போன்றவற்றுக்கான குறைந்தபட்ச செலவினத்தின் ரூபாய் மதிப்பு நுகர்வோர் செலவினங்களின் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம்( NSSO) தரவைப் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது. நாம் பற்றாக்குறையைப் பற்றி பேசும்போது அணுகல் வரைபடம் தெரிகிறது" என்று மஞ்சுளா விளக்கினார்.
நகர்ப்புற பற்றாக்குறைக்கான அளவுகோல் வரையறுக்கப்படவில்லை: நிபுணர்கள்
டெண்டுல்கர் குழுவின் வறுமைக் கோடு அளவீடு, அதிகாரப்பூர்வமாக இருந்தாலும், நலத் திட்டங்களுக்கான பயனாளிகளை அடையாளம் காண பயன்படுத்தப்படும் ஒரே அளவுகோல் அல்ல.
"பயனாளிகளின் எண்ணிக்கையை இலக்காகக் கொண்ட நலத் திட்டங்களுக்கான (பொது விநியோக அமைப்பு, ஆயுஷ்மான் பாரத் போன்றவை) பயனாளிகள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வளங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறார்கள். அதனால்தான் ஒவ்வொரு திட்டத்திற்கும் அளவுகோல்கள் வேறுபடுகின்றன, இதன் விளைவாக வெவ்வேறு எண்ணிக்கையிலான பயனாளிகள் உள்ளனர்," என்று, இந்திய திட்டக் கமிஷனின் முன்னாள் உறுப்பினரும், கிராமப்புறங்களில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள கிராமப்புற மக்கள் தொகை கணக்கெடுப்புக் குழுவின் தலைவருமான என்.சி.சக்சேனா கூறினார். உணவுக்கான பொது விநியோக அமைப்பு மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 67% மக்களை உள்ளடக்கியது என்று, நாங்கள் மார்ச் 2022 கட்டுரையில் தெரிவித்திருந்தோம்.
பற்றாக்குறை அளவுகோல் எனப்படும் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் குடும்பங்கள் பின்தங்கிய அல்லது பாதிக்கப்படக்கூடிய பிரிவில் சேர்க்கப்படுகின்றன. இந்த அளவுகோல்கள் கிராமப்புறங்களுக்கும் நகர்ப்புறங்களுக்கும் தனித்தனியாக நிர்ணயிக்கப்பட்டது.
ஊரக வளர்ச்சி மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் (முன்னாள் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்) முறையே 2010 மற்றும் 2012 இல், கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் ஒரு நபரை ஏழையாக்கும் நிலைமைகளை தீர்மானிக்க தனித்தனியான பயிற்சிகளை நடத்தியது. கிராமப்புற சமூக-பொருளாதார சாதிக் கணக்கெடுப்பு, சக்சேனா குழுவால் வரையறுக்கப்பட்ட அளவுகோல்களின் அடிப்படையில், 179.7 மில்லியன் கிராமப்புற குடும்பங்களில் 107.4 மில்லியன் (அல்லது அவர்களில் 59.76%) பின்தங்கியிருப்பதாகக் கண்டறிந்தது.
நகர்ப்புற ஏழைகளை அடையாளம் கண்டு, எஸ்.ஆர். ஹாஷிம் கமிட்டி, 2012-ல் தனது அறிக்கையை சமர்ப்பித்தது, ஆனால் அறிக்கை கிடப்பில் போடப்பட்டதாக, குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான பிரனாப் சென் கூறினார்.
"நகர்ப்புற ஏழைகளை அடையாளம் காண்பதற்கான அளவுகோல்கள் ஒருபோதும் குறிப்பிடப்படவில்லை. இதன் காரணமாக, நகர்ப்புறங்களில் நடப்பது என்னவென்றால், ரேஷன் கார்டுகளின் அடிப்படையில் வழங்கப்படும் வறுமை பற்றிய ஒரு தெளிவற்ற சித்திரம் எங்களிடம் உள்ளது," என்று அவர் கூறினார்.
திறம்பட, சாந்தினி போன்ற நகர்ப்புறக் குடும்பத்தைச் சேர்ப்பதற்கான நிபந்தனைகள், அவள் வீட்டுத் தொழிலாளியாகச் சம்பாதிப்பதையும், அவளது தந்தை ரிக்ஷாக்காரனாகச் சம்பாதிப்பதையும் சார்ந்திருக்கிறது.
இது குறித்து கருத்தை அறிய, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்திற்கு, இந்தியா ஸ்பெண்ட் கடிதம் எழுதியது, ஆனால் பதில் வரவில்லை. அவர்கள் பதிலளிக்கும்போது இந்தக் கட்டுரை புதுப்பிக்கப்படும்.
ஹாஷிம் குழு அறிக்கை, மூன்று வகையான பாதிப்புகளை பட்டியலிடுகிறது: தொழில், குடியிருப்பு மற்றும் சமூகம். சாந்தினியைப் போன்ற குடிசைப் பகுதியில் வசிக்கும் மற்றும் போதுமான ஊதியம் இல்லாத குறைந்த உற்பத்தித் திறன் கொண்ட வேலைகளைச் செய்யும் ஒரு குடும்பம், இந்த அளவுகோல்களின்படி "பாதிக்கப்படக்கூடியது" என்று தகுதி பெறும்.
எத்தனை இந்தியர்கள் ஏழைகள்?
ஏழைகளது எண்ணிக்கையின் மதிப்பீடுகள் முறையால் வேறுபடுகின்றன.
டெண்டுல்கர் குழுவின் வறுமைக் கோட்டு அறிக்கை அடிப்படையில், இந்தியாவில் 2011-12ல் 269.3 மில்லியன் ஏழைகள் இருந்தனர் (2004-05ஆம் ஆண்டில் 407 மில்லியனில் இருந்து குறைந்தது), இதில் 216.5 மில்லியன் பேர் கிராமப்புறங்களில் உள்ளனர் (2004-05 ஆம் ஆண்டில் 326.3 மில்லியனில் இருந்து குறைந்தது) மற்றும் மீதமுள்ள 52.8 மில்லியன் நகர்ப்புறங்களில் (2004-05 ஆம் ஆண்டில் 80.8 மில்லியனுடன் ஒப்பிடும்போது). டெண்டுல்கர் கமிட்டியால் அளவிடப்பட்ட ஏழாண்டு காலத்தில் வறுமை ஒவ்வொரு ஆண்டும் 2% வேகத்தில் குறைந்தது.
இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி. ரங்கராஜன் தலைமையிலான ஒரு நிபுணர் குழு, வறுமைக் கோடு அளவீட்டை திருத்தியது மற்றும் அதே ஆண்டில் ஏழைகளின் எண்ணிக்கை 363 மில்லியனாக இருந்தது, அதாவது கிராமப்புறங்களில் 260.5 மில்லியன் மற்றும் நகர்ப்புறங்களில் 102.5 மில்லியன். கிராமப்புறங்களில் ரூ.972 ஆகவும், நகர்ப்புறங்களில் ரூ.1,407 ஆகவும் வறுமைக் கோடு உயர்த்தப்பட்டது. ரங்கராஜன் கமிட்டியின் முடிவுகள், அதிகாரபூர்வ வறுமைக் கோடு அளவீடாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
இந்த இரண்டு நிபுணர் குழுக்களின் பரிந்துரைகளும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கலோரிகளை உட்கொள்ள, ஒரு மாதத்திற்கு தேவைப்படும் குறைந்தபட்ச செலவினத்தை அடிப்படையாகக் கொண்டவை; ஆடைகள், புத்தகங்கள் போன்றவற்றை வாங்கவும்; வாடகை செலுத்தி பள்ளி அல்லது கல்லூரியில் சேரலாம்.
சமீபத்திய நுகர்வோர் செலவு கணக்கெடுப்பு முடிவுகள் 2018-19ல் அரசாங்கத்தால் தடுத்து நிறுத்தப்பட்டன. அடுத்த சுற்று தரவு கிடைக்கும் வரை, வறுமைக் கோட்டைத் திருத்த முடியாது.
நிதி ஆயோக்கின் தேசிய பல பரிமாண வறுமைக் குறியீடு (MDPI) இந்திய மக்கள்தொகையில் கால் பகுதியினர் (2016 இல் மதிப்பிடப்பட மக்கள்தொகையில் 322.5 மில்லியன்) 2015-16 இல் "பல பரிமாணங்களில்" ஏழைகளாக இருப்பதாக மதிப்பிடுகிறது. இந்த குறியீடு ஊட்டச்சத்து, சுகாதாரம் மற்றும் கல்விக்கான செலவினங்களைக் காட்டிலும் (அந்த நபர் ஆறு ஆண்டுகள் பள்ளிப்படிப்பை முடித்திருக்கிறாரா, அவர்களுக்கு குடிநீர் கிடைக்குமா, அவருக்குச் சொந்தமாக சொத்துகள் உள்ளதா, போன்றவை) விளைவுகளைக் கருதுகிறது.
நுகர்வு அடிப்படையிலான, சமூக-பொருளாதாரக் கணக்கெடுப்பு அல்லது பல பரிமாண வறுமையா?
வருமானம் அல்லது நுகர்வு அடிப்படையிலான வறுமைக் கோடு, வறுமையின் குறைவைக் கண்காணிக்கும் நோக்கத்திற்கு உதவுகிறது. வறுமைக் கோட்டிற்கு மேலே உள்ள மக்கள் எவ்வளவு பாதிக்கப்படக்கூடியவர்கள் என்பது பற்றிய எந்த தகவலையும் இது தெரிவிக்கவில்லை.
கிராமப்புற மற்றும் நகர்ப்புற சமூக பொருளாதார மக்கள்தொகை கணக்கெடுப்பு ஒரு நபரை ஏழையாக்கும் நிலைமைகளை அடையாளம் காணும் வகையில் இருந்தது, அதேசமயம் தேசிய பல பரிமாண வறுமைக் குறியீடு (MDPI) என்பது இந்தியாவில் எத்தனை ஏழைகள் உள்ளனர், அவர்கள் எவ்வளவு ஏழைகள் என்று கணக்கிடப்பட்ட புள்ளி விவரமாகும்.
"தேசிய பல பரிமாண வறுமைக் குறியீடு, வறுமையின் திருப்திகரமான குறிகாட்டியாகும், ஏனெனில் இது நுகர்வு, சுகாதாரம் மற்றும் கல்வி வசதிகளுக்கான அணுகல் மற்றும் தங்குமிடம் கிடைப்பது ஆகியவற்றை கணக்கில் எடுத்துக்கொள்கிறது. நுகர்வு அடிப்படையிலான வறுமைக் கோடு கிராமப்புறங்களுக்கும் ஏற்றுக்கொள்ளத்தக்கது, ஆனால் நகர்ப்புறங்களுக்கு அல்ல, ஏனெனில் சுகாதாரம் மற்றும் கல்வி வசதிகள் மற்றும் நகரங்களில் வீட்டுவசதிக்கான அணுகல் குறைவாக உள்ளது" என்று சக்சேனா விளக்கினார்.
வறுமைக்கான மாற்று வரையறை ஏற்றுக்கொள்ளப்பட்டால், ஹாஷிம் கமிட்டி வழங்கிய பற்றாக்குறைக்கான அளவுகோல்களின்படி, பின்தங்கியிருக்கும் சாந்தினியின் குடும்பம் மற்றும் தேசிய பல பரிமாண வறுமைக் குறியீட்டின் 12 பரிமாணங்களில் 10 இல் ஏழைகள் - வறுமை எண்ணிக்கையில் சேர்க்கப்படுவார்கள்.
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.