புதுடெல்லி: தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது பவானி, தனது குடும்பப்பிழைப்புகாக மில்லில் வேலை செய்வதற்காக, தனது பள்ளிப் படிப்பை கைவிடும் சூழலை எதிர்கொண்டுள்ளார்; கோவிட்-19 பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட நாடு தழுவிய முழு முடக்கம், மேற்கு உத்தரப்பிரதேசத்தின் புலந்த்ஷாரில் உள்ள 17 வயது அனுவின் வாழ்க்கையையும் தலைகீழாக மாற்றியுள்ளது.

அனுவின் நாட்கள் பெரும்பாலும் வீட்டு வேலை மற்றும் விவசாயப்பணிகள் என்றுதான் நகர்கிறது; அவருக்கு வீட்டில் இருந்து ஆன்லைன் வகுப்புக்கான அணுகல் என்பது மோசமாக உள்ளது; அவர் வீட்டில் பெறும் உணவு, அரசு பள்ளியில் வழங்கக்கப்பட்டதைவிட சத்து குறைந்ததாக இருக்கிறது, அவருக்கு சானிட்டரி பேட் வாங்கித்தர இயலாத நிலையில் பெற்றோர் உள்ளனர்.

டெல்லியை சேர்ந்த இலாப நோக்கற்ற பிராக்சிஸ் இந்தியா என்ற அமைப்பு, 2020 மே 20 அன்று நடத்திய அதிவேக கணக்கெடுப்பில் பங்கேற்ற பவானி மற்றும் அனு, தொற்றுநோய் காலத்தில் கொஞ்சமும் கவனிக்கப்படாத பிற அம்சங்களை வெளிச்சம் போட்டுக் காட்டினர்: அது, பதின்பருவ பள்ளி குழந்தைகளின் உடல்நலம், கல்வி மற்றும் எதிர்கால வாய்ப்புகளில் அது ஏற்படுத்தும் கவலைக்குரிய தாக்கம் ஆகியன.

தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 290 பதின்பருவ பெண்களை நேர்காணல் செய்த இந்த ஆய்வில், ஊரடங்குக்கு முன்பை விட தற்போது 36% குறைவான உணவை அவர்கள் பெறுவதை கண்டறிந்துள்ளது (7% பேருக்கு, சில நாட்களில் உணவின்றி கழிகிறது), 70% பேருக்கு சானிட்டரி பேட் கிடைப்பதில்லை, 40% பேரால் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியவில்லை.

பராலி கிராமத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி அனுவுக்கு பிடித்த பாடம், ஆங்கிலம்; ஊரடங்கை கடந்து, இந்தியா ஸ்பெண்டிடம் அவர் கூறியதாவது: "பல பெண்கள் தங்கள் கனவுகளை, இந்த ஊரடங்கின் போது தொலைத்துவிட்டனர். அவர்களால் இனி ஒருபோதும் படிக்க முடியாது, இனி அவர்களது வாழ்க்கை வீணாகிவிடும்" என்றார். அவர் தினமும் காலை 7 மணிக்கு பள்ளிக்கு நடந்து சென்று, மாலை 5 மணிக்கு வீடு திரும்பிவிடுவார் - பள்ளியில் பல்வேறு பாடங்கள், விளையாட்டுகள் மற்றும் பாடம் சாராத செயல்பாடுகள் குறித்த வகுப்புகள் இருந்தன. அவரது பள்ளி மார்ச் 24, 2020 முதல் மூடப்பட்டுள்ளது.

அனுவின் 19 வயது சகோதரிக்கு, ஊரடங்கு நேரத்தில் அவசர அவசரமாக திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. "ஏனெனில் இப்போது திருமணம் செய்து கொள்வது, செலவு குறைந்த ஒன்றாகும். அத்துடன், சகோதரி இனி பள்ளிக்குச் செல்வதற்கான வாய்ப்பில்லை" என்றார் அனு. அவரது சகோதரியின் கனவோ, முதுகலை பயின்று, ஆசிரியராக வேண்டும் என்பதுதான்.

சிறுவர்களை விட சிறுமியருக்கே அதிக பாதிப்பு

ஒரு குடும்பம் பெரும் பின்னடைவுகளையும் வருவாய் இழப்புகளையும் எதிர்கொள்ளும் போது, சிறுவர்களை விட சிறுமிகளே மிகவும் மோசமாக பாதிக்கப்படுகிறார்கள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போது அதிகரித்து வரும் கொரோனா தொற்றுநோய், ஊரடங்கு மற்றும் பொருளாதார வீழ்ச்சியால், பல லட்சம் ஏழை இந்திய குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு காலத்தில் சத்தான உணவு, சானிட்டரி பேட், பள்ளிப்படிப்பு ஆகியவற்றுக்கான அணுகலை இழப்பதுடன், முன்கூட்டியே இளம் வயதில் திருமணம் செய்து வைத்தல், அல்லது குழந்தைத் தொழிலாளராக பணிக்கு அனுப்ப வேண்டிய நிர்பந்தம் என்ற அதிக ஆபத்தில் சிறுமிகள் உள்ளனர்.

இந்தியாவில், 10 முதல் 19 வயதுடைய 12 கோடி பேரில், கிட்டத்தட்ட பாதி பேர் பெண்கள். பள்ளி சேர்க்கை மற்றும் நிறைவு ஆகியவற்றில் சிறுவர் சிறுமிகளுக்கு இடையிலான இடைவெளி குறைந்து கொண்டே இருக்கும்போது, மேல்நிலைப்பள்ளியை முடிப்பது சிறுமிகளுக்கு சவாலாகவே உள்ளது என்று 2019 செப்டம்பரில், இந்தியாவின் வினையூக்க மாற்றத்திற்கான மையம் வெளியிட்டுள்ள கொள்கை குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

"பொதுவாக குடும்பத்தில் சகோதரர்கள் தங்களது சகோதரிகளுக்கு முன்பாகவே தொலைபேசிகள், மருந்து அல்லது உணவை உடனே அணுக முடிகிறது; சகோதரிகளை விட அதிகமாகவே பெறுகிறார்கள்" என்று உத்தரபிரதேசத்தின் பர்தாதா பர்தாதி கல்விச்சங்கத்தின் (பிபிஇஎஸ்) பாலின உரிமை ஆர்வலர் ரேணுகா கூறினார். "ஒரு குடும்பத்தின் வருமானம் ஒரு பேரிடரால் பாதிக்கப்படும் தருணம், சிறுமிகளே அதன் சுமைகளைத் தாங்கிக் கொள்ளும் முதல் நபர்கள். அவர்கள் எப்போதுமே ஒரு சுமையாகவே கருதப்படுகிறார்கள், சொத்தாக கருத்தப்படுவதில்லை. அவர்களுக்கு மிகக்குறைந்த முன்னுரிமையே தரப்படுகிறது" என்று, இந்தியா ஸ்பெண்டிடம் அவர் தெரிவித்தார்.

"குறிப்பாக வளரிளம் பெண்கள் பாதிக்கப்படக்கூடியவர்கள்," என்று, தொற்றுநோய்க்கு பதிலளிக்கும் வகையில், சர்வதேச மீட்புக் குழுவுடன் உருவாக்கப்பட்ட நெருக்கடிகால நடவடிக்கை தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஆய்வறிக்கையை சுட்டிக்காட்டி யுனிசெப் எச்சரித்துள்ளது. இலக்கு தலையீடு இல்லாத, கடந்தகால நோய் பரவல் பற்றிய ஆய்வுகள், கோவிட்-19 “சிறுமியருக்கு எதிரான பாலின அடிப்படையிலான வன்முறைக்கு (GBV) முன்புள்ள அபாயங்களை அதிகரிக்க செய்யும்; அவர்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சியைத் தடுப்பதுடன் பாலியல் இனப்பெருக்க ஆரோக்கியத்தை அச்சுறுத்தும்” என்று அது காட்டுகிறது.

கோவிட்-19 க்கு பிறகு சிறுமியரை மீண்டும் பள்ளிக்கு அனுப்புவதன் நன்மைகள் குறித்து பெற்றோருக்கு புரிய வைத்து, இளம் பருவ சிறுமியருக்கு கண்ணியம் / சுகாதார உபகரணங்களை வழங்க வேண்டும் என்று அது அழைப்பு விடுத்தது. பெண்களுக்கு ஆன்லைன் அணுகல் இல்லாததை கருத்தில் கொண்டு, உடல்நலம் மற்றும் சிறுமியருக்கு எதிரான பாலின வன்முறை (ஜிபிவி) குறித்த முக்கிய தகவல்கள், அவர்களை தொடர்பு கொள்வதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும்.

ஊட்டச்சத்து இல்லாமல் முடங்கிய பெண்கள்

ஊரடங்குக்கு முன்பு, அனு தனது காலை மற்றும் மதிய உணவை பள்ளியில் முடித்துக் கொண்டார். பள்ளியில் இருந்து திரும்பிய பின் வீட்டில் மீதம் இருந்தால் அவற்றையோ, அல்லது எதுவும் சாப்பிடாமலோ இருக்க வேண்டியிருக்கும். ஆனால், இப்போது, அவள் பெரும்பாலும் தக்காளி சட்னியும், சாதமும் மட்டுமே சாப்பிடுகிறார். “இதில் நமக்கு கார்போஹைட்ரேட் மட்டுமே உள்ளது, புரதம் இல்லை” என்பதை அவர் சுட்டிக்காட்டினார். புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் உள்ள அனுப்ஷேர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயதான மோனியும் இந்த ஆண்டு தனது 12ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றார்: கஞ்சி, பருப்பு வகைகள், காய்கறிகள் மற்றும் பழங்களைக் கொண்ட மாறுபட்ட மதிய உணவுக்கு பதில், அவர் தற்போது பெரும்பாலும் வெறும் சாதத்தை மட்டுமே சாப்பிட வேண்டியுள்ளது.

"என் குடும்பத்தினரால் எந்த வருவாயை ஈட்ட முடியாத நிலையில், பச்சை காய்கறிகளை கூட வாங்க முடியாதநிலை" என்று குடும்பப்பெயரை குறிப்பிடவிரும்பாத மோனி, இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். மோனிக்கு நான்கு சகோதரிகள் மற்றும் இரண்டு சகோதரர்கள் உள்ளனர். டெல்லியில் தையல்காரராக பணிபுரிந்த அவரது தந்தை, வேலையை இழந்து, தனது சேமிப்புகளுடன் ஊரடங்கின் போது வீடு திரும்ப முயற்சித்தவர்.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், பள்ளி மதிய உணவுக்கான அணுகல் இழப்பு என்பது, தற்போது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை, பிராக்சிஸ் கணக்கெடுப்பு காட்டுகிறது. பதில் அளித்தவர்களில் 36% பேர் பள்ளிகள் மூடப்பட்டதால் குறைந்த மற்றும் தரமில்லாத உணவை சாப்பிட வேண்டியுள்ளதாக தெரிவித்தனர். மேற்கு வங்கத்தில் பதிலளித்த 24 பேரும் உணவு உட்கொள்வது குறைந்துவிட்டதாக தெரிவித்தனர், 17 பேர் தங்களுக்கு உணவு கிடைக்காத நாட்கள் இருப்பதாகக் கூறினர். உத்தரபிரதேசத்தில் பதிலளித்த 215 பேரில், 27% பேரும், தமிழ்நாட்டில் 51 பேரில் 41% பேரும், தங்களுக்கு இப்போது குறைவாகவே உணவு கிடைப்பதாக கூறினர்.

அனுவின் மதிய உணவு தட்டில் தக்காளி சட்னி மற்றும் சாதம். ஊரடங்கின் போது அவர்கள் பெறும் இலவச உணவுப் பொருட்களால் தான் , குடும்பத்தினரால் ஓரளவு நிர்வகிக்க முடிகிறது (புகைப்படம்: அனு பகிர்ந்தது).

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் (ஐ.சி.டி.எஸ்) அல்லது கிராம சுகாதார மற்றும் ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ், வளரிளம் பெண்கள், பொதுவாக வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்து மாத்திரைகள் மற்றும் வீட்டுக்கு உணவுப்பொருள் (THR) போன்றவற்றை பெற்று வந்த நிலையில், ஊரடங்கின் போது அது தடைபட்டது. "ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் எங்களுக்கு வைட்டமின் மாத்திரைகள் தரப்பட்டன. தற்போது எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை" என்று தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டம் அய்யாப்பட்டியை சேர்ந்த 17 வயதான வி. கார்த்திகா கூறினார்.

இதற்காக என்ன செய்யலாம் என்று ஆய்வில் அவரிடம் பிராக்சிஸ் அமைப்பு கேட்டபோது, ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவை திட்டத்தில் இரும்பு மாத்திரைகள் மற்றும் சுகாதார நாப்கின்களை வீடு வீடாக வழங்க வேண்டும் என்றார்.

"வளரிளம் பருவத்தில் போதிய ஊட்டச்சத்து இல்லாமல் போவது, பேறு காலத்திலும், அதற்கு அப்பாலும் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்" என்று மருத்துவ மற்றும் நோயறிதல் ஆராய்ச்சி இதழில் வெளியான வளரிளம் பெண்கள் குறித்த 2012 ஆய்வு எச்சரித்திருந்தது. வளரிளம் இந்திய சிறுமிகளில் 51.8% பேர் இரத்த சோகைக்கு ஆளாகியுள்ளதாக, இந்தியா ஸ்பெண்ட் 2018 அக்டோபரில், வளரிளம் பெண்களுக்காக பணியாற்றும் நந்தி அறக்கட்டளை நடத்திய கணக்கெடுப்பின் அடிப்படையில் கட்டுரை வெளியிட்டது.

நிபுணர்கள் வலியுறுத்துவது என்னவென்றால், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் இரத்தசோகையால், வளரிளம் பெண்கள், குறைந்த எடையுள்ள குழந்தைகளை பெற்றெடுக்க காரணமாகிறது; குறிப்பாக குழந்தை திருமணம் மற்றும் குறைந்த வயதில் கர்ப்பம் போன்ற சூழ்நிலைகளில், அதிக பாதிப்பு உண்டாகும் என்றனர். "அந்த குழந்தை ஒரு பெண்ணாக இருந்தால், ஊட்டச்சத்து குறைபாடுடன் வளர்ச்சியின்றி காணப்படுவார்; இளம் வயதிலேயே தாயாகி, இத்தகைய சுழற்சி தொடரும்," என்று, டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் சயின்சஸ் ஆய்வுத்திட்டமான ‘டுவார்ட்ஸ் அட்வகசி நெட்வொர்க்கிங் அண்ட் டெவலப்மென்ட் ஆக்சன்’ (டாண்டா) கள ஒருங்கிணைப்பாளர் யோகேந்திர கோர்பேட் கூறினார்.20-24 வயதுக்குட்பட்ட சிறுமிகளில் சுமார் 27% பேர் 18 வயதுக்கு முன்பே திருமணமானவர்கள், 15 முதல் 19 வயதுடைய 7.9% பேர் ஏற்கனவே தாய்மார்களாக உள்ளதாக, தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 2015-16 தெரிவிக்கிறது.

கோவிட்-19 பெண் கல்வியின் பலன்களை மாற்றிவிடும்

"ஊரடங்கு இல்லாதிருந்தால், எனக்கு தெரிந்த என் வயது பெண்கள் தங்களது பள்ளிப்படிப்பை தொடர்ந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்," என்று, புலந்த்ஷாஹரை சேர்ந்த மோனி கூறினார்; அவர், ஆன்லைன் வகுப்புக்காக எப்போதாவது சிலநேரம் மட்டுமே தனது தந்தையின் மொபைல்போனை பயன்படுத்த முடியும்; அது, மிகச்சிறிய திரை, குறைந்த சேமிப்பகம் என்று மோசமான நிலையில் உள்ளது.

"ஆயிரக்கணக்கான பெண்கள், தற்போதைய சூழலில் கல்வி கற்பதில் இருந்து முற்றிலுமாக விலகுவதற்கான பெரும் அபாயத்தை நாம் எதிர்நோக்கி இருக்கிறோம்" என்று பி.பி.இ.எஸ். நிறுவனத்தை சேர்ந்த ரேணுகா கூறினார். “பள்ளிகள் ஒரு பாதுகாப்பான இடம்; பள்ளி இல்லாததால், பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகிறார்கள். ஒரு குடும்பத்தில் போதுமான பணம் இல்லையென்றால், முதலில் விற்கப்படுவது பெண்கள் தான்; அவர்களை வேலைக்கு அனுப்புகிறார்கள்; சுரண்டப்படுகிறார்கள், பெரும்பாலும் வயதான ஆண்களுடன், வளரிளம் பெண்ணை மணம் செய்து கொடுக்கிறார்கள்” என்றார்.

ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், உத்தரபிரதேசத்தின் புலந்த்ஷாஹர் நகரை சேர்ந்த 17 வயது மோனி, வீட்டில் சுத்தம் செய்தல், சமையல் என அனைத்து வேலைகளையும் செய்கிறார். இதனால் படிப்பதற்கு அவரால் கொஞ்ச நேரமே ஒதுங்க முடிகிறது என்றார். (புகைப்படம், மோனியால் பகிரப்பட்டது).

ஊரடங்கின் போது கல்விக்கான அணுகல் என்பது, ஒரு சவாலானது. ஏனென்றால், ஆன்லைன் வகுப்புகள் பரவலாக எல்லோருக்கும் கிடைக்க, உள்கட்டமைப்பு தேவைப்படுகிறது - 75வது தேசிய மாதிரி ஆய்வு (என்எஸ்எஸ்) 2017-18 கணக்கெடுப்பின்படி இந்திய குடும்பங்களில் 89.3% பேரிடம் கம்ப்யூட்டர் இல்லை மற்றும் 76.2% பேரிடம் இணையதளம் அணுகும் வாய்ப்பு இல்லை.

வளரிளம் சிறுமிகளின் நிலைமை இன்னும் மோசமானது, தொலைபேசிகளுக்கு வேறுபட்ட அணுகல் உள்ளது. "சிறுவர்கள் மொபைல்போன்களை பெறுகிறார்கள், ஆனால் பெண்களுக்கு உடனே அது ஒருபோதும் கிடைத்துவிடுவதில்லை. போன் இருந்தால், ஒரு பெண் வேறொருவருடன் ஓடிவிடக்கூடும் அல்லது அந்த மொபைல்போனால் அவள் “கெட்டுப்போகக்கூடும்” என்று பெற்றோர்கள் அஞ்சுகின்றனர்” என்று, மோனி இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். அவளுடைய தம்பிக்கு 13 வயதாக இருந்தபோது மொபைல்போன் தரப்பட்டது. ஆனால், அச்சிறுமியோ மொபைல்போன் கேட்டு போராடவில்லை; தனது குடும்பத்திற்கு மேலும் நிதிச்சுமையை உருவாக்க விரும்பவில்லை.

மேலே குறிப்பிட்டுள்ள, யுனிசெப் ஆய்வறிக்கையில், “மொபைல் போன் உரிமையும் அணுகலும் உலகளவில் அதிகரித்துள்ள நிலையில், இன்னும் ஒரு மொபைல்போனை வைத்திருப்பதில், ஆண்களை விட பெண்கள் குறைவாகவே உள்ளனர். உலகில் 44.3 கோடி மொபைல்போன் மூலம் “இணைக்கப்படாத ”வயது வந்த பெண்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், 40% சிறுமிகள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியாமல், 9% பெண்கள் சில நேரங்களில் மட்டுமே கலந்து கொள்ள முடிவதாகவும் பிராக்சிஸ் கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது.

"கோவிட்-19 தொற்றுநோயால் பள்ளி மூடப்படுவது, பல லட்சம் பெண்கள் கல்வியை முடிப்பதற்கு முன்பே, குறிப்பாக வறுமையில் வாடும் பெண்கள், கிராமப்புற தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் வசிப்பதை விட்டு வெளியேற வழிவகுக்கும்" என்று யுனிசெஃப் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. சிறுமிகளின் கல்விக்கான அணுகலை அதிகரிப்பதில் ஏற்பட்ட லாபம், தற்போது தலைகீழாக திரும்புவதாக, அது தெரிவித்துள்ளது.

என்ன பரிந்துரைகளை தெரிவிப்பீர்கள் என்று பிராக்சிஸ் கேட்டபோது, பதிலளித்தவர்கள் பலர் மொபைல்போன் அல்லது கம்ப்யூட்டரைவிட டிவி மூலம் கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் தேவை என்றனர்; கல்விக் கடன் மற்றும் தங்கள் பள்ளிகளுக்கு சக கற்றல் குழுக்களை அமைத்தல், வகுப்பு வசதிகளிய கேட்டார்கள்.

கறுப்பு சந்தைப்படுத்தப்பட்ட சானிடரி நாப்கின்கள்

சானிட்டரி பேட் வாங்குவதில் ஆகும் அதிக செலவு மற்றும் சங்கடம் போன்றவை, அவற்றை பெற தங்கள் பள்ளிகளை நம்புவதற்கு பெண்களை வழிவகுக்கிறது. பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் சானிட்டரி பேட் அணுகல் குறைந்திருப்பது பிராக்சிஸ் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. ஆய்வில் பங்கேற்ற 290 பேரில் 204 பேர் தங்களால் சானிடரி பேட் பெற முடியவில்லை என்றும், எட்டு பேர் சில நேரங்களில் தான் பெற முடிந்ததாகவும் கூறினர்.

நேர்காணலில் பங்கேற்ற பெண்கள், துணியை பயன்படுத்துவதில் உள்ள சங்கடம் பற்றி குறிப்பிட்டனர். அது குறைவாக உறிஞ்சக்கூடியது மற்றும் ஆடைகளை கறைபடுத்துகிறது. சானிட்டரி பேட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக, அனு கூறினார்: "ரூ.30-க்கு விற்கப்பட்ட பாக்கெட் தற்போது ரூ. 50 என்று விற்பதால் கூடுதல் செலவாகிறது, எனவே எங்களால் வாங்க முடியாது" என்றார்.

சானிட்டரி பேட் இல்லாத நிலையில், பெண்களுக்கு இனப்பெருக்க பாதை நோய்த்தொற்றின் அபாயத்தை அது அதிகரிக்கும்; அழுக்கு துணி -- மற்றும் மண் அல்லது இலைகளை கூட -- சிலர் பயன்படுத்த வாய்ப்புள்ளதால், பொது வினியோக திட்டம் மூலம் சானிட்டரி பேட் விநியோகிக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது என்று பிபிஇஎஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ரேணுகா கூறினார் . "இது முழு குடும்பத்திற்கும் ஒரு பாக்கெட் என்று இருக்கக்கூடாது, மாதவிடாய் பெண்கள் ஒவ்வொருவருக்கும் குறைந்தது இரண்டு பாக்கெட்டு தர வேண்டும்," என்று அவர் வலியுறுத்தினார்.

குழந்தை திருமணம், உழைப்பு மற்றும் கடத்தல்

தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டம் குரும்பப்பட்டி கிராமத்தை சேர்ந்த பவானியின் குடும்பம் கடனில் மூழ்கியுள்ளதாக, பிராக்சிஸ் கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. குடும்பத்தின் மருத்துவச் செலவுகளை ஈடுகட்டவும், ஐந்து பேரை கொண்ட தங்கள் குடும்பத்தினரின் உணவு தேவைக்காகவும் ஊரடங்கு நேரத்தில் உணவுப்பொருட்கள் வாங்கவும் அவரது பெற்றோர் கடன் வாங்கினர்; இப்போது அவர்கள் வேலைகளையும் இழந்துள்ளனர். எனவே, அச்சிறுமி பள்ளியை விட்டு விலகி, குடும்ப வருமானத்திற்காக பணிக்கு செல்வாள் என்று பெற்றோர் எதிர்பார்த்துள்ளனர்.

தொற்றுநோய் மற்றும் ஊரடங்கு காரணமாக அதிகரித்து வரும் கடன் மற்றும் வேலை இழப்புகளால், இதுபோல் ஆயிரக்கணக்கான பெண்கள் பள்ளிகளை விட்டு விலகக்கூடும்; குடும்பத்தினரும் தங்களது மகள்கள், கல்வியைத் தொடராமல் இனி வேலைக்கு செல்ல வேண்டும், வருவாய் ஈட்ட வேண்டும் என்று விரும்புவதாக, பிபிஇஎஸ் நிறுவனத்தை சேர்ந்த ரேணுகா கூறினார். "நாட்டில் கடன் வாங்குதல் 25% அதிகரித்துள்ளது, ஒரு பெண் வேலைக்கு செல்வதாக உறுதி அளிக்க வேண்டும் அல்லது திருமணத்திற்கு சம்மதித்து பாதிப்பை சந்திப்பாள் ," என்று அவர் கூறினார்.

மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம், பஞ்ச்காரா கிராமத்தை சேர்ந்த குழந்தை உரிமை ஆர்வலர் ஜெயஸ்ரீ மொந்தல், 19, பெண்கள் தங்கள் பணியிடங்கள் பாதுகாப்பானதா என்பதை சரிபார்க்காமல் நகரங்களில் வேலைக்கு அனுப்பப்படும் சூழ்நிலைகள் பெருகக்கூடும் என்று அஞ்சுகிறார்; இதேபோல் திருமணங்களும் இருக்கலாம்; மணமகனின் குணநலன்களை சரிபார்க்காமல் ஏற்பாடு செய்கிறார்கள் இதனால் பெண்கள் கடத்தலுக்குக்கூட ஆளாக நேரிடும். "கிராமங்களில் திருமண நிச்சய நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன," என்று அவர் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

கொரொனா தொற்று காலத்தில் வளரிளம் பெண்கள் பாலியல் சுரண்டல், துன்புறுத்தல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறையால் மிகவும் பாதிக்கப்படுவதாக, யுனிசெஃப் அறிக்கை தெரிவித்துள்ளது. மோசமான பொருளாதார நிலைமைகளுடன் “குற்றவாளிகளுக்கு இளம் பருவ சிறுமிகளை சுரண்டுவதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன” என்ற அறிக்கை, உயிர்வாழ்வதற்கான அடிப்படை தேவைகளை அடைய வேண்டும் என்றது. அறிக்கை மேலும் கூறியது: “அடக்கம் செய்யும் குழுக்கள், ஓட்டுநர்கள், முன்னணி சுகாதார ஊழியர்கள் மற்றும் பலர் கணக்குகள் வாயிலாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளனர்; ஆனால், உணவு மற்றும் தடுப்பூசிகளுக்கு ஈடாக பாலின பரிமாற்றம் என்று கோரப்படும் நிலை உள்ளது" என்கிறது அறிக்கை.

(திவாரி, இந்தியா ஸ்பெண்ட் முதன்மை செய்தியாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளைrespond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கண நடை கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.