முதல்கட்ட தேர்தல் வேட்பாளர்களில் 32% கோடீஸ்வரர்கள், 49% பட்டதாரிகள், 17% பேர் குற்ற வழக்கு உள்ளவர்கள்
மும்பை: மக்களவை தேர்தலில் முதல் கட்டமாக போட்டியிடும் வேட்பாளர்களில் 213 பேர் (17%), குற்றவியல் வழக்குகளை எதிர்கொள்கின்றனர்; இதில் 146 பேர் (12%) கடுமையான குற்றச்சாட்டுக்களை கொண்டிருப்பதாக, வேட்பாளர்களின் பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்த ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ADR) தெரிவிக்கிறது.
மொத்தமுள்ள 1,266 வேட்பாளர்களில் மூன்றில் ஒரு பங்கு (32%) அல்லது 401 பேரின் பிரமாணங்களை ஆய்வு செய்ததில், அவர்களின் சொத்து மதிப்பு ரூ.1 கோடி அல்லது அதற்கு மேல் உள்ளது. முக்கிய கட்சிகளிl தெலுங்கு தேசம் கட்சி (TDP) மற்றும் தெலுங்கானா ராஷ்ட்ரா சமிதி (TRS) இரண்டிலுமே அனைத்து வேட்பாளர்களும் (25 டிடிபி மற்றும் 17 டிஆர்எஸ் ) 'கோடீஸ்வர' வேட்பாளர்கள்.
வேட்பாளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தாங்கள் பட்டதாரி அல்லது அதற்கு மேல் என்று கூறியுள்ளனர். அதே நேரத்தில் 1.5% பேர் எழுதப்படிக்க தெரியாது என்றும்; 5.2% பேர் படிப்பறிவு உள்ளவர்கள் என்றும் கூறியுள்ளனர்.
வேட்பாளர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் 25 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள்; மேலும் பாதிக்கும் மேலானவர்கள் 41 முதல் 60 வயது கொண்டவர்கள்.
முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 11, 2019 இல் தொடங்கியது. இதில் போட்டியிடும் 1,279 வேட்பாளர்களில் 1,266 பேரின் பிரமாண வாக்குமூலத்தை ஜனநாயக சீர்திருத்த சங்கம்- ஏ.டி.ஆர்.(ADR) ஆய்வு செய்தது. முழுமையற்ற அல்லது சரியாக ஸ்கேன் செய்யப்படாத 13 வேட்பாளர்களின் வாக்குமூலங்கள் ஆய்வு செய்யப்படவில்லை.
தேர்தலில் போட்டியிட வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் வேட்பாளர்கள் தங்களஹ்டு வருமானம் மற்றும் சொத்துக்களின் விவரங்கள், பான் எனப்படும் வருமான வரி கணக்கு எண், வருமான வரி கணக்கு தாக்கல் உள்ளிட்ட விவரங்களுடன் கொண்ட (படிவம் 26) சமர்ப்பிக்க வேண்டும். வேட்பாளர் தன் மீதுள்ள வழக்கு, எந்தவொரு கிரிமினல் வழக்குகளின் விவரங்களையும் பட்டியலில் தெரிவிக்க வேண்டும். ஒரு வேட்பாளர் பொய்யான வாக்குமூலத்தை தாக்கல் செய்திருந்தால், அவரை ஆறு மாதங்களுக்கு சிறையிலடைக்கலாம்/ அல்லது அபராதம் விதிக்க முடியும்.
தற்போது நடக்கும் 17வது மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரமாண வாக்குமூலங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் கிடைக்கின்றன.
கிரிமினல் வழக்குகள்
தீவிர குற்ற வழக்குகளை எதிர்கொள்ளும் 146 வேட்பாளர்களில், 12 பேர் கடந்த காலங்களில் அதற்காக தண்டிக்கப்பட்டதாக கூறியுள்ளனர். குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட தேதியில் இருந்து ஆறு ஆண்டுகளுக்கு அவர்கள் தேர்தல்களில் போட்டியிட முடியாது; ஆனால், அவர்கள் இரண்டு ஆண்டு அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்க வேண்டும்.
காங்கிரஸ் வேட்பாளர்களில், 27% (83 இல் 22) பேர் கடுமையான கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்; பா.ஜ.க. 19% (83 இல் 16), பகுஜன் சமாஜ் கட்சியின் 13% (32 இல் 4); ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் 40% (25 இல்10); தெலுங்கு தேசம் கட்சியில் 8% (25இல் 2); டி.ஆர்.எஸ். கட்சியில் 18% (17 இல் 3) பேர் தீவிர கிரிமினல் வழக்கு உள்ளவர்கள்.
பத்து பேர் கொலை தொடர்பான வழக்குகளை எதிர்கொள்கின்றனர்; 25 பேர் மீது கொலை முயற்சி வழக்குகளும், நான்கு பேர் மீது கடத்தல் வழக்குகள், 16 மீது பெண்களுக்கு எதிரான வழக்குகள், 12 பேர் மீது வெறுப்பு பேச்சு வழக்குகள் இருப்பதாக ஏ.டி.ஆர். பகுப்பாய்வு கூறுகின்றன.
முக்கிய கட்சிகளிள் எடுத்துக் கொண்டால், இந்திய தேசிய காங்கிரஸ் (காங்கிரஸ்) வாய்ப்பு தந்துள்ள வேட்பாளர்களில் 42% (83 இல் 35) பேர் தங்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாக அறிவித்துள்ளனர்; பா.ஜ.க.வில் 36% (83 இல் 30) பேர்; பகுஜன் சமாஜ் கட்சி (பி.எஸ்.பி.) 25% (32இல் 8) கிரிமினல் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு தந்துள்ளன.
16 வது மக்களவை பாராளுமன்ற உறுப்பினர்களில் 55% குற்றவியல் குற்றச்சாட்டுகள் எதிர்கொள்பவர்கள் பா.ஜ.க.வினர் என்று, மார்ச் 30, 2019 அன்று இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்திருந்தது.
ஆந்திர பிரதேசத்தில் போட்டியிடும் ஒ.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் (YSRCP) கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் வேட்பாளர்கள் 52% (25 இல் 13) பேர் ஆகும்.
தென் இந்தியாவை அடிப்படையாக கொண்ட மற்ற கட்சிகளில் தெலுங்கு தேசம் கட்சி (டி.டி.பி.) 16% (25 இல் 4), டி.ஆர்.எஸ். 29% (17 இல் 5) பேர் குற்றவியல் வழக்குகளை கொண்டிருக்கின்றனர்.
முதல் கட்டத்தில் தேர்தல் நடந்த 91 தொகுதிகளில் 37 இடங்களில் குற்ற வழக்கு உள்ள வேட்பாளர்கள் மூன்று அல்லது அதற்கு மேற்பட்டவர்களாக உள்ளனர். ஆந்திராவின் நந்தியால் தொகுதியில் போட்டியிடுவோரில் எட்டு வேட்பாளர்கள் கிரிமினல் வழக்கு உள்ளவர்கள்; தெலுங்கானாவின் நிஜாமாபாத் தொகுதியில் ஏழு; ஆந்திராவின் நர்சாபுரம் தொகுதி; தெலுங்கானாவின் கம்மம் தொகுதியில் தலா ஆறு பேர்.
ரூ.1 கோடி அல்லது அதற்கு மேல் சொத்து
நாம் ஏற்கனவே சொன்னது போல் வேட்பாளர்களில் மூன்றில் ஒரு பங்ஈனர், ரூ. 1 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள சொத்துக்களை வைத்திருப்பதாக அறிவித்துள்ளனர். பிரதான கட்சிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களில்83 இல் 69 (83%) பேர்; பா.ஜ.க.வில் 83இல் 65 வேட்பாளர்கள் (78%), பி.எஸ்.பி. இல் இருந்து 32 வேட்பாளர்களில் 15 (47%), ஒய்.எஸ்.ஆர். காங். கட்சியில் 25 வேட்பாளர்களில் 22% (88%) பேர் ரூ. 1 கோடிக்கு மேல் சொத்துக்களை வைத்துள்ளனர்.
ஆந்திரா, தெலுங்கானா மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அதிக கோடீஸ்வர வேட்பாளர்கள் பட்டியலில் முதம் மூன்று இடங்களை கொண்டுள்ளன. 132 (42%) வேட்பாளர்கள் ஆந்திரா; தெலுங்கானாவில் 77 (18%) வேட்பாளர்கள் மற்றும் உத்தரபிரதேசத்தில் இருந்து 39 (41%) வேட்பாளர்களின் சொத்து ரூ.1 கோடிக்கு மேல் உள்ளது.
யார் கோடீஸ்வர வேட்பாளர்கள்
முதல்கட்ட தேர்தல் நடந்த தொகுதிகளின் வேட்பாளர்களில் மூன்றில் ஒரு பங்கினர், கடந்த நிதியாண்டின்படி தங்களிடம் ரூ.1 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக கூறியுள்ளனர். தெலுங்கானாவின் செவெல்லா தொகுதியில் இருந்து காங்கிரஸ் வேட்பாளரான கொண்டா விஸ்வேஷ்வர ரெட்டி, ரூ. 895 கோடிக்கு மேல் சொத்துக்களை வைத்துள்ளார்; ஆந்திரப் பிரதேசத்தின் விஜயவாடா தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பிரசாத் வீரா பொட்லுரி, ரூ 347 கோடிமதிப்புள்ள சொத்துக்கள்; ஆந்திராவின் நரசபுரம் தொகுதி வேட்பாளரான, தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸில் இணைந்த கனுமூரு ராஜாவின் மொத்த சொத்து மதிப்பு 325 கோடி ரூபாய்.
அதேபோல், கடந்த நிதியாண்டில் அதிக வருவாய் கிடைத்ததாக தெரிவித்த முதல் மூன்று வேட்பாளருகளும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவை சேர்ந்தவர்கள். வேட்பாளர்கள் ஜெயதேவ் காலே மற்றும் பீடா மஸ்தான் ராவ் ஆகியோருக்கு முறையே ரூ. 40 கோடி மற்றும் ரூ. 33 கோடி வருவாய் கிடைத்துள்ளது. பல்வேறு வணிகம், விவசாயம், நாடாளுமன்ற சம்பளம், முதலீடு மற்றும் வருமானம் ஆகியவற்றை வருவாய் ஆதாரமாக காலே குறிப்பிட்டுள்ளார். ராவ் தனது வருமானமாக வணிகம், வாடகை, வியாபார குழுக்கள் (பி.எம்.எஸ். குழுமம்), இறால் பண்ணை மற்றும் ஏற்றுமதி, மாநில அரசின் ஓய்வூதியம் ஆகியவற்றில் இருந்து வருமானம் ஈட்டுவதாகக் கூறினார்.
டி.ஆர்.எஸ் நிறுவனத்தின் கத்தம் ரஞ்சித் ரெட்டிக்கு ரூ 16 கோடிக்கு மேல் வருமானம் உள்ளது. சம்பளம், வாடகை, வியாபாரம் மற்றும் விவசாயம் ஆகியவற்றை வருவாய் ஆதாரமாகக் கூறினார்.
கட்சி வாரியாக சராசரியாக அதிகபட்ச சொத்து கொண்டிருப்பது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் 25 வேட்பாளர்களின் சராசரி ரூ. 62.94 கோடி (9.1 மில்லியன் டாலர்); அடுத்ததாக, தெலுங்குதேசம் கட்சியின் 25 வேட்பாளர்கள் சராசரி ரூ. 57.77 கோடி மதிப்புள்ள சொத்து கொண்டுள்ளனர் ($ 8.3 மில்லியன்). டிஆர்எஸ் கட்சியின் 17 வேட்பாளர்கள் சராசரியாக ரூ. 45.87 கோடி (6.6 மில்லியன் டாலர்கள்) சொத்துக்களை கொண்டுள்ளனர்.
காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வின் தலா 83 வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு முறையே ரூ 21.93 கோடி (3.1 மில்லியன் டாலர்) மற்றும் ரூ. 14.56 கோடி (2.1 மில்லியன்) ஆகும்.
சொத்துக்கள் எதுவும் இல்லை என்று அறிவித்தவர்கள், 23 வேட்பாளர்கள். குறைந்தபட்ச சொத்துக்களை (பூஜ்ய சொத்துக்கள் வேட்பாளர்களை தவிர்த்து) அறிவித்த வேட்பாளர் தெலுங்கானாவின் செவெல்ல தொகுதியில் இருந்து பிரேம் ஜனதாத் (பதிவு செய்யப்படாத) கட்சியின் நல்லா பிரேம் குமார், அவர், தமது வங்கி கணக்கில் ரூ.500 மட்டுமே இருப்பு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஒடிசாவின் கோராபுட் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனிஸ்ட்) வேட்பாளர் ராஜேந்திர கெண்டுர்கா ரூ.565; மற்றும் தெலுங்கானாவின் நிஜாமாபாத் தொகுதி சுயேச்சை வேட்பாளர் அலகுந்த ராஜன்னா ரூ. 1,000 இருப்பு மட்டுமே உள்ளதாக அறிவித்துள்ளார்.
கல்வி தகுதி
முதல்கட்ட தேர்தல் கள வேட்பாளர் 1,266 பேரில் 526 பேர் (42%), 5 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு இடையே படித்திருப்பதாக, தங்களின் கல்வித் தகுதியை அறிவித்துள்ளனர். 619 (49%) வேட்பாளர்கள் ஒரு பட்டதாரியாக அல்லது அதற்கு மேல் பட்டம் பெற்றவராக உள்ளனர்.
பா.ஜ.க.வால் நிறுத்தப்பட்ட வேட்பாளர்களில் ஐந்து பேர் ஆராய்ச்சி படிப்பு பட்டம் பெற்றவர்கள்; அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி இத்தைய மூன்று வேட்பாளர்களை கொண்டிருக்கிறது.
மறுபுறம் 19 (1.5%) வேட்பாளர்கள், தங்களுக்கு எழுதப்படிக்க மட்டுமே தெரியும் என்றும்; 66 (5.2%) தங்களுக்கு படிப்பறிவு கிடையாது எனவும் அறிவித்துள்ளனர்.
வயது விவரங்கள்
வேட்பாளர்களில் மூன்றில் ஒரு பங்கினர் (32%) அல்லது 1266 பேரில் 411 வேட்பாளர்கள் 25 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள், பாதிக்கும் மேற்பட்டவர்கள் (53%) அல்லது 671 வேட்பாளர்கள் 41 முதல் 60 வயதிற்குட்பட்டவர்கள் என்று, ஏடிஆர் பகுப்பாய்வு தெரிவிக்கிறது.
அதே நேரம் 172 (14%) வேட்பாளர்கள் தங்கள் வயது 61 முதல் 80 என்றும், இருவர் 80 வயதுக்கு மேல் என்றும் அறிவித்துள்ளனர்.
(அகமது, இந்தியா ஸ்பெண்ட் பயிற்சியாளர்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.