மும்பை: இந்தியாவில் 163 மில்லியன் மக்கள் --அதாவது இது, ரஷ்ய மக்கள் தொகையை விட அதிகம் -- பாதுகாப்பான குடிநீரை பெற முடிவதில்லை. 2017 உடன் முடிந்த ஐந்து ஆண்டுகளில் தேசிய ஊரக குடிநீர் திட்டத்திற்கான ரூ.89,956 கோடி நிதியில் 90% செலவிட்டும் கூட, இலக்கு எட்டப்படவில்லை என்று, அரசு தணிக்கையாளரின் 2018 ஆகஸ்ட் மாத அறிக்கை தெரிவிக்கிறது.

இத்திட்டத்தின் இலக்கு: கிராமப்புற வீடுகளில் 35% குடிநீர் இணைப்பு வழங்கல் மற்றும் ஒருவருக்கு தினமும் 40 லிட்டர் - அதாவது இரண்டு பக்கெட் - வழங்க வேண்டும். இலக்கில் பாதிக்கும் குறைவானது எட்டப்பட்டுள்ளது. “மோசமான செயலாக்கத்திற்கும்”, ”பலவீனமான ஒப்பந்த மேலாண்மை”க்கும் நன்றி என்று தலைமை கணக்கு தணிக்கையாளர் (சி.ஏ.ஜி.) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1.7 மில்லியன் கிராமப்புற இந்திய வாழ்விடங்களில் சுமார் 78% குறைந்தபட்ச குடிநீர் தேவையான நாளொன்றுக்கு ஒருவருக்கு 40 லிட்டர்- தோராயமாக இரு பக்கெட் தண்ணீர்- கிடைப்பதாக கூறுவதால், உண்மையில் அவர்கள் அதை பெறுவார்கள் என்று பொருளல்ல என வல்லுனர்கள் கூறுகின்றனர். 18% கிராமப்புறங்களில் ஒருவருக்கு ஒருநாளைக்கு 40 லீட்டருக்கு குறைவாகவே தேசிய ஊரக குடிநீர் திட்டம் - என்.ஆர்.டி.டபிள்யூ.பி. (NRDWP) கீழ் தண்ணீர் கிடைப்பதாக, நாடாளுமன்றத்தில் 2018 ஜூலையில் அளித்த பதிலில் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

கிராமப்புற இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனும் குடிநீர், சமையல் மற்றும் வீட்டின் பிற அடிப்படை தேவைகளுக்கு "போதுமான, பாதுகாக்கப்பட்ட குடிநீர்" மற்றும் "நிலையான முறையில்" வழங்குவதே என்.ஆர்.டி.டபிள்யூ.பி. நோக்கம் என்று குடிநீர் வழங்கல் மற்றும் நீர்வளத்துறை அமைச்சக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற குடிநீர் இணைப்புகளை நிறுவ, மாநில அரசுகளுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகள் இத்திட்டம் வழங்குகிறது.

Source: Lok Sabha (Unstarred question no.450)

குறிப்பு: 'முழுமையாக உள்ளடக்கிய குடியிருப்பு' ஒருநாளைக்கு ஒரு நபருக்கு குறைந்தது 40 லிட்டர் தண்ணீர் கிடைக்கும். 'பகுதி உள்ளடக்கிய குடியிருப்பில்' நாளொன்றுக்கு ஒரு நபருக்கு 40 லிட்டருக்கு குறைவாகவே கிடைக்கும்.

கடந்த 2012 - 2017ஆம் ஆண்டுகளில் ரூ.81,168 கோடி நிதி செலவிட்டும், கிராமப்புற வாழ்விடங்களில் 40 எல்.பி.சி.டி. (ஒருநாளைக்கு ஒரு நபருக்கு அல்லது ஒருவருக்கு கிடைக்கும் தண்ணீரின் அளவு) 8% மட்டுமே அதிகரித்திருப்பதாகவும், 55 எல்.பி.சி.டி. என்பது 5.5% என அதிகரித்துள்ளதாகவும் என்.ஆர்.டி.டபிள்யூ.பி குறித்த தலைமை கணக்கு தணிக்கையாளரின் அறிக்கை தெரிவிக்கிறது.

மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் வேகமாக தண்ணீர் கிடைத்தாலும், மற்ற நாடுகளை போல் எந்தவொரு பகுதியிலும் பாதுகாப்பான குடிநீர் மக்களுக்கு கிடைப்பதில்லை என்று, 2018 மார்ச் 21-ல் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை வெளியிட்டிருந்தது.

இந்தியாவில் ஏறத்தாழ 163 மில்லியன் மக்கள் தங்கள் குடியிருப்பு பகுதியில் பாதுகாப்பான குடிநீரை பெற முடிவதில்லை - இது பாதுகாப்பற்ற குடிநீர் உள்ள நாடுகளில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ள எத்தியோப்பாவைவிட இரண்டரை மடங்கு அதிகம்.

ரூ. 81,168 கோடி செலவிட்டும் தவறிப்போன இலக்குகள்

"2017 ஆம் ஆண்டிற்கான இடைக்கால இலக்கு, அனைத்து கிராமப்புற வீடுகளில் 50 சதவீதம் குழாய் குடிநீர் இணைப்பு தர வேண்டும்," என்பதே என்று, 2017 ஆகஸ்ட்டில் பாராளுமன்றத்தில் அரசு பதில் அளித்திருந்தது. "2022ஆம் ஆண்டுக்குள் 90 சதவீதம் கிராமப்புற வீடுகளுக்கு குழாய் குடிநீர் இணைப்பு வழங்கப்பட வேண்டும்".

அனைத்து கிராமப்புற குடியிருப்புகள், அரசு பள்ளிகள், அங்கன்வாடி மையங்களுக்கு (அரசு பகல் நேர மையங்கள்) பாதுகாப்பான குடிநீர் வழங்குதல்; கிராமப்புற மக்கள் தொகையில் 50 சதவீதம் பேருக்கு குடிக்கக்கூடிய தண்ணீர் (55 எல்.பி.சி.டி.) குழாய் நீர் வழங்குதல்; மற்றும் 35% கிராமப்புற குடும்பங்களுக்கு வீட்டு குழாய் குடிநீர் இணைப்பு வழங்குவது என்பது திட்டத்தின் இலக்கு ஆகும்.

"சமூக அல்லது நிதி பாகுபாடு தடை இல்லாமல்" கிராமப்புற குடியிருப்பு, மக்களுக்கு 55 எல்.பி.சி.டி. குடிநீரை, "வீட்டு வளாகத்தில் அல்லது 100 மீட்டர் தொலைவுக்குள் கிடைமட்டமாகவோ அல்லது செங்குத்தான தூரத்தில்" வழங்கப்பட வேண்டும் என்று, 2013 என்.ஆர்.டி.டபிள்யூ.பி. வழிகாட்டுதல் தெரிவிக்கிறது.

நீர்வளத்துறை அமைச்சகத்தின் 2011-2022 திட்ட இலக்கு என்பது, ஒவ்வொரு கிராமப்புற இந்தியருக்கும், நாளொன்றுக்கு ஒருவருக்கு 70 லிட்டர் வீதம் அவரது வீட்டு வளாகத்திற்குள்ளாகவோ அல்லது கிடைமட்ட அல்லது செங்குத்தாக 50 மீட்டர் தூரத்திற்குள் குடிநீர் வழங்கப்பட வேண்டும் என்பதாகும்.

"கடந்த டிசம்பர் 2017ல், கிராமப்புற குடியிருப்புகளில் 44% மற்றும் அரசு பள்ளிகளில் 85% பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படும். கிராமப்புற மக்கள்தொகையில் 18% பேருக்கு மட்டுமே குழாய் மூலம் பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட்டதோடு, 17% கிராமப்புற குடும்பங்களுக்கு மட்டுமே குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது '' என்று சி.ஏ.ஜி. அறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த 2017ல் ரூ.81,168 கோடி நிதி செலவிட்டும், கிராமப்புறங்களில் 40 எல்.பி.சி.டி. தண்ணீர் வழங்கல் என்பது 8%; 55 எல்.பி.சி.டி. என்பது 5.5% மட்டுமே அதிகரித்ததாக, என்ஆர்டிடபிள்யூபி குறித்த தலைமை கணக்கு தணிக்கையாளர் அறிக்கையில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்ட நிதி ரூ. 89,956 கோடியில் 90% (ரூ. 43,691 கோடி மத்திய அரசின் பங்கு; மாநில அரசின் பங்கு ரூ. 46,265 கோடி) வழங்கப்பட்டது. 2014-15ஆம் ஆண்டில் அதிகபட்சம் (84%) செலவிடப்பட்ட திட்டமாக இது இருந்தது.

"செயல்திறன் குறைந்த மேலாண்மை" மற்றும் குடிநீர் விநியோக திட்டங்களுக்கு "பலவீனமான ஒப்பந்த நிர்வாகம்" ஆகியவற்றால் திட்டப்பணிகள் "முழுமை அடையாமல், கைவிடப்பட்டும்; செயல்பாடு இல்லாததால உபகரணங்கள் வீணாகியதோடு உற்பத்தித்திறன் மிக்க செலவினம் அதிகரித்தது போன்றவற்றால் மொத்த நிதியில் ரூ. 2,212.44 கோடி செல்வானதாக, அறிக்கை அடையாளம் காட்டியுள்ளது.

"சமீபத்தில், என்.ஆர்.டி.டபிள்யூ.பி.யின் செயல்திறனை மேம்படுத்துவதற்கு அது மறுசீரமைக்கப்பட்டது," என்று 2018 அக்டோபர் 5-ல் இந்தியா ஸ்பெண்டிற்கு அளித்த நேர்காணலில் குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சக செயலாளர் பரமேஸ்வரன் ஐயர் தெரிவித்தார். “கண்காணிப்பு அமைப்பு, போட்டி மற்றும் சவால் முறை நிதி [தனியார் துறையால் வழங்கப்படும் சமூக விளைவுகளை எட்டுவதற்கான பங்களிப்பு செய்தல்] போன்றவற்றை நோக்கி என்.ஆர்.டி.டபிள்யூ. சீர்த்திருத்தங்கள் உள்ளன” என்றார் அவர்.

என்.ஆர்.டி.டபிள்யூ.பி. மறுசீரமைப்புக்கு பின், 2020 வரையிலான இரண்டு ஆண்டுகளுக்கும் சேர்த்து ரூ. 23,050 கோடிக்கு மத்திய அரசு ஒப்புதல் தந்ததாக, 2017 நவம்பர் மாத அரசு செய்திக்குறிப்பு கூறுகிறது.

இத்திட்டத்தை அரசு மறுசீரமைப்பு செய்திருந்தாலும், இலக்கை எட்டுவது என்பதும் இன்னமும் கடினமானது தான் என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

தனியான அணுகல் மட்டுமே போதாது

அணுகுதல் என்பது கிடைப்பதாக மாறாதது ”அதிகரித்து வரும் கவலை”யாக உள்ளது என்று சூழலியல் ஆராய்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பான அசோகா அறக்கட்டளை வழக்கறிஞர் வீணா ஸ்ரீனிவாசன் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார். “சி.ஏ.ஜி. அறிக்கையில் கூறப்பட்டுள்ளவற்றுடன் நான் உடன்படுகிறேன். பொதுவாக, சுதந்திரமான கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டிற்கு செலவழிப்பது மிகவும் குறைவாக இருக்கும்; கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு வரவு செலவுத் திட்டங்கள் அரிதாகவே செலவிடப்படுகின்றன" என்றார்.

“அரசு தகவலின்படி, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும் வீடுகள் 17% மட்டுமே” என்று, அரசுசாரா அமைப்பான வாட்டர் எய்ட் இந்தியா தலைமை நிர்வாகி வி.கே.மாதவன் இந்தியா ஸ்பெண்டிடம் கூறினார். “இது பெரும் சவாலாக இருக்கும். தண்ணீருக்கான ஆதாரமாக இருப்பினும், கிராமப்புற இந்தியாவின் பல பகுதிகளில் நீர்வளம் குறைந்து, மேற்பரப்பு வறண்டு கோடைக்காலங்களில் வறட்சி ஏற்படுகிறது” என்றார்.

இந்தியாவில் கிடைக்கக்கூடிய தண்ணீர் வளம், 2025ஆம் ஆண்டில் 1,341 கியூபிக் மீட்டராக (cu.m) இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது, 2050ஆம் ஆண்டில் 1,140 கியூபிக் மீட்டராக குறையும் என்று 2017ஆம் ஆண்டுக்கான மத்திய நீர்வளத்துறை அமைச்சக மதிப்பீடு அறிக்கையை மேற்கோள்காட்டி இந்தியா ஸ்பெண்ட் 2017 டிசம்பர் 30-ல் கட்டுரை வெளியிட்டிருந்தது. 2011 உடன் முடிந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் கிடைக்கக்கூடிய தண்ணீர் வளம், 15% குறைந்துள்ளது.

அரசு “உலர் குழாய் பிரச்சனை” -- அதாவது உபகரணங்கள் இருந்தும் தண்ணீர் கிடைக்காத சூழல் -- குறித்து பகிர்ந்து கொண்டுள்ள புள்ளி விவரங்கள் “மிகவும் தெளிவற்று” உள்ளன. குறிப்பாக பருவக்காலங்களில் தண்ணீர் டேங்கர்களை பல கிராமங்கள் நம்பியிருக்கின்றன என்றார் ஸ்ரீனிவாசன்.

தரமான குடிநீரோடு அதை கிடைப்பதற்கான நம்பகத்தன்மை பற்றியும் இந்தியா கருத்தில் கொள்ள வேண்டும் என்று வல்லுனர்கள் தெரிவித்தனர்.

"குடிநீர் பாதுகாப்புக்கான அளவீடாக அதன் தரம், அளவு, அணுகல் மற்றும் நம்பகத்தன்மையை காணத்தவறினால், திட்டங்கள் சொத்து உருவாக்குவது பற்றி மட்டுமே இருக்கும்" என்று, அர்க்யம் அமைப்பின் வாட்சன் திட்ட மேலாளர் கார்த்திக் சேஷன் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

அரசின் தகவல் அமைப்பு முறையின் புள்ளி விவரங்கள் பெரும்பாலும் உண்மையை பிரதிபலிப்பதாக இல்லை என்று சேஷன் தெரிவித்தார்.

உதாரணத்திற்கு, பாசிம் சம்ரன் மாவட்டத்தில் (வட மேற்கு பீகார்) நாங்கள் ஆய்வு மேற்கொண்டதில் சில இடங்களில் தண்ணீரில் வரையறுக்கப்பட்ட பில்லியனுக்கு 10 பாகங்கள் என்பதைவிட அதிகளவில் நச்சுத்தன்மை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வேறுசில இடங்களில் அதிகபட்சமாக 397 பி.பி.ப்பீ. இருந்தது” என்றார். "ஆனால் ஐஎம்ஐஎஸ் (ஒருங்கிணைந்த மேலாண்மை தகவல் அமைப்பு), இந்த பிராந்தியங்கள் நச்சு தண்ணீரால் பாதிக்கப்பட்டவை என்று அடையாளம் காண தவறின” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அரசு புள்ளி விவரங்களின் படி 69,258 "குடிநீர் பாதிப்பு சார்ந்த-பாதிக்கப்பட்ட குடியிருப்புகள்” சேர்ந்த 46 மில்லியன் மக்கள் --இது ஒடிசாவின் மக்கள் தொகைக்கு சமமானது-- உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Lok Sabha (Unstarred question no.450)

“தண்ணீரின் தரத்தை சோதிப்பதற்கான நமது கட்டமைப்புகள் மிகவும் ஆபத்தானவை” என்று கூறும் வாட்டர் எய்ட் அமைப்பின் மாதவன் “மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான ஆய்வங்களில் ஆட்கள், கருவி பற்றாக்குறை உள்ளது” என்றார்.

மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தால் 2017-ல் தொடங்கப்பட்ட தேசிய குடிநீர் தர துணை திட்டம், சுமார் 28,000 ஆர்சனிக் மற்றும் புளோரைடு பாதிக்கப்பட்ட குடியிருப்புகளை அடையாளம் கண்டு, அங்கு சுத்தமான குடிநீருக்கான "அவசரத் தேவையை" தெரிவிக்கும். மார்ச் 2021 உடனான நான்கு ஆண்டுகளுக்கு, மத்திய அரசு பங்களிப்பாக ரூ.12,500 கோடியை பங்களிப்பு செய்ய வேண்டியிருக்கும் என்று 2017 நவம்பரில் அரசு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

(பல்லியத், இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வாளர்)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.