நவி மும்பை: தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 10 அணிகள் மகாராஷ்டிராவில் தயாராக இருந்த சூழலில், நிசர்கா புயல் 2020 ஜூன் 3ம் தேதி, மும்பைக்கு தெற்கே கரையை கடந்தது. எந்தவொரு மருத்துவ நெருக்கடி ஏற்படுவதை தவிர்க்க, 150 கோவிட்-19 நோயாளிகள் மிகவும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு இருந்தனர்.

பலத்த மழை மற்றும் மணிக்கு 110 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசி, மரங்களை வேரோடு சாய்த்தது; குடியிருப்புகளின் மேற்கூரைகள், தகரங்கள் தூக்கி வீசப்பட்டன, தாழ்வான சில பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து சேதத்தை ஏற்படுத்தியது. தற்போது கோவிட்19 தொற்றின் ஹாட்ஸ்பாட்டாக மாறிவிட்ட இந்தியாவின் நிதித்தலைநகரான முப்பை, இந்த புயலால் மேலும் மோசமானது. 12-18 மணி நேரத்திற்கும் மேலாக தீவிரமாக இருந்த புயல், நகருக்கு அப்பால் சில மைல் தொலைவில் கரையை கடந்ததால், பல ஆயிரம் பேரின் வாழ்வாதாரங்கள் தப்பின.

இறுதியில் நிசர்கா கரையை கடந்த ராய்காட் பகுதியில், எட்டு அடி உயரத்திற்கு ராட்சத அலைகள் கடலோரப்பகுதிகளில் தோன்றி, குடியிருப்புகளை தாக்கி சேதப்படுத்தியது. மும்பைக்கு தெற்கே உள்ள அலிபாக், 130 கிமீ வேகத்தில் சூறாவளிக்காற்றின் வேகத்தை உணர்ந்தது. கடலோர மகாராஷ்டிராவின் பல பகுதிகளில், மின்தடை மற்றும் மொபைல்போன் சேவைகள் தடை செய்யப்பட்டதாக, அரசு அறிக்கையின்படி கூறப்பட்டது.

கடந்த 1948ம் ஆண்டு முதல், பெரியதொரு புயலை மும்பை சந்தித்ததில்லை. வங்காள விரிகுடாவால் சூழப்பட்ட இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் புயல்கள் பொதுவாக அடிக்கடி நிகழ்கின்றன; ஆனால் அரபிக்கடலில் அவ்வாறு அதிகம் இல்லை.

எப்படியானாலும், கடலோரப்பகுதிகளில் ஆபத்தான முறையில் கட்டுமானங்களை அனுமதித்து வரும் மும்பையில், அதன் கடலோர காலநிலை இப்படியே பல தசாப்தங்களாக தொடர்ந்து நீடித்திருக்கும் என்று கருத முடியாது. கொலம்பியா பல்கலைக்கழகத்தின் காலநிலை விஞ்ஞானி ஆடம் சோபல் தலைமையிலான குழு நடத்திய 2019 ஆம் ஆண்டு ஆய்வில், மும்பை அல்லது அதற்கு அருகாமை பகுதியில் கடுமையான புயல்கள் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

"எங்கள் ஆய்வின் முக்கிய அம்சம் என்னவென்றால், நகரம் அதன் மக்கள் நினைத்தபடி புயல் அபாயத்தில் இருந்து இன்னமும் விடுபடவில்லை; அதேபோல், எங்களது ஆய்வு முடிவுகள் வெளியான ஒரு வருடத்திற்கு இப்படியொரு புயல் தாக்கும் என்று நாங்கள் நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை," என்று சோபல் கூறினார்.

உலகளவில், புயல்கள் மிகவும் தீவிரமாகவும் அடிக்கடி உருவாகும் வகையில் காலநிலை மாற்றம் ஏற்பட்டு வருவதாக, ஐ.நா. காலநிலை மாற்றத்திற்கான சர்வதேச அரசுக்குழுவின் (ஐபிசிசி) செப்டம்பர் 2019 அறிக்கை எச்சரித்தது. அதிகரிக்கும் சான்றுகள், தாழ்வான கரையோரப் பகுதிகளில் இருந்து மக்களையும், முன்னேற்ற நடவடிக்கைகளையும் இடம் பெயர வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டுகின்றன.

ஆனால் மும்பையில் இதற்கு நேர்மாறாக நடக்கிறது: மேற்கு கடற்கரையில் அதிகரித்து வரும் புயல்களின் அச்சுறுத்தலை பொருட்படுத்தாமல், கடற்கரை பகுதிகளில் தொடர்ந்து கட்டுமானங்களை மும்பை நகரம் அமைத்து வருவது எங்களது விசாரணையில் தெரிய வருகிறது.

கடலோர ஒழுங்குமுறை மண்டலம் (CRZ) அறிவிக்கை வெளியிட்டு, இந்தியாவி ன் கடலோரப் பகுதி பாதுகாக்கப்படுகிறது, கடலுக்கு அருகில் கட்டுமானம் மேற்கொள்ள அரசின் அனுமதி தேவைப்படுகிறது. பெரும்பாலான பொருளாதாரத்தடைகள் மாநில அரசுகளால் மேற்கொள்ளப்படுகிறது, ஆனால் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில், பெரிய திட்டங்களுக்கு மத்திய அரசு மட்டுமே அனுமதி தர முடியும், அவை பரிவேஷ் போர்ட்டலில் பதிவு செய்யப்படுகின்றன.

நாட்டின் கடற்கரையோரத்தில் ரியல் எஸ்டேட் திட்டங்களுக்கு அனுமதிக்கப்படுகிறதா என்பதைக் கண்டறிய, நாங்கள் உருவாக்கிய தரவுத்தளத்தில் திட்ட தலைப்புகளை 'வீட்டுவசதி' (housing) மற்றும் 'குடியிருப்பு' (residential) என்ற சொற்களை பதிவிட்டு தேடும் வகையில் குறியீட்டை ஏற்படுத்தி இருக்கிறோம். ஜூலை 2014 முதல் மார்ச் 2020 வரை சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் (MoEFCC) அனுமதித்த 2,000-க்கும் மேற்பட்ட திட்டங்களின் விவரங்களை கையால் பதிவிடுவதன் மூலம் இதை காணும் வகையில் நாங்கள் உருவாக்கி இருக்கிறோம்.

இங்கே நாங்கள் கண்டறிந்தவை: “CRZ + Miscellaneous” என்ற பிரிவின் கீழ் ஜூலை 2014 முதல் மார்ச் 2020 வரை, 52 ‘குடியிருப்பு’ (residential) மற்றும் 34 ‘வீட்டுவசதி’ (housing) திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அனுமதி வழங்கப்பட்ட 52 குடியிருப்பு திட்டங்களில், 36 (69%) மகாராஷ்டிராவில் உள்ளன; அவற்றில் 11 திட்டங்கள் மும்பையிலும், 17 அண்டை பகுதிகளான தானேவிலும் உள்ளன. மீதமுள்ளவற்றில், பிவாண்டி (தானே மாவட்டம்), பன்வேல் (ராய்காட் மாவட்டம்) மற்றும் கலபூர் (ராய்காட் மாவட்டம்) ஆகிய இடங்களில் தலா ஒரு திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

34 ‘வீட்டுவசதி’ திட்டங்களில், ஆறு (17.6%) மகாராஷ்டிராவில் உள்ளன, அவற்றில் நான்கு மும்பையில் உள்ளன.கண்மூடித்தனமான கட்டுமானம் மும்பைக்கு ஒரு கடன்பட்டதாக மாறும்; ஏனெனில், விதிவிலக்காக நிசர்கா போன்ற புயல் தவிர, புவி வெப்பமடைதல் காரணமாக அடிக்கடி புயல்கள் என்பது வழக்கமாகி வருகிறது, இதுபற்றி நாங்கள் பின்னர் விளக்குகிறோம். "இந்த நேரத்தில் மும்பை மிகவும் அதிர்ஷ்டமானது" என்று, புயலின் குறைந்தபட்ச தாக்கத்தை சோபல் சுட்டிக்காட்டினார்.

மாவட்டம் என்று பார்த்தால், மும்பை இந்தியாவின் மிகச்சிறிய மாவட்டம் ஆகும். இங்கே, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஒரு சதுர கிலோமீட்டருக்கு 365 பேர் வாழ்கின்றனர், இது இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டங்களில் ஒன்று. பல நூறு ஆண்டுகளாக நீடித்த கடலோர காலநிலையின் பின்னணியில் இந்த நகரம் நிர்மானிக்கப்பட்டது. ஆனால் காலநிலை மாற்றம் இதை தகர்ப்பதால், அத்தகைய மேம்பாட்டுக் கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

மகாராஷ்டிரா (380), குஜராத் (316), உத்தரபிரதேசம் (153) ஆகியன, ஜூலை 2014 முதல் மார்ச் 2020 வரை 2,053 சுற்றுச்சூழல் அனுமதிகளில் பெரும்பான்மையை (849) பெற்றன என்பது, இந்தியா ஸ்பெண்ட் மேற்கோண்ட ஒரு வருட புலனாய்வில் தெரியவந்தது. எங்களது ஊடாடும் வரைபடத்தில், தரவுகளை நீங்கள் இங்கே காணலாம்.

குறிப்பிட்ட திட்டங்களுக்கு ஏற்ப, கடலோர ஒழுங்குமுறை மண்டலம் (CRZ) சட்டங்கள் மாற்றப்பட்டன.

இந்தியாவின் கடலோரப்பகுதி மேம்பாட்டு பணிகளை கட்டுப்படுத்த ஏதுவாக, கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை, 1991 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது, அதன் பின்னர் பலமுறை அது திருத்தப்பட்டது. இந்த மாற்றங்களில் பலவும், ரியல் எஸ்டேட் துறையை மனதில் வைத்து செய்யப்பட்டதால், மிகவும் மலிவு வீட்டு திட்டங்கள் கட்டப்படலாம். "இது வீட்டு வசதித்துறைக்கு மட்டுமல்ல, தங்குமிடம் தேடும் மக்களுக்கும் பயனளிக்கும்" என்று, இந்த அறிவிப்பில் மேலும் திருத்தங்கள் செய்யப்பட்டபோது, டிசம்பர் 2018 வெளியீட்டில் மத்திய அரசு கூறி இருந்தது.

குறிப்பிட்ட திட்டங்களை மனதில் வைத்து சில திருத்தங்கள் செய்யப்பட்டதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.

"மும்பையின் சூழலில், கடலோர ஒழுங்குமுறை மண்டலம் (CRZ) அறிவிப்பில் பல நீர்த்துப்போகச் செய்யும் அம்சங்கள் இருந்தன, அவற்றில் பலவும் குறிப்பிட்ட திட்டங்கள் அல்லது உள்கட்டமைப்பு திட்டங்களுடன் தொடர்புடையவை, அவை இங்கு திட்டமிடப்பட்டுள்ளன," என்று, மும்பையைச் சேர்ந்த கட்டிடக்கலைஞர், நகர்ப்புற ஆராய்ச்சியாளர் மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் திட்டமிடலில் ஈடுபட்டுள்ள இடம் சார்ந்த மாற்றுகளுக்கான கூட்டமைப்பின் ஒரு பகுதியான ஸ்வேதா வாக் கூறினார். கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் நீர்த்துப்போகும் அம்சங்களில் ஒன்று, கடல் பகுதியில் இருந்து பாதுகாக்கப்பட்ட இடம் என்பது, 2011ம் ஆண்டில் 100 மீட்டர் என்றிருந்தது, 2019இல் 50 மீட்டராக குறைத்துள்ளதாக, வாக் கூறினார்.இது மும்பையில் உள்ள மஹிம் விரிகுடா போன்ற சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளைச் சுற்றிலும் வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது.

புவி வெப்பமடைதல் மற்றும் புயல்கள்

நாங்கள் சொன்னது போல், மும்பையை தாக்கிய கடைசி சூறாவளியாக நிசர்கா இருக்காது என்பதை, அறிவியல் முடிவுகள் சுட்டிக்காட்டுகிறது. "புவி வெப்பமயமாதல் காரணமாக கடலில் ஏற்படும் மாற்றங்கள் அரபிக்கடலில் வெப்பமண்டல புயல்களை உருவாக்கும் வாய்ப்பை அதிகரித்துள்ளன," என்று புனேவில் உள்ள இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தின் (ஐஐடிஎம்) காலநிலை விஞ்ஞானி ராக்ஸி மேத்யூ கோல் கூறினார். பொதுவாக ஜூன் மாதம் புயல்கள் உருவாக சாதகமான நேரமல்ல; ஆனால் புவி வெப்பமயமாதல் போன்றவை, நிசர்கா புயலுக்கு வழி ஏற்படுத்தி இருக்கக்கூடும் என்று கோல் கூறினார்.

"வளிமண்டல நிலைமைகள் சாதகமாக இல்லை என்றாலும், அரபிக்கடலில் அதிக கடல் வெப்பநிலை - புவி வெப்பமடையும் போக்கில் செல்வது- குறைந்த அழுத்த அமைப்பில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் பின்னர் புயலாக தீவிரமடைவதில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது" என்று கோல் கூறினார்.

எதிர்கால புயல்களை எதிர்கொள்ள ஆயத்தமாவது என்பது சதுப்பு நிலங்கள், ஆறுகள், வெள்ளப்பெருக்குகள் மற்றும் ஈரநிலங்கள் போன்ற இயற்கையின் பாதுகாப்பை அதிகரிப்பதாகும் என்று கோல் கூறினார். தற்போது, இந்த இயற்கையான பாதுகாப்புகள் அனைத்தும் மனிதனால் உருவாக்கப்பட்ட பல திட்டங்கள் மூலம் தாக்குதலுக்கு உள்ளாகின்றன; இதுபற்றி நிறுத்தப்பட்ட சுற்றுச்சூழல் என்ற பிரிவில் இந்தியா ஸ்பெண்ட் குறிப்பிட்டு வந்துள்ளது.

மும்பையின் சதுப்பு நிலங்கள் பேரழிவுகளுக்கு எதிரான அதன் முதல் வரிசையாகும் என்று இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸின் ஆராய்ச்சி இயக்குநரும் இணை இணை பேராசிரியரும் ஐபிசிசி ஆசிரியருமான அஞ்சல் பிரகாஷ் தெரிவித்தார். "அவை [சதுப்பு நிலங்கள்] கடந்த காலங்களில் பல நேரம் இயற்கை பேரிடரில் இருந்து காப்பாற்றி இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது," என்று அவர் கூறினார். "பின்னர், அந்த காடுகள் முறையாக அழிக்கப்பட்டுள்ளன; அவை நீண்ட காலத்திற்கு பேரழிவை ஏற்படுத்தும்," என்றார்.

அதிவேக காற்று தவிர, புயல் காலத்தில் ஏற்படும் உடனடி அச்சுறுத்தல் அதிக மழைப்பொழிவு ஆகும், அது பெரிய அளவிலான வெள்ளத்திற்கு வழிவகுக்கும்.

கடந்த 2005 ஆம் ஆண்டில், இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக பெய்த மழையால் மும்பை பலத்த வெள்ளத்தை சந்தித்தது. பேரிடருக்கு பிறகு வெளியான மாதவ் சிட்டாலே அறிக்கை (மார்ச் 2006), மாநகரத்தில் போதிய வடிகால் அமைப்பு இருப்பதாகவும், நகரின் வளர்ச்சியால் குளங்கள், நீர் நிலைகளை இழந்து வருவதாகவும், அதன் வடிகால் பகுதிகளை குடிசைகள் ஆக்கிரமித்துள்ளதாகவும், சதுப்புநிலப்பகுதிகள் குறைந்து வருவதாகவும் அடையாளம் காணப்பட்டது.

"இவை மும்பை கவனம் செலுத்த வேண்டிய ஏற்றுக்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள்" என்று பிரகாஷ் வலியுறுத்தினார். "வடக்கின் முக்கிய வடிகால் இடமாக விளங்கும் மிதி நதி, கடும் ஆக்கிரமிப்புகள் மற்றும் தொழில்துறை கழிவுகளை ஆற்றில் வெளியேற்றுவதால் திறந்தவெளி சாக்கடையாக மாறியுள்ளது" என்றார்.சமீபத்திய ஆண்டுகளில், முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் முறைகளில் அதிக கவனம் செலுத்துவதன் வாயிலாக, இந்தியாவால் தனது குடிமக்கள் பலரின் உயிரைக் காப்பாற்ற முடிந்தது; கடந்த மே மாதத்தில் வங்காள விரிகுடாவைச் சுற்றியுள்ள மாநிலங்களை தாக்கிய அம்பான் புயல், அதேபோல் ஜூனில் மும்பையை தாக்கிய நிசர்கா புயலின் போது, இந்த வழிமுறை உதவியாக இருந்தது.

ஆரம்பகால எச்சரிக்கை அமைப்புகள் உயிர்களைக் காப்பாற்றின

புயல்கள் வெள்ள அபாயத்தை அதிகரிப்பதால், ஆரம்ப எச்சரிக்கைகள் திட்டங்களுக்கு உதவுவதில் நீண்ட தூரம் செல்லக்கூடும். "ஒவ்வொரு நகரத்திலும் ஒரு ஆரம்ப எச்சரிக்கை அமைப்பு இருக்க வேண்டும், இது நில பயன்பாடு மற்றும் மனித புள்ளி விவரங்கள் போன்ற உள்ளூர் நிலைமைகளின் அடிப்படையில், பல அச்சுறுத்தல்களை கணக்கில் எடுத்துக் கொள்ளும்" என்று ஐஐடிஎம்-புனேவின் கோல் கூறினார். "நாட்டில் வெள்ள மேலாண்மைக்கொள்கைகளின் சமீபத்திய மதிப்பீடு, ஓரளவாவது வெள்ளம் ஒரு மேலாண்மை பிரச்சினை என்பதை காட்டுகிறது" என்றார்.

அம்பான் மற்றும் நிசர்கா புயல்கள் தாக்கும் முன்பே, முன்கூட்டியே எச்சரித்து உரிய நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டிருந்தது. இதற்காக, அதிநவீன அமைப்பு 2009 இல் ஏற்படுத்தப்பட்டது; அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா பிராந்தியத்தில் உள்ள இந்தியாவின் அண்டை நாடுகளுக்கும் - வங்கதேசம், மியான்மர், தாய்லாந்து, பாகிஸ்தான், இலங்கை, மாலத்தீவு, ஏமன், ஓமான், சோமாலியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், ஈரான் மற்றும் சவுதி அரேபியா ஆகியவற்றுக்கு - இது சேவை செய்கிறது.அம்பான் புயல் தாக்குவதற்கு முன், 10 லட்சம் மக்களை சரியான நேரத்தில் வெளியேற்ற அனுமதித்த அதன் ஆரம்ப எச்சரிக்கை முறைக்கு இந்திய வானிலை ஆய்வு மையத்தை (ஐஎம்டி), உலக வானிலை அமைப்பு (WMO) பாராட்டு தெரிவித்தது.

"சுமார் ஐந்து நாட்களுக்கு முன் [புயலின் ] தோற்றம், அதன் பாதை, தீவிரமடையுமா, அதிக மழை அல்லது புயல் எழுச்சி ஏற்படுமா என்பதை நாங்கள் வழங்குகிறோம்," என்று, ஐஎம்டி வானிலை ஆய்வு இயக்குநர் ஜெனரல் மிருதுஞ்சய் மொஹாபத்ரா கூறினார். “நிசர்கா புயலை பொறுத்தவரை, ஒரு குறுகிய கால புயல், இரண்டரை நாட்களே நீடித்தது. மகாராஷ்டிரா மற்றும் குஜராத் அரசுகளுக்கு [மே] 31 ஆம் தேதியன்று நாங்கள் தகவல் கொடுத்தோம், அவர்களுக்கு ஒருநாள் கூடுதல் அறிக்கைகளை வழங்கினோம், அதன் மூல்ம உயிரிழப்பு எண்ணிக்கை குறைத்துள்ளது” என்றார்.காலநிலை மாற்றம் குறித்த விஞ்ஞானம் தெளிவாக உள்ளது, மேலும் ஐஎம்டியும் அதன் தயாரிப்பு கொண்டு பாதிப்பை தடுக்கிறது. வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள் போன்ற பிற பொறுப்பாளர்கள் இத்தகைய சவாலுக்கு பதிலளிக்க வேண்டிய நேரம் இது என்று அவர் மேலும் கூறினார்.

"மும்பையின் பாதிக்கப்படக்கூடிய கடற்கரையோரத்தில் வேகமாக வளர்ந்து வரும் மேம்பாட்டு திட்டங்கள் குறித்து இன்னும் பரவலான மற்றும் வலுவான விவாதம் நடந்தால் அது, [நிசர்கா சூறாவளியின்] ஒரு சிறந்த விளைவு இதுவாகும்" என்று சோபல் கூறினார். “இந்த திட்டங்கள் பல விவேகமற்றவை என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நீண்ட காலமாக எச்சரித்துள்ளனர்; அவை இப்போது மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படலாம் என்று நம்புகிறேன்" என்றார்.

(ஷெட்டி, இந்தியா ஸ்பெண்ட் செய்திப் பணியாளர்; குமார், சுயாதீன பங்களிப்பாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளைrespond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கண நடை கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.