சென்னை, மும்பை, கொல்கத்தா வரும் 2050-க்குள் நீரில் மூழ்கக்கூடும்: சமீபத்திய தரவு
பெங்களூரு: கார்பன் உமிழ்வு அதிகரிப்பால், உலகெங்கிலும் கடல் மட்டம் அதிகரித்து வரும் நிலையில், மும்பையின் ஒரு பகுதி, சூரத், சென்னை, கொல்கத்தா நகரங்கள், 2050ஆம் ஆண்டு வாக்கில் தொடர் வெள்ளத்தால் அழிவை சந்திக்கக்கூடும்.
இந்தியா முழுவதும், 3.1 கோடி மக்கள் வருடாந்திர வெள்ள அபாயம் உள்ள கடலோரப் பகுதிகளில் வாழ்கின்றனர். இது, நூற்றாண்டின் நடுப்பகுதியில் 3.5 கோடியாகவும், 2100ஆம் ஆண்டில் 5.1 கோடியாகவும் உயரக்கூடும். உலகளாவிய கார்பன் உமிழ்வு தடையின்றி அதிகரித்து வரும் தீவிர நிகழ்வுகளின் அடிப்படையில், இந்த கணிப்புகள் அமைகின்றன. உலகெங்கிலும் 25 கோடி மக்கள் வருடாந்திர கடலோர வெள்ள அபாயத்தில் வாழ்கின்றனர்.
"இந்த ஆராய்ச்சி முடிவானது, நாங்கள் நினைத்ததை விட அதிகமாகவே உள்ளது" என்று, ஆய்வு நடத்திய கிளைமெட் சென்ட்ரல் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியும், தலைமை விஞ்ஞானியுமான பெஞ்சமின் எச். ஸ்ட்ராஸ் கூறினார்.
முக்கிய கண்டுபிடிப்புகள்
அறிவியலாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் காலநிலை முறிவு குறித்து ஆராயும் ஆராய்ச்சியாளர்களின் சுயாதீன அமைப்பான கிளைமெட் சென்ட்ரல் அமைப்பின் விஞ்ஞானிகள் ஸ்காட் ஏ. குல்ப் மற்றும் பெஞ்சமின் எச். ஸ்ட்ராஸ் ஆகியோர் இந்த ஆய்வை தலைமையேற்று நடத்தினர்.
இந்த ஆய்வு, அமெரிக்காவின் தேசிய வானூர்தி மற்றும் விண்வெளி நிர்வாகம் (நாசா), 2000ஆம் ஆண்டில் தயாரித்த உலகளாவிய தரவுத்தொகுப்பை பகுப்பாய்ந்தது; அதில், சில பிழைகள் இருப்பதும் தெரியவந்தது. பிழைகளை குறைக்க, குல்பும், ஸ்ட்ராஸும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி சமீபத்திய மதிப்பீடுகளை கொண்டு வந்துள்ளனர்; இது, முன்பு நினைத்ததை விட உலகளாவிய கடலோரப்பகுதியில் கடல் நீர்மட்டம் மூன்று மடங்கு அதிகமாக உயருவதை வெளிப்படுத்தி காட்டுகிறது.
தொழில்துறைக்கு முந்தைய சகாப்தத்துடன் (பொதுவாக இது, 1850 ஆம் ஆண்டாக எடுத்துக் கொள்ளப்படுகிறது) ஒப்பிடும்போது, 20 ஆம் நூற்றாண்டில் உலகளாவிய கடல் மட்டம், 11-16 செ.மீ அல்லது 500 மில்லி கோக் பாட்டிலின் உயரத்தில் பாதியளவு அதிகரித்துள்ளன. உலகம், தனது வருடாந்திர கார்பன் உமிழ்வை தீவிரமாக குறைத்தாலும், கடல் மட்டங்கள் 2050ஆம் ஆண்டு வாக்கில் அரை மீட்டர் அல்லது தோராயமாக இரண்டு 500 மில்லி கோக் பாட்டில்களின் உயரத்திற்கு அதிகரிக்கும். மிகவும் தீவிரமான சூழ்நிலையில், நூற்றாண்டின் தொடக்கத்தில் கடல் மட்டம் 2 மீட்டர் உயரும்; இது, ஒன்றின் மேல் ஒன்று அடுக்கி வைக்கப்பட்ட ஒன்பது பாட்டில்களின் உயரத்திற்கு சமம்.
"எங்கள் பகுப்பாய்வில், முன்பு கருதியதைவிட கடல் நீர்மட்ட அதிகரிப்பு மூன்று மடங்கு அதிகம் என்று கணிக்கிறோம் என்றாலும், கார்பன் உமிழ்வை தீவிரமாக குறைப்பதன் நன்மைகளும் முன்பு நினைத்ததை விட மூன்று மடங்கு அதிகம்” என்று ஆய்வின் முதன்மை ஆசிரியரான குல்ப், இந்தியா ஸ்பெண்டிற்கு ஸ்கைப் வாயிலாக அளித்த பேட்டியில் கூறினார்.
தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களில் 70% பேர், எட்டு ஆசிய நாடுகளில் உள்ளனர்: அவை - சீனா, இந்தியா, வங்கதேசம், வியட்நாம், இந்தோனேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான்.
மிகவும் ஆபத்தானவை
கார்பன் உமிழ்வால் அதிகரித்து வரும் உலகளாவிய வெப்பநிலை, துருவங்களில் உள்ள பனியை உருகச் செய்கிறது. இது, உலகளவில் கடல் மட்டத்தை உயர்த்தும். மிக அதிகளவில் கார்பன் வெளியேற்றுவதில் சீனா முதலிடத்திலும், அடுத்து அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா உள்ளதாக, 2019 செப்டம்பர் இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை குறிப்பிட்டது. தனிநபர் உமிழ்வை பொருத்தவரை, கனடா முதலிடத்திலும், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஜப்பான் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இதில் இந்தியா, உலகிலேயே குறைந்த தனிநபர் கார்பன் வெளியேற்ற பட்டியலில் உள்ளது. புவி வெப்பம் அடைதல் காரணமாக வெள்ளம், ஒழுங்கற்ற மழை, புயல்களின் அதிகரிப்பை இந்தியா எதிர்கொள்ள நேரிடும் என்று, சமீபத்திய அறிவியல் கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன.
ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், 2030ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய கார்பன் வெளியேற்றத்தை 45% குறைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மீதமுள்ள உமிழ்வுகளை காடுகள், பெருங்கடல்கள் மற்றும் மண் போன்ற "கார்பன் மூழ்கிகள்" மூலம் சரிசெய்து, 2050 இல் உமிழ்வு "நிகர பூஜ்ஜியம்" என்ற அளவில் குறைக்கப்பட வேண்டும்; அப்போது உலக வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரித்து கொண்டிருக்கும்.
கடல் மட்ட உயர்வால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பல தீவு நாடுகள், உலகளாவிய கார்பன் உமிழ்வுகளில் மிகக்குறைந்த பங்களிப்பையே கொண்டிருக்கின்றன; அவை கார்பன் சார்பற்றவை என்ற பாதையில்ஏற்கன்வே உள்ளன. “இன்று நாம் கார்பன் சார்பற்ற நிலைக்குச் சென்றாலும் கூட கடலோர மக்களுக்கு கணிசமான ஆபத்துக்கள் இருக்கும்” என்று குல்ப் கூறினார்.
தப்புவதற்கு போராட்டம்: மும்பை, சூரத், கொல்கத்தா & சென்னை
சமீபத்திய தரவுகள் அடிப்படையிலான கணிப்புகள் மும்பை உள்ளிட்ட கடலோர நகரங்களின் பெரும் பகுதிகள், ஒடிசா மற்றும் வடகிழக்கு கரையோரப்பகுதிகள் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கடலில் மூழ்கும் என்பதை காட்டுகின்றன.
ஆதாரம்: Coastal Risk Screening Tool by Climate Central
உலகளாவிய வெப்பநிலை உயர்வு இயக்கம் உருகுவதில் அமைந்துள்ளது; இன்று கார்பன் உமிழ்வு வெகுவாகக் குறைக்கப்பட்டாலும், அது சில காலம் தொடரும். ஒரு ஐஸ் க்யூப்பை மேஜை மீது வைத்தால், அது உடனடியாக உருகாது; அதற்கு சிறிது நேரம் ஆகும். ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக் பிராந்தியத்தில் உள்ள பனிப்பாறைகளிலும், இதுபோல் நடப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். “துரதிர்ஷ்டவசமாக, உலகின் பனிப்பாறைகளும், பனிக்கட்டிகளும் வெப்பமயமாதலில் சிக்கவில்லை; ஆனால், நாம் ஏற்கனவே அதற்கு காரணமாகிவிட்டோம்” என்று, ஆய்வின் இணை ஆசிரியர் ஸ்ட்ராஸ் கூறினார்.
"நமது உமிழ்வுகளின் அளவு, இப்போது உள்ளதற்கும், நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருப்பதர்கும் பெரிய வேறுபாடுகளை (கடல் மட்ட உயர்வுக்கு) ஏற்படுத்தாது. ஆனால் இது நூற்றாண்டின் இறுதியில், அதற்கும் அப்பால் பெரிய அளவில் வேறுபாட்டை ஏற்படுத்தும்" என்று ஸ்ட்ராஸ் கூறினார். தொடர்ந்து மாசுபடுத்துவதன் மூலம் மோசமான சூழ்நிலைக்கான வாய்ப்பை நாம் அதிகரிக்க செய்கிறோம் என்றார் அவர்.
இந்தியாவில் ஒழுங்கற்ற பருவமழையால் ஏற்பட்ட வெள்ளத்தை, இந்த ஆய்வு கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை; ஆனால் விஞ்ஞானிகள், வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடியவர்களின் எண்ணிக்கையை, இது உயர்த்தக்கூடும் என்றனர்.
காலநிலை அகதிகள்
இந்தியாவில் 7,500 கி.மீ. கடற்கரையை கொண்டுள்ளது. சீனாவின் கடலோரப் பகுதியில் தற்போதுள்ள 8.1 கோடி மக்களுக்கு அடுத், இங்குதான் இரண்டாவது பெரிய கடலோரப்பகுதியில், கடல் மட்ட உயர்வு ஆபத்தை மக்கள் எதிர்கொள்கின்றனர். “கடல் வெப்பமயமாதலின் தாக்கம், புயல் போன்ற காலநிலை நிகழ்வுகளை அதிகரிக்கும்” என்று டெரி ஸ்கூல் ஆப் அட்வான்ஸ்ட் ஸ்டடீஸ் அமைப்பின் பிராந்திய நீர் ஆய்வுகள் இணை பேராசிரியர் அஞ்சல் பிரகாஷ் கூறினார். "இந்த நிகழ்வுகள் அதிகரித்து வருவதாக கணிக்கப்பட்டுள்ளது, எதிர்கால தசாப்தங்களில், இது மிகக்கடுமையாக இருக்கும்" என்றார் அவர். காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச அரசு குழு (ஐபிசிசி, காலநிலை மாற்றம் குறித்த அறிவியலை மதிப்பிடுவதற்கான ஐ.நா. அமைப்பு) சமீபத்திய அறிக்கையின் ஒருங்கிணைப்பு முதன்மை ஆசிரியராக இருந்த பிரகாஷ், "இந்திய பருவமழையின் வடிவங்களை மாற்றுவது, கடலோர பகுதிகளில் வாழும் மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும்" என்றார்.
ஒன்றாக இடம்பெயர்வுக்கு வழிவகுக்கும் காரணிகள்
கடலின் உப்புநீர், கடலோர நிலப்பகுதிக்குள் நுழைந்து, அந்த நிலத்தை சாகுபடிக்கு தகுதியற்றதாக மாற்றுகிறது; இது, உள்நாட்டில் சட்டவிரோத இடம்பெயர்வை அதிகரிக்கும் என், ஒடிசா மற்றும் மேற்கு வங்க களத்தில் இருந்து இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தந்திருந்தது. வங்கதேசத்தின் பெரும்பகுதி அதிக கடல் நீராலோ அல்லது நீரிலோ மூழ்கும் ஆபத்து இருப்பதால், சர்வதேச இடம்பெயர்வுகள் அதிகரிக்கும் என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் உலகெங்கிலும் கடலோரப்பகுதியில் இருப்பதையே பலர் தேர்வு செய்கின்றனர்; கடல் மட்டம் உயரும்போது கூட அதே பகுதியில் தொடர்ந்து அவர்கள் வசிக்க அனுமதிக்கும் வகையில் கடலோர சுவர்களைக் கட்டுவதற்கான ஆதாரங்களை அரசுகள் செயல்படுத்துகின்றன.
தணித்தல், ஏற்றுக் கொள்ளுதல்
உலகளவில், சுமார் 11 கோடி மக்கள் ஏற்கனவே அதிக கடல் அலை பாதிப்புகளின் கீழ் வாழ்கின்றனர்; இந்தியாவில் இந்த எண்ணிக்கை 1.7 கோடியாக உள்ளது. "இது பல்வேறு இடங்களில் கடல் பாதுகாப்பு சுவர்கள் இருப்பதையும், அவை சில அக்கம்பக்க வாழிடங்களை அனுமதிப்பதையும் குறிக்கும்; இல்லையெனில் அதிக அலைக்கோட்டிற்குக் கீழே இருக்கும்" என்று கிளைமெட் சென்ட்ரல் அமைப்பின் ஸ்ட்ராஸ் கூறினார். "ஆனால் மழை பெய்யும்போது சுற்றுப்புறங்களில் நடப்பது என்னவென்றால், தண்ணீர் வெளியேறுவதே கடினமாக இருப்பதுதான்" என்றார்.
அதிக கடல் அலைக்கோட்டிற்குக் கீழே உள்ள பகுதிகளில் ஏற்கனவே வசிக்கும் அதிக எண்ணிக்கையிலான மக்களை பாதுகாக்க முடியும்; ஆனால் அவ்வாறு செய்வதற்கு அதிகம் செலவிட வேண்டியிருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
"தணிப்பு உத்திகளில் முக்கிய கருத்தாக, எவ்வளவு தீவிரமாக தணிப்பது என்பதாக இருப்பது, விரைவான கடல் மட்ட உயர்வுக்கான இந்த கடும் சூழ்நிலைய பொறுத்துக்கொள்ள நீங்கள் எவ்வளவு ஆயத்தமாக இருக்கிறீர்கள் என்பது தான்” என்றார் ஸ்ட்ராஸ் கூறினார்.
(ஷெட்டி, இந்தியா ஸ்பெண்ட் செய்திப்பணியாளர்).
உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.