புதுடெல்லி: கேரளாவின் வாழ்நாளில் அதிக மழைகளில் ஒன்றாக, இம்முறை 88 நாட்களில் 2,378 மி.மீ. பெய்தது. இது, இயல்பான மழை அளவைவிட 4 மடங்கு அதிகம். எனினும், 1924ஆம் ஆண்டு, 61 நாட்களில் பெய்த மழையின் தீவிரத்தைவிட 30% குறைவு. எனினும், மாநில வரலாற்றில் இதுவரை சந்தித்திராத வகையில், கடலோர மாவட்டங்களை கிட்டத்தட்ட மூழ்கச் செய்தது.

நடப்பு 2018 மழை, 94 ஆண்டுகளுக்கு முன் பெய்த 3,368 மி.மீ.யை விட குறைவாக இருந்த போதும், ஏன் பலத்த சேதத்தை ஏற்படுத்த வேண்டும்? (மலையாள ஆண்டான, 1099-ஆம் ஆண்டில், அப்போதைய வெள்ளம் ஏற்பட்டதால், பிரளயம்-99 என்று அழைப்பார்கள்).

ஏனெனில், சட்டவிரோத கல் குவாரிகள், காடுகள் மற்றும் புல்வெளிகளை அழிப்பது, வடிகால் முறைகளை மாற்றுவது, மணல் குவாரிகளை அனுமதிப்பது போன்றவற்றின் வாயிலாக, அதிதீவிர வெள்ளங்களை சமாளிக்கும் கேரளாவின் திறன் குறைந்துவிட்டது என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போதைய கேரள வெள்ளத்தின் போது, பலத்த நிலச்சரிவு ஏற்பட்டதன் பின்னால், கல்குவாரிகளுக்கு அனுமதி அளித்தது போன்ற காரணங்களே உள்ளன என்று, பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்துடன் இயங்கு சுற்றுச்சூழல் அறிவியல் மைய நிறுவனர் மாதவ் காட்கில், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

“இந்த குவாரிகள், காடு அழிப்புக்கு வழி வகுக்கிறது. வெள்ளம், நிலச்சரிவை தடுக்கக்கூடிய இயற்கை நீரோடைகளின் பாதைகளை தடுக்கிறது” என்று அவர் மேலும் கூறுகிறார்.

கேரளாவில் மழைக்கு பலியான 373 பேரில் பெரும்பாலானோர், மலப்புரம், வயநாடு, இடுக்கி மாவட்டங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

கடந்த 2011-ல் அரசால் அமைக்கப்பட்ட, மேற்கு தொடர்ச்சி மலைகள் சுற்றுச்சூழல் நிபுணர் குழு (WGEEP) எழுதிய ஆய்வறிக்கையின் ஆசிரியர் மற்றும் தலைவர். இக்குழு, கேரளா உட்பட ஆறு மாநிலங்கள் வழியாக செல்லும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், வளர்ச்சிப்பணி மேற்கொள்ளக்கூடாது என்று பரிந்துரைத்துள்ளது.

மண்ணில் ஏற்படும் மாற்றங்கள், வறட்சி, காலநிலை மாற்றம், அளவுக்கு அதிகமான பருவமழை போன்ற விளைவுகளை ஏற்படுத்துகிறது.

"நிலத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி, வடிகால் முறைகளில் மாற்றம் போன்றவை, அதிகளவு மழை பெய்வதற்கான காரணங்களை ஏற்படுத்துகிறது," என்று புனேயில் உள்ள இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு நிலையத்தின் காலநிலை விஞ்ஞானி ராக்ஸி மேத்யூ கோல் இந்தியா ஸ்பெண்டிடம் கூறினார்.

மண் உறிஞ்சும் தன்மையை விட மழை அதிகமாக இருந்தால், தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். பெரும் நீரோடைகள், வடிகால்களில் குறுக்கீடு இருக்கும் போது, வெள்ளத்தை ஏற்படுத்துகிறது.

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகள், அதாவது காடு அழிப்பு பணி நடக்கூடாது, கட்டுமானங்கள் கூடாது என்று தெரிவிக்கப்பட்ட பகுதிகள், காட்கில் குழுவால் "சுற்றுச்சூழல் ரீதியாக பதட்டமான பகுதிகள்" என்று வகைப்படுத்தப்பட்டன.

கடந்த 2011-ஆம் ஆண்டில், மத்திய அரசும், கேரளா உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாநிலங்களும் காட்கில் குழு அறிக்கையை ஏற்க மறுத்தன

வளம் நிறைந்த மேற்குத்தொடர்ச்சி மலை

மேற்கு தொடர்ச்சி மலை, 1,60,000 கி.மீ.க்கு உள்ளது; இது, ஹரியானா மாநிலத்தை விட, மூன்று மடங்கு பெரியது. கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்கள் வழியாக மேற்கு தொடர்ச்சி மலை செல்கிறது.

இம்மலைத்தொடர், மழையோடு, வெப்ப மண்டல காடுகளை கொண்டது; உலகின் 10 “பல்லுயிர் பெருக்கத்துக்கான” இடங்களில் ஒன்றாக இது திகழ்கிறது. இம்மலை தொடரில், 7,402 பூக்கும் தாவர இனங்கள், 1,814 பூக்காத தாவரங்கள், 139 பாலூட்டிகள், 508 பறவை இனங்கள், 179 உயிரின வகைகள், 6,000 பூச்சிகள் இனங்கள் மற்றும் 290 நன்னீர் மீன் வகைகள் காணப்படுகின்றன.

மேலும், மேற்கு தொடர்ச்சி மலையானது, 20 ஆறுகளின் ஆதாரமாகவும், இந்திய தீபகற்பத்தின் நீராதாரமாகவும், அடர்ந்த காடுகள், புற்கள் நிறைந்த அருமையான பகுதியாகவும், அதிக மழைப்பொழிவு கொண்டதாகவும் உள்ளது.

பல்லுயிர் வளம், தண்ணீர் பாதுகாப்பு மற்றும் தக்கவைப்பு பண்புகள் மனதில் கொண்டு, காட்கில் குழு, மேற்கு தொடர்ச்சி மலை பிரதேசத்தை, மூன்று மண்டலங்களாக வகைப்படுத்த பரிந்துரை செய்தது. அதன்படி, சுற்றுச்சூழல் மிக உயர்ந்த உணர்திறன் மண்டலங்கள் (ESZ-1). அங்கு, குறிப்பிட்ட சில வகை பகுதிகள் "போகக்கூடாது" என்பவை. இவை, நீர்நிலைகள், சிறப்பு வாழ்விடங்கள், பல்லுயிர் வளம், பீதி உண்டாக்கும் தோப்புகளை உள்ளடக்கியவை.

இரண்டாவதாக, சுற்றுச்சூழல் ரீதியாக உயர்ந்த உணர்திறன் மண்டலங்கள் (ESZ-2). இங்கு, மிக அவசியம் தவிர, ரயில் பாதைகள், பிரதான சாலைகள் கட்டுவது அனுமதிக்கப்படக்கூடாது. மூன்றாவதாக, சுற்றுச்சூழல் ரீதியாக மித உணர்திறன் மண்டலங்கள் (ESZ-3). இங்கு, புதிய மின் திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள், சாலைகளை அனுமதிக்கலாம் ஆனால் "கடும் சுற்றுச்சூழல் விதிகளுக்கு” உட்பட்டு இது இருக்க வேண்டும்.

இக்குழுவின் பரிந்துரைகளில் சுரங்க மற்றும் குவாரிகளுக்கு கட்டுப்பாடு, வனம் சாராத நோக்கங்களுக்காக நிலம் பயன்படுத்தப்படுதல் மற்றும் உயர் கட்டுமானம் அமைக்கக்கூடாது ஆகியன அடங்கும்.

"அனைத்து உள்ளூர் அரசு அமைப்புகளுக்கு ஆலோசனை வழங்குவதற்காக நாங்கள் துறை சார்ந்த குறிப்பிட்ட பரிந்துரைகளை வழங்கினோம். ஆனால் எங்கள் அறிக்கை நிராகரிக்கப்பட்டது," என்றார் காட்கில்.

Sector-Wise Recommendation For The Western Ghats by IndiaSpend on Scribd

"மேற்கு தொடர்ச்சி மலை வனத்தின் 40% பகுதிகளை உள்ளடக்கிய கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில், கடந்த 1920ஆம் ஆண்டில் இருந்து, 1990-க்குள் உண்மையான காடுகள் அழிக்கப்பட்டு, வேறு வகையில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது” என்று காட்கில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வனப்பகுதி நிலங்கள் வேறு பயன்பாட்டுக்கு மாற்றப்பட்டு வருவதே, கேரளா போன்ற பகுதிகள் பேரழிவை சந்தித்துள்ளன என்பதை அம்பலப்படுத்துகிறது என்று, காட்கில் கூறுகிறார். இத்தகைய பேரழிவை குறைக்க முடியும் என்பது அவரது கருத்து.

மண் தளர்வும் அரசின் குழப்பமும்

காட்கில் குழுவின் உறுப்பினரும் கேரள மாநில பல்லுயிர் வாரியத்தின் முன்னாள் தலைவருமான வி.எஸ். விஜயன், இந்தியா ஸ்பெண்டிடம் கூறுகையில், அணைப்பகுதிகளில் மரங்களை வெட்டுதல், விதிகளுக்கு புறம்பான கட்டுமானம், 30 டிகிரிக்கு மேல் சரிவான பகுதிகளில் விவசாயம் செய்தல் உள்ளிட்டவையே வெள்ள பேரழிவுக்கு காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற செயல்பாடுகள் மண்ணை தளர்த்துவதில் முடிவடைகிறது என்று கூறும் விஜயன், காட்கில் குழு அறிக்கையில் இந்த அனைத்து நடைமுறைகளுக்கு எதிராக நாங்கள் பரிந்துரைத்தோம், ஆனால் யாரும் கேட்கவில்லை என்கிறார்.

காட்கில் குழு அறிக்கையை அரசு நிராகரிப்பதற்கான பிரதான காரணங்களில் ஒன்று, சுற்றுச்சூழல் ரீதியிலான உணர்வு மண்டலங்கள் மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாக பலவீனமான பகுதிகளின் வரையறையில் அரசுகு ஏற்பட்ட குழப்பமாகும்.

கேரளாவில், 15 ஆண்டுகளாக, சுற்றுச்சூழல் நில பாதுகாப்பு சட்டம் உள்ளது. இது, வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்கள் போன்ற பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற வேண்டும் என்று கூறுகிறது. சுற்றுச்சூழல் ரீதியாக உணர்திறன் மண்டலங்களானது, அடிப்படையில் ஒரே மாதிரியானவை; ’அது பிரச்சனை இல்லை’ என்று அரசு கருதுவதாக, விஜயன் கூறினார்.

"நாங்கள் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரின் முழு சூழலையும் அவற்றின் தேவை, பாதுகாப்பு அடிப்படையில், மூன்று மண்டலங்களாகப் பிரித்தோம்" எனும் விஜயன் "உணர்திறன் மிக்க பகுதிகளில் இருந்து மனிதர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்பது அதன் பொருளல்ல,” என்று சொல்கிறார்.

தீவிர மழைப்பொழிவை நம்மால் தடுக்க முடியாது. ஆனால் காடுகள் மற்றும் இயற்கையை வளங்களை கேடயமாக்கி, அதன் சீற்றத்தில் இருந்து நாம் தப்பிக்கலாம் என்று அவர் மேலும் தெரிவிக்கிறார்.

காலநிலை மாற்றம் கடும் மழைப்பொழிவை அதிகரிக்கிறது

மேற்கு திசையில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலை நோக்கி காற்று வீசும் போது மேகங்கள் உருவாகி, மழைப்பொழிவு ஏற்படுகிறது. வலுவான காற்றானது பலத்த மழைப்பொழிவை தருகிறது என்று, புனேவில் உள்ள, இந்திய வானிலை ஆய்வு துறையின் புயல் காலநிலை கணிப்புக்குழு தலைவர் டி.சிவானந்த் பாய், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

2018 ம் ஆண்டு மழைக்காலத்தில் ஏற்பட்ட ‘காற்றழுத்த சுழற்சி’ (இது, அழுத்தத்தை தீர்மானிப்பதோடு, மழைப்பொழிவையும் முடிவு செய்கிறது) நிலத்திற்கும், அரேபிய கடலுக்கும் இடையே, "மிகவும் வலுவாக" இருந்து, பலத்த மழையை ஏற்படுத்தியதாக, பாய் தெரிவிக்கிறார். வங்கக்கடலில் ஏற்படும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வலுவான காற்றால் பலமடைந்து, நிலப்பகுதியை நோக்கி நகர்ந்து பெருமழையை தருகிறது என்கிறார் பாய்.

குறுகிய காலத்தில் அதிதீவிர மழைப்பொழிவை கேரளா கண்டிருப்பது போல், இந்தியா முழுவதும் இத்தகைய மிக பலத்த மழை என்பது அதிகரித்து வருகிறது. கடந்த 2010ஆம் ஆண்டுடன் முடிந்த 110 ஆண்டுகளில், ஒவ்வொரு பத்தாண்டிலும், அதிதீவிர மழை என்பது, 6% வரை அதிகரித்து வந்துள்ளதாக, பாய் இணைந்து மேற்கொண்ட, 2017 நவம்பர் மாத ஆய்வு தெரிவிக்கிறது. பருவ நிலை மாற்றம், அதிகரிக்கும் வெப்பம் போன்றவையே, மிகபலத்த மழைக்கு காரணம் என்பது அவரது கருத்து. இத்தகைய நிகழ்வுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாகவே கருதப்படுகிறது.

பலத்த மழை, வெள்ளத்தால் அதிக உயிரிழப்பு ஏற்படும் நாடுகளில், இந்தியா 5வதாக உள்ளது. கடந்த 1953ஆம் ஆண்டில் இருந்து, 2017 வரையிலான 64 ஆண்டுகளில் 1,07,487 பேர் இறந்துள்ளதாக, நீர் கமிஷன் அறிக்கையை மேற்கொள்காட்டி, 2018 மார்ச் 19ஆம் தேதி மாநிலங்களவையில் அரசு தெரிவித்தது. பயிர்கள், வீடுகள் மற்றும் பொது சொத்துக்கள் உள்ளிட்டவற்றின் பாதிப்பு, ரூ.3,65,860 கோடி, - இது இந்தியாவின் நடப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% - சேதம் ஏற்பட்டிருந்தது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சராசரி, 1,600க்கும் அதிகமானோர் வெள்ளத்தில் மூழ்கி உள்ளனர், அத்துடன், 32 மில்லியன் மக்கள் கடும் பாதிப்புகளை சந்திப்பதாக, புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் 92,000 க்கும் மேற்பட்ட கால்நடைகள், ஏழு மில்லியன் ஹெக்டேர் நிலம், அதாவது கேரளாவின் இரு மடங்கு அளவு, மழை வெள்ளத்தால் பாதிக்கிறது. மேலும், ரூ. 5,600 கோடிக்கு சேதத்தை ஏற்படுத்துவதாக, இந்தியா ஸ்பெண்ட், 2018, ஜூலை 17-ல் தெரிவித்திருந்தது.

இந்தியாவின் காலநிலை மாற்றத்தால், அதீத வெப்பம், கடும் வெள்ளம் போன்ற தீவிர மோசமான வானிலைக்கு வழிவகுக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில், வரும் 2040 ஆண்டு வாக்கில், வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை ஆறு மடங்கு உயரும்; அதாவது, 1971 மற்றும் 2004ஆம் ஆண்டுக்கு இடையே, 25 மில்லியன் மக்களில் ஆபத்தை எதிர்நோக்கும் 3.7 மில்லியன் பேர், என 2018ஆம் ஆண்டு சயின்ஸ் அட்வான்ஸ் இதழின் ஆய்வை மேற்கோள்காட்டி, 2018 பிப்ரவரியில், இந்தியா ஸ்பெண்ட் செய்தி வெளியிட்டிருந்தது.

(திரிபாதி, இந்தியா ஸ்பெண்ட் முதன்மை செய்தியாளர்)

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.