ஸ்ரீநகர்: ஸ்ரீநகரில் உள்ள குஷால் சார் ஏரியில் இருந்து சுமார் 1,350 லாரிகள், சகதி, வண்டல் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் ஒரு வருடத்திற்கும் மேலான முயற்சி – நகரின் உள்ளூர் மக்களால் நிறைவேற்றப்பட்ட ஒரு கடினமான பணி– மாசுபட்ட நீர்நிலைகளுக்கு புதிய வாழ்க்கை அளித்து, மீட்டெடுக்கப்பட்டுள்ளதோடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான சமூக முயற்சிகளில் நம்பிக்கையை அளித்துள்ளது.

நைஜீன் ஏரி பாதுகாப்பு அமைப்பு (NLCO)இல் இந்த ஏரி மறுசீரமைப்பு முயற்சிக்கு, உள்ளூர் அரசு சாரா அமைப்பான தலைமை வகித்தது, இது பிப்ரவரி 2021 ' Mission Ehsaas' என்பதன் கீழ் இந்த பிரச்சாரத்தைத் தொடங்கியது. இதையடுத்து, தன்னார்வலர்களும், மாவட்ட நிர்வாகமும் இந்த முயற்சியில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.

ஸ்ரீநகரின் பழைய நகரத்தில் அமைந்துள்ள குஷால் சார் ஏரி, தால் ஏரியால் நிரப்பப்படுகிறது, மேலும் இது கில் சார் என்ற ஈரநிலத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அஞ்சார் ஏரியிலும் பாய்கிறது. குஷால் சார் ஏரியானது வசந்த காலத்திலும் கோடைகாலத்திலும் மிதமான மாசுபட்டதாகவும், குளிர்காலத்தில் மிகவும் மாசுபடுவதாகவும் 2011 மதிப்பீட்டில் கண்டறியப்பட்டுள்ளது.

குஷால் சார் ஏரி ஒன்று மட்டும் காஷ்மீரில் கட்டுப்பாடற்ற நகரமயமாக்கலுக்கு அடிபணிந்தது அல்ல. ஸ்ரீநகர் நகரம் மட்டும், 1911 முதல் 2014 வரை சுமார் 9,120 ஹெக்டேர் சதுப்பு நிலத்தை இழந்துள்ளது.

குஷால் சாரின் மறுமலர்ச்சியானது, இப்பகுதியின் ஏரிகளுக்கு ஒரு நம்பிக்கைக் கதிர் ஆகும், இது மாநிலத்தின் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு மட்டுமல்ல, அதன் குடியிருப்பாளர்களின் வாழ்வாதாரத்திற்கும் முக்கியமானது. ஆயினும்கூட, ஏரியை சுத்தமாக வைத்திருக்க, வலுவான ஏரி மற்றும் ஈரநிலப் பாதுகாப்புக் கொள்கைகளைச் செயல்படுத்துதல், புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவுதல் போன்ற பலவற்றைச் செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

முதலில் கேலி… பின்னர் சமூகம், அரசால் ஆதரவு

முன்பு நீர்வழிப் பாதையாகப் பயன்படுத்தப்பட்ட குஷால் சார், நில அபகரிப்பாளர்கள் மற்றும் 'நேர்மையற்ற' கூறுகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, குப்பைக் கிடங்காகப் பயன்படுத்தப்பட்டது. அதன் சில பகுதிகள் வீட்டுக் கழிவு நீர் மற்றும் விவசாயக் கழிவுகளால் மூச்சுத் திணறின.

குஷால் சாரின் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் முகமது ஷஃபி மாலிக் கூறுகையில், "அசுத்தமான ஏரி நோய்களை பெருக்கும் இடமாக மாறியது" என்றார். ஏரி படுகையில் உள்ள குப்பைக் குவியல்களுக்குள், நாய்கள் உணவைத் தேடின. ஏரியானது, குப்பை கொட்டும் இடமாக மாறிவிட்டது.

ஏரியில் தொடர்ந்து கழிவுகள் கொட்டப்படுவது, அதன் இயற்கை தாவரங்களையும் பாதித்தது, உள்ளூர் பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய இரண்டின் விலையிலும் அது தாக்கத்தை ஏற்படுத்தியது.

கடந்த 2020 ஆய்வின்படி, குஷால் சார் மற்றும் கில் சார் நீர், ஒவ்வொரு நாளும் சுமார் 465 மில்லியன் லிட்டர் கழிவுநீரைப் பெறுகிறது.

ஸ்ரீநகர் முனிசிபல் கார்ப்பரேஷன், காஷ்மீர் ஏரிகள் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் மற்றும் நகர்ப்புற சுற்றுச்சூழல் பொறியியல் துறை என, பல இடங்களில் இருந்து கழிவுநீர் ஏரிக்குள் சேர்கிறது, ஆனால் தங்களுக்கு துல்லியமான அளவு தெரியவில்லை என்று கூறினார். அரசு, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்கும் என்று ஸ்ரீநகர் நகராட்சியின் தலைமை சுகாதார அதிகாரி நசீர் அகமது பாபா, இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.


நைஜீன் ஏரி பாதுகாப்பு அமைப்பின் தலைவர் மன்சூர் அகமது வாங்னூ, ஜூன் 15, 2022 அன்று ஸ்ரீநகரில் உள்ள குஷால் சாரில் படகோட்டியபடி செல்கிறார்.

நைஜீன் ஏரி பாதுகாப்பு அமைப்பின் (NLCO) தலைவரான 65 வயதான மன்சூர் அஹ்மத் வாங்னூ, தனது மூன்று உறவினர்களின் உதவியுடன் ஏரியை மீட்டெடுக்கத் தொடங்கியபோது, ​​ஏரியை உயிர்ப்பிக்கத் தவறியதால் பலர் அவரை கேலி செய்தனர். "ஆரம்பத்த 10 நாட்களுக்குப் பிறகு, மக்கள் மெதுவாக எங்களுடன் சேரத் தொடங்கினர். தற்போது, ​​எங்களிடம் 30 தன்னார்வத் தொண்டர்கள் குழு உள்ளது, மேலும் பலரின் பங்கேற்பையும் பதிவு செய்துள்ளோம்" என்றார்.

நிஜீன் ஏரியின் மறுசீரமைப்பிலும் வாங்னூ தற்போது ஈடுபட்டுள்ளார்.

"குஷால் சார் ஏரியின் காட்சிகளை [தொலைக்காட்சியில்] நான் முதன்முதலில் பார்த்தபோது, ​​​​என்னால் பார்க்க முடிந்தது வெறும் கழிவுநீரைத்தான். இப்போது நீங்கள் ஏரியில் 6-7 அடி ஆழத்தைக் காணலாம். எங்கள் முயற்சிக்கு முன், அது வெறும் 2 அடியாக இருந்தது. இந்த மறுசீரமைப்பில் ஏரியில் இருந்து சகதியை அகற்றுவதற்காக தோண்டுதலும் அடங்கும் என்ற வாங்னூ, ஷிகாராஸ் அல்லது காஷ்மீரின் உள்ளூர் படகுகளில் உள்ள தன்னார்வலர்கள் பாலிதீனை கையால் அகற்றினர் என்றார்.

"சதுப்பு நிலங்களை வரையறுத்தல் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவுதல் போன்ற பல விஷயங்களை இங்கு செய்ய வேண்டும். நீர்நிலைகளானது குப்பைத் தொட்டிகள் அல்ல என்பதை மக்களுக்கு நினைவூட்ட வேண்டும்.

விழிப்புணர்வு மற்றும் சமூக முன்முயற்சி முக்கியமானது


நைஜீன் ஏரி பாதுகாப்பு அமைப்பின் தன்னார்வலர்கள், படகுகளின் உதவியோடு, ஸ்ரீநகரில் உள்ள குஷால் சார் ஏரியை பிப்ரவரி 21, 2021 அன்று சுத்தம் செய்தனர்.

இவ்வாறு நீர்நிலையை சுத்தம் செய்வது குடியிருப்பாளர்களுக்கு பிரச்சனையின் தீவிரத்தை உணர்த்தியது, மேலும் ஏரியை மாசுபடுத்தக்கூடாது என்ற உணர்வை அவர்களுக்குள் ஏற்படுத்தியதாக, வாங்னூ கூறினார். நைஜீன் ஏரி பாதுகாப்பு அமைப்பின் (NLCO) மறுசீரமைப்பு முயற்சியைத் தொடங்கும் முன், அப்பகுதியில் வசிப்பவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டது.

"மசூதிகள் நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிராக எச்சரிக்கைகளை விடுத்தன மற்றும் [அருகிலுள்ள] மொஹல்லா குழுக்கள் திட்டத்திற்காக நிதி திரட்டின," என்று மறுசீரமைப்பு முயற்சியில் இணைந்த முதல் நபர்களில் ஒருவரான லத்தீஃப் வாங்னூ கூறுகிறார். "இன்று, ஒரு நபர் தண்ணீரில் குப்பைகளை வீசுவதற்கு முன் நூறு முறை யோசிப்பார். இதுவே எங்களது மிகப்பெரிய வெற்றி என்பது கருத்தாகும். குடியிருப்பாளர்கள் தங்கள் கழிவுகளை எவ்வாறு அகற்றுகிறார்கள் என்பதை மாற்றியது" என்றார்.

நைஜீன் ஏரி பாதுகாப்பு அமைப்பின் முயற்சி பலனைத் தந்ததால், அதிகமான மக்கள் இதில் சேர்ந்தனர் மற்றும் பணத்தை வாரி வழங்கியதாக, அதன் தலைவர் வாங்கூ கூறினார்.

ஜம்மு காஷ்மீர் ஏரி பாதுகாப்பு மற்றும் மேலாண்மை ஆணையத்தின் (JKLCMA) துணைத் தலைவரான பஷீர் பட் கூறுகையில், நைஜீன் ஏரி பாதுகாப்பு அமைப்பின் முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை, ஏனெனில் இது சமூக ஈடுபாட்டிற்கு உத்தரவாதம் அளிக்கிறது என்றார். "இந்த ஏரிகளை சமூக ஈடுபாட்டுடன் மட்டுமே மீட்டெடுக்க முடியும், மஞ்சூர் வாங்னூவின் முயற்சி அதைச் செய்துள்ளது. இது மற்றவர்களை தங்கள் சொந்த மட்டத்தில் இதேபோன்ற திட்டங்களை உருவாக்க ஊக்குவிக்கும், மேலும் இந்த நோக்கத்தில் சேரவும்," என்று அவர் கூறினார். கடந்த சில மாதங்களில், இப்பகுதியில் உள்ள பல்வேறு ஏரிகளில் சுமார் 30 தூய்மை இயக்கங்கள் நடந்துள்ளன, மேலும் பல அமைப்புகள் முன்னேறியுள்ளன என்பதற்கு ஆதாரம் உள்ளது.


ஜூன் 15, 2022 அன்று ஸ்ரீநகரில் உள்ள குஷால் சார் ஏரியை, உள்ளூர் அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள்.

விரைவில், அரசாங்கமும் இப்பணியில் இணைந்தது. சகதியைத் தூக்கும் லாரிகள் ஸ்ரீநகர் நகராட்சியால் வழங்கப்பட்டன என்று, நைஜீன் ஏரி பாதுகாப்பு அமைப்பின் வாங்னூ கூறினார், மேலும் காஷ்மீருக்கான பிரிவு ஆணையர் பி.கே. போல், சம்பந்தப்பட்ட அனைத்துத் துறைகளின் கூட்டத்தைக் கூட்டி, ஏரி புனரமைப்புக்கு அதிகாரிகள் முழு ஆதரவையும் வழங்குவதை உறுதி செய்தார். வாங்னூ மேலும் கூறியதாவது: "அவர்களின் ஒத்துழைப்பு எனக்கு நம்பிக்கையை அளித்தது. ஏரி பாதுகாப்பு மற்றும் மேலாண்மை ஆணையமும் (LCMA) முக்கிய பங்காற்றியது, ஏனெனில் அவர்கள் நீர்நிலைகளில் சேறுகள் நுழைவதைத் தடுக்க சமீபத்திய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தினர்" என்றார்.

மே 2022 இல் வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசியபோது, இந்த சமூக முயற்சியை பிரதமர் நரேந்திர மோடியும் அங்கீகரித்தார்.

சரிபார்க்கப்படாத நகரமயமாக்கல், ஒரு முக்கிய பிரச்சினை

காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் புவி அறிவியல் பேராசிரியர் இர்பான் ரஷீத் கூறுகையில், ஸ்ரீநகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 50% ஈரநிலங்கள் பல ஆண்டுகளாக அழிந்துவிட்டதாக பல்வேறு ஆய்வுகள் காட்டுகின்றன என்றார். "கடந்த 50 ஆண்டுகால செயற்கைக்கோள் தரவுகள், நீர்நிலைகளைச் சுற்றியுள்ள கான்கிரீட் பகுதிகள் உயர்ந்துவிட்டன என்பதைத் தெளிவாகக் குறிப்பிடுகின்றன, இது ஈரநில நீர்ப்பிடிப்புகளில் நிறைய மாசு மற்றும் சீரழிவு உள்ளது என்ற பொருளில் ஆபத்தானது, இதன் விளைவாக நீரில் வண்டல் சேர்கிறது" என்றார்.

வண்டல் நீர், நெடுவரிசையின் ஆழத்தைக் குறைத்து, நீர்நிலைகளின் தாங்கும் திறனைப் பாதிக்கிறது, மேலும் பல ஆண்டுகளாக, ஈரநிலத்தின் ஆழம் குறைந்துவிட்டது, 2014 வெள்ளத்திற்கு இது ஒரு காரணம் என்று ரஷித் கூறினார்.

பிராந்தியத்தின் நீர்நிலைகளைக் காப்பாற்றவும், வெள்ளப் பிரச்சினையைச் சமாளிக்கவும் பயனுள்ள கொள்கைத் திட்டத்தை உருவாக்கவும் செயல்படுத்தவும் கல்வியாளர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பு முக்கியமானது என்று ரஷீத் கூறினார். "இந்த ஒத்துழைப்பு நடக்கவில்லை என்றால், காஷ்மீரில் ஈரநிலம் மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவு தொடரும்" என்று அவர் எச்சரித்தார்.

காஷ்மீர் பள்ளத்தாக்கின் திட்டமிடப்படாத நிலப்பயன்பாடு மற்றும் அடைபட்ட, சுருங்கும் நீர் வழித்தடங்கள் ஆகியன, இப்பகுதியை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கக்கூடியதாக ஆக்கியுள்ளதால், நெருக்கடியைச் சமாளிப்பதற்கான வழிகளை அரசாங்கம் வழிநடத்துகிறது என்று அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். நீர்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத்துறையின் செயற்பொறியாளர் அய்ஜாஸ் அஹமட் கீன் கூறுகையில், "வெள்ளத் தணிப்பு உத்திகளை நாங்கள் மூன்று கட்டங்களாகப் பிரித்துள்ளோம். நீர் வழித்தடங்களின் சுமந்து செல்லும் திறன் வினாடிக்கு 46,000 கன அடி (கன வினாடிகள்) அதிகரிக்கப்படும், இது விரைவில் நிறைவடையும்" என்றார்.

கசிவு கால்வாயின் அகலம், வெள்ளம் போன்ற சூழ்நிலையில் உபரி நீரை தேக்கி வைக்கும் காலி கால்வாய்கள் நீட்டிக்கப்பட்டு, வாய்க்காலின் பரப்பளவு மற்றும் கொள்ளளவை அதிகரிக்க தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படும். "கடைசி கட்டத்தில், நாங்கள் அரசாங்கத்திற்கு வழங்கிய திட்டத்தில் அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட 60,000 கன வினாடிகள் கொள்ளளவை உயர்த்துவோம்" என்று அஹமத் கூறினார்.

திட்டமிடப்படாத நகரமயமாக்கலைச் சமாளிக்க, வெள்ளம் ஏற்படும் இடங்கள் உள்ளன, அங்கு கட்டுமானம் அனுமதிக்கப்படாது என்று அறிவிக்கப்படும் என்றார். 2014 இல் ஏற்பட்டது போன்ற வெள்ளம் அரிதாகவே நிகழ்கிறது, "நாங்கள் அதற்கும் தயாராகி வருகிறோம்" என்று அஹமட் கூறினார்.

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.